அசையா விருட்சமே அசைந்தது ஏனோ?






துள்ளிவரும் தென்றல் காற்றை
தள்ளிவிட்டு எம்மீது சுகம் கண்டாய்- இன்று
வீசிவந்த அதேகாற்றில் சரிந்து விட்டாய்
பலமிழந்து சரிந்தாயா? வாழ்க்கை வெறுத்துச்சரிந்தாயா?
வாழ்க்கை வெறுத்துச்சரிய நியாயம் உன்பக்கமில்லை.

கொஞ்சிவிளையாடும் மைனாக்களை கண்டவள் நீ
கீச்சலிடும் கிளிகளின் அழகைக் கண்டுரசித்தவள் நீ
பாடும் குயிலின் பாடல் எல்லாம் உனக்கு அத்துப்படி
இத்தனை சுகமிருக்க வேறென்ன ?

நீ வளர்ந்த பாதை அது தனி
தட்சணாமூர்த்தியின் தவிலடியை ரசிக்காதவளா?
சின்னமௌனாலாவின் இசை ரம்மியத்தில் தவழ்ந்தவள்
பத்மநாதன் கானமூர்த்தி ஜெகநாதன் என்று அடுக்கிகொண்டே
உன்னிழலில் இசைகண்ட மகிழ்வெமக்கு
உன்னிலைகளில் தென்றல் பட்டால் அது நாதஸ்வர ஒலிபோலவே
வீசும்காற்றை தவிலடியாக மாற்ற உனக்கு புரியவில்லையா?

கிட்டிப்புள்ளு அடித்தபோது நீ எமக்கு நிழல் தந்தாய்
கிளித்தட்டு மறித்தபோது பழம்பெற உந்தன் அடியைத்தான் தொடவேண்டும்
துடுப்பாட்டத்தில் நீயும் ஒரு களத்தடுப்பாளன்
இத்தனை சுகம் இருக்க வேறென்ன உனக்கெதற்கு?

அரசியலில் நீ சாணக்கியன்
உதயனை எடுத்துவந்து
உன்னருகில் வாசிக்க கடைக்கண்ணால் பார்ப்பவள் நீ
வயதான பெரியோரும் கதைத்துவிடுவது
உனக்கு கேட்காமல் விட்டிருக்குமா?
நிகழ்வைக்குழப்ப விசிலடிக்க-அவர்களை
நம்மூர்க்காளையர் அடித்துக்கலைத்ததும் உன்னடியில்தான்
அதையெல்லாம் கண்டு ரசித்த உனக்கு
வேறென்ன உனக்கெதற்கு?

இடம்பெயர்ந்து வந்தோரை அரவணைத்து
உறங்குமடம்போல நிழல் கொடுத்து
இன்பம் கண்டவள் நீ
மாலை வேளையில் தண்ணீர்த்தொட்டியில்
தாகம் தீர்க்கும் பசுக்களும் கன்றுகளும்
உன்னிழலில் சுகம்காண
இன்புற்றவள் நீ
தண்ணீர்க் குடத்தோடு செல்லும் அழகியரை
ரசித்தவள் நீ
இத்தனை சுகம் இருக்க வேறென்ன உனக்கெதற்கு.

அண்ணை ரைட் நடிகர் பாலா தவழ்ந்த இடம் உன்நிழல்
உடுப்பிட்டி வானம்பாடி கரவெட்டியில் தவழ்ந்தும் உன்நிழல் தான்
பண்டிதர் வேலாயுதம் படித்ததும் உன்நிழல் தான்
எல்லோருக்கும் நீ ஒரு பொன்னில்லம்
இத்தனை புகழ் உனக்கு வேறென்ன உனக்கெதற்கு

இளையோராய் எல்லோரும் இருந்தவேளை
விட்ட குறும்பெல்லாம் உனக்குத்தான் வெளிச்சம்
சேர்ந்துசென்று இளநீர் குலையோடு கூடிவந்து
உன்னடியில் குடித்தோரை நீ மறந்திருக்க மாட்டாய்
இதையும் நீ ரசித்து சிரித்ததெல்லாம் மறந்துதான் சரிந்தாயா?


இன்னும் எத்தனை நினைவுகள்
அத்தனையும் மறந்து நீ சரிந்தாயா?
இத்தனை நினைவிருந்தால் அதுவே உனக்கு பலம்
இவ்வளவு பலம் இருக்க ஏன் அசைந்தாய் விருட்சமே

எம் வாசலில் வரவேற்கும் நீ இன்று இல்லை
உன்னினைவில் ஒரு வாரிசைக்கொடுத்துவிடு
மறந்துவிடாதே
ஆனால் அசையா விருட்ச்சமே அசைந்தது ஏனோ?
என்றும் இவ்வினாவுடன்....................

பொய்யான உலகத்தில் பொய்யான வாழ்க்கை

பொய் சொல்ல போறேன்

வாழ்க்கையில் எத்தனையோ விடயங்கள் நாங்கள் கடைப்பிடிக்க வேண்டும் எங்கள் முன்னோர்கள் எங்களுக்கு வழிகாட்டி
சென்றிருக்கின்றார்கள்.அத்தனை விடயங்களையும் கடைப்பிடிக்கலாமா இல்லையா என்பது வேறு விடயம்
ஆனால் அத்தனை அம்சங்களையும் கடைப்பிடித்தால் வாழ்க்கையில் வெற்றி என்பது நிச்சயம்.எந்த ஒரு அம்சத்தையும் அவர்கள் தங்கள் அனுபவங்கள் வாயிலாக கூறியிருப்பதுதான் அவற்றின் சிறப்பு ஆகும்.
"பொய் சொல்ல கூடாது பாப்பா" என்று எட்டயபுரத்துக்கவிஞன் பாரதி பாட அதை சிறு பராயம் முதலே அக்கு வேறு ஆணிவேறாக பெற்றோர் ஆசிரியர் என்று எல்லோரும் அடிப்படையாக ஊட்டி வளர்ப்பர்.
பொய் சொல்லி விட்டால் அதற்கு சிறு தண்டனையும் வேறு.
ஆனால் கொஞ்சம் வித்தியாசமாக நல்ல பெரும் உதவிக்காக்க அல்லது பெரு நன்மைக்காக ஒரு சிறிய பொய் சொன்னால் பரவாயில்லை என்று உலகத்தமிழ் மறையை எமக்குத்தந்த பொய்யாமொழிப்புலவன் வள்ளுவன் உரைத்திருக்கின்றான்.இதன் மூலம் மற்றவர் பெருநன்மை அடைந்துகொள்ளமுடியும் என்பது வள்ளுவனின் நம்பிக்கை.தன் ஆணித்தரமான கருத்தை வலுவூட்ட அதை அவர் ஒரு பெரிய தர்மம் என்று குறிப்பிட்டிருக்கின்றார்.
மொத்தத்தில் பொய் சொல்லக்கூடாது என்பதுதான் வரையறையாக இருக்கிறது இந்த உலகத்தில்.
ஆனால் ஒருத்தியை காதலிக்கவும் திருமண பந்தத்தில் இணைத்து வைக்கவும் ஆயிரம் பொய் கூட சொல்லிவிடலாம் என்கிறது இந்த உலகம்.
பொய்யை சொல்லி பின்னர் வாழ்கையின் போது குடும்பங்கள் அந்த பொய்யை அறிந்து சின்னபின்னமாகி போவதும் தவிர்க்கமுடியாததொன்றாகி இருக்கிறது .
அதற்காக "நீ ரொம்ப அழகி என்றும்,உன்னை விட இந்த உலகத்தில் யாரும் இல்லை என்றும் பொய்யைத்தான் சொல்ல போறேன் என்று கூறிவிட்டு பொய்யை சொல்லலாமா?
உன்னைப்பற்றி சொல்லவதெல்லாம் பொய் என்று சொல்லிவிட்டு காதலிக்கு அந்த ஆணே பொய்யை சொல்கின்றான் என்றால்,அதை அந்த காதலையும் நம்புகின்றாள் என்றால் இந்த பொய்யான உலகத்தில் இதுதான் பொய்யான வாழ்க்கையோ?என்ற கேள்வி வரத்தான் செய்கிறது

பொய் சொல்ல போறேன் பொய் சொல்ல போறேன் நீ ரொம்ப அழகி யெடி