அன்றைய பொழுது விடிந்தது இதற்குத்தானா




அன்றையபொழுது விடிந்தது எதற்காக..........
இந்த இடிச்செய்தியை கொண்டுவந்து சேர்க்கவா
காலைக்கதிரவன் புன்னகைத்து வந்தவேளை
புன்னகைத்த முத்துகளை கொண்டுசெல்ல வந்தாயா.....
உன்னை வெறுத்ததே அன்றுதான்.

வெற்றிப்பாதையில் கல்வியே முதல் கண்
சற்றுமே விலகாத நற்பண்பு
சுற்றமெல்லாம் மகிழ்ந்திடும் பெருஞ்சிறப்பு
அத்தனையும் பறித்தெடுக்க வந்தாயே
உன்னை அன்றேதான் முதல் வெறுத்தேன்.

இன்னுயிர்களை களைந்து
அன்றே அக்கிரமத்தை விதைத்த கயவன் நீ
உன்செயலால் வானத்தையே அழவைத்தாய்
உதயத்தில் வந்த சூரியன் தன்கதிர்களை மறைத்து
உன்செயல் கண்டு உன்னை வெறுத்தது
வடமராட்சியெங்கும் கண்ணீர்கரைத்தெடுத்த உன்னை
அன்றுதான் நான் வெறுத்தேன்

நாளை எம்மை பார்க்கவந்த செல்வங்களெனப் பெற்றோர் மகிழ்ந்திருக்க
நாளை எம்மோடு வாழவந்த செல்வங்களென உற்றோர் களித்திருக்க
நாளைய உலகின் சொத்துக்களென எல்லோருமே நம்பியிருக்க
மூளையே இல்லாதவன் போல்
எல்லோரையும் நட்ட நடுவில் தவிக்கவிட்டு காவுகொண்டாயே
அன்றுதான் உன்னை முழுவதும் வெறுத்தேன்.

அன்பான பேச்சுக்கள் பண்பான செயற்பாடுகள்
எதிலும் வெற்றிகொள்ளும் சிந்தனைகள்
எவர்ருடனும் நட்புக்கென்று உயிரைவிடும் நல்லுள்ளங்கள்
ரவிசங்கரொடு சிவோத்தமன்,கந்தர்வன் பிரதீபன் என
நால் முத்தான செல்வங்கள்
பாதிவழியில் பறித்தெடுத்தாயே கொஞ்சமும் சிந்தனையற்று.......

அரியபல கல்விதனை செவ்வனே படித்துவிட-கடற்
கரையருகே சென்று ஆய்வினை செய்துகொள்ள
சிரிப்புத்தவழும் இளையவர்க்கு
யாரறிவார் உன் சீற்றம்!!!!!!!!!!!

மற்றோரை வாழவைக்கும் பெரும்சொத்து கடலம்மா
எல்லோரும் உனைத்தொழும் தெய்வம் நீ கடலம்மா
கற்கவந்த செல்வங்களை கவிழ்த்துக்கொண்டாய் ஏனம்மா
அற்ப ஆசை உனக்கு, என்றும் சோகம் எமக்கு,

நண்பர்கள் எல்லாம் விக்கி விக்கி ஓவென்று அழுதுகொள்ள
பெற்றெடுத்த தெய்வங்கள் ஐயோவென்று கதறியழ
உன் பொங்கிவந்த பேரலையால்
சுழிகொண்டு இழுத்துவிட சுத்தமாக உனக்கு மனமேயில்லை,
நிச்சயமாக உனக்கு அந்த அழுகையொலி
சத்தமாகவே கேட்டிருக்கும்,
அத்தனையும் உனக்கு பொருட்டில்லாமல் போனது எதற்காக?
இத்தனை நல்லுள்ளங்களில்
அற்ப ஆசை உனக்கு,என்றும் சோகம் எமக்கு

நட்பின் கலகலப்பில் மகிழ்ந்திருந்தவேளையில்
பள்ளிப்பருவத்தில் வெற்றிகண்ட நேரத்தில்
வசந்தத்தின் காலத்தில் வந்த பேரிடி
ஹாட்லியின் வரலாற்றில் வந்துவிட்ட பெரும் துயரம்


பத்து ஆண்டுகளுக்கும் முன்னர் எம் மனதில் அடியோடு என்றும் நிலைத்திருக்கும் இழப்புத்தான் இது.அப்போது நான் சாதரணதரப்பரீட்சை முன்னோடிப்பரீட்சைக்காக இறுதிப்பாடத்தில் இருந்த வேளையில் என் கல்லூரியின் கூடைப்பந்தாட்ட மைதானத்தில் மாணவர்கள் ஓவென்று அழுத வேளை இது,“என்ன நடந்ததோ” என்று யாருக்குமே அறியாமல் இருக்கிறோம்,ஒரு கடதாசியில் சில பெயர்கள்.
“ரவிசங்கர்,சிவோத்தமன்,கந்தர்வன்,பிரதீபன், நால்வரையும் காணவில்லையாம்,கடல் அவர்களை இழுத்துக்கொண்டு போய்விட்டதாம்”,இது தான் செய்தி,
பரீட்சை விடைத்தாள்களை அப்படியே கொடுத்துவிட்டு கடலை நோக்கி நாமெல்லோரும் போனோம்,மூவரை நாங்கள் அசைவற்றே காணமுடிந்தது,


அமரர்.ரவிசங்கர்



அமரர் சிவோத்தமன்


அமரர்.கந்தர்வன்

பிரதீபன் இறுதியில் கடலுள் விழுந்தவன்,இன்னும் கண்டுபிடிக்கமுடியவில்லை,

அமரர்.பிரதீபன்
இப்படிக்கேட்டவுடன் கலங்கிய கண்களுடன் எல்லோரும் அழுதபடி வீட்டுக்கு செல்லும்படி அதிலிருந்த கடல் அருகில் வாழ் மக்கள் வேண்ட வீடு நோக்கி பயணிக்கிறோம்,வழமையாக நகைச்சுவைகள் சலகலப்புக்கள் எல்லாம் விட்டு அந்த அண்ணர்கள் நால்வரினதும் அன்புக்கதைகள்,அவர்களின் இன்னோரன்ன திறமைகள் என்று அவற்றையே பேசியபடி சோகமே உருவாகத்தான் வீடு செல்ல முடிந்தது,இவர்களில் சிவோத்தமன் என் ஆரம்பப்பாடசாலையான மாணிக்கவாசகர் வித்தியாலத்தில் கல்விகற்றதால் கொஞ்சம் கூடிய பழகமானவர் என்பதால் அந்த நட்புக்கவலையும் கூடவே வாட்டியது. மாணவர்கள் எல்லோரும் சோக மயம்,ஹாட்லிக்கல்லூரி சோகமயமாகியது.பல்வேறு நிகழ்வுகளால் சிறப்புறும் ஹாட்லி நிகழ்வுகளை கொண்டாடமுடியாததாய் சோக உருவாக தொடர்ந்தும் இருந்தது.
மாணவத்தலைவர்களாக இருந்தவர்கள் இந்த நால்வர்.எல்லோர் மனதிலும் இடம்பிடித்தவர்கள்,ரவிசங்கர் நாடகங்கள் ஆங்கில பேச்சுக்கள்,பாடல்கள் என்று அடிக்கடி மேடைகளில் தோன்றுபவர்.சிவோத்தமன்,கந்தர்வன் பல்வேறு நிகழ்வுகளுக்கும் தலைமையேற்று முன்னின்று நடத்துபவர்கள்,மாணவத்தலைவர்கள்,அதேபோல பிரதீபன் விளையாட்டுக்களில் முன்னணி வீரர்,அத்தோடு நால்வரும் தங்கள் கல்வித்துறைகளில் மிகவும் கெட்டிக்காரர்கள்,ஆசிரியகளுடன் மிகவும் பண்பாகவே பழகி நற்பண்புபெற்ற இப்படியானவர்க்ளை கல்லூரி வளர்த்தெடுத்து இடை நடுவில் பறித்தெடுத்ததது கல்லூரியின்(மாணவர்களின்) சோகத்தை ஒரு படிகூட்டிவிட்டது.என்ன செய்வது மாணவப்பராயத்திலேயே இழந்து விட்ட இழப்புக்களால் அதை தாங்கமுடியாவிட்டாலும் அதை தாங்கவேண்டியவர்களாகவே நாம் இருக்கிறோம்,
அதைவிட இன்னுமொரு நண்பன் குணா,இவன் பேராதனைபல்கலைக்கழகத்தில் பொறியியல் பீடத்தில் கல்வி கற்றுக்கொண்ட காலத்தில் நிகழந்த பெரும் இழப்பு,யமனாக வந்த புகையிரதம் இவனைப்பதம் பார்த்துச்சென்றது, நட்பின் அன்பின் என்றும் மகிழ்ச்சியின் உருவமாய் இருந்தவன் இவன்.காலன் இவனையும் கொண்டு சென்றுவிட்டான்,இப்படியே இழந்துவிட்ட இழப்புக்கள் இன்றும் எம் மனதை வாட்டுகிறது.


அமரர்.குணரட்ணம்

என்றாலும் இவர்களின் பெயர்கள் அன்று அவர்கள் ஹாட்லியில் இருந்த காலத்தில் எப்படி பெருமையாக இருந்ததோ அதேபோல என்றும் அது நிலைத்து நிற்கும்படியாக ஹாட்லியின் பழைய அக்கால தெரிந்தமாணவர்கள் பெரும் திட்டத்தை நடைமுறைப்படுத்த இருகிறார்கள், அவர்கள் கடலுடன் கலந்துவிட்ட அ நாளில் பாடசாலையில் ஒரு நினைவுதினக்கூட்டத்தை ஒழுங்கு செய்து அன்று சில நல்லபெரும் விடயங்களை நடைமுறைப்படுத்த இருக்கிறார்கள்.
அதற்கு ”ஹாட்லியின் மைந்தர்கள் நினைவு நிதியம்” என்றவாறாக பெயர்சூட்டி அதை திறம்படவே திட்டமும் வகுத்து செயற்படுத்த இருக்கிறார்கள்.
அன்றைய தினம் ஒழுங்கு செய்த சில விடயங்கள் இவை

1.நண்பர்களின் பெற்றோருடன் தொடர்பு,அவர்களை அந்த நாளில் அழைப்பு.
2.மெதடிஸ்,வட இந்து அதிபர்களுக்கு அழைப்பு,அவர்களின் நூலகங்களுக்கு புத்தகங்கள் அன்பளிப்பு.
3.ஐந்து மாணவர்கள் தெரிவு செய்து அவர்களுக்கு கல்வி உதவி நிதி நண்பர்களின் பெற்றோரின் கைகளால் வழங்குதல்.
4.அன்றைய தின நிகழ்வுகள் ஒளிப்பதிவு செய்தல்,பாடசாலையை முழுமையாக ஒளிப்பதிவு செய்தல்.அது நண்பர்களுக்கு..

இவை ஒரு சில மட்டுமே,இதைவிட அந்த குழுவால் எடுக்கபடும் சின்னும் சில பெரும் திட்டங்களை அவ்வபோது வெளியிடுவார்கள்.அவை உத்தியோகபூர்வமாக நினைவுதின ஒழுங்கமைப்பாளர்கள் குழுவால் 17-11-2009 அன்று அந்த நினைவுதினகூட்டத்தில் அறிவிக்கபடும்,

இப்படியாக இவர்களின் பெயரால் வரும் ”ஹாட்லியின் மைந்தர்கள் நினைவு நிதியம்”என்றும் இவர்களின் பெயர்களை ஹாட்லியில் இவர்களின் பெயரை ஒலிக்கவைத்துக்கொண்டேயிருக்கும்,இவர்கள் என்றும் எம் மனதினுள் நிலைத்துவிட்ட அண்ணர்கள்.மேலான நட்புக்கள்.

புகைப்படங்கள்: ஹாட்லியின் மைந்தர்கள நினைவு நிதியம் வதன நூல் அணி
தகவல் :ஹாட்லியின் மைந்தர்கள் நினைவு நிதிய ஏற்பாட்டுக்குழு
மற்றும் வதன நூல் அணி

நன்றி

6 comments:

பால்குடி said...

ரவிசங்கர் அண்ணாவுடன் நாடகம் பழகியபோது நெருங்கிப் பழகும் சந்தர்ப்பம் கிடைத்தது. மற்றையவர்களை ஒரு தட்டிவானில் ஏறி போட்டி ஒன்றுக்காகச் சென்றபோது நன்கு அறிந்து கொண்டேன்.அன்று (வெசாக்) விமலேஷ்வரா அண்ணா ஒரு தண்ணீர்ப் பந்தலில் தண்ணீர் குடித்துவிட்டு கப்பைச் சுட்டுக் கொண்டு வந்ததையும் நகைச்சுவையையாக எல்லோரையும் சிரிக்கவைத்துக் கொண்டிருந்ததையும் மறக்கமுடையாது.

என்றுமே மறக்க முடியாத நாளாக ஹாட்லியின் மைந்தர்கள் நால்வரையும் இழந்த நாள் அமைந்து விட்டது. பிரதீபன் அண்ணாவின் உடல் ஆரம்பத்தில் கண்டு பிடிக்க முடியாமல் போன போது, அண்ணா அப்படி நீந்தித் தப்பியிருப்பார், அந்தப் பக்கம் நீந்திக் கரை சேர்ந்திருப்பார் என்று எத்தனை கற்பனைகளை வளர்த்துக் கொண்டோம். எல்லாமே பொடியகிப் போனபோது இதயமே கனமாகி அவர்களுக்காக அழுதது.

shanthi said...

Thinesh, fantastic.... no words to say, its recall my memories. god is grace

Anonymous said...

இந்த நல் உள்ளங்களை இழந்து தவிக்கும் குடும்பங்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு .இவர்களை ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் .

தாசன் said...

"நட்பின் கலகலப்பில் மகிழ்ந்திருந்தவேளையில்
பள்ளிப்பருவத்தில் வெற்றிகண்ட நேரத்தில்
வசந்தத்தின் காலத்தில் வந்த பேரிடி
ஹாட்லியின் வரலாற்றில் வந்துவிட்ட பெரும் துயரம்"

எம் மனதில் என்றும். நிலைத்திருக்கும் முத்தான செல்வங்கள்.......

Anonymous said...

annaa,nanraaka sonneerkal.
enakku avarkalai theriyaathu.aanal,arinthirukkiren.aanaalum,kunaa annaavai enathu nanban melvinin sagotharanaaka theriyum.
naangal peradheniya tour vanthapothu engalai sutrikkaadiyavar,marunaal nuvaraeliya'vil nirkkum pothu marainthathaay arintha pothu thikaiththu ponom.
-raavan rajhkumar-jaffna.

Unknown said...

Hmmm Thinesh that day was so sad for all da.!! No more words. :(