அரசியல்வாதிகளே கவனம்!!!!!!!!!!!!!!!!! இது செருப்பெறி காலம்



அரசியல் வாதிகள் மக்களுக்கு வேண்டியவர்களாக இருப்பவர்கள் என்பதைவிட இப்போதெல்லாம் வேண்டாதவர்களாக மாறிவருகிறார்கள் என்பது தான் இன்றைய நிலையாக மாறி வருகிறது.
அரசியல் வாதிகள் மக்களுக்காக தங்கள் சேவை என்று அடிக்கடி சொன்னாலும் அவர்கள் எவ்வளவு தூரம் அவர்களுக்கு வேண்டியவர்கள் என்பது அவர்கள் வாழும் காலத்திலேயே அவர்களுக்கு உணர்த்த மக்கள் தயாராகிவிட்டார்களோ என்றவாறாக அண்மை சம்பவங்கள் உணர்த்திவருகின்றன.
தேர்தல் காலங்களில் அரசியல் மேடையில் ஒரு பேச்சும் அதிகார கதிரையில் ஏறிய பின் ஒரு பேச்சும் பேசினால் அது மக்களுக்கு விளங்காமல் விடுமா என்ன?
அதிகார கதிரை என்பது மக்களுக்காகவே என்றில்லாமல் தங்களின் சொந்த கதிரை என்று நினைத்து அதில் குதிரை ஆடினால் மக்கள் அவர்களை ஏற்றுக்கொள்வார்களா என்று சற்றேனும் சிந்திக்காமல் அரசியல் நடத்தும் அரசியல்வாதியை மக்கள் எவ்வாறாக உலகில் நடத்துகிறார்கள் என்பதும் அதே போல சற்றேனும் தனது கொள்கையிலிருந்து விலகாமல் தனது இலக்கை அடியும் வரை யாருக்கும் மடியாமல் பயணிப்பவரை மக்கள் எவ்வாறாக உலகமெல்லாம் நடத்துகிறார்கள் என்பதும் எல்லோருக்கும் வெளிச்சம்.

இன்று இந்திய பிரதமர் மன்மோகன் சிங்க் அவர்கள் இந்தியாவின் அஹமதாபாட் என்ற இடத்தில் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்தபோது கூட்டத்திலிருந்து ஒருவர் மூடுகாலணியால் வீசி இருக்கிறார்.

இது இன்று ஆரம்பித்த விடயமொன்றல்ல.உலகின் வல்லரசாக கணிக்கப்படும் நாடுகளில் முதலாவதாக இந்திய பிரதமருக்கு வீசியதும் அல்ல.
அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் அவர்களுக்குத்தான் இது ஆரம்பம்.ஈராக்கில் ஊடகவியலாளர் மகாநாட்டில் பேசிக்கொண்டிருந்தபோது ஆரம்பித்த இந்த செருப்பெறி


இப்போது இன்னொரு வல்லரசாக கணிக்கப்படும் இந்தியாவில் பரவியிருக்கிறது.
இதற்கு முதல் இந்தியாவிலேயே ஒரு சிறந்த அமைச்சராக கவனிக்கபடுவது மட்டுமல்லாமல் தமிழ் நாட்டை பிரதி நித்துவப்படுத்தும் நடுவண் அமைச்சர் பா.சிதம்பரத்தின் மீது செருப்பெறி விழுந்தது.

இது மட்டுமல்லாமல் இன்னோர் அமைச்சர் மீதும் வீசப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
எதற்கும் பாதுகாப்பு வழங்கலாம் செருப்புக்கு எப்படி பாதுகாப்பு வழங்குவது என்று முழிக்கிறதாம் பாதுகாப்பு அணி.
"என்ன செருப்பு போடாமல் வாருங்கள்' என்று சொல்வதா என்று தீவிர சிந்தனையில் இருக்கிறார்களாம்.
இதைவிட அதிகார கதிரையில் இருக்கும்போது மக்களுக்காக இருந்துவிட்டால் இப்படியான சங்கடமொன்றும் தேவையில்லையே?
இதுமட்டுமில்லை மக்களின் துயர்துடைக்காமல் மக்களின் உண்மையான ஏக்கம் என்னவென்று புரியாமல் மாறாக துன்பத்துக்கு தூண்டுதலாகவும் உதவியாகவும் இருக்கும் அரசியல் வாதிகளுக்கும் பதில்சொல்லும் காலம் வெகுதூரத்தில் இல்லை

நீங்கள் வாழும் காலத்தில் உங்களுக்கு பதில் கிடைக்கும் உங்கள் அரசியல் வாழ்க்கைக்கு.
இது செருப்பெறி காலம் இனி என்னவெல்லாம்வரும்மென்று பார்த்துகொண்டே இருங்கள்

"குரே குரே" ஆஸ்திரேலியா "ஷிந்தாபாட்" பாகிஸ்தான்




நடப்பு உலகசம்பியன் அணி மட்டுமல்ல தரவரிசையில் நீண்டகாலமாக முதல் நிலையில் வெற்றி நடை போட்ட ஆஸ்திரேலியா தரவரிசையில் கீழே இறங்கிக்கொண்டு இருக்கிறதே என்று விளையாட்டு ஆர்வலர்கள் ஆராய்வதும் ரசிகர்கள் திட்டுவதும் அவர்களின் வெற்றிக்கான ஏக்கத்துக்காகவும் வெற்றிதீனி போட்டிருக்கிறது ஆஸ்திரேலியா.
களத்தடுப்பில் மிகவும் கவனக்குறைவுகளும் பிடித்தவறுகளுக்கும் பஞ்சமில்லாமல் இருந்தாலும் துடுப்பாட்டத்தில் நின்று நிலைத்தாடி வெற்றி பெற்றுவிட்டது.

ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் துபாயில் "சப்பல்" கிண்ணத்துக்காக இரண்டாவது போட்டியில் தான் இந்த வெற்றி.

வெற்றி பெற்றாலும் அந்த அணி மீது பல பல்வீனங்களை அவதானிக்க முடிந்தது.
முன்னெல்லாம் யாராவது முன்னணி வீரர்கள் ஒய்வுபெற்றுவிட்டால் அதற்கு சரியான பிரதியிடப்பட்ட வீரரோடு களமிறங்கும் ஆஸ்திரேலிய அணி இப்போது வானுயர்ந்து வரும் பந்தை கணக்கெடுத்து பிடியெடுக்க தெரியாத வீரர்களை இணைத்திருக்கிறார்களோ என்று எண்ணும்படியாக அமைந்தது அந்த போட்டி.ஆனால் அணித்தலைவர் கிளார்க் கண்மூடித்திறக்க முதல் எடுத்த பிடி கொஞ்சம் "ஆ" என்று சொல்ல வைத்தது.



சுழல் பந்து வீச்சாளர்களிடம் தவறான தீர்மானமெடுத்து துடுப்பாடி சுருண்டு விடும் ஆஸ்திரேலிய அணி முன்னர் பின்னர் அவதானத்துடுப்பாட்ட முறையில் சிறப்பாக துடுப்பாடி வந்திருந்தது. ஆனால் மீண்டும் சாதாரண சுழல் வீச்சாளர்களிடம் சுழல ஆரம்பித்துவிட்டது. இங்கு இரண்டாவது போட்டியில் யூனுஸ்கான் தொடர்ந்து சிறப்பாக பந்து வீசிக்கொண்டிருந்த அஃபிரிடி மற்றும் புதிய வீரர் அஜ்மல் ஆகியோரை தொடர்ந்து வீச விடாமல் வேகப்பந்து வீச்சாளர்களை அழைத்ததால் ஆஸ்திரேலிய அணி வீரர்களூக்கு சாதகமாக அமைந்துவிட்டது என்று முணுமுணுத்ததை அவதானிக்க முடிந்தது.ஆனால் இறுதியில் அஃப்பிரிடி தனக்குரிய பந்துபரிமாற்றங்களை வீசி முடித்துவிட்டார்.அஜ்மலுக்கு இன்னும் மூன்று பரிமாற்றங்கள் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.




என்றாலும் அணித்தலைவர் கிளார்க் தன் இலக்கை இழக்காமல் எத்தனை பந்துகளை இழந்தாவது நின்று நிலைத்தாடி வெற்றிப்பாதைக்கு அழைத்துச்செல்வேன் என்று விடாபிடியாக இருந்தார் என்றுதான் சொல்ல வேண்டும்.அடுத்தடுத்து இலக்குகள் இழந்தவேளை கிளார்க் மற்றும் சிமண்ட்ஸ் வந்தார்கள். சிமண்ட்ஸ் தனது வழமையான பாணியில் வேகமாக ஓட்டங்களை எடுத்தது மட்டுமல்லாமல் இலக்கை நெருங்கிவிட்டு விடைபெற்றார் அஃப்பிரிடியின் சுழல் பந்தில்.தொடர்ந்து அணித்தலவர் வெற்றிவரை கொண்டுசென்றார்.
பாகிஸ்தான் அணியில் களத்தடுப்பில் பலவீனம் என்னவெனில் ஆஸ்திரேலிய அணியின் ஓட்டம் ஒடும் வேகத்துக்கு ஏற்றவாறு அமையவில்லை என்பதுதான்.களத்தடுப்பாளர்களின் கைகளுக்குளேயே அடித்துவிட்டு ஒரு ஓட்டம் எடுத்தது மட்டுமில்லாமல் சிலவேளைகளில் இரண்டு ஓட்டம் எடுத்ததும் ஆஸ்திரேலிய ஓட்டவேகத்தை அதிகரித்திருந்தது.இதே இடத்தில் வரும் பந்துகளை எல்லாம் நொருக்கும் வீரர் கில்கிறிஸ்ட் எல்லாம் இருந்திருந்தால் கதை வேறு.ஆஸ்திரேலிய அணிக்கு கில்கிறிஸ்ட் மற்றும் கைடன் போன்ற வீரர்கள் ஓய்வு பெற்றது பெரிய தூண்களை இழந்து விட்டார்கள் என்பது உண்மைதான்

சில சந்தர்ப்பங்களில் விளையாட்டு செய்திகளை மட்டுமே அறிபவனாக இருந்த எனக்கு
பல நாள்களுக்கு பிறகு இந்த பந்தயம் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. முந்தி எல்லாம் எங்கு தொலைக்காட்சில் போட்டியை கண்டு களிக்கலாம் என்று அலைந்துதிரிவது நினைவில் வருகிறது.அந்த நகைச்சுவையான நினைவுகளுக்கு வேறு ஒரு பதிவுதான் சிறந்தது.
நீண்ட நாளுக்கு பிறகு பார்த்ததால் எனக்கு சிமண்ட்ஸை பார்த்தவுடன் ஏங்கிப்போய் விட்டேன்.
எவ்வளவு குழு குழு என்று பருமனாக இருந்து இப்போது வெறும் சின்ன வயதுக்காரனைப்போல இருந்ததுதான்.
பருமனாக இருந்தபோதே ஓடும் வேகம் எல்லோருக்கும் தெரியும், பருமன் குறைந்து விட்டால் கொஞ்சம் வேகமாக ஓடுவார் என்று பாகிஸ்தான் அணி வீரர்கள் அவதானமாக இருந்திருக்கலாமல்லவா?



இருந்தாலும் இரண்டு போட்டிகளிலும் ஒவ்வொன்றாக வெற்றி பெற்று சுற்றுபோட்டி சமனிலையில் ஓடிக்கொண்டிருக்கின்றது
அங்குள்ள ரசிகர்களின் கோஷங்களைப்போலவே
"குரே குரே ஆஸ்திரேலியா
ஷிந்தாபாட் பாகிஸ்தான்"

தீ வருகிறது "ஓடுங்கள் ஓடுங்கள்"

இன்று அதிகாலையில் நடந்த விடயம் கொஞ்சம் சிரிப்புடன் சிந்திக்க வைத்தது.
என் வேலைத்தளத்தின் அமைக்கும் கட்டடத்தொகுதியில் சிறியதுமல்லாத பெரியதுமல்லாமல் கொஞ்சம் நடுத்தரமான தீப்பிடித்துவிட்டது அவ்வளவுதான்.
அதற்கு எத்தனை வேலைப்பாடுகள், எல்லோரையும் "ஓடுங்கள் ஓடுங்கள்" ,"உள்ளே வராதீர்கள் வெளியே ஓடுங்கள்" என்றவாராக சத்தமிட்டவாறு எல்லோரையும் கலைக்கும் பாதுகாப்பு அணி,
தீப்பிடிக்க ஓடுவதெல்லாம் உண்மைதான். ஓட வேண்டாம் என்ற சிந்தனையில் சொல்லவில்லை நான், நானும் அவர்களோடு ஓடியவனாய் எத்தனையோ கொடூரமான மரணகளும் வலி தோய்ந்த வாழ்க்கைகளும் இருப்பது மட்டுமல்லாமல் குண்டுகளுடன் கலந்த நெருப்பு கலைத்துகொண்டு வரும் சூழலில் வாழும் மக்கள் அனுபவிக்கும் கஷ்டங்களைவிட இது என்ன எங்கோ வரும் நெரிப்பில் என்ன வரப்போகிறது என்ற சிந்தனை தான்.
இப்படியாக ஒடிய நான் கொஞ்சம் வேகத்தை குறைத்தாலும் என்னோடு கூடி ஓடுவோர் என்னை விடுவதாக இல்லை.பாதுகாப்பு அணி என்னை கலைக்கிறது. அது மட்டுமல்லாமல் வந்த தீயை நோக்கி சிலரது புகைப்பட கருவிகள், அவை தன்னகத்தே சில "டக் டக்" பதிவுசெய்கின்றன,அவை அவர்களுக்கு புது விடயங்களாகத்தான் இருக்கும்,அவற்றுள் சில புகைப்படங்கள் கீழே பாருங்கள் என்ன பெரிய தீ என்றும் அவற்றை பார்ப்போரையும்,
இந்த புகைப்படங்களில் என்னை மட்டும் தேடாதீகள், ஏன்னென்றால் இந்த புகைப்படங்களை எடுத்தவன் நானெல்லோ..........................












வலைப்பதிவில் ஒரு வயது

நான் ஒரு சின்னபொடியன்



கரவைக்குரல் வலைப்பதிவில் ஒருவருடம் தாண்டி இரண்டாவது வருடத்தில் இன்றுடன் கால் பதிக்கிறது.
பார்த்தவைகளும்,என்னுள் பதிந்தவைகளும்,நான் பட்டவைகளும்,
கொஞ்சம்சிரித்தவைகளும்;அவற்றுள் சொல்லக்கூடியவைமட்டும்,அவ்வப்போது
அறிந்தவைகளும்,மனதினுள் குமுறியவைகளும்;அவற்றுள் கக்கக்கூடியவை மட்டும்,
சற்று வித்தியாசமாக சிந்தித்தவைகளுமாக எழுதிவந்திருந்தேன்.

எப்பவோ மனதினுள் குடிகொண்டிருந்த ஆசையால் திடீரென ஒருநாள் "சும்மா"
ஆரம்பித்ததுதான் இந்த வலைபூ.அன்றைய விடியற்காலையில்க்கூட எனக்கு தெரியாது இப்படி ஒரு தளம் எனக்காக உருவாகுமென்று.அலுவலகத்தில் அதிகாரி வரவில்லை அன்று,புதுவருடம் கழிந்ததால் எல்லோரும் விடுமுறை எடுத்த காலம்,நான் மட்டும் அலுவலகம் போனதால் அமைந்த சந்தர்ப்பங்கள் எல்லாமே கூடிவர கரவைக்குரல் என்ற நாமம்கூட அப்போதே மனதினுள் பிறந்து விட உருவாகியது தான் கரவையின் ஒசை.

அன்று பிறந்த ஒசை அது மழலையாகவே பேசி உங்களுடன் உலவிவருகிறது.என்ன தான் பேசினாலும் அது மழலையின் மொழியேயென்று ஏற்றுகொண்டிருப்பீர்கள் என்ற எதிர்பார்ப்போடு எழுதிவருகின்றேன்.தாயகத்தின் துயரம் தோய்ந்த செய்திகளும் மக்களின் அவலங்களும் வலிகளுமே காதுக்கு வந்து கொண்டிருக்கிறது.குமுறியவை எல்லாம் கொப்பளிக்க முடியாத காலம்.என்றாலும் மனதிற்கு சந்தோசமும் நிம்மதியான காலம் வெகுதூரத்தில் இல்லை என்பதுதான் உண்மை.

இவ்வளவு காலமும் இந்த வலையுலகில் நான் கண்டவர்கள் பல நூறு.ஆக்கபூர்வமான கருத்தைத்தந்து எழுத்துக்கு உரமூட்டியோர் பலர்.வித்தியாசமான பார்வைகளை என் பதிவுகளில் நோக்கி பதிவில் ஏற்படுத்தவேண்டிய மாற்றங்கள் பற்றி கருத்திட்டோரும் உளர்.நடிகர் அண்ணைரைட் பாலசந்திரன் அவர்கள்,எழுத்தாளரும் கலைஞருமாகிய உடுவை எஸ்.தில்லைநடராஜா அவர்கள்,க.தே.தாசன்,பேனாவே பித்தாக உள்ளவன்(பேனாப்பிசாசு),தமிழ் வாசகன் ஆகியோர் எனக்கு உந்துசக்தியாக இருந்தவர்கள்,
என் முதல் வருடத்தில் நான் தவழ்ந்த காலத்தில் தத்தக்க பித்தக்க நடை நடக்க கை கொடுத்தவர்கள் இவர்கள்.இவர்களோடு என்னை தேடிவந்து பின்னூட்டம் இட்ட என் வலையுலக நண்பர்கள் அனைவருக்கும் என் பணிவன்பான நன்றிகள்.
இதை விட நுனி நாக்கில் அமிர்தமாக பேசி கட்டிப்பிடித்து முதுகிலே ஓங்கி அடிக்கலாமா என்று வந்தோரை அமைதியான சிரிப்பாலே புறங்கையால் விலத்திவிட்டோரும் உளர்.இவர்கள் எனக்கு உந்து சக்தி.

இந்த முதல் வருட காலத்தில் என் கவிதைகளில் ஒரு சில கனேடியன் வானொலியில் அண்ணைரைட் புகழ் நடிகர் பாலசந்திரன் ஐயா அவர்களால் வானலைகளுக்கு கொண்டு சென்றது எனக்கு கிடைத்த புகழாக கருதுகின்றேன்.உலகமே பேசும் ஐயா அவர்களிடம் இருந்து கிடைத்த வரவேற்பு எனக்கு எழுதத்தெரியும் என்று என்னை எண்ண வைத்து வாழவைப்பதாக உணர்ந்து மிகவும் நன்றியுடையவனாக பணிகின்றேன்.
தொடர்ந்தும் மனதினுள் உற்சாகம்தரும் இறைவனையும் பணிந்து பல்வேறு நாடுகளிலும் இருந்தும் வரும் வாசகர்களுக்கும் மீண்டும் நன்றி கூருகின்றேன்
உங்கள் ஆதரவோடு எப்போதும் சின்னபொடியனாக மழலைமொழியோடு
தொடந்தும் கரவைக்குரல் ஒலிக்கும்.

கரவெட்டி அத்துளு அம்மனுக்கு பங்குனித்திங்கள்



பங்குனி மாதம் என்றாலே அம்மன் கோவில்களுக்கு விஷேசம் தான்.
உலகத்தின் இயக்கத்தின் சக்தியாக விளங்கும் சக்தி பொருந்திய தெய்வமாக கருதப்படும் இந்த அம்மனுக்கு பங்குனித்திங்களில் வரும் திங்கட்கிழமைகள் சிறப்பான தினமாக கருதப்படுகிறது.
அந்த மாதத்தில் வரும் ஒவ்வொரு திங்களிலும் அம்மனை சிறப்பாக வழிபட்டு அம்மனுக்காய் விரதம் இருந்து வழிபடுவர் அம்மன் பக்தர்கள்.கல்வி செல்வம் வீரம் என்றவாறாக வரும் வாழ்க்கையின் செல்வங்களின் மூலாதாரமாக வணங்கப்படும் அம்மன், குடிகொள்ளும் கோவில்கள் எல்லாம் விழாக்கோலம் பூடும்.
அம்மனின் சிறப்புக்களையும் புகழையும் ஒலித்தபடியே இருக்கும்.
இந்த காலங்களில் எல்லாம் கரவெட்டி முழுவதும் அம்மனின் புகழ் கரவெட்டி அத்துளு அம்மன் ஆலயத்திலிருந்து ஒலித்தபடியே இருப்பது இன்று என் நினைவில் வருகிறது.திங்கட்கிழமை என்றாலே இங்கு பக்தர்கள் வந்து வந்து போவதை அவதானிக்க முடியும் என்றால் பங்குனித்திங்களில் எப்படியிருக்குமென்று சொல்லிப்புரியவேண்டியதில்லை.
பச்சைப்பசேல் என்ற மருதநிலம் சூழ்ந்த இந்த ஆலயத்திற்கு இயற்கையான அம்சங்கள் பொருந்திய ஆலயமாக கானப்படுகிறது.பெரியபெரிய மரங்களே ராஜகோபுரங்களாகவும் கொடிகள் சூழ்ந்த பற்றைகள் அரணாகவும் காணப்பட இடாம்பீகமில்லாமல் குடிகொள்ளும் அம்மன் தான் கரவெட்டி அத்துளு அம்மன்.
இந்த ஆலயத்தின் சிறப்புக்களில் ஒன்றுதான் இந்த பங்குனி மாதங்களில் வரும் பொங்கல்.
குறிப்பாக பெண்கள் கலந்துகொண்டு ஆலயத்தில் இக்காலங்களில் அம்மனுக்கு பொங்கி படைத்தி தங்கள் நேர்த்திகளை வேண்டி வழிபடுவர்.
இதற்கு ஒரு ஐதீகமான கதையும் இருக்கிறது. கற்புக்கரசி கண்ணகி மதுரையை எரித்துவிட்டு வந்து தங்கிய இடங்களில் ஒன்றாக இந்த இடம் கூறப்படுகிறது.இங்கு சுவையான விடயம் என்னவெனில் இந்த ஒரே நாளில் பன்றித்தலைச்சி அம்மனுக்கும் இந்தியாவின் கேரளம் திருவனந்தபுர மாவட்டம் அட்டுக்கல் பகவதி ஆலயத்திலும் பொங்கல் பொங்குவது தான்.
இங்கெல்லாம் மதுரையை எரித்த கண்ணகி குடிகொண்டிருந்ததாக ஐதீகக்கதைகள் கூறுகின்றன.
இப்படியான சிறப்புக்கள் பொருந்தி கரவெட்டி அத்துளு அம்மன் ஆலயம் காணப்படுகிறது.
இவ்வாறாக பங்குனிமாதம் வரும் இறுதி திங்கட்கிழமை என்றால் அதைவிட கொஞ்சம் கூடிய விஷேசம்.ஊரே அம்மன் கோவிலை நோக்கி படையெடுக்கும் என்றுதான் சொல்லலாம்.
இந்த காலங்களில் நீர்ப்பாளயம் என்று சொல்லப்படும் படையலுக்கு இங்கு முக்கியத்துவம் அளிக்கபடும்.பொதுவாக பொங்கல் என்றால் கொஞ்சம் இனிப்புடன் கூடியதாக காணப்படுவது தான் எல்லோருக்கும் நினைவில் வரும்.இங்கு இதனுடன் இன்னுமொரு அம்சமாக வயல் நிலங்களில் விளையும் காய்கறிகளும் சேர்ந்ததாக செய்யப்படும் நீர்ப்பாளயம் முக்கியத்துவம் பெறுகிறது.பெண் தன் கணவர் வேர்வை சிந்தி அவரின் உழைப்பின் பயனாக தோட்டத்தில் கிடைத்த காய்கறிகளை கற்புக்கரசி கண்ணகி குடிகொண்ட அம்மனுக்கு படைத்து வழிபடுவதும்
வேண்டியவரங்களை வேண்டுவதும் இங்கு குறிப்பிடபடவேண்டிய விடயம்தான்.
இவை எல்லாவற்றிக்கும் மேலாக மாணவர்கள் தங்கள் பரீட்சைகாலங்களில் எல்லாம் அம்மனை வழிபட்டு பயனடைவர்.மாணவர்களின் மனப்பயம் நீக்கி அம்மன் மாணவர்களுக்கு உந்துசக்தியாக இருப்பது இதன் மூலம் புலனாகிறது.

இப்படியாக சிறப்புக்கள் எல்லாம் பொருந்திய கரவெட்டி அத்துளு அம்மனுக்கு விஷேசமான இந்த காலங்களில் இந்த வார திங்கட்கிழமை பங்குனியின் இறுதித்திங்கள்.
கரவெட்டியோடு கலந்த என் நினைவுகளில் இச்சிறப்புக்கள் பதியப்படுகிறது

எல்லாரும் முட்டாள்களே



நாமே வித்துவான்கள் என்று
மற்றோரை முட்டாளாக்கதான்
இந்த முட்டாள் தினமோ?
வித்துவான் கள் என்று எண்ணுவோரே
தத்துவம் பேசாதீர்கள்
சுத்தி சுழலும் பூமியிலே
பித்தரைபோல அலையும் எல்லோரும் முட்டாள்களே

நாளாக நாளாக அரசியலில் வேறுபட்டு
மாறான வார்த்தைகள் பேசும்
அரசியல்வாதிகளின் ஏமாறும் யாவரும்
எப்போதும் முட்டாள்களே-அதுவும்
எம்மவர்களை காலாகாலமாக
தொடர்ந்தும் ஒரே பல்லவிபாடி
கடத்தும் ஏமாற்றிகள்
அப்பாவிகளாக எம்மவர்கள்
பாவப்பட்ட முட்டாள்கள்

பண்பாடு கொச்சைபடும் சில
சினிமாத்திரை நாயகர்களை
கண்டுவிட்டால் பெருமையாக
எல்லாமே கிடைத்துவிட்ட
அற்ப மகிழ்ச்சியோடு திரியும்
எல்லோரும் முட்டாள்களே.

குடும்பங்களில் கும்மாளம் அடிக்கும்
சின்னத்திரை நாடகங்கள்
எம்சொந்தகார பிரச்சனை போல
தூக்கியெடுத்து கதையளக்கும்
சொந்தங்களே யாவரும்
எப்போதும் முட்டாள்களே

இணையதளங்களில் இடைவிடாமல்
கணமேனும் குறையாமல்
வீணாக்கும் என்னைபோன்றோர்
பென்னம்பெரிய முட்டாள்கள்

தாங்களே நாயகர்கள் என
திமிர்கொண்டு பேசுவோரும்
என்னதாம் செய்வதென்று அறியாமலே
தலைக்கனத்தில் உலாவிவரும்
ரகமான முட்டாள்கள்

மனித நேயம் தெரியாத
சினத்தை பீறிடும்
அன்பென்பது அறவேதெரியாத
அற்புதமான முட்டாள்கள்
பணமே வாழ்க்கையென்று
பணம் வந்து பண்பை அறுத்து
மனமே இல்லாமல்
சிந்தனைகளை வேறாக்கிய
முட்டாள்கள் எந்த வகை
எனக்கு தெரியாத வகை

மொத்ததில் எல்லாமே
முட்டாள்களின் அடிப்படையாய்
சொட்டேனும் குறையாமல்
உலகமே இருக்கும்போது
மற்றோரை முட்டாளாக்குவதில்
அற்ப சந்தோஷம்காணும்
அன்பான அன்பர்களே
மொத்ததில் எல்லோரும் முட்டாள்களே