வல்லிபுரத்தானும் ஞாயிற்றுக்கிழமையும்


பொதுவாக ஞாயிற்றுக்கிழமை என்றால் தாயகத்தின் வல்லிபுர ஆழ்வார் கோயிலுக்கு எல்லோரும் போவது வழக்கம்.அதுவும் ஆவணி ஞாயிறு என்றால் இன்னும் ஒரு படி மேலாக வல்லிபுர மாயவனின் வாசல் களைகட்டியபடியே இருக்கும். நாளை ஆவணியில் வரும் இறுதி ஞாயிற்றுக்கிழமை,பின்னர் சொல்லவா வேணும்,

ஈழத்தின் முக்கியமான விஷ்ணு கோவில்களாக பொன்னாலை வரதராஜபெருமாள் ஆலயமும் துன்னாலை வல்லிபுர ஆழ்வார் ஆலயமும் பிரபல்யம் மிக்ககைவையாகும்,நான் அறிந்த மட்டில் வல்லிபுர ஆழ்வார் ஆலயத்துக்கும் அதன் இருப்பிடத்திற்கும் சில சிறப்புக்கள்,யாழ்ப்பாணத்தின் தலை நகரங்களில் சிங்கை நகர் என்று இந்த வல்லிபுரத்தைத்தான் குறிப்பிட்டார்கள் என்று ஆராச்சியாளர்கள் சொல்கின்றார்கள்.முன்னைய காலங்களில் வல்லிபுரத்தை சூழவும் சிறு சிறு கிராமங்கள் காணப்பட்டதாகவும் அது காலப்போக்கில் அவையெல்லாம் இல்லாது போய்விட்டாதாகவும் ஆராச்சியாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.


சரி இப்படியாக ஈழத்தின் வடபுலத்தே வடமுனையில் உள்ள பிரசித்தமான வல்லிபுர ஆழ்வார் மருத நிலமும் பாலை நிலமும் கூடிய அற்புதமான இடத்தில் அமைந்திருக்கிறது,
ஆலயத்துக்கு ஞாயிற்றுக்கிழமை என்றால் ஒரு பெருங்கூட்டமே படையெடுக்கும்,வெள்ளை வெளேரென வேட்டிகளும் உடுத்தவர்களாய் ஆடவர்களும் அழகழகான சேலைகளும் உடுத்து தமக்கே உரிய பாணிகளில் நடை நடந்து பெண்களும் வல்லிபுர மாயவன் வாசலை வந்து வந்து அலைமோதும் கூட்டம்.எப்போதும் கண்ணனின் கீதங்கள் காதோரம் ஒலித்தபடியே இருக்கும்,கோபுர வாசலைக்கண்டவுடன் எல்லோரும் ”மாயவா” என்று உணர்வுடன் தரிசிக்கும் பாங்கு, எல்லாம் சேர்ந்து ஒரு வித்தியாசமான சூழல் அந்த வல்லிபுரத்தானின் சூழல்.

வல்லிபுர மாயவனிடம் செல்வதற்க்கு முதல் எல்லோரும் அண்மையில் இருக்கும் பிள்ளையார் ஆலயத்துக்கு செல்வது வழமை,அங்கு பல்வேறு சுவாரஷ்யமான விடயங்கள்,ஆலயத்தின் பின்புற வீதியில் அமைந்திருக்கும் தீர்த்தக்கேணியில் விரும்பியவர்கள் எல்லோரும் நீராடுவது வழமை,மூன்றடி கயிற்றினால் கட்டிய வாளியுடன் நீரினை அள்ளி மிகவும் இளம் வேகத்துடன் இளைஞர்கள் நீராடுவர்,அது மட்டுமில்லாமல் எல்லோரும் கேணியில் சுற்றிவர நின்று நீராடுவதுடன் அவ்வப்போது பகிர்ந்துகொள்ளும் நகைச்சுவைகளும் இதனால் முளைத்துவிடும் நட்புவட்டங்கள் எல்லாம் மனதிற்கினியவை,தொடர்ந்து பிள்ளையார் தரிசனத்துடன் வல்லிபுரத்தானின் வாசல் செல்வது வழமை.அங்கு ஒலிக்கும் கிருஷ்ண கீதம் கோபுர தரிசனம் எல்லாம் பக்திமயம்,
இறுதியில் வல்லிபுரக்கோயிலின் நாமம் தரிக்க யாரும் தவறுவதில்லை, நாமம் என்பது சந்தனம் போன்ற பொட்டுப்போல நாமப்பொட்டு அது வல்லிபுரக்கோயிலில் கிடைக்கக்கூடியது,பொதுவாக வல்லிபுரக்கோயிலுக்கு சென்று வருபவர்களை பார்த்தால் அவர்களின் நாமப்பொட்டு அந்த கோயிலின் மூலஸ்த்தானத்தையும் வல்லிபுர மாயவனையும் எப்போதும் நினைவுபடுத்திக்கொண்டே இருக்கும்.
ஆலயத்தை சூழவுள்ள விருட்சங்களும் விக்கிரகங்களும் எப்போதும் ஆலய வீதியிலேயே ஒரு பக்திஉணர்வைத்தரும்,சங்கநிதி பதுமநிதி என்று ஆலயத்தின் வாசலிலிருந்து ஆரம்பித்து ஒரு மரத்திற்கடியில் ஒரு நாகதம்பிரான்,சப்த கன்னிகள் என்று வித்தியாசமான சூழல்.

அதைவிட கொஞ்சம் சுவாரஷ்யமான விசயங்களையும் சொல்லத்தானே வேணும்,அந்தக்காலத்திலை சைக்கிள் ஓடத்தெரியாத காலத்திலை எனக்கு வண்டில் மாட்டில் செல்லகூடிய ஒரு அற்புதமான சந்தர்ப்பங்கூட கிடைத்திருந்தது,ஆவணி ஞாயிறில் மாயவனுக்கு பொங்கல் சிறப்பு பெரிது,என் அம்மம்மாமார் இந்த விடயத்திலை எல்லாம் பின் நிற்பதில்லை,எந்தெந்த ஆலயங்களில் எல்லாம் சிறப்புக்கள் உண்டோ அந்த அந்த ஆலயங்களுக்கு எங்களை அழைத்துச்செல்லதவறுவதுமில்லை,அங்கு பொங்கல் படையலை செய்யத்தவறுவதுமில்லை,அப்ப விடியவே எழுந்து வண்டிலில் மாடு பூட்டி அங்கு சென்று பொங்கி படைத்து வீடேகுவது வழமை,அதில் வரும் இன்னும் பல விடயங்களை வேறு பதிவில் அலசலாம் என்று எண்ணம்

பின் ஒரு கொஞ்சக்காலம் போக சமாதான காலம்,ஊருக்கு எல்லோருடைய கையிலும் சைக்கிள் இருந்த காலம் போய் மோட்டச்சைக்கிள் எல்லாருடைய கையிலும் வந்த காலம்,மோட்டச்சைக்கிள் வாங்கினால் அதை வல்லிபுரக்கோவிலுக்கு கொண்டு செல்வது என்பதும் எல்லோரும் வழமையாக்கிவிட்ட விடயம்,அதைப்போலவே நண்பர்கள் எல்லோரும் சேர்ந்து ஆலயம் செல்வதும் அதன் பின் புற்றளை மற்றும் துன்னாலை நண்பர்களின் வீடுகளில் சென்று அளவளாவி வீடேகுவதும் வழமையாக்கிவிட்டகாலம்,அதிலும் வரும் சுவாரஷ்யமான இன்னோரன்ன விடயங்களை நேரமிருந்தால் வேறொரு பதிவில் அலசலாம் என்று எண்ணம்சரி ஆலய தரிசனத்தின் பின் இறுதியில் எவரும் மறக்காத விடயம்,அது ஆலயத்துக்கு சென்றால் அது கட்டாயம் என்ற நிலமை சிலருக்கு,அது தான் “மள்ளாக்கொட்டை” வங்குவது,ஈழத்துமுற்றத்தில் வட்டாரவழக்காக இருக்கும் இன்னுமொரு சொல்தான்,இதை மள்ளாக்கொட்டை என்று சொன்னாலும் அதை கச்சான் என்று சொன்னால் தான் சிலருக்கு புரியும் என்று நினைக்கிறேன்,அதில் ஆலயத்துக்குள் செல்ல முதல் சில கச்சான் விற்கும் ஆச்சிகளிடம் ஏதும் கையில் வைத்திருக்கும் படி கொடுத்துவிட்டுபோனால் திரும்பவரும் போது அவரிடமே அந்த கச்சானை வாங்கவேண்டும் என்பதும் எழுதாத சட்டம்,அந்த கச்சானையும் வாங்கிக்கொண்டு அதையும் உடைத்து உடைத்து சாப்பிட்டபடி வீடேகுவது வழமை.

இப்படியாக ஞாயிற்றுக்கிழமை என்றால் வல்லிபுர மாயவன் வாசலில் எப்போதும் சிறப்புத்தான்.அதுவும் ஆவணியில் வந்துவிட்டால் அதற்கு பெருஞ்சிறப்பு,

இந்த புகைப்படங்கள் அடியேன் யாழ்ப்பாணத்திற்கு சென்றிருந்தபோது நண்பன் சீலனின் உதவியால் எடுக்கமுடிந்தவை,நன்றி சீலன்

15 comments:

Jay said...

A/L குண்டடித்துவிட்டு மீள படிப்பதற்காக பருத்தித்துறை சென்று கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்கள் இருந்தேன். அந்தக் காலத்தில் பல தடவைகள் இந்த கோயிருக்கு சைக்கிளில் சென்றிருக்கின்றேன.ஃ

அருமையான நினைவுகளை இந்தப் பதிவு கிளறியது. நன்றி

வந்தியத்தேவன் said...

தம்பி இதெல்லாம் சரியில்லை. எத்தனை காலம் வல்லிபுரக்கோவில் போகவில்லை. அதிலும் ஆவணி ஞாயிறு போகாமல் கிட்டத்தட்ட 16 வருடங்கள் வரும். சாரணனாக அந்தக் கோவில் வீதிகளில் சுற்றித் திரிந்ததும், கேணிக்கருகில் நித்திரை கொண்டதும், ஐஸ்கிறீம் குடித்ததும் எனப் பல நினைவுகள் சுற்றிச் சுற்றிவருகின்றன. என்னுடைய வல்ல்லிபுர ஆழ்வார் பதிவு ஒன்றிருக்கிறது பின்னர் தேடித்தருகின்றேன்.

வந்தியத்தேவன் said...

கோயில் தோசையை விட்டுவிட்டீர்கள் அதுவும் நல்ல சுவை, தாமரை இலையில் தருவார்கள், இனி அந்தக் காலம் வராது.

பால்குடி said...

உங்களுடைய பதிவு ஒரு ஞாயிற்றுக்கிழமை வல்லிபுரத்து சக்கரத்தாழ்வானிடம் சென்று வரும் நினைவுகளை மீட்டிருந்தது. வயல்வெளிகளைக் கடந்து இயற்கையை ரசித்தபடி செல்வது இன்னும் இனிமையானது.

geethappriyan said...

அருமை அருமை
பதிவு பகிர்ந்த விதம் அருமை
ஒட்டு போட்டாச்சு

கரவைக்குரல் said...

””//A/L குண்டடித்துவிட்டு மீள படிப்பதற்காக பருத்தித்துறை சென்று கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்கள் இருந்தேன். அந்தக் காலத்தில் பல தடவைகள் இந்த கோயிருக்கு சைக்கிளில் சென்றிருக்கின்றேன.ஃ

அருமையான நினைவுகளை இந்தப் பதிவு கிளறியது. நன்றி //””

நன்றி மயூரேசன் உங்கள் பகிர்விற்கும் வருகைற்கும்

கரவைக்குரல் said...

”// தம்பி இதெல்லாம் சரியில்லை. எத்தனை காலம் வல்லிபுரக்கோவில் போகவில்லை. அதிலும் ஆவணி ஞாயிறு போகாமல் கிட்டத்தட்ட 16 வருடங்கள் வரும். சாரணனாக அந்தக் கோவில் வீதிகளில் சுற்றித் திரிந்ததும், கேணிக்கருகில் நித்திரை கொண்டதும், ஐஸ்கிறீம் குடித்ததும் எனப் பல நினைவுகள் சுற்றிச் சுற்றிவருகின்றன. என்னுடைய வல்ல்லிபுர ஆழ்வார் பதிவு ஒன்றிருக்கிறது பின்னர் தேடித்தருகின்றேன்.//”

தேடித்தாருங்கள் வந்தியத்தேவரே
ஐஸ்கிறீம் குடித்ததும் அவ்விடங்களில் சுற்றித்திரிந்ததும் சுவையான விடயங்கள் தான்,

“”//கோயில் தோசையை விட்டுவிட்டீர்கள் அதுவும் நல்ல சுவை, தாமரை இலையில் தருவார்கள், இனி அந்தக் காலம் வராது.//””

உண்மைதான் விட்டுவிட்டேன், நான் தோசைப்பக்கம் போகாததோ என்னவோ, நான் விட்டுவிட்டேன்,
இன்னும் பலவிடயங்கள் இருக்கு
அவற்றை நான் பின்னர் ஒரு பதிவில் பொதுவாக தருகிறேன்,

நன்றி வந்தியாரே கருத்துக்கு

கரவைக்குரல் said...

”//உங்களுடைய பதிவு ஒரு ஞாயிற்றுக்கிழமை வல்லிபுரத்து சக்கரத்தாழ்வானிடம் சென்று வரும் நினைவுகளை மீட்டிருந்தது. வயல்வெளிகளைக் கடந்து இயற்கையை ரசித்தபடி செல்வது இன்னும் இனிமையானது.//”

உங்கள் பகிர்விற்கு நன்றி


“//அருமை அருமை
பதிவு பகிர்ந்த விதம் அருமை
ஒட்டு போட்டாச்சு//”

நன்றி கார்த்திகேயன் வருகைக்கும் பகிர்விற்கும், நீங்க போட்ட ஒட்டுக்கும் ஹிஹிஹிஹி

தமிழன்-கறுப்பி... said...

நன்றி...

அது ஒரு கனாக் காலம் said...

படங்களும் , பதிவும் அருமை

நாகா said...

தினேஷ், நேரில் சென்று காண வேண்டுமென்ற ஆவலைத் தூண்டி விட்டீர்கள்.

Unknown said...

தமிழன்-கறுப்பி...
//நன்றி...//

வரவிற்கும் நன்றிக்கும் நன்றி

அது ஒரு கனாக் காலம்
/படங்களும் , பதிவும் அருமை//

நன்றி அது ஒரு கனாக் காலம்

கரவைக்குரல் said...

நாகா
//தினேஷ், நேரில் சென்று காண வேண்டுமென்ற ஆவலைத் தூண்டி விட்டீர்கள்.//

ம்ம் வந்துவிடுங்கள் என்னோடு
நான் உங்களுக்கு வழிகாட்டுகிறேன்,
ஈழத்தின் வடபுலத்துக்கு வாருங்கள்
நன்றி நாகா வருகைக்கும் கருத்துக்கும்

மாதேவி said...

பழைய இனிய நினைவுகளைத் தருகிறது.

கோயிலும் சுற்றியுள்ள பெரியமரங்களும் வீசும்காற்றும், நாமப் பொட்டும் ஞாபகத்திற்கு வந்தது.

Rajaji said...

கடலையை நினைதீர்கள்
கடற்கரையை மறந்தீர்கள்

தோசையையும் மறந்தீர்கள் தளிசையையும் மறந்தீர்கள்.