வெண்பனிதேசத்தில் சிறப்பாக நிகழ்ந்த “தமிழர் விழா 2010”

நீண்டகாலத்திற்குப்பிறகு கரவைக்குரல் தன் பதிவுகளோடு சந்திக்க தயாராகிறது என்ற மகிழ்வுடன் கடந்த சில நாள்களாக சில தொழினுட்ப தடங்கல்களினால் பதிவுகளில் சில தாமதங்கள் காணப்பட்டதையும் இன்றும் அந்த தடங்கலுக்கு மத்தியில் உங்களை சந்திக்க தயாராகிறது என்பதை உங்களோடு பகிர்ந்துகொள்கிறது.இந்த விடயம் முதலிலேயே சொல்லப்பட்டதில் காரணமும் இருக்கிறது. கூடிய காலம் காணவில்லையே என்று பலதரப்பாலும் மின்னஞ்சலிலும் தொலைபேசியிலும் கேட்டுக்கொண்டேயிருந்தமைதான். அதைவிட இன்னுமொருசாரார் நகைச்சுவையாகக்கூட ”யூகே போனவுடன் பிசி ஆகிவிட்டீர்களோ,” என்று பகிர்ந்துகொண்டமையும் இங்கு சொல்லத்தான் வேணும். கரவைக்குரலின் வரவு காணாது அன்புகூட்டி வரவேற்போடு கேட்டுக்கொண்டிருந்த அன்பான உள்ளங்கள் அனைவருக்கும் கரவைக்குரல் நன்றி பாராட்டுகிறது.

சரி
அண்மையில் வெண்பனிதேசத்தின் இங்கிலாந்து மண்ணில் குரொய்டன்(CROYDEN) என்று தமிழ் மக்கள் நிறைந்து வாழும் ஒரு இடத்தில் தமிழர் விழா கொண்டாடப்பட்டது.அந்த நிகழ்வில் கலந்து கொள்ளக்கூடிய ஒரு சந்தர்ப்பம் எனக்கு கிடைத்தது,அதைப்பற்றிய ஒரு சின்ன பார்வை, அங்கு வந்திருந்தவர்களின் கருத்துக்களின் தொகுப்பாகவும் ஆக்கபூர்வமான அமைந்துவிட்ட நிகழ்வின் சில சிந்தனைகளையும் பகிர்ந்து கொள்ளலாம் என்ற எண்ணம்.

குறொய்டன்(CROYEDEN Tamil) வாழ் தமிழ் மக்களின் சிந்தனையில் எம் அடையாளங்களான கலை கலாச்சார பண்பாட்டு விழுமியங்களை பேணிக்காக்க வேண்டும் என்பதற்கு அமைவாகவும் அல்லலுறும் எம் மக்களின் துயரத்தில் பங்கெடுத்து அவர்களுக்கு ஏதாவது பல உதவிகள் செய்யவேண்டும் என்ற நல்ல சிந்தனையிலும் உருவாகின்ற அமைப்பான குறொய்டன் தமிழர் சமூக அமைப்பு (CROYDEN TAMIL COMMUNITY ORGANIZATION) தமிழர் விழாவோடு ஆரம்பிக்கிறது. முற்கூட்டியே இப்படியான ஒரு அமைப்பு தங்களுக்குள்ளேயே இயங்கி வந்ததாக குறிப்பிட்ட நிகழ்வு ஒழுங்கமைப்பாளர்கள் ”தை பிறந்தால் வழி பிறக்கும்” என்பதற்கு அமைவாக குளிர்ச்சியுடன்,மகிழ்ச்சி பொங்கும் இந்த தை மாதத்தில்,பொங்கல் விழாக்காலத்தில் இந்த தமிழர் விழா ஆரம்பத்தோடு இதன் செயற்பாடுகளை முடுக்கிவிட ஆரப்பித்துள்ளதாக குறிப்பிடுகின்றனர்.காலத்தின் தேவைகருதியும் எம் பண்பாட்டுக்கோலங்கள் எங்கும் அழிவுறாது இருக்க வேண்டும் என்ற உந்துதலே இதற்கு முக்கிய காரணம் என்று மேலும் குறிப்பிட்டமை இங்கு நினைவுகொள்ளத்தக்கது.

மாலை வேளையில் இருநூற்றுக்கும் அதிகமான அவ்விடத்தில் வாழும் எம்மவர்களின் சபைதனில் நிகழ்வு ஆரம்பமானது.
ஆரம்ப நிகழ்வுகளை பார்க்கக்கூடிய சந்தர்ப்பம் எனக்கு கிட்டவில்லை. நிகழ்வு ஆரம்பித்து இடையில் கலந்து நிகழ்வுகளை ரசிக்கக்கூடியதாக சந்தர்ப்பம் கிடைத்தது.
பல்லியம் என்று சொல்லப்படும் பல் வாத்திய இசை சிறுவர்களினால் இசைக்கப்பட்டது. ”மருதமலை மாமணியே முருகையா ’ என்ற பாடலை வயலின் இசைக்கருவிகளால் இசைத்துக்கொண்டிருந்தார்கள்.சிறுவர்களால் மிகவும் சிறப்பாக இசைக்கப்பட்டது.இங்கு குறிப்பிட்டு சொல்ல வேண்டிய விடயம் யாதெனில் இங்கு பிறந்த வளர்ந்த எம்மவர்களின் குழந்தைகள் அவர்கள் கர்நாடக சங்கீதத்தின் பிடிப்போடு எதிர்காலத்தில் சிறந்த ஒரு கலைஞனாக வரக்கூடிய செல்வங்களாக அதை இசைத்தமையாகும்.சிறுவர்கள் என்பதால் வரும் சில ராகங்களின் ஸ்வரங்களின் ஸ்தானத்தை சரியாக அடையமுடியவில்லை எனினும் சபை மிகவும் ரசிக்கும்படியாக தங்கள் இசைக்கச்சேரியை சிறப்பாக செய்து முடித்தனர்.பல்லிய நிகழ்வுகள், பரத நாட்டியங்கள், மற்றும் வேகநடனங்கள் என்று நிகழ்வு பதினொரு மணி தாண்டும் வரை நடந்துகொண்டேயிருந்தது,
குறிப்பாக குமரிகளின் கும்மி நடனம்,ஆடவர்களின் நடன நிகழ்வு இறுதியில் தில்லானா என்று சொல்லப்படும் கலை நிகழ்வுகளின் இறுதியில் வரும் ஒரு அங்கம், இவையெல்லாம் நிகழ்வைச்சிறப்பாக்கியது. இவற்றையெல்லாம் நெறியாள்கை செய்த ஆசிரியர்கள் பாராட்டுக்குரியவர்கள். என்றாலும் நிகழ்வில் கலந்துகொண்டவர்களின் கருத்தாக சிலவற்றை எதிர்கால நிகழ்வுகளின் ஆக்கபூர்வமான செயற்பாடுகளுக்காக இறுதியில் பகிர்ந்துகொள்ளலாம் என்ற சிந்திக்கிறேன்.
அதைவிட நிகழ்வின் இடையில் தாயகத்தின் அல்லலுற்ற மக்களுக்களின் உணர்வுகளைப்பிரதிபலிக்கும் இசைக்குறுந்தட்டு வெளியிடப்பட்டது. கவிஞர்கள் வேணுகோபால்,ஈழக்கதிரவன்,
ராஜமனோகரன்,சிவா, மற்றும் சரவணன் ஆகியோரின் கவிவரிகளால் ”எழுந்து வா தமிழா” என்பதை கருப்பொருளாக தாங்கி வந்த பாடல்கள் இசை இறுவெட்டாக வெளியீடு செய்யப்பட்டது.வரவேற்கக்கூடியது.
எல்லாவற்றிக்கும் மேலாக ”தேசத்தின் பாலம்” என்று ஒரு அம்சமாக தாயகத்தின் அல்லலுறும் மக்களுக்கு அமைப்பு எந்த வகையில் தன் உதவிகளை செய்யப்போகிறது என்ற அடிப்படையில் ஒரு விவரணத்தையும் நிகழ்வின் இடையில் மேற்கொள்ளப்பட்டது. எந்த வகையில் உதவிகள் செய்யப்படலாம் என்ற அடிப்படையிலும் அல்லுறும் சிறுவர்களுக்கு எதிர்காலத்தில் அவர்கள் வாழ்வு சிறக்கும் படியாக செய்யக்கூடிய நற்பணிகள் பற்றியும் அதில் உணர்த்தப்பட்டது. நிகழ்வை அறிவிப்பாளர் ஜெகன் மற்றும் நிகழ்வின் ஒழுங்கமைப்பாளர்களில் ஒருவர் ( என்று தான் நான் நினைகிறேன்) தாயாபரன் அவர்களும் விவரித்தார்கள். முக்கியமான காலகட்டத்தில் இப்படியான இந்த விவரணம் அமைந்திருந்தமை எல்லோர் உணர்வுகளையும் தட்டியது.
தொடர்ந்தும் நிகழ்வில் இந்த நிகழ்வின் சிந்தனையாளர்கள் என்ற அடிப்படையில் படைப்பாளி தீனா மற்றும் கவிஞர் ராஜமனோகரன் ஆகியோரும் கௌரவிக்கப்பட்டார்கள்.
கௌரவங்கள் நிச்சயமாக உற்சாகங்களை கொடுக்கும் என்பது மட்டுமல்லாமல் எதிர்காலத்தில் அப்படியான நிகழ்வுகளின் வரவுகளை அதிகரிக்கும் என்றால் ஐயமில்லை.அவற்றின் மூலம் எங்கள் கலாச்சார நிகழ்வுகள் நின்று நிலைக்கும் என்றால் மறுப்பதற்குமில்லை.

நிகழ்வைப்பற்றி அமைப்பின் தலைவர் கலாநிதி ஜெயந்தன்
அவர்கள் குறிப்பிடுகையில் “ இந்த அமைப்பை நாம் உருவாகியதன் நோக்கம் புலம்பெயர்ந்து இப்பிரதேசத்தில் வாழ்ந்துவரும் எம் தமிழர்களை ஒன்றிணைத்து ஓர் உறுதியானதும் தெளிவானதுமான ஒரு சமூக அமைப்பாக மாறுவதுடன் அதன் மூலம் எங்கள் தாயக உறவுகளுக்கு தேவையான உதவிகளையும் பலத்தையும் வழங்கி அவர்களையும் ஓர் உறுதியான நிலைக்கு கொண்டுவருவதற்கேயாகும்’ என்றார்.
அதோடு மட்டுமல்லாமல் “ மிகக்குறுகியதான காலப்பகுதியில் பல்வேறு வேலைத்திட்டங்களை உருவாக்கி புலம்பெயர்ந்த மக்கள் மத்தியிலும் தாயக மக்கள் மத்தியிலும் செயல்பட்டு வருகிறோம்.இதற்குத்தரும் எல்லையில்லாப்
பேராதரவு மேலும் வலுவடையச்செய்வதோடு பெரு நம்பிக்கையையும் ஊட்டும்” என்று பெருமை கொண்டார் அந்த அமைப்பின் தலைவர் கலாநிதி ஜெயந்தன் அவர்கள்.

நிகழ்வு பதினொரு மணியையும் தாண்டி நடந்து கொண்டேயிருந்தது. பல்வேறு சின்னஞ்சிறார்களும் நடுத்தர வயத்து சிறார்களும் நிகழ்வை வெகு உற்சாகமாக நடாத்திக்கொண்டேயிருந்தனர்.குறிப்பிட்டுச்சொல்லக்கூடிய சில தவிர்க்கக்கூடிய விடயங்களை இங்கு சொல்லத்தான் வேண்டும். மேடை நிகழ்வுகளில் இயல்,இசை,நாடகம் என்ற வரிசையில் முத்தமிழ் நிகழ்வுகளாக அமைதல் நிகழ்விற்கு சிறைப்பைத்தரும் என்ற அடிப்படையில் பாடல்களும் நடனங்களும் அமைந்திருந்தன.என்றாலும் எந்த வேளையிலும் சபை நிகழ்வினால் சலிப்படையாமல் நிகழ்வை விறு விறுப்பாக்கும்படியாக நிகழ்வை கொண்டு செல்லவேண்டிய பொறுப்பு விழா ஒழுங்கமைப்பாளர்களையே சாரும்.பல்லிய நிகழ்வுகளால் ஒருபோதும் சபை சோர்ந்துவிடாது, ஆனால் தொடர்ந்தும் பல்லிய நிகழ்வாகவே அமையுமாக இருந்தால் நிச்சயமாக ஒருவிதமான சலிப்பை சபைக்குத்தரும் என்றால் அது உண்மைதான்.அதேபோல நிகழ்வில் இசைக்கப்பட்ட தசாவதாரம் திரைப்படத்தின் ஒரு பாடல் பல்வேறு தடவைகள் கேட்ககூடியதாக இருந்தமை இன்னொரு விதமான சலிப்பைத்தந்தது. தொடர்ந்து நடன நிகழ்வுகள் மட்டும்தான் தமிழர்களின் கலை கலாச்சார நிகழ்வுகளா என்ற கேள்விகூட சபையிலே கேட்கக்கூடியதாக இருந்தது.பரத நாட்டியங்களை அடிப்படையாக வைத்தே நாட்டிய நாடகங்கள் இருக்கின்றன. பல்வேறு நடனக்கலைஞர்களைக்கொண்டதாக அமைந்திருந்த நிகழ்வில் அவற்றைப்படைத்திருக்கலாம்,நடனக்கலைகளை முறைப்படி கற்கும் சிறுவர்கள் பலர் நிகழ்ச்சிகளைப்படைத்தமையை உணர முடிந்தது. என்றாலும் திரும்பத்திரும்ப ஒரே கலைஞர்களே மேடைக்கு வந்து கொண்டிருந்தமையும் ஒரேவகையான பாடல்களுக்கே நடனம் ஆடிக்கொண்டிருந்தமையும் சலிப்பைத்தந்தது,அதைவிடுத்து தெரிவுசெய்யப்பட்ட நிகழ்வுகளாக சகல கலைஞர்களையும் உள்ளடக்கியதாக குறிப்பிட்ட நிகழ்வுகளைப்
படைத்திருக்கலாமே என்பது தான் எல்லோருடைய எண்ணமுமாக இருந்தது.
மேலும் எம்மவர்களின் தமிழர் விழாவில் திரும்பத்திரும்ப வேக நடனம் மேடைக்கு அவசியமா? என்ற கேள்வியும் இருக்கிறது.சினிமாக்களின் இடையில் சில குத்துப்பாடல்களுக்கு ஆடுவதைப்போல ஒருபாடலுக்கு மட்டுமல்ல பல தடவைகள் எம் நடுத்தர வயது கலைஞர்கள் பாடல்வரிகளின் அர்த்தங்களுக்கே நளினம் கொடுத்து ஆடுவதெல்லாம் தேவைதானா? அதுவும் பொங்கலோடு வரும் தமிழர்விழாவில் எம்கலை வளர்ச்சிக்காக நடாத்தும் நிகழ்வில் இவற்றின் அவசியம் என்ன? இதில் சொல்லப்படும் எம் பண்பாட்டு விழுமியம் என்ன? இப்படியான பல கேள்விகள் எல்லாம் அங்கு மனதில் கேட்டவை, வாய் நுனியின் உச்சரிப்பில் வந்து சென்றவை. அதுமட்டுமல்லாமல் நிகழ்வைத்தொகுத்தளித்த அறிவிப்பாளர் ஜெகன் அவர்கள் பல காலங்கள் எம் கலாச்சார நிகழ்வுகளோடு மிகவும் நெருக்கமானவர் என்று அறிந்திருக்கிறேன்.நிச்சயமாக நிகழ்விற்காக கலந்துகொண்ட ஒத்திகையில் கூட நிகழ்வுகளின் நெறிப்படுத்தல், நிரல் ஒழுங்கமைத்தல் மற்றும் கூடிய நேரம் மேடையை கைப்பற்றும் நிகழ்வுகள் மற்றும் ஒரே நிகழ்வுகளினால் சபையில் வரும் சலிப்புத்தன்மை போன்றவற்றை உணராமல் விட்டுவிட்டாரா? எல்லாவற்றிற்கும் மேலாக ”தேசத்தின் பாலம்” மற்றும் ”எழுந்து வா தமிழா” என்று பல்வேறு சேதிகளை சொல்லும் இந்த தமிழர் விழாவில் இப்படியான நிகழ்வுகளை தவிர்க்க காரணங்கள் பல இருக்கின்றன என்று எல்லாம் சிறிய சிறிய (இதெல்லாம் சிறிய விடயமா என்று சிரித்திருப்பீர்கள் இல்லையா) தவிர்க்கக்கூடிய விடயங்கள் குறிப்பிட்டு சொல்லத்தான் வேண்டும்.
மேலும் நடனங்கள் பாடல்கள் என்ற நிகழ்வுகளுக்கு அப்பால் நடனங்களில் பலவகைகள் இருக்கின்றன, நாடகங்களில் பலவகை இருக்கின்றன இவையெல்லாம் சபையோரை மனங்கோணவைக்காத நிகழ்வுகள்,வில்லிசைகள் பட்டி மன்றங்கள், சிரிக்க வைக்கும் நகைச்சுவை நிகழ்வுகள் நடனங்களில் காவடி,கும்மி,கோலாட்டம் என்று அடுக்கிக்கொண்டேபோகலாம்.வளர்ந்துவரும் சிறார்களின் திறமைகளை இனங்கண்டு வெளிப்படுத்தும் ஒரு பாரிய பொறுப்பை பொறுப்பெடுத்து அவற்றை சரியாக இனங்கண்டு கலைஞர்களை மேடைக்கு கொண்டு வந்தமையும் வழி நடாத்தியமையும் இந்த அமைப்புக்கு சிறப்பான பாராட்டை கொடுக்க வேண்டும்.
அதேபோல எம் தமிழர்களின் விழாவில் இப்படியாகத்தான் நிகழ்வை ஒழுங்கமைக்கவேண்டும் என்றும் இந்த நிகழ்வின் நோக்கத்தை இலக்காக கொண்ட நிகழ்ச்சிகளின் படைப்புக்கள் அமைய வேண்டும் என்றும் அவர்களை வழி நடத்த வேண்டும் என்றும் எல்லோரும் எண்ணவேண்டும்.. உண்மையில் அந்த அடிக்கடி வந்த வேகநடனங்களைக்கூடத் தவிர்த்து நிகழ்வில் சபையின் ரசனைகளுக்காக ஒரு நிகழ்வோடு நிறுத்தியிருக்கலாம்.அதோடு எம்பண்பாட்டு கலை நிகழ்வுகளை அந்த கலைஞர்களால் படைத்திருக்கலாம்.
இப்படியான சில தவிர்க்கவேண்டியவற்றைத்தவிர முற்றிலும் சிறப்பாக அமைந்திருந்தமை பாராட்டத்தக்கது.படைத்த கலைஞர்கள், நெறியாள்கை செய்த ஆசிரியர்கள், ஒழுங்கமைப்பாளர்கள் என்று எல்லோரின் சிறப்பான முயற்சி எல்லோருக்கும் ஒரு முன்னுதாரணமாக இருந்தது.
சிறுவர்களின் இந்த கலை ஈடுபாடுகள் மற்றும் மேடை நிகழ்வுகளில் சிறப்பாக வெளிக்கொணருதல் என்பன எம்மினத்தின் கலை மற்றும் பண்பாட்டு நிகழ்வுகள் புலம்பெயர் தேசத்தில் ஆணித்தரமாக என்றென்றும் கால் பதித்தேயிருக்கும் என்ற நம்பிக்கையை ஊட்டுமென்றால் எந்தவிதமான மறுபேச்சிற்கும் இடமேயில்லை.அந்த கருத்தை மனதிலெடுத்து அதற்காக நிகழ்வுகள் கூட்டி விழாவெடுக்கும் எம்மவர்கள் தமிழர்களின் உணர்வுகள் மற்றும் கலைவிரும்விகளின் நன்றிக்குரியவர்கள்.
என்றும் எங்கும் எங்கலைகள் ஓங்கட்டும் என்றும் பிந்தியாதாகவந்தாலும் மகிழ்ச்சிபொங்கும் பொங்கல் தின வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்வோம்

இவற்றைப்பற்றிய உங்கள் கருத்துக்களைக்கூட கீழேயிருக்கும் ”உங்கள் கருத்துக்கள்” என்ற பகுதியை அழுத்துவதினூடாக பகிர்ந்து கொள்ளலாம்.