கிட்டிக்கொட்டனும் நெற்றிப்பொட்டும்

அதென்ன கிட்டிக்கொட்டன் என்று சிலர் தமக்குள் கேட்டுகொள்ளலாம்."கிட்டிப்புள்" விளையாட்டைத்தான் சிலர் "கிட்டிக்கொட்டன்" என்று சொல்வார்கள்,சிலவேளைகளில் அவர்களுக்கு "புள்" பெரிதாக தெரிந்தால் "கிட்டிப்புள்" என்றும் "கொட்டன்" பெரிதாக இருந்தால் "கிட்டிக்கொட்டன்" என்றும் சொல்வார்களோ எனக்கு தெரியாது.
"சும்மா பகிடிக்கு சொன்னன் பாருங்கோ,பிறகு இதை பெரிய விசயமாக எடுத்துபோடாதீங்கோ"
தாயகத்தின் சில இடங்களில் "கிட்டிப்புள்"என்றும் சில இடங்களில் "கிட்டிக்கொட்டன்" என்றும் அழைப்பார்கள்.அது அந்தந்த இடங்களில் நிலவிவரும் சொற்களே அன்றி அதற்கு காரணம் என்று சொல்ல ஏதுமிலை என்று தான் நான் நினைக்கிறேன்
வருடத்தின் சிலகாலங்களில் சிறுவர்கள் மத்தியில் பிரபல்யமான விளையாட்டுதான் அது.மரங்களுக்கு கீழும் வீதிகளின் ஓழுங்கைகளிலும் ஊர்சிறுவர்களெல்லாம் ஒன்று சேர்ந்து விளையாடுவதை அவதானிக்கமுடியும்.

கிட்டிப்புள் - ஒரு சின்ன விளக்கம்

தமிழர்களுக்கே கிட்டிப்புள் பற்றி ஒரு விளக்கமா என்று என்னை பார்ப்பது எனக்கு புரிகிறது.ஆனாலும் நகரவாழ்க்கைமுறைகளும் அதேபோல மேற்கத்தைய விளையாட்டுக்களான கிரிக்கெட் மற்றும் உதைபந்து போன்ற விளையாட்டுக்களின் மோகங்களும் பொங்கிவிட்ட நிலையில் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுக்கள் விளையாடப்படாத நிலையில் இதைப்பற்றிய விளக்கம் அவசியமான ஒரு நிலையை உணர்ந்துதான் இதை பற்றிய ஒரு சின்ன விளக்கம்.
ஒரு விளையாட்டு ஒன்றை அறிந்து அதை விளையாடி அதில் தேர்ச்சி பெற்று விளையாட எடுக்கும் காலத்தை விட சாதரணமாக இப்போது எல்லோராலும் விளையாடப்படும் விளையாட்டுக்களோடு விளையாடுவது தான் எல்லோரதும் இயல்பு,அந்த வகையில் இன்றையகாலங்களில் கிட்டிப்புள் அல்லது கிட்டிக்கொட்டன் கொஞ்சம் குறைந்து வருகிறது என்று சொல்லலாம். ஆனாலும் அதன் பெயரும் விளையாட்டும் இன்னும் எம்ம்வர்களிடமிருந்து மங்கிவிடவில்லை என்பதும் உண்மைதான்.அதுமட்டுமல்ல
சிலர் இதிலிருந்து தான் மட்டைப்பந்து என்று தமிழில் சொல்லப்படும் கிரிக்கெட் உருவானது என்று பெருமையடைவதும் சொல்லத்தானே வேணும்.

மண்ணில் ஒரு சிறிய கிடங்கு கிண்டி அதில் இருமுனைகளிலும் நன்றாக சீவப்பட்ட சிறிய புள்ளை வைத்து அதை கொட்டனால் தூக்கியெறிந்து அதை பலரோ சிலரோ மறித்து அதை திரும்பவும் அதை கிடங்கு நோக்கி அந்த புள் விழுந்த இடத்திலிருந்து எறிவர், அப்போது அதை திருப்பி அடிப்பதும் அதற்கு "மறுத்தான்" கேட்பதுமாக அந்த விளையாட்டு தொடரும்.இதில் "மறுத்தான்" என்பது மறுத்தான் என்பது கேட்கப்பட்டு புள் திரும்ப வீசும்போது புள்ளை அடித்தால் அடித்தவர் தன் புள்ளிக்கணக்கை பத்து மடங்கால் பெருக்கி எடுத்து கூட்டிகொள்ளலாம் என்பது கதை வேறு.அதை விட "டபிள்" "றிபிள்" என்று எல்லாம் புள்ளை கொட்டனால் தூக்கி எடுத்து தட்டி புள்ளிக்கணக்கை அந்த மடங்காலே பெருக்கியும் தங்கள் கணக்கை கூட்டி கொள்வர்.அப்படியே அந்த கணக்கு கூடி கூடி அது ஒருகுறிப்பிட்ட கணக்கை தாண்டி விட்டால் அதை "கிளம்பி" என்று சொல்வார்கள் பின்னர் ஆட்டமிழந்தாலும் இன்னொருமுறை ஆட முடியும். அது கதை வேறு, அதை விட மறுத்தான் அடிக்கப்படும்போது பிடி எடுக்கப்பட்டால் அது அந்த குழுவிலுள்ள அனைவரையுமே ஆட்டமிழக்கசெய்யும் என்ற சோகக்கதை வேறு.
இந்த விளையாட்டில் கணக்கு பார்க்கிற விசயமும் ரொம்ப முக்கியம்,கணக்கை கூட்டிச்சொல்லும்போது தடுமாறிவிட்டால் அதை எதிர்தரப்பினர் கூழ் ஆக்கி விடுவார்கள்,அதன் பின் திரும்ப தன் கணக்கை ஆரம்பிக்கவேண்டும்,அது பெரிய தலையிடி


இந்த ""கிட்டிப்புள் "இடங்களுக்கு இடம் சில வேறு முறைகளில் விளையாடப்படுவதுமாக அறியப்படுகிறது. அதாவது "கிளம்பி" எனப்படும் நிலையைத்தாண்டிய பின் புள்ளை கையில் தூக்கி நுனிப்புள்ளில் பிடித்தவாறே அது கொட்டனால் அடிக்கப்படும் என்றும் சொல்கிறார்கள்.அடிக்கப்படுவதற்கு மூவருக்கு சந்தர்ப்பம் வழங்க்கப்பட்டு அது யாரிடமும் பிடி எடுக்கப்படாமல் அடிக்கப்படுமானால் அந்த இடத்திலுருந்து மூச்சு விடாமலே பாடிக்கொண்டோ அல்லது கூவிக்கொண்டோ ஒடி வர வேண்டுமாம்.

ஆலையிலே சோலையிலே
ஆலம்பாடி சந்தையிலே
கிட்டிப்புள்ளூம் பம்பரமும்
கிறுக்கியடி பாலாறு பாலாறு பாலாறு

என்று சொல்லியபடியோ அல்லது "கூகூகூஊஊஊஊஊஊ" அந்த புள் சென்ற இடத்திலுருந்து ஓடியபடி வரவேண்டும். எதிர்த்தரப்பினர் எதை செய்யச்சொல்லி கேட்பார்களோ அதை செய்யவேண்டும் என்றவாறாக இது மட்டக்களப்பு கிராமங்களில் இது நிலவிவருவதை அறியமுடிகிறது.

இது பெரும்பாலும் கோடைகாலத்தில் விளையாடப்படுவதை அவதானிக்க முடியும்.
கிட்டிபுள் விளையாடும் முறை தெரிந்தவர்களுக்கு அது ஏன் என்று தெரிந்திருக்கலாம்.ஏன் கோடை காலத்தில் பொதுவாக விளையாடப்படுகிறதுவெனில் கிண்டப்படும் கிடங்கு அப்போது தான் உறுதியாக இருக்கும். மழைகாலத்தில் அது பலமாக இருக்காது, ஆதலால் கிண்டியபடி தூக்கி எறியப்படும் புள் வேகமாகவோ அல்லது கூடிய தூரமோ செல்லாது என்பதனால் தான்.

நெற்றிப்பொட்டில் கிட்டிப்புள்
அடிக்கடி விளையாடும் விளையாட்டுக்களில் கிட்டிப்புள் இவனுக்கு பிடித்தது. அவனும் என்ன செய்ய பாடசாலை அடிக்கடி மூடப்படும் காலம் அது.சாதரணமாக சிறுவர்கள் விளையாடும் பந்துகளின் வரவே குறைந்திருந்த காலம்.கூடிய பணம் கொடுத்து விளையாடும் உபகரணங்கள் வாங்க வேண்டிய காலம்.அந்த காலத்தில் கூடியளவு நிலைத்திருந்த் கிட்டிக்கொட்டன்தான் இவனுக்கும் இவனுடைய ஊராவீட்டு சிறுவர்களுக்கும் விளையாட்டு.

காலை எழுந்தவுடன் படிப்பு என்று சொன்னதெல்லாம் மாறி காலை தொடங்கி மாலை வரை விளையாட்டு என்றவாறாக கழிந்த காலங்கள்,சிறுவர்கள் தானே அப்போதைய காலத்தின் கடினத்தனமையால் தாக்கப்பட்டும் தாக்கபடாமல் இருந்த காலங்கள், விளையாட்டுடனேயே கழிந்தது.

என்றாலும் இவன் அப்பாவுக்கு இவன் படிக்க வேண்டும் என்ற ஆவல் தான்.அவ்வப்போது படிப்பித்தபடியே இருப்பார்.ஆனாலும் எல்லோரும் விளையாடும்போது "அவனுக்கு எப்படி படிப்பித்தாலும் ஏறாது,அவனுக்கு விளையாட்டிலை தான் கவனம் போகும்" என்றும் அறிந்தவராய் விளையாட அனுமதிப்பார். என்றாலும் கிட்டிக்கொட்டன் விளையாட அனுமதியில்லை.வேறொன்றுமில்லை கண்ணுக்குள் அந்த புள் பாய்ந்துவிடும் என்பதால் தான்.ஆனாலும் அவருக்கு தெரியாமலே விளையாடும் இவன் கிட்டிப்புள் விளையாடுவதில் தேர்ச்சியும் பெற்றான்,மற்றவர்களின் மறுத்தான் அடிப்பதில் பிடி எடுப்பதில் கொஞ்சம் கெட்டிக்காரன்.அதனால் அவனுக்கும் கிட்டிப்புள்ளில் நல்ல விருப்பம்.

இப்படித்தான் ஒரு நாள் பக்கத்துவீட்டு சதீஷ் உடன் விளையாட்டு இவனுக்கு.வழமையாகவே கூடிய நேரங்களில் அவனுடன் தான் விளையாட்டு.வலு உற்சாகமாக விளையாடும் விளையாட்டுக்கு ரசிகர்களும் பெருகிவிட்டது என்று தான் சொல்ல வேண்டும்.பக்கத்துவீட்டார் எல்லாம் சேர்ந்து ரசிக்க "மறுத்தான்"களும் கூடிக்கொண்டே போகின்றது. அந்த வேளையில் எல்லோரும் தலையில் கை வைக்குமளவுக்கு ஒரு சம்பவம்.
எங்கு பட்டதோ! எதில் பட்டதோ! என்று எல்லோரும் "என்னடா என்னடா எங்கடா பட்டது" ஓடி வந்தார்கள். இவனோ முகததை மூடி பொத்தியவனாய் சில செக்கன்கள் நிலத்திலே கவிண்டபடி இருந்தான்.
"அது தான் தேப்பன்(தகப்பன்) சொல்லுறதை செய்ய வேணும் எண்டு சொல்லுறது, அந்த மனுசன் இந்த கிட்டிக்கொட்டன் வேண்டாம் என்று தானே அடிக்கடி சொல்லுறவர், இவங்களும் அவருக்கு தெரியாமல்................... இப்ப அவருக்கு எல்லாம் தெரிய வரப்போகுது" என்று சொல்லி நெற்றிப்பொட்டடியில் காயம் இருந்ததை அவதானிக்கிறார்கள்."கட்டுக்கடி மத்தியான நேரம் எவ்வளவு இரத்தம் போகுது என்ன " என்று எல்லோரும் சொல்ல
அவனின் அன்ரி அவனை கிணத்தடிக்கு கூட்டிக்கொண்டுபோய் முகத்தை கழுவிவிட்டு கோப்பி கொஞ்சம் தடவினார்,இரத்த போகுமளவைக்குறைக்கலாம் என்ற எண்ணத்துடன்.அன்ரியின் அவன் மீதுள்ள பாசம் அவன் முதலே அறிந்திருந்தாலும் அன்று தான் மேலதிகமாக உணர்கிறான்.அவனின் தந்தை வந்தால் காயம் வந்ததுமல்லாமல் அவனுக்கு அடி விழப்போகிறது என்பது தான், வழமையாக அவனுக்கு "அப்ப அப்ப சின்ன சின்ன அடிவிழும்போது மறிப்பதுபோல இண்டைக்கும் மறித்துவிடுவோம்" என்று பெரிய திட்டம்.திட்டமும் நிறைவேற "டேய் இனி இந்த கிட்டிக்கொட்டன் தூக்கிறதை நான் காணக்கூடாது", என்று அறுதியும் உறுதியுமான புத்திமதியும் சொல்லப்பட்டது,
என்றாலும் கிட்டிகொட்டனில் இருந்த விளையாட்டு ஆர்வம் விடுமா என்ன?காயம் மாறிவிடவும் கிட்டிகொட்டனால் வந்த நெற்றிப்பொட்டு என்றும் நினைவிலிருக்க
தொடர்ந்தும் இவன் விளையாடிக்கொண்டேயிருந்தான்.

5 comments:

  1. கிட்டியும் புள்ளும் (நம்ம ஊர் பெயர் வழக்கு) ஆபத்தான விளையாட்டாக இருந்தாலும் சூடு பிடிச்சால் சாப்பாடும் வேண்டாம். அதுவும் மறுத்தான் பிடிக்கிறதும் ‘டபிள்’ ‘ட்றிபிள்’... அடிக்கிறதும் கெட்டித்தனம் தான்.

    ReplyDelete
  2. nalla pathivu...izhantha vilaiyaaddum,izhantha nanparkalum ninaivil vanthu poyinar.manasu kanakkum pathivukal kanakka ezhuthungo...padikka naan kaaththirukkiran...!-raavan rajhkumar-jaffna

    ReplyDelete
  3. "கிட்டிப்புள்ளா. ஐயோ நான் உந்த விளையாட்டுக்கே வரல்ல". ஒரு முறை எனது மூக்கில் புள் பட்டு இரத்தம் வந்த அனுபவம்தான் :(

    ReplyDelete
  4. நாம் கடந்து வந்த சுவடுகளை நினைவுபடுத்தும் நல்ல பதிவு.

    ReplyDelete
  5. அருமையான பதிவு, பால்ய காலங்களை நினைக்க வைத்தது

    ReplyDelete