பிறந்தநாள் கொண்டாட்டம்

”இப்ப எல்லாம் கொண்டாட்டம் கூடிபோச்சு,எதுக்கெடுத்தாலும் கொண்டாட்டம்,முந்தியெல்லாம் கல்யாணக்கொண்டாட்டம்தான் பெரிசாக கொண்டாடப்பட்டது.கோயில் திருவிழாக்களுக்கும் அங்கை நடகிற நிகழ்வுகளுக்கும் தான் பெரிய முக்கியத்துவங்கள் வழங்கப்பட்டு பெரிசாக பெருமெடுப்புகளுடன் பட்டாசுகள் பலவிட்டு பல நிகழ்வுகள் ஒழுங்குபடுத்தப்பட்டு அந்தக்காலத்திலை இருந்து கொண்டாடுறது.இப்ப எல்லாம் கொண்டாட்டம் கூடிப்போச்சு” இப்படி ஒரு மூலையிலை இருந்து வாத்தியார் சொல்லிக்கொண்டிருந்தார்,


“இல்லையெணை அப்பா அது அந்தக்காலம் இப்ப எல்லாம் ஊருலகத்தில் அவளோடை படிக்கிற பொடியள் அப்படி இப்படி எண்டு எல்லாம் கொண்டாடேக்கை அவளுக்கு ஒரு ஆசை வருந்தானே தனக்கும் இந்த பிறந்த நாளைக்கொண்டாடினால் என்ன எண்டு” என்று விளக்கம் கொடுத்தாள் ஈஸ்வரி,
ஈஸ்வரி அவளின் அம்மா,வாத்தியாரின் மூத்த மகள்,மூத்த மகள் என்பதால் பொறுப்பானவளாக வளர்ந்தவள்,எல்லோராலும் மூத்தக்கா என்று சொல்லப்படுபவள்

தன் பேர்த்தியில் மிகவும் பாசமான அந்த பேரன் வாத்தியார் பேர்த்தியின் பிறந்த நாள் வருகிறது என்று மிகவும் சந்தோசப்பட்டாலும் பெருமெடுப்பில் கொண்டாடுவதில் அவருக்கு இஷ்டமில்லை,வேறொன்றுமில்லை இப்படியான கொண்டாட்டம் அவசியம் தானா என்பதுதான் அவரின் கேள்வி.

”அடி பிள்ளை எங்களிண்டை பிறந்த நாள் எல்லாம் யாருக்கும் தெரியாதெடி,அதுக்காக பிறந்தநாளை தெரியாமல் இருக்க வேணும் எண்டு சொல்லேல்லை,ஆனால் இதெல்லாம் என்னத்துக்கு எண்டு விளங்கவில்லை”
உனக்கு நினைவு இருக்கோ பிள்ளை உன்ரை பிறந்த நாளுக்கு நான் லைன்லை நிண்டு சுபாஷ் பேக்கரியிலை இரண்டு றாத்தல் பாண் வாங்கிக்கொண்டு வந்தன்,அதைத்தான் நீ மாஜரீன் பூசி வெட்டிக்கொண்டாடி எல்லாருக்கும் பகிர்ந்து சாபிட்டனாங்கள்”
அப்படிப்பிள்ளை நாங்க வந்த பாதை வேறை பிள்ளை,அதையெல்லாம் மறந்துபோக எனக்கெண்டால் மனமில்லை,”என்று வாத்தியார் தொடர்ந்து சொல்லிகொண்டே போனார்.

”அணேய் அப்பா சும்மா புறுபுறுக்காதையெணை.அதெல்லாம் அப்ப அப்ப கஷ்டப்பட்டதுக்காக இப்பவும் பாணையே வாங்கி வெட்டுறதோணை,சும்மா இரு,எல்லாரும் பார்த்து சிரிக்குங்கள்,”
என்றாள் மகள் ஈஸ்வரி,

அடுத்த வீட்டு சின்னையா அண்னையை பார் அந்த மனுசனும் இருக்குது தானே,அந்த மனுசன் ஒண்டும் கஷ்டபடாமல் அந்தக்காலம் இருந்ததோ,சுவிஸ்க்கும் போட்டு வந்திட்டுது,
நீங்க இப்படியே இருந்துகொண்டு அந்தக்கால கதையளை சொல்லிகொண்டிருங்கோ,அந்த மனுசம் சுவிஸ்க்கு போட்டுவந்தபிறகு பேர்த்திமாரை இனி ஜீன்ஸ் தான் போட வேணும் எண்டு விடாப்பிடியாக நிண்டதாம் தெரியுமோ,உங்களையும் கனடாவுக்கு அவன் மூத்தவன் வா வா எண்டால் போறியளே,போறீங்க இல்லை.சும்மா ஒரு பிறந்த நாள் கொண்டாட்டத்துக்கு பெரிய கதை அளக்கிறியள்”எண்டு சொல்லிக்கொண்டே போனாள் ஈஸ்வரி,

அடி பிள்ளை எனக்கு எல்லாம் தெரியும்.அதுகளை எல்லாம் பார்த்துப்போட்டுத்தான் சொல்லுறன், இந்த போறபோக்குகள் இதெல்லாம் நல்லதுக்கில்லை எண்டுதான் நான் சொல்லுறன்,என்னதான் செய்தாலும் பிள்ளையாரின்ரை வாசலிலை ஒரு பூசைகட்டிவிக்கிறதை எண்டாலும் செய்யுங்கோ,சரி நான் இப்ப கொஞ்சம் காத்து வாங்கலாம் எண்டு வெளியிலை போறன்,என்ன வாங்கிக்கொண்டு வாறது எண்டு சொல்லு”
என்று வாத்தியார் சால்வையையும் தட்டிகொண்டு வெளியில் செல்ல ஆயத்தமானார்,

“ஒண்டும் வேண்டாமணை நீங்க போட்டுவாணை,அவள் பிள்ளை வாற நேரம் இந்த நேரம் புறுபுறுத்துக்கொண்டு இருந்தால் நல்லாகத்தான் இருக்கும்,”என்று விடைகொடுத்தாள் ஈஸ்வரி

வாத்தியாருக்கு தன் பேர்த்தியின் பிறந்த நாளுக்கு இந்த கொண்டாட்டங்களை ஒரு புறம் வைத்துவிட்டு வேறு ஏதாவது செய்ய வேணும் என்று ஆசை,வெளியில் காற்று வாங்க போவதாக கூறிவிட்டு வெளியில் போனவர் தன் மூத்த மகனிடம் தொலைபேசி அழைப்பெடுக்கத்தான் போகிறார் என்று மகளுக்கு அவர் சொல்லவில்லை, நேரடியாக இணையத்தள அழைப்பெடுக்க போகிறார் தொலைத்தொடர்பு நிலையத்திற்குள்,

“தம்பி ஒரு கோல்(call) போடு கனடாக்கு”இது வாத்தியாரின் ஆரம்பம்

”ஐயா லாண்ட் போன்(land phone) நம்பரோ ஹாண்ட் போன் நம்பரோ(mobile No)” இது கடைக்காரனின் கேள்வி.

”யாருக்கும் தெரியும் தம்பி,முதலும் நான் கதைச்சனான் அவ்வளவு பெரிய காசு இல்லை எண்டு சொன்னவங்கள் அதுதான் வந்தன்” வாத்தியார் பதில் இது.

”ஆ ஆ ஆ அப்ப அது லாண்ட் போன் நம்பராகத்தான் இருக்கும், ம்ம்ம் ஐயா அது ரிங்(Ring) பண்ணுது, ரண்டாம் நம்பரிலை எடுங்கோ” என்று சொல்ல வாத்தியார் பறந்து சென்று எடுத்தார் தொலைபேசிஅழைப்பை,

”தம்பி கணேசு எப்படி இருக்கிறாய்” வாத்தியா அன்புடன் ஆரம்பிக்கிறார்

அணேய் ஐயா இருக்கிறனெணை நீங்கள் எப்பிடி இருக்கிறீங்கள்” மகன் பதிலுக்கு சுகம் விசாரிக்கிறான்.

எனக்கென்ன குறை தம்பி மூத்தவளோடைதானே இருக்கிறன்,சரிக்கு சரி சாப்பாடு,அப்ப அப்ப பேப்பர் பார்க்கிறதும்,பிறகு ரிவியிலை செய்தி பாக்கிறதுமாய் என்ரை காலங்கள் போகுதெடா வழமைபோல,” என்று வாத்தியார் தன் தற்போதய சுயசரிதையை சொல்லிக்கொண்டார்,

”தம்பி நான் இப்ப கோல் எடுத்தது இவள் மூத்தவளின்ரை பிள்ளைக்கு நாளைக்கு பிறந்த நாள் தம்பி” என்று வாத்தியார் சொல்ல முதல்

”அணேய் யார் எங்கடை ஆனந்திக்கோ அவளுக்கு இப்ப எத்தினை வயதாகுது” என்று சந்தோசம் கூட்டியபடி கேட்டான் கணேசு.

”ம்ம் அவளுக்கு இருபத்தியொண்டு,ஏதோ கீ பிறந்த நாள் எண்டு கேள்விப்பட்டன்,அதுக்கு ஏதோ இங்கிலிஷிலை சொன்னவகள்,எனக்கு அது வாயிலை வரவில்லையெடா தம்பி,”என்று வாத்தியார் உள்ளதை சொல்லிக்கொண்டே போக


”ஆ ஆ அதை பெரிசாக கொண்டாடுங்கோ,அதை எனக்கு வீடியோ எடுத்து அனுப்புங்கோவன்”என்றான் கணேசு

அட இவனும் இப்பிடித்தான் சொல்லுறான், நான் கேட்கவந்தது ஏதோ இவன் சொலுறது ஏதோ”என்று வாத்தியார் மனதுக்குள் முணுமுணுக்க

”என்னணை சவுண்டைக்காண இல்லை.சொல்லணை” என்று கணேசு திரும்பக்கேட்டான்.

தம்பி எல்லாம் பெரிசாகக்கொண்டாடுவம்,பெரிசாகக்கொண்டாட எனக்கென்ன விருப்பமில்லையே,ஆனால் எனக்கு ஒரு சின்ன விருப்பமெடா,இந்த நல்ல நாள் பிறந்த நாளிலை கஷ்டப்பட்ட பிள்ளைகளின்ரை விடுதிகளுக்கு ஏதாவது உதவி செய்தால் என்ரை பேர்த்தியிரை பெயராலை எனக்கு அது போதுமெடா”என்று தன் உள்ளத்து எண்ணத்தை பகிர்ந்தார் வாத்தியார்,இப்படியாக வாத்தியார் சொல்லிமுடிப்பதற்குள்

”அதுக்கென்னணை நான் நாளைக்கு காசு போடுறன் நீங்க ஏதாவது கொப்பி பேனை புத்தகங்கள் ஏதவாது உடுப்புக்கள் எண்டு வாங்கிக்கொடுங்கோ” என்று கணேசு சொல்ல வாத்தியாருக்கு ஏதோ பெரிய விடயம் செய்துவிட்ட மகிழ்ச்சி,
அதைவிட கொஞ்சம் பெருமையாகவும் வாத்தியார் உணர்ந்தார்,

”இப்போதையில் பொடியள் ஏதாவது உதவி செய்யிறது எண்டாலும் செய்யுதுகள்,அதே நேரம் எல்லாறும் கொண்டாடுற மாதிரி கொண்டாட வேணும் எண்டும் விரும்புதுகள்,சரி அதுக்கென்ன,எங்கட காலத்திலை தான் இதெல்லாம் இருக்கேல்லை
இப்ப என்ரை பேர்த்தியின்ரை பிறந்த நாளிலையாவது இப்படி எல்லாம் நடக்க காணக்கிடைச்சிருக்கே என்று பிள்ளையாரே அது போதும் எனக்கு” என்று மனதினுள் வேண்டுகிறார் வாத்தியார்,

அது மட்டுமில்லாமல் ”வாறவருசம் என்ரை கணேசுக்கும் வாற பிறந்த நாள் எனக்கு முன்னலை கொண்ட்டாடினால் என்ன?” என்று மனதினுள் கேள்வி உதித்தது வாத்தியாருக்கு,

“அவன் சின்னையாவும் சொன்னவன் எல்லோ அவனின்ரை இளையவன் பரமுக்கு ஜேர்மனியிலை ஒருக்கா பிறந்த நாள் கொண்டாடினது எண்டு, ஊருலகம் எல்லாம் அங்கை எடுத்த போட்டோ எண்டு ஒரு நாப்பது போட்டோ கொண்டுவந்து காட்டினவன் எல்லோ” என்று மனதினுள் கடந்த வருட நினைவுகளை மீட்டினார்.

அத்தோடு வாறவருசம் மூத்தவன் கனடாவுக்கு வா எண்டு சொன்னவன்,அப்ப அவன்ரை பிறந்த நாளுக்கு அங்கை நிக்கிற மாதிரித்தான் அவனுக்கு திகதி சொல்ல வேணும்,அப்பத்தான் அவனின்ரை பிறந்த நாளை எனக்கு முன்னாலை கேக்கு வெட்டிக்கொண்டாட வேணும், “என்று திட்டமும் போட்டார் வாத்தியார்,
“அந்தக்காலம் தான் எங்கடை கஷ்டங்களும் இருந்த இடங்களும் எங்களை கொண்டாடவிடவில்லை,அப்படியான எண்ணம் வரவும் விடவில்லை,அதிலை எங்களை பிழை சொல்லியும் என்ன? லைன்லை(Line) நிண்டு பாண் வாங்கி சாப்பிட்ட காலத்திலை எப்படி அவனுக்கு நான் கொண்டாடி அழகு பார்க்க?,அதுக்கு அந்தக்காலம் கைகுடுக்கேல்லை,இப்ப அவனுக்கு கேக்கு வெட்டி நான் கொண்டாட போக வேணும் என்று திட்டம் போடுகிறார் வாத்தியார்

இப்படியாக பெரிய திட்டத்துடன் பேர்த்தியின் பிறந்த நாளில் அதிகாலையே எழுந்து பிள்ளையாருக்கு பூசைகட்டுவித்து மாலை நேர பிறந்த நாள் கொண்டாட்டத்தில் தனக்கு எப்போதும் பிடித்த வேட்டி சால்வை உடுத்தவராய் மிகவும் சந்தோசமாக காணப்பட்டார் வாத்தியார்,



முந்தியெல்லாம்-முன்பெல்லாம் ,பொடியள்-இளவயதுக்காரர், கொண்டாடேக்கை-கொண்டாடுகின்றபோது,போறபோக்குகள்- நடக்கும் சம்பபவங்கள்,

10 comments:

  1. காலத்திற்கு ஏற்ற மிக முக்கியமான கருத்தினை முன் கொண்டு வந்த பிறந்த நாள் கொண்டாட்டம் நன்றாக இருந்தது.

    ReplyDelete
  2. வாத்தியார் மாதிரி மனிதர்கள் இன்னும் இருக்காங்கக...நல்ல இருந்தது பகிர்வு ;))

    ReplyDelete
  3. அவரின் விருப்பம் நியாயமானது. ஆனாலும் இப்பத்தைய இளசுகள் செய்வது பிழை என்று சொல்ல நினைப்பது தவறு. ஏன் எனில் சில விடையங்கள் காலம் மாறும் போது கூடவே மாறும்.

    ReplyDelete
  4. //காலத்திற்கு ஏற்ற மிக முக்கியமான கருத்தினை முன் கொண்டு வந்த பிறந்த நாள் கொண்டாட்டம் நன்றாக இருந்தது.///

    நன்றி வரவிற்கும் கருத்துக்கும் ரேணுகா

    ReplyDelete
  5. //வாத்தியார் மாதிரி மனிதர்கள் இன்னும் இருக்காங்கக...நல்ல இருந்தது பகிர்வு ;))//


    இதில் வாத்தியாரோ அல்லது யாரோ பிழையேதும் விட்டதாக நான் கூறவில்லை,அவரவர்களின் சிந்தனைகளை கூறியிருக்கிறேன்,அவ்வளவுதான்,
    நன்றி கருத்துக்கு

    ReplyDelete
  6. //அவரின் விருப்பம் நியாயமானது.//

    ம்ம்
    //ஆனாலும் இப்பத்தைய இளசுகள் செய்வது பிழை என்று சொல்ல நினைப்பது தவறு.//

    அதுவும் சரி

    // ஏன் எனில் சில விடையங்கள் காலம் மாறும் போது கூடவே மாறும்//

    அதை வாத்தியார் ஏற்றுக்கொண்டதனாலேயே அவரால் மிகச்சந்தோசமாக பிறந்த நாள் கொண்டாட்டத்தில் சிறப்பிக்க முடிந்தது

    வரவிற்கும் கருத்துக்கு நன்றி மயூரேசன்

    ReplyDelete
  7. நானும் கரவையின் ஓர் குரல்தான். கரவெட்டி மேற்கு, என்னைத் தெரியுமா? உன்னைத் தெரிவதற்கு நீ என்னத்தை பெரிதாக சாதித்தாய் என்று கேட்டுவிடாதீர்கள்? உங்கள் ஊர் மண்ணில் என் பாதங்களும் பதிந்ததால் எடுத்துக்கொண்ட உரிமை அவ்வளவுதான். மேலும் விபரம் அறிய ஆவல். பதிவைப்பற்றி பின்பு எழுதுகின்றேன்.

    ReplyDelete
  8. //சுபாஷ் பேக்கரியிலை இரண்டு றாத்தல் பாண் வாங்கிக்கொண்டு வந்தன் //

    ஏனப்பா இதனை இப்ப நினைவு படுத்துகிறாய். சுபாஷ் பேக்கரிப் பாண் வாங்கிக்கொண்டு வீடு போகமுன்னம் அரை இறாத்தல் முடிந்துவிடும்.

    ஆஹா நல்ல நகைச்சுவையுடன் ஒருவரின் வாழ்வை பதிவு செய்திருக்கின்றீர்கள், இந்த வாத்தியார்போல் பலர் ஒவ்வொரு ஊரிலையும் உண்டு.

    ReplyDelete
  9. //நானும் கரவையின் ஓர் குரல்தான். கரவெட்டி மேற்கு, என்னைத் தெரியுமா? //

    நல்ல விடயம், வரவுக்கு நன்றி,கரவெட்டி என்பதால் ஒரு மகிழ்ச்சிகூட கூடி வருகிறது,
    கரவெட்டி மேற்கு என்று சொல்லிவிட்டு உங்களை தெரியுமா என்று கேட்கிறீர்கள்,கரவெட்டி மேற்கு மட்டுமல்ல எந்த பாகமும் தெரியும்,

    //உன்னைத் தெரிவதற்கு நீ என்னத்தை பெரிதாக சாதித்தாய் என்று கேட்டுவிடாதீர்கள்? //

    புலம்பெயர்ந்தும் நானும் கரவெட்டி என்று பெருமையாக கூறியும் தமிழோடு இணைந்தும் இருக்கிறீர்களே,அதுவே போதும்

    //ஊர் மண்ணில் என் பாதங்களும் பதிந்ததால் எடுத்துக்கொண்ட உரிமை அவ்வளவுதான்//.// மேலும் விபரம் அறிய ஆவல்//

    அதுவே போதும்
    நிச்சயமாக மேலும் அறிய ஆவல்

    //பதிவைப்பற்றி பின்பு எழுதுகின்றேன்//

    எந்தப்பதிவைப்பற்றி?

    வரவுக்கும் கருத்துக்கும் நன்றி

    ReplyDelete
  10. ///ஏனப்பா இதனை இப்ப நினைவு படுத்துகிறாய். சுபாஷ் பேக்கரிப் பாண் வாங்கிக்கொண்டு வீடு போகமுன்னம் அரை இறாத்தல் முடிந்துவிடும்.///

    அதை மறக்க முடியுமா?
    நீங்க கூட உங்களுக்கு பிடித்த உணவில் குறிப்பிட்டிருக்கிறீர்கள் என்ன?
    உங்களுக்கு அரை இறாத்தல் போதுமா என்ன?

    //ஆஹா நல்ல நகைச்சுவையுடன் ஒருவரின் வாழ்வை பதிவு செய்திருக்கின்றீர்கள், இந்த வாத்தியார்போல் பலர் ஒவ்வொரு ஊரிலையும் உண்டு.//

    அதனால் தான் வாத்தியார் என்ற பாத்திரத்தை தெரிவு செய்தேன்
    நன்றி கருத்துக்கு

    ReplyDelete