சொந்தங்கள் பலரகம்
சொந்தம்
சொந்தங்கள் கூடி வாழ்ந்தால் வாழ்க்கையில் எப்போதும் மகிழ்ச்சிதான், உறவுமுறை சொந்தமாக இருந்தாலென்ன அல்லது வேறெந்த முறையில் வந்த உறவாக இருந்தாலும் அது சுகதுக்கங்களை பரிமாறிகொள்வதினூடாக வாழ்க்கையை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருக்கும். ஆனால் உறவுமுறை சொந்தங்கள் என்றால் சிலர் நம்பி கூடியளவு உறவாடுவதும் அவர்களை நம்பி வாழ்வதும் சாதரணமானதே,சிலருக்கு உறவுமுறை சொந்தங்களைவிட உறவல்லாதோரின் நட்புகளும் சொந்தமாக மாறிவிடுவதுமுண்டு,எது எப்படியாகவிருப்பினும் சொந்தங்கள் கூட்டி பந்தங்கள் பெருக்கி வாழ்தல் மகிழ்ச்சியைக்கூட்டும் என்பதில் ஐயமில்லை.
இவன் இருபத்தியிரண்டு வயதில் ஒரு திணைக்களத்தில் பணியாற்றும் தகமையடைந்தவன். முகாமைத்துவ உதவியாளர் தேர்வில் சித்தியடைந்ததால் இந்த வாய்ப்பு.அதுவும் அவன் விண்ணப்பித்து கிடைத்ததுவுமல்ல.அவனுடைய அம்மா தானாகவே விண்ணப்பித்ததால் தன் உயர்கல்வியைத்தொடர்ந்து கொண்டிருந்தபோதும் அந்த தேர்வில் பங்குபற்றியிருந்தவன்.
"கோழி மேய்ச்சாலும் கோர்ணமேந்தில மேய்க்கவேணும்" என்று விடாபிடியாக நிற்கும் சமுதாயமகையால் கிடைத்த வேலையை விடக்கூடாது என்று எல்லோர் தரப்பிலும் இறுக்கமான வேண்டுகோள் இவனுக்கு.""யாராவது அரசாங்க வேலையை விடுவாங்களோ" உனக்கென்ன ஒரு விசயமும் விளங்காதோ"" என்று எல்லோரும் அப்படியும் இப்படியும் சொல்ல ஒருவாறாக முடிவெடுத்து நேர்முகத்தேர்வுக்கும் சென்று ஒரு முகாமைத்துவ உதவியளனாக தெரிவு செய்யப்பட்டான் இவன்.தெரிவு செய்யப்பட்டாலும் தொடர்ந்தும் கல்வியை தொடந்தவனாய் அலுவலகப்பணிகளை பொறுப்பேற்றான்.இருந்தாலும் உயர்கல்வி முடிந்த பின் இந்த வேலையை கைவிடுவதான எண்ணத்துடனும் பெரியோர்களின் ஆமோதித்தலுடன் தான் பொறுப்பேற்றான்.
இவனின் முதல் அலுவலகம் கொஞ்சம் பிரபல்யமான திணைக்களமும் அதேபோல, எல்லோருக்கும் முக்கியமான திணைக்களமும் கூட,இதனால் எப்போதும் அது ஜனத்திரள் கூட்டித்தான் இருக்கும்,அப்படியான எப்போதும் ஓய்வில்லாத திணைக்களத்தில் வேலை ஆரம்பம். இருந்தாலும் இவன் உயர்கல்வியின் விரிவுரைகளுக்கும் பங்குபற்றக்கூடிய சந்தர்ப்பங்கள் கிட்டியது, இப்படியாக கல்வியும் ஓடுகிறது,வேலையும் ஓடுகிறது.
பிரபல்யமான திணைக்களம், முக்கியமான திணைக்களம் என்றால் அங்கு எல்லோரினதும் கவனிப்புக்களுக்கும் குறைவில்லை.எல்லோரினதும் பார்வைகளும் கொஞ்சம் வித்தியாசமாகத்தான் இருக்கும்.இங்கு பார்வை என்ற சொல்லுக்குள் ரொம்ப அர்த்தம் இருக்கிறது. மக்களிடம் சுரண்டல்களும் ஏமாற்று வித்தைகளும் கூடியதாக கணிக்கப்பட்டு அந்த சம்பவங்களை தவிர்க்கவென சிறப்புக்குழுவே அங்கு இயங்கியிருந்தது.அப்படியான திணைக்களத்தில் உட்கார்ந்தான்.
இவர் பெரியவர்
இவர் ஒரு பெரியவர்.இவர் அந்தக்காலமே கொழும்புக்கு வந்து தொழில் பார்த்து இளைப்பாறும்போது ஒரு உதவி அத்தியட்சகர் என்று தான் அவனுக்கு தெரியும்,ஒரு தொலைத்தொடர்பு நிறுவனத்தில் பணி புரிந்தவர்.அவரில் அவன் மட்டுமல்ல பொதுவாக எல்லோரும் ஒரு நல்ல மதிப்பு.கொஞ்சம் வயதிலும் கூடியவர்,கொழும்பிலே நீண்ட காலம் இருப்பவராதலால் உதவி ஒத்தாசை ஏதும் செய்வார் என்று ஊரில இருந்து வரும் ஆக்கள் எல்லாம் அவருடன் மிக அவதானமாகத்தான் பழகுவார்கள்.இல்லாவிட்டால் நீண்டகால கொழும்பு இருப்பால் ஏதும் பண்ணிவிடுவாரோ என்று மிக அவதானம்,இதெல்லாம் இவனுக்கு பின்னர் தான் விளங்கியது.
ஊரில் தெரியாத சொந்தங்கள்
ஒரு நாள் ஒரு தொலைபேசியழைப்பு இவனுக்கு.அது வேறு யாருமில்லை.அந்த அத்தியட்சகர் தான். யார் யார் என்று தன்னையெல்லாம் அடையாளம் காட்டியவராய் "தம்பி ஒருக்கா எங்க வீட்டு பக்கம் வரலாமே, எனக்கு தெரியாது நீங்க எல்லாம் இங்க கொழும்பிலை எண்டு" என்று அன்பான அழைப்பை கொடுத்தார் இவனுக்கு.
பெரியவர் ஒருவரின் அழைப்பு அதுவும் என் தொலைபேசி இலக்கம் தேடி எடுத்து அழைப்பெடுத்திருக்கிறாரே என்று சிந்தித்தவனாய் வரும் நாளும் சொல்லி அந்த நாளும் அவரின் வீட்டுக்கு போனான் இவன்.
அன்பு உபசாரம்
"வாங்கோ தம்பி வாங்கோ" இவ்வளவு ஒரு பெரியவனாய் வளர்ந்திட்டீங்க என்ன" என்று அன்பு வார்த்தைகள் பலகூறி பெரிய வரவேற்ப்பு.பெரியவருக்கு மரியாதையுடன் ஊர்க்கதைகள் எல்லாம் பேசிய இடையில் "தம்பி நீங்க அந்த திணைக்களத்திலை தானே வேர்க்(வேலை) பண்ணுறீங்க" நல்லதாக போச்சு" நானும் எனக்கு அப்பிளிக்கேசன் போட்டிருக்கிறன்" என்று சொல்ல ஏன் நீங்க என்னிடமே கொடுத்திருந்தால் நான் வேகமாக எடுத்து கொடுத்திருப்பனே என்று இவனும் அன்பாக சொன்னான். "ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் எங்களுக்கு தெரியாம போச்சு, பிறகுதான் எங்க ரமேஷ் சொன்னான் நீங்க அங்கை வேர்க் பண்ணுறீங்க" என்று, "அவன் தான் உங்க நம்பர்(இலக்கம்) தந்தான்" என்றார் அந்த சொந்தக்கார பெரியவர். "அப்படியா சரி பிரச்சினை இல்லை, உங்களுக்கு இல்லாததா" என்று அன்புடன் வார்த்தைகள் பரிமாறி அதற்குரிய எல்லா தரவுகளையும் எடுத்துகொண்டு தந்த தேநீரையும் குடித்துவிட்டு கிளம்பினான் இவன்.
அடுத்த நாளே அவன் அலுவலகம் சென்று அந்த விண்ணப்பித்த படிவத்தை தனியே எடுத்து அதை வேகமாக பெற்றுகொடுக்க தன்னாலான பணிகள் எல்லாம் முடித்து விட்டு அது வரும் வரை காத்திருந்தான்,வேகமாக பெற்றுக்கொடுப்பது என்பது தனிப்பட்ட ரீதியில் கவனிப்பு இருக்கும் என்பது மட்டுமல்ல யார் யாருக்கு எல்லாம் எடுத்துக்கொடுக்கிறார் என்று எல்லாம் சிறப்புக்குழு அவதானித்துக்கொண்டே இருக்கும், இருந்தாலும் இந்த பெரியவர் சொந்தக்காரர் என்பதால் எந்தவித சிக்கலும் வராது என்பது இவன் எண்ணம்.
மீண்டும் ஒருநாள் ஒரு தொலைபேசி அழைப்பு, இது அலுவலகத்தில் இருக்கும் போது வந்தது,அலுவலகத்தினுள் பொதுவாக கைத்தொலைபேசி பாவிக்க கூடாது.இது ஆணையாளரின் உத்தரவு,ஆகவே அந்த அழைப்பு வந்த நேரம் உதவி ஆணையாளரின் அழைப்பு இவனுக்கு தன் அறைக்கு வரும்படி.அப்போது அவன் தொலைபேசி அழைப்பை துண்டித்தவனாய் உள் சென்றான், அவருடன் சில வேலைகள் இருந்ததால் கைத்தொலைபேசியை நிறுத்திவிட்டு தொடர்ந்தும் அவரின் வேலைகளை முடித்துவிட்டு தொலைபேசியை மீண்டும் அழுத்தினான்.
அந்த வேளையில் மீண்டும் அதே இலக்கத்திலிருந்து அழைப்பு. இந்த தடவை அதற்கு பதிலளிக்க வேண்டும் என்ற நோக்குடன் அழுத்தினான்.
இவன் மனுசன் இல்லை
"அடெய் நீயும் ஒரு மனுசனா என்னடா நினைக்கிறாய்? எப்படா நீ எல்லாம் கொழும்புக்கு வந்தனீங்கள் ஏனடா நான் போன் பண்ண கட் பண்ணினாய் அஹ் அஹ் " என்றவாறாக தொடர்ந்து ஏச்சு நீண்டு கொண்டே போனது. "இல்லை அங்கிள் அது நான்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்............ உங்கடை நம்பர் எண்டு தெரியாது" என்று சொல்லி முடிப்பதற்குள் "டேய் என்னைப்பற்றி உனக்கு தெரியாதுடா வேலையே இல்லாமல் பண்ணுவன், நீங்க எல்லாம் எப்படா கொழும்பு பார்த்தனீங்க அந்தக்காலமே கொழும்புக்கு வந்தனாங்கள் நாங்கள்" என்று தொடர்ந்தார் பெரியவர்.இவர் தப்பாக உணர்ந்துவிட்டார் என்று சிந்தித்தவனானாலும் இவரின் கடுமையான வரிகள் இவனை சுட்டது."அங்கிள் எனக்கு இப்ப அறுபது வயதாக இருந்தால் நீங்க சொல்வது சரி" என்று சொல்லிவிட்டு துண்டித்தான் அழைப்பை.
கொழும்பு பெரிசு
உன்மையில் சிலருக்கு கொழும்பிலே இருக்கின்றோம் நடக்கின்றோம்,சிரிக்கின்றோம்,படிக்கின்றோம்,படிப்பிக்கிறோம்,சாப்பிடுகின்றோம் என்று பெரும் கர்வம் கூடிய சில தாழ்வான சிந்தனைகள்,என்ன செய்வது அறியாமையின் உச்சகட்டங்கள்,
இருந்தாலும் தேவையில்லாத ஏச்சை கேட்கத்தேவையில்லை என்றவாறே அழைப்பை துண்டித்த இவனுக்கு அதிர்ச்சி வைத்தியங்கள் காத்திருந்தது,திடீரென்று உதவி ஆணையாளரிடம் இருந்து அழைப்புவந்தது,
அவர்கள் எல்லாம் சகோதர மொழிகள் பேசுபவர்கள், நேரடியாக சென்றான் இவன்," என்ன உங்களை பற்றி தவறான விடயங்கள் வந்திருப்பதாக அவர் சொன்னபோது இவனுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை,என்ன என்று இவன் கேட்க "நீங்க யாரிடமோ காசு லஞ்சமாக வாங்கினீர்களா அவருக்கு அந்த சேவையை செய்து கொடுக்க" என்று கேட்டார் சின்ன சிரிப்போடு,ஏனென்றால் அவரின் நம்பிக்கைக்குரியவனாக இவன் வேலை செய்து வந்ததால், "இருந்தாலும் "உங்களை பற்றி இப்படி ஒருவிடயம் வந்திருக்கிறதே" என்று கேட்க யார் அப்படியான தகவல் தந்ததாக இவன் கேட்டான்.அப்போது அந்த அன்பு மொழிபேசிய வீட்டுக்கு கூப்பிட்டு தேநீர் தந்த அன்பரின் நாமம் தான் சொல்லப்பட்டது, அப்போது இதுதான் நடந்தது என்றவாறே சொல்லி முடிப்பதற்குள் அந்த அன்பர் மீண்டும் தொலைபேசி அழைபெடுக்கிறார் இவனின் அதிகாரிக்கு.இவனுக்கு முன்னிலயில் அந்த அதிகாரி கொடுத்தார் ஏச்சு, "நீங்க ஒரு பெரிய அத்தியட்சகர் என்று சொல்கின்றீகள் பிறகு ஏன் காசு கொடுத்தீர்கள் என்று சொல்கின்றீர்கள் உங்களுக்கே வெட்கம் இல்லையா?"
என்று ஏச இவனின் சொந்தக்கார பெரியவர் அழைப்பைத்துண்டிக்க "நீங்க போய் இருங்க" என்று சொல்லி விட்டார் இவனின் அதிகாரி.
ஆணையாளர் முன்னிலயில்
"என்னப்பா இது சொந்தக்காரர் என்று உறவுகொண்டாடி இறுதியில் இப்படி செய்கிறாரே" என்று மனதில் சிந்தித்தவனாய் தன் இருக்கையில் உட்கார்ந்தான்,
மீண்டும் ஒரு அழைப்பு அவனுக்கு, இப்போது ஆணையாளரிடமிருந்து,
"என்ன வேலை இந்த மனுசன் செய்யுது இவரைத்தான் நம்ம சொந்தங்கள் எல்லாம் நல்லவரென்று சொல்கிறார்களோ" என்று சிந்தித்தவனாய் சென்றபோது முதலில் யாருக்கு அவர் அழைப்பெடுத்தாரோ அந்த அதிகாரியும் ஆணையாளரும் இதைப்பற்றி கதைத்தவர்களாய் இருந்தார்கள்.இவனுக்கு நேரடியாக இருந்த இரண்டு அல்லது மூன்று அதிகாரிகள் இவனின் மீதுள்ள நம்பிக்கையால் எந்தவித விசாரணையும் இன்றி தப்பித்துக்கொண்டான் இவன்.
என்றாலும் "இவர் ஏன் இப்படிச்செய்தார்" என்பதற்க்கு மட்டும் விளக்கம் கேட்டார் ஆணையாளர் இவனிடம், இவனும் "அவரின் அழைப்பு வரும் போது துண்டித்தே அவருக்கு கோவம் போல" என்று விபரமாக விளக்கியவனாய் விடைபெற்றான் ஆணையாரிடமிருந்து.
சொந்தம் என்று பார்த்து அவரின் தொலைபேசியழைப்புக்கு மதிப்புகொடுத்து,வீடு சென்று சொந்தம் மதித்து,அவரின் விண்ணப்பம் தனியே பிரித்தெடுத்து,வேகமாக்கிய பின்
கிடைத்த நல்ல பரிசு, இந்த சொந்தமும் தேவைதானா? பலரகமான சொந்தங்களில் அவதானமாக இருக்க வேண்டிய சொந்தம் இது என்று இப்போதும் நினைப்பான் இவன்.
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
அட கொடுமையே!!..
பாவம் அந்த இவன்.;(
’சொந்தக்காரன் யார் சொந்தக்காரன்?’ அந்த பாட்டுதான் நினைவுக்கு வருகிறது. நல்லாவே குமுறியிருக்கீங்க ;-)
Post a Comment