வல்லிபுரத்தில் கடல் தீர்த்தம்
என்ன அடிக்கடி வல்லிபுரத்தானை பற்றி சொல்லுறன் எண்டு நினைக்கவேண்டாம்,
வல்லிபுரத்தை பற்றி இதற்குமுதல் வல்லிபுரமும் ஞாயிற்றிக்கிழமையும் என்ற பதிவினூடாக குறிப்பிட்டிருந்தேன்,ஞாயிற்றிக்கிழமை என்றால் அந்த ஆலயத்திற்கு சிறப்பு,அதுவும் ஆவணி ஞாயிறு என்றால் அதைவிட சிறப்பு,சிறப்பான தினத்தில் அதைப்பற்றியும் அங்கு கண்ட சுவாரஷ்யமான சம்பவங்கள் பற்றியும் சொல்லாமலும் இருக்கமுடியவில்லை,அதை நீங்கள் இங்கே அழுத்துவதன் மூலம் வாசிக்கமுடியும்.
அதில் சிலவற்றை சொல்லவில்லை என்ற குற்றச்சாட்டுக்கூட எனக்கு இருந்தது,பின்னூட்டத்தில் வந்தியத்தேவன் குறிப்பிட்டதைப்போலவே வல்லிபுரக்கோயிலில் தரிசனம் செய்த நண்பர்கள் பலர் மின்னஞ்சல் மற்றும் அரட்டை அடிக்கும் சந்தர்ப்பங்களில் குறிப்பிட்ட சில சுவாரஷ்யமான விடயங்களுக்கும் இடங்கொடுக்கும் வகையில் இதை எழுதலாமென்ற எண்ணம்.ஆனால் அவை யாரையும் மனம் நோகடிக்கும் வகையில் சுட்டியோ குத்தியோ அல்லாமல் வெறும் ரசித்த கண்ட கேட்ட,பார்த்த விடயங்களையும் உள்ளடக்கி தராலாம் என்று நினைக்கின்றேன்
வல்லிபுரத்தானும் ஞாயிற்றுகிழமையும் என்பதன் தொடர்ச்சியாக வல்லிபுரத்தானுக்கு கடல் தீர்த்தம் என்பதும் யாழ் மக்களிடையே ஒரு மிகவும் பிரசித்தமானதொன்றாகும்,முன்னைய காலங்களில் தென்பகுதி மக்கள்கூட வந்து செல்வார்களாம்,ஆனால் நாட்டின் சூழ் நிலைகளால் அதை இக்காலத்தில் அவதானிக்கமுடியவில்லை,மிகக்குறைவு என்றுதான் சொல்லலாம்.
யாழ்ப்பாணத்தின் சகல பாகங்களிலும்மிருந்து பெரிய சனத்திரளே படையெடுக்கும்,அதற்கு சாட்சியாக யாழ்-பருத்தித்துறை வீதி எப்போதுமே மக்கள் அலைஅலையாக சென்று கொண்டிருப்பதை அவதானிக்கமுடியும்,தூரத்து மக்கள் குழுக்களாக வாகனங்களிலும் இளைஞர் கூட்டம் தங்கள் தங்கள் சைக்கள்களிலும் அதைவிட சுற்றுப்புற கிராம மக்கள் நடை நடையாகவும் வல்லிபுரத்தை நோக்கி திரண்டுகொண்டேயிருப்பர்,ஆலயத்திலிருந்து கண்ணுக்கெட்டியதூரத்திலிருந்து சனங்கள் திரண்டு கொண்டிருப்பதை அவதானிக்கமுடியும்,
இப்படியாக யாழின் பல்வேறு பகுதிகளிலுமிருந்து மக்கள் குவிந்துகொண்டிருப்பதை அவதானிக்க முடியும்
ஆலயத்துக்கு வந்த மக்கள் வங்கக்கடலை நோக்கிய பயணத்தை ஆரம்பிப்பர்.அவ்வப்போது பம்பல்களும் சிலவேளைகளில் ஓடுவதும் பாடுவதுமாக கடலை நோக்கி நடக்கத்தொடங்குவர்,கற்பாதைகளும் புற்பாதைகளும் முட்பாதைகளும் மண்மேடுகளும் என்று பல்வேறு ரகமான பாதைகள்,ஆண்கள் சால்வைகளை அவிழ்த்து தலையிலே மூடுவதுமுண்டு,பெண்கள் சுரிதாரின் மேலிருக்கும் துணியால் தலையை முடியபடி நடக்கத்தொடங்குவர்,இப்படியாக வல்லிபுரத்தானின் வாசலில் நின்று பார்க்கும்போது மக்கள் செல்லும் வழி அங்கும் இங்கும் வளைந்து நெளிந்து செல்வதால் பெரியதோர் பாம்பு போன்ற வடிவத்தை ஏற்படுத்தும்.வெள்ளைவெளேரென்று ஆண்கள் உடுத்திருக்கும் வேட்டிகளுக்கிடையில் வண்ண வண்ண உடைகள் அணிந்திருக்கும் பெண்களின் அழகு அந்த பாம்பின் அழகை மெருகூட்டும்,மள்ளாக்கொட்டைகளும் சோளப்பொரிகளும் வாயிலே கொறித்தபடி அழகிய பாம்பின் அசைவு ஆகா என்ன அற்புத அழகு என்று சொல்ல வைக்கும்,
வல்லிபுரத்தில் விற்கபடும் தோசையை சொல்லவில்லை என்ற ஆதங்கம் வெளிக்காட்டப்பட்டது,உண்மையில் நான் சொல்ல தவறிவிட்டேன்,தோசையுடன் ஒரு சம்பல்,அதுவே போதும் நின்றபடி பதினைந்து தோசகளை வெட்டுவதற்கு,அதைவிட சாம்பாறும் கலந்து எ்ன்றால் கேட்கவா வேணும்,இளைஞர் படைகளே அங்குதான் இருக்கும்,வயது வந்தவர்வர்களும் கூட அங்குதான் நிற்பார்கள்,சிலவேளைகளில் வீட்டின் உணவில் சுவைக்குறைவோ என்னவோ? ஆனால் அதன் சுவை நாக்கை சுரக்க வைக்கும்,அது தாமரை இலையில் அதன் பெரிய வடிவத்திற்கு உருவாக்கப்பட்டு கொடுக்கப்படும்,
இந்த கடல் மற்றும் தேர் திருவிழா காலங்களில் மணிக்கடை,பொரிக்கடை,புடவைக்கடை,ஐஸ்கிறீம் கடை என்று கடைகளுக்கு குறைவில்லை,இங்கும் தான் எம் இளைஞர்கள் கைவரிசையை காட்டுவார்கள்,இது அவர்களின் நகைச்சுவையாக எடுக்கப்படும்,ஆனால் அது கடைக்காரருக்கும் தெரியாமலில்லை.ஏழு தரம் ஐஸ்கிறீம் குடிக்கும் அன்பர்கள் ஒருதரமே கணக்கு கட்டுவர்,இதை பிடிப்பதற்கு என்னதான் முதலாளிகள் முயன்றாலும் அவர்களால் அப்பாவிகளை மட்டுமே பிடிக்க முடியும் என்பது அவர்களின் சாமர்த்தியத்துக்கு உதாரணம்,
எம்மவர்களின் தகவல்கள் அடிப்படையில் நல்லூர் ஆலயத்துடன் சேர்ந்திருக்கும் ஒரு குளிர்களியகம் கூடியளவு பாதிக்கப்பட்டிருக்கிறது என்று அறியக்கிடைத்தது,பின்னர் இதில் வரும் அனுபவங்களை சுவாரஷ்யமாக பகிர்ந்துகொள்வர் நண்பர்களுக்கிடையில்,”நான் அப்படிச்செய்தேன்,இப்படிக்கிழித்தேன்” என்று மார்தட்டுவர் வீரவீராங்கனைகள்,
இன்னுமொரு விடயம் இருக்கிறது வல்லிபுரத்தின் தெற்கு வீதியில்,ஒரு சாஸ்திரி இருப்பார்,உருத்திராட்ச மாலைகள் சூடியபடி எப்போதும் ஏதாவது ஒரு புத்தகம் வாசித்தபடி,யாரும் சாஸ்திரம் பார்க்க சென்றவுடன் இறைவனின் பெயர் சொல்லி ஆரம்பிப்பார் சாஸ்திரம் சொல்ல,அந்த் ஆலயத்துக்குப் போகிறவர்கள் ஒருதடவையாவது அவரி சந்த்திக்காமல் செல்வதில்லை என்றுதான் சொல்ல வேண்டும்,அதுவும் ஒருகாலத்தில் தென்னிலங்கையிலிருந்து வந்து போகக்கூடிய காலங்களில் அவரிடம் எல்லோரும் வந்துசெல்வது வழமை,உண்மையில் பணத்திற்கான எதிர்பார்ப்பின்றி இருக்கும் நல்ல மனிதர்களில் அவரும் ஒருவர்.
இதைவிட கடல் தீர்த்தமாடுவதற்காக சுவாமியை தூக்கிக்கொண்டு கடலை நோக்கி ஒடும் அழகு பக்தி உணர்வைக்கூட்டும் என்றால் ஐயமில்லை,கோபாலா கோவிந்தா கோபாலா கோவிந்தா என்று வானம் அதிரும்படியாக எல்லோரும் முழங்க இளைஞர்கள் தூக்கிக்கொண்டு ஓடுவார்கள்,அவர்களின் பின்னே எல்லோரும் ஓடுவதும் உண்டு.இடையிடயே விஷ்ணுவின் பாடல்களும் பாடியபடி கடலை நோக்கி ஓடுவார்கள்,
கடலுக்கருகில் இளைஞர்கள் தங்களுக்குள் கூடியிருந்து நகைச்சுவைகள் பகிர்வதும் கும்மாளம் அடிப்பதுமாக தங்கள் காலத்தை சிரிப்புடனே களி(ழி)ப்பர்.பெண்களும் தங்க கூடிக்கதைப்பதுமாக (கூடுதலாக மற்றவையின் நகைகளும் உடுப்புகளும் தான் அவர்களின் கதைகளின் தலைப்பாக இருக்கலாம்,ஆனால் யாருக்கு உண்மை தெரியும்?) இருப்பர்,குழந்தைகள்,சிறியவர்கள் கடலடியில் மண் கிண்டி ஓடியாடி துள்ளித்திரிந்து விளையாடுவதுமாக தங்கள் ஆனந்தத்தை வெளிப்படுத்துவர்,
தீர்த்தப்பந்தல்கள் அங்குமிங்கும் எல்லோரையும் வரவேற்றபடி இருக்கும், நடை நடந்து களைத்துவந்த மக்களுக்கு தாகம் தீர்க்கும் உன்னத பணியில் சில அடியவர்கள்,அதில் கிடைக்கும் சுவை எந்த ஒரு பதார்த்தத்திலும் கிடைக்காது என்றால் மிகையாகாது.
இப்படியே பக்திக்கு பக்தி, நகைச்சுவைகளுக்கு நகைச்சுவை,கும்மாளத்துக்கு கும்மாளம் என்று கடலுக்கருகில் எல்லாம் மிக அற்புதமான நேரங்கள் அந்த மாலை நேரம்.
இதைப்பற்றி வந்தியத்தேவன் கூட ஒரு பதிவில் வெளிப்படுத்தி இருக்கிறார்,நான் அதை அறிந்துகொண்டேன்அதை நீங்கள் கீழே உள்ள இணைப்பை சொடுக்கி பாருங்கள்.
அதைவிட என் பார்வையில் நினைவில் வந்தவற்றை ஒரு சிறிய பதிவாக்கியிருக்கிறேன்,
வல்லிபுர ஆழ்வார் கடல் தீர்த்தம்
படங்கள்:சுபராஜா பாஸ்கரசோதி நன்றி
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
அட... படம் எல்லாம் எங்கட சுப்பையாவின்ர உபயமோ!!! பதிவு நல்லாயிருக்கண்ணை
ஆகா, படங்கள் எதையெதையோ ஞாபகப்படுத்துகின்றன. நன்றி.
Post a Comment