புலத்து மண்ணில்
நிலைத்து நிறைவான வாழ்க்கையை நாடி நடைபோடும் மக்கள் நாம்.துயரங்களை அனுபவித்து அதை
வரலாறாக்கி தாக்கங்கள்
பல கடந்து தான் அதை உருவாக்கியிருக்கிறோம்.
வாழ்க்கையில் நிறைவு
காண்பது என்பது சாத்தியமாகுமா என்று
கேட்டால் உண்மையில் அதற்கும் பதில் இல்லைத்தான்.ஆனால்
கிடைப்பதை வைத்து அதில் தன்னிறைவு காண்பது என்பதே
வாழ்க்கையில் கிடைக்கும் சுவாரஷ்யம்.
அண்மையில் ஒரு நண்பரொருவரின் திருமண வீட்டில் கேட்ட
உரையாடல் "எங்கட
சொந்தக்காரருக்கு கிட்ட தமிழிலே
பேசவேண்டாம்.இங்கிலிஷில் பேசவேணும்`` கெளரவம் குறையக்கூடாது
என்பது போன்ற ஆதங்கத்தோடு அந்த தாய் மகளுக்கு சொன்ன விடயம் .....
பின்னர் அண்மையில்
தாயகத்திற்கு ஒருமாத விடுமுறையில் சென்று
முழுவதுமாக மூன்று பிள்ளைகளும் இங்கிலீசில்
தான் பேசினார்களாம்...
பெருமைப்படுகிறார் அந்த அம்மா மற்றைய உறவினர்களிடம்.
இந்த உரையாடலின் பக்கம் சுட்டுவிரல் தன் பார்வையை நோக்குகிறது.
ஆங்கிலத்தில் பேசுவது என்பது மேற்குலக நாடுகளில்
பெருமையாக
பார்க்கப்படுகிறதா அல்லது பெருமையான விடயமா அல்லது சரியா தவறா
என்பது இந்த பதிவின் நோக்கம்
அல்ல.
ஆங்கிலமற்றும்
பிறமொழி மண்ணில் பிறந்து தவழ்ந்து பாடசாலை
போகும்போது அந்த குழந்தை அந்த அந்த நாடுகளிற்கான
தாய்மொழியை
இலகுவில் பேசப்புரிந்துகொள்ளும் என்பது யதார்த்தமானதே. அதுவும்
பாடசாலைகளில் இணைந்துவிட்டால் அதை தவிர்த்துக்கொள்ளவும்
முடியாத விடயமே.உலகப்பொதுமொழியான ஆங்கிலத்தையோ அல்லது
மற்றும்
மேற்குலக மொழியையோ பேசத் தெரிந்துகொள்ளல் என்பது தமிழ்
குழந்தைகளுக்கு பெருமையான விடயமும்
தான். ஏனெனில் மொழிவளம்
மிக்க மனிதனுக்கு பன்முகத்திறமையை ஆளுமையை அந்த அந்த
மொழியியலினூடாக பெற்றுக்கொள்ளமுடியும் என்பது ஆணித்தரமான
உண்மை. ஆனால் எங்கள் தாய்மொழியை எங்கள் குழந்தைகள்
மறக்கின்றார்களே என்பதை அறியாத சமுதாயமாக நாங்கள்
இருக்கின்றோம் என்பதை நினைக்கும்போது
கவலை தருகிறது.
புலத்துமண்ணில்
சட்டம் ஒழுங்குகள் தத்தமது மொழிகளினூடாக
செயற்பாடுகளை அங்கீகரித்துக்கொண்டுதானிருக்கிறது.
மேற்குலக நாடுகள்
மனித உரிமை சார்ந்த விடயமாக அதை நோக்கி அந்த
அந்த நாடுகளின் சட்ட திட்டங்களுக்கு அமைவாக எமது சமுதாயத்தின் பல
செயற்பாடுகளுக்கு தங்கள் அங்கீகாரத்தினை கொடுத்திருக்கிறது.அப்படியாக
மேற்குலக நாடுகள் பல்லின கலாச்சார வாழ்வின்
அழகை ரசிக்கிறது என்பது உண்மை.
அதன் மூலம் தாய்மொழிக்காக எத்தனையோ அமைப்புக்கள்
செயற்பட்டுகொண்டுதான் இருக்கின்றன.ஆனால் அவை மட்டும்
தமிழ்மொழியை புலத்தில் நிலை நிறுத்துவதற்கு போதுமானதான
செயற்பாடுகளா என்றால் இல்லை என்பதே பதில்.
ஏனெனில் புலத்தில் வாழும் ஒவ்வொரு தமிழ்க்குடிமகனும் தனது குடும்பம்
சார்ந்து இயங்கவேண்டிய தேவையிருக்கிறது.பிள்ளைகள் வளரும்
காலத்திலேயே அவர்களுக்கு தமிழ் மொழியின் ஈடுபாட்டை அதிகரிக்க
செய்யும் செயற்பாடுகளில் ஈடுபடவேண்டும்.
மாறாக “என்ரை பிள்ளைக்கு இங்கிலிசு போதும்,.தமிழை படிச்சு என்ன
செய்வது,, தமிழ் எங்கு எவருக்கு உதவப்போகிறது” என்று எல்லாம் தங்கள்
குழந்தைகளுக்கு முன்னாகவே உரையாடும் நிலைகள் சமுதாயத்தின் இருப்பு
நிலைகளை எதிர்காலத்தில் தக்கவைக்க ஏதுவாகுமா?
“பிறக்கும் குழந்தை தமிழை அறிந்துகொள்ள அல்லது தொடர்ந்து வளரும்
காலங்களில் பேசிக்கொள்ள மறுக்கிறது என்ன செய்யலாம்?” என்று
தட்டிகழித்துவிடவும் முடியாது.
எந்த ஒரு குழந்தையும் வளரும் காலத்தில் தாய் சேய் உறவாடல்களினூடு
குழந்தைகளுக்கு புரியவைக்கும் படியாகவே பாடசாலைக் கல்வி
முறைமைகள் காணப்படுகின்றன.
அப்படியான சந்தர்ப்பங்களை பயன்படுத்திக்கொள்வதை தவிர்த்து
பிள்ளைகளை ஆங்கிலம் அல்லது வேற்று மொழி பேசும்போது அவைதான்
பிள்ளைகளை பெற்றமைக்கான பெரும் பேறு என்பது போல பெருமைக்குரிய
விடயங்களாக ஊக்கம்கொடுத்து தாய்மொழியை மறக்கவோ அல்லது
குழந்தை தொடர்ந்து இளமைக்காலத்தில் வாயினாலே மற்றவர்களுடன்
உரையாடுவதை வெட்கமாக நினைக்கும் படியாக செய்தல் தாய்மொழிக்கும்
சமுதாயத்திற்கும் செய்யும் மகா பாவத்திற்குரிய செயல்களாகும்.
தாய்மொழியை எங்கள் குழந்தைகள் மறக்கபடுவதற்கு நாங்கள்
ஏதோவொருவகையில் உடந்தையாகின்றோமோ என்பதை ஒவ்வொரு
தமிழனும் தங்களுக்குள்ளே கேட்கும் காலங்கள் வரவேண்டும்.உண்மையில்
அதற்குள் தமக்கும் ஒரு பங்கிருந்தால் வெட்கி தலைகுனிய வேண்டிய
நிலைமைகளை அனைவரும் உணரவேண்டும்.இவ்வாறு ஒவ்வொருவரும்
தலையை குனித்துவிட்டால் புலத்தில் தமிழ் சமுதாயமே தலைகுனிந்து
தமிழன் என்ற அடையாளத்தை எமது பரம்பரைகள் இழக்கும் நிலை வரலாம்
என்பதே உண்மை.
புலத்தில் அடுத்த சமுதாயத்தை கட்டியெழுப்ப வேண்டிய மிகமுக்கியமான
காலகட்டத்தில் இந்த காலத்தில் சமுதாயம் வாழ்ந்துகொண்டிருக்கிறது.அந்த
வேளையில் ஒரு இரண்டும்கெட்டான் நிலைகளில் நாங்கள் எங்கள்
வாழ்க்கைப்பாதையை கொண்டு செல்வது சரியா?
தேமதுரத்தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும் என்று
பாடிய கவிஞனின் புகழ் உலகமெல்லாம் நிலைபெற்று நிற்க தமிழ் மொழியை
மறக்கும் சமுதாயத்தை உருவாக்கி தாய்மொழியை அழித்த
குற்றத்திற்குரியவர்களாக வாழ்வது எந்த வகையில் நியாயம்?
மேற்குலக நாடுகளில் தமிழை அல்லது எமது சமுதாய நடவடிக்கைகளை
அந்த அந்த நாடுகளில் சட்டதிட்டங்களுக்கு அமைவாக உயர் நிலைகளுக்கு
எடுத்துச்சென்று காலூன்றச்செய்ய கிடைத்த சந்தர்ப்பங்களை கூட
பயன்படுத்தாத குற்றவாளிகளாக தலைகுனிந்த பரம்பரை சமுதாயமாக
வாழப்போகின்றோமா?
புலம்பெயர்ந்த நாடுகளில் தமிழ் மக்களின் வரவும் அவர்களின்
கட்டமைப்புகளும் செயற்பாடுகளும் உலகளவில் எமது மக்களின் நிலையான
உரிமை செயற்பாடுகளை பறைசாற்ற எவ்வளவு உந்தமாக அமைந்ததோ
அந்த உன்னதமான செயற்பாடுகள் தொடர்ச்சியாக காலத்திற்கேற்றபடி
நடைமுறைப்படுத்துவதற்கு தமிழ் மொழியை எமது வளரும் சமுதாயம்
எவ்வளவு காலம் தொடர்ச்சியாக உச்சரிக்க போகின்றார்களா என்ற
அடிப்படையிலேயே அவை வலுப்பெறும்.தமிழ் மொழியின் செல்லப்
பிள்ளைகள் தமிழை மறந்தால் காலத்தில் தவறு செய்த மாபெரும்
குற்றவாளிகள் இந்தக்கால தமிழ் சமுதாயம் என்ற பெயரையும் பெற்றுவிடும்
என்று சுட்டிவிரல் சுட்டிக்காட்டுகிறது.
நன்றி வானவில்