இங்கு வண்டில் மாடு ஓடுது சோதனையாய்


சோதனைகள் பலரகம்
அவை ஒவ்வொன்றும் ஒருவிதம்
சோதிப்பதால்தான் எதிர்பார்ப்பும் ஏக்கமும்-இல்லையேல்
எல்லாமே ஒன்றுதான் இப்பாரினிலே
சோதனைகளை தாண்டி- அவை
சாதனைகள் பெற்றுவிட்டால்
ஆனந்தத்துக்கும் எல்லையுண்டோ இந்தப்பாரினிலே

மனிதன் பிறந்து விட்டால் சோதனைகளை எதிர்கொள்ள தயாராக தான் பிறக்க வேண்டும் என்பது உலக நியதி என்றும் சொல்லலாம்.இதை மறுப்பதற்கில்லை.
இங்கு இதுவும் ஒரு சோதனையில் நடந்த விடயம் தான்.ஆனால் இதற்கு "சோதனை" என்ற சொல் வடிவம் பொருந்துமோ எனக்கு தெரியவில்லை.இருப்பினும் பொதுவாக மாணவர்கள் இதை தங்களின் சோதனை என்று சொல்வது வழமை.
பொதுவாக ஆசிரியர்கள் தன்மாணவர்களை பரீட்சைகள் வைத்து பரிசோதிப்பதும் அதற்கு மாணவர்கள் விழுந்து விழுந்து படிப்பதும் இப்போதெல்லாம் நடைமுறையிலுள்ளவிடயங்கள்.நாளாக நாளாக படித்ததெல்லாம் மூளைக்கு ஏற்றிவிட்டு பரீட்சைமண்டபத்திலே வந்து தலையை கலக்கி கொட்டிவிட்டு அதன்பின்பு அவையெல்லாம் தேவையில்லாததொன்று என்பதைப்போல நடமாடும் மாணவர்களும் இல்லாமலில்லை.இவர்களெல்லாம் மனதிலெடுத்ததை மட்டுமே பரீட்சை மண்டபத்தில் கொட்டிச்செல்வர் என்பது ஆமோதிக்கபடவேண்டியவிடயமும் கூட.கொஞ்சம் மாறுதலாக பரீட்சகர் பரிசோதித்துவிட்டால் "இண்டைக்கு கொஞ்சம் இறுக்கமாக போச்சு" என்று மனதினுள்
குறுகுறுத்தபடி வெளியேறுவர் இப்படியான மாணவர்கள்.

இப்படித்தான் ஒரு தமிழ் ஆசிரியர் தனியார் கல்வியகத்தில் அடிக்கடி மாணவர்களுக்கு பரீட்சைகள் வைப்பது வழமை.அடிக்கடி வைத்தாலும் அது கொஞ்சம் போட்டிப்பரீட்சை என்றுதான் சொல்லிவைப்பார்.அதனாலே பரீட்சை மண்டபத்தினுள்ளே கவனிப்பாளர்களும் கூட.முகாமையாளரின் முகாமையிலும் கவனிப்பிலும் பரீட்சை ஆரம்பம்.
ஆரம்பிக்கும் இறுதி நிமிஷம் மட்டும் படித்துவிட்டு எல்லாமே இறைவன் துணையென்று மேலே சுழி போட்டு 'வாத்தியார் என்ன கேள்வியைபோட்டாரோ எப்படி போட்டாரோ" என்று சிந்தித்தபடி ஆரம்பிக்கிறது மாணவர் கூட்டம்.
சோதனையின் இடையில் "சலசல" என்று சத்தம் கேட்பதும் கவனிப்பாளர் எழுந்து "சூ சூ என்ன சத்தம்" என்று சொல்ல பின்னர் அது குறைவதுமாய் பரீட்சை நடந்து கொண்டிருக்கிறது.எது எப்படியாக இருந்தாலும் மாணவர்கள் தங்கள் சந்தேகங்களை எப்படியாவது மற்றவர்களிடம் கேட்டுத்தெரிந்துகொள்வதுமாய் பரீட்சை நடந்து கொண்டிக்கிறது.உண்மையிலை இந்த விசயம் எல்லாம் வாத்தியாருக்கு தெரியாது, வாத்தியார் இப்ப இதை வாசித்தாரென்றால் "இப்பிடி எழுத்தித்தான் நீ எல்லாரையும் விட கடைசி மார்க்ஸ் எடுத்தனியோ" எண்டு தலைக்கு மேல கைவைப்பார்."கெட்டிக்காரன்" என்று இப்ப சொன்னாலும் சொல்லுவார் என்ன?. சரி அது இருக்கட்டும்.
அப்ப எல்லாரும் நேரத்தையும் பார்த்தபடி விறு விறு என்று எழுதிக்கொண்டே கடைசிக்கேள்விக்கு போனால் அது வழமைபோலவே கட்டுரை.
அதில எல்லாருக்கும் எழுத கொஞ்சம் இலகுவாக இருந்த தலைப்பு "வண்டில் மாட்டின் சுயசரியதை எழுதுக" என்று.மற்றது எல்லாம் வாத்தியார் படிப்பிச்சது மாதிரி இல்லாமல் அது வாத்தியாரின்ரை பேப்பருக்கு ஒரு தரத்துக்காக கொஞ்சம் கடுமையாக இருந்தமாதிரி உணர்வு எல்லாருக்கும்.அப்ப பொதுவாக வண்டில் மாடுதான் எல்லாரின்ரை பேப்பர்லையும் ஓடுது.கட கட கட கட எண்டு எல்லாரும் எழுதினாலும்(வண்டில் மாடு தானே), ஒரு பொடியன் முழுசி முழுசி அக்கம் பக்கம் பார்க்கிறான் "டேய் டேய்" எண்டு தனக்கு பக்கத்தில் இருந்தவனை தட்டினால் அவன் எங்க பார்த்தால் தானே,ஏதோ கஸ்டப்பட்டு அவனை ஒருவாறு பார்க்கவைத்தான் அவன்.
பார்க்கவைத்த அவன் கேட்டான் மெல்ல மெல்ல

"டேய் நீ என்ன வண்டில் மாட்டின் சுயசரிதையா எழுதிறாய்"
"ம்ம் ம்ம் ஏனடா"
"ஏனடா ஏதும் பிரச்சனையே"
"பின்னை ஏன் நான் உன்னை கூபிடுறன், டேய் நானடா வண்டில் மாட்டில இரண்டு மாட்டிலை ஒரு மாட்டின்ரை சுயசரிதை எழுதிப்போட்டன்டா மற்ற மாட்டை பற்றியும் எழுதவேணுமோடா?"
"நல்ல கேள்வி, நீ எல்லா மாட்டையும் பற்றி எழுதினால் நாங்க எங்கடா போறது, நான் இளையதம்பி அண்ணையின்ர மாட்டை பற்றி எழுதுறன் நீ வேணுமெண்டால் கணபதிப்பிள்ளையண்ணையின்ரை மாட்டைப்பற்றி எழுது என்ன"
என்று பெரிய புத்திமதி பரீட்சை மண்டபத்திலே.
"" "சூ சூ" என்ன சத்தம்"" என்று கவனிப்பாளர் எழும்பி வர புத்திசாலியின் புத்திமதியும் சொல்லிமுடிகிறது."சரியோ பிழையோ ஏதோ எழுதுவம்"என்றபடி வேகமாக எழுதிமுடிக்கின்றனர் புத்திசாலிகள்.
"இனி எப்ப மார்க்ஸ் வரப்போகுதோ" என்ற எதிர்பார்ப்பின்படி எல்லா மாணவர்களும் பேசியபடி வெளியேறுகின்றனர்.
ஏன் தெரியுமோ???? பரீட்சைப்புள்ளி பார்க்கிற ஆர்வம் இல்லை.அது புள்ளியை பார்த்து வாத்தியார் பிறகு எத்தனையோ மாட்டை பற்றி சொல்லி முதுகிலை கொஞ்சம் தட்டுத்தட்டி முதுகிலை வண்டில் மாடு ஓட்டுவார் எல்லோ, அப்ப அண்டைக்கு வகுப்புக்கு வராமல் விடத்தான், வேற என்ன, அவ்வளவு ஆர்வம் படிப்பிலே எங்கட பொடியள்.

"டொம்" எண்டு விழுந்திச்சினம் "டக்" எண்டு எழும்பிச்சினம்



விழுந்தவன் எழும்புவதும்
விழுந்தாலும் மீசையிலே
மண் முட்டவே இல்லை என்று
வீராப்பு பேசுவதுமாய் இந்த உலகம்
காதலில் விழுபவர் வேறு
அன்பினில் விழுபவர் வேறு
பாசத்தில் விழுபவர் வேறு
பாத்ரூமில்(குளியலறையில்)விழுபவர் வேறு
சறுக்கி விழுபவர் வேறு
தடக்குபட்டு விழுபவர் வேறு
இது சும்மா விழுந்த கதை

நல்லதொரு வாத்தியார்
மகாலிங்கசிவம்
கோவில் கண்டாமணி ஒலிக்கும்வேளை
மனதில் பக்தியோடு எழுந்து நின்று
கணமேனும் இறைவைனை நினைக்க சொன்னார்
நல்ல விடயம் என்றாலும்
கண்டிப்பான உத்தரவு தான் வகுப்பில்

வாத்தியாரின் கண்டிப்பான உத்தரவு மாணவர்களை நல்வழிப்படுத்தும் என்ற சிறப்பான நோக்கமே.அதாவது ஆலயமணி இறைவனை ஒரு நிமிடம் நினைவு படுத்துவதாக ஆசிரியர் அவர்கள் எமக்கு அறிவுரை பகிர்ந்தார்.
மகாலிங்கசிவம் ஆசிரியர் இப்போது எம்முடன் இல்லாவிட்டாலும் அவரின் மாணவர்கள் இப்போதும் அவரின் பெயர் கூறும் அளவுக்கு எங்கும் பரந்து காணப்படுகின்றார்கள் என்பது உண்மை.
ஆசிரியர் தமிழில் வேற்றுமை என்ற பகுதியை கற்பிக்கும்போது மிகவும் மகிழ்ச்சியுடன் கூடிய உதாரணங்களுடன் கற்பிப்பார் என்பது இப்போதும் என்னுடைய மனதினுள் வந்து நிழலாடுகிறது.இப்படியாக ஆசிரியரை பற்றிசொல்ல ஒரு தனியான பதிவு வேண்டும் என்றால் மிகையாகாது.

அப்ப வாத்தியார் தச்சன் தோப்பு பிள்ளையார் கோவில் மணி கேட்கும்போது எல்லாரும் எழும்பி கும்பிடவேணும் எண்டு சொல்லிவைச்சார்.அதை சில இளம்பராய மாணவர்களுக்கு "இதெல்லாம் ஏன்" என்ற கெள்வி அவர்கள் மனதில் எழுந்தாலும் வாத்தியாருக்கு எல்லாரும் பயம் தானே.அதால எல்லாரும் எழும்பி நிண்டு கும்பிடுவம்,

அதில இன்னுமொரு விசயம் சொல்ல வேணும்,அந்த மணி சரியாக ஐந்து மணிக்கு தான் ஒலிக்கும்.அந்த நேரம் வகுப்பு முடியும் நேரம்.வகுப்பு முடியபோகுது என்ற சந்தோசத்துடன் எல்லாரும் எழும்பிக்கும்பிடுவம்.
சில வேளைகளில் யாரும் ஆசிரியர் கூடிய நேரம் வகுப்பு எடுத்தால் கூடிய நேரம் கும்பிடுவதும் உண்டு.இது பெரிய பக்தி.
ஆனால் இந்த முறையை எல்லோராலும் தவறாமல் கடைப்பிடித்துவந்தமை குறிப்பிடத்தக்கது.

இப்பிடித்தான் ஒருக்கால் ஆலய மணி ஒலித்த வேளை எல்லாரும் எழும்பிக்கும்பிட்டம். கண்மூடி ஒருகணம் இறைவனை நினைத்து எல்லாரும் இருக்கிறம்.வாத்தியாரும் கண்மூடி உள்ளத்துள் "தச்சந்தோப்பு பிள்ளையாரே" எண்டு நினைச்சு வகுப்பு முடிக்கிற நேரமும் வந்திட்டுது எண்டு வேகமாக படிப்பிக்க தொடங்கினார்.
ஒருகண செக்கனுக்குள் "கட புட கட புட" எண்டு சத்தம். "தொமார்" எண்டு சத்தம்.சத்தத்தை நோக்கி எல்லாரும் திரும்பினால்................
நான்கு பொம்பிளைப்பிள்ளையள் கீழுக்கு கிடக்கினம்.என்னடா பூமி அதிர்ச்சியேதுமோ எண்டு நினைச்சால்! அது ஒண்டுமில்லை, அது அவர்கள் இருந்ததும் அவர்கள் இருந்த வாங்கு விழுந்ததுமாய் அவர்களும் பூமாதேவியை விழுந்து கும்பிட்டதும் ஒன்றாகவே நடந்தது.
அதிர்ச்சியோடை பார்த்த எல்லாரும் "கொல்" என்று விழுந்து விழுந்து பெரிய சிரிப்பு. விழுந்த பிள்ளைகள் எல்லாம் சிரிச்சவை சிரிச்சு முடியமுன் "டக்" எண்டு எழும்பிவிட்டினம் வெட்கம் கூடிய முகத்தோடு.

வாத்தியார் சொன்னார் "யாரும் விழுந்தால் போதுமே,பார்த்து சிரிக்க வெளிக்கிட்டுவிடுவியள் மற்றவர் விழுவதில் அப்படியென்ன சந்தோசம் உங்களுக்கு".என்று கண்டிப்பான குரலோடு சொல்ல சிரிப்பு எல்லாம் "கம்' எண்டு நிண்டுது.
வகுப்பும் முடிந்து விட்டது சிரிப்போடு.ஆனால் அதுக்கு பிறகு எல்லாரும் கும்பிட்டுட்டு இருக்கும்போது கீழுக்கு தடவி பார்த்து வாங்கு இருக்கோ இல்லையோ எண்டு "செக்" பண்ணித்தான் இருப்பினம்.
அது தான் சொல்லுறது "எந்த ஒரு செயற்பாடும் அனுபவித்த பின்புதான் அதன் கவனம் கூடும் என்பது மட்டுமல்லாமல் அதன் கஷ்டமும் விளங்கும் என்று."

யாழ்ப்பாணத்தில் கூடுதாலாக எல்லா இடங்களிலும் ஆலய மணி கேட்கும்போது இறைவனை துதிப்பதும் ஆலய வீதிகளை கடக்கும்போது ஒருகணம் எழுந்து நின்று வழிபடுவதும் குறிப்பிட்டு சொல்ல வேண்டியவை.
இங்கு விழுந்தவர்வகளின் பெயர் விபரங்கள் விழுந்தவர்களுடன் தொடர்பு ஏற்படுத்தி கரவைக்குரல் கேட்டபோது அவர்களின் கண்டிப்பான வேண்டுதலினால் தவிர்க்கப்பட்டிருக்கிறது.