பட்டப்படிப்புவரை மாணவர்கள் உயர்வு- பெருமையடையும் தமிழ் பள்ளி

எம் பள்ளி எம் பெருமை-இந்த வாரம்
தமிழ் கல்வி நிலையம்
பல இன்னல்களுக்கும் கடின வாழ்க்கைக்கும் முகங்கொடுத்து 
மேற்குலக நாடுகளில் வாழும் எம்மக்கள்,
அடுத்த தலைமுறைக்காகஎமதுமொழி,வாழ்க்கைமுறைகள்,
பண்பாடுகள்,அனைத்தையும் பயிற்றுவிக்கும் தளமாக
ஏராளமான தமிழ் பாடசாலைகளை நிறுவியுள்ளார்கள்.
அதன் வழி மொழிக்கல்வியை சிறப்பொடு பயிற்றுவிக்கும்
அதேவேளை தமிழ் மாணவர்களுக்கான நுண் கலைகளையும்
பயிற்றுவித்து  நெறிப்படுத்துகின்றார்கள்.பல்திறமை வாய்ந்த
ஆசிரியர்களை ஒன்றிணைத்து வாரவிடுமுறை  நாள்களில்,
பாடசாலைகளையும் அதற்கேற்றவாறு ஒழுங்கு செய்து தமிழ்
பாடசாலைகளை வழி நடாத்துகின்றார்கள்,
செவ்வனே தங்கள் தமிழ் மொழிக்கான பணியை செய்யும் தமிழ் 
பாடசாலைகளை ஒவ்வொன்றாக அறிமுகப்படுத்த
விளைகின்றது வானவில்.

மாணவர்களின் திறமைகளையும் அவர்களின் மொழியின் மீது
இருக்கும் ஈடுபாட்டையும் இனங்கண்டு அதற்கான களம்
ஒவ்வொரு சஞ்சிகையினூடாகவும் வெளிவர இருக்கிறது.

அந்த வகையில்  மேற்குலண்டன் பகுதியில் தமிழ்
மொழிக்கான கல்விப்பணியை மேற்கொண்டுவரும் தமிழ்
கல்வி நிலையம் என்ற பாடசாலை பற்றிய விடயங்களை
பதிவுசெய்யபடுகிறது.

1990 ம் ஆண்டுகளில் குறிப்பிடத்தக்களவு மாணவர்களோடு
ஆரம்பிக்கப்பட்ட இந்த தமிழ் கல்வி நிலையம் 1993ம் ஆண்டு
உத்தியோகபூர்வமாக பதிவு  செய்யப்பட்டு தனது
தமிழ்ப்பணியை  செய்ய ஆரம்பித்தது.அன்றைய நாள்களில்
ஐம்பது மாணவர்களாக இருந்த மாணவர்கள் எண்ணிக்கை
இன்று 450 மாணவர்களாக எண்ணிக்கை உயர்ந்து 20
வருடங்களுக்கு மேலாக தமிழ் மொழியையும்
நுண்கலைகளையும் பயிற்றுவிக்கும் தனது பணியை
மேற்கொண்டு வருகிறது.
அங்கு கல்வி கற்கும் மாணவர்கள் மிகவும்  ஆர்வத்தோடு
தங்கள் ஈடுபாட்டை காண்பிக்கின்றார்கள் என்று அங்கு கல்வி
கற்பிக்கும் ஒரு ஆசிரியர் குறிப்பிட்டார்.அதற்கு சான்றாக அங்கு
பயின்ற மாணவர்களில் இருவர் மெட்ராஸ் பல்கலைக்கழக
வெளிவாரி பட்டபடிப்பு துறையில் படித்து பட்டப்படிப்பை பூர்த்தி
செய்திருப்பதை பெருமையோடு பகிர்ந்து கொண்டனர்.
ஆசிரியர் மாதவி சிவலீலன் அவர்களும்  அந்த
மாணவர்களுக்கான தமிழ் மொழி ஆசிரியராக
இருந்து அவர்களை சிறப்பொடு வழி நடாத்தியிருந்தார்.
குறிப்பிட்ட மாணவர்களுக்கு கற்பனை திறன்,அதனூடாக
கவிதைகள் எழுத ஊக்குவிக்க முடியும் என்று இனங்கண்ட
தமிழ் மொழித்துறை உதவி தலைமை ஆசிரியர் செல்வி
செல்வமணி வடிவேலு அவர்கள், கலாநிதி நித்தியானந்தன்
அவர்களுடன் எடுத்துரைத்திருந்தார். அந்த வேளையில்
அவர்களின் திறமைகண்டு மாணவர்களுக்கான தமிழ்
மொழித்துறை ஈடுபாட்டை அன்றைய காலங்களில் அதிபராக
இருந்த கலாநிதி நித்தியானந்தன் அவர்கள்
இனங்கண்டிருந்தார்.அதன் மூலம் அவர்களை வழிநடத்தி
பல்கலைகழகத்தினூடாக அந்த மாணவர்களின் தமிழ் பாட
செயற்பாடுகளையும் சித்திகளையும் விவரித்து அந்த
பட்டப்படிப்பிற்கான சந்தர்ப்பத்தை அமைத்து
கொடுத்திருக்கிறார்.
இதிலிருக்கும் விசேடம் என்னவெனில் அந்த குறிப்பிட்ட
பட்டப்படிப்பை பூர்த்தி செய்த மாணவர்கள் தற்சமயம் லண்டன்
தமிழ் கல்வி நிலையத்தின் ஆசிரியர்களாக இருக்கின்றார்கள்.
இவ்வாறாக முழுமையான தமிழ் மொழிக்கல்வியை
பெற்றுக்கொடுப்பதில் லண்டன் தமிழ் கல்வி நிலையம்
முழுவீச்சோடு செயற்படுகின்றது என்பதில் பெருமை
கொள்கிறது.
லண்டன் தமிழ் கல்வி நிலையத்தின் ஆரம்ப நாள் முதல்
அதிபராக கலாநிதி நித்தியானந்தன் அவர்கள் சேவையில்
ஈடுபட்டிருந்தார். அவரின் உன்னதமான சேவையில் தமிழ்
மாணவர்களுக்கு எத்தனையோ வரப்பிரசாதங்களை
ஏற்படுத்திகொடுத்திருக்கிறார்.தமிழ் கல்வி நிலையத்தை
சிறப்பானமுகாமைத்துவத்தோடு தொண்டர் பணியாக
லைமையாசிரியராக பணிபுரிந்து  நிறைவில் இன்னுமோர்
சிறப்பான தலைமை ஆசிரியரிடம்  தன் பணியை
ஒப்படைத்திருக்கிறார்.தொடர்ந்து கலாநிதி அனந்தசயனன்
அவர்கள் பொறுப்பேற்று வழி நடாத்திக்கொண்டிருக்கிறார்.


லண்டன் தமிழ் கல்வி நிலையம் மாணவர்களின் கலை
ஆர்வங்களுக்காக வருடந்தோறும் பல நிகழ்வுகளை ஒழுங்கு
செய்துகொண்டிருக்கிறது.
சித்திரை வருடப்பிறப்பின் கலாச்சார நிகழ்சிகள்,நவாராத்திரி
நிகழ்வுகள்,தீபாவளிக்கொண்டாட்டம்,கிறிஸ்மஸ் தின
நிகழ்வுகள்,தைப்பொங்கல் தின பொங்கல் விழா, என்று
தமிழர்களின் பண்பாட்டு விழுமியங்களுக்கு முன்னுரிமை
கொடுத்து அதன்வழி மாணவர்களை வழிகாட்டுகிறது லண்டன்
தமிழ் கல்வி நிலையம்.

மாணவர்களை பொறுத்தமட்டில் இப்படியான நிகழ்வுகளுக்கு
மிகவும் ஆர்வத்தோடு கலந்துகொள்வதாக பெருமிதம்
கொள்கின்றார்கள் ஆசிரியர்கள்.பெற்றோர்களின் ஒத்துழைப்பு
மாணவர்களுக்கு மிகவும் கிடைப்பதாக தமிழ் கல்வி
நிலையம் பெருமைகொள்கிறது,என்றாலும் ஆரம்பக்கல்வி
மாணவர்களிடம் காணப்படும் ஈடுபாடு மாணவர்களின்
அடுத்தகட்ட நிலைகளில் சற்று குறைவடைவதை அவதானிக்க
முடிகிறது.ஈடுபாடு மட்டுமல்லாமல் மாணவர்களின்
எண்ணிக்கையும் அதேயளவு குறைவடைகிறது என்று ஆசிரியர்
குழு பேசிக்கொள்வதை அவதானிக்க முடிந்தது.அதில்
பெற்றோர்களின்  பங்களிப்பு மிக அவசியமானது என்று
ஆசிரியர்குழாம் கருதுகின்றது.பெற்றோர் மாணவர்களுக்கான
இடைவெளிகள் ஆசிரியர்களுக்கான இடைவெளிகளையும்
ஏற்படுத்துகின்றது என்பது பொதுவான பார்வை.
மாணவர்களுக்காக தமிழ் மொழிக்கல்வி மட்டுமல்லாது நுண்
கலைகளையும் அத்தோடு நன் மதிப்பு மற்றும் பண்புள்ள
மாணவர்களை உருவாக்கவும்  மாணவர்களின் ஈடுபாட்டை
என்றும் அதிகரிக்கவும்  மிகப்பிரயாசைப்பட்டு பணிசெய்கிறது
தமிழ் கல்வி நிலையம்.


மேற்கு  லண்டன் பகுதியில் தமிழ் சமுதாயத்தின் அடுத்த
தலைமுறையில் நன்மதிப்புள்ள மாணவர்களை உருவாக்கவும்
தமிழ் மொழியறிவு,கலை ஈடுபாடுள்ள தேர்ச்சியான
மிகச்சிறந்த உன்னதமான சமுதாயத்தை உருவாக்கவும்
ஈடுபாட்டோடு செயற்படும் தமிழ் கல்வி நிலையம் தனது
பணிய செவ்வனே செய்ய அதன் ஆசிரியர்கள்
அலுவலகத்தொண்டர் குழுவினர்.பெற்றோர்கள் யாவருக்கும்
வானவில் தன் வாழ்த்துக்களை பகிர்ந்துகொள்கிறது.
அடுத்த தலைமுறை எங்கள் பண்பாடுகளோடு புலத்து
மண்ணில் தடம் பதிக்க சேவையிலீடுபடும் அனைத்து
பாடசாலைகளையும் மாணவர்களையும் இந்த பக்கத்தின்
வாயிலாக தொடர்ந்தும் வானவில் இணைத்துக்கொள்ள
இருக்கிறது .அத்தோடு லண்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகளில்
இயங்கும் அனைத்து பாடசாலைகளையும் ஒரு குடையின் கீழ்
இணைத்து அதன் மாணவர்களுக்கான ஒரு தளமாகவும்
வானவில் செயற்படவிருக்கிறது என்பதையும்
அறியத்தருகிறது.லண்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகளில்
இயங்கும் அனைத்து பாடசாலைகளுக்கும் அழைப்பும்
விடுக்கிறது வானவில்.

அந்தவகையில் இந்த பதிப்பினூடு மேற்கு லண்டனில்
நீண்டகாலமாக தமிழ் பாடசாலையாக இயங்கிவரும் தமிழ்
கல்வி நிலையத்தை அறிமுகம் செய்து அந்த பாடசாலையின்
ஆசிரியர்கள் மாணவர்கள்,பெற்றோர்கள் யாவருக்கும்
வானவில் ஆசிரியர் குழாமோடு இணைந்து வாழ்த்துக்களை
பகிர்ந்துகொள்கிறது கரவைக்குரல்.

 நன்றி வானவில்

2 comments:

  1. பாராட்டுகள். பணி தொடர வாழ்த்துகள்.அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

    ReplyDelete
  2. நன்றி உங்கள் வாழ்த்துக்களுக்கு ........ நீங்களும் தமிழ் பணியில் தமிழ் பள்ளிகளின் seyaRpaadukaL தொடர்பில் தகவல் தெரிந்தால் அறியத்தரவும்.தமிழ் பணியில் இணைக

    ReplyDelete