பி சுசீலா இனி மேடைக்கு ......... ரசிகனின் விண்ணப்பம்

இங்கிலாந்தில்  உதவும் கரங்கள் சமூக சேவை அமைப்பின்  ஏற்பாட்டில் நடைபெற்ற இசை நிகழ்ச்சி நெஞ்சம் மறப்பதில்லை.அது லண்டன் மற்றும் மில்ற்ரன் கீன்ஸ் பகுதிகளில் இடம்பெற்றது.லண்டன் நிகழ்ச்சியின் குறோயிடன் பகுதியில் பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.அந்த நிகழ்ச்சியில் உதித்த எண்ணங்களும் எனது பார்வையுமே இதை எழுத என்னை த்தூண்டியது.

பிரபல திரைப்படப்பின்னணிப் பாடகி கலைமாமணி திருமதி  பி.சுசீலா அவர்களும்  கம்பீரக் குரலுக்கு சொந்தக்காரன் ரி.எம்.சௌந்தரராஜன் அவர்களின் மகன் ரி எம் எஸ் செல்வக்குமார் அவர்களும் நிகழ்ச்சியில் முன்னிலைபடுத்தபட்ட பாடகர்கள். நெஞ்சம் மறப்பதில்லை என்ற நிகழ்ச்சிக்கான பெயரும் நெஞ்சம் மறப்பதில்லை என்ற பாடலும் இந்த பிரபலக் கலைஞர்களின் வருகையும் மொத்தத்தில் சிறப்பை கொடுத்தது எனலாம். 

இதற்கு முதலில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் கலைமாமணி சுசீலா அவர்கள் ஒரு சிறப்பு நிகழ்ச்சிக்காக வருகை தந்திருந்தார்.அந்த வேளையில் அவரை நேரடியாக வானொலியில் நேர்காணக்கூட சந்தர்ப்பம் அமையப்பெற்றது.அப்போது அவரின் இசை ஞான அறிவையும் இசை ஞான வித்துவச்செருக்கும் அவர் பேச்சில் மிளிர்ந்திருந்தது.மறக்கமுடியாத அந்த நேர்காணல் எனது முதலாவது வானொலி நேர்காணல் என்பதும் குறிப்பிடத்தக்கது.மீண்டும் அந்த இசைக்குயிலை  நேரடியாக சந்திக்க கிடைத்தமையும் ஒரு வாய்ப்பான விடயம் தான்.


 சரி
அந்த நெஞ்சம் மறப்பதில்லை நிகழ்ச்சியில் நெஞ்சம் மறப்பதில்லை என்ற பாடல் தன் குரலால் பாட கிடைத்த அறிய சந்தர்ப்பத்தையும் சுசீலா அம்மையார் அவர்கள் நினைவுபடுத்தினார்.லதா மங்க்கேஷர் அவர்களுக்கு அந்த பாடலை பாடகொடுக்கலாம் என்று மெல்லிசை மாமன்னர் திரை இசைச்சக்கரவர்த்தி விஸ்வநாதன் அவர்களும் திரைக்குழுவினரும் பேசிக்கொண்டிருந்து நிறைவில் இல்லை இல்லை எமது சுசீலா பாடட்டும் என்று தனக்கு தந்த பாடல் என்று பெருமையோடு சொன்னார்.அப்படியாக தனக்கு கிடைத்த சந்தர்ப்பாங்கள் தான் தன்னை இப்படி உயர்த்தியிருக்கிறது என்று பெருமை கொண்டார் கலைமாமணி சுசீலா அம்மையார் அவர்கள்.

அப்படியாக பல பாடல்களை நாம் என்றும் ரசித்த இனிய குரலுக்கு சொந்தக்காரியும்  மற்றும் தன் தந்தையின் பாடல்களை பாடும் உரிமையான குரலும்   மேடைக்கு வருகின்றது  பலத்த எதிர்பார்ப்போடுதான் எல்லா ரசிகர்களின் வருகையும் அமைந்திருந்தது.
கலைமாமணி பி சுசீலா அவர்கள் பாடிய ஏராளம் பாடல்கள்.அந்த பாடல்களே எத்தனை உணர்வுகளை தாலாட்டியிருக்கின்றன.காதலாக  இருந்தாலும் சரி,உறவுகளின் பாச பிணைப்புகளாக இருந்தாலும் சரி,சோக உணர்வுகளாயினும் சரி. என் கடவுள்களுக்கான வேண்டுதல்களாக   இருந்தாலும் சரி.பல்லாயிரக்கணக்கான பாடல்கள் அவரின் குரலால் அழகுபெற்றிருக்கின்றன.அந்தப்பாடல்களையும்  சுசீலா அம்மையார் அவர்கள் அன்றைய நாள் மேடையில் கூட  தொடராகப்பாடி அசத்தியதோடு   எத்தனை பாடல்களை பாடி விட்டேன். எல்லாப்பாடல்களையும் நினைவுபடுத்துவது என்பது தனக்கே  மிகக்கடினம் என்றும்  சொல்லியிருந்தார்.அவ்வாறாக பல்லாயிரக்கணக்கான பாடல்களை பாடி திரையுலகத்தையே ஒரு கலக்கு கலக்கி கொடிகட்டிப்பறந்த பாடகி.அப்படியான பாடகியின் வருகை என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கும் அந்த நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்த நிகழ்ச்சி ஒழுங்கமைப்பாளர்களின் பிரமாண்டமான ஏற்பாடுகளுக்கும் காரணமாகின.ஏற்கனவே முதலில் வருவதற்கான  சில சிக்கல்களினால் அவரால் வராமலிருந்தும் இரண்டாவது தடவை முயற்சியில் அவரது வருகை 
அமைந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இப்படியாக பல கடின பயணத்தோடு ரசிகர்களை சிறப்பான பாடல்களோடு சந்தித்தார் திரைபடப்பின்னணிப்பாடகி  கலைமாமணி சுசீலா.
உண்மையில் அவரின் பாடல்களிலும் இருக்கும் தனித்துவம்,அவரின் குரலினால் பாடல்கள் சிறப்பாகும் விதம், நுணுக்கமாக பாடல்களில் அவர் இராக தாள முறைகளை கையாளும் விதம் எல்லாம் சுசீலா அம்மாவின் பாடல்களுக்கு ஒரு தனிச்சிறப்பு.அதற்கெல்லாம் மிகபெரியளவிலான ரசிகர் பட்டாளமே இருந்திருக்கிறது.அவரின் காதல் பாடல்களை கேட்டுக்கேட்டும் பாடிப்பாடியும் காதலித்தவர்கள் எங்கள் பெரியோர்கள்.இடையிடையே அந்த வரிகளை கடிதங்களாக எழுதியிருப்பார்களோ என்னவோ. மொத்தத்தில் அவருக்கு அவ்வளவு ரசிகர் பட்டாளமே இருகிறது.அதைவிட காலம் கடந்தும் அவரது பாடல்கள் இளைய தலைமுறையினரையும் ரசிக்குமளவிற்கு அமைந்தது மட்டுமல்லாமல் அவரின் பாடல்களை கேட்டு கேட்டு அவர்களுக்கு மெல்லிசையில் சிறப்பான எடுத்துக்காட்டுகளாக அமைந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.இப்படியான பல சிறப்புகளை தன்னகத்தே கொண்டிருக்கும் திரைப்படப்பினணிப்பாடகி சுசீலா அம்மா அவர்களை அன்று நேரில் பாடக்கேட்டபோது கொஞ்சம் கவலையும் தொட்டுவிட்டது.ஏனெனில் பாடல்களில் பல்லாயிரம் தொடத்தொட வயதிலும் ஏற்றம்.அது அவரின் பாடல்களை அந்த மேடையிலே பாடக்கேட்டபோது ஏதோ இசையில் இழந்துவிட்ட உணர்வாக இருந்தது என்பது உண்மை.என்றாலும் பல்லாயிரக்கணக்கான பாடல்களை பாடியிருந்தாலும் அந்த பாடல்களையும் அதன் மெல்லிசையின் ராகத்தையும்
நினைவிலிருத்திப் பாடியிருந்தமை கேட்கும் போது பரவசமாயிருந்தது.இருப்பினும் உலகமெங்கும் ரசிகர்கள் மனங்களில் நீங்காத இடம் பிடித்திருக்கும் கலைமாமணி சுசீலா அம்மா அவர்கள் மேடையில் பாடும்போது அதை கேட்கும்போது அவரது குரலில் இசையில் ஏற்படும் மாற்றங்களை ரசிகர்களாள் ஏற்றுக்கொள்ளமுடியுமா என்பது ஒரு கேள்விக்குறியான விடயம் தான்.ஏன் அன்றைய மேடையிலேயே ஒரு சிலர் சுசீலா அம்மாவின் குரல் கொஞ்சம் தளுதளுத்துவிட்டது என்று உச்சரிப்பதை கேட்க முடிந்தது.வயதின் ஏற்றத்தோடு குரலில் வரும் மாற்றம் ஏற்றுக்கொண்டேயாகவேணுமெனினும் அவரின் இசை கேட்டு ரசித்த மனம் ஏற்க மறுக்கிறது.உண்மையில் பல்லாயிரம் பாடல்கள் பாடி பல லட்சக்கணக்கான ரசிகர் மனம் வென்ற கலைப்பொக்கிஷம் பி சுசீலா அம்மா அவர்கள் மேடையில் இனிபாடுவதை தவிர்ப்பது நல்லது என்றே ஒரு ரசிகனாக எண்ணத்தோன்றுகின்றது.என்னதான்  உதவும் சேவை நோக்க தேவைகளுக்காக கலைமாமணி அவர்கள் தன் குரலிசையோடு லண்டன் வந்திருந்திருந்தாலும் ஒரு சாதாரண ரசிகர்களாக அவர்களின் வயதின் ஏற்றத்தால் வந்த குரல் மாற்றத்தை பலரால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை என்பதே உண்மை. ரசிகர்கள் இளைய சுசீலாவின் துள்ளலான குரலே கேட்க துடிக்கின்றார்கள்.


அது நடைமுறையில் சாத்தியப்படாதவிடயமும் கூட.உண்மையில் கலைஞர்கள் தங்கள் தனித்துவங்களை என்றும் நிலை நிறுத்த வேண்டும் என்பதற்காக தங்கள் உச்சக்கட்ட வெற்றிப்புகழோடு  எப்போதும் தொடர்ந்துகொள்ள நினைப்பார்கள்.அந்த விடயம் ஏதோவொரு வகையில் ரசிகர்கள் சார்பில் சிந்திக்கும்போது உண்மையான விடயமும் தான்.
உண்மையில் பல வழிகளிலும் எடுத்து நோக்குகின்றபோது சுசீலா அம்மா அவர்கள் இனி ரசிகர்களின் எதிர்பார்ப்பு பூர்த்திசெய்யக்கூடிய நிகழ்ச்சிகளை தெரிவு செய்வது சிறப்பென்றே விண்ணப்பிக்க தோன்றுகிறது.
இசை ஞானம் படைத்த கலைமாமணி சுசீலா அம்மா அவர்கள் குரலிலே தழுதழுக்க உங்கள் இசையில் வரும் மாற்றத்தை இசை மற்றுல் சொல் உச்சரிப்பில் வரும் மாற வயதின் ஏற்றத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பதால் தான் இந்த ரசிகர்களின் விண்ணப்பமும் கூட.
சுசீலா அம்மாவின் குரல் என்றும் தனித்துவமாக என்றும் நாம் கேட்ட இனித்த குரலாகவே எம்மைப்போன்ற ரசிகர்கள் மனதில் இருக்கவேண்டுமென்பதே நியாயமான இந்த விண்ணப்பத்திற்கு காரணம் .மேடையில் அவர் வழங்கும் நிகழ்ச்சிகள் அந்த இசை இன்பத்தை இனி கொடுக்குமா என்பதை கலைமாமணி சுசீலா அவர்களே தீர்மானிக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் விண்ணப்பம்.

No comments: