அசையா விருட்சமே அசைந்தது ஏனோ?


துள்ளிவரும் தென்றல் காற்றை
தள்ளிவிட்டு எம்மீது சுகம் கண்டாய்- இன்று
வீசிவந்த அதேகாற்றில் சரிந்து விட்டாய்
பலமிழந்து சரிந்தாயா? வாழ்க்கை வெறுத்துச்சரிந்தாயா?
வாழ்க்கை வெறுத்துச்சரிய நியாயம் உன்பக்கமில்லை.

கொஞ்சிவிளையாடும் மைனாக்களை கண்டவள் நீ
கீச்சலிடும் கிளிகளின் அழகைக் கண்டுரசித்தவள் நீ
பாடும் குயிலின் பாடல் எல்லாம் உனக்கு அத்துப்படி
இத்தனை சுகமிருக்க வேறென்ன ?

நீ வளர்ந்த பாதை அது தனி
தட்சணாமூர்த்தியின் தவிலடியை ரசிக்காதவளா?
சின்னமௌனாலாவின் இசை ரம்மியத்தில் தவழ்ந்தவள்
பத்மநாதன் கானமூர்த்தி ஜெகநாதன் என்று அடுக்கிகொண்டே
உன்னிழலில் இசைகண்ட மகிழ்வெமக்கு
உன்னிலைகளில் தென்றல் பட்டால் அது நாதஸ்வர ஒலிபோலவே
வீசும்காற்றை தவிலடியாக மாற்ற உனக்கு புரியவில்லையா?

கிட்டிப்புள்ளு அடித்தபோது நீ எமக்கு நிழல் தந்தாய்
கிளித்தட்டு மறித்தபோது பழம்பெற உந்தன் அடியைத்தான் தொடவேண்டும்
துடுப்பாட்டத்தில் நீயும் ஒரு களத்தடுப்பாளன்
இத்தனை சுகம் இருக்க வேறென்ன உனக்கெதற்கு?

அரசியலில் நீ சாணக்கியன்
உதயனை எடுத்துவந்து
உன்னருகில் வாசிக்க கடைக்கண்ணால் பார்ப்பவள் நீ
வயதான பெரியோரும் கதைத்துவிடுவது
உனக்கு கேட்காமல் விட்டிருக்குமா?
நிகழ்வைக்குழப்ப விசிலடிக்க-அவர்களை
நம்மூர்க்காளையர் அடித்துக்கலைத்ததும் உன்னடியில்தான்
அதையெல்லாம் கண்டு ரசித்த உனக்கு
வேறென்ன உனக்கெதற்கு?

இடம்பெயர்ந்து வந்தோரை அரவணைத்து
உறங்குமடம்போல நிழல் கொடுத்து
இன்பம் கண்டவள் நீ
மாலை வேளையில் தண்ணீர்த்தொட்டியில்
தாகம் தீர்க்கும் பசுக்களும் கன்றுகளும்
உன்னிழலில் சுகம்காண
இன்புற்றவள் நீ
தண்ணீர்க் குடத்தோடு செல்லும் அழகியரை
ரசித்தவள் நீ
இத்தனை சுகம் இருக்க வேறென்ன உனக்கெதற்கு.

அண்ணை ரைட் நடிகர் பாலா தவழ்ந்த இடம் உன்நிழல்
உடுப்பிட்டி வானம்பாடி கரவெட்டியில் தவழ்ந்தும் உன்நிழல் தான்
பண்டிதர் வேலாயுதம் படித்ததும் உன்நிழல் தான்
எல்லோருக்கும் நீ ஒரு பொன்னில்லம்
இத்தனை புகழ் உனக்கு வேறென்ன உனக்கெதற்கு

இளையோராய் எல்லோரும் இருந்தவேளை
விட்ட குறும்பெல்லாம் உனக்குத்தான் வெளிச்சம்
சேர்ந்துசென்று இளநீர் குலையோடு கூடிவந்து
உன்னடியில் குடித்தோரை நீ மறந்திருக்க மாட்டாய்
இதையும் நீ ரசித்து சிரித்ததெல்லாம் மறந்துதான் சரிந்தாயா?


இன்னும் எத்தனை நினைவுகள்
அத்தனையும் மறந்து நீ சரிந்தாயா?
இத்தனை நினைவிருந்தால் அதுவே உனக்கு பலம்
இவ்வளவு பலம் இருக்க ஏன் அசைந்தாய் விருட்சமே

எம் வாசலில் வரவேற்கும் நீ இன்று இல்லை
உன்னினைவில் ஒரு வாரிசைக்கொடுத்துவிடு
மறந்துவிடாதே
ஆனால் அசையா விருட்ச்சமே அசைந்தது ஏனோ?
என்றும் இவ்வினாவுடன்....................

பொய்யான உலகத்தில் பொய்யான வாழ்க்கை

பொய் சொல்ல போறேன்

வாழ்க்கையில் எத்தனையோ விடயங்கள் நாங்கள் கடைப்பிடிக்க வேண்டும் எங்கள் முன்னோர்கள் எங்களுக்கு வழிகாட்டி
சென்றிருக்கின்றார்கள்.அத்தனை விடயங்களையும் கடைப்பிடிக்கலாமா இல்லையா என்பது வேறு விடயம்
ஆனால் அத்தனை அம்சங்களையும் கடைப்பிடித்தால் வாழ்க்கையில் வெற்றி என்பது நிச்சயம்.எந்த ஒரு அம்சத்தையும் அவர்கள் தங்கள் அனுபவங்கள் வாயிலாக கூறியிருப்பதுதான் அவற்றின் சிறப்பு ஆகும்.
"பொய் சொல்ல கூடாது பாப்பா" என்று எட்டயபுரத்துக்கவிஞன் பாரதி பாட அதை சிறு பராயம் முதலே அக்கு வேறு ஆணிவேறாக பெற்றோர் ஆசிரியர் என்று எல்லோரும் அடிப்படையாக ஊட்டி வளர்ப்பர்.
பொய் சொல்லி விட்டால் அதற்கு சிறு தண்டனையும் வேறு.
ஆனால் கொஞ்சம் வித்தியாசமாக நல்ல பெரும் உதவிக்காக்க அல்லது பெரு நன்மைக்காக ஒரு சிறிய பொய் சொன்னால் பரவாயில்லை என்று உலகத்தமிழ் மறையை எமக்குத்தந்த பொய்யாமொழிப்புலவன் வள்ளுவன் உரைத்திருக்கின்றான்.இதன் மூலம் மற்றவர் பெருநன்மை அடைந்துகொள்ளமுடியும் என்பது வள்ளுவனின் நம்பிக்கை.தன் ஆணித்தரமான கருத்தை வலுவூட்ட அதை அவர் ஒரு பெரிய தர்மம் என்று குறிப்பிட்டிருக்கின்றார்.
மொத்தத்தில் பொய் சொல்லக்கூடாது என்பதுதான் வரையறையாக இருக்கிறது இந்த உலகத்தில்.
ஆனால் ஒருத்தியை காதலிக்கவும் திருமண பந்தத்தில் இணைத்து வைக்கவும் ஆயிரம் பொய் கூட சொல்லிவிடலாம் என்கிறது இந்த உலகம்.
பொய்யை சொல்லி பின்னர் வாழ்கையின் போது குடும்பங்கள் அந்த பொய்யை அறிந்து சின்னபின்னமாகி போவதும் தவிர்க்கமுடியாததொன்றாகி இருக்கிறது .
அதற்காக "நீ ரொம்ப அழகி என்றும்,உன்னை விட இந்த உலகத்தில் யாரும் இல்லை என்றும் பொய்யைத்தான் சொல்ல போறேன் என்று கூறிவிட்டு பொய்யை சொல்லலாமா?
உன்னைப்பற்றி சொல்லவதெல்லாம் பொய் என்று சொல்லிவிட்டு காதலிக்கு அந்த ஆணே பொய்யை சொல்கின்றான் என்றால்,அதை அந்த காதலையும் நம்புகின்றாள் என்றால் இந்த பொய்யான உலகத்தில் இதுதான் பொய்யான வாழ்க்கையோ?என்ற கேள்வி வரத்தான் செய்கிறது

பொய் சொல்ல போறேன் பொய் சொல்ல போறேன் நீ ரொம்ப அழகி யெடி

ஒரு சிறந்த ஆசிரியர் பற்றி

வாழும் போதே வாழ்த்துவோம் என்ற பகுதியில் வடமராட்சியின் புகழ் பூத்த ஆசிரியர் திரு.சின்னையா வல்லிபுரம் அவர்களை வாழ்த்துகின்றது.ஆசிரியர் அவர்கள் கொண்டிருக்கும் சிறந்த சிந்தனைகளை வெளிச்சம் போட்டு காட்டுகின்றது.அதை பார்வையிட எனது வலைப்பூக்கள் என்ற பகுதியில் வானம்பாடி என்ற பகுதியை அழுத்தி அதை பார்வையிடுங்கள்.
தொடர்ந்து ஐந்தாந்தர பரீட்சையில் அகிலஇலங்கைரீதியாக முதலாம் இடம் பெற்ற எம் ஈழத்து மாணவன் தர்மலிங்கம் பாசுபதன் அவர் தனது வெற்றிக்குப்பின் கூறிய அவரது எண்ணங்களும் வானம்பாடியில் பகிரப்படுகிறது.
அதனை அழுத்தி பார்வையிடுங்கள் உங்கள் வாழ்த்துக்களையும் பகிர்ந்துகொள்ளுங்கள்.

வாழும்போதே வாழ்த்துவோம்

ஈழத்திருநாட்டில் பல்வேறு திறமைகளோடு பங்கெடுத்து தங்களை ஈடுபடுத்திவரும் அறிஞர்கள்,கலைஞர்கள்,சான்றோர்கள் இன்னும் இன்னோரன்ன துறைகளில் பிரபல்யம் பெற்றோரை வாழ்கின்ற காலங்களிலேயே வாழ்த்த வேண்டும் என்பது கரவைக்குரலின் எண்ணம். அவை அவர்களின் வளச்சிக்கு உத்வேகமாக இருக்கும் அல்லவா? இன்னும் பல விடயங்களை அவர்களிடம் இருந்து வெளிக்கொணர அது வழிகாட்டும் என்ற எண்ணத்தோடு வாழும் போதே வாழ்த்துவோம் என்ற பகுதி ஆரம்பிக்கிறது.
வாழும்போதே வாத்துவோம் என்ற அந்த பகுதி வானம்பாடி என்ற புதிய தளத்தினூடாக வருகிறது.
எனது வலைப்பூக்கள் என்ற பகுதியில் வானம்பாடி என்பதை அழுத்தி அதை நீங்களும் பார்வையிடுங்கள்

ஆம்
நீங்களும் உங்களுக்கு தெரிந்தோரின் தகவல்களோடு உங்கள் பெயர்களையும் குறிப்பிட்டு கீழே வரும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

karavaikaviyothi@gmail.com

மிஸ் கோல்(Miss call) விளையாட்டு

அவசரமான உலகத்திலே
அவசியமாய் போச்சுதப்பா
அடிக்கடி அலறும் இந்த
கையில் தவழும் தொலைபேசி

பாதையில் போனாலும்
எங்கெங்கு நின்றாலும்
அவசரமாய் தொடர்பெடுக்க
மொபைல் எல்லாம் முக்கியம்
பாதையே தடுமாறி
பாதை மாறிப்போய் யாரையும்
பாதையை கேட்டுவிட்டால்
சந்தேகம் கொள்வர்
ஊருக்கு புதுசு எண்டு
விசாரணைக்கு அழைப்பு வேற
சொன்னாலும் பிழையப்பா
சொல்லவந்த கதை இதுவில்லை

தொலைபேசி கண்டுபிடித்தான் எதற்காக
தொடர்புகொள்ள
தொடர்பெடுத்து உரையாட
தேவைகளை தெரிந்து கொள்ள
அன்பினை பகிர்ந்து கொள்ள
சோகத்திலும் இணைந்துகொள்ள
தூரத்திலிருந்து சொந்தம் கொண்டாட

சொந்தபந்தம் கூடியோருக்கு - இந்த
மொபைல் ஆக்கினையாம்
எப்போதும் அலறியடிக்குதேயென்று
சினம் கொள்வர்
சீறிச்சினந்தாலும்
எந்த மூலையிலும் இப்போ
மொபைல் காதோடு வைத்தபடி
பல கூட்டம்
காதில வைத்து
கதைக்கிறது மட்டுமில்ல
மிஸ் கோல் அடிக்கிறதும் தான்
அதனாலேயும் ஒரு உரையாடல்
"நான் உனக்கு மிஸ் கோல் அடிக்கும்போது
அங்க வா இங்க வா" எண்டு முதலே சொல்லி வைத்து
வந்த பின் ஒருகணமும் தப்பாமல்
ஒன்றுக்கு இரண்டுதரம் மிஸ் கோல் அடிச்சு
வா என்று கூப்பிடுவதுபோல் ஒரு உரையாடல்

சிலருக்கு மிஸ்கோல் மட்டும் தான் அடிக்க தெரியுமாம்
அவை அடிக்க மற்றவர் எடுக்க வேணுமாம்

"மிஸ் கோல் அடிக்காத போன்"(Phone) உம்
எஸ்.எம்.எஸ்.அடிக்காத போன்(Phone) உம்
குப்பைக்குள்ளே போடு" என்று
கோவம் வேற
எத்தனை விளையாட்டு நடக்குது இங்கு

தொலைபேசிக்கொம்பனியெல்லாம் தலையிலை கைவைக்குது
நல்லவேளை
தொலைபேசியை கண்டுபிடிச்சவன்
இப்ப உயிரோடு இல்லை
இருந்திருந்தால் கண்டுபிடித்த குற்றத்துக்கு
கழுத்தில் கயிறை மாட்டியிருப்பான்
சரி என்னவோ ஏதோ
எதையும் விளையாடுங்கோ
மிஸ்கோல் அடிச்சு
மிஸ்ஸிஸ் ஆக மாறிவிடாதீங்கோ?

சிகரெட் ஒன்றியம் காட்டமான முடிவு

ஒரே வகை மனிதர் கூடி
ஒற்றுமையை பலமாக்க
ஒன்றியத்தை ஆக்கிடுவார்
ஒன்றியங்கள் உருவாக
நானோ நீயோ என்று
அதிகாரப்போட்டிகளுடன்
குழப்பங்களும் பின்னால் வரும்.
குழப்பங்கள் தலைதூக்க
கலகங்கள் உருவாக
வழக்கங்களில் பல மாற்றம்
எதற்கெடுத்தாலும்
ஒன்றியங்கள் ,சங்கங்களென
எல்லாமே கூடிப்போச்சு
பல்வேறு பெயரெடுத்து
கலகக்காரரும் சங்கம் எடுத்தால்
இது தான் நிலைமை. --ஆனால்
நல்நோக்க சங்கங்களுக்கும்
உலகினில் குறைவில்லை

இப்பிடித்தான் ஒரு ஒன்றியம்
யார் யார் கேள்விப்பட்டீங்களோ தெரியாது
சிகரெட் ஒன்றியமாம் -- அது
எங்க இருக்குது என்று மட்டும் கேட்க வேண்டாம்
எங்க இருக்கு என்று எனக்குமே தெரியாது

வாயாலே ஊதுவதால்
ஊதுகுழலாம்
புல்லாங்குழலாம் - அது
இனிய மகிழ்ச்சியோடு இருப்பதாலாம்
கொஞ்சம் "கிக்" ஆக இருப்பாதால்
"தம்" என்பர் ஒரு சிலர்
இன்னும் பல மறுபெயர்கள் -அது
சொல்லவே கூடாது,
ஒன்றியத்தார் கோவிப்பினம்

அக்கம் பக்கம் பார்த்துவிட்டு
மெதுவாக கடைக்குள் நுழைந்து
பின்புறவாயில் கடந்து
அவசரமாய் ஊதுவர் சிலர்

வாங்கிய சிகரெட்டை
பெருவிரல் நகம் மேலே
தட்டிவிட்டு ஸ்டைலாக(style)
வாயருகில் அமர்த்திவிட்டு
பற்றவைத்து- அதுவும் ஒரு ஸ்டைலாக
கைவிரல்களுக்குள்
தவழும்போதும் ஒரு ஸ்டைலாக

வேண்டிய நட்பெல்லாம்
கூடவந்து சேருமாம்
கூடிய நட்பாலே
பலம் பெற்று வாழலாம் என்று
அடிமையானோர் பலர்

டென்ஷன்(tension)என்று தொடங்கி - அது
வாழ்க்கையின் முடிவுவரை
டென்ஷனாக வாழ்ந்து
சிகரட்க்கே அடிமையாகி
வாழ்வை அழித்துக்கொண்டோர் பலர்

முதற்பழக்க வல்லுனர்கள்
மென்று கொண்டு வாயாலே
சற்று ஸ்டைலாக புகை விடுவர்-பின்
மூக்கால் முயன்று விடுவர்-பின்
கண்ணால் வரும் காதால் வரும்
எத்தனை திறமைகள்
கடற்கரை ஓரத்தில்
கூட்டாக ஒன்று சேர்ந்து
இதமான கதைகளோடு
புல்லாங்குழல் ஊதிவிட்டால்
"தில்"என்பர் ஒன்றியத்தார்


பஸ்சினுள்"புகைப்பிடிக்க தடை"என்று
முன்வாசலில் கொட்டை எழுத்தில் போட்டு
கொண்டக்டர் வாசலில் மெல்ல ஊதி
வாசல் தாண்டி வெளியிலே புகைவிடுவார்
உள்ளுக்குள்தான் தடையென்று
எல்லோருக்கும் நினைவு செய்யும் அற்புத ஆற்றல்
நல்ல ஒரு கொண்டக்டர்

எங்கு தான் புகை விட்டாலும் - அது
எங்கோ காற்றினில் தவழ்ந்து வந்து
எல்லோர் மூக்கிலும் நுழைந்து விடும்
"எல்லோருக்கும் பாதிப்பு
எல்லோரும் புகைபிடிக்கினம்" - இது
வல்லோராம் விஞ்ஞானிகள் கருத்து

நல்ல கதை இது
எங்கள் காசில் சிகரெட் வாங்கி
நாங்கள் ஊதிவிட
நீங்கள் எல்லோரும் இலவசமாய் அனுபவிக்க
நாங்கள் விடமாட்டோம் ...........
சீறுகின்றது சிகரெட் ஒன்றியம்

பாதிக்கும் எண்டது எல்லோருக்கு பொது தானே-ஆனால்
பல காசு நாம் கொடுத்து பெற்று விட்ட சுகத்தை
கஞ்சத்தனத்தோடு
இலவசமாய் அனுபவிக்க விட மாட்டோம் என்று
வன்மையாக கண்டிக்கும் சிகரெட் ஒன்றியம்
தனிமையில் சுகம்தனை பெற்றுடுவோம் நாம்
பொது இடத்தில் இனி இல்லை என்று
கொட்டித்தீர்க்கும் சிகரெட் ஒன்றியம்

அது சரி
பொது இடத்தில் தடை இருந்தும்
அது இன்னும் நிறைவேற்ற
பல காலம் பிடிக்கும் போல
என்ன செய்யலாமென்று
எல்லோரும் தலை பிசைய
ஒன்றியத்தின் முடிவாலே
நல்ல விஷயம் நடக்கும் போல
நடக்கடும் நடக்கட்டும்

கள்ளர் பயம் கவனம் புன்னகை ஒன்று போதும்

பட்டினமாம் கொழும்பில
வீட்டுவாசலிலே
"நாய் கடிக்கும் கவனம் " என்றது போல்
றோட்டின் தொடக்கத்தில
"கள்ளர் பயம் கவனம் "என்றும்
போட்(board) போட வேணும்!

கலகலப்பாய் உடுப்புடுத்து
பளபளக்க நகையணிந்து
சுறுசுறுப்பாய் சென்று விட்டால்
கள்ளர் தம் கை பதம் பார்க்குது

ஆட்டோகாரன் கடத்தி போடுவானோ என்று
கல்யாண பந்தல் வாசலிலே
ஆபரணம் அணியும் பெண்கள் இன்று
மணமேடையில் மங்களமாய்
மகிழ்வோடு கட்டிய தாலிகூட
லொக்கருக்குள் (Locker) முடக்கி விடும்

ஏன் ஆண்கள் மட்டும் குறைவோ என்று
பெண்கள் நினைப்பது புரிகிறது இங்கு

ஊர் கோவில் திருவிழாவில்
தங்க கட்டியை புலிப்பல்லாக்கி
செப்புக்கட்டிக்கு தங்க முலாமோ புரியவில்லை
தொந்தியில் துள்ளி அஆட
முன்வரிசையில் சுவாமி காவினால்
பென்னம்பெரிய பெருமை என்று
சிந்திக்கும் ஆண்கள் கூட
விதம் விதமாய் கைச்சங்கிலியாய்
மோதிரத்தோடு சங்கிலியாய்
பதமாக காற்சட்டை பொக்கட்டுக்குள் மறைச்சு வைச்சு
கல்யாண மண்டப வாசல் வந்து
பயம் தெளிந்து மனம் மகிழ
அணிந்ததனை அழகு பார்க்கினம்

இப்பிடியெல்லாம் இருக்கு
எல்லாம் கள்ளர் பயம் தான் காரணம்
வங்கி மனேச்சரோ தலையிலே கைவைக்கிறார்
லொக்கருக்கு ஓடர்(order) கூடி போச்சு
எப்ப வருதோ அப்ப எங்களுக்கு தான் என்று
உள்ளதை சொன்னால் மேனிக்கு போடும் நகை எல்லாம்
இப்ப லொச்கேருக்கு(ள்) தான் போடுகினம்
என்ன என்ன டிசைன்(Design) அதை எல்லாம்
வாங்கி வாங்கி லொக்கருக்கு(ள்) போட்டு
அளவில்லா ஆனந்தம் மட்டற்ற மகிழ்ச்ச்சி

இப்பிடித்தான் மங்கம்மா
வெளிநாட்டு பணமெல்லாம்
உடம்பெல்லாம் நகையாக வழிவது போல்
சிங்கபூரோ சுவிஸ்ஸோ
டுபாயோ தென்னாபிரிக்க கட்டிப்பவுணோவென்று
எல்லோரும் நாடியில கைவைக்க -

அதுவும்சரி

போன மாதம் தன்ர மகளை
சுவிஸ்க்கு அனுப்பினவா
போன்(phone) தானே கதைக்கிறது என்டவா
இவ்வளவு நகையோட காசாக அனுப்பினவளோ?..............
மாப்பிள்ளை கொஞ்சம் நல்லவன் போலிருக்கு
மாமிக்காரியில இவ்வளவு பாசமோ?...............
மானுடக்குணத்தோட மாப்பிள்ளை போலிருக்கு
ஆண்டவன் பார்த்து கொடுக்காமல்
கிள்ளி எறிஞ்சு போட்டான் மங்கம்மாவுக்கு
எல்லோரும் இப்பிடி நினைக்க...........

மங்கம்மாவுக்கு தும்மி போட்டுது
"பிள்ளை நினைக்கிறாள் போல
பிள்ளையாருக்கு அர்ச்சனை செய்ய வேணும் " என்று
வேகமான நடை போட்டு
ஐ பி சி றோட்டால
விசாபிள்ளையாரை தரிசிக்க
போய் கொண்டே இருக்கிறா

கண்ணை மூடி முழிப்பதுக்குள்
தட்டி பறிக்கும் காகம் போல
தந்திரமாய் கள்ளன் ஒருவன்
சங்கிலியை அறுத்துக்கொண்டு
விரைவாக ஒடிப்போட்டான் மறைந்து விட்டான்

" அடேய் யாரடா அவன் என்று
அலறி அடிச்சு மங்கம்மா கத்தி கதற
அக்கம் பக்க சனமெல்லாம்
ஓடி வந்து என்ன என்று கேட்க
"என்ன செய்ய ? யார் நினைச்சது
இந்த பொறுக்கி வருவான் என்று "
மங்கம்ம்மா திட்டித்தீர்த்தாள்

"பிள்ளை நினைச்சு தான் தும்மிச்சோ என்று நினைக்க - இந்த
கள்ளன் நினைப்பான் என்று யார் அறிவார்"
போனது போட்டுது என்று
சமாளிச்சு நடக்கிறா மங்கம்மா

"என்னணை அம்மா" பின்னுக்கு ஒரு குரல் ஓன்று
யார் என்று திரும்பி பார்க்க முதல்
"போடுற நகையை ஒழுங்கா போட தெரியாதே?
எங்கட தொழிலுக்கு பங்கம் வைக்காதே
கவரின் சங்கிலியை போட்டு யாருக்கு
கலர் காட்டுறாய்
கவரின் நகையை போட்டுட்டு
கத்தி கத்தி ஊரை கூட்டுறியோ?
உன்ர நகையும் உன்ர நடையும்"என்றபடியே கள்ளன்
முன்முகத்தில் வீசி
"டக்" எண்டு ஒடிப்போட்டான்

இதைக்கேட்ட சுற்றி நின்ற சனம் எல்லாம்
" அட என்னடா? - இந்த மனுசி
அலறியதைக்கேட்ட போது
தங்க பவுணை அறுத்த மாதிரி இருந்தது" என்று
வந்தவை எல்லோரும் ஒரு மாதிரிப்பார்க்க,
"சி சி சீ என்ன வெட்கமாகப்போச்சு
கௌரவக்குறைவு என்று நடிச்சு போட்டன் பவுண் என்று
எல்லாமே போச்சு " என்று
வேகமாக நடக்கிறாள் வெட்கத்துடன்

கள்ளனுக்கு கூட
செய்யும் தொழில் தெய்வமாம்
தொழிலுக்கு பங்கம் வைச்சால்
சொல்ல முடியா கோவம் வந்துவிடுமாம்
ம்ம் ம்ம் ம்ம் .............

ஏன் இந்த வினையெல்லாம்
பளபளக்க நகை போட்டு......

எல்லோருக்கும் பொதுவாக
புன்னகை ஓன்று இருக்கு
புத்தெழுச்சியான வாழ்க்கைக்கு
மகிழ்ச்சியோடு பயம் விட்டு
மற்றோரும் அனுசரிக்க
புன்னைகையே ஓன்று போதும்

மறக்கவேண்டாம்
கள்வனுக்கு கூட
செய்யும் தொழில் தெய்வமாம்

மற்றோரும் தொழில் செய்ய
புன்னகையோடு வழிவிடுவோம்
ம்ம் ம்ம் ம்ம் ம்

அக்காவும் சிரிச்சா தங்கச்சியும் சிரிச்சா

அந்தி மாலை நேரம்
கொழும்பு மாநகரத்திலே வெள்ளவத்தையில்,
'றோயல் பேக்கரி' களைகட்டும் நேரம்
அங்கும் இங்கும் முந்திக்கொண்டு
அலுவல் பார்க்கும் சனக்கூட்டம்
'நோ லிமிட்டுக்கு'(Nolmit)லிமிட்(Limit)இல்லாத பெருங்கூட்டம்

'லிட்டில் ஏசியாவுக்கு'(Little asia)
சின்ன ஆசியவே வந்து போகும்
'ஹோட்டல்சபாயர்க்கு'(hotel sapphire)முன்னாலே
கூடிக்கதைக்கும் வயதான குழு ஓன்று
என்ன கதைக்கினம் எண்டு யாருக்குமே தெரியாது

அங்கொரு இங்கொரு கூட்டமாய்
சந்தியிலே அரட்டை அடிக்கும் பொடியள் படை
குறட்டை விட்டாவது......................!
போற வாற சனத்தை
திரும்பி பார்க்க வைக்க துடிக்கும்
பார்த்தாலே போதும் என்றால் சிரித்தால் எப்படி இருக்கும்?
தங்கையோடு அக்காவாக இருக்க வேணும்
இரட்டை பிள்ளைகள் போல அழகுக்கும் குறைவில்லை!?
அன்போடு கதைபேசி
'வசந்தம் மிக்ஸ்சராக' இருக்க வேணும்
மென்று கொண்டு ருஷியாக
மெல்ல மெல்ல நடைநடந்து
உல்லாசமாக தமைமறந்து போகினம்

" சீ என்ன பழக்கம் இது
றோட்டு வழிய சாபிடுறது"
சீர்திருத்தும் கடுந்தொனியில்
கட்டழகு வாலிபனின் குரலொன்று!

"என்னடா சொல்லுறாய்
எதுக்கு நீ இப்ப சொல்லுறாய்" என்றதுபோல்
முறாச்சுக்கொண்டு அக்கா பார்க்க...........!
நக்கலால் வெட்கத்தோடு - முகச்
சினத்தோடு தங்கை நோக்க.................!

" என்னை கோவிக்க வேண்டாம்
டீச்சர் தான் சொன்னவா,
றோட்டு வழிய சாப்பிடுறது கூடாத பழக்கம் எண்டு
வேணுமென்றால் டீச்சரை கோவியுங்கோ"

கடும்தொனியை கொஞ்சம் தாழ்த்தி
சிறு குழந்தைபோல் செல்லமாய் சொல்ல

அக்காவும் சிரிச்சா அழகிய தங்கையும் சிரிச்சா

பார்த்தாலே போதும் என்ற வாலிபமனசுக்கு
சிரிச்சால் எப்பிடி இருக்கும்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

கொழும்பில வாத்தியார்

எல்லாமே வித்தியாசம்

"பின்னை பிள்ளையள் இப்பிடித்தான் கதைக்குங்கள்.அதுக்காக இந்த அறைக்கு உள்ளயே முடங்கிபோய் இருக்கலாமோ" எண்டது வாத்தியார் காட்டும் நியாயம்.

"எங்கட ஊரில எண்டால் வீடுக்கு வெளியில முத்தம், முத்தத்தில கூடி நாலு வார்த்தை கதைச்சாலும் சந்தோசமாக இருக்கும்.
வீடுக்கு வெளியில முத்தம் எண்டு ஒண்டு இருக்க வேணும் பாருங்கோ. இது இங்க வெளியில எங்க முத்தம் இருக்கு.கடக்கரைக்கு போனால் முத்தம் இருக்கு ,அது வேற முத்தம்"என்று வாத்தியார் சீரழியும் கொழும்பு கலாச்சாரத்தை கிண்டலடிக்கும் நையாண்டி வரிகளோடு ஊரின் சந்தோசமான வாழ்க்கை பற்றி எப்போதும் நினைவுபடுத்திக்கொண்டேதான் இருப்பார்.

வாத்தியார் கொழும்புக்கு வந்தவுடன் கொழும்புக்காரர் எல்லாம் வாத்தியார் அறைக்கு படையெடுப்பு.வேற ஒண்டுமில்ல, அங்கிருந்து கொடுத்துவிட்ட பொக்கிஷங்களை வாங்க தான்.

"அந்த காலம் ஒருநாளிலேயே கொழும்புக்கு வந்து போன காலத்தில, யார் போறது,வாறது எண்டு தெரியாமல் இருந்தவை,யார் கொழும்புக்கு போனாலும் யாரும் கவனிக்கிறதே இல்லை.
அப்பிடி இருந்த காலம் போய் இப்ப எந்த மூலையில யார் யார் போகினம்,எந்த திகதி எல்லாம் திரும்பி வருவினம் எண்டு எல்லாரும் ரொம்ப கவனமாக கவனிச்சுக்கொண்டே இருக்கினம்,அது தான் எல்லாரும் மினைக்கட்டு ஆட்டோ பிடிச்சு வந்து கதைச்சுவிட்டும் போகினம்.இந்தியாவின் "ரோ" கூட இந்த அளவுக்கு கவனிக்க மாட்டுது,எங்கட சனம் இப்ப நல்லாக கவனிக்குது"
என்று வாத்தியார் மனசோட சொல்லிக்கொண்டு இருக்கிறார்.

அங்கு வாத்தியார் "வருவோரை சரியாக உபசரிக்க முடியவில்லை" என்று கவலை."இந்த சின்ன அறைக்குள்ள எங்க வாறதுகளை இருக்க சொல்லுறது" என்று எப்பவும் கவலைப்பட்டுக்கொண்டே இருப்பார்.
விருந்தோம்பும் யாழ்ப்பாண கலாச்சாரத்தில் இருந்து வந்த வாத்தியார் கவலைப்படுவதில் நியாயம் தான்.ஆனால் "இது எல்லாருக்கும் விளங்கும் தானே இங்க கஷ்டம் எண்டு" என்று வாத்தியார் தன் மனதை தேற்றுகின்றார்.

வாத்தியாருக்கு இன்னமொரு விஷயம் பயம் தான்,ஆனால் வெளியில காட்டிக்கொள்ள மாட்டார்.றோட்டில போறது வாறது பயம். கொழும்பில வாகனங்கள் போற வேகம்,வாத்தியாருக்கு பாதை கடக்க ரொம்ப பயம்.ஆனால் சனங்கள் "என்ன இது வாத்தியாருக்கு ஒண்டுமே தெரியாது எண்டு சொல்லிபோடுங்கள்" என்று வாத்தியார் ஏதாவது காரணம் சொல்லி வாத்தியார் சமாளிப்பார்.ஆனால் அந்த ஆட்டோகாரன் அதுக்கால இதுக்கால குறுக்கால ஓடுறாங்கள்,யார் தான் இந்த லைசன்சே குடுத்தாங்களோ இவங்களுக்கு."காசை கீசை யாருக்கும் குடுத்து எடுத்துட்டு வாகனம் ஓடினால் இப்பிடித்தான்"
எண்டு வாத்தியார் திட்டி திட்டி கொண்டே இருப்பார்

அப்படி திட்டிகொண்டிருக்கும் வாத்தியார் "எல்லாமே கொழும்பில வித்தியாசமாக தான் இருக்கு" கொழும்பை பற்றி கணக்கு போடுறார்


வாத்தியார் வருவார் ............

கொழும்பில வாத்தியார்

கொஞ்சம் உஷார்


சும்மா சொல்ல கூடாது எங்கட வாத்தியார் பிளேன்ல ஏறி வரும்போது கொஞ்சம் பயந்து போனார் எண்டது உண்மைதான்.ஏன்னெண்டால் அது முதல் பயணம் தானே.
முதன்முதல் பிளேன்ல ஏறும்போது யாருக்கு தான் பயம் வராது.அந்தரத்தில பறக்க போகுது எண்டால் யாருக்கும் தான் பயப்பீதி வராது.மற்றும்படி அவர் பயந்தது மாதிரி நினைக்கதேவையில்ல.
ஏனெண்டால் "அவர் ஊரில படிப்பிக்கேக்க எத்தினை பொடியள் பயந்தவங்கள்,அந்த ஆள் பிரம்பும் கொண்டு ஒரு நடையும் நடந்து வந்தார் எண்டால் தோளுக்கு மேல வளந்த பொடியளும் பயந்து சத்தம் போடாமல் ஒதுங்கி போய் இருப்பாங்கள்".
யாழ்ப்பாணத்தில இருந்து பிளேன் ஏறி வர எத்தனையோ பதிவுகள்,அனுமதிகள், அது இது எண்டு படுற கஷ்டத்தில பேசாமல் இருக்கலாம் எண்டு இருந்திருந்து வாத்தியார் மட்டுமில்ல எல்லாருக்கும் பிளேன் ஏறி வாறதில கொஞ்சம் தயக்கம்.

அது மட்டுமில்ல வாத்தியார் பள்ளிக்கூடத்தில படிப்பிக்கிறதும் மேலதிகமாக வீட்டிலையும் ஊர் பொடியளுக்கு படிப்பிக்கிறதும் எண்டு அவருடைய காலமும் போய்விட்டுது.அதனாலே அவர் கொழும்புக்கு வாற தேவையும் இருக்கவில்லை.அப்படி அவர் படிப்பித்ததால் ஊரில நல்ல பெயர் எடுத்தவர் வாத்தியார்.
அவர் கொழும்புக்கு போறார் எண்டு எல்லாரும் வீடுக்கு குசலம் விசாரிக்க போனவை .
ஏனெண்டால் அவர் கொழும்புக்கு போய் அப்பிடியே அவரிடைய மகள் லண்டனில இருக்கிறாள்,அங்க போகபோறார் எண்டு தான் ஊராவீட்டு ஆக்கள் எல்லாம் வந்தவை அங்கங்கு ஒவ்வொரு பிஸ்கட் பெட்டியும் வாங்கிக்கொண்டு,
இதை ஞாபகப்படுத்திக்கொண்டு இருக்கிறார் வாத்தியார் கொழும்பில." எங்கட சனம் இந்த பிஸ்கட் பெட்டியும் இல்லாவிட்டால் மற்றவை வீட்டுக்கு விருந்தினராக போக மாட்டுதுகள் " எண்டு மனதுக்குள் சிரிச்சுக்கொண்டு வாத்தியார் இருக்கிறார். .

வாத்தியாருக்கு கொழும்புக்கு வாறது எண்டால் கொஞ்சமும் விருப்பமில்ல.
ஏன்னெண்டால் ஊரில அக்கம் பக்கம் சனத்தோட சந்தோசமாக உல்லாசமாக கதைச்சு கொண்டு இருந்தவருக்கு இங்க வந்து யாருமே தெரியாத ஊரில வந்திருக்கிறதெண்டால் அவருக்கு கொஞ்சமும் பிடிக்கேல்ல.
ஆனால் மகள் பதினைந்து வருஷத்துக்கு முதல் லண்டன் போன பிறகு அவளுக்கு இருக்கிற அந்தஸ்த்து அங்க கிடைச்சபிறகு "வாங்கோ வாங்கோ" என்று குடுத்த கரைச்சலால் தான் வெளிக்கிட்டு வந்தவர்.
மற்றும்படி அவருக்கு கொழும்பு வாழ்க்கை சிறை வாழ்க்கை எண்டு தெரியாதே? இரண்டு காலும் நீட்டி நிம்மதியாக படுக்க முடியாது எண்டு அடிக்கடி அந்த காலம் பகிடி விட்டு கதைக்கிறவருக்கு தெரியாதே கொழும்பு வாழ்க்கை அப்பிடித்தான் எண்டு.
உண்மையாக அவர் வந்த காரணம் வயதும் போய்க்கொண்டு இருக்கு அதுக்கு முதல் அந்த செல்ல மகளை பார்க்க வேண்டும் அதோட தன்னுடைய பேர்த்தி மாரையும் பார்க்க வேணும் ஏன்டா ஆர்வம் தான்.

வாத்தியார் கொஞ்சம் கூட பகிடி விடுற ஆள்.எங்கு போனாலும் தன்னுடைய பகிடியால கொஞ்ச பேரை நட்புவட்டத்துக்குள்ள கொண்டு வந்து விடுவார்.அதால வாத்தியாருக்கு போற இடத்தில போர்(பஞ்சி) அ(பி)டிக்காது.எப்பிடியும் ஒரே கலகலப்பாக தான் இருப்பார்.
அப்பிடியே கதைச்சாலும் அவர் கொழும்பில ஏமாத்தி போடுவாங்கள் எண்டு எப்பவும் கவனமாக தான் இருப்பார்.ஏனெண்டால் மகள் லண்டனில இருந்து ஒவ்வொருநாளும் தொலைபேசி அழைப்பு எடுத்து பேசினபடி.
"அப்பா அங்கினை இங்கினை வாய் பார்த்துக்கொண்டு நிண்டால் யாரும் வந்து காசுக்காக கொண்டு போடுவாங்கள்"
எண்டு மகள் எப்பவும் ஓதிக்கொண்டே இருக்கிறது....... அதைநினைச்சு நினைச்சு வாத்தியார் ரொம்ப உஷார் பாருங்கோ.


வாத்தியார் வருவார்............

பெறுமதி இழக்கும் ஆயிரம் ரூபா
ஒரு காலத்தில் ஆயிரம் ரூபாவினால் எத்தனையோ விடயங்களை சாதிக்கும் காலம் இருந்தது. இப்போது அதற்கு பெறுமதி இல்லாமல் போகும் தன்மை காணப்படுவதாக எல்லோரும் கதைப்பது கேட்க முடிகிறது.அதன் பின்பு தான் எனக்கு இதையும் மேலோட்டமாக அலச எண்ணம் தோன்றியது.
முந்திய காலங்களில் எல்லாம் ஐந்நூறு ரூபாவை குயில் என்றும் ஆயிரம் ரூபாவை மயில் என்றும் கூறி அதற்கு ஒரு சிறப்பிடம் கொடுத்துவந்ததை யாரு மறக்க முடியாது.
அதாவது ஒரு வேலை செய்யச்சொன்னால் "ஒரு மயில் இருந்தால் அல்லது தந்தால் இலகுவாக முடித்துவிடலாம் " என்று மற்றவரை கிண்டலாக சொல்லுவதை நாம் அறிந்திருக்கின்றோம். ஆனால் இன்று ஆயிரம் ரூபாவை எடுத்தால் ஏதாவது ஒரு அத்தியாவசிய பொருள் வாங்கிவிட்டாலே அது மாற்றிய காசாக மாறி அதன் வலுவிழந்துவிடுகிறது. "சும்மா நூறு ,இருநூறு கிராம் சாமான் வாங்கினவுடனேயே ஆயிரம் ரூபா மாயமாக மறைஞ்சு போச்சே " இது சந்தையில் கதைக்கும் அம்மாமாரின் கருத்து.
""அந்த காலம் பத்து ரூபவுக்குள்ள மதிப்பே இல்லாமல் போச்சே,பத்தாயிரம் ரூபா கூட ஒரு மாத செலவுக்கு காணாமல் இருக்கிறதே" எண்டு தலையில் கை வைக்கும் ஆடவர் கூட்டம்.
இப்படியே எங்கு கேட்டாலும் எவ்விடத்தில் கேட்டாலும் ஆயிரம் ரூபாவின் தன்மை இழந்துவிட்டதை சொல்லி எல்லோரும் புறுபுறுப்பதை கேட்கலாம்.
இவையெல்லாம் ஆயிரம் ரூபா பெறுமதி இழந்துகொண்டு செல்வதையே எடுத்துக்காட்டுகின்றது என்று கூறலாம்

காலிமுகத்திடலில் பனைகள்

யாழ்ப்பாணத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்று பனை ஆகும். இந்த பனை ஒரு கற்பகதருவாக இருப்பது உங்கள் யாவருக்கும் தெரிந்த ஒன்று தான் .அதன் பனங் கிழங்கு என்பதிலிருந்து அதன் பனையோலை வரை மனிதனுக்கு பலவழிகளில் உதவுவனவாகத்தான் அமைந்திருக்கிறது.

தென்னிலங்கையிலிருந்து யாழ் வரும் விருந்தினர்கள் அல்லது பயணிகள் எல்லோரும் பனையின் பயனை அனுபவிக்காமல் வீடு திரும்பமாட்டார்கள். பனங்கள்ளை சுவைக்க அவர்கள் எந்த மூலைக்கு சென்று வரவும் தயங்கமாட்டார்கள். ஏனென்றால் "அவர்களுக்கு இங்கு கித்துள் கள் தான் கிடைக்குமாம். அத்துடன் பனங்கள்ளின் சுவையே தனியாம்" இது தென்னிலங்கை மக்களின் கருத்து. இந்த பனங்கள்ளின் சுவையறிந்தது மட்டுமல்லாமல் பனையின் பல்வேறு பயன்களையும் அறிந்து அதை தென்னிலங்கையே கொண்டுவந்தால் தமக்குச்சரி என்று எண்ணியோ அல்லது இதற்காக யாழ்ப்பாணத்தை நம்பியிருக்கக்கூடாது என்று சிந்தித்தோ என்னவோ அதை கொண்டுவர வேண்டும் என்று விரும்பியிருந்திருக்கலாம் தென்னிலங்கை. பெரிய திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்துவது போல காட்சிப்படுத்தி அதை காலிமுகத்திடலில் நாட்ட தீர்மானித்தார்கள். உல்லாச பிரயாணிகளை கவரும் என்ற அடிப்படையில் காலிமுகத்திடலில் நாட்ட பெரிய திட்டம் . யாழ்ப்பாணத்திலிருந்து பனையோடு அதற்குரிய மண்ணையும் கொண்டுவந்து நாட்டினார்கள். அது மிகக்கஷ்டப்பட்டு தான் மெல்ல மெல்ல வளர்ந்து சில சந்தர்ப்பங்களில் பட்டுப் போகும் நிலையில் காணப்படுகிறது என்பது தான் உண்மை. அந்த பனையே யாழில் இருந்திருந்தால் அது விறு விறு என்று வளர்ந்து இப்போது கள் இல்லை சகல பயனும் அனுபவித்திருக்கலாம்

அதுதான் எங்கெங்கு என்னென்ன வளர முடியும் என்று விதிமுறை இருக்கிறதல்லவா? அதெனடிப்படையில் என்ன தான் குறிப்பிட்ட பிரதேச வளங்களை வேறு எங்கும் எடுத்துச்சென்று அதனை பயன் தருமாறு திணித்தாலும் அதன் பயன் அனுபவிப்பது கடினம். மாறாக அதனை பராமரிக்க வேறு விதமாக செலவழிக்க வேண்டிவரும் என்பது புரிந்திருக்கும்

கலகலக்கிய கப்பல் பயணம்

இதை கேட்டவுடன் கலகலப்பாக , சந்தோசமாக அமைந்த பயணம் பற்றி சொல்லப்போறன் எண்டு மட்டும் நினைக்க வேண்டாம், எல்லா வயிறும் கலங்கி, நெஞ்சு பதறி, உயிரையே கலக்கி வந்த பிரயாணக்கதைதான் அது.
அன்று நான் நினைகின்றேன் ஒன்பது மணி இருக்கும் என்று . சூரியன் வானொலியில் ஒரு அறிவிப்பு. யாழ் மக்கள் எதிர்பார்த்திருந்த அறிவிப்பு தான் அது. ஏனென்றால் 2006 ஆவணி மாதம் திடீரென்று ஏ9 பாதை பூட்டு போட்டவுடன் யாழ்ப்பாணத்திற்கு வந்து வெளியிலே செல்ல முடியாமல் முடங்கி போயிருந்தனர் மக்கள். தொழில்களில் விடுமுறை பெற்றும் பல்கலைகழகங்களில் விடுமுறை பெற்றும் மற்றும் உறவினர்களை பார்க்கவும் வந்திருந்த அந்த மக்கள் எதிர்பாத்த அறிவிப்பை சூரியன் எப். ம். வாமலோசனின் குரலால் வானலைகளில் தருகின்றது.

"இன்று காங்கேசன்துறையிலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு கப்பல் ஒன்று பயணமாக உள்ளது. யாழிலிருந்து வரவிருக்கும் பயணிகள் உங்கள் பயணங்களுக்கான ஆயத்தங்களுடன் சிங்கள மகாவித்தியாலயம் வருமாறு வேண்டப்படுகின்றீர்கள்"

இது யோதியின் காதுக்கும் எட்டியது.
யோதி அப்ப நெல்லியடியில நிண்டவன். போன வேகத்தில கிளவிதோட்டத்துக்கு சைக்கிளை திருப்பிக்கொண்டு ஓடிக்கொண்டு போறான். வழியில அவன்ட நண்பர்கள் "என்னவாம் கப்பல் ஓடுதாம்........ என்ன போறதுக்கு ஆயத்தமோ?" , "இதெங்க ஓடுறது.... இப்பிடித்தான் எத்தனை நாள் சொல்லி போட்டாங்கள்..... " என்று எத்தனையோ எத்தனையோ உரையாடல்கள், இதெல்லாம் சைக்கிளை உதைத்து உதைத்து ஓடி ஓடி கதைத்த வரிகள். இதில யோதியின் நண்பர்களில் செல்லம் சீலன் நெல்லியடி தபால் அலுவலகத்திக்கு முன்னால கண்டவை. இவையோட கொழும்பில இருந்து போயிருந்த ரஜீவனும் வந்து கொண்டு இருந்தவர். அவருக்கு கப்பல் ஓடுற விஷயம் அப்ப யோதி சொல்லுறபோதுதான் தெரியும். "அட அட அப்பிடியாமே........., இஞ்சை விடுங்கடா..." என்று சந்தைக்கு வெளிக்கிட்ட ரஜீவன் யோதியுடன் இணைந்து கிளவிதொட்டம் போக ஆயத்தம்.
" "இனி வெளிக்கிட்டு...., யாழ்ப்பாணம் போய்...., அங்க பெருவாரியாக சனம் நிக்கும்..., அதுக்குள்ளே நீங்க போறது சந்தேகம் தான்..., எண்டாலும் போயிட்டு வாங்கோ " " இது செல்லத்தின் நக்கலான வரிகள். சரி என்று கூறிவிட்டு ரஜீவனோடு யோதி வீடு போனது தான் ஏதோ கைக்கு எட்டிய உடுப்புக்களையும் பொருட்களையும் எடுத்துக்கொண்டு யோதியின் நண்பர்கள் எல்லாம் ஒரு வாகனம் ஒழுங்குபடுத்திக்கொண்டு கிளவிதோட்டத்தில தாசனையும் ஏத்திக்கொண்டு புலோலி ,மந்திகை, பருத்தித்துறை கடைசியாக நெல்லியடியில் நிசுவையும் ஏத்திக்கொண்டு யாழ்ப்பாணம் நோக்கி வாகனம் ஓடுது. அப்ப சரியாக 11 மணி , பிந்திப்போச்சு எண்டு எலோருடைய வாயும் ஆளுக்கு ஆள் புறுபுறுத்துக்கொண்டிருக்க வாகனமும் வேகமாக ஓடுது.

மூத்தவிநாயகர் கோவிலுக்கு கிட்ட முதல் ஆரம்பம்;
வாகனப்பயணம் தானே எல்லாரும் பாட்டு பாட ஆயத்தம் எண்டு மட்டும் நினைக்க வேண்டாம். முதலாவது சோதனை ஆரம்பம். சோதனை எண்டால் பயணிகள் கொண்டு போற பயணப்பொதி பரிசோதனை. சோதனைக்கு வாகனம் மறிக்க அதை டிரைவர் கவனிக்க இல்லை. கடைசி நேரத்தில தான் கவனிச்சுபோட்டு மறிக்க ஆமிக்காரனுக்கு கோவம் வந்திட்டுது, "வாகனத்தை தொடர்ந்து பயணிக்க விடமாட்டன்" எண்டு ஆமிக்காரன் சொல்ல, யோதியும் நிசுவும் சும்மா கொஞ்சம் சிங்களம் தெரியும் எண்டதால வாயை குடுத்து கதைக்கினம். "இல்லை சேர் நாங்க கொழும்புக்கு போறதுக்கு போறம், கப்பல் இண்டைக்கு ஓடுதாம் அதால கொஞ்சம் வேளைக்கு போகவேணும் " எண்டு தங்களுக்கு தெரிஞ்ச சிங்களத்தால ஒருமாதிரி சொல்லி முடிச்சினம். அது மட்டும் இல்லாமல் " டிரைவர் விட்டது பிழை தான்" எண்டும் கொஞ்சம் சொல்லி சமாளிக்க, ஆமிக்கு கொஞ்சம் புளுகம். ஒருமாதிரி எங்களை விட சம்மதிச்சாலும் கப்பல் உண்மையாக தான் ஒடுதோ எண்டு அவனுக்கும் சந்தேகம், இருந்தாலும் இந்த யோதி, நிசுவின் சிங்களத்தில் ஒரு நம்பிகையில "சரி எல்லாரும் போய்விட்டு வாங்கோ, ஆனால் டிரைவர் இந்த பாதையால திரும்பி வரேக்குள்ள நான் பார்க்கிறன் " எண்டு சொல்லி அனுப்பி வைச்சான். "அப்பாடி ஒருமாதிரி விட்டுபோட்டான் , ஆனால் அவனுக்கே கப்பல் ஓடுறது சந்தேகம் மாதிரி இருக்கு இக்கணம் வாகனமும் பிடிச்சுக்கொண்டு போறம், என்ன நடக்குதோ தெரிய இல்லை" எண்டு தேவமலர் அன்டி பின்னுக்கு இருந்து சொல்ல "அது சூரியன் சொன்னது தானே அவங்க சும்மா சொல்ல மாட்டான்கள்" இது அங்கிருந்த இளவட்டங்களின் நிச்சயப்படுத்தும் கருத்து இது , இத்தனைக்கும் வாகனம் ஓடிக்கொண்டே இருக்கு. தொடர்ந்து வல்லை வெளி, வல்லை பாலம் , கோப்பாய் எண்டு பல சோதனைகளை தாண்டி வாகனம் பறக்குது எண்டு தான் சொல்ல வேணும். ஏனெண்டால் பிந்திப்போச்ச்சு. பிந்திக்கொண்டு போனாலும் வாகனத்துக்குள்ள நக்கலுக்கும் குறைவில்லை. யோதி, நிசு கதைச்ச சிங்களத்துக்கு தான் அங்க நக்கல் கூட, "என்னத்த இவங்கள் கதைசான்களோ தெரியாது சிம்பிளாக அவங்களும் விடுறாங்கள்" என்று ஒருவர் நக்கல் பண்ண , மற்றவர் "இவங்கள் கதைகிறான்களோ இல்லையோ கொஞ்சம் கூடச் சிரிகிறானகள்" என்று எல்லாம் ஒரே நக்கல் அடிச்சு ஒரே சிரிப்பொலிகள், "தம்பிமாரே சிரிப்பை நிப்பாட்டுங்கோ இப்ப என்ன கஷ்டப்பட போறீங்களோ தெரியாது " இப்படி தேவமலர் அன்ட்டியும் ராஜேஷ் அன்டியும். இப்படியே கதைச்ச்சு கதைச்சு கொண்டிருக்க சிங்கள மக வித்தியாலயம் வந்த உணர்வு. ஏனெண்டால் சனத்தை கண்டாச்சு. சரி வந்திட்டுது எண்டு எல்லாரும் சொல்ல டிரைவர் "கொஞ்சம் பொறுங்க இன்னம் எவ்வளவு சுத்தி போக வேணும்....... இந்த பக்க தடை போட்டு மறிச்சு இருப்பானகள் " எண்டு சொன்னார், "சரி எண்டு டிரைவரும் சுத்திவளைச்சு ஓடி வரிசை தொடங்கும் இடத்தில விட எல்லாருக்கும் அரோகரா சொல்லிப்போட்டு வீட்ட போகலாம் எண்டு தான்
எண்ணம். ஏன்னென்றால் அவ்வளவு சனம் .வல்லிபுரகோவில் தீத்தக்கரை பரவாயில்ல, சனம் கொஞ்சம் பரவி இருக்கும், எம்பெருமானை எங்கிருந்தும் பார்க்கலாம். இது டிக்கெட் கொடுக்கும் இடம் ஒரு இடம் சனத்தின்ட வரிசையோ எங்கெங்கு ஒழுங்கை எல்லாம் போகுதோ அங்கெலாம் வளைந்து வளைந்து போகிறது. என்ன செய்யலாம் எண்டு எல்லோருக்கும் ஏக்கம், அப்ப யோதியின் இன்னொரு நண்பன் ஏழாலை மதி அங்கு வந்திருதவன். அவன் யோதி நிசு எல்லாம் ஒன்டாக படிக்கிறதால அது சம்பந்தமான ஒரு கடிதம் ஒண்டு எல்லாருடைய பெயரும் போட்டு பணிப்பாளரிடம் கையெழுத்து வாங்கி கொழும்பில தயா மூலமாக தொலைநகல் எடுத்து வைச்சிருந்தவை, இதை முதலே திட்டம் போட்டு மதி யோதி எடுத்து வைத்ததை தூக்கிக்கொண்டு யோதியும் மதியும் முன்னுக்கு போகினம். முன்னுக்கு போறது கஷ்டம் எண்டாலும் போறதுக்கு 2 பேரும் திடசங்கற்பம். போகப்போக ஆமிக்காரன் "பின்னுக்கு போங்க பின்னுக்கு போங்க " எண்டு கொடடன் கொண்டு வர்றதும், "இல்லை மாத்தையா இல்லை மாத்தையா" எண்டு மன்றாடி முன்னுக்கு போறதுமாக இருக்கும்போது யோதியின் நல்ல காலம் ஆமி பிரிகேடியர் அந்த இடம் வந்தது, வந்ததும் அத்தாட்சிபடுத்திய கடிதம் கொண்டு வந்த சனமெல்லாம் தங்களை உறுதிப்படுத்தி பிரயாணத்தை விரைவு படுத்த ஒரே அல்லோலகல்லோலம். அதுக்குள் யோதியும் ஒருவன் அவனோட மதியும். யோதிக்கு ஒரு கட்டத்தில 'பேசாமல் போகலாமோ'
என்று அலுப்புத்தட்டினாலும் விட்டு விலத்த முடியாத நிலை.ஏனென்றால் பின்னுக்கு மதியின்ட அப்பா பின்னுக்கு இருந்து தள்ளி தள்ளி விட்டு ஒரே உத்வேகம். இப்படியே இருக்க ஒரு மாதிரி யோதியின் கடிதம் பிரிகேடியர் கையில். என்ன இது எண்டு கேட்க யோதி சிங்களத்தால விளக்கம்."சி சி இது சரி வராது 36 பெரும் போறது எண்டால்............. "எண்டு மறுத்து விட்டது பிரிகேடியரின் வாய். திரும்பவும் யோதி மதி தொடர்ந்தும் மன்றாட்டம் "உண்மையாக இந்த கடிதம் அரசாங்க அதிபருக்கும் அனுப்பினது" எண்டு அரசாங்க அதிபருக்கு முகவரியிடப்பட்டத்தை யோதி பிரிகேடியருக்கு காட்ட "அப்பிடி எண்டால் அவரோட தான் கதைக்க வேணும்...... " பிரிகேடியர் நழுவி விட்டார், அப்ப சரி எண்டு சொல்லி போட்டு அரசாங்க அதிபர் திரு.கணேஷ் கிட்ட போக முயற்சி. அதுக்கு ஆமித்தடை விட்டால் தானே. "இல்லை இல்லை பிரிகேடியர் தான் கதைக்கச் சொன்னவர் " எண்டு தடை போடும் ஆமிக்காரர்களுக்கு ஒவ்வொன்றாக சொல்லிச்சொல்லி ஒரு மாதிரி கிட்ட போனால் அந்தாளும் "36 பேரு ஒன்றாக போனால் மற்றவை எல்லாரும் என்ன செய்யுறது " எண்டு மறுப்பே பதில். எண்டாலும் யோதி மன்றாட கொஞ்ச நேரம் இந்த இடத்தில நில்லுங்க பார்ப்பம் எண்டு சொல்லிபோட்டு அந்த ஆள் கொஞ்ச நேரம் போக காண இல்ல.'அது சரி அந்த ஆளும் என்ன செய்யுறது......இவ்வளவு சனம் நிண்டால் ஒரேயடியாக 36 பேருக்கும் சந்தர்ப்பம் கொடுக்க முடியாது தானே "எண்டு யோதி மனதில் நினைத்துவிட்டு,, அந்த இடத்தில யோதிக்கு ஒரு திட்டம் வந்து அதை நிறைவேற்றகூடியது மாதிரி எல்லா வேலையையும் முடிச்சு போட்டு வெளியில போறான்.அந்த திட்டத்தின் வழியில் எல்லாரையும் வரச்சொன்னான் யோதி. அதுக்கு மதியும் ரஜீவனும்தான் சம்மதம். நிசுவும் முயற்சி எடுத்து அது பலனளிக்கவில்லை. சரி யோதியோடு மதி,ரஜீவன் மூன்று பேரும் உள்ளுக்குள் போய்விட்டினம். மற்றவர்கள் "முதல் போற கப்பல் தானே எப்பிடி போகுது எண்டு பார்த்துப்போட்டு பிறகு ஏறுவம் " என்றும் "என்ன நடக்குதோ தெரியாது.... பயம் தானே"என்றும் சொல்லி பயணம் தேவை இல்லை எண்டு வீட்டுக்கு திரும்பிவிட்டினம்
ஆனால் உள்ளுக்குள் போக போட்ட திட்டம் மட்டும் என்ன எண்டு மட்டும் கேட்டு போடதீங்கோ. ஏனென்றால் இப்பவும் அப்பிடி யார் யாரோ வாறதகக்கேள்வி. இப்படியே உள்ளுக்குள் போனாலும் இண்டைக்கு ஏத்துவாங்களோ.... இல்லையோ.... எண்டு அப்பவும் நம்பிக்கை இல்லை.அப்பவும் செல்லம் தபால் அலுவலகத்துக்கு முன்னாலை நக்கல் அடித்த வரிகளை ஞாபகப்படுத்திக்கொண்டே இருந்தான் ரஜீவன். கொஞ்ச நேரம் போக திரும்பவும் பயணப்பொதி பரிசோதனை, அடையாள அட்டை பரிசோதனை, அடையாளப் பதிவு எல்லாம் முடிச்சு எல்லாரையும் பஸ்ஸில ஏத்தியாச்சு. அப்ப சரியாக 4 மணி. ஒரு மணித்தியாலம் பஸ்ஸுக்குள்ள நிக்க வைச்சு பிறகு அதுவும் ஓட ஆரம்பிக்கிறது. அது பருத்தித்துறை போகுதோ காங்கேசன் துறை போகுதோ எண்டு எல்லாரும் யோசிக்க அது கே.கே.ஸ் வீதியில போக எல்லாருக்கும் எங்க போகுது எண்டு நிச்சயமாகி விட்டது. அது மட்டும் இல்லாமல் இந்த பஸ்ஸில போற எல்லாருக்கும் ஆமிப்பாதுகாப்பும் கொடுத்துத்தான் அனுப்பி வைச்சது. ஒரே ஓட்டமாக ஓடி அது ஒரு பாடசாலையில மறிக்கப்பட்டது. என்ன பாடசாலை எண்டு யோதிக்கோ அல்லது அவனோட போன ரஜீவனுக்கோ தெரியாது.
அங்கயிருந்த ஆக்கள் அது தெல்லிப்பளை யூனியன் கல்லூரி எண்டு கதைச்சதை மெல்லவாக கேட்டு தெரிஞ்சு கொண்டான் யோதி. 6 30 மணிக்கு அங்கு இறக்கிவிட்டு 'எப்ப எத்தினை மணிக்கு பிரயாணம்' எண்டு யாரையும் கேட்டால் யாருக்கும் தெரியாது. "இரவிரவாக இங்க தான் படுக்கையாம் " "கப்பல் ஏதோ இறக்கி கொண்டு இருக்குதாம் அதுக்கு பிறகுதானாம் பயணம் " எப்ப போறது எண்டு பாதுகாப்பு காரணங்களுக்காக சொல்ல மாட்டாங்களாம்........., திடீரென்று எத்துவாங்கலாம்..... " என்றெல்லாம் அங்கும் இங்குமாக கதைகப்படுவது யோதியின் காதுக்கும் கேட்கிறது. "என்னவோ ஏதோ கொண்டு வந்தவங்கள் எப்பிடியோ கூட்டிக்கொண்டு போவாங்கள் தானே " எண்டு யோதி மனசுக்குள் எண்ணிக்கொண்டே இருக்கிறான். இரவு ஏதோ கொஞ்ச சாப்பாடு ஆமிக்காரன் கொடுக்க அதையும் கொஞ்சமாக சாப்பிட்டுபோட்டு எல்லோரும் அங்கும் இங்குமாக கூடி கூடி கதைச்சு கொஞ்ச நேரம் படுக்க இரவு 2 மணி இருக்கும் எல்லாரையும் நித்திரையால எழுப்பி ஆயத்தப்படுத்த சொல்லியாச்சு. திரும்பவும் பயணப்பொதி பரிசோதனை,அடையாள அட்டை பரிசோதனை, பதிவுகள், அதுமட்டும் இல்லாமல் ஒரு உறுதி மொழி கையெழுத்தும் வாங்கப்படுகிறது அதாவது "பயணத்தின்போது வரும் எந்தவிதமான இழப்புக்களுக்கும் சம்மந்தப்பட்டவர்களே பொறுப்பாளிகள், உயிரிழப்பு ஏற்பட்டாலும் அதை சம்மந்தபட்ட பிரயாணியே ஏற்க வேண்டும் "என்று. இதை வாசித்தவுடன் யோதிக்கு கலக்கம் இதில கையெழுத்து வைக்காமல் விட்டால் கொழும்பும் இல்லை திருகோணமலையும் இல்லை எண்டு யோதி நினைச்சு ஒருவாறாக பதறிப்பதறி கையெழுத்தை வைச்சிட்டு பஸ்ஸில் ஏறுவதுக்கு பிறகு ஒரு வரிசை. அதுக்கு பின்னால ரஜீவன் , மதி. சனம் எல்லாம் முண்டி அடிச்சு பஸ்ஸில் ஏறுதுகள். அதோட யோதி குழுவும் ஏறியது. பஸ் திரும்ப ஓடுது. துறைமுகத்தை நோக்கி பஸ் ஓடிக்கொண்டே இருக்கு;

துறைமுகத்துக்கு ஓடும்போது சனம் எல்லாம் விடுப்பு பார்க்குதுகள். "அது தான் அந்த பழைய தொழிற்சாலை இதெல்லாம் இருந்திருந்தால் எங்கட நாடு எப்பிடியெல்லாம் முன்னேறி இருக்கும் " எண்டு வயதானவர்கள் தங்களுக்குள் கதை. "என்ன செய்றது இது தான் தமிழனின் தலை எழுத்து " "இல்லாட்டில் இவ்வளவு கஷ்டப்படுங்களோ" எண்டு பயண கஷ்டத்தை நினைவுபடுத்திக்கொண்டும் சனங்கள். இப்படியே கதைக்க கப்பலுக்கு கிட்ட பஸ் வந்திட்டுது. ஒருத்தர் பிடிச்சு பிடிச்சு ஆக்களை கப்பலுக்குள் ஏத்துகின்றார்.
கப்பலுக்குள் ஏறும்போது எல்லாருக்கும் செவ்விளநிக்கலரில ஏதோ
கொடுத்தாங்கள், அது ஆபத்தில நீந்திறதுக்காக எண்டு என்று யோதி கேட்டு தெரிஞ்சு கொண்டான் . பொடியள் எல்லாம் அங்க போறதும் இங்க போறதும் ஓடித்திரியுறாங்கள். இத்தனைக்கும் அது பலசரக்கு கப்பல். "வழமையாக திருகோணமலையிலயிருந்து சாமான் கொண்டு வந்து...., எல்லாம் இறக்கிபோட்டு..., யாழ்ப்பாணத்தில இருந்து ஏதும் பாரத்துக்கு போட்டுக்கொண்டு போறவங்கள் இந்தமுறை சனத்தை போட்டுக்கொண்டு போறாங்களோ?......... " என்று தாத்தா குழு ஒண்டு கதைச்சுக்கொண்டு இருக்கு. இதெல்லாத்தையும் யோதியும் காது குடுத்து கேட்டுக்கொண்டு எங்க இருக்கலாம் எண்டு யோசிக்கின்றான். இருக்க எல்லாம் சொகுசுக் கதிரை ஒண்டும் இல்ல. முன்னுக்கு இருந்தால் எல்லாம் பார்க்கலாம் எண்டு நினைச்ச யோதி குழு கொண்டு போன பயணப்போதியை தலையணை போலவும் சின்ன புட்டி மாதிரி ஒன்று இருந்துது, அதையும் பிடிச்சுக்கொண்டு இருந்தாச்சு. சரியாக கப்பல் 6 30 மணிக்கு வெளிக்கிடுது மாதிரி உணர்வு. என்னெண்டால் கப்பல் அசையுது.
கொஞ்ச நேரம் போக கப்பலுக்குள் ஏதோ சத்தம் கேட்கிறது. எல்லாரும் நங்கூரம் எடுக்கிற சத்தம் தான் எண்டு சொல்லுறது யோதிக்கும் கேட்கிறது. அப்படியே கப்பலும் கொஞ்சம் கொஞ்சமாக தன் திசை திருப்பும் போது கப்பல் வெளிக்கிடுகிறது எண்டு எல்லாரும் தம் தம் கடவுளை வேண்டுகின்றனர். கப்பலும் ஓட ஆரம்பிக்கிறது. ஒரு குறிப்பிட்ட தூரத்தை நோக்கி கப்பலிலிருந்து சக்திமிக்க ஒளியை அனுப்பியபடி சிறிதுசிறிதாக வேகத்தைக்கூட்டி கப்பல் ஓடுகிறது. சனம் எல்லாம் புதினம் பார்க்குதுகள். சிறிது தூரம் உள்ளே போனவுடன் யோதி யாழ்ப்பாண கரையோர அழகாய் கண்டு வியந்தபடி மதி,ரஜீவனுடன் பம்பல் அடிச்சுக்கொண்டு கப்பலின் கரையிலே நிக்கிறான். கடலில் ஓடும் மீன்களும் மேலே வந்து போவதும் கப்பல் கடலை கிழித்துக்கொண்டு போகும்போது அதன் நுரைச்செறிவிலே மீன்கள் துள்ளி விளையாடுவதுமாக இருப்பதும் யோதி ரசித்த காட்சிகள். இப்படியாக கப்பலும் நடுக்கடலுக்கு போய் விட்டது. கப்பலின் ஆட்டம் சிலருக்கு ஒத்துக்கொள்ளவில்லை போல. சத்தி எடுப்பதுக்கு முதலின் வயதான பெண்கள் ஆரம்பம். ஒருவரை ஒருவர் பார்த்த படியாக சிலர் சத்தி எடுத்ததை காணக்கூடியதாக இருந்தது. அதற்குள் சில ஆண்கள் வீரப்பேச்சு. இப்படியே கொஞ்ச நேரம் போக கப்பலின் ஆட்டம் ஒரு பக்கம். திறந்தவெளியில் மக்கள் இருப்பது அந்த வேகமான காற்று ஒரு பக்கம் அந்த காற்றோடு கடல் தண்ணீர் உள்ளுக்குள் அடிப்பது ஒரு பக்கம். கரையிலே நின்ற எல்லோரும் தலை முழுக்க முழுக்கு.யோதியும் தப்ப இல்லை. தண்ணி அடிச்சு காற்றும் கூடக்கூட அடிக்க எல்லோருக்கும் சத்தி பரவத்தொடங்கியது. கப்பலோட்டிகள் சத்தியை தவிர்க்க மருந்து கொடுப்பதும் சத்திக்கான போலித்தின் பைகள் கொடுப்பதுமாக ஒரே வேகமாக செயற்பட்டு
கொண்டிருந்தார்கள். யோதியும் அதுக்குள் விதிவிலக்கானவன் ஆகவில்லை.மற்றவர்களை பார்த்து ஒருபக்கம்,கப்பலின் ஆட்டத்தில் ஒருபக்கம் என்று சத்தி எடுத்து ஏலாதவனாகினான் யோதி. பல்லும் பல்லும் மேலும் கீழுமாக டக்டக் என்று அடிச்சது வேகமாக. கை கால் எல்லாம் பதறுகிறது. எழுந்து நிக்க முடியாமல் பதறும் யோதி மற்றவர்களும் கஷ்டப்படுவது பார்த்து " என்ன செய்வது " என்று மெதுவாக தண்ணீர் வீசி அடிக்காத இடம் தேடி மெல்ல மெல்ல நடந்து போகின்றான். அப்போது ரஜீவன் ,மதி எல்லோரும் கஷ்டப்படுவதை அவதானிக்கிறான். இத்தனை கஷ்டத்துக்கும் காரணம் இது பயணிகள் கப்பலாக இருந்திருந்தால் இப்படியாக இருக்காது என்று சனம் கதைப்பது காதில் விழுகிறது யோதிக்கு. மெல்ல மெல்ல நடந்து போன யோதி பயணிகளின் பயணப்பொதி அடுக்கியிருந்த இடத்தில் ஓரிரண்டு பொதியை எடுத்து கொஞ்சம் விலத்தி வைத்துவிட்டு அதனிடையில் சென்று தண்ணீர் படாமல் ஒதுங்கி படுத்திருந்து தூங்கிவிட்டான். சரியாக 2 மணி இருக்கும் தூக்கம் கலைந்த யோதி மதியை,ராஜீவை தேடுகின்றான் . அவர்களை காண இல்லை, "எங்கிருந்து கஷ்டப்படுகின்றார்களோ? "என்று அங்குமிங்கும் பார்த்தால் காண இல்லை. எழுந்து பார்த்தான் எங்கும் கடற்கரை தெரிகிறதா என்று. அதுவும் தெரியவில்லை. என்ன கஷ்டத்துக்கு வந்தமோ என்று மனதில் எண்ணியவனாய் மீண்டும் தூங்கலாம் என்றால் அதுவும் முடியவில்லை. அப்படியே களைத்தவனாய் இருக்கின்றான். இவ்வளவு நேரமும் சாப்பிடாதுவிட்டாலும் பசி அவனுக்கோ யாருக்கும் வரவில்லை. ஏனென்றால் யாருக்கும் மனம் இல்லை. சரியாக 4 மணி இருக்கும் செல்போனுக்கு கவரேஜ் வந்திட்டுது எண்டு சிலர் கதைப்பது யோதிக்கு கேட்கிறது. சரியாக ஒரு மாத காலம் செல்போனை ஒரு விளையாட்டுபொருளாக பாவித்து வந்த எல்லோரும் அதை இயக்க ஆரம்ம்பிக்கின்றார்கள். எல்லோரும் எடுத்து யாழ்ப்பாணத்தில் உள்ள உறவுகளுக்கு தாங்கள் திருகோணமலையை நெருங்கிவிட்டதாக சொல்லிக்கொண்டே இருந்தார்கள். யோதியும் ரஜீவனும் ஊருக்கு வந்ததை சொல்லி சந்தோசமடைகின்றார்கள். " இன்னும் ஒன்றரை மணித்தியாலம் பிடிக்குமாம் அப்பிடித்தான் கடற்படை சொன்னதாம்" சனம் எல்லாம் கதைக்குதுகள். இப்படியே கதைச்சு கொண்டு இருக்க "எல்லாரும் செல்போனை நிப்பாட்டுங்கோ" என்று தகவல் வருகிறது. கடற்படை "எல்லாரும் கீழுக்கு படுங்கோ" எடும் சொல்லுறாங்கள். எல்லாருக்கும் பயம் பரவத்தொடங்குது. கடற்படை முன்னுக்கு கொஞ்ச ஆயுதம் கொண்டு வந்து பூட்டுறாங்கள். ஒருத்தர் முன்னுக்கு நிண்டு ஏதோ எல்லாம் தொலைவு பார்க்கும் கண்ணாடி பிடிச்சுப்பார்க்கிறார். துப்பாக்கியால் குறி பர்ர்க்கிறார் .
" இதென்ன கஷ்டம் கடவுளே எல்லாரையும் படுக்கவைச்சு சண்டை பிடிக்கப்போறான்களோ" எண்டு சனம் எல்லாம் முழுசிக்கொண்டே இருக்குதுகள். "அம்மாவுக்கும் சொல்லிப்போட்டன் வந்து சேந்திட்டம் எண்டு அவங்கள் துவக்கு பிடிக்கிறத பார்த்தால் இப்போதைக்கு போய் சேர மாட்டம் போல " என்று யோதி மனதில் பயந்து கொண்டான். ரஜீவனுடனும் பகிர்ந்துகொண்டான். ரஜீவனும் " ஒ ஒ இவங்களுக்கு ஏதும் தகவல் வந்து தான் எங்களையும் படுக்க வைச்சு எதோ செய்யுறாங்கள், ஆனால் எங்களை பயப்படவேண்டாம் எண்டு மட்டும் அடிக்கொருமுறை சொல்லுறாங்கள் பார்ப்பம்" எண்டு மெல்லவாக கதைக்கின்றான். இப்படியே போக திருகோணமலை கடற்கரையையும் கப்பல் மெல்ல மெல்ல சென்றடைகிறது. கரையில் எக்கச்சக்கமான செய்தியாளர்கள். கப்பலை படம் பிடிக்கிறாங்கள்.
மெல்லவாக எல்லோரும் இறக்கப்படுகின்றார்கள். எல்லோரும் ஏதோ எல்லாம் பெற்றவர்கள் போல இறங்கி எங்கெங்கு போகவேண்டுமோ அங்கங்கு போய்ச்சேர அந்தந்த பஸில் ஏறிக்கொள்ளுகின்றார்கள். தங்கள் உறவுகளுக்கு தாங்கள் வந்து சேர்ந்த கதைகளை சொல்லிக் கொண்டிருந்தவாறே யோதியின் கொழும்பு பயணம் தொடர்கிறது.

கரவெட்டி ---குறிப்புக்கள் சில

கரவெட்டி ;வதிரி உடுப்பிட்டி துன்னாலை கரணவாய் என்று பெயர் சொல்லக்கூடிய கிராமங்களை எல்லையாக கொண்டு வடமராட்சியில் ஒரு முக்கிய கிராமம் தான் இது.

இந்த கரவெட்டியில் நெல்லியடி,சம்மந்தர் கடையடி,கிளவிதோட்டம்,
யார்க்கரை,அத்துளு,கட்டைவேலி என்றவாறாக சிறு சிறு
கிராமக்குடிகளை கொண்டு விளங்குகிறது. ஊர் வழக்கில் நெல்லியடியை கரவெட்டி என்று சொல்லுவதில்லை. அதை நெல்லியடி என்றே சொல்லிக்கொள்ளுவார்கள்.

கேவளை, தூவெளி, நுகவில் வயல் பகுதி, சாமியன் அரசடி, கொவில்சந்தை, போன்றவற்றை எல்லை கோடுகளாக கொண்டு அழகிய கிராமமாக விளங்குகிறது

இதில் கேவளை சந்தி முந்தி ஒரு முக்கியமான இடமாக இருந்திருக்கின்றது.
ஏனென்றால் சாவகச்சேரி ஊடாக முந்தி பஸ் ஓடிய காலத்தில் கனகம்புளியடி, கப்பூது,அந்தணதிடல் ஊடாக இந்த சந்திக்குதான் பஸ் எல்லாம் வந்து போறதாம்.அது மட்டும் இல்லாமல் யாழ்ப்பாணம் நகரத்திலிருந்து போற பஸ் கூட புத்தூர் வழியாக வந்து கப்பூது வந்து இந்த சந்தி வந்து தான் பருத்தித்துறை போகும். அப்படியாக இந்த சந்தி ஒரு முக்கியமான ஒரு இடமாக விளங்கியிருந்தது என்றால் மிகையாகாது.


அதுமட்டும் இல்லாமல் இந்த சந்தியை ஆயம் என்றும் ஆயக்கடவை என்றும் ஆயச்சந்தி என்றும் சொல்லுவது வழமை. கரவெட்டியின் பெயர் வரக்காரணம் இந்த ஆயக்கடவை என்றும் சொல்லப்படுகிறது.அதாவது நாட்டின் உள்ளூர் வழிகள் மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் பற்றி கூடிய கவனம் செலுத்திய ஒல்லாந்தர்கள் இந்த இடத்தில் கிரவெட்(Gravet) நிறுவியிருந்தார்கள். இந்த கிரவெட்(Gravet) தான் பின்னர் திரிவடைந்து கரவெட்டியானது என்றும் ஒரு சான்று கூறப்படுகிறது. ஆனால் இன்றுவரை சரியான ஒரு காரணம் அறியப்பட்டதாக தெரியவில்லை.

எதுஎப்படியாகயிருப்பினும் இந்த கரவெட்டியின் தெற்கு வாயிலாக இருந்த ஆயக்கடவை அன்றும் இன்றும் ஒரு முக்கியமான தளமாக இருந்துகொண்டிருக்கிறது என்பது உண்மை. ஆனால் இதனூடாக பஸ் ஓட்டங்கள் கொஞ்சம் இப்ப கொஞ்சம் குறைந்துவிட்டது.

கரவெட்டியில் கோவில்களுக்கும் குறைவு இல்லை என்று தான் சொல்ல வேண்டும், வெல்லனிற்பிள்ளையார் கோவில்,கிளவிதோட்டம் விநாயகர் கோவில்,தச்சந்தோப்பு சிந்தாமணி விநாயகர் கோவில்,யார்க்கரை விநாயகர் கோவில்,அத்துளு அம்மன் கோவில்,நுணுவில் பிள்ளையார் கோவில்,சாமியன் அரசடி வைரவர் கோவில் என்று கோவில்களின் பெயர் படலம் சென்றுகொண்டே இருக்கிறது.
விநாயகர் வழிபாடு, மற்றும் அம்மன் வழிபாடு இங்கு முக்கியத்துவம் பெற்று விளங்குவதோடு கிராமிய தெய்வங்கள் வழிபாடும் இங்கு காணப்படுகிறது.

கரவெட்டியில் அறிவுசார் விருத்திக்காக பாடசாலைகளுக்கும் குறைவில்லை.கரவெட்டி விக்னேஸ்வரா கல்லூரி, கரவெட்டி மாணிக்கவாசகர் வித்தியாலயம்,கட்டைவேலி யார்க்கரை விநாயகர் வித்தியாலயம்,திரு இருதயக்கல்லூரி என்று பாடசாலைகளும் விளங்கி இருக்கிறது. இந்த பாடசாலைகள் கரவெட்டியில் பல்வேறு அறிவாளிகளை உருவாக்கி கரவெட்டியின் திறமைசார் பொக்கிசங்களாக இருப்பது இங்கு நினைவுகூரவேண்டிய ஒன்று.

இப்படியாக கரவெட்டி பற்றி நான் அறிந்த விடயங்களை எனது முதல் தொகுப்பாக தருகின்றேன்.இன்னும் விடயங்கள் அறியும் போது உங்களுடன் பகிர்ந்து கொள்ளுவேன்.அது மட்டும் இல்லாமல் இன்னும் பல வேறு விடயங்களுடன் அவ்வப்போது நான் உங்களை சந்தித்துகொண்டே இருப்பேன்

வாழ்த்துக்களும் வணக்கங்களும்

அன்பு நெஞ்சங்களுக்கு என் புத்தாண்டு வாழ்த்துக்களும் வணக்கங்களும் கரவையின் புதிதான நகைச்சுவையான தகவல்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

இன்றிலிருந்து உங்களை நான் கரவையின் குரலாக சந்திக்கின்றேன்