புலம்பெயர்ந்தும் தாயகம் சார்ந்த அபிவிருத்தி மற்றும் சமூக நலன் சார்ந்த நடவடிக்கைகளில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டிருக்கும் புலம்பெயர்ந்த எம் மக்கள் வரிசையில் கரவையூர் மக்களின் கரவெட்டி அபிவிருத்தி ஒன்றியம் சார்பான சிறப்பாக ஒழுங்குசெய்யப்பட்ட இரவு இசை நடன நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை 29-05-2011 அன்று நடைபெற்றது,ஏலவே கரவெட்டி ஒன்றியம் சார்பான நான் அறிந்த சில விடயங்களை கடந்த பதிவில் குறிப்பிட்டிருந்தேன்(அதை இங்கே அழுத்திப்பார்க்கவும்) அன்று நிகழ்வில் கலந்துகொண்ட பின் இன்னும் பல வியங்களை அறியக்கூடியதாக இருந்தது.என்றாலும் நிகழ்வின் விடயங்களை இங்கு பதிவாக்கலாம் என்ற எண்ணம்
கரவெட்டி ஒன்றியத்தின் இரவு இசை நடன நிகழ்ச்சி சரியாக மாலை 6 மணிக்கு ஆரம்பமாகியது,சாதரணமாக கலை நிகழ்வுகள்போலல்லாமல் சற்று வித்தியாசமாக நிகழ்ச்சி ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது,ஆரம்பத்தில் நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் யாவரும் தங்களோடு தாங்கள் உரையாடியும் கரவையின் தங்கள் பொழுதுகளையும் மற்றும் நீண்ட நாள்களுக்குப்பிறகு சொந்தங்களை கண்ட மகிழ்ச்சியில் அவர்களோடு உரிமையோடும் உற்சாகமாகவும் உரையாடியதை அவதானிக்க முடிந்தது,தொடர்ந்து மாலை 7 மணிக்கு நிகழ்வின் ஆரம்பம் எம்மை விட்டு பிரிந்த சொந்தங்கள் யாவரையும் நினைந்து ஒரு நிமிட மௌனத்தோடு தொடங்கியது,முற்றிலும் கரவெட்டியின் அபிவிருத்திக்கான நோக்கத்தோடு நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டமையை நிகழ்ச்சி நிரலிலும் காணக்கூடியதாக இருந்தது,
இசை நிகழ்ச்சியை லண்டன் புகழ் இசைக்கலைஞர்கள் மற்றும் ஆனந்த் இணைந்து வழங்கிய யங்ஸ்ரார் இசைக்குழு வழங்கிக்கொண்டேயிருந்தது.முதற்பாடல் கரவெட்டி அபிவிருத்தி ஒன்றியத்தின் தாய்க்கழகத்தலைவர் திரு.பொன்னம்பலம் அவர்களின் மகள் துஷாந்தி பாடியிருந்தமை நிகழ்வை மெருகூட்டியது.சபையின் கரகோசம் அதை ஆமோதித்தது என்றால் மிகையாகாது.அதுமட்டுமல்லாமல் இந்த இசை நிகழ்ச்சியில் ஆனந்த்,ஜேஜே,டில்ஷா,ரமணி என்று லண்டன் புகழ் பாடகர்கள் சிலரும் பாடியிருந்தமை நிகழ்வை சிறப்பாக்கியது.
தொடர்ந்து கரவெட்டி அபிவிருத்தி ஒன்றியத்தின் இங்கிலாந்துக்கிளையின் தலைவர் திரு கிருஷ்ணா அவர்களின் உரை இடம்பெற்றது, நிகழ்வின் ஏற்பாடுகள்,எதிர்பார்ப்புகள்,எதிகாலத்தில் எதிர்பார்க்கும் செயற்பாடுகள் என்று இன்னோரன்னவிடயங்களை உள்ளடக்கி தன் உரையை வழங்கியிருந்தார்.
தொடர்ந்து கரவை ஒன்றியத்தின் கடந்தகால செயற்பாடுகள் பற்றிய வீடியோ விவரணக்காட்சி காண்பிக்கப்பட்டது.பொதுவாக கரவெட்டி பிரதேச வைத்தியசாலைக்கட்டடங்கள் மற்றும் அங்கு ஏற்படுத்தப்பட்ட வசதிகள் அதில் அமைந்திருந்தது.அதுமட்டுமல்லாம கரவெட்டி ஒன்றியத்தின் தாய்க்கழக தலைவர் திரு பொன்னம்பலம் அவர்களின் உரை மற்றும் வைத்தியசாலை வைத்தியர் அவர்களின் உரை ஆகியன இடம்பெற்றன,அங்கு தனியாகவோ குழுவாகவோ இணைந்து யாராவது கரவை மக்களுக்கு தேவையான பொதுவான செயற்திட்டங்களுக்கு கரவெட்டி ஒன்றியம் பூரண ஆதரவு வழங்கும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது.
நிகழ்வில் இன்னுமோர் சிறப்பு நிகழ்ச்சியாக இறுதிப்பரிசாக வைர மோதிரம் காத்திருக்க பணப்பந்தயம் நடைபெற்றது,பந்தயமாக பெறப்படும் பணம் முழுவதும் கரவெட்டியின் அபிவிருத்துக்கான நிதி சேகரிப்பாக அமைந்தது.அதில் ஆர்வத்தோடும் போட்டியோடும் அவ்வப்போது கலகலப்பான சிரிப்போடும் பங்குபற்றி நிகழ்வை சிறப்பித்தார்கள் நிகழ்வின் விருந்தினர்கள். நிகழ்வின் இறுதியில் ஒரு இளைஞனுக்கு வைர மோதிரம் உரித்தானது.
அவருக்கு இன்னும் சில நாள்களில் திருமணம் நடைபெற ஏற்பாடாகி இருப்பதால் அது சிறந்த பரிசு அவருக்கு என்று தங்களுக்குள் நகைச்சுவையாக உரையாடினர் சிலர்,இந்த பணப்பந்தய நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியிருந்த திரு ஜோய் தனக்கே உரித்தான பாணியில் தனிச்சிறப்போடு நெறிப்படுத்தினார்.
தொடர்ந்து நிகழ்வின் முக்கிய அம்சமாக கரவெட்டி என்ற கிராமத்துக்கு இன்னும் எப்படியான நலன் திட்டங்கள் மேற்கொள்ள முடியும் என்ற அடிப்படையில் கலந்துகொண்டவர்களின் கருத்துக்களும் உள்வாங்கப்பட்டது.பங்குபற்றியவர்கள் யாவரும் தங்கள் கருத்துக்களை எண்ணங்களை பகிர்ந்துகொள்ளும்படியாக எல்லோர் மேசைகளிலும் காகிதங்கள் வழங்கப்பட்டிருந்தது,அவை மூலம் அவை பெறப்பட்டன.தொடர்ந்து கலந்துகொண்டவர்களுக்கான அதிஸ்டமும் பெறுமதிமிக்க பரிசுகளும் வழங்கப்பட்டது.அதுவும் வந்திருந்தவர்களை சுவாரஸ்யப்படுத்தியது,
இரவு விருந்தோடு அமைந்த இந்த நிகழ்வு கரவெட்டி வாழ் சொந்தங்களை மீண்டும் சந்திக்கவைத்திருக்கிறது.இதில் கலந்துகொண்டமை யாவருக்கும் மகிழ்வையே கொடுத்திருக்கிறது.தொடர்ச்சியாக இப்படியான சந்திப்புக்களை ஏற்படுத்திக்கொள்வது இன்னும் சிறப்பான விடயமாகத்தான் இருக்கும். அதுமட்டுமல்லாமல் கரவெட்டியை அடையாளப்படுத்துமளவுக்கு ஏதாவது ஒரு சிறப்பான செயற்திட்டத்தை கரவெட்டி ஒன்றியம் ஏற்படுத்துமாக இருந்தால் அதுவும் மிக பெருமையாக இருக்கும். நூல் நிலையமோ அல்லது கரவெட்டி மண் பெற்ற பிரபலங்களுக்கான நினைவுகளோ அல்லது யாவருக்கும் பயன் பெறகூடிய செயற்திட்டமாகவோ அல்லது உலகம் சிறப்பாக பேசுமளவுக்கு செயற்திட்டம் அமைந்தால் அது சிறப்புறும் என்பது கரவைகுரலின் எதிபார்ப்பு.
எது எப்படியாயினும் கரவெட்டி ஒன்றியத்தின் முதலாவது இங்கிலாந்தின் நிகழ்வு மிகச்சிறப்பாக நிறைவுற்றிருக்கிறது.ஆரம்ப நிகழ்வு என்று சொல்லமுடியாத அளவுக்கு நிகழ்வு சிறப்பு.இன்னும் பல சாதனைகளோடு நிகழ்வு மற்றும் கரவெட்டி அபிவிருத்தி ஒன்றியம் சிறக்க கரவைக்குரல் தன் வாழ்த்துக்களை பகிர்ந்துகொள்கிறது.