கரவெட்டி அத்துளு அம்மனுக்கு பங்குனித்திங்கள்



பங்குனி மாதம் என்றாலே அம்மன் கோவில்களுக்கு விஷேசம் தான்.
உலகத்தின் இயக்கத்தின் சக்தியாக விளங்கும் சக்தி பொருந்திய தெய்வமாக கருதப்படும் இந்த அம்மனுக்கு பங்குனித்திங்களில் வரும் திங்கட்கிழமைகள் சிறப்பான தினமாக கருதப்படுகிறது.
அந்த மாதத்தில் வரும் ஒவ்வொரு திங்களிலும் அம்மனை சிறப்பாக வழிபட்டு அம்மனுக்காய் விரதம் இருந்து வழிபடுவர் அம்மன் பக்தர்கள்.கல்வி செல்வம் வீரம் என்றவாறாக வரும் வாழ்க்கையின் செல்வங்களின் மூலாதாரமாக வணங்கப்படும் அம்மன், குடிகொள்ளும் கோவில்கள் எல்லாம் விழாக்கோலம் பூடும்.
அம்மனின் சிறப்புக்களையும் புகழையும் ஒலித்தபடியே இருக்கும்.
இந்த காலங்களில் எல்லாம் கரவெட்டி முழுவதும் அம்மனின் புகழ் கரவெட்டி அத்துளு அம்மன் ஆலயத்திலிருந்து ஒலித்தபடியே இருப்பது இன்று என் நினைவில் வருகிறது.திங்கட்கிழமை என்றாலே இங்கு பக்தர்கள் வந்து வந்து போவதை அவதானிக்க முடியும் என்றால் பங்குனித்திங்களில் எப்படியிருக்குமென்று சொல்லிப்புரியவேண்டியதில்லை.
பச்சைப்பசேல் என்ற மருதநிலம் சூழ்ந்த இந்த ஆலயத்திற்கு இயற்கையான அம்சங்கள் பொருந்திய ஆலயமாக கானப்படுகிறது.பெரியபெரிய மரங்களே ராஜகோபுரங்களாகவும் கொடிகள் சூழ்ந்த பற்றைகள் அரணாகவும் காணப்பட இடாம்பீகமில்லாமல் குடிகொள்ளும் அம்மன் தான் கரவெட்டி அத்துளு அம்மன்.
இந்த ஆலயத்தின் சிறப்புக்களில் ஒன்றுதான் இந்த பங்குனி மாதங்களில் வரும் பொங்கல்.
குறிப்பாக பெண்கள் கலந்துகொண்டு ஆலயத்தில் இக்காலங்களில் அம்மனுக்கு பொங்கி படைத்தி தங்கள் நேர்த்திகளை வேண்டி வழிபடுவர்.
இதற்கு ஒரு ஐதீகமான கதையும் இருக்கிறது. கற்புக்கரசி கண்ணகி மதுரையை எரித்துவிட்டு வந்து தங்கிய இடங்களில் ஒன்றாக இந்த இடம் கூறப்படுகிறது.இங்கு சுவையான விடயம் என்னவெனில் இந்த ஒரே நாளில் பன்றித்தலைச்சி அம்மனுக்கும் இந்தியாவின் கேரளம் திருவனந்தபுர மாவட்டம் அட்டுக்கல் பகவதி ஆலயத்திலும் பொங்கல் பொங்குவது தான்.
இங்கெல்லாம் மதுரையை எரித்த கண்ணகி குடிகொண்டிருந்ததாக ஐதீகக்கதைகள் கூறுகின்றன.
இப்படியான சிறப்புக்கள் பொருந்தி கரவெட்டி அத்துளு அம்மன் ஆலயம் காணப்படுகிறது.
இவ்வாறாக பங்குனிமாதம் வரும் இறுதி திங்கட்கிழமை என்றால் அதைவிட கொஞ்சம் கூடிய விஷேசம்.ஊரே அம்மன் கோவிலை நோக்கி படையெடுக்கும் என்றுதான் சொல்லலாம்.
இந்த காலங்களில் நீர்ப்பாளயம் என்று சொல்லப்படும் படையலுக்கு இங்கு முக்கியத்துவம் அளிக்கபடும்.பொதுவாக பொங்கல் என்றால் கொஞ்சம் இனிப்புடன் கூடியதாக காணப்படுவது தான் எல்லோருக்கும் நினைவில் வரும்.இங்கு இதனுடன் இன்னுமொரு அம்சமாக வயல் நிலங்களில் விளையும் காய்கறிகளும் சேர்ந்ததாக செய்யப்படும் நீர்ப்பாளயம் முக்கியத்துவம் பெறுகிறது.பெண் தன் கணவர் வேர்வை சிந்தி அவரின் உழைப்பின் பயனாக தோட்டத்தில் கிடைத்த காய்கறிகளை கற்புக்கரசி கண்ணகி குடிகொண்ட அம்மனுக்கு படைத்து வழிபடுவதும்
வேண்டியவரங்களை வேண்டுவதும் இங்கு குறிப்பிடபடவேண்டிய விடயம்தான்.
இவை எல்லாவற்றிக்கும் மேலாக மாணவர்கள் தங்கள் பரீட்சைகாலங்களில் எல்லாம் அம்மனை வழிபட்டு பயனடைவர்.மாணவர்களின் மனப்பயம் நீக்கி அம்மன் மாணவர்களுக்கு உந்துசக்தியாக இருப்பது இதன் மூலம் புலனாகிறது.

இப்படியாக சிறப்புக்கள் எல்லாம் பொருந்திய கரவெட்டி அத்துளு அம்மனுக்கு விஷேசமான இந்த காலங்களில் இந்த வார திங்கட்கிழமை பங்குனியின் இறுதித்திங்கள்.
கரவெட்டியோடு கலந்த என் நினைவுகளில் இச்சிறப்புக்கள் பதியப்படுகிறது

3 comments:

தங்க முகுந்தன் said...

வணக்கம்!
தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் அமரர் மு. சிவசிதம்பரம் ஐயா அவர்களுடன் வேலைசெய்த காலத்தில் அவர் இவ்வாலயத்தைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தார்.
தங்களின்
தகவலுக்கு நன்றி!
வாழ்த்துக்கள்!

Anonymous said...

this is my home and it's changed a lot, miss that place...

கார்த்தி said...

நான் இடம்பெயர்ந்து கரவெட்டியில் இருந்தபோது வழிபட்ட ஆலயம் இது.
தகவலுக்கு நன்றி!