பி சுசீலா இனி மேடைக்கு ......... ரசிகனின் விண்ணப்பம்

இங்கிலாந்தில்  உதவும் கரங்கள் சமூக சேவை அமைப்பின்  ஏற்பாட்டில் நடைபெற்ற இசை நிகழ்ச்சி நெஞ்சம் மறப்பதில்லை.அது லண்டன் மற்றும் மில்ற்ரன் கீன்ஸ் பகுதிகளில் இடம்பெற்றது.லண்டன் நிகழ்ச்சியின் குறோயிடன் பகுதியில் பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.அந்த நிகழ்ச்சியில் உதித்த எண்ணங்களும் எனது பார்வையுமே இதை எழுத என்னை த்தூண்டியது.

பிரபல திரைப்படப்பின்னணிப் பாடகி கலைமாமணி திருமதி  பி.சுசீலா அவர்களும்  கம்பீரக் குரலுக்கு சொந்தக்காரன் ரி.எம்.சௌந்தரராஜன் அவர்களின் மகன் ரி எம் எஸ் செல்வக்குமார் அவர்களும் நிகழ்ச்சியில் முன்னிலைபடுத்தபட்ட பாடகர்கள். நெஞ்சம் மறப்பதில்லை என்ற நிகழ்ச்சிக்கான பெயரும் நெஞ்சம் மறப்பதில்லை என்ற பாடலும் இந்த பிரபலக் கலைஞர்களின் வருகையும் மொத்தத்தில் சிறப்பை கொடுத்தது எனலாம். 

இதற்கு முதலில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் கலைமாமணி சுசீலா அவர்கள் ஒரு சிறப்பு நிகழ்ச்சிக்காக வருகை தந்திருந்தார்.அந்த வேளையில் அவரை நேரடியாக வானொலியில் நேர்காணக்கூட சந்தர்ப்பம் அமையப்பெற்றது.அப்போது அவரின் இசை ஞான அறிவையும் இசை ஞான வித்துவச்செருக்கும் அவர் பேச்சில் மிளிர்ந்திருந்தது.மறக்கமுடியாத அந்த நேர்காணல் எனது முதலாவது வானொலி நேர்காணல் என்பதும் குறிப்பிடத்தக்கது.மீண்டும் அந்த இசைக்குயிலை  நேரடியாக சந்திக்க கிடைத்தமையும் ஒரு வாய்ப்பான விடயம் தான்.


 சரி
அந்த நெஞ்சம் மறப்பதில்லை நிகழ்ச்சியில் நெஞ்சம் மறப்பதில்லை என்ற பாடல் தன் குரலால் பாட கிடைத்த அறிய சந்தர்ப்பத்தையும் சுசீலா அம்மையார் அவர்கள் நினைவுபடுத்தினார்.லதா மங்க்கேஷர் அவர்களுக்கு அந்த பாடலை பாடகொடுக்கலாம் என்று மெல்லிசை மாமன்னர் திரை இசைச்சக்கரவர்த்தி விஸ்வநாதன் அவர்களும் திரைக்குழுவினரும் பேசிக்கொண்டிருந்து நிறைவில் இல்லை இல்லை எமது சுசீலா பாடட்டும் என்று தனக்கு தந்த பாடல் என்று பெருமையோடு சொன்னார்.அப்படியாக தனக்கு கிடைத்த சந்தர்ப்பாங்கள் தான் தன்னை இப்படி உயர்த்தியிருக்கிறது என்று பெருமை கொண்டார் கலைமாமணி சுசீலா அம்மையார் அவர்கள்.

அப்படியாக பல பாடல்களை நாம் என்றும் ரசித்த இனிய குரலுக்கு சொந்தக்காரியும்  மற்றும் தன் தந்தையின் பாடல்களை பாடும் உரிமையான குரலும்   மேடைக்கு வருகின்றது  பலத்த எதிர்பார்ப்போடுதான் எல்லா ரசிகர்களின் வருகையும் அமைந்திருந்தது.
கலைமாமணி பி சுசீலா அவர்கள் பாடிய ஏராளம் பாடல்கள்.அந்த பாடல்களே எத்தனை உணர்வுகளை தாலாட்டியிருக்கின்றன.காதலாக  இருந்தாலும் சரி,உறவுகளின் பாச பிணைப்புகளாக இருந்தாலும் சரி,சோக உணர்வுகளாயினும் சரி. என் கடவுள்களுக்கான வேண்டுதல்களாக   இருந்தாலும் சரி.பல்லாயிரக்கணக்கான பாடல்கள் அவரின் குரலால் அழகுபெற்றிருக்கின்றன.அந்தப்பாடல்களையும்  சுசீலா அம்மையார் அவர்கள் அன்றைய நாள் மேடையில் கூட  தொடராகப்பாடி அசத்தியதோடு   எத்தனை பாடல்களை பாடி விட்டேன். எல்லாப்பாடல்களையும் நினைவுபடுத்துவது என்பது தனக்கே  மிகக்கடினம் என்றும்  சொல்லியிருந்தார்.அவ்வாறாக பல்லாயிரக்கணக்கான பாடல்களை பாடி திரையுலகத்தையே ஒரு கலக்கு கலக்கி கொடிகட்டிப்பறந்த பாடகி.அப்படியான பாடகியின் வருகை என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கும் அந்த நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்த நிகழ்ச்சி ஒழுங்கமைப்பாளர்களின் பிரமாண்டமான ஏற்பாடுகளுக்கும் காரணமாகின.ஏற்கனவே முதலில் வருவதற்கான  சில சிக்கல்களினால் அவரால் வராமலிருந்தும் இரண்டாவது தடவை முயற்சியில் அவரது வருகை 
அமைந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இப்படியாக பல கடின பயணத்தோடு ரசிகர்களை சிறப்பான பாடல்களோடு சந்தித்தார் திரைபடப்பின்னணிப்பாடகி  கலைமாமணி சுசீலா.
உண்மையில் அவரின் பாடல்களிலும் இருக்கும் தனித்துவம்,அவரின் குரலினால் பாடல்கள் சிறப்பாகும் விதம், நுணுக்கமாக பாடல்களில் அவர் இராக தாள முறைகளை கையாளும் விதம் எல்லாம் சுசீலா அம்மாவின் பாடல்களுக்கு ஒரு தனிச்சிறப்பு.அதற்கெல்லாம் மிகபெரியளவிலான ரசிகர் பட்டாளமே இருந்திருக்கிறது.அவரின் காதல் பாடல்களை கேட்டுக்கேட்டும் பாடிப்பாடியும் காதலித்தவர்கள் எங்கள் பெரியோர்கள்.இடையிடையே அந்த வரிகளை கடிதங்களாக எழுதியிருப்பார்களோ என்னவோ. மொத்தத்தில் அவருக்கு அவ்வளவு ரசிகர் பட்டாளமே இருகிறது.அதைவிட காலம் கடந்தும் அவரது பாடல்கள் இளைய தலைமுறையினரையும் ரசிக்குமளவிற்கு அமைந்தது மட்டுமல்லாமல் அவரின் பாடல்களை கேட்டு கேட்டு அவர்களுக்கு மெல்லிசையில் சிறப்பான எடுத்துக்காட்டுகளாக அமைந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.இப்படியான பல சிறப்புகளை தன்னகத்தே கொண்டிருக்கும் திரைப்படப்பினணிப்பாடகி சுசீலா அம்மா அவர்களை அன்று நேரில் பாடக்கேட்டபோது கொஞ்சம் கவலையும் தொட்டுவிட்டது.ஏனெனில் பாடல்களில் பல்லாயிரம் தொடத்தொட வயதிலும் ஏற்றம்.அது அவரின் பாடல்களை அந்த மேடையிலே பாடக்கேட்டபோது ஏதோ இசையில் இழந்துவிட்ட உணர்வாக இருந்தது என்பது உண்மை.என்றாலும் பல்லாயிரக்கணக்கான பாடல்களை பாடியிருந்தாலும் அந்த பாடல்களையும் அதன் மெல்லிசையின் ராகத்தையும்
நினைவிலிருத்திப் பாடியிருந்தமை கேட்கும் போது பரவசமாயிருந்தது.இருப்பினும் உலகமெங்கும் ரசிகர்கள் மனங்களில் நீங்காத இடம் பிடித்திருக்கும் கலைமாமணி சுசீலா அம்மா அவர்கள் மேடையில் பாடும்போது அதை கேட்கும்போது அவரது குரலில் இசையில் ஏற்படும் மாற்றங்களை ரசிகர்களாள் ஏற்றுக்கொள்ளமுடியுமா என்பது ஒரு கேள்விக்குறியான விடயம் தான்.ஏன் அன்றைய மேடையிலேயே ஒரு சிலர் சுசீலா அம்மாவின் குரல் கொஞ்சம் தளுதளுத்துவிட்டது என்று உச்சரிப்பதை கேட்க முடிந்தது.வயதின் ஏற்றத்தோடு குரலில் வரும் மாற்றம் ஏற்றுக்கொண்டேயாகவேணுமெனினும் அவரின் இசை கேட்டு ரசித்த மனம் ஏற்க மறுக்கிறது.உண்மையில் பல்லாயிரம் பாடல்கள் பாடி பல லட்சக்கணக்கான ரசிகர் மனம் வென்ற கலைப்பொக்கிஷம் பி சுசீலா அம்மா அவர்கள் மேடையில் இனிபாடுவதை தவிர்ப்பது நல்லது என்றே ஒரு ரசிகனாக எண்ணத்தோன்றுகின்றது.என்னதான்  உதவும் சேவை நோக்க தேவைகளுக்காக கலைமாமணி அவர்கள் தன் குரலிசையோடு லண்டன் வந்திருந்திருந்தாலும் ஒரு சாதாரண ரசிகர்களாக அவர்களின் வயதின் ஏற்றத்தால் வந்த குரல் மாற்றத்தை பலரால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை என்பதே உண்மை. ரசிகர்கள் இளைய சுசீலாவின் துள்ளலான குரலே கேட்க துடிக்கின்றார்கள்.


அது நடைமுறையில் சாத்தியப்படாதவிடயமும் கூட.உண்மையில் கலைஞர்கள் தங்கள் தனித்துவங்களை என்றும் நிலை நிறுத்த வேண்டும் என்பதற்காக தங்கள் உச்சக்கட்ட வெற்றிப்புகழோடு  எப்போதும் தொடர்ந்துகொள்ள நினைப்பார்கள்.அந்த விடயம் ஏதோவொரு வகையில் ரசிகர்கள் சார்பில் சிந்திக்கும்போது உண்மையான விடயமும் தான்.
உண்மையில் பல வழிகளிலும் எடுத்து நோக்குகின்றபோது சுசீலா அம்மா அவர்கள் இனி ரசிகர்களின் எதிர்பார்ப்பு பூர்த்திசெய்யக்கூடிய நிகழ்ச்சிகளை தெரிவு செய்வது சிறப்பென்றே விண்ணப்பிக்க தோன்றுகிறது.
இசை ஞானம் படைத்த கலைமாமணி சுசீலா அம்மா அவர்கள் குரலிலே தழுதழுக்க உங்கள் இசையில் வரும் மாற்றத்தை இசை மற்றுல் சொல் உச்சரிப்பில் வரும் மாற வயதின் ஏற்றத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பதால் தான் இந்த ரசிகர்களின் விண்ணப்பமும் கூட.
சுசீலா அம்மாவின் குரல் என்றும் தனித்துவமாக என்றும் நாம் கேட்ட இனித்த குரலாகவே எம்மைப்போன்ற ரசிகர்கள் மனதில் இருக்கவேண்டுமென்பதே நியாயமான இந்த விண்ணப்பத்திற்கு காரணம் .மேடையில் அவர் வழங்கும் நிகழ்ச்சிகள் அந்த இசை இன்பத்தை இனி கொடுக்குமா என்பதை கலைமாமணி சுசீலா அவர்களே தீர்மானிக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் விண்ணப்பம்.

கரவையின் கதம்ப நிகழ்ச்சி-லண்டன் கலைஞர்களின் அரங்கம்

யாழ் மாவட்டத்தின் வடமராட்சியில் அமைந்துக்ள்ள கரவெட்டி என்ற அழகிய கிராமத்தின் லண்டன் வாழ் மக்கள் இணைந்து வழங்கிய பிமாண்டமான நிகழ்ச்சிதான் கரவையின் கதம்பம்.


புலம்பெயர்ந்தும் தாயக மக்களின் அபிவிருத்தி மற்றும் மக்கள் சார்ந்த நலன் நோக்கிய செயற்பாடுகளில் ஈடுபட்டுவரும் அமைப்புகளின்  வரிசையில் கரவெட்டி பிரதேச மக்களும்  இணைந்து லண்டனில் கரவெட்டி அபிவிருத்தி ஒன்றியம் என்ற ஒழுங்கமைக்கபட்ட கட்டமைப்பினூடாக பல சமூக நலன் நடவடிக்கைகளில் தங்களின் பங்களிப்பையும் செலுத்திவருகின்றார்கள்.அந்த வகையில் பிரமாண்டமான முறையில் கரவையின் கதம்பம் என்ற சிறப்பான பெயரோடு நிகழ்ச்சி ஒழுங்கு செய்யபட்டது.ஏலவே கடந்த இரு வருடங்களும் சிறப்பான நிகழ்ச்சியை ஒழுங்கு செய்த கரவெட்டி அபிவிருத்தி ஒன்றியம் இந்த வருடமே கரவையின் கதம்பம் என்ற நிகழ்ச்சியை ஒழுங்கு செய்திருந்தது.இதில் பாராட்டபடவேடிய பல விடயங்கள் இருக்கின்றன.

நிகழ்வின் ஒழுங்கமைப்பில் கரவெட்டி என்ற ஊரின் பெயரை இணைத்து கரவையின் கதம்பம் என்று பெயர் சூட்டியிருந்தமை சிறப்பம்சம்.ஊரைத் தாண்டி வேறு தளம் புலம். பொதுவாகவே இசை என்றும் இன்னிசை மாலை என்று ஏதாவது ஒரு பெயரை சூடிக்கொள்ளாமல் கரவையை இணைத்து கதம்பம் நிகழ்ச்சியாக்கி கரவெட்டியின் பெயரை ஒரு நிகழ்வினூடாக நிலை நிறுத்தியிருந்தமை பாராட்டுக்குரியது. கடந்த வருடங்களில் வேறு பெயர்களோடு அமைந்த நிகழ்வு இந்த வருடம் கரவையின் கதம்பம் என்ற பெயரில் அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

நிகழ்வில் இடம்பெற்ற நிகழ்ச்சிகள் யாவும் கதம்பம் என்ற சொற்பிரயோகத்திற்கு சற்றும் மாறாது  பார்வையாளர்களை ரசனைக்கு ஏற்றவாறே  நிகழ்ச்சிகள் நெறிப்படுத்தப்பட்டன.ஏனெனில் நிகழ்ச்சியின் ஆரம்பம் முதல் எல்லோரையும்  பிரமிக்கவைக்கும்  படியாக நிகழ்ச்சிகள் அமைந்தன.
நிகழ்வின் ஆரம்பத்தில் சிறீமதி கலைவாணி இந்திரகுமார் அவர்களின் மங்கல விளக்கேற்றும் வைபவம் இடம்பெற்றது.அவர் நிகழ்வின் இடம்பெற்ற ஆரம்ப நிகழ்வான வாத்திய இசை சங்கம நிகழ்வை ஒருக்கிணைத்து நெறிப்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது..


இந்த நிகழ்ச்சியின் சுட்டிக்காட்டவேண்டிய விடயங்களில் முற்றிலும் இளைஞர்களும் சிறுவர்களும் நிகழ்ச்சிகள் செய்த கலைஞர்கள் என்பதை குறிப்பிட்டேயாக வேண்டும்.புலம்பெயர்ந்த நாட்டில் கலை கலாச்சார ஈடுபாட்டில் இருக்கும்  எம்மவர்களின் குழந்தைகள் அவர்கள்.இந்த நாடுகளிலேயே கலைகளைப் பயின்று அதில் தேர்ச்சியும் பெற்று அனைவரும் ஒருங்கிணைந்து தந்த நிகழ்ச்சிகளால் ஆரம்பத்தில் அரங்கமே மெய் சிலிர்ந்தது.கர் நாடக சங்கீதம்,வயலின், வீணை,புல்லாங்குழல்,தாளவாத்திய கருவிகள், மேற்கத்தைய வாத்திய கருவிகள் என்று விரிந்த இசை அரங்கிற்குள்  அரங்கிற்குள், பரத நாட்டியம்,மேற்கத்தைய நடனம் , வடக்கிந்திய நடனம் என்று நடன அரங்காகவும் சிறப்புபெற்றது.






ஆரம்பம் முதலே வாத்திய இசை நிகழ்ச்சிகளில் கலைஞர்கள் இசைத்த பாடல்கள் அத்தனையும் அனைவரையும் ரசிக்க வைத்து அரங்கில்  இருந்தவர்களை அசையவிடாது மகிழ்வூட்டின.இசை நடன நிகழ்ச்சிகள் யாவும் உண்மையிலேயே புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் இளைஞர்களால் தான் அரங்கேறியிருக்கின்றதா என்று மெய்சிலிர்க்கவைத்தன.
இந்த இடத்தில் தான் அனைவரின் சிந்தனைகளையும் பல வழிகளிலும்  தூண்டி விட்டது.இத்தனை கலைஞர்கள் இங்கிருக்க அவர்களுக்கான களங்கள் உருவாக்குவதை விடுத்து பல ஒழுங்கமைப்பாளர்களும் பெரும் பணத்தை செலவு செய்து இவர்களைப்போன்ற கலைஞர்களையே வெளி நாடுகளில் இருந்து
இறக்குமதி செய்கின்றார்களே என்பது தான் அந்த சிந்தனை .இப்படியான வளமான கலைஞர்களை உருவாக்க கூடிய புலத்தில் வெளி நாடுகளில் இருந்து இறக்குமதி செய்தாலே அதற்கு பெறுமதி என்றால் இந்த வளமான கலைஞர்களின் எதிர்காலம்,கலைகளின் வாழ்வு எப்படி நிலை நிறுத்தப்படப்போகின்றது என்பதை மனதோடு மனதாக முணுமுணுத்த பார்வையாளர்கள்  கரவையின் கதம்பம் நிகழ்ச்சி அந்த சவால்களை முறியடித்திருக்கிறது என்று பெருமையோடு பேசியமையும் அவதானிக்கமுடிந்தது.
நிகழ்வின் இடையில் கரவெட்டி அபிவிருத்தி ஒன்றியத்தின் தலைவர்
திரு கிருஷ்ணமூர்த்தி  அவர்கள் உரை கூட இந்த நிகழ்ச்சியின் வெற்றி பற்றி
குறிப்பிட்டுருந்தமை குறிப்பிடத்தக்கது.அது மட்டுமல்லாமல் கரவெட்டி என்ற கிராமத்தில் போதிய வசதிகளோடு கூடிய மருத்துவமனை அதற்கான இதர சேவைகளில் கரவெட்டி ஒன்றியம் எவ்வாறு 
ஈடுபடுத்திக்கொண்டிருக்கின்றது என்பதை பற்றியும் குறிப்பிடிருந்தார்.
இப்படியாக சேர்க்கப்படும் சிறுதுளி பணத்தில் மக்களுக்கான நலன் சார்ந்த விடயங்கள், பாடசாலை அபிவிருத்தி நடவடிக்கைகள், மாணவர்களுக்கு புலமைபரிசில்கள் என்று செவ்வனே   முன்னெடுக்கப்படும் செயற்திட்டங்கள் பற்றியும் குறிப்பிட்டார்.
தொடர்ந்தும்  பல நிகழ்ச்சிகள்.
நிகழ்ச்சியின் ஒழுங்கமைப்பில் பார்வையாளர்கள் சலிப்படையக்கூடியதான சில விடயங்கள் இடம்பெற்றமையையும் குறிப்பிட்டேயாகவேண்டும்.
ஆரம்பம் முதலே நிகழ்ச்சிகளில் உத்வேகம் இருந்து இடையில் மேடை நிகழ்சிகளின் தொய்வு பார்வையாளர்களை சற்றே  திரும்பச்செய்துவிட்டது. ஒரே கலைஞர்களின்  மேடையிலிருந்து விடைபெற்று மீண்டும் மீண்டும் மேடையை அலங்கரித்தமை நிகழ்ச்சியில் ஆரம்பத்திலிருந்த உத்வேகத்தை சற்றே  குறைத்தது.. சில வாத்தியக்கலைஞர்கள்,நடன நிகழ்சிகளின் கலைஞர்கள் என்று அவர்களின் மேடைக்கான மீள் வருகை ஆரம்பத்தில் அவர்களின் வருகையின் போது இருந்த  பார்வையாளர் எதிர்பார்ப்பை சற்றே குறைவடையசெய்தது. அதுமட்டுமல்லாமல் சில இசைப்பாடல்கள் மீண்டும் மீண்டும் வெவ்வேறு கலைஞர்களால் இசைக்கபட்டன.பல்லிசை பல கலைஞர்களால் நிகழ்ச்சி நெறிப்படுத்தப்படும்போது அவர்களின் இசை நிகழ்ச்சி அதில் இசைக்கப்படும் பாடல்களின் மீள்வருகை மற்றும் நிகழ்ச்சி  ஒத்திகை என்பவற்றை நிகழ்ச்சி ஒழுங்கமைப்பாளர்கள் கவனத்திலெடுத்தல் வருகின்ற காலங்களில் பார்வையாளர்களின் சல சலப்பையும் முணு முணுப்பையும் குறைக்கலாம் என்பது எண்ணம்.அதுவும் நேர ஒழுங்கமைப்பு நிகழ்ச்சிக்கு மிக முக்கியமானதொன்று.நேர ஒழுங்கமைபோடு நிகழ்ச்சியை ஒரே வாத்திய என்ற நிகழ்ச்சியாக இருக்காமல் மாறுபட்ட கலைஞர்களால் நிகழ்ச்சி ஒருங்கிணைத்து நெறிப்படுத்தும் போது அந்த நிகழ்ச்சியின்  வெற்றி மிகவும்  தனியானது.

எது எப்படியாவிருப்பினும் லண்டன் வாழ் இளைஞர்கள் மற்றும் சிறுவர்களை கலைஞர்களாக பார்க்ககூடிய சிறப்பை கரவையின் கதம்பம் நிகழ்ச்சி அமைத்துகொடுத்தது அதுவும் வெளி நாட்டு இறக்குமதிகளாக வரும் கலைஞர்களை மட்டும் வைத்தே ரிக்கட் நிகழ்சிகளை செய்யலாம் என்று சிந்திக்கும் விழா ஒப்ழுங்கமைப்பாளர்கள் மத்தியில் கரவெட்டி அபிவிருத்தி ஒன்றியத்தினருக்கு இந்த கரவையின் கதம்பம் நிகழ்ச்சிக்காக ஒரு சபாஷ் போட்டு லண்டன் மற்றும் ஈழத்து கலையுலகம் சார்பில் ஒரு நன்றியையும் தெரிவிக்கப்பட வேண்டும்.எமது கலைஞர்களை ஊக்குவித்து அந்த கலைஞர்களுக்கான கலைப்படைப்புகளை மேடையேற்றிய  ஒரு புறம், மறுபுறம் கரவை என்ற கிராமத்தின் பெயரையும்  பலரும் உச்சரிக்க செய்து கரவெட்டி மக்களுக்கான சமூக நலன் சேவைகளில் கைகொடுக்கும் கரவெட்டி அபிருத்தி ஒன்றியம் இன்னும் பல சேவைகளை செய்ய கரவைக்குரலின் வாழ்த்துக்கள்.


பாலச்சந்திரன் என்ற கலை ஆளுமை- என்றும் தலைக்கோல் விருதுகுரியவர்

ஈழத்து கலைஞர்களில் தனக்கென்று தனியான தனித்துவத்தை பெற்றவர் திரு.கே எஸ் பாலச்சந்திரன் அவர்கள்.
அதுவும் அண்ணை ரைட் என்று யாழ்ப்பாணத்து பேருந்து நடத்துனர்கள் அடிக்கடி வாயிலே உச்சரிக்கும் வட்டார மொழி நடையை உலகமெங்கும் கொண்டு சென்ற பெருமை திரு கே எஸ் பாலச்சந்திரன் அவர்களையே சாரும்.அதன் மூலம் என்றும் அண்ணை ரைட் பாலச்சந்திரன் என்று உலகளவும் பிரபல்யம் பெற்ற ஈழத்தின் கலைஞரானார் என்பது யாவரும் அறிந்த விடயம்.அது மட்டுமல்லாமல் வட்டார வழக்கிலுள்ள பல சொற்பிரயோகங்களை தனது நாடக நடிப்பு மற்றும் வசன நடைகளை வாயிலே உச்சரிக்கும் முறைமையினூடு உலகமெங்கும் நிலை நிறுத்தியவர்களில் கே எஸ் பாலச்சந்திரன் அவர்களுக்கும் தனிஇடம் இருக்கிறது.அது அவரால் அவர் பிறந்த மண்ணுக்கும்  ஒரு புகழை அவரால் ஏற்படுத்திக் கொடுத்து.இவரின் ஓரங்க நாடங்கள் ஒருபுறம் எல்லோர் வீடுகளிலும் வானொலியில்  ஒலிக்க  மறுபுறம் இவரின் நாடகங்களின் ஒலிப்பதிவுகளை வாங்கி எப்போதும் மீண்டும் மீண்டும் கேட்டு சிரித்த காலங்கள் அன்றைய காலங்கள். இன்றைய காலங்களிலும் அதை மீண்டும் மீண்டும் கேட்டாலும் என்றும் மாறுபடாத நகைச்சுவை உணர்வையும் கலை ரசனையையும் கொடுக்கும்.அவை இன்றைய இளைஞர்களால் ரசிக்கபடக்கூடியதான ஒரு கலைப்படைப்பை அன்றைய நாள்களில் கொடுத்த பெருமை அண்ணை ரைட் பாலச்சந்திரன் அவர்களையே சாரும்.

அது மட்டுமல்லாமல் நாடகங்கள் வரிசையில் ஓடலி ராசையா,மு மு மு மூத்ததம்பி,வாத்தியார் வீட்டில்,செய்திகளில் நகைச்சுவை ,தூரத்து சொந்தம் என்று ஏராளம்.அவையனைத்தும்   எம்மவர் உணர்வுகளை படம்பிடித்துக்காட்டி நாசூக்காக பல கருத்துகளை முன்வைத்திருக்கின்றன என்றால் மிகையாகாது.

கே எஸ் பாலச்சந்திரன் அவர்களிற்கு திரைப்பட வரலாற்றிலும் முக்கிய இடமிருக்கிறது,“வாடைக்காற்று,நாடு போற்ற வாழ்க,சர்மிளாவின் இதய ராகம் மற்றும் ஜீவ நதி” இவர் நடித்த திரைப்படங்கள்,இவற்றை விட ஒரு ஆங்கிலத்திரைப்படத்தில் கூட அவரின் பங்கு இருந்திருக்கிறது.

இப்படியாகபல பெருமைகளை தன்னகத்தே  கொண்ட கே எஸ் பாலச்சந்திரன் அவர்கள் தொலைக்காட்சி மூலம் அசத்திய நிகழ்ழ்சிதான் Wonderful Y.T.Lingham
 ஐரோப்பிய தேசமெங்கும் நீண்ட காலத்திற்குப்பின் கே எஸ் பாலச்சந்திரன் என்ற கலை ஆளுமை எப்படியிருக்கிறார் என்ற தமிழ் கலை ரசனையாளர்களின் எண்ணங்களுக்கு தொலைக்காட்சியில் தோன்றி அசத்தினார்.தொடர்ச்சியாக வெற்றியோடு தொலைக்காட்சிகளில் செல்லும் நிகழ்ச்சிகளில் அவரின் நிகழ்ச்சியான Wonderful Y.T.lingham  ஒன்று என்பதும் குறிப்பிடத்தக்கது.இன்றும் பல தொலைக்காட்சிகள் அவரின் சிறப்பான இந்த நிகழ்ச்சியை மீள் ஒளிபரப்புகின்றார்கள்.காலம் கடந்து அவரின் நிகழ்ச்சிகள் வெற்றி நடை போடுகின்றமைக்கு அது எடுத்துக்காட்டு.

கலையுலகில் கால் பதித்த கலைஞர் அவர்கள் எழுத்தாளராகவும் தனித்துவ இடத்தை பெறுகின்றார்.கடந்த சில வருடங்களுக்கு முன் அவர்வெளியிட்ட கடலோடிகளின் உள்ளார்ந்த உணர்வைப் படைப்புலகத்திற்கு தனது எழுத்தாற்றல் மூலம் கொண்டு வந்தார்.கடலோடிகளின் கதை சொலும் கரையைத்தேடும் கட்டுமரங்கள் என்று  அந்த நாவலை எழுதி அதற்கு அமுதன் அடிகளாரின் விருதையும் பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.தனது அனுபவங்களையும் ஈழத்தின் வட்டாரவழக்கு சொற்களின் பயன்பாடுகளையும் அவர் தனது நாவலில் இணைத்திருப்பது நாவலை வாசிக்கும் தருணங்களில் அதனோடு இணைந்து பயணிக்கும் அனுபவத்தை கொடுக்கும்.முற்றிலும் கிராமத்து மன்வாசனைப்படைப்பு அது.

”வானொலி,தொலைக்காட்சி,மேடை,திரைபடக்கலைஞர், நேர்முக வர்ணனையாளர்,திரைப்படஇயக்குனர்,தொலைக்காட்சி நிகழ்ச்சித்தயாரிப்பாளர் எழுத்தாளர் எனப் பன்முகப் பக்கங்களைக்  கொண்ட திரு கே எஸ் பாலச்சந்திரன் அவர்களுக்கு அண்மையில் கனடாவில் அவரின் வரலாற்று நூல் வெளியீடு செய்யபட்டது.
பாலச்சந்திரன் என்ற கலை ஆளுமை என்று பெயரிடப்பட்ட அந்த அற்புதமான நூல் வெளியீட்டோடு  அவருக்கான பாராட்டு விழாவும் மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்கள்.கனடாவின் ஸ்காபுரோ பகுதியில் இந்த பாராட்டு விழாவிற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு நிகழ்விற்கு எழுத்தாளர் திரு குரு அரவிந்தன் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கியிருக்கிறார்.அங்கு கலைஞர், எழுத்தாளர் திரு கே எஸ் பாலச்சந்திரன் அவர்கட்கு உயரிய விருதாக  தலைக்கோல் விருது. வழங்கி கௌரவிக்கப் பட்டிருக்கிறது.
அங்கு இடம்பெற்ற நிகழ்வுகள் கூட தமிழர்களின்  தனித்துவக்கலைகளுக்கு கிடைத்த கௌரவங்கள் தான்.சோக்கல்லோ சண்முகம் அவர்கள் குழுவினரின் வில்லடிப்பாட்டு நிகழ்ச்சிக்கான தனித்துவம்.
அதுமட்டுமல்லாமல் பாலாவின் நனைவோடை என்ற விவரணச் சித்திரமும் காண்பிக்கபட்டிருக்கிறது.

உண்மையில் கலைஞர்கள் வாழுங்காலத்தில் வாழ்த்தும்  நடைமுறைகள் சிறப்பு.பாலச்சந்திரன் என்ற கலை ஆளுமை எமக்கு கிடைத்த பொக்கிஷம்.தான் மட்டுமல்ல தனது கலை ஈடுபாட்டினை பல இளைஞர்களுக்கு விதைத்திருக்கிறார் கே எஸ் பாலச்சந்திரன் அவர்கள்.கனடாவின் பல வளரும் கலைஞர்களோடு இணைந்து பல கலைப்படைப்புகளை தந்திருக்கிறார்.தான் பெற்ற அனுபவத்தை மற்றவர்களோடும் பகிர்ந்து அதன் மூலம் இளைஞர்களையும் அதில் ஈடுபடுத்தி தனது கலைப்பணியை செவ்வனே ஆற்றியிருக்கிறார்.
உண்மையில் அவருக்கான இந்த விழா எடுத்தவர்களும் நன்றிக்குரியவர்கள்.கலைஞர்கள் வாழுங் காலத்திலே வாழ்த்தும் விடயம் பாராட்டுக்குரியதும் கூட.எமது தனித்துவங்களை உண்மையான உணர்வோடு உலகிற்கு கொண்டு செல்லவேண்டிய பொறுப்பை உணர்ந்து எமது ஈழ கலை அடையாளமாகிய கே எஸ் பாலச்சந்திரன் அவர்கட்கு விழா எடுத்தமை படைப்புக்களம் சார்பில் அனைவருக்கும் நன்றிக்குரியவர்களே.

பாலச்சந்திரன் என்ற கலை ஆளுமையை எம்மவர்காலத்தில் பெற்ற பெருமை எமக்கும் உரியதே.என்றும் பல விருதுகளை தனதாக்கி இன்னும் பல படைப்புகளூடாக சந்திக்கவேண்டும். நீண்ட ஆயுட்பலத்துடன் நிறைந்த வாழ்வுகாண கரவையூரான்  கே எஸ் பாலச்சந்திரன் அவர்கட்கு கரவைக்குரல் ஆழமான அன்பிலிருந்து நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை பகிர்ந்துகொள்கிறது.அதில் பெருமையும் கொள்கிறது.

கேஎஸ் பாலச்சந்திரன் அவர்கட்கு தலைக்கோல் விருது வழங்கும் விழாவில் நடைபெற்ற நிகழ்ச்சிகளின் தொகுப்பு இது......


புகைப்படங்கள் --ஈகுருவி 


கடல் தாண்டி ......சுட்டுவிரல்



திரைகடலோடியும் திரவியம் தேடு என்று பண்டைய தமிழன் தன்னை வழி நிலைப்படுத்த ஆக்கியபழமொழிகளிலொன்று.
ஆனால் இன்றைய தமிழன் அதே திரைகடலோடி  தன் வாழ்க்கையை அறுக்கும் நிலைகள்.
ஓவ்வொரு நாளும்  ஒவ்வொரு கடற்பரப்புகளில் ஒவ்வொருவிதமாக விபத்துகளில் சிக்கும் மனிதர்களில் தமிழர்களும் அடங்குவது வேதனையானது.
முதலாளித்துவ வர்க்கம் தொடர்ந்தும் பணமீட்டும்
முயற்சிகளின் ஈடுபாட்டில்  நடுத்தர மற்றும் ஏழ்மை மக்களை
குறிவைக்கின்றனர்.
மக்களை சாவின் விளிம்பில்  வைத்தோ அல்லது அவர்களை சாகடித்தோ அல்லது குறிப்பிட்ட இலக்கை அடையமுடியுமோ இல்லையோ தங்கள் பணவரவை மட்டுமே இலக்காக வைத்து செயற்படுவது நியாயமானதா?
என்றாலும் நடுத்தரவர்க்க மக்கள் இந்த அபாயகரமான
பயணங்களுக்காக தொடர்ந்தும் ஏமாறுவது எவ்வாறு? நாளுக்கு நாள்
வரும் செய்திகள்  பயணிக்கும் மக்கள் காதுகளுக்கு எட்டவில்லையா
என்ற கேள்வி எழுகிறது.
என்றாலும் தொடர்ச்சியாக இப்படியான படகுப் பயணங்களில் வாழ்க்கையை தொலைக்கும் அல்லது இழக்கும் எம்மக்கள் கடலோடி
நாடு தாண்டி சாதிக்கபோவது என்ன?
தமிழின இருப்பு திட்டமிட்ட வகையில் சிதறடிக்கபடுகிறதோ என்று
எண்ணத்தோன்றுகின்றது
ஏமாற்றங்களும் கவலைகளும் சோதனைகளும் அவ்வப்போது
சாதனைகளும் அவையும் வேதனைகளாகுமோ என்ற மன உளைச்சல்களும்  தாங்கிய வாழ்வின்   வரலாறுகள்
சொல்லிச்சென்ற பாடங்களில் மக்கள் தமக்குரித்தான சுய சிந்தனையின் வழி சிந்தித்து செயற்படுவது சிறந்தது.
இல்லையெனில் இன இருப்பும் பரம்பலும் கேள்விக்குறியாகும் நிலை குறிப்பிட்டு சொல்லக்கூடிய காலங்களில் ஏற்பட்டுவிடும் என்பதை சுட்டுவிரல் சுட்டிக்காட்டுகின்றது.

சரி கடல் தாண்டிய புலத்து தமிழர்களின் வாழ்க்கை நிலைகளில் அண்மையில் கேள்விப்பட்ட விடயம்.
அழகான இரு குழந்தைகளுக்கு தாய்.தாயும் அழகியவள் தான்.
அதுவும் தவமிருந்து பெற்ற குழந்தைகள், நீண்ட காலத்தின் கிடைத்த  அரிய செல்வங்கள்.உற்றமும் சுற்றமும் மகிழ்ந்திருந்த காலங்களில்
அனைவருக்கும் அதிர்ச்சியான செய்தி
அந்த பெண் பெற்ற குழந்தைகளையும் கணவனையும் விட்டு விட்டு இன்னொரு ஆணோடு சேர்ந்து சென்றுவிட்டாள்.
இன்று அந்த கணவனையும் பெற்ற குழந்தைகளையும் வெறுப்பது போல் அவளின் செயற்பாடுகள்.குறித்த பெண் தாயகத்திலிருந்து பலமுறை பயண முயற்சியில் பல்வேறு நாடுகளுக்கும் சென்று பல லட்சக்கணக்கில் ஏஜென்சிகளுக்கான செலவில் அந்த குறிப்பிட்ட நாட்டில் இருக்கும் கணவனை கடும்பிரயத்தனத்தில் அடைந்தவள்.
குறிப்பிட்ட அந்த பெண்ணின் குழந்தைகளின் கணவர் உற்றவர்களிடமும் 
சுற்றவர்களிடமும் நேரடியாக சென்று அழுது கொண்டிருக்கிறார் என்பது
தகவல்.
தவறு எங்கிருக்கின்றதென்றோ அல்லது அது எதனால் எப்படி
ஏற்பட்டதென்றோ  ஆராய்வதல்ல நோக்கம்.
குடும்பத்தின் அடிப்படையான கணவன் மனைவி இருவருக்கும் இது
பொருந்தும்.
யுத்த சூழ் நிலைகளால் அதன் வடுக்களை சுமந்து வந்தவர்கள் நாம்.
சோதனைகளையும் சாதனைகளாக்கிய மறவர்கள் என்று பெருமை
கொள்பவர்கள் நாம்.
ஆமாம் அதற்கு  உரித்தானவர்கள் தான்.
யுத்த சூழ் நிலைகளையும் எமது புலத்து வாழ்வின் இருப்பிற்கு  ஏதோவொரு வகையில் பயன்படுத்துக்கொண்டவர்கள்.
அதன் மூலம்  மிகப்பெரிய ஆட்பலத்தையும் பல காலங்களிலும்
ஒருங்கிணைத்தோம்.ஆனால் சமுதாயத்தின் அடிப்படையான குடும்ப
வாழ்க்கை சூழலில் ஏதோவொரு தவறான வாழ்க்கை அணுகுமுறைகளை கையாள்கின்றதோ என்று எண்ணத்தோன்றுகின்றது.
தமது வாழ்க்கையை சரியான பாதையில் நெறிபடுத்தத்தேவையான
பொருளாதார வாழ்வைத்தரும் நாடுகளில் வசிக்கக் கிடைத்த
சந்தர்ப்பங்களை தவறவிட்டு வாழ்க்கையை தொலைக்கின்றோமோ என்று
எண்ணத்தோன்றுகின்றது. சட்ட உரிமை ஒருவர் சட்டத்தின் வாயிலாக பிரிந்து சென்று தனக்கு விரும்பியவரோடு வாழ அனுமதிக்கின்றது என்ற
சந்தர்ப்பத்தை மட்டுமே பயன்படுத்த தூண்டப்பட்டிருக்கின்றார்கள்.
அதைவிட குடும்பத்திற்குள் என்ன  பிரச்சனை என்பதை அலசுவது
தேவையற்ற ஒரு  விடயமே.
ஏனெனில் கூடிவாழ்ந்த மகிழ்ச்சிகள்,புரிதல்கள்  புரிந்துணர்வுகள்,
வேதனைகள், எல்லாவற்றையும் தாண்டிய எங்கள் சமுதாயத்திற்கு
குடும்பத்துக்குள் சிக்கலும் பிரச்சினையும் என்று சிந்திப்பதில் அர்த்தம்
இல்லை.அவையெல்லாம் தவறுகளுக்காக தெரிந்தெடுக்கபடும்
காரணங்கள்.
தனது குடும்பம், கணவர் அல்லது மனைவி,,அழகிய குழந்தைகள், கண்டம்
தாண்டி வந்த வேதனைப்பயணங்கள், பலலட்சம்
பயணத்துக்காக இழப்பு,எப்படியென்றாலும் அவள் அல்லது அவன்
வருகைக்காக காத்திருந்த கணவரின் அல்லது மனைவியின்
வேதனைகள், கல்யாண வாழ்க்கைக்காக உற்றமும் சுற்றமும் கூடி
நின்று வாழ்த்திய வாழ்த்துக்கள் அவையெல்லாம் ஒரு
ஓட்டத்தோடு  தூசிபோல் அள்ளிச்செல்லபடுகிறது.

இன்ப துன்ப நம்மை தீமை என்று எதற்கும்  பக்கபலமாக
இருக்கும் எம்மவர் வாழ்வு முறைமைகள் சிதைந்து போகின்ற
கவலைகிடமான சூழலை உருவாக்குகின்றோம் என்று
உறுதியாகத்தெரிந்தே அந்த வழிபொவது ஏற்கக்கூடிய ஒன்றா?

திரைகலோடியும் திரவியம் தேடுஎன்று எம் மூத்தவர்கள்  சொல்லிச்சென்ற 
திரவியங்களும் செல்வங்களும் இவைதானா?

பண்பாடு கலாச்சாரம் தனித்துவம் இவையெல்லாம் தமிழருக்கு அடையாளங்கள் என்று பெருமை பேசும் இனத்துக்கான உரித்துடைய நாம் அவற்றை உதறித்தள்ளுவதும் அதற்கு  ஆமோதிக்கும் காரணங்களையும்
ஒன்று சேர்த்து நியாயம்  கற்பிப்பது எந்தவகையில் நியாயம்?

குடும்ப முரண்பாடுகள் நியாயப்பாடுகள்  ஒருபுறமிருக்க கட்டுப்கோப்பான ஒரு சமுதாய வட்டத்துக்குள்ளிருந்து வந்த எம்மவர்கள் அந்த வட்டத்திலிருந்து திடீரென விலகுவது வீசும் காற்றில் அந்தரத்தில் பறக்கும் பஞ்சுகளைப்போல எங்கும் பறக்கும் நிலைகளாக காணப்படுகிறது.பறக்கும் பஞ்சுகள் ஒரிடத்தில் குவியப்போவதுமில்லை.

இப்படியாக தனித்துவத்தமிழன் புலத்தில் தன் பண்பாட்டை,
கலாச்சாரத்தை, ஏன் மொத்தத்தில் வாழ்க்கையைத் தொலைத்தான் என்று காலத்தின் வரலாறுகளில் எழுதப்பட்டுவிடும் என்று சுட்டுவிரல் சுட்டிக்காட்டுகிறது

இரண்டும் கெட்டான் நிலை-மொழி


புலத்து மண்ணில் நிலைத்து நிறைவான வாழ்க்கையை நாடி நடைபோடும் மக்கள் நாம்.துயரங்களை அனுபவித்து அதை வரலாறாக்கி தாக்கங்கள்
பல கடந்து தான் அதை உருவாக்கியிருக்கிறோம்.
வாழ்க்கையில்  நிறைவு காண்பது என்பது சாத்தியமாகுமா என்று
கேட்டால் உண்மையில் அதற்கும் பதில் இல்லைத்தான்.ஆனால்
கிடைப்பதை வைத்து அதில் தன்னிறைவு காண்பது என்பதே
வாழ்க்கையில் கிடைக்கும் சுவாரஷ்யம்.

அண்மையில் ஒரு நண்பரொருவரின் திருமண வீட்டில் கேட்ட
உரையாடல் "எங்கட சொந்தக்காரருக்கு கிட்ட தமிழிலே
பேசவேண்டாம்.இங்கிலிஷில் பேசவேணும்`` கெளரவம் குறையக்கூடாது
என்பது போன்ற ஆதங்கத்தோடு அந்த தாய் மகளுக்கு சொன்ன விடயம் .....
பின்னர் அண்மையில் தாயகத்திற்கு ஒருமாத விடுமுறையில் சென்று
முழுவதுமாக மூன்று பிள்ளைகளும் இங்கிலீசில் தான் பேசினார்களாம்...
பெருமைப்படுகிறார் அந்த அம்மா மற்றைய உறவினர்களிடம்.
இந்த உரையாடலின் பக்கம் சுட்டுவிரல் தன் பார்வையை நோக்குகிறது.
ஆங்கிலத்தில் பேசுவது என்பது மேற்குலக நாடுகளில் பெருமையாக
பார்க்கப்படுகிறதா அல்லது பெருமையான விடயமா அல்லது சரியா தவறா
என்பது இந்த பதிவின் நோக்கம் அல்ல.


ஆங்கிலமற்றும் பிறமொழி மண்ணில் பிறந்து தவழ்ந்து பாடசாலை
போகும்போது அந்த குழந்தை அந்த அந்த நாடுகளிற்கான தாய்மொழியை
இலகுவில் பேசப்புரிந்துகொள்ளும் என்பது யதார்த்தமானதே. அதுவும்
பாடசாலைகளில் இணைந்துவிட்டால் அதை தவிர்த்துக்கொள்ளவும் 
முடியாத விடயமே.உலகப்பொதுமொழியான ஆங்கிலத்தையோ அல்லது
மற்றும் மேற்குலக மொழியையோ பேசத் தெரிந்துகொள்ளல்  என்பது  தமிழ் 
குழந்தைகளுக்கு பெருமையான விடயமும் தான். ஏனெனில் மொழிவளம்
மிக்க மனிதனுக்கு பன்முகத்திறமையை ஆளுமையை அந்த அந்த
மொழியியலினூடாக  பெற்றுக்கொள்ளமுடியும் என்பது ஆணித்தரமான
உண்மை. ஆனால் எங்கள் தாய்மொழியை எங்கள் குழந்தைகள்
மறக்கின்றார்களே என்பதை அறியாத சமுதாயமாக நாங்கள்
இருக்கின்றோம் என்பதை நினைக்கும்போது கவலை தருகிறது.
புலத்துமண்ணில் சட்டம் ஒழுங்குகள் தத்தமது மொழிகளினூடாக
செயற்பாடுகளை அங்கீகரித்துக்கொண்டுதானிருக்கிறது.
மேற்குலக நாடுகள் மனித உரிமை சார்ந்த விடயமாக அதை நோக்கி அந்த
அந்த நாடுகளின் சட்ட திட்டங்களுக்கு அமைவாக எமது சமுதாயத்தின் பல
செயற்பாடுகளுக்கு தங்கள் அங்கீகாரத்தினை கொடுத்திருக்கிறது.அப்படியாக
மேற்குலக நாடுகள் பல்லின கலாச்சார வாழ்வின் அழகை ரசிக்கிறது என்பது உண்மை.
அதன் மூலம் தாய்மொழிக்காக எத்தனையோ அமைப்புக்கள்
செயற்பட்டுகொண்டுதான் இருக்கின்றன.ஆனால் அவை மட்டும்
தமிழ்மொழியை புலத்தில் நிலை நிறுத்துவதற்கு போதுமானதான
செயற்பாடுகளா  என்றால் இல்லை என்பதே  பதில்.
ஏனெனில் புலத்தில்  வாழும் ஒவ்வொரு தமிழ்க்குடிமகனும் தனது குடும்பம்
சார்ந்து  இயங்கவேண்டிய தேவையிருக்கிறது.பிள்ளைகள் வளரும்
காலத்திலேயே அவர்களுக்கு தமிழ் மொழியின் ஈடுபாட்டை அதிகரிக்க
செய்யும் செயற்பாடுகளில் ஈடுபடவேண்டும்.
மாறாகஎன்ரை  பிள்ளைக்கு இங்கிலிசு போதும்,.தமிழை படிச்சு  என்ன
செய்வது,, தமிழ் எங்கு எவருக்கு உதவப்போகிறது” என்று எல்லாம் தங்கள்
குழந்தைகளுக்கு முன்னாகவே உரையாடும் நிலைகள் சமுதாயத்தின் இருப்பு
நிலைகளை எதிர்காலத்தில்  தக்கவைக்க ஏதுவாகுமா?
“பிறக்கும் குழந்தை தமிழை அறிந்துகொள்ள அல்லது தொடர்ந்து  வளரும்
காலங்களில்  பேசிக்கொள்ள மறுக்கிறது என்ன செய்யலாம்?” என்று
தட்டிகழித்துவிடவும் முடியாது.
எந்த ஒரு குழந்தையும் வளரும் காலத்தில் தாய் சேய் உறவாடல்களினூடு
குழந்தைகளுக்கு புரியவைக்கும் படியாகவே பாடசாலைக் கல்வி
முறைமைகள் காணப்படுகின்றன.
அப்படியான சந்தர்ப்பங்களை   பயன்படுத்திக்கொள்வதை  தவிர்த்து
பிள்ளைகளை ஆங்கிலம் அல்லது வேற்று மொழி பேசும்போது அவைதான்
பிள்ளைகளை பெற்றமைக்கான பெரும் பேறு என்பது போல பெருமைக்குரிய
விடயங்களாக ஊக்கம்கொடுத்து தாய்மொழியை மறக்கவோ அல்லது
குழந்தை தொடர்ந்து இளமைக்காலத்தில் வாயினாலே மற்றவர்களுடன்
உரையாடுவதை வெட்கமாக நினைக்கும் படியாக செய்தல் தாய்மொழிக்கும்
சமுதாயத்திற்கும்  செய்யும் மகா பாவத்திற்குரிய செயல்களாகும்.
தாய்மொழியை எங்கள் குழந்தைகள் மறக்கபடுவதற்கு நாங்கள்
ஏதோவொருவகையில் உடந்தையாகின்றோமோ என்பதை ஒவ்வொரு
தமிழனும்  தங்களுக்குள்ளே கேட்கும் காலங்கள் வரவேண்டும்.உண்மையில்
அதற்குள் தமக்கும் ஒரு பங்கிருந்தால் வெட்கி தலைகுனிய வேண்டிய
நிலைமைகளை அனைவரும் உணரவேண்டும்.இவ்வாறு ஒவ்வொருவரும்
தலையை குனித்துவிட்டால் புலத்தில் தமிழ் சமுதாயமே தலைகுனிந்து
தமிழன் என்ற அடையாளத்தை எமது பரம்பரைகள்  இழக்கும் நிலை வரலாம்
என்பதே உண்மை.

புலத்தில் அடுத்த சமுதாயத்தை கட்டியெழுப்ப வேண்டிய மிகமுக்கியமான
காலகட்டத்தில் இந்த காலத்தில் சமுதாயம் வாழ்ந்துகொண்டிருக்கிறது.அந்த
வேளையில் ஒரு இரண்டும்கெட்டான் நிலைகளில் நாங்கள் எங்கள்
வாழ்க்கைப்பாதையை கொண்டு செல்வது சரியா?
தேமதுரத்தமிழோசை உலகமெலாம்  பரவும் வகை செய்தல் வேண்டும் என்று
பாடிய கவிஞனின் புகழ் உலகமெல்லாம் நிலைபெற்று நிற்க தமிழ் மொழியை
மறக்கும் சமுதாயத்தை உருவாக்கி தாய்மொழியை அழித்த
குற்றத்திற்குரியவர்களாக வாழ்வது எந்த வகையில் நியாயம்?
மேற்குலக நாடுகளில் தமிழை அல்லது எமது சமுதாய நடவடிக்கைகளை
அந்த அந்த நாடுகளில் சட்டதிட்டங்களுக்கு அமைவாக உயர் நிலைகளுக்கு
எடுத்துச்சென்று காலூன்றச்செய்ய கிடைத்த சந்தர்ப்பங்களை கூட
பயன்படுத்தாத குற்றவாளிகளாக தலைகுனிந்த பரம்பரை சமுதாயமாக
வாழப்போகின்றோமா?

புலம்பெயர்ந்த நாடுகளில் தமிழ் மக்களின் வரவும் அவர்களின்
கட்டமைப்புகளும் செயற்பாடுகளும் உலகளவில் எமது மக்களின் நிலையான
உரிமை செயற்பாடுகளை பறைசாற்ற  எவ்வளவு உந்தமாக அமைந்ததோ
அந்த உன்னதமான செயற்பாடுகள் தொடர்ச்சியாக காலத்திற்கேற்றபடி
நடைமுறைப்படுத்துவதற்கு தமிழ் மொழியை எமது வளரும் சமுதாயம்
எவ்வளவு காலம் தொடர்ச்சியாக உச்சரிக்க போகின்றார்களா என்ற
அடிப்படையிலேயே அவை வலுப்பெறும்.தமிழ் மொழியின் செல்லப்
பிள்ளைகள் தமிழை  மறந்தால் காலத்தில் தவறு செய்த மாபெரும்
குற்றவாளிகள்  இந்தக்கால தமிழ் சமுதாயம் என்ற பெயரையும் பெற்றுவிடும்
என்று சுட்டிவிரல் சுட்டிக்காட்டுகிறது.

நன்றி வானவில்