தை பிறந்தால்..........குரல் சிக்கியும் விடாப்பிடியாக சொல்லி முடித்தது.....

மிக நீண்ட நாள்களுக்கு பின் கவியரங்கத்தில் ஒரு வாய்ப்பு.என் கவிதை  எழுதுவதற்காக நேரத்தை கட்டாயமாக ஒதுக்கவேண்டியதாயிற்று.
ஏனோ லண்டன் வேலைப்பளுக்களுக்கு மத்தியில் ஒரு சில நாள்களே சிந்தனைகள் எழுதுவதற்காக விரிகின்றன.என்றாலும் தீபம் தொலைக்காட்சியில் எனது பணியோடு கவியரங்கத்தில் இணைந்துகொள்ளுமாறு கவியரங்க தலைவர் சாம் பிரதீபன் அவர்கள்(சாம் அண்ணா) விடுத்த வேண்டுகோளுக்கமைய நானும் இணைந்து பிதற்றிக்கொண்டேன் .அந்த வரிகளை உங்களுடன் பகிர்ந்துகொள்ள ஆசை எனக்கு.என்னவோ கவியரங்கத்தில் இடையிலே குரல் நாண் இறுகிக்கொண்டது.என்றாலும் விடாபிடியாக வாசித்து முடித்த வரிகள் அடங்கிய கோர்வை இவை....அழுத்திபேசிய இடங்களை எழுத்திகளிலும் அழுத்தியிருக்கின்றேன்.....வாசித்து பாருங்களேன்....

அட இவ்வளவும் வாசிக்க வேணுமா என்று எண்ணும் அன்பர்களுக்காக ஓளிப்பதிவினை கீழே இணைத்திருக்கிறேன்

அனைவருக்கும் தைத்திரு நாள் தைப்பொங்கல் மற்றும் முக்கியமாக மாட்டுபொங்கல் வாழ்த்துக்களும் 


இது எனது பாடசாலைக்கால நண்பியின் வீட்டில் அவரின் கணவர் குழந்தை மற்றும் தாயாரோடு இணைந்து பொங்கிய புகைப்படம். பேஸ்புக்கில் தான் எடுத்துக்கொண்டேன்.நானும் எனது ஊர் கரவெட்டியில் இருந்திருந்தால் இப்படித்தான் தையிலே பொங்கல் பொங்கியிருப்பேன்...

இனி சொற்கோர்வையை படியுங்கள்(கவிதை அல்ல)
 



கவிதை படைக்க நான் கவிஞன் அல்ல
கத்துக்குட்டி நான்
பேஸ்புக்கில் கூட நான் கவிதை எழுதவில்லை
பச்சிளம் பாலகன்.........
பேஸ்புக்கில் அல்ல கவிதையில் மட்டும்—ஆனால்
பக்குவமானவன் வயதில் சொன்னது....
பதினெட்டு வயது தாண்டினால் வாக்குரிமை இருக்கிறதாம்.....
பதினெட்டிலேயே பக்குவப்பார்வை
முளைத்துவிட்டது
எனக்கும் உங்களுக்கும்
தனித்தனி முக்கனி பிழிந்து வடித்து ஒன்றாய் கூட்டி
சர்க்கரையும் கற்கண்டின் பொடியும் மிகக்கலந்து
இனித்த நறு நெய் சேர்த்து இளஞ்சுட்டில் இறக்கி
எடுத்த சுவைக்கட்டியிலும் இனித்திடும் எம்தமிழாம்
செந்தமிழால் வணங்குகின்றேன்.-இது என் வரிகள் அல்ல
செம்மொழியின் வாழ்த்துக்கு என்னோடு இணைந்தது சிறுவயது முதல்
கவியவைதலைவர் கவிபுனை கவிஞர்கள்
அன்பான நேயர்கள் அனைவரையும்
பொங்கலால் மகிழ்ச்சி பொங்க பொங்கல் வாழ்த்துக்கள்
கவியவைத்தலைவரின் வேண்டுகோளால்
இந்த கவிஞர்கள் அரங்கத்தில் உங்களோடு நான்

தை பிறந்தால்.......

அதிகாலைவேளையில் கதிரவன் வரவைகண்டு
பக்தியோடு கும்பம்வைத்து குத்துவிளக்கும் ஏற்றி
புதுக்கல்லு மூன்றெடுத்து புது நெருப்பேற்றி
புதுப்பானையோடு புன்னகை முகத்தில் வர
புது அரிசி பொலிவாக இட்டு
வெண்ணிறப்பால் பொங்கி வர
பட்டாசு வெடிகள் ஒலி வானைப்பிளக்க
உற்றவர்களோடு பூரித்து
முற்றத்தில் கொண்டாடும் மகிழ்ச்சி அது
நிலையற்ற வாழ்வில் கொண்டாடிய
நிலைகொண்ட மகிழ்ச்சிகள் அவை

இங்கு
குளிரில் நடு நடுங்கி குளிச்சு முழுகி வெளிக்கிட்டு
வாடாத பிளாஸ்டிபூ... பொட்டுவைக்காத முகத்தோடு
விடியாத சூரியனை வெண்பனி ஒளியிலே கும்பிட்டு
வலிந்து கொண்டாடும் தைபொங்கல்
ஹப்பி பொங்கலென பொங்குகிறது........


விடியாத சூரியனை விடியவைக்கவா முடியும் இங்கு.....
வாடும் பூவாங்க தமிழ் கடைக்கு அடிக்க எப்படி ஓடுவது....
இல்லை இல்லை கணவனை எப்படி ஓடச் சொல்வது....
மணித்தியாலங்கள் வீணாகியல்லவா போய்விடும்........

நெற்கதிர்களை காணாத சீமையிலே......
களைகளே விஞ்சி தலை நீட்டி ஆட்டுகின்றன போலும்.......
ஏற்றுமதியான நெல் மணிகளும் படுத்துவிட்டனவோ.....

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
தை பிறந்தால் வழி எங்கு பிறக்கிறது............
வலிபிறக்குமோ இல்லை இல்லை கிலி பிறக்குமோ.....
வழமைபோல தை பிறந்தால் வழிபிறக்கும் என
வகுத்து விட்ட நெறிபோல சொல்லியே பிறக்கும் தை......
பகுத்தறிந்து எப்போது பிறக்கும் தை
வழி  பிறக்குமோ இல்லை இல்லை வலி பிறக்குமோ
இல்லை கிலிதான் பிறக்குமோ.....

எதிர்காலம் பொங்கலுக்கு பொங்கிப்படைக்குமா........
வதியுரிமை கிடைத்ததால் பொங்கலுக்கும் இனி ஆப்பு....
ஆங்கிலப்புத்தாண்டில் ஆட்சேர்ந்து இடமெடுத்து
ஆரவாரிக்கும் எம்மினம்
ஆருயிர் காதலென காதல் தினம் கூட மறக்கவில்லை
சூரியனுக்கு நன்றிகூறி நன்றியறிதலை மேன்மையாக
பாரில் நினைவுகூரும் தமிழ் பொங்கல் பண்பாட்டை
சத்தியமாக சொல்லுங்கள்........
எத்தனை பேர் கூடிகளித்து கொண்டாடுகிறோம்
சத்தியம் செய்து சொல்லுங்கள்.......
சத்தியமாக சொல்கிறேன்........
தமிழ் பண்பாடுகளுக்கு பாடை கட்டுகிறோம்....
தமிழ் மொழியோ ஆங்கிலமோ
இரண்டும் கலந்த கலவையோ
தங்கிலிஷ் பேசுவதே நாகரீக நடையென்று
அங்கீகாரமில்லாததுக்கு அங்கீகாரம் தேட நினைக்கின்றோமே.....
தை பிறந்தால் வழி பிறக்ககுமா????
வலியெல்லோ பிறக்கிறது... -நாக்கில் பிரளும் தமிழிங்கிலிஷ் வலி
இன்னோர் ஆண்டிலும் தமிழ் கொலைவெறியால்
அழியப்போகின்றது என்று.....
தமிழை நினைத்து கிலி பிறக்கிறது

ஈசானமூலைப்பக்கம்
பால் பொங்கி வழிதுவிட்டால்
நல்வாழ்க்கை கிடைக்குமென்றால்
திசையேதுமறியாமல் திக்கெட்டும் ஓடுகின்றோம்...........
இதுவா அந்த பொங்கும் நல் வாழ்க்கை???
கசப்புகளால் நிறைந்துகொண்ட ஒரு நாடாய்
நாமே உருவாக்கிவிட்டோம்
தாய் நிலத்திலும் தேசம் தாண்டிய புலத்திலும்
தாமாக ஒன்றிணைந்து
பொங்கு தமிழ் எங்கே பொங்கிய உணர்வு எங்கே.......
தேசியம் என்று மட்டும் வாய்க்கு வாய் உச்சரித்து
இரண்டோ நாலோ என்று பிரிந்து நின்று
இங்கொன்றும் அங்கொன்றுமாய்
வாய்க்கு வந்தபடி பேசியலைகின்றோமே
கூசாமல் பாடைகட்டி
கூடி நின்றி அழப்போகின்றோமா.......
இன்னோர் ஆண்டிலும் இடித்தழித்து
தை பிறந்தால் எங்கு வழி பிறக்கும்
கிலி எல்லோ பிறக்கிறது......
இன்னோர் ஆண்டிலும் உணர்வுகளும்
வலிபிறந்து அழிக்கபடபோகின்றதா என்று.......

நல்ல வேளை இந்தவருடம்.....
இரண்டு நாள் பொங்கல் இல்லை
வழிபாடு தலங்கள் கூட வியாபார ஸ்தலமா?
ஆங்கிலப்புத்தாண்டிலும் அர்ச்சனை செய்ய ஸ்பெஷல் ரிக்கெட்
வழமைக்கு மாறான கொண்டாட்டங்கள்.....
வழமைபடுத்த முயற்சிப்புகள்..........
தை பிறந்தால்
புத்தாண்டு என்ற பகுத்தறிவு சிந்தனைகளும்
சித்திரையே அது வென வாதிடும் பழமைவாதிகளும் .......
சத்தியமாய் சொல்லுங்கள்......
தைபிறந்தால் என்ன வழி வந்து பிறந்துவிடுமா.......
இந்த வலிகளை தாங்கியே பிறக்கிறது......
ஆளறியாமுகத்தின் பெயர் தேடி
பேஸ்புக்கில் தூரத்தில் உறவை தேடும் நாங்கள்
பக்கத்து உறவோடு அத்தனை அன்பில்லையே........
ஒரு லைக்கும் ஒரு கொமண்டும் .....
எத்துணை அன்புக்கு ஈடாகும். சொல்லுங்கள்
எத்துணை அன்புக்கு ஈடாகும்.....சொல்லுங்கள்
ம்ம்
பதினெட்டிலேயே பக்குவப்பார்வை
முளைத்துவிட்டது
எனக்கும் தான் உங்களுக்கும் தான்....

 கடந்து வந்த நிலத்தின் முட்கள்
படங்கள் போல் கண்முன்னே காட்சிகளாக
தடங்களாக்கி வாழும் புலத்தில் நாம் – இனி
நடந்து செல்லும் பாதைகள்
செழுந் தமிழுக்கு உயிரூட்டாதா......
தமிழாலே பேசினால் போதும்
தமிழ் உயிர்பெற்றுவிடும்....
அன்புக்கு வழிகாட்டாதா......
அருவருக்கும் அறித்தெறிப்புகள்
நீங்கினால் மட்டும் போதும்...
உணர்வுக்கு உரமீட்டாதா........
பணம் நோக்காகாமல்
பலமே ஒன்று சேர்ந்தால் போதும்.....

ஈழத்திற்கென கலைப்படைப்புகளாய்
ஈனத்தமிழனுக்கும் உருவாகுமென்றால்
கனமான சிந்தனைகளோடு
கலைப்படைப்புகள் உருவாகுமா.....
இல்லையேல் தை பிறந்திவிட்டால்
தென்னிந்திய ஏற்றுமதி சரக்குகள்
இந்த வருடமும் வரும்....
உண்மைக்கலைகள் ஒரு புறம்
அழுகின்றன........அலைகின்றன....
யதார்த்த சிந்தனைகள் அன்னியப்பட்டு போகின்றன.....

நப்பாசைகளுக்காய் பிதற்றிக்கொண்ட
சிந்தனைகளால் மாற்றிவிட்டு
நம்பிக்கை பெற்றுவிட்ட வெற்றிகளையும்
சரித்திரத்தில் தவறாக எழுதிவிடாதீர்கள்.....

ஒவ்வொரு தையும் பிறக்க
ஒவ்வொரு கிலிகளாய் இவை ஒட்டிக்கொள்ளும்...
அவையே உண்மை வலிகளாக
வரலாற்றில் ஏறியிருக்க ஆயத்தமாகின்றன
ஏறியே இருந்துவிட்டன.......
இனியாவது சத்தியமாக சொல்லுங்கள்
தை பிறந்தால் பிறக்கும் வழி
நாம் போகும் வழி
அவைதான் நிரந்தர வழிகளா??

வலிகள் நிறைந்த பாதைகளை
தாண்டி வந்துவிட்டோம்.......
தை பிறந்தால் வழி பிறக்கட்டும்.....
சரி
தை பிறந்தால் இன்னொரு வருடம்
ஒரு வயது போகிறது........
கவியவைத்தலைவருக்கு கனதியான கவலை இருக்கும்
நாற்பது அண்மிக்குமென நினைக்கிறன்....
உங்களுக்கும்தான்...
எனக்கும் போகின்றது என்று அம்மாக்கும் புரிந்துவிடும்....
தை பிறந்தால் எல்லோருக்கும் வழி பிறக்கட்டுமே......


சரி இது தான் ஒளிப்பதிவு....
 

1 comment:

Inuvaijurmayuran said...

தினேஸ் கவிதை நன்று..அம்மாவுக்கு நிச்சயம் விளங்கியிருக்கும். பேஸ்புக் பார்க்கத் தெரிந்திருந்தால் விரைவில ஒளிப்பதிவின் பிரதியை அம்மாவுக்கும் அனுப்பி வையுங்கள்.