வல்லிபுரத்தின் கடல் தீர்த்தம் மீட்கும் நினைவுகள்

வல்லிபுரக்கோயில் என்றால் அறியாதவர்கள் யாருமே இருக்கமாட்டார்கள்,வரலாற்று பிரசித்தி பெற்ற இந்த ஆலயம் யாழ்ப்பணம் வடமராட்ச்சியில் இருக்கிறது.தாயகத்தில் இருந்த காலப்பகுதியில் இந்த ஆலயத்தின் திருவிழாக்களில் ஒவ்வொருவருடமும் கலந்துகொள்ள தவறுவதில்லை, சிறு பராயம் முதலே அந்த ஆலயத்துக்கு நடைபயணமாக கூட செல்வது வழமை, அவையெல்லாம் இன்றைய நாள் மீண்டும் நினைவுக்கு வந்த படியே இந்த பதிவு,


கிடைக்கும் நேரத்தில் கிறுக்கலாம்.............


இப்போதெல்லாம் வலைப்பதிவின் பக்கமே வரவில்லையே என்று சின்னக்கவலைதான்.
வலைபதிவில் இருந்து விடைபெற்று விட்டீர்களா என்ற பலரதும் கேள்வி கொஞ்சம் அந்த கவலையை கூட்டிவிடத்தான் செய்கிறது.
என்றாலும் "எங்கே உங்களை காணவில்லையே" என்ற கேள்வியால் கொஞ்சம் மகிழ்ச்சியும் கூட.ஏனென்றால் என்னையும் தேடுவோர் பட்டியலில் ஒதுக்கிக்கொண்டதாலும் அதேபோல என்னை தேடுகின்றார்களே என்பதாலும் தான் அந்த மகிழ்ச்சி.


உண்மையில் வந்தியத்தேவன் மற்றவர்களை புரிஞ்ச மனசு. எனக்குள்ள வேலைபளுவால் பதிவு எழுத முடியாத நிலையில் உள்ள நேரச்சிக்கலை தன் பதிவில் புலத்தில் இருந்தபடியே அதற்காக நேரம் ஒதுக்கி பதிவு எழுதிய அவருக்கு புரிஞ்ச மனசு தானே.
அதனால் தான் கிடைக்கும் நேரத்தில் கிறுக்கலாம் என்ற எண்ணத்தில் பல நாள்களில் ஒரு பதிவாக எழுத முயற்சித்துள்ளேன்.


நேரம் இல்லை என்பது புலத்தில் பொதுவாக அனைவராலும் பேசும் விடயம்.ஏன் எமக்கும் அதே விடயம் மிகவும் அதிகமாகவே இருக்கிறது, ஆனால் ஏன் எதற்கு இப்படியான நேரமில்லாமை பிரச்சனை ஏற்பட வேண்டும் என்பதும் என்மனதில் அடிக்கடி எழும் கேள்வி,
எமக்குள்ளே ஏதேதோ ஏற்படும் பல்வேறு வேலைப்பளுக்கள் அதிகமாகவே அந்த பிரச்சனை.
வேலைப்பளுக்கள் கூடக்கூட சரியாக வேலைகளை மற்றும் செயற்பாடுகளை திட்டமிடாமை தான் காரணம் என்கின்றனர் அனுபவசாலிகள்,


ஆனால் இந்த நேரமில்லை என்ற பிரச்சனை பல்வேறுவிதமாக கூட சிலரால் கையாளப்படுவதுமுண்டு.அதுமட்டுமல்லாமல் தங்களுக்கு ஏற்றபடி சார்பானதாக்கி நேரமில்லை என்ற பிரச்சனையை கையாள்வோர் ஒரு ரகமும் கூட, இந்த நேரமில்லாமை என்பது எப்படி எல்லாம் கையாளப்படுகிறது என்பதை எனக்கும் நேரமிருந்தால் இன்னுமோர் பதிவில் பகிர்ந்து கொள்ளலாம் என்ற எண்ணம். ஆனால் கிடைக்கும் நேரத்தில் ஏதாவது கிறுக்கலாம் என்ற எண்ணம் மட்டும் இப்போ வந்துவிட்டது

சரி வல்லிபுரக்கோயில் பக்கம் செல்லலாம்,
வல்லிபுரக்கோயிலில் பதினைந்து நாள்கள் கோலாகலாமாக திருவிழா, அந்த பதினைந்து நாள்களிலும் கடல் தீர்த்தத்திற்கு ஒரு தனித்துவமே இருக்கிறது,ஆலயத்திலிருந்து சில மைல் தூரம் அமைந்திருக்கும் கடலை நோக்கி வல்லிபுரத்து மாயவன் தீர்த்தமாட செல்வான்.அந்த பாக்கு நீரிணை சமுத்திரத்தை நோக்கி மக்களும் படையெடுப்பர், மகிழ்ச்சிக்கு மகிழ்ச்சி, பக்திக்கு பக்தி, நகைச்சுவைகளுக்கு நகைச்சுவை,என்று எங்கும் ஆனந்தமான பொழுதுகளாகத்தான் இருக்கும்,

ஆரம்ப காலங்களில் மக்கள் மாட்டு வண்டில்களில் தான் பயணம் செய்து வருவார்களாம், ஆனால் இன்றைய காலங்களிலெல்லாம் மோட்டார் சைக்கிள்கள், சைக்கிள்கள், கார்கள், சிறு சிறு வான்கள் என்று மக்கள் படையெடுப்பினால் பருத்தித்துறை வீதியும் களைகட்டும்.இப்படியாக யாழ்ப்பாணத்தின் பல பாகங்களிலும் இருந்து வரும் மக்களும் சமுத்திரத்தை நோக்கி நடை நடக்க ஆரம்பித்தால் எப்படியிருக்கும்.அதுமட்டுமல்ல அந்த சமுத்திரம் வருடத்தில் ஒரே ஒருநாள்தான் இப்படியான ஜன வெள்ளத்தை காணும்.எப்போதும் பெரிய பெரிய அலைகளை எழுப்பும் சமுத்திரம் அன்று மட்டும் தன் அலைக்கரங்களை அமைதியாகவே வைத்திருக்கும்,
தொடர்ந்து ”கோபாலா கோவிந்தா கோபாலா கோவிந்தா” வான் அதிர மக்கள் வல்லிபுரத்து சக்கரத்தாழ்வாரை ஓடியபடியே தங்கள் தோள்களில் காவிவர சமுத்திரம் தன் அலைகளை மீண்டும் எழுப்பிய படி வரவேற்கும்.

மக்கள் சமுத்திரம் நோக்கி நடக்கும் போது ஆலயத்தில் வாசல் பகுதியில் இருந்து பார்த்தால் பெரிய அழகான பாம்பின் வடிவத்தை போன்று தோன்றும்..அதுவும் பெண்களின் வண்ண வண்ண ஆடைகள் அந்த பாம்புக்கு அழகை மெருகூட்டும்

நடக்கும் போதும் கடற்கரையை அண்டிய பகுதிகளிலும் சிறுவர்களின் மகிழ்ச்சிக்குஅளவேயிருக்காது.மண் விளையாடும் சிறுவர்கள் ஒரு புறம்,அந்த மண்ணையே தோண்டியபடி அதில் கிணறு கிண்டி அதில் தண்ணீரைக்கண்டு அவர்கள் மகிழ்ச்சியுறுவர்,கடலுக்கு அருகில் மண் கிண்டும்போது தண்ணீரை இலகுவில் அடைந்துவிட முடிவதால் இந்த முயற்சி சிறுவர்கள் மத்தியில் மிகவும் அதிகமாகவே இருக்கும்.பறக்கும் இராவணன் மீசையை ஓடிப்பிடித்து அவற்றை மீண்டும் பறக்க விட்டு அதில் ஒரு வகையான மகிழ்ச்சிகாண்பர் சின்னஞ்சிறுவர்கள்.

வயதானவர்களின் மொழியில் குறிப்பிட்டால் ”மள்ளாக்கொட்டை” என்பது எல்லோர் வாயிலும் கொறிப்பதை காணலாம்,அதனை கச்சான் என்பர் இளையவர்கள். சிறுவர்கள் வாய்களில் பல நிற இனிப்புகள் சுவைப்பதும் அதனால் அவர்கள்களின் வாய்கள் பல நிறங்களை கொண்டு காணப்படுவதும் உண்டு.

நடக்கும் போது பெண்கள் தங்கள் சேலைகளையும் சுரிதாரின் மேற்துணிகளையும் வெயிலுக்காக தலையிலே மூடியபடி செல்லும்போது அது பறந்தபடியே காணப்படுவது இன்னுமோர் விதமான அழகைக்கொடுக்கும்.

வல்லிபுரத்தில் பதினைந்து நாள்களும் எப்படியாக ஆலயத்தின் நாற்புறமும் கடைகளும் சுவையகங்களும் இருக்கின்றதோ அதேபோல கடற்தீர்த்தம் என்றால் கடலை நோக்கி எல்லாமே பயணித்துவிடும்,
மிகத்தூர நடை நடந்து கடலை வந்து அண்மிக்கின்றவர்களுக்கு தீர்த்தப்பந்தல்கள் வரவேற்கும், அங்கு தரும் தீர்த்தத்தின் சுவைக்கும் அளவே இல்லை என்று சொல்லலாம்.தாகம் தீர்க்கும் தீர்த்தம் ஆகையால் அதன் தனித்துவம் தனியானது,

சமுத்திரத்தில் இளைஞர்களின் நீச்சல்கள் ஒரு தனி ரகம்,அதில் கடலருகில் இருப்பவர்கள் எல்லாம் தங்களைத்தான் பார்க்கின்றார்கள் என்ற எண்ணத்தோடு நீச்சலில் பல்வேறு தந்திரோபாயங்களை புகுத்தி நீந்துவர் பலர்.சிலர் கடலில் பல தூரம் கூட சென்று திரும்பிவருவர்,கடல் அலைகளுக்கிடையில் அவ்வப்போது எட்டிப்பார்க்கும் தலைகள் கடலில் பந்துகள் மிதக்கின்றதா என்ற எண்ணத்தை தரும்,

இப்படியாக கடலுக்கருகில் பல்வேறு இனிமையான நினைவுகளுடன் மீண்டும் கடலுக்கு விட கொடுத்து ஆலயத்தை திரும்பும்போது அதில் கிடைக்கும் ஆனந்தம் தனியானது, கடலுக்கருகில் கண்ட இனிமையான நினைவுகள் மீட்டபடியே நடை நடந்து ஆலயத்தை அடைந்துகொள்வர் மக்கள்,
இளைஞர்களின் குறும்புகள்,இளம்பெண்களின் கலகலப்பான சிரிப்பொலிகள்,சிறுவர்களின் விளையாட்டுக்கள்,முதியோர்களின் பக்திப்பரவசங்கள் என்று எங்கும் ஆனந்தம் தான்.

இப்படியாக வல்லிபுரத்து கடற்தீர்த்தம் என்றால் யாழ்ப்பணமே களைகட்டும் என்று கூட சொல்லலாம்.பிரபலமான ஒளி ஒலி ஊடகங்கள் எல்லாம் படையெடுக்குமளவுக்கு சிறப்புக்கள் பொருந்தியதாக வல்லிபுரம் காணப்படும்.இவையெல்லாம் மீட்கும் நினைவுகளாக என்றும் மகிழ்ச்சியே,தாயகத்தின் நிகழ்வுகளை மீட்கும் போது என்னதான் எங்கு சொர்க்கபுரி வாழ்வு வாழ்ந்தாலும் தாயகத்தை போல இனிமையான வாழ்வு கிட்டுமா என்று தான் எண்ணத்தோன்றும்



இன்னும்பல சுவாரஷ்யமான விடயங்கள் இருந்தாலும் அவை இன்னுமோர் பதிவில் பகிர்ந்துகொள்ளலாம் என்ற எண்ணத்தோடு மீண்டும் சந்திக்கலாம்,உங்கள் கருத்துக்களை தெரிவிக்க மறக்காதீர்கள்

7 comments:

மு.லிங்கம் said...

வணக்கம் கரவைக்குரல்!
பல வருடங்களிற்குப்பின் உங்கள் எழுத்துத் திறமையினால் வல்லிபுரஆழ்வாரின் கடற்கரையில் எங்களை கொண்டுபோய் நிறுத்தியுள்ளீர்கள்.
உங்களது இந்த ஆக்கம் அல்லது விபரிப்பு சில நிமிடங்கள் என் கண்ணையே கலங்க வைத்துவிட்டன..
பழைய நினைவுகள், இடைக்கால அவலங்கள், இன்றைய மக்களின் வாழ்க்கை போன்றவற்றை நினைத்துப் பார்க்கும்போது....எது எப்படியிருந்தாலும் எம்மக்கள் நிம்மதியாக இருக்கவேண்டும்.
உங்களது இந்த இணைப்பிற்கு நன்றியும், பாராட்டுக்களும் உரித்தாகட்டும்.

ம.தி.சுதா said...

வாழ்த்துக்கள் தினேஸ் எட்டப் போனாலும் கிட்ட வந்து தொட்டிட்டுப் போய்விட்டீர்கள்...

Anonymous said...

Arridhu Arridhu...
Inidhu Inidhu

கானா பிரபா said...

கலக்கல்ஸ்

Anonymous said...

என்றுமே பசுமையான நினைவுகள் அவை ....

Nithy Samy said...

நன்றி தினேஷ்!!!!!
மீண்டும் வல்லிபுர ஆழ்வார் அருகில் எம்மையும் அழைத்துச் சென்றுள்ளீர்கள்,
கலைந்து போன அந்தக் காலம் மீண்டு வருமா எமக்கு!
தூர தேசத்திலிருந்து பெருமூச்சு விடமட்டும் முடிகிறது நம்மால்...

எத்தனை நேரச் சுமைகள் நெருக்கடிகள் வந்தாலும் உங்கள் ஓசையை
இடையே திரும்பிப் பாருங்கள் ........அண்மையில் தான் உங்கள் பதிவுகளைப் பார்க்க
எனக்குக்கு கிடைத்தது மிகப் பெரிய மனநிறைவு!, நிட்சயம் எமது கரவையின்
மைந்தன் பெரிய சாதனையாளன் ஆவான் என்ற நம்பிக்கையோடும் வாழ்த்தோடும்
மீண்டும் வருவேன்....

சுரேஷ் said...

அண்ணா வணக்கம்.....இங்க பாருங்கோ இப்ப எல்லாம்....அந்த மண்ணாம் கும்பிகளை கானல...யாரோ கொண்டு போயிட்டாங்களாம்.... இன்னும் சில காலதில கடலுக்கு கனக்க் தூரம் நடக்கத் தேவையும் இல்லையாம் எண்டு பேசி கொள்ளுறாங்கண்ணை..........