"டொம்" எண்டு விழுந்திச்சினம் "டக்" எண்டு எழும்பிச்சினம்



விழுந்தவன் எழும்புவதும்
விழுந்தாலும் மீசையிலே
மண் முட்டவே இல்லை என்று
வீராப்பு பேசுவதுமாய் இந்த உலகம்
காதலில் விழுபவர் வேறு
அன்பினில் விழுபவர் வேறு
பாசத்தில் விழுபவர் வேறு
பாத்ரூமில்(குளியலறையில்)விழுபவர் வேறு
சறுக்கி விழுபவர் வேறு
தடக்குபட்டு விழுபவர் வேறு
இது சும்மா விழுந்த கதை

நல்லதொரு வாத்தியார்
மகாலிங்கசிவம்
கோவில் கண்டாமணி ஒலிக்கும்வேளை
மனதில் பக்தியோடு எழுந்து நின்று
கணமேனும் இறைவைனை நினைக்க சொன்னார்
நல்ல விடயம் என்றாலும்
கண்டிப்பான உத்தரவு தான் வகுப்பில்

வாத்தியாரின் கண்டிப்பான உத்தரவு மாணவர்களை நல்வழிப்படுத்தும் என்ற சிறப்பான நோக்கமே.அதாவது ஆலயமணி இறைவனை ஒரு நிமிடம் நினைவு படுத்துவதாக ஆசிரியர் அவர்கள் எமக்கு அறிவுரை பகிர்ந்தார்.
மகாலிங்கசிவம் ஆசிரியர் இப்போது எம்முடன் இல்லாவிட்டாலும் அவரின் மாணவர்கள் இப்போதும் அவரின் பெயர் கூறும் அளவுக்கு எங்கும் பரந்து காணப்படுகின்றார்கள் என்பது உண்மை.
ஆசிரியர் தமிழில் வேற்றுமை என்ற பகுதியை கற்பிக்கும்போது மிகவும் மகிழ்ச்சியுடன் கூடிய உதாரணங்களுடன் கற்பிப்பார் என்பது இப்போதும் என்னுடைய மனதினுள் வந்து நிழலாடுகிறது.இப்படியாக ஆசிரியரை பற்றிசொல்ல ஒரு தனியான பதிவு வேண்டும் என்றால் மிகையாகாது.

அப்ப வாத்தியார் தச்சன் தோப்பு பிள்ளையார் கோவில் மணி கேட்கும்போது எல்லாரும் எழும்பி கும்பிடவேணும் எண்டு சொல்லிவைச்சார்.அதை சில இளம்பராய மாணவர்களுக்கு "இதெல்லாம் ஏன்" என்ற கெள்வி அவர்கள் மனதில் எழுந்தாலும் வாத்தியாருக்கு எல்லாரும் பயம் தானே.அதால எல்லாரும் எழும்பி நிண்டு கும்பிடுவம்,

அதில இன்னுமொரு விசயம் சொல்ல வேணும்,அந்த மணி சரியாக ஐந்து மணிக்கு தான் ஒலிக்கும்.அந்த நேரம் வகுப்பு முடியும் நேரம்.வகுப்பு முடியபோகுது என்ற சந்தோசத்துடன் எல்லாரும் எழும்பிக்கும்பிடுவம்.
சில வேளைகளில் யாரும் ஆசிரியர் கூடிய நேரம் வகுப்பு எடுத்தால் கூடிய நேரம் கும்பிடுவதும் உண்டு.இது பெரிய பக்தி.
ஆனால் இந்த முறையை எல்லோராலும் தவறாமல் கடைப்பிடித்துவந்தமை குறிப்பிடத்தக்கது.

இப்பிடித்தான் ஒருக்கால் ஆலய மணி ஒலித்த வேளை எல்லாரும் எழும்பிக்கும்பிட்டம். கண்மூடி ஒருகணம் இறைவனை நினைத்து எல்லாரும் இருக்கிறம்.வாத்தியாரும் கண்மூடி உள்ளத்துள் "தச்சந்தோப்பு பிள்ளையாரே" எண்டு நினைச்சு வகுப்பு முடிக்கிற நேரமும் வந்திட்டுது எண்டு வேகமாக படிப்பிக்க தொடங்கினார்.
ஒருகண செக்கனுக்குள் "கட புட கட புட" எண்டு சத்தம். "தொமார்" எண்டு சத்தம்.சத்தத்தை நோக்கி எல்லாரும் திரும்பினால்................
நான்கு பொம்பிளைப்பிள்ளையள் கீழுக்கு கிடக்கினம்.என்னடா பூமி அதிர்ச்சியேதுமோ எண்டு நினைச்சால்! அது ஒண்டுமில்லை, அது அவர்கள் இருந்ததும் அவர்கள் இருந்த வாங்கு விழுந்ததுமாய் அவர்களும் பூமாதேவியை விழுந்து கும்பிட்டதும் ஒன்றாகவே நடந்தது.
அதிர்ச்சியோடை பார்த்த எல்லாரும் "கொல்" என்று விழுந்து விழுந்து பெரிய சிரிப்பு. விழுந்த பிள்ளைகள் எல்லாம் சிரிச்சவை சிரிச்சு முடியமுன் "டக்" எண்டு எழும்பிவிட்டினம் வெட்கம் கூடிய முகத்தோடு.

வாத்தியார் சொன்னார் "யாரும் விழுந்தால் போதுமே,பார்த்து சிரிக்க வெளிக்கிட்டுவிடுவியள் மற்றவர் விழுவதில் அப்படியென்ன சந்தோசம் உங்களுக்கு".என்று கண்டிப்பான குரலோடு சொல்ல சிரிப்பு எல்லாம் "கம்' எண்டு நிண்டுது.
வகுப்பும் முடிந்து விட்டது சிரிப்போடு.ஆனால் அதுக்கு பிறகு எல்லாரும் கும்பிட்டுட்டு இருக்கும்போது கீழுக்கு தடவி பார்த்து வாங்கு இருக்கோ இல்லையோ எண்டு "செக்" பண்ணித்தான் இருப்பினம்.
அது தான் சொல்லுறது "எந்த ஒரு செயற்பாடும் அனுபவித்த பின்புதான் அதன் கவனம் கூடும் என்பது மட்டுமல்லாமல் அதன் கஷ்டமும் விளங்கும் என்று."

யாழ்ப்பாணத்தில் கூடுதாலாக எல்லா இடங்களிலும் ஆலய மணி கேட்கும்போது இறைவனை துதிப்பதும் ஆலய வீதிகளை கடக்கும்போது ஒருகணம் எழுந்து நின்று வழிபடுவதும் குறிப்பிட்டு சொல்ல வேண்டியவை.
இங்கு விழுந்தவர்வகளின் பெயர் விபரங்கள் விழுந்தவர்களுடன் தொடர்பு ஏற்படுத்தி கரவைக்குரல் கேட்டபோது அவர்களின் கண்டிப்பான வேண்டுதலினால் தவிர்க்கப்பட்டிருக்கிறது.

4 comments:

Anonymous said...

அடே அப்பா !
அந்த அருமையான மனுஷன் விட்ட பகிடியிலும் பார்க்க வேண்டின அடிதானே யாபகத்தில் நிக்குது. அந்த வேற்றுமை படிப்பீக்க நான் கோவில் திருவிழா எண்டு போகாமல் விட ,அடுத்த நாள் எனக்கு வகுப்பில் திருவிழா எல்லோ கொண்டாடி விட்டார் .1 --8 ஆம் வேற்றுமை வரைக்கும் கேட்டு அடிவிழுந்தது , அட அதுதான் பறவாய் இல்லை எண்டு பார்த்தால் வீட்டை வர வேறை திருவிழா ஒண்டு காவல் இருந்தது. அதை நான் இங்கு சொல்லவில்லை ...........வேண்டாம் சொன்னால் இப்பவும் நோகும் எனக்கு .........

Anonymous said...

இன்றுவரை வேற்றுமை மறக்கவில்லை அதை கை வலிக்க அன்பாய் கற்பித்த ஆசான் நம் இடையே இல்லை என்பது மனதில் கவலையாக இருந்தாலும் அவரது அன்பு கலந்த கண்டிப்பான செயற்பாடு இன்று கூட ஆலய மணி ஓசைக்கு எங்களை வணங்க வைக்கிறது ...

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுவோம் ..


ஆசானின் அன்புக்குரிய
மாணவர்

Anonymous said...

ம்ம் ம்ம் வாழ்க்கையில இதெல்லாம் சாதாரணமப்பா .....................

ஆனாலும் சிலபேர் இன்னொரு தமிழ் வாத்தியாரிடம் வாங்கியது அசாதாரணம்?????
(அனுபவபட்டவர்கள் மன்னிக்கவும் அடிபட்டவர்கள் அதையும் இங்கே இடலாமே)

(இந்த வாத்தியார் வைத்த தமிழ் பரீட்சை நேரம் ஒருவருக்கு வந்த சந்தேகம்??????)

Anonymous said...

hey What happen to mahalingam sir? when was that incident happen?
thanks thinesh u rewind our Manaval kalasalai life.

keep it up