கொழும்பில வாத்தியார்

எல்லாமே வித்தியாசம்

"பின்னை பிள்ளையள் இப்பிடித்தான் கதைக்குங்கள்.அதுக்காக இந்த அறைக்கு உள்ளயே முடங்கிபோய் இருக்கலாமோ" எண்டது வாத்தியார் காட்டும் நியாயம்.

"எங்கட ஊரில எண்டால் வீடுக்கு வெளியில முத்தம், முத்தத்தில கூடி நாலு வார்த்தை கதைச்சாலும் சந்தோசமாக இருக்கும்.
வீடுக்கு வெளியில முத்தம் எண்டு ஒண்டு இருக்க வேணும் பாருங்கோ. இது இங்க வெளியில எங்க முத்தம் இருக்கு.கடக்கரைக்கு போனால் முத்தம் இருக்கு ,அது வேற முத்தம்"என்று வாத்தியார் சீரழியும் கொழும்பு கலாச்சாரத்தை கிண்டலடிக்கும் நையாண்டி வரிகளோடு ஊரின் சந்தோசமான வாழ்க்கை பற்றி எப்போதும் நினைவுபடுத்திக்கொண்டேதான் இருப்பார்.

வாத்தியார் கொழும்புக்கு வந்தவுடன் கொழும்புக்காரர் எல்லாம் வாத்தியார் அறைக்கு படையெடுப்பு.வேற ஒண்டுமில்ல, அங்கிருந்து கொடுத்துவிட்ட பொக்கிஷங்களை வாங்க தான்.

"அந்த காலம் ஒருநாளிலேயே கொழும்புக்கு வந்து போன காலத்தில, யார் போறது,வாறது எண்டு தெரியாமல் இருந்தவை,யார் கொழும்புக்கு போனாலும் யாரும் கவனிக்கிறதே இல்லை.
அப்பிடி இருந்த காலம் போய் இப்ப எந்த மூலையில யார் யார் போகினம்,எந்த திகதி எல்லாம் திரும்பி வருவினம் எண்டு எல்லாரும் ரொம்ப கவனமாக கவனிச்சுக்கொண்டே இருக்கினம்,அது தான் எல்லாரும் மினைக்கட்டு ஆட்டோ பிடிச்சு வந்து கதைச்சுவிட்டும் போகினம்.இந்தியாவின் "ரோ" கூட இந்த அளவுக்கு கவனிக்க மாட்டுது,எங்கட சனம் இப்ப நல்லாக கவனிக்குது"
என்று வாத்தியார் மனசோட சொல்லிக்கொண்டு இருக்கிறார்.

அங்கு வாத்தியார் "வருவோரை சரியாக உபசரிக்க முடியவில்லை" என்று கவலை."இந்த சின்ன அறைக்குள்ள எங்க வாறதுகளை இருக்க சொல்லுறது" என்று எப்பவும் கவலைப்பட்டுக்கொண்டே இருப்பார்.
விருந்தோம்பும் யாழ்ப்பாண கலாச்சாரத்தில் இருந்து வந்த வாத்தியார் கவலைப்படுவதில் நியாயம் தான்.ஆனால் "இது எல்லாருக்கும் விளங்கும் தானே இங்க கஷ்டம் எண்டு" என்று வாத்தியார் தன் மனதை தேற்றுகின்றார்.

வாத்தியாருக்கு இன்னமொரு விஷயம் பயம் தான்,ஆனால் வெளியில காட்டிக்கொள்ள மாட்டார்.றோட்டில போறது வாறது பயம். கொழும்பில வாகனங்கள் போற வேகம்,வாத்தியாருக்கு பாதை கடக்க ரொம்ப பயம்.ஆனால் சனங்கள் "என்ன இது வாத்தியாருக்கு ஒண்டுமே தெரியாது எண்டு சொல்லிபோடுங்கள்" என்று வாத்தியார் ஏதாவது காரணம் சொல்லி வாத்தியார் சமாளிப்பார்.ஆனால் அந்த ஆட்டோகாரன் அதுக்கால இதுக்கால குறுக்கால ஓடுறாங்கள்,யார் தான் இந்த லைசன்சே குடுத்தாங்களோ இவங்களுக்கு."காசை கீசை யாருக்கும் குடுத்து எடுத்துட்டு வாகனம் ஓடினால் இப்பிடித்தான்"
எண்டு வாத்தியார் திட்டி திட்டி கொண்டே இருப்பார்

அப்படி திட்டிகொண்டிருக்கும் வாத்தியார் "எல்லாமே கொழும்பில வித்தியாசமாக தான் இருக்கு" கொழும்பை பற்றி கணக்கு போடுறார்


வாத்தியார் வருவார் ............