Showing posts with label சுட்டுவிரல். Show all posts
Showing posts with label சுட்டுவிரல். Show all posts

உயிர்வரை இனித்தாய் உள்ளத்தின் ஆழம்வரை ஆட்சி செய்து இனிக்கும்.

புலம்பெயர் சினிமாவில் உயிர்வரை இனித்தாய்  

கடந்த ஜனவரி மாதம் 25ம் திகதி லண்டனில் (Harrow Safari) ஹரோ சஃபாரி திரையரங்கில் திரையிடப்பட்ட உயிர்வரை இனித்தாய் திரைப்படம்,
பல நூற்றுக்கணக்கான கலைஞர்கள், ரசிகர்கள் வருகையோடு நானும் 
ஒருவனாக அதை ரசித்துப்பார்க்கக் கிடைத்தது.
ஈழத்திலிருந்து திரைப்படங்கள் வெளிவந்து தடைப்பட்டு போய் மீண்டும் 
புதுப்பயணம் எடுக்கும் ஈழத்தின் கலைஞர்கள், தாயகத்திலும் புலத்திலும் சில 
பல முழு நீள திரைப்படங்களை தயாரித்து இயக்கி வெளிவரும் காலம் இது.
                                      
புலம்பெயர் சினிமாவில் கையெடுத்து எண்ணகூடிய வகையில் வெளியாகும் 
முழுநீள திரைப்படங்கள் வரிசையில்  முற்றிலும் எமது கலைஞர்களை 
உள்ளடக்கிய கலைக்குழுமமாய் அமைந்த திரைப்படம் உயிர் வரை 
இனித்தாய்.
முக்கியமான சில ஐரோப்பிய நாடுகளிலெல்லாம் திரையிடப்பட்டு நிறைவில் 
லண்டனில் திரையிடப்பட்ட உயிர்வரை இனித்தாய், அந்தந்த நாடுகளில் 
பலரது விமர்சனக்கள் உள்வாங்கப்பட்டு திருத்தியமைக்கப்பட்ட 
காட்சிகளோடு லண்டன் திரைக்கு வந்தது .அது சிறப்பும் கூட.

எல்லாம் இணைந்து அந்த திரைப்படத்தை பார்க்கவேண்டும் என்ற ஆவலை 
கலைஞர்களுக்கும் ரசிகர்களுக்கும் கொஞ்சம் அதிகமாகவே 
ஏற்படுத்திவிட்டது எனலாம்.
ஏற்படுத்தப்பட்ட ஆவல் நிச்சயம் வீண்போகவில்லை என்பதை ஆரம்பத்திலேயே குறிப்பிட வேண்டும்.

                                
நடைமுறையில் சமூகத்தை நோக்கினால் ஈழத்தவன் சினிமாவை சிறப்பாக மேலான பார்வையில் நோக்காத எம்மவர்களின் தாக்கம் இந்த திரையிடலிலும் தாக்கம் செலுத்தியிருக்கிறது என்று பொதுவில் சொல்லிவிடலாம், என்றாலும் இந்த திரைப்படத்தை பார்க்காதவர்கள் புலம்பெயர் கலைஞர்களின் அற்புதமான ஒரு மகிழ்ச்சிப்படுத்தும் சினிமா படத்தை பார்க்க தவறிவிட்டார்கள் என்று தான் அடித்துக்கூறவேண்டும்.
திரைப்படம் என்று நோக்கும்போது நேர்மறை விமர்சனங்கள் சாதரணமானவையே.அதில் உயிர் வரை இனித்தாய் திரைப்படமும் தப்பவில்லை.

                                 
புலம்பெயர் முழு நீளதிரைப்படங்கள்  காலத்தில் ஓய்ந்திருந்து மீண்டும் மீளுயிர் எடுக்கும் கால ஓட்டத்தில் வெளி வந்த சினிமா திரைப்படம் உயிர்வரை இனித்தாய்.ஆகையால் திரையின் காட்சிப்பிழைகளை ஆரோக்கியமான முறையில் நோக்கலாம் என்பது எண்ணம்.
ஆரம்பத்தில் திரைப்படத்தின் கலைஞர்களின் பெயர்களை திரையில் காட்சிப்படுத்திய விதத்திற்கு சபாஷ். அது திரைப்படத்தில் புலம் பெயர் நாடுகளின் அன்றாட வாழ்வில் மக்கள் பல இடங்களிலும் அவதானிக்கும் தளங்கள்  மற்றும் குறியீடுகளை மையப்படுத்தி அவை அமைக்கப்பட்டது சிறப்பு.தொடர்ச்சியாக திரையில் காட்சியும் கதைநகர்வும் பார்வையாளர்களை சலிப்படையதவாறு ஒளிப்பதிவும் இயக்கமும் சிறப்பாக நகர்த்தப்படிருக்கிறது. அதில் கவனமும் செலுத்தப்படிருக்கிறது என்பதை அவதானிக்கமுடிந்தது.
எனினும்  ஒரு சில காட்சிகள்  நீண்டு சென்று விட்டதாய் ஒரு உணர்வு. குடிபோதைக்காட்சிகளும் கலியாணவீட்டில் சாரியை கட்டுவதை கல்யாணம் கட்டுவது என்று நினைத்து “வாழைப்பழம்“ கதாநாயகனை அழைத்து படியேறி ஓடிவரும் காட்சி, பூங்காவில் அமைக்கப்பட்ட காட்சி போன்றவை சில உதாரணங்கள். இப்படியான சில  நீட்சிகள் நிறைவில் இவைதான் நடக்கப்போகின்றன என்பதை பார்வையாளன் சிந்தித்த பின் சொல்லி முடிக்கப்பட்ட காட்சிகள் போல் அமைந்துவிட்டதனாலோ என்னவோ அது நீட்சி போல தெரிவதற்கான காரணமாகலாம்.அது திரைக்கதையிலும் கேள்வியை முன்வைக்க காரணமாகிறது.அதில் திரைக்கதையை நகர்த்தும் தாடிவைத்த வசந்தினால் கதை நகர்வு ஓட்டத்தை சரியாக நகர்த்துவதுவதில் வெற்றிகண்டிருக்கிறார் இயக்குனர்.

                                            
இருப்பினும் இவை திரைப்படத்தை பார்ப்பதை சலிப்படைய செய்யவில்லை.
ஏனெனில் நடிகர்களின் நடிப்பினாலும் காட்சி மாற்றங்களின் வேகத்திலும்  அவை பல மறைக்கப்பட்டிருக்கிறது.கதாநாயகன் நடிப்பில் பல இடங்களில் ஒரே வகை மிகை நடிப்பு தென்பட்டாலும்  கதா நாயகனை இயக்குனர் இப்படித்தான் நடிப்பில் நகர்த்த வேண்டும் என்ற எண்ணம் கொண்டு நகர்த்தியிருப்பாரோ என்றும் எண்ணத்தோன்றூகிறது.ஆனால் முழு நீளத்திரைப்படத்துக்கான கதாநாயகனுக்குரிய பல குணாம்சங்களை வசந்த் கொண்டிருக்கிறார் என்பதை இந்த திரைப்படமூலமாக உணர முடிகிறது.
மேலும் இந்த திரைப்படத்தில் அனைத்துப்பாத்திரங்களும் அவரவருக்கு ஏற்றபடி கையாளப்பட்டிருக்கின்றமையை உணரமுடிகிறது.
கதாநயகியின் நடிப்பும் இங்கே சபாஷ் சொல்லவேண்டும்.புலம்பெயர் மற்றும் ஈழத்து சினிமாவுக்கான மிகப்பெரிய குறை சரியான கதாநாயகிகள் வாய்ப்பதுமில்லை, நின்று நிலைப்பதுமில்லை.உயிர்வரை இனித்தாய் திரைப்படம் பார்த்ததுக்கு பின்னதாக சிறப்பான கதாநாயகி கிடைத்துவிட்டார் என்ற ஒரு சந்தோஷ பெரும்மூச்சை தருகிறது.அந்த பெருமூச்சு நின்று நிலைக்கவேண்டும் என்பதும் கலைஞர்கள் ரசிகர்களின் ஆசை. நர்வினி டேரி பொருத்தமான ஒரு கதாநாயகி திரையில் நின்று நிலைக்க வேண்டும் என்பதையும் இங்கே பதிவுசெய்யவேண்டும்.
                                 
மேலும் இந்த திரைப்படத்தில் நகைச்சுவைக்காட்சிகள் வெகுசிறப்பு. புலபெயர் சினிமாவில் முழு நீள மகிழ்ச்சிப்படுத்தும் சினிமாவில் நகைச்சுவைக்காட்சிகள் சரிவர அமையமாட்டாது என்பதை முறியடித்திருக்கிறது உயிர்வரை இனித்தாய். வாழைப்பழம் நகைச்சுவை நடிப்பும் தெரிவுசெய்யபட்ட குரலும் அற்புதம்.திரைப்படத்தின் விறுவிறுப்பான ரசனை ஓட்டத்திற்கு வாழைப்பழமும் காரணம்.
எனினும் அங்கே தென்னிந்திந்திய திரைப்பட சாயல் தொட்டிருப்பது சின்னக்குறை. ஒருவருக்கு அடிக்க போய் இன்னொருவருக்கு அல்லது பொலீசுக்கு அடிப்பது,கதாநாயகனுக்காய் அவர் மாட்டுப்படுவது, அவரே அடி வாங்குவது எல்லாம் சின்ன சின்ன உதாரணங்கள்.இருப்பினும் சாரியை கட்ட கல்யாணம்  தாலியை கட்ட சொன்ன நகைச்சுவை எம் வழக்கின் நகைச்சுவையை கையாண்டது சிறப்பு.
திரு.குணபாலன்,திரு.தயாநிதி,போன்ற புலம்பெயர் அடையாள நடிகர்களுக்கான காட்சிகளை இன்னும் தந்திருந்தால் ரசித்திருக்கலாம் போலவும் இருந்தது.
திரைப்படத்தில் கையாளப்பட்ட உரையாடல் மொழி புலம்பெயர் மொழி வழக்கை கையாண்டிருந்தால் இன்னும் சபாஷ் போடமுடியும். ஏனெனில் வர்த்த சினிமா அல்லது மகிழ்ச்சிப்படுத்தும் சினிமா என்பது உரையாடல் மொழிவழக்கை மாற்றுதலினூடாக அடைந்துவிட முடியும் என்ற செய்தியை புலம்பெயர் சினிமா வளரும் காலத்திலேயே பதிவு செய்துவிடல் ஆரோக்கியமான போக்காக கருதமுடியாது.எனினும் ரசிகர்களின் ரசிப்புத்தன்மை அப்படித்தான் இருக்கிறது என்றால் அதில் திரைப்பட கலைஞர்களில் மட்டும் குற்றஞ்சாட்டிவிட்டும் இருக்க முடியாது.திரைப்படம் என்பது சமூகத்தின் கண்ணாடியாக இருக்க வேண்டும் என்று நோக்குமிடத்து இந்த விடயத்தில் படைப்பாளிகள், கலைஞர்கள்,ரசிகரகள் அனைவரும் முழுக்கவனம் செலுத்த வேண்டும் என்பதையும் பதிவு செய்யவேண்டும்.
தொழிநுட்ப முன்னேற்றமான காலகட்டத்தில் புது வேகப்பயணம்  எடுக்கும் புலம்பெயர் சினிமாவில் உயிர்வரை இனித்தாய் திரைப்படம் அதை சரியாக கையாள்வதில் கவனம் எடுத்திருக்கிறது.அதுவும் ஒளி/ஒலி பதிவு,பாடல் இசை,பின்னணி இசை என்பன அதை பறைசாற்றுகிறது.அதில் கூடியகவனமும் கூடுதல் நேரமும் செல்வழிக்கப்பட்டிருக்கிறது என்பதையும் அவதானிக்கமுடிந்தது.
கதையோட்டத்தோடு பாடல் காட்சிகள் வேறுபட்டு நிற்கவில்லை.அதுவும் காட்சி மாற்றங்களில் ஒளிப்பதிவின் முக்கியத்துவம் அதன் தொழிநுட்பத்தை சரியாக கையாண்டிருக்கின்றமை புரிகிறது.
உயிர்வரை இனித்தாய் திரைப்படத்தின் இன்னுமொரு எடுத்துக்காட்டான சிறப்பான விடயம் காட்சிக்காக தெரிவு செய்யப்பட்ட இடங்கள்.
புலம்பெயர்ந்த நாடுகளில் இப்படியான இடங்களையெல்லாம் அழகு பெற திரைக்காட்சிகளுக்காக பயன்படுத்தலாம் என்பதை பறை சாற்றுகிறது உயிர்வரை இனித்தாய்.தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் அங்கிருந்து இங்கு வந்து வழமையான பிரபல்யமான இடங்களை மட்டுமே தெரிவுசெய்து திரைக்காட்சிகளை அமைத்துவிட்டு போக உயிர்வரை இனித்தாய் அதனையும் தாண்டி பல்வேறு விதமான காட்சிகளை தெரிவு செய்திருப்பது பல வருங்கால தயாரிப்பாளர்களுக்கு எடுத்துக்காட்டு.
                                   

மொத்தத்தில் புலம்பெயர் தமிழ் சினிமாவில் மீளெடுக்கும் புதுப்பயணத்தில் உயிர்வரை இனித்தாய் திரைப்படம் வரலாற்றில் இடம்பிடிக்கிறது.பல நாடுகளிலும் திரைப்படம் வெகுசிறப்பாக ஓடியிருப்பதை அவதானிக்க முடிகிறது.அதனையும் தாண்டி அவை தொடர்ச்சியாக பல நாள்கள் ஓடவேண்டும் என்பது கலைஞர்களை தாண்டி மக்களின் வரவிலும் புலம்பெயர் தமிழ் சினிமா இடம்பிடிக்க வேஎண்டும் என்பதிலும் ஈழக்கலையை ரசிக்கின்றவர்கள் என்ற வகையில் இருக்கும் எதிர்பார்ப்பு. ரசிகர்களையும் மக்களை திருப்தி செய்யக்கூடிய வகையில் உயிர்வரை இனித்தாய் திரைப்படம் இடம்கொள்கிறது என்பதையும் யாரும் மறுக்க முடியாது.

உயிர்வரை இனித்தாய் உள்ளத்தின் ஆழம்வரை ஆட்சி செய்து  இனிக்கும்.


                                                                                     திரைப்பட நோக்கு - யோகா தினேஷ்

கடல் தாண்டி ......சுட்டுவிரல்



திரைகடலோடியும் திரவியம் தேடு என்று பண்டைய தமிழன் தன்னை வழி நிலைப்படுத்த ஆக்கியபழமொழிகளிலொன்று.
ஆனால் இன்றைய தமிழன் அதே திரைகடலோடி  தன் வாழ்க்கையை அறுக்கும் நிலைகள்.
ஓவ்வொரு நாளும்  ஒவ்வொரு கடற்பரப்புகளில் ஒவ்வொருவிதமாக விபத்துகளில் சிக்கும் மனிதர்களில் தமிழர்களும் அடங்குவது வேதனையானது.
முதலாளித்துவ வர்க்கம் தொடர்ந்தும் பணமீட்டும்
முயற்சிகளின் ஈடுபாட்டில்  நடுத்தர மற்றும் ஏழ்மை மக்களை
குறிவைக்கின்றனர்.
மக்களை சாவின் விளிம்பில்  வைத்தோ அல்லது அவர்களை சாகடித்தோ அல்லது குறிப்பிட்ட இலக்கை அடையமுடியுமோ இல்லையோ தங்கள் பணவரவை மட்டுமே இலக்காக வைத்து செயற்படுவது நியாயமானதா?
என்றாலும் நடுத்தரவர்க்க மக்கள் இந்த அபாயகரமான
பயணங்களுக்காக தொடர்ந்தும் ஏமாறுவது எவ்வாறு? நாளுக்கு நாள்
வரும் செய்திகள்  பயணிக்கும் மக்கள் காதுகளுக்கு எட்டவில்லையா
என்ற கேள்வி எழுகிறது.
என்றாலும் தொடர்ச்சியாக இப்படியான படகுப் பயணங்களில் வாழ்க்கையை தொலைக்கும் அல்லது இழக்கும் எம்மக்கள் கடலோடி
நாடு தாண்டி சாதிக்கபோவது என்ன?
தமிழின இருப்பு திட்டமிட்ட வகையில் சிதறடிக்கபடுகிறதோ என்று
எண்ணத்தோன்றுகின்றது
ஏமாற்றங்களும் கவலைகளும் சோதனைகளும் அவ்வப்போது
சாதனைகளும் அவையும் வேதனைகளாகுமோ என்ற மன உளைச்சல்களும்  தாங்கிய வாழ்வின்   வரலாறுகள்
சொல்லிச்சென்ற பாடங்களில் மக்கள் தமக்குரித்தான சுய சிந்தனையின் வழி சிந்தித்து செயற்படுவது சிறந்தது.
இல்லையெனில் இன இருப்பும் பரம்பலும் கேள்விக்குறியாகும் நிலை குறிப்பிட்டு சொல்லக்கூடிய காலங்களில் ஏற்பட்டுவிடும் என்பதை சுட்டுவிரல் சுட்டிக்காட்டுகின்றது.

சரி கடல் தாண்டிய புலத்து தமிழர்களின் வாழ்க்கை நிலைகளில் அண்மையில் கேள்விப்பட்ட விடயம்.
அழகான இரு குழந்தைகளுக்கு தாய்.தாயும் அழகியவள் தான்.
அதுவும் தவமிருந்து பெற்ற குழந்தைகள், நீண்ட காலத்தின் கிடைத்த  அரிய செல்வங்கள்.உற்றமும் சுற்றமும் மகிழ்ந்திருந்த காலங்களில்
அனைவருக்கும் அதிர்ச்சியான செய்தி
அந்த பெண் பெற்ற குழந்தைகளையும் கணவனையும் விட்டு விட்டு இன்னொரு ஆணோடு சேர்ந்து சென்றுவிட்டாள்.
இன்று அந்த கணவனையும் பெற்ற குழந்தைகளையும் வெறுப்பது போல் அவளின் செயற்பாடுகள்.குறித்த பெண் தாயகத்திலிருந்து பலமுறை பயண முயற்சியில் பல்வேறு நாடுகளுக்கும் சென்று பல லட்சக்கணக்கில் ஏஜென்சிகளுக்கான செலவில் அந்த குறிப்பிட்ட நாட்டில் இருக்கும் கணவனை கடும்பிரயத்தனத்தில் அடைந்தவள்.
குறிப்பிட்ட அந்த பெண்ணின் குழந்தைகளின் கணவர் உற்றவர்களிடமும் 
சுற்றவர்களிடமும் நேரடியாக சென்று அழுது கொண்டிருக்கிறார் என்பது
தகவல்.
தவறு எங்கிருக்கின்றதென்றோ அல்லது அது எதனால் எப்படி
ஏற்பட்டதென்றோ  ஆராய்வதல்ல நோக்கம்.
குடும்பத்தின் அடிப்படையான கணவன் மனைவி இருவருக்கும் இது
பொருந்தும்.
யுத்த சூழ் நிலைகளால் அதன் வடுக்களை சுமந்து வந்தவர்கள் நாம்.
சோதனைகளையும் சாதனைகளாக்கிய மறவர்கள் என்று பெருமை
கொள்பவர்கள் நாம்.
ஆமாம் அதற்கு  உரித்தானவர்கள் தான்.
யுத்த சூழ் நிலைகளையும் எமது புலத்து வாழ்வின் இருப்பிற்கு  ஏதோவொரு வகையில் பயன்படுத்துக்கொண்டவர்கள்.
அதன் மூலம்  மிகப்பெரிய ஆட்பலத்தையும் பல காலங்களிலும்
ஒருங்கிணைத்தோம்.ஆனால் சமுதாயத்தின் அடிப்படையான குடும்ப
வாழ்க்கை சூழலில் ஏதோவொரு தவறான வாழ்க்கை அணுகுமுறைகளை கையாள்கின்றதோ என்று எண்ணத்தோன்றுகின்றது.
தமது வாழ்க்கையை சரியான பாதையில் நெறிபடுத்தத்தேவையான
பொருளாதார வாழ்வைத்தரும் நாடுகளில் வசிக்கக் கிடைத்த
சந்தர்ப்பங்களை தவறவிட்டு வாழ்க்கையை தொலைக்கின்றோமோ என்று
எண்ணத்தோன்றுகின்றது. சட்ட உரிமை ஒருவர் சட்டத்தின் வாயிலாக பிரிந்து சென்று தனக்கு விரும்பியவரோடு வாழ அனுமதிக்கின்றது என்ற
சந்தர்ப்பத்தை மட்டுமே பயன்படுத்த தூண்டப்பட்டிருக்கின்றார்கள்.
அதைவிட குடும்பத்திற்குள் என்ன  பிரச்சனை என்பதை அலசுவது
தேவையற்ற ஒரு  விடயமே.
ஏனெனில் கூடிவாழ்ந்த மகிழ்ச்சிகள்,புரிதல்கள்  புரிந்துணர்வுகள்,
வேதனைகள், எல்லாவற்றையும் தாண்டிய எங்கள் சமுதாயத்திற்கு
குடும்பத்துக்குள் சிக்கலும் பிரச்சினையும் என்று சிந்திப்பதில் அர்த்தம்
இல்லை.அவையெல்லாம் தவறுகளுக்காக தெரிந்தெடுக்கபடும்
காரணங்கள்.
தனது குடும்பம், கணவர் அல்லது மனைவி,,அழகிய குழந்தைகள், கண்டம்
தாண்டி வந்த வேதனைப்பயணங்கள், பலலட்சம்
பயணத்துக்காக இழப்பு,எப்படியென்றாலும் அவள் அல்லது அவன்
வருகைக்காக காத்திருந்த கணவரின் அல்லது மனைவியின்
வேதனைகள், கல்யாண வாழ்க்கைக்காக உற்றமும் சுற்றமும் கூடி
நின்று வாழ்த்திய வாழ்த்துக்கள் அவையெல்லாம் ஒரு
ஓட்டத்தோடு  தூசிபோல் அள்ளிச்செல்லபடுகிறது.

இன்ப துன்ப நம்மை தீமை என்று எதற்கும்  பக்கபலமாக
இருக்கும் எம்மவர் வாழ்வு முறைமைகள் சிதைந்து போகின்ற
கவலைகிடமான சூழலை உருவாக்குகின்றோம் என்று
உறுதியாகத்தெரிந்தே அந்த வழிபொவது ஏற்கக்கூடிய ஒன்றா?

திரைகலோடியும் திரவியம் தேடுஎன்று எம் மூத்தவர்கள்  சொல்லிச்சென்ற 
திரவியங்களும் செல்வங்களும் இவைதானா?

பண்பாடு கலாச்சாரம் தனித்துவம் இவையெல்லாம் தமிழருக்கு அடையாளங்கள் என்று பெருமை பேசும் இனத்துக்கான உரித்துடைய நாம் அவற்றை உதறித்தள்ளுவதும் அதற்கு  ஆமோதிக்கும் காரணங்களையும்
ஒன்று சேர்த்து நியாயம்  கற்பிப்பது எந்தவகையில் நியாயம்?

குடும்ப முரண்பாடுகள் நியாயப்பாடுகள்  ஒருபுறமிருக்க கட்டுப்கோப்பான ஒரு சமுதாய வட்டத்துக்குள்ளிருந்து வந்த எம்மவர்கள் அந்த வட்டத்திலிருந்து திடீரென விலகுவது வீசும் காற்றில் அந்தரத்தில் பறக்கும் பஞ்சுகளைப்போல எங்கும் பறக்கும் நிலைகளாக காணப்படுகிறது.பறக்கும் பஞ்சுகள் ஒரிடத்தில் குவியப்போவதுமில்லை.

இப்படியாக தனித்துவத்தமிழன் புலத்தில் தன் பண்பாட்டை,
கலாச்சாரத்தை, ஏன் மொத்தத்தில் வாழ்க்கையைத் தொலைத்தான் என்று காலத்தின் வரலாறுகளில் எழுதப்பட்டுவிடும் என்று சுட்டுவிரல் சுட்டிக்காட்டுகிறது

வாழ்க்கைக்கு அர்த்தம் கொடு-வானவில்லில் தொடரும் சுட்டு விரல்


தற்கொலை தனிமனிதன் தனக்கான வாழ்க்கையின்
நம்பிக்கையை முற்றுமுழுதாக இழக்கும் வேளையில் அவன்
தனக்காக தெரிவுசெய்யும் பாதையாகின்றது,
தனது உயிரென்றாலும் அதை அந்த மனிதனாலேயே
பறித்துக்கொள்ள  உரிமை இல்லை என்று சட்டங்கள் பல
நாடுகளிலும்  இயற்றப்பட்டிருப்பினும் கொலை மற்றும்
தற்கொலைகளின்  எண்ணிக்கைகள்
பெருகிக்கொண்டேபோகின்றன.
என்றாலும் புலம்பெயர்ந்த நாடுகளில் இந்த எண்ணிக்கை
மிகக்குறைவுதான்,ஏனென்றால் அந்த அந்த நாடுகளில்
சட்டப்படி வாழ்வுரிமை அல்லது தங்கி வாழ்வதற்கான
உரிமையுடைய ஒவ்வொரு மனிதனுக்குமானதன்னிறைவான
வாழ்க்கைச்சூழல் அமைந்துகாணப்படுகிறது.
அப்படியான எதிர்கால நிச்சயமான தளத்தில் குறிப்பிட்ட
மனிதனுக்கான வாழ்க்கை பூச்சியமானது எவ்வாறு?

அண்மையில் கேள்விப்பட்ட விடயம்.வாலிபவயது
தமிழ்ப்பெண்ணின் சாவு,அது இயற்கை மரணம் இல்லை
என்பது மட்டும் உண்மை, அது தற்கொலையா? அல்லது
கொலையா? என்று துப்புத்துலங்க முன் அதனைத்தொடர்ந்து
ஐந்து நாள்களில் அந்த பெண்ணின் தந்தையார் தனது
ஆற்றமுடியாத கவலையின் உச்சத்தில் தற்கொலை
செய்திருக்கிறார்.
அதுவும் புலம் பெயர்ந்த நாட்டில் இடம்பெற்றிருக்கிறது.
ஏன் எதற்காக இந்த மரணங்கள் ஏற்பட்டது என்பதை அலசும்
விடயங்களுக்கு அப்பால் இந்த கொலைகளுக்கான செய்திகள்

புலத்தில் ஒட்டுமொத்த தமிழ் சமுதாயத்தை ஆரோக்கியமான
பாதையில் சென்றுகொண்டிருக்கிறதா என்ற பார்வை நோக்கில்
சிந்தனைக்குட்படுத்துகிறது.
தெரிவு செய்யப்பட்ட தற்கொலை என்ற   அவனுடைய
பாதை  அவன் மற்றும் அவன் சார்ந்த சமுதாயத்திற்கான ஒரு
தலைக்குனிவே.அந்த சமுதாயமோ,அவன் வாழ்ந்த
சூழலோ அல்லது சார்ந்த  குடும்பமோ அந்த நிலையை
ஒருவருக்கு ஏற்படுத்தியிருக்கிறது என்பது தெளிவு.
ஆனால் ஒட்டுமொத்த புலம்பெயர் தமிழ் சமுதாயத்தை
நோக்குமிடத்து  அது அந்த தனிமனிதன் சார்ந்தது என்றோ
அல்லது அந்த குடும்பம் சார்ந்த பிரச்சனை என்றோ
ஒதுங்கிவிடவோ ஒதுக்கிவிடவோ முடியாது,இந்த வேளையில்
அவரின்மனைவியின் பெயர் எங்கும் உள்வாங்கபடவில்லை
என்றும்செய்திகள் கிடைத்திருக்கிறது.
தாயக நிலங்களில் தவழ்ந்து வளர்ந்து எத்தனையோ கஷ்டங்கள்
வாழ்க்கை சுமைகளை சுமந்து புலத்தை நோக்கி பயணித்த
சமுதாயம் எங்கள் சமுதாயம்.புலத்தில் உழைத்தென்றாலும்
எங்கள் குடும்பத்தை  சமுதாயத்தை உயர்த்திவிடலாம் என்ற
கனவோடு ஒவ்வொரு நிமிடங்களும் மிகக்கடின  வாழ்க்கையை
அனுபவித்து வாழ்பவர்கள் எந்த வேளையிலும் தற்கொலை என்ற
பாதையை எவர் தெரிவு செய்தாலும் அது ஆமோதிக்க முடியாது.
அன்றைய காலங்களில் புலம்பெயர்ந்த காலங்களில் தனிமை
என்ற கொடுமை எங்கள் சமுதாயத்தை ஆட்டுவித்திருந்ததது.


எங்கோ ஒரு மொழி தெரியாத நாட்டின் நகரத்தில் தனிமையாக
வந்து தொழில் தேடி உழைத்து நிலைத்த சமுதாயம்.இன்றைய
காலங்களில் அப்படியான தனிமை என்ற உணர்வுகள் எந்த ஒரு
மனிதனுக்கும் இருக்கமுடியாது என்று உறுதியாகச்சொல்லலாம்.
ஏனென்றால் ஐரோப்பிய நாடுகளெங்கும் மிகக்கூடியளவு பரம்பலோடு வாழ்கின்றது எங்கள் சமுதாயம்.
ஒரு காலத்தில் புலத்திற்கு வந்த எங்கள் சமுதாயத்தின்
இளைஞர்கள்  போதைவஸ்துகளுக்கு அடிமையாகி  கொலைகள்
தற்கொலைகள் என்ற கவலைக்கிடமான நிலைகில் எல்லாம்
இருந்திருக்கின்றார்கள்.அப்படியான செய்திகள் இப்போது
கிடைப்பது அரிது.ஆனால் உறவுகளில்
விரிசல்கள்,கோபதாபங்கள்,இங்கு பிறக்கும் குழந்தைகளின்
செயற்பாடுகளால் பெற்றோர்களுக்கு வரும் தாக்கங்கள்,குழந்தை
பெற்றோர் இடைவெளிகள்,குடும்பத்தினுள் சண்டைகள்,
விவாகரத்துகள்,இவற்றினால் வரும் கொலைகள் தற்கொலைகள்,
என்று ஒட்டுமொத்த சமுதாயத்தின் பாதை ஆரோக்கியமற்ற
சூழலில் நகர்கின்றது.
ப்படியென்றாலும்  கடின உழைப்புகளோடு
உன்னதமான வாழ்வை அமைக்கக்கூடிய சூழல்களை  கொண்ட
நாடுகளிலிருக்கும் எங்கள் சமுதாயம் வாழ்க்கை என்ற
பயணத்தை அர்த்தமுள்ளதாக்கும்படி சிந்திப்பது சாலச்சிறந்தது.
புலத்தில் எந்த ஒரு தமிழ் மகனும் தன் வாழ்க்கையை நம்பிக்கை
இழக்கும்படியாக சமுதாயம் நகர்த்தக்கூடாது.அப்படியான
சந்தர்ப்பங்களிலும் எமது உறவுகள் என்ற உணர்வோடு மனித
வாழ்க்கையின் அர்த்தத்தை புரியச்செய்தால் அதுவே சிறப்பு.அது
இங்கு பிறக்கும் சிறார்களுக்கும் உணரச்செய்ய வேண்டிய
விடயமாகின்றது.அடுத்த தலைமுறைகள் தமிழ் சமுதாயம்
என்றே நிலைபெறவேண்டும்,தனக்கான செழிப்பான
வாழ்க்கையை அமைக்க எல்லோரும் உழைத்து பிழைக்க வல்ல
நவீன உலகத்தின் முன்னோடியான அபிவிருத்தியடைந்த
நாடுகளில் வாழும் எங்கள் சமுதாயத்திற்கு , கொலை,தற்கொலை
என்ற ஏற்றுக்கொள்ளத்தகாத நம்பிக்கை இழந்தவாழ்க்கைப்பாதை
ஆரோக்கியமானதா?
வாலிப வயதிலேயே வரும் வேண்டத்தகாத இழப்புகள்  தமிழ்
சமுதாயத்தை எதிர்காலத்தில் எந்த நிலைகளுக்கு கொண்டு
செல்கிறது?
குறுகிய நிலையற்ற வாழ்வின் மனதிற்கினிய சந்தோஷங்களை
புரிந்துஉறவுகளோடு பகிர்ந்து,மற்றோரையும் அரவணைத்து
அடுத்த தலைமுறைக்கான சரியான படிப்பினைகளை
எடுத்துச்செல்ல வேண்டும் என்ற எண்ணம் எங்கள் சமுதாயத்தில்
அனைவருக்கும் புரியவில்லையா?
உறவுகளின் பிணைப்பும் புரிந்துணர்வற்ற நிலைகளும், சுய நல
சிந்தனைப்போக்குகளும் தொடர்ந்தும் நிலைக்குமாயின்
ஒட்டுமொத்த சமுதாயமும் எங்கள் பண்பாடுகளை, கூடிக்களித்த
வாழ்க்கையின் உண்மையான பாசபிணைப்புகளை அறுத்தெறிந்து
நலமான வாழ்வை இழக்கவேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குள்
தள்ளப்படலாம் என்று சுட்டிவிரல் சுட்டிக்காட்டுகிறது,


நன்றி வானவில்