சிகரெட் ஒன்றியம் காட்டமான முடிவு

ஒரே வகை மனிதர் கூடி
ஒற்றுமையை பலமாக்க
ஒன்றியத்தை ஆக்கிடுவார்
ஒன்றியங்கள் உருவாக
நானோ நீயோ என்று
அதிகாரப்போட்டிகளுடன்
குழப்பங்களும் பின்னால் வரும்.
குழப்பங்கள் தலைதூக்க
கலகங்கள் உருவாக
வழக்கங்களில் பல மாற்றம்
எதற்கெடுத்தாலும்
ஒன்றியங்கள் ,சங்கங்களென
எல்லாமே கூடிப்போச்சு
பல்வேறு பெயரெடுத்து
கலகக்காரரும் சங்கம் எடுத்தால்
இது தான் நிலைமை. --ஆனால்
நல்நோக்க சங்கங்களுக்கும்
உலகினில் குறைவில்லை

இப்பிடித்தான் ஒரு ஒன்றியம்
யார் யார் கேள்விப்பட்டீங்களோ தெரியாது
சிகரெட் ஒன்றியமாம் -- அது
எங்க இருக்குது என்று மட்டும் கேட்க வேண்டாம்
எங்க இருக்கு என்று எனக்குமே தெரியாது

வாயாலே ஊதுவதால்
ஊதுகுழலாம்
புல்லாங்குழலாம் - அது
இனிய மகிழ்ச்சியோடு இருப்பதாலாம்
கொஞ்சம் "கிக்" ஆக இருப்பாதால்
"தம்" என்பர் ஒரு சிலர்
இன்னும் பல மறுபெயர்கள் -அது
சொல்லவே கூடாது,
ஒன்றியத்தார் கோவிப்பினம்

அக்கம் பக்கம் பார்த்துவிட்டு
மெதுவாக கடைக்குள் நுழைந்து
பின்புறவாயில் கடந்து
அவசரமாய் ஊதுவர் சிலர்

வாங்கிய சிகரெட்டை
பெருவிரல் நகம் மேலே
தட்டிவிட்டு ஸ்டைலாக(style)
வாயருகில் அமர்த்திவிட்டு
பற்றவைத்து- அதுவும் ஒரு ஸ்டைலாக
கைவிரல்களுக்குள்
தவழும்போதும் ஒரு ஸ்டைலாக

வேண்டிய நட்பெல்லாம்
கூடவந்து சேருமாம்
கூடிய நட்பாலே
பலம் பெற்று வாழலாம் என்று
அடிமையானோர் பலர்

டென்ஷன்(tension)என்று தொடங்கி - அது
வாழ்க்கையின் முடிவுவரை
டென்ஷனாக வாழ்ந்து
சிகரட்க்கே அடிமையாகி
வாழ்வை அழித்துக்கொண்டோர் பலர்

முதற்பழக்க வல்லுனர்கள்
மென்று கொண்டு வாயாலே
சற்று ஸ்டைலாக புகை விடுவர்-பின்
மூக்கால் முயன்று விடுவர்-பின்
கண்ணால் வரும் காதால் வரும்
எத்தனை திறமைகள்
கடற்கரை ஓரத்தில்
கூட்டாக ஒன்று சேர்ந்து
இதமான கதைகளோடு
புல்லாங்குழல் ஊதிவிட்டால்
"தில்"என்பர் ஒன்றியத்தார்


பஸ்சினுள்"புகைப்பிடிக்க தடை"என்று
முன்வாசலில் கொட்டை எழுத்தில் போட்டு
கொண்டக்டர் வாசலில் மெல்ல ஊதி
வாசல் தாண்டி வெளியிலே புகைவிடுவார்
உள்ளுக்குள்தான் தடையென்று
எல்லோருக்கும் நினைவு செய்யும் அற்புத ஆற்றல்
நல்ல ஒரு கொண்டக்டர்

எங்கு தான் புகை விட்டாலும் - அது
எங்கோ காற்றினில் தவழ்ந்து வந்து
எல்லோர் மூக்கிலும் நுழைந்து விடும்
"எல்லோருக்கும் பாதிப்பு
எல்லோரும் புகைபிடிக்கினம்" - இது
வல்லோராம் விஞ்ஞானிகள் கருத்து

நல்ல கதை இது
எங்கள் காசில் சிகரெட் வாங்கி
நாங்கள் ஊதிவிட
நீங்கள் எல்லோரும் இலவசமாய் அனுபவிக்க
நாங்கள் விடமாட்டோம் ...........
சீறுகின்றது சிகரெட் ஒன்றியம்

பாதிக்கும் எண்டது எல்லோருக்கு பொது தானே-ஆனால்
பல காசு நாம் கொடுத்து பெற்று விட்ட சுகத்தை
கஞ்சத்தனத்தோடு
இலவசமாய் அனுபவிக்க விட மாட்டோம் என்று
வன்மையாக கண்டிக்கும் சிகரெட் ஒன்றியம்
தனிமையில் சுகம்தனை பெற்றுடுவோம் நாம்
பொது இடத்தில் இனி இல்லை என்று
கொட்டித்தீர்க்கும் சிகரெட் ஒன்றியம்

அது சரி
பொது இடத்தில் தடை இருந்தும்
அது இன்னும் நிறைவேற்ற
பல காலம் பிடிக்கும் போல
என்ன செய்யலாமென்று
எல்லோரும் தலை பிசைய
ஒன்றியத்தின் முடிவாலே
நல்ல விஷயம் நடக்கும் போல
நடக்கடும் நடக்கட்டும்

No comments: