அசையா விருட்சமே அசைந்தது ஏனோ?






துள்ளிவரும் தென்றல் காற்றை
தள்ளிவிட்டு எம்மீது சுகம் கண்டாய்- இன்று
வீசிவந்த அதேகாற்றில் சரிந்து விட்டாய்
பலமிழந்து சரிந்தாயா? வாழ்க்கை வெறுத்துச்சரிந்தாயா?
வாழ்க்கை வெறுத்துச்சரிய நியாயம் உன்பக்கமில்லை.

கொஞ்சிவிளையாடும் மைனாக்களை கண்டவள் நீ
கீச்சலிடும் கிளிகளின் அழகைக் கண்டுரசித்தவள் நீ
பாடும் குயிலின் பாடல் எல்லாம் உனக்கு அத்துப்படி
இத்தனை சுகமிருக்க வேறென்ன ?

நீ வளர்ந்த பாதை அது தனி
தட்சணாமூர்த்தியின் தவிலடியை ரசிக்காதவளா?
சின்னமௌனாலாவின் இசை ரம்மியத்தில் தவழ்ந்தவள்
பத்மநாதன் கானமூர்த்தி ஜெகநாதன் என்று அடுக்கிகொண்டே
உன்னிழலில் இசைகண்ட மகிழ்வெமக்கு
உன்னிலைகளில் தென்றல் பட்டால் அது நாதஸ்வர ஒலிபோலவே
வீசும்காற்றை தவிலடியாக மாற்ற உனக்கு புரியவில்லையா?

கிட்டிப்புள்ளு அடித்தபோது நீ எமக்கு நிழல் தந்தாய்
கிளித்தட்டு மறித்தபோது பழம்பெற உந்தன் அடியைத்தான் தொடவேண்டும்
துடுப்பாட்டத்தில் நீயும் ஒரு களத்தடுப்பாளன்
இத்தனை சுகம் இருக்க வேறென்ன உனக்கெதற்கு?

அரசியலில் நீ சாணக்கியன்
உதயனை எடுத்துவந்து
உன்னருகில் வாசிக்க கடைக்கண்ணால் பார்ப்பவள் நீ
வயதான பெரியோரும் கதைத்துவிடுவது
உனக்கு கேட்காமல் விட்டிருக்குமா?
நிகழ்வைக்குழப்ப விசிலடிக்க-அவர்களை
நம்மூர்க்காளையர் அடித்துக்கலைத்ததும் உன்னடியில்தான்
அதையெல்லாம் கண்டு ரசித்த உனக்கு
வேறென்ன உனக்கெதற்கு?

இடம்பெயர்ந்து வந்தோரை அரவணைத்து
உறங்குமடம்போல நிழல் கொடுத்து
இன்பம் கண்டவள் நீ
மாலை வேளையில் தண்ணீர்த்தொட்டியில்
தாகம் தீர்க்கும் பசுக்களும் கன்றுகளும்
உன்னிழலில் சுகம்காண
இன்புற்றவள் நீ
தண்ணீர்க் குடத்தோடு செல்லும் அழகியரை
ரசித்தவள் நீ
இத்தனை சுகம் இருக்க வேறென்ன உனக்கெதற்கு.

அண்ணை ரைட் நடிகர் பாலா தவழ்ந்த இடம் உன்நிழல்
உடுப்பிட்டி வானம்பாடி கரவெட்டியில் தவழ்ந்தும் உன்நிழல் தான்
பண்டிதர் வேலாயுதம் படித்ததும் உன்நிழல் தான்
எல்லோருக்கும் நீ ஒரு பொன்னில்லம்
இத்தனை புகழ் உனக்கு வேறென்ன உனக்கெதற்கு

இளையோராய் எல்லோரும் இருந்தவேளை
விட்ட குறும்பெல்லாம் உனக்குத்தான் வெளிச்சம்
சேர்ந்துசென்று இளநீர் குலையோடு கூடிவந்து
உன்னடியில் குடித்தோரை நீ மறந்திருக்க மாட்டாய்
இதையும் நீ ரசித்து சிரித்ததெல்லாம் மறந்துதான் சரிந்தாயா?


இன்னும் எத்தனை நினைவுகள்
அத்தனையும் மறந்து நீ சரிந்தாயா?
இத்தனை நினைவிருந்தால் அதுவே உனக்கு பலம்
இவ்வளவு பலம் இருக்க ஏன் அசைந்தாய் விருட்சமே

எம் வாசலில் வரவேற்கும் நீ இன்று இல்லை
உன்னினைவில் ஒரு வாரிசைக்கொடுத்துவிடு
மறந்துவிடாதே
ஆனால் அசையா விருட்ச்சமே அசைந்தது ஏனோ?
என்றும் இவ்வினாவுடன்....................

5 comments:

Anonymous said...

Ithu Engal koviladi Ala marama?

Anonymous said...

இத்தனை நாளாக எம் ஊர் ஆல விருட்சம் சரிந்து விட்டதென மனதளவில் வேதனை கொண்டு இருந்தோம் ..ஆனால் இன்று இத்தனை வரலாறுகளை தன்னுள் பெற்று இருந்த எம் தலவிருட்சம் எம்மை விட்டு பிரியத்தான் வேணுமா ???
என்ற பலகேள்விகள் உங்கள் கவிதை வரிகளை நோக்கும்போது ....

Unknown said...

இத்தனை நாளாக எம் ஊர் ஆல விருட்சம் சரிந்து விட்டதென மனதளவில் வேதனை கொண்டு இருந்தோம் ..ஆனால் இன்று இத்தனை வரலாறுகளை தன்னுள் பெற்று இருந்த எம் தலவிருட்சம் எம்மை விட்டு பிரியத்தான் வேணுமா ???
என்ற பலகேள்விகள் உங்கள் கவிதை வரிகளை நோக்கும்போது ....

Anonymous said...

Good job. excellent.Keep it up.

- Senthur from Kilavythoddam -

Anonymous said...

Touched heart.nice writing too.