விறுவிறு என்று நடந்து போனேன் லண்டனில் ஹரோ பகுதியில்
அமைந்திருக்கின்ற வணிக கட்டட தொகுதியினூடாக.வானொலியில் இருந்த காலங்களில் அடிக்கடி போகின்ற இடம் அது.
ஆனால் இப்போது இருப்பது வேறு இடம்.
நீண்ட நாள்களுக்கு பிறகு ஸ்போட்ஸ் டிரெக்ட்க்கு(SPORTS DIRECT)
போகவேண்டிய தேவையிருந்ததால் அந்தப்பக்கம் போகிறேன்.
ஏன் ஸ்போட்ஸ் டிரெக்ட்க்கு?
ஏன் ஸ்போட்ஸ் டிரெக்ட்க்கு?
அதிலும் ஒரு விஷயம் இருக்கு.பிறகு சொல்கிறேன்.
சென்றுகொண்டிருந்த அந்த வேளையில் திரும்பி பார்க்க வைத்து குழல்களின் இசை.
குழல் என்றால் பெண்களின் குழல் என்றும் கொள்ள முடியும் இல்லையா?
அழகிய குழல் கொண்ட பெண்களின் இசை தானா என்றும் நினைக்கலாம் இல்லையா?
ஆமாம் ஆமாம் அழகிய பெண்கள் உயரமாக நடை நடந்து அழகோடும் ஆடும் காட்சியும் அங்கு காண முடிந்தது,ஆடுங்காட்சி வேறு இடம், இசை கேட்டது வேறு இடம்.
அவர்களையெல்லாம் நிழற்படங்களாக்கி தாண்டிச்செல்லும் போதுதான் இந்த குழல்களின் இசைச்சங்கமம் என் காதில் கேட்டது.திரும்பிப்பார்த்து கிட்டவாக சென்றேன்.
இசையை கேட்டதிலிருந்து அந்த இசை,அதன் மெட்டு,
அதனை இசைப்பவர்களின் உடையலங்காரங்கள் இடையிடையே
இசைப்பவர்கள் எழுப்பும் ஒலிகள்,என்னை கவர்ந்ததொன்றாகிவிட்டது.
அவசரமாக சென்ற என்னையும் இழுத்து மறித்து இசையை கேட்க வைத்தது.
ஒளிப்பதிவும் செய்துகொண்டேன்.பதிவின் நிறைவில்பதிவு செய்கிறேன்.
"மினைக்கட்டு எடுத்து போடுறன்" கேட்டு உங்கள் கருத்தையும் பதிவு செய்யுங்கள்.
இசைகேட்டு அதனை ரசிப்பவர்களில் நானும் ஒருவனாக பார்த்து
ரசித்துக்கொண்டிருந்தேன்.எந்திரன் திரைப்படத்தில் கிளிமஞ்சாரோ பாடல் காட்சி அமைக்கப்பட்டதைப்போல அவர்களின் உடையமைப்பு இருந்தது.
அப்படியானால் அந்த இசை கிளிமஞ்சாரோ மலைப்பகுதியை சார்ந்தவர்களின் இசையாக இருக்குமோ என்று எனக்கொரு எண்ணம்.
அவர்களில் ஒருவரின் அருகில் சென்று அது பற்றிய விடயங்களை கேட்க
அவர் ஒரு சில விடயங்களை சொல்லிவிட்டு சென்று விட்டார்.அவசரமாக
அவர் இருந்த நேரத்தில் அந்த இசையின் பெயர் வேரா(WAYRA)என்றார்.
நான் மீண்டும் மீண்டும் கேள்விக்கு மேல் கேள்வி கேட்க இது இங்கோ(INCO)
என்ற இனம் சார்ந்த இசை என்றும் இது பெரு,ஈக்குவடோர் போன்ற நாடுகளில்
காணப்படுகிறது என்று சொல்லிவிட்டு மீண்டும் தன்னுடைய இசை இசைக்க
ஒலிவாங்கிக்கு முன் சென்று விட்டார்.
இந்த விடயங்கள் சார்ந்து நான் தேடிக்கொண்ட விடயங்கள் பல.
வேரா(WAYRA)என்பதற்காக தமிழாக்கம் குழல் காற்று.அமேசன் காடுகளில்
ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இந்த இசை இருந்திருக்கிறது.அமேசன்
காடுகளில் இருந்த மரங்களில் இருந்து பெறப்பட்ட குழல்களால் இசையை உருவாக்கியிருக்கிறார்கள்.
அமைதியான இடங்களாகவும் உணர்வுகளுக்கு இசைவாகவும் அந்த இசை
அமைந்திருக்கிறது என்று சொல்லபடுகிறது.
காதல்,அமைதி,மரஞ்சோலைகள் நடுவில் வருகின்ற ரிதமான
ஒலியலைகள்,நதிக்கரையோரம் வருகின்ற ஒலியலைகள் என்று
இயற்கையின் சங்கீதமாகத்தான் அந்த இசை.
அமேசன் நதிக்கரையோர பேரரசாக விளங்கிய இன்கா(Inca Empire)இந்த இசையின் ஆரம்ப இடமாக இருக்கிறது.
14மற்றும் 15ம் நூற்றாண்டுகளில் பேராசான இந்த இன்கா பேரரசில்(Inca Empire)கெச்சுவா(Quechua)என்ற மொழி பேசுகின்ற பாரம்பரிய தேசிய
அமெரிக்க இன மக்கள் இந்த இசையை தங்கள் பாரம்பரிய இசையாக கொண்டிருக்கிறார்கள்.
இந்த கெச்சுவா இன மக்களில் ஒருவராக இருந்த ஜேமி ரோடிகியூஷ்(Jaime Rodriguez)என்பவர் இந்த இசையை 1989ஆம் ஆண்டிலிருந்து வெளிக் கொண்டு வந்திருகிறாராம்.இசையை அதே பாணியோடு இயற்கையின் சங்கீதத்தை
அந்த அமைப்பிலேயே ஒலிப்பதிவின் மூலம் வெளிக்கொண்டு வந்திருக்கிறார்.
அவரைத்தான் இந்த வேரா(WAYRA) இசையை ஒலிபதிவோடு இன்னியமாக வந்த பாண்ட் இசையாக அமைத்த ஆரம்பகர்த்தா என்று இணையத்தில் அறிய முடிந்தது.
அதன் தனித்துவத்தோடு கொஞ்சம் மேற் கத்தைய இசைக்கலப்போடும் இந்த வேரா(WAYRA)என்று சொல்லப்படும் இசையை அவர் கொண்டுவந்திருக்கிறார்.
அதில் இயற்கையில் ஒலிகளை எழுப்புவதற்காக பலவகை நுணுக்கங்கள்
கையாளப்படுகின்றமையை காணக்கூடியதாக இருக்கிறது.
விதைகளினாலான கிலுக்கிகள் தாளகட்டுபாடு தரவல்லனவாக இருக்கின்றது.
நீண்ட தூர காடுகளில் மனிதர்களால் எழுப்பப்படும் ஒலிகள் கூட
ரிதமாகியிருக்கிறது.
மர அசைவுகள்,நதிப்பாய்ச்சல்கள்.அங்கு வாழ்கின்ற விலங்குகளின் சத்தங்கள் என்று பலவகையான இயற்கை அமைவுடனான சங்கீதமாக
அமைந்திருக்கிறது.
இந்த வேரா(WAYRA)இசை கனடா,அமெரிக்கா போன்ற நாடுகளில் பிரபல்யமான நிகழ்வுகளில் இடம்பிடிக்குமளவிற்கு எல்லோராலும் ரசிக்கப்படுகிறது.
பல இசை தொகுப்புக்களை தந்த இந்த வேரா(WAYRA)இசைக்குழுவின் ஒரு
பகுதியினர் லண்டனில் நான் நடந்து சென்ற ஹரோ பகுதிக்கு வந்தபோது தான் எனக்கு பார்க்க முடிந்தது.
செவிந்தியர்களாக உடையலங்காரத்தோடு மிகவும் மற்றவர்கள்
ரசிக்கும்படியாக கரகோஷங்களுக்கு மத்தியில் வழங்கிய பாடலை உங்களுக்கு இங்கே பதிவேற்றித்தருகிறேன்.
உணர்வுகளின் தொகுப்பான இசைக்கு எங்கும் மதிப்பிருக்கும் என்பதற்கும் இசைக்கு மொழி என்பது ஒரு தடையல்ல என்பதற்கும் இது மிகச்சிறந்த உதாரணம்.
இயற்கையும் உணர்வுகளும் சங்கமிக்கவைக்கும் இசையின் உண்மையானஅர்த்தத்தை அந்த இசையும் கொண்டிருந்தது.என்னையும் கவர்ந்துகொண்டது.
படங்கள்:கமரா மற்றும் இணையத்தின் உதவியோடும்
தகவல்கள்- இணையம்
ரசனை- என்னுடையது
1 comment:
அருமையான தகவல்கள்
இனிமையான இசையாக
மனங் கவ்வுகின்றன.
Post a Comment