துஷா நிரந்தரமாக நாற்காலியில் ..............?

துள்ளி விளையாடித்திரிந்த ஐந்து வயது சிறுமி எப்போதும் உற்சாகமாக
ஓடித்திருவாள்.
அன்றைய நாளும் அவள் தன்னுடைய மாமாவின் கடைக்குள் தன்னுடைய அண்ணா மற்றும் தங்கையோடும் ஓடியாடித்திரிந்து விளையாடியிருக்கிறாள்.
திடீரென்று வந்த காவாலிகள் அவளை நாற்காலியில் உட்காரசெய்துவிட்டனர்.
அவளுடைய கனவு நல்ல ஒரு நடனம் ஆடக்கூடியவளாக 
வரவேண்டுமென்பது??????
அவள் அதற்காக கற்றுக்கொண்டுமிருந்திருக்கிறாள் போலும்.
பெற்றோர் அவளின் நல்ல கனவுக்காக ஏங்கியிருந்து இன்று அவளுக்கு நாற்காலியிலிருத்தி பணிசெய்ய வேண்டியதாயிற்று.

                                                 துஷா

கடந்த வருடம் மார்ச் மாதம் நடந்த கோஸ்டி மோதலில் துரத்திக்கொண்டு வந்த கோஷ்டியினர் தாறுமாறாக சுட்டதில் துப்பாக்கி குண்டுகள் அவளுக்கும்
பாய்ந்துகொண்டது.

சுடப்பட்ட வேளையில் அங்கு எல்லோரும் எங்கு எப்படி நின்றார்கள் என்று காட்டபட்டிருக்கிறது நன்றி Daily Mail


மாமாவின் கடையில் துப்பாக்கி குண்டுகள் அவள் நெஞ்சில் பாய்வதற்கு 
முன்னரும் அவள் மிகவும் சுறுசுறுப்பாக உற்சாகமாக ஒடிந்திரிந்த 
ஒளிப்பதிவுகளை வெளியிட்டிருக்கிறார்கள் லண்டன் காவல் துறையினர்.
அம்மாவுடன் கடையில் நின்ற அந்த குழந்தை சுடப்பட்டதால் 
பிரித்தானியாவில் அது பரபரப்பானது.
மிகக்குறைந்தவயதில் பிரித்தானியாவில் முதன்முதலாக சுடப்பட்டிருக்கிறார்.
அதுவும் ஒரு பரபரப்பிற்கு காரணம்.ஒரு காலத்தில் கோஸ்டி மோதல்கள் சர்வசாதரணமாய் இருந்திருக்கிறது.
பின்னர் பிரித்தானிய பொலிசாரின் முயற்சியால் அது கொஞ்சம் 
குறைக்கபட்டது என்றே சொல்ல வேண்டும்..இருந்தாலும் இதெல்லாம் அறியுமா இந்த பச்சிளம் சிறுமி?????

சூடு பட்டவுடன் அவள் இதயம் நின்றிருக்கிறது.உடல் செயற்பாடுகளை இழந்திருக்கிறாள்.
இரண்டு தடவைகள் இறந்து பிழைத்திருக்கிறாள்.சூடு பட்டவுடன் இதயம் 
நின்றதுபோலவே மீண்டும் வைத்தியசாலையிலும் இதயம் நின்றிருக்கிறது.
அவளை காப்பாற்ற மருத்துவர்கள் மிகக்கடுமையாக உழைத்திருக்கிறார்கள்.
துப்பாக்கி ரவையொன்று நெஞ்சினூடாக பாய்ந்து முள்ளந்தண்டை தாக்கி 
வெளியேறியிருக்கிறது.இவையெல்லாம் மருத்துவர்கள் குறித்த விடயங்கள்.

குற்றசாட்டை முற்றாக மறுக்கும் குற்றவாளிகளாக இனங் காணபட்டவர்கள்.
எந்த அடிப்படையில் அவர்கள் மறுப்பு என்று தெரியவில்லை.ஆனால் குற்றஞ் சாட்டபட்ட மூவரும் ஏற்கனவே வேறு வேறு குற்றங்களில் 
தேடபட்டவர்களும் இனங்காணப் பட்டவர்க்களுமாவர்.
அன்றைய நாள் பிரயன்(Brayan) என்ற போதைவஸ்துகளை விநியோகிக்கின்ற ஒருவனை லண்டன் ஸ்ரொக்வெல்(Stockwell)பகுதியில் துரத்திவந்த அந்த மூவர் கொண்ட குழு அந்த நபர் கடைக்குள் ஓட
கலைத்து வந்தவர்கள் சரமாரியாக சுட்டபோது இந்த அசம்பாவிதம் இடம்பெற்றிருக்கிறது.

சுட்டவர் என்று குற்றஞ் சாட்டபடவர்-நன்றி Daily Mailபிரித்தானிய தடவியல் நிபுணர்களும் பொலிசாரும் மேற்கொண்ட 
முயற்சியால் அந்த மூவரையும் வீடு தேடிச்சென்று கைது செய்திருக்கிறார்கள்.
நன்றி Daily Mail


கடையில் பொருத்தபட்ட கமெராக்கள் வீதிகளில் பொருத்தபட்ட கமெராக்கள் 
உதவியோடும் ஒவ்வொரு தடயங்கள் உதவியோடும் மிகப்பெரிய 
முயற்சியோடு அவர்களை கைது செய்ய அவர்கள் தங்கள் குற்றங்களை எந்த 
அடிப்படையில் தங்கள் குற்றச்சாடுக்களை மறுக்கிறார்கள் என்பது 
தெரியவில்லை.
நன்றி Daily Mail

துஷாவின் மாமா இப்போது "இனி இந்த கடை வேண்டாம்" என்று கடையை மூடுகின்ற அளவிற்கு அவர்களை கவலை வாட்டியிருக்கிறது.
துள்ளித்திரிந்த மற்றவர்களை உற்றவர்களை எப்போது சந்தோசமாக 
வைத்திருக்கக்கூடிய புன்னகையோடு கூடிய அந்த பச்சிளஞ்சிறுமி கால்கள் 
செயலிழந்திருக்கும் நிலை காண எந்த மனிதனுக்கு பொறுக்கும்.
ஆனால் குற்றஞ் சாட்டபட்டவர்கள் சர்வ சாதாரணம் போல நிற்கிறார்களாம்.

இங்கிலாந்தின் இன்றைய கூடுதலான பத்திரிகைகள் இந்த செய்தியை தங்கள் 
முற்பக்கத்தில் பிரசுரித்திருக்கின்றன.கடந்த வருடம் இடம்பெற்ற இந்த 
சம்பவத்தின் சிசிரிவி(CCTV) கமெராவின் ஒளிப்பதிவுகளையும் 
புகைப்படங்களையும் லண்டன் போலீசார் பெற்றோரின் ஒப்புதலோடு வெளியிட்டிருக்கிறார்கள்.
அது குற்றஞ் சாட்டபட்டவர்களின் மறுப்பிற்கு கிடைத்த பதிலடியாக இருக்கிறது.
நன்றி Daily Mail

வெளியிட்ட வேளையில் துஷாவின் அம்மா கதறியழுத காட்சி அங்கிருந்த
எல்லோரையும் கண்ணீர் விட வைத்திருக்கிறது.துள்ளித்திருந்த அந்த சிறுமி 
ஒரேயடியாக விழுகின்ற காட்சி எல்லோரையும் கண்ணீர்விட வைத்திருக்கிறது.
அதன் பிறகு அந்த காவாலிகள் தங்கள் சைக்கிளில் தாங்கள் இருக்கும் இடம் நோக்கி உல்லாசமாக சந்தோசமாக கலகலப்பாக வேகமாக செல்கின்றார்கள்.
இங்கு உயிருக்காக போராடிக்கொண்டிருக்கின்றது என்பது அவர்களுக்கு தெரியாமலிருக்க போவதுமில்லை.
இந்த குற்றஞ்ச்சாட்டபட்டவர்களுக்கான தீர்ப்பு வருகின்ற ஏப்ரல் மாதம் 
சொல்லப்பட இருக்கின்றது என்று செய்தி வெளியாகியிருக்கிறது.
விளையாடித்திரிந்த சிறுமியின் இந்த பரிதாபகரமான நிலையை இங்கிலாந்தின் முன்னணிப் பத்திரிகைகள் முதல் பக்கத்தில் துஷாவின் புன்னகை தோய்ந்த முகத்தோடு வெளியிட்டிருக்கின்றார்கள்.எத்தனை செய்திகள் வெளியிட்டாலும் குற்றம் இனங் காணபட்டவர்களுக்கு எந்தப்பெரிய தண்டனைகள் வழங்கினாலும் சிறுமி இழந்த வாழ்க்கையை 
பெற்றுத்தர முடியுமா என்று கேட்டால் அதற்கான விடை
கேள்விக்குறியாகவே இருக்கிறது.

எல்லோரும் ஒளிப்பதிவின் காட்சிகளை பார்த்து கண்ணீர் விட்ட போதும் 
இன்றும் அவள் சிரித்துக்கொண்டே விளையாடியபடி உட்கார்ந்திருக்கிறாள் அந்த பச்சிளஞ் சிறுமி.

தீர்ப்பு எதுவாக இருந்தாலும் துஷா மீண்டும் எழுந்து நடக்க வேண்டும்.
துள்ளித்திரிந்து மற்றவர்களுக்கான புன்னகையை வரவழைக்கும் நடனம் ஆடிக்காட்டவேண்டும் என்பதே உண்மையான ஏக்கம்


நன்றி தினக்குரல்
குறிப்பு :
லண்டன் பொலிஸ் அதிகாரிகளும் சில உத்தியோகத்தர்களும் இணைந்து 
துஷாவின் மருத்துவ செலவிற்கும் அந்த சிறுமிக்கான வாழ்வாதார 
தேவைகளுக்குமாக ஒரு பணம் சேர்ப்பதற்கான ஏற்பாடுகளை 
மேற்கொண்டிருக்கிறார்கள் என்பதை டெய்லிமெயில்(Daily mail) 
இணையத்தளம் வாயிலாக அறிந்துகொண்டேன்
அதற்கான கணக்கிலக்கம் என்பவற்றை தொடர்புகொள்கின்றவர்களுக்கு 
தருவதற்கான ஏற்பாட்டினை செய்யமுடியும்.
முடிந்தவர்கள் மின்னஞ்சல் முகவரி ஊடாக தொடர்புகொள்ளுங்கள்- 
karavaikkural@gmail.com

டுபாயில் BEDSPACE லண்டனில் BOX ROOM

ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு சொற்பாவனை,அந்த அந்த நாட்டிலை அது அது எப்படி எப்படி வழங்கபடுகிறதோ அல்லது அவை எப்படியான வடிவத்தில் எடுக்கபடுகிறதோ அல்லது பாவிக்கப்படுகிறதோ அவைக்கு `அந்தமாதிரி` பெயர் வைத்துவிடுவார்கள் அந்த நாட்டில் இருபவர்கள்.
தேவை கூட கூட அதற்கான மதிப்பை கூட்டி முடிந்தால் அதன் வழங்கும் அளவை குறைத்து விலையை கூட்டிவிடுவார்கள்.
இது பொருளா இருந்தாலும் சரி அதை தரும் சேவையாக இருந்தாலும் சரி.

பொதுவாக எந்த நாட்டிலும் இருக்க இடம் தேவை.இருக்க கிடைக்கும் இடங்களை தேடும் போது தான் டுபாயில் பெட் ஸ்பேஸ்(Bed Space)உம் லண்டனில் பொக்ஸ் ரூம்(Box Room)உம் கேள்விப்பட்டதாகிவிட்டது.
இருந்த நாடு தாண்டி வேறு நாட்டுக்கு வரும் போது கேள்விப்பட்ட புதிய சொற்கள் ஏராளம்.
அதில் ஒரே பாவனைக்கு இவை புதிய சொற்கள்.அதை எடுக்கும்போதும் பாவிக்கும்போதும் புதிய புதிய அனுபவங்கள்.


டுபாய்
டுபாயில் பெட் ஸ்பேஸ் தேடுவதை வைத்து ஒரு காப்பியம் பாடலாம்.
ஓவ்வொரு இடத்திலும் ஓவ்வொரு மூலையிலும் அதற்கான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருக்கும்.சில வேலைகளில் ஒரே சுவரொட்டிகள் அந்தப்பகுதி எங்கும் மாறி மாறி ஒட்டபட்டிருக்கும்.
ஒரே தரகர்களுக்கே மாறி மாறி அந்த அந்த மூலைகளில் இருந்தும் அழைப்பு போகும்.
ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு விதமான தரகர்கள்.சிலர் மிகவும் வசீகரமாக இருப்பார்கள்.சிலர் ஒல்லியாக அங்கும் இங்கும் ஓடியபடியே இருப்பார்கள்.
அவர்களிடம் அப்போயின்மென்ட் எடுப்பதுகூட மிகக் கஷ்டம்.அவ்வளவுக்கு அவர்களுக்கு நேரமில்லாத தன்மை.அப்படிஎன்றால் அந்த இடத்தில் பெட் ஸ்பேஸ் கூட இருக்கிறது என்று அர்த்தம்.அப்போயின்மென்ட் கிடைத்து கதைக்க தொடங்கிவிட்டால் அவர்கள் எங்கள் மீது காட்டும் கரிசனை என்பதும் எங்களுக்கான பெட் ஸ்பேஸ் எடுத்துத்தருவதில் இருக்கும் ஆழமான ஈடுபாடு என்பதும் ஏதாவது ஒரு பெட் ஸ்பேஸ் எடுக்க வழிவகுத்துவிடும்.
அவர்கள் கூடுதலாக மலையாள மொழி அல்லது ஹிந்தி மொழி பேசுகின்றவர்களாக இருப்பர்.
அதற்காக மலையாளத்தில் எழுத முடியாதே,எனக்கு விளங்கியதை,அவர்கள் எங்களுக்கு சொல்ல எத்தனித்ததை தமிழில் எழுத முயற்சிக்கிறேன்.

"நாங்க இந்த நாட்டுக்கு ஏன் வந்தோம்? ஏதாவது சம்பாதிக்க வேணும் என்றுதானே?"என்று "நாங்க நாடு விட்டு நாடு தாண்டி வந்ததன் பின்னணி என்ன?"என்பதை நினைவுபடுத்திக்கொண்டேயிருப்பார்.
இவராவது நினைவுபடுத்துவாரே அல்லது எல்லோரும் மறந்துவிடுவார்கள் இல்லையா?!!!!!!

"நான் உங்களுக்கு நல்ல இடம் காட்டுறன்.பிடிச்சிருந்தால் எடுங்க." மிகப்பெரிய உதவி இந்த நாட்டில் இருக்க இடம் எடுத்துத்தரும் சேவை,அதை செய்வது தான் மட்டும்தான் இந்த ஊரில் என்பது போல இருக்கும் அவர் பேச்சு.
"உங்களுக்கேற்ற மாதிரி எடுத்து தாறன்"என்று ஆக்களை கணக்கும் போட்டுவிடுவார்.

"அங்கு இருப்பவங்க ரொம்ப நல்லவங்க."என்று அந்த ரூமில்(Room) கூட இருப்பவங்களுக்கு ஒரு நல்ல Certificate உம் கொடுப்பார்.வேற்று நாட்டிலை சந்திக்கும்போது மற்றவங்களை பற்றி நல்ல விசயங்கள் பேசும் ஒரே ஒரு மனிதர்கள் அவர்கள் தான் என்று நகைச்சுவையாக சொல்வார்கள் மற்றவர்கள்.

சரி அவர் காட்டும் அறைக்கு போனால் அங்கு நாம் கேட்க வேண்டிய கேள்விகள் ஏராளம் இருக்கு.
எத்தனை மணிக்கு அங்குள்ளவர்கள் வேலைக்கு போவார்கள்?
எத்தனை மணிக்கு குளியலறை போவார்கள்.நான் போகும் நேரத்துக்கு அங்குள்ளவர்கள் யாரும் வேலைக்கு வெளிக்கிடுவார்களா? என்பது ஒரு அடிப்படைக் கேள்விகளாக இருக்கும்.
ஏனென்றால் அங்குள்ள அறைகளின் நிலவரம் அப்படித்தான்.
தென்னாசிய மற்றும் தென்கிழக்காசிய மக்கள் வேலைவாய்ப்பென்று சென்று அடிபடைத்தேவைகளுக்கே கஷ்ட படுகின்ற நிலைகள் அப்படி இருக்கும்.சில வேளைகளில் 8 மணிக்கு செல்ல வேண்டிய வேலைக்காக 3 மணிக்கே எழும்பி குளித்துவிட்டு மீண்டும் ஒரு குட்டித்தூக்கம் போட்டுவிட்டு விறு விறு என்று கம்பனி போக்குவரத்து சேவை வருமிடத்திற்கு ஓடுவார்கள்.
காலை வேளையில் குளிக்கவேண்டும் என்பதற்காக அதிகாலை தூக்கம் துறந்து,குளித்து மீண்டும் தூக்கம்,பிறகு எழும்பி ஓட்டம் ................ காசு உழைக்கலாம் என்பதற்கு அப்பால் எவ்வளவு வாழ்க்கையை தொலைக்கும் மனிதர்கள் அங்கு.

ஏன் அப்படி அதிகாலையிலேயே எழும்ப வேண்டும்?அப்படி என்ன காரணம் இருக்கிறது?

இப்ப தான் பெட் ஸ்பேஸ்(Bed Space)பற்றி சொல்ல நேரம் வந்திருக்கு.கூடுதலாக டுபாயின் இடங்களில் தனியாக இருப்பவர்களுக்கு அறைகள் எடுப்பது கடினம்.
இளையவர்களுக்கு அல்லது தனியானவர்களுக்கு எடுப்பதை விட திருமணமானவர்களுக்கு சோடியாக இருந்தால் அறை எடுப்பது இலகு என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.அதனால் தனியானவர்களுக்கு அறை எடுக்கமுடியாது என்பதை காரணம் காட்டி அதற்கான விலை மதிப்பை கூட்டி வைத்திருகிறார்கள்.

மிகக்குறைந்த சம்பளங்களுக்காக அந்த நாட்டு அடிப்படை சம்பளத்தை தங்கள் நாட்டு நாணயபெறுமதியோடு பெருக்கிப் பார்த்து அதிகூடிய பெறுமதி என்று வேறு நாடுகளுக்கு விரைந்து செல்லும் நம்மவர்கள் தான் இதற்காக கூடியளவு பணத்தை இழக்கிறார்கள்.
அதுவும் தனியானவர்கள் பலர் கூடி ஒரு வீட்டில் ஒரு அறையை எடுத்து பகிர்ந்துகொள்வார்கள்.
அதற்காக ஒருவருக்கு அங்கு வழங்கபடுவது ஒரு பெட் ஸ்பேஸ்(Bed Space) மட்டும் தான்.
அதற்குள் தான் அவரது சீவியம்.
அவரோடு அறையின் அளவை பொறுத்து குறைந்தது 6 படுக்கைகள் மேலும் கீழுமாக இருக்கும்.நடப்பதற்கு மட்டும் தான் அங்கு இடமிருக்கும்.
மேலே உள்ளவர் ஆடி ஆடி படுத்தால் கீழே உள்ளவரும் ஆடவேண்டியது தான்.
நித்திரை குழம்பும்.
ஆளுக்காள் வேறு வேறு நேரங்களில் வேலை முடியும்,அப்போ வேறு வேறு நேரங்களில் வருவார்கள்.அவர்கள் எல்லோரும் படுக்கைக்கு போக மற்றவர்கள் எழும்பிக்குளிக்கும் நேரம் வந்துவிடும்.
இத்தனைக்கும் ஒரு வீட்டில் மூன்று அறைகள் இருக்கின்றது என்றால்.ஒரு அறைக்கு 6 படுக்கைகள் சராசரியாக.இரட்டை தட்டு படுக்கை என்றால் 12 பேர் ஒரு அறையில்.அப்ப மூன்று அறையிலும் 36 பேர்.எப்படி இருக்கும்?
இது மிகக்குறைந்த சராசரியான தொகை,கூடலாம் குறையலாம்.
அங்குள்ளவர்கள் ஆகக்கூடுதலான சம்பளத்தை பெற்று வசதியோடு இருக்க விரும்பினால் அவர்கள் ஆக்களின் எண்ணிக்கையை குறைத்து இருந்தால் எண்ணிக்கை குறையும்.
இவை தான் அங்குள்ள பெட்ஸ்பேஸ்களின் நிலை.அதைவிட அங்கு கூடியிருந்து எல்லோரும் இணைந்து சமைத்து சாப்பிட ஆரம்பித்தால் எப்படி யிருக்கும்?
நிலமை வலுமோசமானதாகவே அங்குள்ளவர்கள் மிகவும் கடினமான சூழலில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.அதுவும் மிகக்குறந்த சம்பளமாக இருந்துவிட்டால் அவர்கள் மீளவேமுடியாது என்ற நிலை இருக்கும்.அப்படியான சூழல்களில் வாழ்ந்தும் மிகக்குறைந்து ஊதியம்பெறுபவர்களாக இருந்தாலும் தங்கள் மூளைவளத்தை வேலைகளில் மிக சாதுரியமாக புகுத்தி வெற்றிபெற்று தங்கள் குடும்பம் மற்றும் சமுதாயத்தின் பால் அக்கறை செலுத்தி தங்களை வருத்திவாழும் இளையவர்கள் சிறந்த உழைப்பாளிகளே,

லண்டன்
லண்டன் பணத்தின் கோட்டை,மிகக்கூடிய நாணயபெறுமதியான நாடாக பேசப்படும் நாடு,அதுவே எல்லோரையும் பணத்தின் பக்கம் சிந்திக்கவைத்துவிட்டது.
இதைவிட பாஹ்ரேன் குவைத் போன்ற நாடுகளின் பெறுமதி மிக்கக்கூட,அதை அப்படியா என்று கேட்பதற்கும் பலர் இருக்கிறார்கள்.ஏனென்றால் லண்டன் தான் பணக்கார நாடு என்று சிந்திக்கும் ஒரு போக்கு இருக்கிறது.சரி அது இருக்கட்டும்
டுபாயில் பெட்ஸ்பேஸ்(Bed Space)போல லண்டனில் சொல்லப்படுவதுதான் பொக்ஸ்ரூம்(Box Room)
ஏனென்றால் அது பெட்டி போல இருக்கும் என்றும் சொல்வார்கள்,நெருப்புபெட்டி ரூம் என்றும் நகைச்சுவையாக சொல்வார்கள்.ஏனென்றால் அப்படியான பெட்டிகள் போல அறை இருக்கும்.
சில இடங்களில் படுக்கை போடுமளவிற்கும் கால் வைத்து இறங்குமளவிற்குத்தான் அந்த அறை இருக்கும்.கொண்டு வந்த சூர்கேற்ஸ் ஒரு மூலையில் இருக்க படுக்கையிலேயே எல்லா வேலைகளும்.
கூடுதலாக அப்படியான அறைகளில் இருக்கத்தலைபடுபவர்கள்(மாட்டுப்படுபவர்கள்) மாணவர்களாகத்தான் இருப்பார்கள்.மாணவர்களைத்தான் அந்த அந்த வீட்டுரிமையாளர்கள் விரும்புவார்கள்.அது அவர்களை கட்டுபாட்டோடு வைத்திருக்கலாம் என்ற எண்ணமோ தெரியாது.ஏனென்றால் லண்டனில் மாணவர்களுக்கு அரசாங்கத்தின் கட்டுப்பாடுகள் வேறு இருக்கின்றது.
வீட்டு உரிமையாளர்களும் வீட்டுக்கான பெரும் செலவில் ஒரு பகுதியை ஈடு செய்யவேண்டுமென்றே அப்படியாக அந்த அறையை வாடகைக்கு விட தலைப்படுவார்கள்.பணத்தோடு ஓட வேண்டிய நாடு என்பதால் வீட்டு உரிமையாளர் மற்றும் வாடகைக்கு இருக்க வரும் நபர் என்று இருபக்கமும் நியாயப்பாடுகள் இருக்கும்.
சொந்த வீட்டில் இருக்கும் ஒரு வீட்டு உரிமையாளராக இருந்தாலும் ஒரு அறையை மட்டுமே பாவித்து மற்ற அறைகளை வாடகைக்கு விட்டு தங்கள் வாழ்க்கையை மிகக்கஸ்டபட்டு கொண்டு செல்லும் ஏராளமான மனிதர்கள் லண்டனில் வாழ்கிறார்கள்.
லண்டனில் பொக்ஸ்ரூம் சில பொதுவான தமிழ்க்கடைகளில் ஒட்டபட்டிருக்கும் சுவரொட்டிகள் வாயிலாக அறியலாம்.அதிலும் ஆள்பார்த்து தான் வீட்டு உரிமையாளர் எடுப்பார்.அதனால் தங்களுக்கு தெரிந்தவர்கள் ஊடாக வருபவரகள் என்றால் அவர்களுக்கு முன்னுரிமை கொடுப்பர்.
கடைகளில் ஒட்டுவதற்கும் கடைக்கு குறிப்பிட்ட காலத்திற்கு அமைவாக பணம் அறவிடபடுமாம்.அது வாரத்திற்கு ஒரு சில பென்ஸ்சுகளாகவும் இருக்கலாம்.ஆனால் அறவிடுகிறார்களாம்.
லண்டனில் பொஸ்ரூமிலும் குளியலறை நேரப்பிரச்சனைகள் இருந்தாலும் டுபாய் போல இல்லை என்றே சொல்லவேண்டும்.ஏனெறால் ஆட்களின் எண்ணிக்கையை கூடுதலாக வைத்திருக்க அந்த வீட்டு உரிமையாளர்விரும்புவதில்லை.
இங்கு எத்தனை நாள் உடுப்பு தோய்க்கலாம்,எத்தனை நாள் என்ன நேரம் சமைக்க விரும்பினால் சமைக்கலாம் என்று சில கட்டுப்பாடுகளை முதலே தெரிந்துகொள்வது சிறப்பாம்.
சில வேளைகளில் பொக்ஸ் ரூமில் இருப்பவர்களுக்கு சாப்பாட்டோடு தான் வாடகை கணக்கு சொல்லப்படும்.ஆரம்பத்தில் சாப்பாடு பிரமாதமாக தயாரிப்பாக இருக்குமாம்.பின்னர் அப்படி இப்படித்தான் என்றும் சொல்வார்கள்.
காலை வேலையில் பொதுவாக பாணோடு அமைந்ததாக இருக்கும்.
வேலைக்கு போகின்றவர்கள் இரவு நேரம் தான் வீடு திரும்புவார்கள்.அவர்களுக்கு வீட்டுகுசினிக்குள் சாப்பாடு மூடியபடி வைத்திருப்பார்கள்.இருந்தால் சாப்பிட்டு தூங்கவேண்டியதுதான்.
மாதம் முடிய காசு கொடுத்தால் வீட்டு உரிமையாளர்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும்,ஏனென்றால் வீட்டுக்கணக்குகள் அந்த அந்த நேரத்தில் அவர்களுக்கு முடிக்க உதவியாக் இருக்குமாம்.
ஏனெறால் வீடு அவர்களுக்கு முழு சொந்தமானதாக இருக்காது.அரைவாசிக்காசு கட்டியபடி இருக்க மிகுதிப்பணத்தை கட்டுவதற்கு இந்த வாடகைப்பணம் தான் மிகப்பெரிய உதவியாக இருக்கும்.ஏனென்றால் வங்கியில் கை வைக்க யாரும் விரும்புவதில்லை..
அதுவும் சரியான நேரத்தில் கட்டவேண்டிய மாதப்பணத்தை கட்டாது விட்டால் அது ஒருபக்கம் கூட ஆரம்பித்துவிடும்.அதனால் தான் லண்டன் நேரம்,காலம் மற்றும் பணத்தோடு ஓடும் தேசம் என்று குறிப்பிடவேண்டியதாயிற்று.அன்றாட வாழ்க்கை நிம்மதியாகவும் அவதிக்குள்ளாதவாறும் கொண்டு செல்ல எல்லோரும் தங்களுக்குள்ளேயும் தங்கள் குடும்பத்தினூடாகவும் ஒரு போராட்டமான வாழ்க்கையையே கொண்டு செல்லவேண்டியவர்களாக இருக்கிறது.அந்த வாழ்க்கை போராட்டத்தில் நம்மவர்கள் பலர் வெற்றி கண்டவர்களாகவும் இருக்கிறார்கள் என்பதும் ஒரு சந்தோஷமான செய்தி.அவர்களும் இதே பொக்ஸ் ரூமைத்தான் தமது ஆரம்ப இருப்பிடங்களாக கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அதனால் டுபாயில் பெட்ஸ்பேஸ் லண்டனில் பொக்ஸ் ரூம் என்பவையெல்லாம் அந்தந்த நாடுகளில் நிலைபெறுவதற்கான ஆரம்ப நிலை இருப்பிடங்கள் என்று உறுதியாகச்சொல்லலாம்.வழியமைப்பது அவரவர் கைகளில்.இது உரிமையாளர் தங்குபவர் என இருபகுதிகளுக்கும் பொருந்தும்.
இதேபோல மற்ற பல நாடுகளிலும் சுவாரஸ்யமான சொற்பாவனைகள் இருக்கலாம், நகைச்சுவையான விடயங்களும் இருக்கலாம்,அதையும் நீங்கள் பதிவு செய்துகொள்ளுங்கள்

குறிப்பு:
இந்தப்பதிவு நடைமுறைக்காலத்தின் உண்மை நிலைகளையே சொல்கிறது. மாறாக உரிமையாளர்கள்,தங்குபவர்கள்,மாணவர்கள்,வெற்றிகண்டவர்கள்,என்று யாரையும் சுட்டி நிற்கவில்லை என்பதை அன்போடு சொல்கின்றேன்.
இது காலத்தின் கட்டாயமான விடயங்களை பதிவுசெய்திருக்கிறது.தூரத்திலிருந்து பார்ப்பவர்களுக்கு உண்மை நிலைகள் புரிந்துகொள்ளட்டும் என்ற எண்ணத்தோடும் உண்மை நிலைகள் காலத்தினால் பதிவு செய்யப்பட வேண்டும் நினைப்போடும் பதிவுசெய்யபட்டிருக்கிறது.அவ்வாறே உங்கள் பார்வையையும் செலுத்தி தவறவிடப்பட்ட விடயங்களை சுட்டிக்காட்டுதல் சாலப்பொருந்தும்.

குழல் காற்றின் இசை இசைக்க திரும்பிப்பார்த்தேன்

விறுவிறு என்று நடந்து போனேன் லண்டனில் ஹரோ பகுதியில் 
அமைந்திருக்கின்ற வணிக கட்டட தொகுதியினூடாக.வானொலியில் இருந்த காலங்களில் அடிக்கடி போகின்ற இடம் அது.
ஆனால் இப்போது இருப்பது வேறு இடம்.
நீண்ட நாள்களுக்கு பிறகு ஸ்போட்ஸ் டிரெக்ட்க்கு(SPORTS DIRECT) 
போகவேண்டிய தேவையிருந்ததால் அந்தப்பக்கம் போகிறேன்.
ஏன் ஸ்போட்ஸ் டிரெக்ட்க்கு?
அதிலும் ஒரு விஷயம் இருக்கு.பிறகு சொல்கிறேன்.
சென்றுகொண்டிருந்த அந்த வேளையில் திரும்பி பார்க்க வைத்து குழல்களின் இசை.
குழல் என்றால் பெண்களின் குழல் என்றும் கொள்ள முடியும் இல்லையா?
அழகிய குழல் கொண்ட பெண்களின் இசை தானா என்றும் நினைக்கலாம் இல்லையா? 
ஆமாம் ஆமாம் அழகிய பெண்கள் உயரமாக நடை நடந்து அழகோடும் ஆடும் காட்சியும் அங்கு காண முடிந்தது,ஆடுங்காட்சி வேறு இடம், இசை கேட்டது வேறு இடம்.
அவர்களையெல்லாம் நிழற்படங்களாக்கி தாண்டிச்செல்லும் போதுதான் இந்த குழல்களின் இசைச்சங்கமம் என் காதில் கேட்டது.திரும்பிப்பார்த்து கிட்டவாக சென்றேன்.
இசையை கேட்டதிலிருந்து அந்த இசை,அதன் மெட்டு,
அதனை இசைப்பவர்களின் உடையலங்காரங்கள் இடையிடையே 
இசைப்பவர்கள் எழுப்பும் ஒலிகள்,என்னை கவர்ந்ததொன்றாகிவிட்டது.
அவசரமாக சென்ற என்னையும் இழுத்து மறித்து இசையை கேட்க வைத்தது.
ஒளிப்பதிவும் செய்துகொண்டேன்.பதிவின் நிறைவில்பதிவு செய்கிறேன்.
"மினைக்கட்டு எடுத்து போடுறன்" கேட்டு உங்கள் கருத்தையும் பதிவு செய்யுங்கள்.

இசைகேட்டு அதனை ரசிப்பவர்களில் நானும் ஒருவனாக பார்த்து 
ரசித்துக்கொண்டிருந்தேன்.எந்திரன்  திரைப்படத்தில் கிளிமஞ்சாரோ பாடல் காட்சி அமைக்கப்பட்டதைப்போல அவர்களின் உடையமைப்பு இருந்தது.
அப்படியானால் அந்த இசை கிளிமஞ்சாரோ மலைப்பகுதியை சார்ந்தவர்களின் இசையாக இருக்குமோ என்று எனக்கொரு எண்ணம்.
அவர்களில் ஒருவரின் அருகில் சென்று அது பற்றிய விடயங்களை கேட்க 
அவர் ஒரு சில விடயங்களை சொல்லிவிட்டு சென்று விட்டார்.அவசரமாக 
அவர் இருந்த நேரத்தில் அந்த இசையின் பெயர் வேரா(WAYRA)என்றார்.
நான் மீண்டும் மீண்டும் கேள்விக்கு மேல் கேள்வி கேட்க இது இங்கோ(INCO) 
என்ற இனம் சார்ந்த இசை என்றும் இது பெரு,ஈக்குவடோர் போன்ற நாடுகளில் 
காணப்படுகிறது என்று சொல்லிவிட்டு மீண்டும் தன்னுடைய இசை இசைக்க 
ஒலிவாங்கிக்கு முன் சென்று விட்டார்.

இந்த விடயங்கள் சார்ந்து நான் தேடிக்கொண்ட விடயங்கள் பல.
வேரா(WAYRA)என்பதற்காக தமிழாக்கம் குழல் காற்று.அமேசன் காடுகளில் 
ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இந்த இசை இருந்திருக்கிறது.அமேசன் 
காடுகளில் இருந்த மரங்களில் இருந்து பெறப்பட்ட குழல்களால் இசையை உருவாக்கியிருக்கிறார்கள்.
அமைதியான இடங்களாகவும் உணர்வுகளுக்கு இசைவாகவும் அந்த இசை 
அமைந்திருக்கிறது என்று சொல்லபடுகிறது.
காதல்,அமைதி,மரஞ்சோலைகள் நடுவில் வருகின்ற ரிதமான 
ஒலியலைகள்,நதிக்கரையோரம் வருகின்ற ஒலியலைகள் என்று 
இயற்கையின் சங்கீதமாகத்தான் அந்த இசை.
அமேசன் நதிக்கரையோர பேரரசாக விளங்கிய இன்கா(Inca Empire)இந்த இசையின் ஆரம்ப இடமாக இருக்கிறது.
14மற்றும் 15ம் நூற்றாண்டுகளில் பேராசான இந்த இன்கா பேரரசில்(Inca Empire)கெச்சுவா(Quechua)என்ற மொழி பேசுகின்ற பாரம்பரிய தேசிய 
அமெரிக்க இன மக்கள் இந்த இசையை தங்கள் பாரம்பரிய இசையாக கொண்டிருக்கிறார்கள்.

இந்த கெச்சுவா இன மக்களில் ஒருவராக இருந்த ஜேமி ரோடிகியூஷ்(Jaime Rodriguez)என்பவர் இந்த இசையை 1989ஆம் ஆண்டிலிருந்து வெளிக் கொண்டு வந்திருகிறாராம்.இசையை அதே பாணியோடு இயற்கையின் சங்கீதத்தை 
அந்த அமைப்பிலேயே ஒலிப்பதிவின் மூலம் வெளிக்கொண்டு வந்திருக்கிறார்.
அவரைத்தான் இந்த வேரா(WAYRA) இசையை ஒலிபதிவோடு இன்னியமாக வந்த பாண்ட் இசையாக அமைத்த ஆரம்பகர்த்தா என்று இணையத்தில் அறிய முடிந்தது.

அதன் தனித்துவத்தோடு கொஞ்சம் மேற் கத்தைய இசைக்கலப்போடும் இந்த வேரா(WAYRA)என்று சொல்லப்படும் இசையை அவர் கொண்டுவந்திருக்கிறார்.
அதில் இயற்கையில் ஒலிகளை எழுப்புவதற்காக பலவகை நுணுக்கங்கள் 
கையாளப்படுகின்றமையை காணக்கூடியதாக இருக்கிறது. 
விதைகளினாலான கிலுக்கிகள் தாளகட்டுபாடு தரவல்லனவாக இருக்கின்றது.
நீண்ட தூர காடுகளில் மனிதர்களால் எழுப்பப்படும் ஒலிகள் கூட 
ரிதமாகியிருக்கிறது.
மர அசைவுகள்,நதிப்பாய்ச்சல்கள்.அங்கு வாழ்கின்ற விலங்குகளின் சத்தங்கள் என்று பலவகையான இயற்கை அமைவுடனான சங்கீதமாக 
அமைந்திருக்கிறது.
இந்த வேரா(WAYRA)இசை கனடா,அமெரிக்கா போன்ற நாடுகளில் பிரபல்யமான நிகழ்வுகளில் இடம்பிடிக்குமளவிற்கு எல்லோராலும் ரசிக்கப்படுகிறது.
பல இசை தொகுப்புக்களை தந்த இந்த வேரா(WAYRA)இசைக்குழுவின்  ஒரு 
பகுதியினர்  லண்டனில் நான் நடந்து சென்ற ஹரோ பகுதிக்கு வந்தபோது தான் எனக்கு பார்க்க முடிந்தது.
செவிந்தியர்களாக உடையலங்காரத்தோடு மிகவும் மற்றவர்கள்
ரசிக்கும்படியாக கரகோஷங்களுக்கு மத்தியில் வழங்கிய பாடலை உங்களுக்கு இங்கே பதிவேற்றித்தருகிறேன்.

உணர்வுகளின் தொகுப்பான இசைக்கு எங்கும் மதிப்பிருக்கும் என்பதற்கும் இசைக்கு மொழி என்பது ஒரு தடையல்ல என்பதற்கும் இது மிகச்சிறந்த உதாரணம்.
இயற்கையும் உணர்வுகளும் சங்கமிக்கவைக்கும் இசையின் உண்மையான
அர்த்தத்தை அந்த இசையும் கொண்டிருந்தது.என்னையும் கவர்ந்துகொண்டது.

படங்கள்:கமரா மற்றும் இணையத்தின் உதவியோடும்
தகவல்கள்- இணையம்
ரசனை- என்னுடையது

நரிகளை பார்க்க வேண்டுமா? லண்டனுக்கு போய்ப்பாருங்கள்

என்னடா நரிகள் லண்டனிலா? சீ சீ இது வேறு ஏதோ நரிகள் கதையாக இருக்குமோ என்ற எதிர்பார்ப்போடு வந்த உங்களை ஏமாற்ற போவதில்லை.. நிச்சயமாக இது லண்டனில் இருக்கும் இல்லை இல்லை வாழும் நரிகள் பற்றிய பதிவுதான்.

விலங்குகளில் மற்றவர்களை ஏமாற்றும் திறன் வாய்ந்த விலங்காக நரியை பொதுவாக சொல்வார்கள்.தந்திரமான விலங்கு.பாட்டி வடை சுட்ட கதையில் நரி தந்திரமாக காகத்தை ஏமாற்றியது என்றும் ஒருவகை கதை சொல்கிறது.ஆனால் காகமும் தந்திரமாக நரியை ஏமாற்றியது என்றும் ஒரு வகையாக சொல்லபடுகிறது.என்றாலும் நரி,அதன் குணம் நரிக்குணம் என்று மற்றவர்களை தந்திரமாக ஏமாற்றுவதை பொதுவாக குறிப்பிடுவர்

ஊரிலே பொதுவாக நரிகள் காட்டில் அல்லது வயல்வெளிகள் அல்லது பற்றைகளுக்குள் இருக்கும்.அதுவும் நரிகளை பொதுவாக கிட்டவாக காண்பது கடினமும் கூட.எங்காவது தூரத்தில் அல்லது ஊளையிடும் சத்தத்தின் வாயிலாக "இங்கே நரிகள் இருக்கிறது" என்று பேசிக்கொள்வதுண்டு.அதுவும் நகரப்பகுதிகளில் வாழ்ந்தால் நரிகள் பார்க்க காட்டுக்கு அல்லது மிருகக்காட்சி சாலைக்குத்தான் போக வேண்டும்.அதாவது காட்டுக்குள் அல்லது மக்களை விட்டு விலகித்தான் நரிகள் வாழும் என்பது தாயகத்தில்.அப்படி நரிகள் ஊருக்குள் அல்லது வீடுகளுக்குள் நுழைய முயன்றால் என்ன நடக்கும் என்பது சொல்லி விளங்கவேண்டியதுமில்லை.நரிகள் மட்டுமல்ல நரிக்குணங்களுக்கே இடமிருக்காது.பொதுவாக ஒதுக்கபட்டுவிடும் நரிகளும் நரிக்குணங்களும்.

லண்டனில் நரிகள் செய்யும் வேலைகள் தாங்கமுடியாது.நரிகளின் கூத்துக்கள் பல,தந்திரமென்று அவை நினைத்துச் செய்யுமோ தெரியாது.ஆனால் தன் செயற்பாடுகளை கச்சிதமாக செய்கிறது
மற்றவர்களை தேடவைக்கிறது.பொதுவாக எல்லோரையும் ஓடவைக்கிறது.

இப்படித்தான் ஒரு நண்பர் லண்டனுக்கு வந்த புதிதில் இரவில் களைத்து விழுந்து நடந்து வருகிறார்.இரவு 12 30 மணி வேளையில் உடம்பை முறித்து வேலை செய்துவிட்டு நடந்து வருகிறார்.பொதுவாக லண்டனில் வீடுகளுக்கு வெளியில் எல்லைகளில் நிரலுக்காக மரங்களை வளர்த்திருப்பார்கள்.அந்த சிறு மரங்கள் சல சல என்று சத்தமிட்டதாம்.ஏதோ பெரிய மிருகங்கள் அல்லது கள்ளர்கள் நகர்வதுபோல அந்த சத்தம்.
இரவு நேரம் தன்னை யாரும் அல்லது எந்த விலங்கும் தாக்கலாம் என்று நண்பர் பயந்து விரைவாக நடந்தாராம்.விறு விறு என்று நடந்து கொஞ்ச தூரம் சென்று திரும்பிப்பார்த்தாராம்,
"அட நாய் ஒன்று குறுக்காலை போய் என்னை பயப்படுத்திவிட்டது"என்று மனசுக்குள் நினைத்தாராம்.ஒவ்வொருநாளும் அந்த நாய்கள் இரவு வேளையில் நண்பர் வருகின்றபோது அங்குமிங்கும் ஓடுமாம். நாய் கடித்துவிடுமோ என்று பயந்து பயந்து தான் வருவாராம்.
உண்மையில் அது நாயில்லை அது நரி என்று கண்டுபிடிக்க அவருக்கு இரண்டு மாதமாகிவிட்டது.

இன்னுமோர் நண்பர் லண்டனுக்கு வந்த புதிதில் தன்னுடைய பல நண்பர்களோடு ஒன்றாக இருந்திருக்கிறார்.
அதிகாலை வேளையில் இவர் வேலைக்கு போகும்போது அவருடைய செருப்புகள் காணாமல் போய்விடுமாம்.அவரும் "யாரோ தன்னுடன் இருக்கும் பொடியள் எடுத்திருப்பாங்கள்" என்று நினைப்பாராம்.அதற்கு நண்பர்களுக்கு வாய்பேச்சு திட்டும் மனசுக்குள் வேறு.
ஒரு நாள் அவர் பாதையிலே நடந்து போகின்ற போது அவரின் செருப்பு பாதையிலே கிடந்ததாம்.வீட்டிலேயே வந்து நண்பர்களுக்கு ஏச்சு, 
"என்ன மச்சான் இப்படி இப்படி தூக்கி விசுறீங்க" என்று.
நண்பரே இது நரிகளின் வேலை என்று நண்பர்கள் நக்கலடிச்சு விளக்கம் கொடுத்தார்களாம்.
ம்ம்ம்ம்.... நரிகள் இங்கு வீடு வாசல்கள் வரை வந்து செருப்புகளைக்கூட விடுவதில்லை.

இதில் என்ன சுவாரஸ்யம் என்றால்
தாயகத்தில் நரிகள் காட்டில்,நாய்கள் வீட்டு முற்றத்தில்.
லண்டனில் நரிகள் வீட்டு முற்றத்தில்,நாய்கள் வீட்டு படுக்கைகளில் அல்லது மனிதர்களின் இடுப்பில்
அதாவது லண்டனில் நாய்களும் நரிகளும் மக்களோடு தான் இருக்கும்.ஆனால் தாயகத்தில் நல்ல நாய்கள் மட்டும் வீட்டு முற்றத்தில்,
மற்ற நாய்கள் ரோட்டில்,நரிகள் எல்லாம் காட்டில்

அது தான் நரிகளை பார்க்கவேண்டுமா லண்டனுக்கு போய் பாருங்கள்.பிற்குறிப்பு:  இது லண்டனில் இருக்கும் நரிகளை பற்றி மட்டும் தான் 
புகைப்படங்கள் மற்றும் வீடியோ உதவி இணையம்

பந்திக்கு முந்தினால் சாப்பாட்டு ராமனா?


கல்யாண வீடுகளில் அல்லது சாப்பாடு சார்ந்த நிகழ்வுகளில் பந்திக்கு முந்த வேண்டும் அடிக்கடி சொல்ல கேள்விப்பட்ட ஒன்று. அப்படி என்றால் பந்திக்கு முந்து என்பது சாப்பாட்டு பிரியர்களுக்கானதா என்பது தான் கேள்வி.அது மட்டுமில்லாமல் பந்திக்கு முந்து என்று சொல்லி பின்னர் படைக்கு பிந்து என்று சொல்வது கோழையர்களுக்கு சொல்லபட்டதா என்பது தான் அடுத்த கேள்வியும் கூட வருகிறது.விருந்தோம்பல் என்ற பாரம்பரியத்தை சிறப்போடு பேணிவரும் தமிழ் சமுதாயத்தில் சாப்பாட்டுப் பந்திக்கு முந்திசெல் என்று பழமொழி தமிழர்களை வழிகாட்டியிருக்குமா? எல்லோரையும் சாப்பாட்டு ராமர்கள் ஆக்கும் செயற்பாடு இல்லையா?
எங்கும் எதிர்த்து நின்று போரிட வல்லவர்கள்,வீர மறவர்கள் என்று புகழோங்கும் தமிழ் சமுதாயத்தில் "படைக்கு பிந்திப்போ"என்று வழிகாட்டியிருக்குமா?அது எல்லோரையும் கோழைகள் ஆக்கிவிடும் என்பது முன்னோர்களுக்கு தெரியாத விடயமா?


அப்படி என்றால் பந்திக்கு முந்து படைக்கு பிந்து என்று எப்படி இந்த பழமொழி உருவாகியது? எதற்காக உண்மையில் சொல்லப்பட்டது , அந்த பழமொழியின் உண்மை அர்த்தம் என்ன ? என்ற கேள்விகள் உருவாகிறது

தொலைக்காட்சி நிகழ்ச்சியில் முன்னோர்களின் பழமொழிகளையும் மரபுத்தொடர்களையும்
நிகழ்ச்சியின் சுவாரஷ்யத்திற்காகவும்,அதன் உண்மை வடிவங்களை,அர்த்தங்களை நினைவூட்டலாம் என்ற நோக்கோடும் அது ஒழுங்கமைக்கபட்டிருக்கிறது.அதை நிகழ்ச்சித்தயாரிப்பாளர் சிறப்பாகவே ஒழுங்கமைத்திருக்கிறார்.அந்தவகையில் பந்திக்கு முந்து படைக்கு பிந்து என்ற பழமொழியும் ஒருநாள் நேயர்களுக்கு வழங்கபட்டிருந்தது.
நிகழ்ச்சியின் நிறைவில் நிறைவில் வந்த ஜெகதிஷ்வரன் அவர்களால் ஆரோக்கியமான சிந்தனையும் வழங்கபட்டது.அதை நிறைவில் தருகிறேன்.

அதைவிட பந்திக்கு முந்துவதற்கு இப்படியெல்லாம் விளக்கம் கொடுக்ககப்படுகிறது.


பந்திக்கு முந்துவது எதற்காக என்றால் நீங்கள் என்ன பதில் சொல்வீர்கள்?
சாப்பிடத்தான் என்று அடித்து சொல்வீர்கள்.
சரி சாப்பிடவென்றே வைத்துக்கொள்வோம்.சாப்பிட பொதுவாக வலது கை தானே எல்லோருக்கும்.
அதேபோல பண்டைய காலங்களில் வில்லேந்தி வாளேந்தி சென்ற போர்க்களம் சென்ற போர்வீரர்கள் வில்லின் அம்பை இழுப்பதற்கு தனது வலது கையால் நாணில் அம்பை எவ்வளவு தூரம் பின்னுக்கு இழுப்பர்களோ அவ்வளவு வேகமாக மிகக்கூடிய தூரத்திற்கு அம்பு பாய்ந்து செல்லும்.
அப்படியாக வலது கை பந்திக்கு முந்தியும் போர்க்களத்தில் மிகவும் பின்னுக்கு பின்னுக்கு வந்தும் செல்லவும் வேண்டும் என்பதை அந்த பழமொழி குறித்து நிற்குமாம்.
இதை ஒரு விடுகதை என்றும் சொல்கிறார்கள்.இதை ஒரு விடுகதையாக பந்திக்கு முந்தும் படைக்கு பிந்தும் அது என்ன ? என்றும் கேட்பார்களாம். அப்படியென்றால் இடதுகை பாவனையாளர்களுக்கு எப்படி இது பொருந்தும் என்றும் ஒரு கேள்வியை உருவாகின்றது.அப்படியாயின் வலது கை என்று வரும் இடமெல்லாம் இடது கை என்று மாத்தி வாசியுங்களேன்.


அடுத்து இன்னுமொரு விளக்கம்

பந்தித்தலை கட்டுதல் அல்லது கூடுதல் என்று தமிழகராதியிலிருந்து விளக்கம் கொடுக்கபடுகிறது.
கட்டுதலை முன்னோர்களின் சிந்தனையின் வழியில் தாலிகட்டுதல் என்றும் பொருள் கொள்ளப்படுகிறது.கூடுதல் என்பதை மணவாழ்க்கையில் கூடுதல் அல்லது மனதோ மனம் கூடி இல்வாழ்க்கையில் இணைதல் என்றும் அர்த்தம் இருக்கிறது.
அந்த வழியில் திருமணத்தை பின்னுக்கு போடாதே , முந்திக்கொள் என்று சொல்கிறதாம்.
அடுத்து படைக்கு பிந்து என்பதில் படை என்பது படைத்தல் என்று பொருள் கொள்ளப்படுகிறது.உயிர்களை படைத்தல் என்கின்ற குழந்தைகள் பெற்றுக்கொள்வதை பிந்திக்கொள் என்று சொல்கிறதாம். அதாவது குழந்தைகளை பெற்றுக்கொள்ள முந்திக்கொண்டால் சனத்தொகை பெருகக்கூடிய வாய்ப்பிருக்கிறதாம். இளையவர்கள் தங்கள் இளமைக் காலத்தின் இனிய பொழுதுகளை மகிழ்ந்து நுகர்ந்து கொள்ளவும் இல்லற வாழ்வை முறையாக முறைப்படுத்த பெரியவர்களால் இளையவர்களுக்கு கொடுக்கப்படும் புத்திமதியாக்கவுமே இந்த பழமொழி பந்திக்கு முந்து படைக்கு பிந்து.... பாருங்கள் எப்படியிருக்கு புத்திமதி இளையவர்களுக்கு . இளையவர்களே கேட்டுக்கொள்ளுங்கள். உலக சனத்தொகை பெருக்கம் உலகிற்கே பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் இந்த காலகட்டங்களில் சிலவேளைகளில் மனித சனத்தொகை கட்டுப்பாட்டிற்காக செயற்படும் அமைப்புக்கள் இந்த பழமொழியை கையிலெடுத்தாலும் எடுக்கும்.

இதைவிட முற்றிலும் வீரத்தோடு சம்பந்தப்படுத்தி ஒரு விளக்கம் இருக்கிறது.

பந்தி என்பதற்கு வரிசை என்று ஒரு பொருள் இருக்கிறது.போர் என்று வருகின்றபோது அதன் வரிசையிலே முந்தி செல்ல வேண்டும்,படை என்று வந்துவிட்டால் போர்க்களத்திலே போரின் இறுதிவரை போராடி எதிரியை அழித்து நிலைத்து நின்று கடைசி ஆளாக பிந்தி வரவேண்டும்,அதுவேதான் பந்திக்கு முந்து படைக்கு பிந்து என்று சொல்கிறது பழமொழி.

இப்படியாக பலவாறு அர்த்தங்கள் கற்பிக்கபடும் இந்த பழமொழிக்கான ஆரோகியமான சிந்தனைகளின் தொடர்ச்சியாக தொலைக்காட்சி நிகழ்ச்சியில் விருந்தினராக கலந்துகொண்ட திரு.ஜெகதீஸ்வரன் அவர்களின் ஆரோக்கிய சிந்தனை.

ஆகவே என்றும் பெரியவர்களாக,சமுதாயத்திலே மதிக்கபடுபவகளாக,
வெற்றிபெறும் சமுதாயத்தில் உயர்ந்தவனாக இருக்க வழிகாட்டும் பழமொழிதான் ”பந்திக்கு முந்து படைக்கு பிந்து”.
என்றாலும் கல்யாண சாப்பாடுகளின் ஆரம்பத்தில் பந்திக்கு முந்து என்று சொல்வது ஒரு நடைமுறையாகிவிட்டது என்பதும் அதை மாற்றவே முடியாது என்பதும்தான் உண்மையான விடயம்