பள்ளிக்காலத்தின் அற்புத நினைவுகள்

பள்ளிப்பயின்றதொரு காலம் தொடர்விளையாட்டு

தோழி சினேகிதியின் ஆரம்பத்துடன் அற்புதமாக வீசிய பந்தை வந்தியத்தேவரால் எனக்கு சுழற்றி எறியப்பட்ட சுழல் பந்து போன்றதான ஒரு அழைப்பு,பள்ளியில் களித்த பசுமையான அற்புதமான விடயங்களையும் நினைவுகளையும் பகிர்ந்துகொள்ளத்தான் அந்த அழைப்பு,எனக்கு எதை எழுதுவது எப்படி எழுதுவது என்ற சின்ன சிக்கல்,பன்னிரண்டு வருட பள்ளி வாழ்க்கையில் எத்தனை சுவாஷ்ய நிகழ்வுகள்,அதே போல அவ்வப்போது பாதித்த விடயங்கள் என்று சொல்லி அடுக்கிக்கொண்டே போகக்கூடிய பல விடயங்களை எப்படி ஒரு சில நிமிடங்களில் அடக்கிவிடலாமென்று தான் அந்த சிக்கல்,

ஆனால் வந்தியத்தேவரின் அழைப்பை இவ்வளவு நாளும் ஏற்றுகொள்ளவில்லையே என்று சின்ன கோவம் போட்டுவிடுவாரோ என்ற பயம் இன்னொரு புறம்,முடிந்தவரை நினைவுகளுக்கு எட்டியவரை பள்ளிக்காலத்தின் அற்புதமான நினைவுகளை பதியலாம் என்று எண்ணி ஆரம்பிக்கிறேன்,இண்டைக்கு இதுக்கு ஒரு முடிவு காணலாம் என்ற எண்ணம்,
அதேவேளை இன்னும் மூன்று பேருக்கு “இந்த பதிவால் பெற்ற இன்பம் துன்பம் எல்லாம் பெறுக இந்த வையகம்” என்றவாறாக அழைப்புவிடலாம் என்றும் எண்ணம்,அழைப்புவிடவேணும் எண்டதுதான் சட்டமும் பாருங்கோ.

என் வரலாற்றில் இருவேறு பாடசாலைகள்,
ஒன்று கரவெட்டி மாணிக்கவாசகர் வித்தியாலயம்,
மற்றது ஹாட்லிக்கலூரி,அடிப்படைக்கல்வியின் ஆரம்பம் மாணிக்க வாசகர்,அதைத்தொடர்ந்து தக்கவாறு செப்பனிட்டு ஒப்பேற்றிவிட்டது ஹாட்லிக்கலூரி,பெற்ற படிப்பினைகள் ஏராளம்,வாங்கிய அடிகள் தாராளம்,இன்றும் இனிக்கும் நினைவுகள் அவை,


ஆரம்பக்கல்விக்காய் கரவெட்டி மாணிக்க வாசகர் வித்தியாலயத்தில் இணைந்தேன்,அதிபர் பாலச்சந்திரன் அவர்கள் அப்போது இருந்தார்கள்,நான் ஆறாம் ஆண்டுக்காய் ஹாட்லியில் இணையும் வரை அவர்தான் அதிபர்,கோபத்திற்கும் அவருக்கும் வெகுதூரம்,ஆனால் ஒரு பிரம்பு கையில் சிலவேளைகளில் இருக்கும்,காலை நேர இறைவணக்கத்தின் பின் மேடையில் தோன்றி ஏதாவது அறிவுரைகள் கூறிடுவார்,அதேபோல மாணவர்களின் திறமைகளையும் அந்த மேடையில் எடுத்துக்கூறி அவர்களுக்கு தெம்புகொடுப்பார்.

ஆச்சி ரீச்சரின் ஆரம்பத்துடன் ஆரம்பக்கல்வி,மிகவும் வயதானவர்,சின்னஞ்சிறு பாலகர்களுக்கு ஏற்ற ஆசிரியர்,இன்றும் சொல்வேன் சந்தர்ப்பம் கிடைத்தால் அவரிடம் சின்னஞ்சிறு பாலகர்கள் ஆரம்பக்கல்வி கற்க வேணுமென்று,அப்படி அன்பான அரவணைப்பால் ”அ ஆ” ஊட்டியவர்,இன்று அவர் எம்மோடு இல்லை என்று அறிந்தேன்,”குடைபிடித்துச்செருப்புமிட்டு புத்தகமும் கொண்டு” என்று ஆரம்பத்தில் பாடிய பாடல் இன்றும் நினைவிருக்கிறது என்றால் அது ஆச்சி ரீச்சரையும் வள்ளிப்பிள்ளை ஆசிரியையும் சாரும்,

தொடர்ந்து கதைகள் பல கூறி சிறு பராயத்திலேயே எங்களை சிரிக்க வைக்கும் படியான கதைகளை கூறி வகுப்பெடுத்தவர் இரத்தினம் ஆசிரியர்,அவரோடு அண்மையில் யாழ்ப்பாணம் சென்றபோது சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது,மிகவும் சந்தோசமான முகமலச்சியோடு சுகம் விசாரித்தார்.என்னிலும் என் இன்னோரன்ன திறமைகள் வளரவேண்டும் என்று மிக ஆவலாக இருந்த ஆசிரியர்களுள் இரத்தினம் ஆசிரியரும் ஒருவர்,அவரிடம் கல்வி கற்கும் காலத்தில் ஆசிரியர் அவர்கள் என்னோடு யாழ்ப்பாணம் வரை வந்து எனக்கு சுப்பிரமணிய பாரதியார் வேசம் போடுவதற்காக தலையில் தலப்பாகை,பாரதிபோல் வேட்டி தாறுபாய்ச்சி(குருக்கள்,மற்றும் கோயில் பூசகர் வேட்டி உடுக்கும் முறை) மேடையேற்றி அழகுபார்த்தவர்,அவரின் ஆசியோ என்னவோ எனக்கும் அங்கு சிறப்பிடம் கொடுக்கப்பட்டது எனக்கு இன்றும் நினைவிருக்கிறது,

அதைத்தொடர்ந்து இடக்கை கணபதிப்பிள்ளை ஆசிரியர்,அங்கு இருவேறு கணபதிப்பிள்ளை ஆசிரியர்கள் இருந்ததால் இவர் இடதுகை வளம் இருந்த ஆசிரியர் ஆகையால் இவரை எல்லோரும் அடையாளப்படுத்திக்கொள்வதற்காக இடக்கை கணபதிப்பிள்ளை ஆசிரியர் என்று சொல்வது வழமை.எப்போதும் பின்வாங்கில் கூட்டமான நான் அவருடைய வகுப்பில் தான் முதன் முதலில் பின் வாங்கிலில் இருக்கச்சென்றேன் என்ற நினைவு,வகுப்பறையில் பகிடி விடுவதும் கூடப்படிக்கும் நண்பர்கள் எல்லோருடனும்(ஆண் பெண் வேறுபாடு இல்லைப்பாருங்கோ) நகைச்சுவைகள் விடத்தொடங்கியது இந்தக்காலத்தில் தான் என்ற நினைவு.
இவர்களைவிட மாகாலிங்கசிவம் ஆசிரியர் இங்கு கற்பித்தாலும் அவரிடம் படிக்கும் வாய்ப்பு மாணிக்கவாசகரில் கிட்டவில்லை,தனியார் கல்வி நிறுவகத்தில் கிடைத்தது,அதுவும் ஹாட்லிக்கல்லூரியில் இருந்தபோதுதான் கிடைத்தது,அழகுதமிழில் அவரது கற்பிக்கும் முரை இருக்கும்,நான் என் இன்னோர் பதிவில் குறிப்பிட்டதுபோல ஆசிரியர் அவர்கள் மாணவர்களில் தனிப்பட்ட ரீதியில் கூட கவனஞ்செலுத்தியவர்,ஆலய மணி ஒலிக்கும்போது அனைவரும் எழுந்து நின்று ஆலயத்தின் இறைவனை நினைக்கவேண்டும் என்று நடைமுறையில் கொண்டுவந்தவர்,ஆசிரியர் அவர்கள் அண்மையில் இவ்வுலகை நீத்தது கேட்டு துயரமடைந்தேன்,

பிரம்படி,நைஸ் அடி,கரும்பலைகையை பார்க்க விட்டு அடித்தல் போன்ற பல்வேறு ரகமான அடிகள் அறிமுகமான காலம் இந்த மாணிக்க வாசகர் வித்தியாலயத்தின் காலம், நைஸ் அடிக்கு பிரபலமானவர் இரத்தினம் ஆசிரியர்,அதாவது பிரம்பை அதிகளவு தூரம் தூக்காமல் மெல்லவாக கொண்டுவந்து ஊண்டி அடிப்பதுதான் அந்த அடி,அதைவிட மகாலிங்க சிவம் ஆசிரியர் மற்றும் இடக்கை கணபதிப்பிள்ளை ஆசிரியர் அவர்கள் கையிலுள்ள மணிக்கூட்டை கழற்றுகின்றார்கள் என்றால் பிரம்படி தொடங்கப்போகிறது என்று அர்த்தம்,

அதைவிட நாங்கள் படிக்கும் காலத்தில் தான் சின்ன வகுப்பிலை படிக்கும் அனைவருக்கும் தையல் கலையும் ஒரு பாடமாக வந்தது,அதைவிட அந்த தையல்கலைக்கும் தமிழ்த்தினப்போட்டி மற்றும் ஆங்கில தினப்போட்டிகள் போலவே ஒரு போட்டி முறையும் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது,எனக்கெண்டால் அந்த சின்ன வயசிலேயே அந்த பாடத்தை
”கட்” அடிச்சு எங்கையாவது ஒளிச்சு ஓடலாமோ என்று எப்பவும் நினைப்பேன்,ஆனால் தங்கம்மா ரீச்சர் எங்கட வீட்டுக்கு கிட்ட எண்டதாலை வீட்டுக்கு கதை வந்திடும் எண்டதாலை சுட்டுவிரலிலை தையலூசி குத்தி குத்தி காயம் வந்தாலும் அந்த பாடத்துக்கு போய் “பெரு நூலோடி,சிறு நூலோடி,சங்கிலி தையல்” எண்டு படிச்சு துணி எல்லாம் கிழிச்சது என்று இப்பவும் நினைத்துச் சிரிப்பேன்.

இதைவிட அந்த சின்னஞ்சிறு வயசிலை விளையாடும் விளையாட்டுக்கள் இனி எப்போதும் விளையாடவே கிடைக்காதா என்ற உணர்வும் கூட,ஒளிச்சுத்தொட்டு,அடிச்சுத்தொட்டு, நாயும் இறைச்சித்துண்டும்,பேணியும் பந்தும்,என்று வகுப்பறக்கு வெளியே விளையாடும் விளையாட்டுகள்,கணிதப்பாடத்துக்கும் ஆசிரியர் விளையாடவிடமாட்டாரோ என்றுதன் எப்போதும் எண்ணம் இருக்கும்,அதேபோல இருக்கும் மேசையிலேயே இருந்தபடி எல்லோரையும் ரசிக்க வைக்கும் விளையாட்டு பேனைச்சண்டை,பொதுவாக ஆசிரியர்களுக்கு மறைவாக அவர்கள் இல்லாத நேரங்களில் கலக்கும் விளையாட்டு அந்த விளையாட்டு,ஒரு குறிப்பிட்ட எல்லையை வைத்த படி அந்த பெட்டிக்குள் இருந்தவாறாக பேனைகளை மோதவிடுவதும் அதை வெளியே அடித்துத்தள்ளாதபடி தடுப்பதுமாக அந்த விளையாட்டு இருக்கும்,அந்த விளையாட்டில் வரும் உத்வேகமும் ஈடுபாடும் எதிலும் வந்ததில்லை,விளையாட்டுகளும் அந்த இனிய காலங்களும் ஆரம்பித்ததும் இங்குதான்.

இதைவிட கல்வியுடன் ஆரம்பகலைகளைக்கூட ஆரம்பத்தில் எனக்கு அள்ளித்தந்தது இங்குதான்,எனது ஏழாவது வயதில் குறிப்பிட்டு சொல்லக்கூடிய நிகழ்வு ஒன்றை மேடையேற வைத்ததும் இந்த வித்தியாலயம் தான்,அந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்திலேதான் எனக்கு கலை தெரியும் என்று ஏற்றுக்கொண்டவனானவன் நான்.இவையெல்லாம் இங்கு கூறலாமோ என்ற பயம் கூட எனக்கு,சுயபுராணத்திற்கு ஏன் இடம் இங்கு கொடுக்கவேண்டும் என்றும் நான் சிந்திக்கிறேன்,ஆனால் பள்ளியில் கிடைத்த அற்புதமான நினைவுகளில் இதுவும் ஒன்று என்பதால் சொல்லிவிட்டேன்,

இப்படியாக பள்ளிக்காலத்தின் நினைவுகளை மீட்டுக்கொண்டே போகலாம்,இன்னும் நான் என் அடுத்த கட்ட பள்ளிக்காலம் ஹாட்லிக்கு செல்லவில்லை,ஆனால் இந்த பள்ளிக்காலத்தின் அற்புத நினைவுகளின் பயணத்தின் பாதையில் ஹாட்லிக்கு வெகுவிரைவில் செல்லும்.
மீண்டும் தொடர்ந்து பயணிக்கும் போது என்னோடு இன்னும் மூவரை அழைத்துக்கொண்டே போகலாம் என்ற எண்ணம்,அப்பொழுதுதான் யார் பிழைவிட்டாலும் தெரியாது பாருங்கோ,உங்களுக்கு நல்ல நினைவு இருக்கும் பள்ளிகூடத்தில காலை இறைவணக்கத்தின் போது இறைவனை போற்றிப்பாடுவது வழமை,அப்போது எல்லோரும் சேர்ந்து பாடினால் பிழை பிடிபடாது தானே,ஆகவே என்னோடு நீங்களும் வாருங்கள்

வாருங்கள் காலப்பெருங்களத்துக்கு சொந்தக்காரர் ஆதித்தன்
வாருங்கள் பூபதிக்கு சொந்தக்காரர் சௌந்தரி
வாருங்கள் அறிந்ததும் அனுபவமும் தரும் டயானா சதாசக்திநாதன்
”யான் பெற்ற மற்றும் பெறும் இன்பங்களையும் எல்லாவற்றையும் நீங்களும் பெற்று உங்கள் இனிய நினைவுகளையும் பொறித்துவிடுங்களேன்

மீண்டும் சந்திப்போம்

11 comments:

RJ Dyena said...

எல்லாஞ்சரி..... எல்லோரும் ஒரு குழுவாத்தான் செயற்படுறீங்க..
சரி சரி நடக்கட்டும் நடக்கட்டும்..
ஆனால் ஒன்று.... நீங்கள் விடுத்த அழைப்புக்கான என்னுடைய தொடர்பதிவுக்காக கொஞ்சம் காத்திருக்க வேண்டி வரும் பரவாயில்லையா ??

இன்னும் வந்தி அண்ணாவின் அழைப்பில் மீதி மூன்று உள்ளது. இதை விட நம்ம சதீஷ் தம்பிக்கு நன்றிப்பதிவிடவேண்டும்.. அத்தோடு இன்னொரு பெண்டிங் பதிவும் உள்ளது. இவற்றை தொடர்ந்து உங்கள் அழைப்பு ஏற்கப்படும். பரவாயில்லையா ??
(பதிவுகளின் தாமதம் - மூன்று வாரங்களாக விடுமுறை இன்மை)

சினேகிதி said...

\\அந்த பாடத்துக்கு போய் “பெரு நூலோடி,சிறு நூலோடி,சங்கிலி தையல்” எண்டு படிச்சு துணி எல்லாம் கிழிச்சது என்று இப்பவும் நினைத்துச் சிரிப்பேன்.
\\

நானும்தான்..எனக்கு அந்த வாழ்க்கைத்திறன் பாடத்தால எப்பவும் average குறையும்.

நீங்கள் ஒராள்தான் விளையாட்டுகள் பற்றியெல்லாம் ஞாபகம் வைச்சு எழுதியிருக்கிறீங்கள்...அதுவும் பள்ளீ வாழ்க்கையின் ஒரு அங்கம்தான்.

BOOPATHY said...

//நிகழ்ச்சியின் ஆரம்பத்திலேதான் எனக்கு கலை தெரியும் என்று ஏற்றுக்கொண்டவனானவன். ...இங்கு கூறலாமோ என்ற பயம்.... சுயபுராணத்திற்கு ஏன் இடம் கொடுக்கவேண்டும் ...நான் சிந்திக்கிறேன்//

பாடசாலைகளில் பொறுமையாக பாடி முடிக்கும் பெரிய புராணத்தை விடவா உங்கள் சுய புராணம் கொடுமையாக இருக்கும்? சும்மா சொல்லுங்கள். கலையின் ஆர்வம் பற்றி, வெளிப்பாடுகள் பற்றி..........பகிர்தலில் சந்தோசம் உண்டல்லவா? குயில் போல வேண்டாம் காகம் போல்.

முகம் தெரியாத உறவுகளுடன் பேசும்போது என்ன பயம்? இது குறை கூறும் பயம் அல்ல நீங்கள் கூறிய பயம். //இங்கு கூறலாமோ என்ற பயம்//

வந்தியத்தேவன் said...

வாழ்க்கதைத் திறனும் பின்னர் சித்திரமும் என்னுடைய சராசரிகளைக் குறைத்த பாடங்கள். ஒருமுறை எனக்கு (எட்டாம் வகுப்பு என நினைக்கின்றேன்) சகல பாடங்களும் 80ற்கு மேல் ஆனால் சித்திரம் மட்டும் 20. இதனால் என் சராசரி அடிபட்ட அதிபர் என் சித்திர ஆசிரியருடன் அவன் கீறினானோ கீறவில்லையோ சும்மா கீறுகின்ற பொடியளுக்கும் 50க்கு மேலை மார்க் போடவேண்டும் இல்லையென்றால் அவங்கடை சராசரி குறைந்துவிடும் எனச் சொல்லி பிறகு அடுத்தமுறையில் இருந்து எனக்கு 50தான். ஓஎல்லில் சித்திரம் எடுத்ததுதான் நான் செய்த பெரும்சாதனை. நாங்கள் படித்த காலத்தில் ஹாட்லியில் சங்கீதம் இல்லை. நாங்கள் ஏஎல் படிக்கும்போது சங்கீத டீச்சர் ஒருவர் வந்திருந்தார். சங்கீதம் பாடமுடியாவிட்டாலும் தியறிப்பார்ட்டில் சும்மா நாலு வினாக்களுக்கு எறும்பை விட்டாவது கீறி மார்க்ஸ் எடுத்திருக்கலாம்.

முதல்பாகம் நல்லாயிருக்கு அடுத்த பாகம் எப்போ? மறந்துபோன அடிச்சுத் தொட்டு பேணிப் பந்து எல்லாம் நினைவாக வைச்சு எழுதியிருக்கின்றீர்கள்.

Anonymous said...

//பிரம்படி,நைஸ் அடி,கரும்பலைகையை பார்க்க விட்டு அடித்தல் போன்ற பல்வேறு ரகமான அடிகள் அறிமுகமான காலம் //


இது பயங்கரம்....

கரவைக்குரல் said...

//எல்லாஞ்சரி..... எல்லோரும் ஒரு குழுவாத்தான் செயற்படுறீங்க..
சரி சரி நடக்கட்டும் நடக்கட்டும்..//

குழுவென்று ஒன்றுமே இல்லை
டயானா
//ஆனால் ஒன்று.... நீங்கள் விடுத்த அழைப்புக்கான என்னுடைய தொடர்பதிவுக்காக கொஞ்சம் காத்திருக்க வேண்டி வரும் பரவாயில்லையா ??//

பரவாயில்லையே,எப்போதும் நேரம் கிடைக்கும்போது பதிவிடுங்கள்

கரவைக்குரல் said...

//நானும்தான்..எனக்கு அந்த வாழ்க்கைத்திறன் பாடத்தால எப்பவும் average குறையும். //

வாழ்க்கைத்திறன் பாடம் பெண்களுக்கு கைவந்த கலையாச்சே,

//நீங்கள் ஒராள்தான் விளையாட்டுகள் பற்றியெல்லாம் ஞாபகம் வைச்சு எழுதியிருக்கிறீங்கள்...அதுவும் பள்ளீ வாழ்க்கையின் ஒரு அங்கம்தான்.//

ம்ம் விளையாட்டும் ஒரு அங்கம் தான்
வருகைக்கு நன்றி சினேகிதி

கரவைக்குரல் said...

//பாடசாலைகளில் பொறுமையாக பாடி முடிக்கும் பெரிய புராணத்தை விடவா உங்கள் சுய புராணம் கொடுமையாக இருக்கும்? சும்மா சொல்லுங்கள். கலையின் ஆர்வம் பற்றி, வெளிப்பாடுகள் பற்றி..........பகிர்தலில் சந்தோசம் உண்டல்லவா? குயில் போல வேண்டாம் காகம் போல். //

இதைச்சொல்ல வலைப்பதிவு என்பது தேவை இல்லை எனபதுதான்,வேறொன்றுமில்லை

///முகம் தெரியாத உறவுகளுடன் பேசும்போது என்ன பயம்? இது குறை கூறும் பயம் அல்ல நீங்கள் கூறிய பயம். //இங்கு கூறலாமோ என்ற பயம்/////

பயமில்லை,இவர் புழுகிறார் எண்டு நீங்க சொல்லகூடாதே
வருகைக்கு நன்றி பூபதி

கரவைக்குரல் said...

1>///அடுத்தமுறையில் இருந்து எனக்கு 50தான். ஓஎல்லில் சித்திரம் எடுத்ததுதான் நான் செய்த பெரும்சாதனை//

2>///நாங்கள் படித்த காலத்தில் ஹாட்லியில் சங்கீதம் இல்லை. நாங்கள் ஏஎல் படிக்கும்போது சங்கீத டீச்சர் ஒருவர் வந்திருந்தார். சங்கீதம் பாடமுடியாவிட்டாலும் தியறிப்பார்ட்டில் சும்மா நாலு வினாக்களுக்கு எறும்பை விட்டாவது கீறி மார்க்ஸ் எடுத்திருக்கலாம்///

இப்படியாக உங்கள் சாதனைப்பட்டியல் நீண்டுகொண்டே போகுது என்ன வந்தியாரே

//முதல்பாகம் நல்லாயிருக்கு அடுத்த பாகம் எப்போ? //

நல்லாயிருக்கா?????????
வரும் விரவில் அடுத்த பாகம்

வருகைக்கு நன்றி வந்தி

கரவைக்குரல் said...

////பிரம்படி,நைஸ் அடி,கரும்பலைகையை பார்க்க விட்டு அடித்தல் போன்ற பல்வேறு ரகமான அடிகள் அறிமுகமான காலம் //


//இது பயங்கரம்....////

இப்போது இனிக்கும் நினைவுகள் தூயா
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தூயா

Gowshigan said...

நல்ல முயற்சி, சுட சுட நயங்களுடன் விடயங்களை பகிர்வது ஒரு சாதிக்க துடிப்பவரிக்கு அழகுதான், என்றாலும் என்ன விடயத்தில் என்று குறிப்பிடவில்லியே