தோசைக்கு ஒரு தினம்!!!!!!!!!!

சாப்பாட்டு விசயம் தான்.
எல்லாத்துக்கும் ஒரு தினம் இருப்பது போல தோசைக்கு ஒரு தினம் இருந்தால் எப்படி இருக்கும்??

என்ன ஒரு வித்தியாசமான கற்பனை !!!!!!!!
தோசைச்சட்டி எல்லாம் அடுப்புக்கு போயிருக்கும்….
இன்று  Pan cake தினம்…
கிறிஸ்தவர்களின் தவக்கால விரத காலத்துக்கு  முன்னதான நாளில் அமையும் தினம் தான் இது. 
அது உயிர்த்த ஞாயிறு ( Easter Sunday) நாளிலிருந்து 47 நாள்கள் முன்னதான நாளில் வருவது. பொதுவாக பெப்பிரவரி 3ம் திகதியிலிருந்து மார்ச் 9ம் திகதிவரைக்குமான காலத்தில் ஏதோவொரு நாள் தினம் Pan Cake Day வரும். ஏனெனில் சந்திரனின் சுழற்சியை மையப்படுத்தி உயிர்த்த ஞாயிறு (( Easter Sunday))வருவதனாலென்று கூறப்படுகிறது.
விதம் விதமான Pan Cakes கள் உண்டு மகிழும் அதே வேளை அதை ஒரு நிகழ்வாக கூட பல அமைப்புகள் ஒழுங்கு செய்கின்றன.
எல்லாத்தினங்களையும் வணிக நிறுவனங்களும் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்துவது போல இந்த தினத்திலும் வகை வகையான  
Pan Cakes களையும் அதற்கான மா வகைகளையும்  விற்பனையில் காட்சிப்படுத்தி காசு சம்பாதிக்கின்றன.


சரி இதே போல ஒரு தினம் தோசைக்கு வந்தால் எப்படி இருக்கும்…

தோசை என்றவுடன் பல நினைவுகள் பலருக்கு வந்து போகும்..

ஊரிலை வல்லிபுரக்கோயிலுக்கு போகும் போதெல்லாம் மேற்கு வாசலில் இருக்கும் தோசைக்கடை. அதில் சாபிடுவதற்கென்றே கோயில் போவர் சிலர்.கோயிலுக்கு போகின்றவர் எல்லாம் அந்த பக்கம் எட்டி பார்த்து சம்பலும் தொசையை சுவைத்தால் தான் ஏதோ ஞாயிற்றுக்கிழமை நிம்மதி போல இருப்பார்கள்.. சம்பலும் முறுகிய தோசையும் சாப்பிட சாப்பிட சாப்பிட்டுக்கொண்டேயிருக்கலாம்.

அதைவிட நெல்லியடி சந்தி தாண்டி கொடிகாம் வீதி முடக்கில் தோசை விற்ற ஒருவருவரிடம் முந்தியடிக்கும் இளைஞர் கூட்டம்.அதில் தோசைக்கு அவர் கொடுக்கும் ஆட்டுஇறைச்சிக்கறிக்கு அல்லது கோழி இறைச்சிக்கறிக்கு  ஒரு சபாஷ் தான். அதன் மணத்தாலேயே சாப்பிட்டு முடித்துவிடலாம். அப்படி ஒரு தனி சுவையும் மணமும்.
ஆனால் இப்பொழுது அது இருக்கிறதா அல்லது இல்லையா என்று தெரியவில்லை. நான் பதினெண் வயதிலிருக்கும் காலத்தில் என் நண்பர்களுடன் சேர்ந்து சென்று ஒருதோசை என்றாலும் சாப்பிட்டு சுவைத்த இனிய நினைவு. நிச்சயம் அவர் அதன் வருமானத்தால் இன்னோரு நிலைக்கு போயிருக்கவேண்டும்.ஏனெனில் அவ்வளவு கூட்டம் அவருக்கு.

எங்க வீட்டுக்கு பக்கத்து வீடு.பாக்கியக்கா என்று ஊரில எல்லாருக்கும் தெரியும்.ஊரிலே உள்ளவர்கள் எல்லாரும் வாரத்திலே ஒரு நாள் காலை வேளை என்றாலும் அவ சுடும் தோசையை சாப்பிடாமல் இருந்திருக்க மாட்டார்கள்.
அவ சுடும் தோசையும் தனி சுவை.தோசை இருக்கும் முறுக்கென்ற பிடிப்பு ஒரு ருசி. தோசையோடு தரும் சம்பல் தோசைக்கு இன்னுமொரு மெடுகூட்டும். காலை வேளையில் அடிக்கடி வாங்கி சாப்பிடும் அந்த தோசையில் நாங்கள் 10 கேட்டால் எங்களுக்கு என்று 12 தருவா பாக்கியக்கா.அது சம்பலை உள்ளே வைத்து மடிச்சு கொஞ்சம் முறுகியது போல ஒரு தோசை. நானும் என் தங்கையும் அடிபட்டு சண்டை பிடித்து சாப்பிடுவம். தோசை சாப்பிடுவதில் பெரிய பிடிப்பு என்பதை விட  எங்கள் பாக்கியக்காவின் தோசைக்கு ஒரு மதிப்பினால் தான் அந்த சண்டை.ஆனால் கடைசியில் அப்பாவின் உதவியோடு தங்கையே வென்றுவிடுவாள் என்பது பெரிய இரகசியம்.ஆனால் பாக்கியக்காவின் தோசைக்கு அவ்வளவு ஒரு மதிப்பு இருந்தது என்பது மட்டும் உண்மை. 
 
எல்லாவற்றையும் விட வீட்டில் அம்மா அம்மாமா மற்றும் என் அன்ரி (அம்மாவின் தங்கை) மற்றும் என் பெரியம்மம்மா ,சின்னம்மம்மா  சுடும் தோசைக்கும் நாங்கள் சப்பாணி கட்டி அடுப்பங்கரை பக்கம் அமர்ந்து விடுவோம்.தாளித்த சம்பலுடன் எண்ணெய் தோசை, முட்டை தோசை,சும்மா தோசை, என்று ஒவ்வொன்றாக ருசித்த பின் தான் அவ்விடத்தை விட்டு எழும்புவது.
தோசை சாப்பிட பின் முழுவதுமாக வாயை திறந்து மொள மொள என்று தண்ணீர் குடித்து பாருங்கள் அப்பொழுது தெரியும் தோசையின் ருசிம் அது சாப்பிட்ட களைப்பும்.

இப்படி தோசை என்பது இனிய நினைவுகளை அடுக்கலாம்.அது உங்களுக்கு பல மாதிரி வந்து ருசித்து ரசித்திரிப்பீர்கள்.
தாயகத்தில் எல்லாவீடுகளிலும் தனியான ருசியாக அமைந்துவிடும் உணவு.ஐரோப்பிய நாடுகளிலும் எல்லாவீடுகளில் நிச்சயம் இருக்கும்.சைவக்கடைகளுக்கு போனால் பல வகைப்படுத்தி தோசையை விற்கின்றார்கள்.

சரி இப்ப நினைச்சு பாருங்க தோசைக்கு ஒரு தினம் வந்தால் எப்படி இருக்கும்1!!!
நகைக்கடைகாரருக்கு அட்சய தினம் போல சாப்பாட்டுக்கடை ஹோட்டல் நடத்துனர்களுக்கு ஒரு தோசை தினமாக மாறும் என்பது ஒரு புறம்.
விற்பனைக்கடையெல்லாம் தோசை மாவை சுற்றிப்பார்க்கும் இடமெல்லாம் வைத்து வாடிக்கையாளர்களை எப்படியாவது வாங்க வைக்க வேண்டும் என்று விற்பனையாளர்கள் முடிவு எடுத்துவிடுவார்கள்.
மக்களும் ஒரு வருடம், இரண்டு வருடம் போக அந்த தினம் ஒரு மிகப்பெரும் கொண்டாட்டம் என்று தாமாகவே தோசை மாவை தேடி வாங்க ஆயத்தமாகிவிடுவார்கள். இது தான் உலகம்.

அதைவிட கற்பனையை இன்னும் நீட்டி வளர்த்தால் தோசை தினம் என்றால் வல்லிபுரக்கோயிலில் தோசைக்கு நீண்ட வரிசை வந்துவிடும் அந்த நாளில். தோசைக்கடைகள், முன்னோடியான பிரபல்யமான உணவகங்கள்  எல்லாம் வல்லிபுரக்கொயிலுக்கு படையெடுக்கும்.
கொட்டிலில் விற்ற பெண்களை எப்படி விரட்டியடிக்கலாம் என்று அமெரிக்கா சீனாக்காரர் போல திட்டம் தீட்டப்பட்டாகிவிடும்.சிலவேளை கொட்டிலில் விற்றவருக்கான மெளசு கூடினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

என்றாலும்  தோசை தினம் என்றால் நாம் உண்டு ருசித்து களித்த உணவை இன்னும் சந்தோஷமாக உண்டு மகிழலாம் என்பதும் உண்மைதான்.

மொத்தத்தில் தோசை என்பது எம்மோடு பின்னிபிணைந்துவிட்ட உணவு. அதன் தனி ருசியை கூடிகளித்து உண்டவர்களுகளுக்கு நிச்சயம் அந்த நாள்கள் மீண்டும் வராதா என்ற ஏக்கம் வந்தேயாகும். அந்த நாள்கள் உண்மையில் அருமையானவை.

பகிர்ந்தது 
 யோகா தினேஷ்


  

உலகம் கொண்டாடும் காதல்!!!

காதலர் தினம்உலகம் கொண்டாடும் காதல்….
இலக்கியமெங்கும் நேசித்ததும் காதல்…
புராதனத்திலிருந்து பூசித்ததும் காதல்….
உயிருள்ளவரை நிலைபெறப்போவதும் காதல் தான்…..
பள்ளிக்கூடத்திலிருந்து படலை வரை காதல் இயங்கும்...
சில வாழ்வையே இயக்கும்…
பள்ளிக்காதல் சில புஷ்வாணமாகும்..
சில வாழ்ந்து நிலைக்கும்…..
பல என்றும் மனதில் நிலைக்கும்….

காதலில் கலக்ககுவது எப்படி??????
கலைத்து கலைத்து காதலித்துப்பார்
அது என்றும் களைக்காத சுகமாகும்……

நேரகாலம் தெரியாது போகும்!!
இரவு பகலாகும்!
சாப்பாட்டு நேரங்கள் மறந்து போகும்….
குளிக்கும் நேரம் மாறும்..
அப்படி குளித்தாலும் அது மணிக்கணக்காகிவிடும்….

பகலில் நடை நித்திரையாக்குவதும் காதல் தான்….
பகல் கனவும் காதல் கனவாகும்…….

இரவில் காதல் கதையை காதோடு கேட்ட ருசிகள்
தொலைபேசியும் அறியும் காதல் கதை…..
ஒரே கதையை காது திரும்ப திரும்ப கேட்டாலும் 
உற்சாகம் மெருகேறும்….......


வீட்டிலிருந்து சிலரை ஓடவைக்கும்….
காதலின் வெற்றிக்கான பாதை அது என்பர்…..

காதலை கொண்டாட சிலருக்கு
பயம் கொஞ்சம் இருக்கு….
யார் யாரையோ காதலிச்சு போடுமோ என் பிள்ளை என்று தான்….
எவனுக்கு எவளென்று எழுதியிருக்கு – அதை
களவாக்காமால் கெளரவமாக்கின் வாழ்க்கையில் வெற்றி
கருதிவிட்டோர் வாழ்வும் என்றும் சுகமே……

காதல் சில கனவாகும் …..
இன்னும் சில கதையாகும்…
சில மணமேடவரை ஏறும்….
வென்ற காதலை உலகம் பேச மறுக்கும்
அதை மனதில் இருக்கவைத்து மறந்துபோகும்…
பிரிந்தயையும் தோற்றதையும் வாய்க்கு வாய் உச்சரிக்கும் உலகம்


காதலிப்பவர்கள்
காதலை ரசிப்பவர்கள்
காதலை ருசிப்பவர்கள்
காதலில் காத்திருக்கும் சுகம் காணுவோர்....
 நினைவில்
காதல் பட்டியல் நீளுகிறது.............
ஏனெனில் உலகம் கொண்டாடுவதும் காதல் தான்………

கொண்டாடும்  காதலுக்கு ஒரு தினம்.......
அன்பின் பெருமையை சொல்ல அது……
பாசத்தின் வலிமையை சொல்ல அது……
காதலை காதலித்து காதலால் வாழ்வமைத்து
காலமெல்லாம் காதல் நிலைக்கட்டும்…

காதல் தொடரும்
காதல் கவியும் தொடரும்
                                                காதலில் உங்களில் ஒருவன்
                                                               யோகா தினேஷ்

The Mystro இன் வாலிபம்

இசையின் இளைய சாரீரம்


 The Mystro இன் வாலிபம் இசை இறுவெட்டு (CD) வெளியாகியிருக்கிறது.
GJ ARTS கலைக்குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்ட  இறுவெட்டு சிடி வெளியீட்டு நிகழ்வு Hays Beck Theatre கலை அரங்கில் சிறப்பாக நடைபெற்றது.
Dayan shan, Cismoda, மற்றும் Banu ஆகியோர் நிகழ்ச்சியை சிறப்புடன் தொகுத்தளிக்க அரங்கில் அரங்கேறிய ஒவ்வொரு நிகழ்வுகளும் சிறப்பு.
ஆரம்பத்தில் நக்‌ஷத்திரா நாட்டியாலய நடனம் தமிழ் கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் அமைந்தது. நிகழ்வில் பங்குபற்றிய நடனப்பெண்கள் மேடையை சரியாகப்பயன்படுத்தி தங்கள் நிகழ்வை வழங்கியிருந்தனர்,அதனைத்தொடர்ந்து ஓவ்வொரு நிகழ்வுகளும் ஒவ்வோர் சிறப்புடனும் வேவ்வேறு வகையுடனும் நிகழ்வை காண வந்த ரசிகர்களை வேறு பக்கம் திருப்பாது மேடை நோக்கியே வைத்திருந்தது.ஒவ்வொரு நிகழ்வின் இடையில் வந்த கரகோஷங்கள் அதற்கு சான்று.
தாண்டவம் நடனப்பெண்கள் தங்கள் நடனத்தோடு கொடுத்த செய்தி பாராட்டவேண்டியதொன்று.வாகனம் செலுத்தும்போது வரும் கவனக்கலைப்பான்களால் வரும் பேராபத்தையும் அதை தவிர்க்கவேண்டும் என்பதும் அவர்கள் கொடுத்த செய்தி.

இளம் நடனக்குழுவினராகிய தாண்டவம்  அதற்கு பெரு முயற்சியெடுத்து வழங்கியிருந்தமை அரங்க நிகழ்ச்சியை பார்க்கும் போது புரிந்தது.

Crawly pakkam,அடையாளம்,phoenix போன்ற பல்வேறு நடனக்குழுக்கள்
அரங்க நிகழ்ச்சியை ஓயவிடாது தந்த நடனங்கள் அரங்கையே ஆடவைத்தது. தனி நடனம் கொடுத்த Krisshna (Trin3gy) பாடல்களுக்கு தன்னையே வளைத்துப்போட்டு ஆட்டியது எங்களுக்கு கிடைத்த மைக்கல் ஜாக்‌ஷன் போல இருந்தது.அதேபோல பல இளம் (Rap) சொல்லிசை பாடகர்கள் மற்றும் மெல்லிசை  பாடகர்கள் மேடையை சோரவிடவில்லை. அத்தனை நடுவிலும் நிகழ்ச்சியை தொத்தளித்த  விட்ட நகைச்சுவைகளும் கலைச்சு கலைச்சு கடித்தவைகளும் அவ்வப்போது சிரிக்கவைத்துக்கொண்டேயிருந்தது.
புல்லாங்குழல் இசைத்த குருஜி (Kuruji) ஆற்றல் அவரை இன்னோர் காலத்தில் சிறப்புக்கலைஞனான புலம்பெயர் நாட்டில் காணாலாம் என்ற படி அவரின் புல்லாங்குழல் இசைத்த தன்மை. அவரோடு இணைந்து பாடியவர்களும் வயலில் இசைத்தவர்களும்,கீபோர்ட் இசைத்த கலைஞர்கள், கெளதம் (Gowtham) அனைவரும்பாராட்டுக்குரியவர்களே.
எல்லாவற்றையும் தாண்டி The Mystro இன் இறுவெட்டை வெளியீடு செய்தபோது வந்த உணர்வு, உறவு கண்ணீர் மறக்கமுடியாதவையாக ஒட்டிக்கொண்டன. The Mystro இன் அம்மா அப்பா எல்லோரும் உணர்ச்சிமேலீட்டால் பேசிய ஆனந்த கண்ணீருடனான வார்த்தைகள் கலைஞனை பெற்ற பெற்றோரின் மகிழ்ச்சியை உணர்த்தியது.
அதில் The Mystro இன் தழுதழுத்த குரல், ஆனந்த கண்ணீர் வார்த்தைகள் எல்லாம் கலைஞனின் சவால் மிகுந்த பயணத்தையும் அதில் கண்ட உற்சாக இன்பத்தையும் பதிவு செய்தது.


மேடை அமைப்பும் மேடை ஒளி ஒலி அமைப்பும் நிகழ்ச்சிக்கு இன்னும் மெருகூட்டியது. தென்னிந்திய திரைப்பட பின்னணி இசையமைப்பாளர் யுவனோடு இணைந்து பணியாற்றிய கெளசிகன் சிவலிங்கம் நிகழ்ச்சிக்கு வந்து அதில் தனது முக்கிய பங்கை கொடுத்திருந்தார்.
மொத்தத்தில் The Mystro இன் இசை வெளியீடு நிகழ்வானது மேடையையும் 
அரங்கையும் சோரவிடாது அமைந்திருந்தமையை பாராட்டியே ஆகவேண்டும். 
இருப்பினும் நிகழ்ச்சிக்கு இளைய வட்டமே அதிகம் வந்திருந்தமை கவலை தரக்கூடிய விடயமே. பங்குபற்றிய கலைஞர்களின் உறவுகளைத்தவிர முதலாந்தலைமுறையினரின் வருகை மிகக்குறைவாக இருக்கின்றமை இளங்கலைஞர்களின் வளர்ச்சிக்கு ஆரோகியமான பாதையாக முடியாது என்பது எம் எண்ணம்.இது இளைய தலைமுறையினருக்கும் முதலாந்தலைமுறையினருக்குமான இடைவெளி சமூகத்தில் அதிரிக்கும் போக்கை காட்டுகிறது.இது நல்லதல்ல.
இதை இளந்தலைமுறையினரும் உணர்ந்து நிகழ்வு ஏற்பாடு செய்யவேண்டும் என்ற அதேவேளை முதலாந்தலைமுறையினரும் வெறுமனே தென்னிந்திய கலைஞர்களின் நிகழ்ச்சிகளுக்கு முண்டியடிக்காமல் இப்படியான நிகழ்வுகளிலும் பங்குபற்ற தயாராகவேண்டும் என்பதை பதிவு செய்ய வேண்டும்.
அத்தோடு நிகழ்வின் இறுதியில் தாயக மக்களை நோக்கிய  சிந்தனையில் கலைக்குழு வழங்கிய நடனம் பாராட்டத்தக்கது.என்றாலும் அந்த நிகழ்ச்சினின் நிறைவில் சொல்லப்பட்ட செய்தியை திரையில் எழுதிக்காட்டிய போது வந்த எழுத்துபிழைகளை நிச்சயம் கவனத்தில் எடுத்திருக்கவேண்டும் என்பது தாழ்மையான கருத்து.இதிலும் முதலாந்தலைமுறையினர் , அல்லது அறிந்தவர்கள் இளந்தலைமுறையினரை வழிப்படுத்தினால் அப்படியான சிறு தவறுகள் கூட இடம்பெறமாட்டாது என்பதை பதிவு செய்யலாம்.

இருப்பினும் தாயகம் நோக்கிய சிந்தனையிலும் நிகழ்ச்சியில் ஏதோவொரு நிகழ்வை இணைக்க வேண்டுமென்ற சிந்தனைக்கு நிச்சயம் பாராட்டியே வேண்டும்.

 
மொத்ததில் The Mystro இன் வாலிபம் நிகழ்வும் இறுவெட்டும் புலம்பெயர் கலைஞனின் ஓர் அடையாளமாக பதிவாகியிருக்கிறது. The Mystro என்ற கலைஞனின் புதிய முதல் படைப்பை அனைவரும் வாங்கி அந்த கலைஞனை தொடர்ச்சினான கலைப்படைப்புகளுக்கு உந்து சக்தியாக புலம்பெயர் உலக மக்கள் ஆதரவை கொடுக்க வேண்டும்.அது கலைஞனையும் வாழவைக்கும், அவன் படைப்புகளும் வாழ்ந்துகொள்ளும்.இனியும் அவன் படைப்புகள் வரும்.

The Mystro இன் வாலிபத்திற்கு எம் அன்பான வாழ்த்துக்கள்..வாழும்போதே வாழ்த்துவோம்

                                                                                              நிகழ்வு நோக்கு- யோகா தினேஷ்


உயிர்வரை இனித்தாய் உள்ளத்தின் ஆழம்வரை ஆட்சி செய்து இனிக்கும்.

புலம்பெயர் சினிமாவில் உயிர்வரை இனித்தாய்  

கடந்த ஜனவரி மாதம் 25ம் திகதி லண்டனில் (Harrow Safari) ஹரோ சஃபாரி திரையரங்கில் திரையிடப்பட்ட உயிர்வரை இனித்தாய் திரைப்படம்,
பல நூற்றுக்கணக்கான கலைஞர்கள், ரசிகர்கள் வருகையோடு நானும் 
ஒருவனாக அதை ரசித்துப்பார்க்கக் கிடைத்தது.
ஈழத்திலிருந்து திரைப்படங்கள் வெளிவந்து தடைப்பட்டு போய் மீண்டும் 
புதுப்பயணம் எடுக்கும் ஈழத்தின் கலைஞர்கள், தாயகத்திலும் புலத்திலும் சில 
பல முழு நீள திரைப்படங்களை தயாரித்து இயக்கி வெளிவரும் காலம் இது.
                                      
புலம்பெயர் சினிமாவில் கையெடுத்து எண்ணகூடிய வகையில் வெளியாகும் 
முழுநீள திரைப்படங்கள் வரிசையில்  முற்றிலும் எமது கலைஞர்களை 
உள்ளடக்கிய கலைக்குழுமமாய் அமைந்த திரைப்படம் உயிர் வரை 
இனித்தாய்.
முக்கியமான சில ஐரோப்பிய நாடுகளிலெல்லாம் திரையிடப்பட்டு நிறைவில் 
லண்டனில் திரையிடப்பட்ட உயிர்வரை இனித்தாய், அந்தந்த நாடுகளில் 
பலரது விமர்சனக்கள் உள்வாங்கப்பட்டு திருத்தியமைக்கப்பட்ட 
காட்சிகளோடு லண்டன் திரைக்கு வந்தது .அது சிறப்பும் கூட.

எல்லாம் இணைந்து அந்த திரைப்படத்தை பார்க்கவேண்டும் என்ற ஆவலை 
கலைஞர்களுக்கும் ரசிகர்களுக்கும் கொஞ்சம் அதிகமாகவே 
ஏற்படுத்திவிட்டது எனலாம்.
ஏற்படுத்தப்பட்ட ஆவல் நிச்சயம் வீண்போகவில்லை என்பதை ஆரம்பத்திலேயே குறிப்பிட வேண்டும்.

                                
நடைமுறையில் சமூகத்தை நோக்கினால் ஈழத்தவன் சினிமாவை சிறப்பாக மேலான பார்வையில் நோக்காத எம்மவர்களின் தாக்கம் இந்த திரையிடலிலும் தாக்கம் செலுத்தியிருக்கிறது என்று பொதுவில் சொல்லிவிடலாம், என்றாலும் இந்த திரைப்படத்தை பார்க்காதவர்கள் புலம்பெயர் கலைஞர்களின் அற்புதமான ஒரு மகிழ்ச்சிப்படுத்தும் சினிமா படத்தை பார்க்க தவறிவிட்டார்கள் என்று தான் அடித்துக்கூறவேண்டும்.
திரைப்படம் என்று நோக்கும்போது நேர்மறை விமர்சனங்கள் சாதரணமானவையே.அதில் உயிர் வரை இனித்தாய் திரைப்படமும் தப்பவில்லை.

                                 
புலம்பெயர் முழு நீளதிரைப்படங்கள்  காலத்தில் ஓய்ந்திருந்து மீண்டும் மீளுயிர் எடுக்கும் கால ஓட்டத்தில் வெளி வந்த சினிமா திரைப்படம் உயிர்வரை இனித்தாய்.ஆகையால் திரையின் காட்சிப்பிழைகளை ஆரோக்கியமான முறையில் நோக்கலாம் என்பது எண்ணம்.
ஆரம்பத்தில் திரைப்படத்தின் கலைஞர்களின் பெயர்களை திரையில் காட்சிப்படுத்திய விதத்திற்கு சபாஷ். அது திரைப்படத்தில் புலம் பெயர் நாடுகளின் அன்றாட வாழ்வில் மக்கள் பல இடங்களிலும் அவதானிக்கும் தளங்கள்  மற்றும் குறியீடுகளை மையப்படுத்தி அவை அமைக்கப்பட்டது சிறப்பு.தொடர்ச்சியாக திரையில் காட்சியும் கதைநகர்வும் பார்வையாளர்களை சலிப்படையதவாறு ஒளிப்பதிவும் இயக்கமும் சிறப்பாக நகர்த்தப்படிருக்கிறது. அதில் கவனமும் செலுத்தப்படிருக்கிறது என்பதை அவதானிக்கமுடிந்தது.
எனினும்  ஒரு சில காட்சிகள்  நீண்டு சென்று விட்டதாய் ஒரு உணர்வு. குடிபோதைக்காட்சிகளும் கலியாணவீட்டில் சாரியை கட்டுவதை கல்யாணம் கட்டுவது என்று நினைத்து “வாழைப்பழம்“ கதாநாயகனை அழைத்து படியேறி ஓடிவரும் காட்சி, பூங்காவில் அமைக்கப்பட்ட காட்சி போன்றவை சில உதாரணங்கள். இப்படியான சில  நீட்சிகள் நிறைவில் இவைதான் நடக்கப்போகின்றன என்பதை பார்வையாளன் சிந்தித்த பின் சொல்லி முடிக்கப்பட்ட காட்சிகள் போல் அமைந்துவிட்டதனாலோ என்னவோ அது நீட்சி போல தெரிவதற்கான காரணமாகலாம்.அது திரைக்கதையிலும் கேள்வியை முன்வைக்க காரணமாகிறது.அதில் திரைக்கதையை நகர்த்தும் தாடிவைத்த வசந்தினால் கதை நகர்வு ஓட்டத்தை சரியாக நகர்த்துவதுவதில் வெற்றிகண்டிருக்கிறார் இயக்குனர்.

                                            
இருப்பினும் இவை திரைப்படத்தை பார்ப்பதை சலிப்படைய செய்யவில்லை.
ஏனெனில் நடிகர்களின் நடிப்பினாலும் காட்சி மாற்றங்களின் வேகத்திலும்  அவை பல மறைக்கப்பட்டிருக்கிறது.கதாநாயகன் நடிப்பில் பல இடங்களில் ஒரே வகை மிகை நடிப்பு தென்பட்டாலும்  கதா நாயகனை இயக்குனர் இப்படித்தான் நடிப்பில் நகர்த்த வேண்டும் என்ற எண்ணம் கொண்டு நகர்த்தியிருப்பாரோ என்றும் எண்ணத்தோன்றூகிறது.ஆனால் முழு நீளத்திரைப்படத்துக்கான கதாநாயகனுக்குரிய பல குணாம்சங்களை வசந்த் கொண்டிருக்கிறார் என்பதை இந்த திரைப்படமூலமாக உணர முடிகிறது.
மேலும் இந்த திரைப்படத்தில் அனைத்துப்பாத்திரங்களும் அவரவருக்கு ஏற்றபடி கையாளப்பட்டிருக்கின்றமையை உணரமுடிகிறது.
கதாநயகியின் நடிப்பும் இங்கே சபாஷ் சொல்லவேண்டும்.புலம்பெயர் மற்றும் ஈழத்து சினிமாவுக்கான மிகப்பெரிய குறை சரியான கதாநாயகிகள் வாய்ப்பதுமில்லை, நின்று நிலைப்பதுமில்லை.உயிர்வரை இனித்தாய் திரைப்படம் பார்த்ததுக்கு பின்னதாக சிறப்பான கதாநாயகி கிடைத்துவிட்டார் என்ற ஒரு சந்தோஷ பெரும்மூச்சை தருகிறது.அந்த பெருமூச்சு நின்று நிலைக்கவேண்டும் என்பதும் கலைஞர்கள் ரசிகர்களின் ஆசை. நர்வினி டேரி பொருத்தமான ஒரு கதாநாயகி திரையில் நின்று நிலைக்க வேண்டும் என்பதையும் இங்கே பதிவுசெய்யவேண்டும்.
                                 
மேலும் இந்த திரைப்படத்தில் நகைச்சுவைக்காட்சிகள் வெகுசிறப்பு. புலபெயர் சினிமாவில் முழு நீள மகிழ்ச்சிப்படுத்தும் சினிமாவில் நகைச்சுவைக்காட்சிகள் சரிவர அமையமாட்டாது என்பதை முறியடித்திருக்கிறது உயிர்வரை இனித்தாய். வாழைப்பழம் நகைச்சுவை நடிப்பும் தெரிவுசெய்யபட்ட குரலும் அற்புதம்.திரைப்படத்தின் விறுவிறுப்பான ரசனை ஓட்டத்திற்கு வாழைப்பழமும் காரணம்.
எனினும் அங்கே தென்னிந்திந்திய திரைப்பட சாயல் தொட்டிருப்பது சின்னக்குறை. ஒருவருக்கு அடிக்க போய் இன்னொருவருக்கு அல்லது பொலீசுக்கு அடிப்பது,கதாநாயகனுக்காய் அவர் மாட்டுப்படுவது, அவரே அடி வாங்குவது எல்லாம் சின்ன சின்ன உதாரணங்கள்.இருப்பினும் சாரியை கட்ட கல்யாணம்  தாலியை கட்ட சொன்ன நகைச்சுவை எம் வழக்கின் நகைச்சுவையை கையாண்டது சிறப்பு.
திரு.குணபாலன்,திரு.தயாநிதி,போன்ற புலம்பெயர் அடையாள நடிகர்களுக்கான காட்சிகளை இன்னும் தந்திருந்தால் ரசித்திருக்கலாம் போலவும் இருந்தது.
திரைப்படத்தில் கையாளப்பட்ட உரையாடல் மொழி புலம்பெயர் மொழி வழக்கை கையாண்டிருந்தால் இன்னும் சபாஷ் போடமுடியும். ஏனெனில் வர்த்த சினிமா அல்லது மகிழ்ச்சிப்படுத்தும் சினிமா என்பது உரையாடல் மொழிவழக்கை மாற்றுதலினூடாக அடைந்துவிட முடியும் என்ற செய்தியை புலம்பெயர் சினிமா வளரும் காலத்திலேயே பதிவு செய்துவிடல் ஆரோக்கியமான போக்காக கருதமுடியாது.எனினும் ரசிகர்களின் ரசிப்புத்தன்மை அப்படித்தான் இருக்கிறது என்றால் அதில் திரைப்பட கலைஞர்களில் மட்டும் குற்றஞ்சாட்டிவிட்டும் இருக்க முடியாது.திரைப்படம் என்பது சமூகத்தின் கண்ணாடியாக இருக்க வேண்டும் என்று நோக்குமிடத்து இந்த விடயத்தில் படைப்பாளிகள், கலைஞர்கள்,ரசிகரகள் அனைவரும் முழுக்கவனம் செலுத்த வேண்டும் என்பதையும் பதிவு செய்யவேண்டும்.
தொழிநுட்ப முன்னேற்றமான காலகட்டத்தில் புது வேகப்பயணம்  எடுக்கும் புலம்பெயர் சினிமாவில் உயிர்வரை இனித்தாய் திரைப்படம் அதை சரியாக கையாள்வதில் கவனம் எடுத்திருக்கிறது.அதுவும் ஒளி/ஒலி பதிவு,பாடல் இசை,பின்னணி இசை என்பன அதை பறைசாற்றுகிறது.அதில் கூடியகவனமும் கூடுதல் நேரமும் செல்வழிக்கப்பட்டிருக்கிறது என்பதையும் அவதானிக்கமுடிந்தது.
கதையோட்டத்தோடு பாடல் காட்சிகள் வேறுபட்டு நிற்கவில்லை.அதுவும் காட்சி மாற்றங்களில் ஒளிப்பதிவின் முக்கியத்துவம் அதன் தொழிநுட்பத்தை சரியாக கையாண்டிருக்கின்றமை புரிகிறது.
உயிர்வரை இனித்தாய் திரைப்படத்தின் இன்னுமொரு எடுத்துக்காட்டான சிறப்பான விடயம் காட்சிக்காக தெரிவு செய்யப்பட்ட இடங்கள்.
புலம்பெயர்ந்த நாடுகளில் இப்படியான இடங்களையெல்லாம் அழகு பெற திரைக்காட்சிகளுக்காக பயன்படுத்தலாம் என்பதை பறை சாற்றுகிறது உயிர்வரை இனித்தாய்.தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் அங்கிருந்து இங்கு வந்து வழமையான பிரபல்யமான இடங்களை மட்டுமே தெரிவுசெய்து திரைக்காட்சிகளை அமைத்துவிட்டு போக உயிர்வரை இனித்தாய் அதனையும் தாண்டி பல்வேறு விதமான காட்சிகளை தெரிவு செய்திருப்பது பல வருங்கால தயாரிப்பாளர்களுக்கு எடுத்துக்காட்டு.
                                   

மொத்தத்தில் புலம்பெயர் தமிழ் சினிமாவில் மீளெடுக்கும் புதுப்பயணத்தில் உயிர்வரை இனித்தாய் திரைப்படம் வரலாற்றில் இடம்பிடிக்கிறது.பல நாடுகளிலும் திரைப்படம் வெகுசிறப்பாக ஓடியிருப்பதை அவதானிக்க முடிகிறது.அதனையும் தாண்டி அவை தொடர்ச்சியாக பல நாள்கள் ஓடவேண்டும் என்பது கலைஞர்களை தாண்டி மக்களின் வரவிலும் புலம்பெயர் தமிழ் சினிமா இடம்பிடிக்க வேஎண்டும் என்பதிலும் ஈழக்கலையை ரசிக்கின்றவர்கள் என்ற வகையில் இருக்கும் எதிர்பார்ப்பு. ரசிகர்களையும் மக்களை திருப்தி செய்யக்கூடிய வகையில் உயிர்வரை இனித்தாய் திரைப்படம் இடம்கொள்கிறது என்பதையும் யாரும் மறுக்க முடியாது.

உயிர்வரை இனித்தாய் உள்ளத்தின் ஆழம்வரை ஆட்சி செய்து  இனிக்கும்.


                                                                                     திரைப்பட நோக்கு - யோகா தினேஷ்