டுபாயில் BEDSPACE லண்டனில் BOX ROOM

ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு சொற்பாவனை,அந்த அந்த நாட்டிலை அது அது எப்படி எப்படி வழங்கபடுகிறதோ அல்லது அவை எப்படியான வடிவத்தில் எடுக்கபடுகிறதோ அல்லது பாவிக்கப்படுகிறதோ அவைக்கு `அந்தமாதிரி` பெயர் வைத்துவிடுவார்கள் அந்த நாட்டில் இருபவர்கள்.
தேவை கூட கூட அதற்கான மதிப்பை கூட்டி முடிந்தால் அதன் வழங்கும் அளவை குறைத்து விலையை கூட்டிவிடுவார்கள்.
இது பொருளா இருந்தாலும் சரி அதை தரும் சேவையாக இருந்தாலும் சரி.

பொதுவாக எந்த நாட்டிலும் இருக்க இடம் தேவை.இருக்க கிடைக்கும் இடங்களை தேடும் போது தான் டுபாயில் பெட் ஸ்பேஸ்(Bed Space)உம் லண்டனில் பொக்ஸ் ரூம்(Box Room)உம் கேள்விப்பட்டதாகிவிட்டது.
இருந்த நாடு தாண்டி வேறு நாட்டுக்கு வரும் போது கேள்விப்பட்ட புதிய சொற்கள் ஏராளம்.
அதில் ஒரே பாவனைக்கு இவை புதிய சொற்கள்.அதை எடுக்கும்போதும் பாவிக்கும்போதும் புதிய புதிய அனுபவங்கள்.


டுபாய்
டுபாயில் பெட் ஸ்பேஸ் தேடுவதை வைத்து ஒரு காப்பியம் பாடலாம்.
ஓவ்வொரு இடத்திலும் ஓவ்வொரு மூலையிலும் அதற்கான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருக்கும்.சில வேலைகளில் ஒரே சுவரொட்டிகள் அந்தப்பகுதி எங்கும் மாறி மாறி ஒட்டபட்டிருக்கும்.
ஒரே தரகர்களுக்கே மாறி மாறி அந்த அந்த மூலைகளில் இருந்தும் அழைப்பு போகும்.
ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு விதமான தரகர்கள்.சிலர் மிகவும் வசீகரமாக இருப்பார்கள்.சிலர் ஒல்லியாக அங்கும் இங்கும் ஓடியபடியே இருப்பார்கள்.
அவர்களிடம் அப்போயின்மென்ட் எடுப்பதுகூட மிகக் கஷ்டம்.அவ்வளவுக்கு அவர்களுக்கு நேரமில்லாத தன்மை.அப்படிஎன்றால் அந்த இடத்தில் பெட் ஸ்பேஸ் கூட இருக்கிறது என்று அர்த்தம்.அப்போயின்மென்ட் கிடைத்து கதைக்க தொடங்கிவிட்டால் அவர்கள் எங்கள் மீது காட்டும் கரிசனை என்பதும் எங்களுக்கான பெட் ஸ்பேஸ் எடுத்துத்தருவதில் இருக்கும் ஆழமான ஈடுபாடு என்பதும் ஏதாவது ஒரு பெட் ஸ்பேஸ் எடுக்க வழிவகுத்துவிடும்.
அவர்கள் கூடுதலாக மலையாள மொழி அல்லது ஹிந்தி மொழி பேசுகின்றவர்களாக இருப்பர்.
அதற்காக மலையாளத்தில் எழுத முடியாதே,எனக்கு விளங்கியதை,அவர்கள் எங்களுக்கு சொல்ல எத்தனித்ததை தமிழில் எழுத முயற்சிக்கிறேன்.

"நாங்க இந்த நாட்டுக்கு ஏன் வந்தோம்? ஏதாவது சம்பாதிக்க வேணும் என்றுதானே?"என்று "நாங்க நாடு விட்டு நாடு தாண்டி வந்ததன் பின்னணி என்ன?"என்பதை நினைவுபடுத்திக்கொண்டேயிருப்பார்.
இவராவது நினைவுபடுத்துவாரே அல்லது எல்லோரும் மறந்துவிடுவார்கள் இல்லையா?!!!!!!

"நான் உங்களுக்கு நல்ல இடம் காட்டுறன்.பிடிச்சிருந்தால் எடுங்க." மிகப்பெரிய உதவி இந்த நாட்டில் இருக்க இடம் எடுத்துத்தரும் சேவை,அதை செய்வது தான் மட்டும்தான் இந்த ஊரில் என்பது போல இருக்கும் அவர் பேச்சு.
"உங்களுக்கேற்ற மாதிரி எடுத்து தாறன்"என்று ஆக்களை கணக்கும் போட்டுவிடுவார்.

"அங்கு இருப்பவங்க ரொம்ப நல்லவங்க."என்று அந்த ரூமில்(Room) கூட இருப்பவங்களுக்கு ஒரு நல்ல Certificate உம் கொடுப்பார்.வேற்று நாட்டிலை சந்திக்கும்போது மற்றவங்களை பற்றி நல்ல விசயங்கள் பேசும் ஒரே ஒரு மனிதர்கள் அவர்கள் தான் என்று நகைச்சுவையாக சொல்வார்கள் மற்றவர்கள்.

சரி அவர் காட்டும் அறைக்கு போனால் அங்கு நாம் கேட்க வேண்டிய கேள்விகள் ஏராளம் இருக்கு.
எத்தனை மணிக்கு அங்குள்ளவர்கள் வேலைக்கு போவார்கள்?
எத்தனை மணிக்கு குளியலறை போவார்கள்.நான் போகும் நேரத்துக்கு அங்குள்ளவர்கள் யாரும் வேலைக்கு வெளிக்கிடுவார்களா? என்பது ஒரு அடிப்படைக் கேள்விகளாக இருக்கும்.
ஏனென்றால் அங்குள்ள அறைகளின் நிலவரம் அப்படித்தான்.
தென்னாசிய மற்றும் தென்கிழக்காசிய மக்கள் வேலைவாய்ப்பென்று சென்று அடிபடைத்தேவைகளுக்கே கஷ்ட படுகின்ற நிலைகள் அப்படி இருக்கும்.சில வேளைகளில் 8 மணிக்கு செல்ல வேண்டிய வேலைக்காக 3 மணிக்கே எழும்பி குளித்துவிட்டு மீண்டும் ஒரு குட்டித்தூக்கம் போட்டுவிட்டு விறு விறு என்று கம்பனி போக்குவரத்து சேவை வருமிடத்திற்கு ஓடுவார்கள்.
காலை வேளையில் குளிக்கவேண்டும் என்பதற்காக அதிகாலை தூக்கம் துறந்து,குளித்து மீண்டும் தூக்கம்,பிறகு எழும்பி ஓட்டம் ................ காசு உழைக்கலாம் என்பதற்கு அப்பால் எவ்வளவு வாழ்க்கையை தொலைக்கும் மனிதர்கள் அங்கு.

ஏன் அப்படி அதிகாலையிலேயே எழும்ப வேண்டும்?அப்படி என்ன காரணம் இருக்கிறது?

இப்ப தான் பெட் ஸ்பேஸ்(Bed Space)பற்றி சொல்ல நேரம் வந்திருக்கு.கூடுதலாக டுபாயின் இடங்களில் தனியாக இருப்பவர்களுக்கு அறைகள் எடுப்பது கடினம்.
இளையவர்களுக்கு அல்லது தனியானவர்களுக்கு எடுப்பதை விட திருமணமானவர்களுக்கு சோடியாக இருந்தால் அறை எடுப்பது இலகு என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.அதனால் தனியானவர்களுக்கு அறை எடுக்கமுடியாது என்பதை காரணம் காட்டி அதற்கான விலை மதிப்பை கூட்டி வைத்திருகிறார்கள்.

மிகக்குறைந்த சம்பளங்களுக்காக அந்த நாட்டு அடிப்படை சம்பளத்தை தங்கள் நாட்டு நாணயபெறுமதியோடு பெருக்கிப் பார்த்து அதிகூடிய பெறுமதி என்று வேறு நாடுகளுக்கு விரைந்து செல்லும் நம்மவர்கள் தான் இதற்காக கூடியளவு பணத்தை இழக்கிறார்கள்.
அதுவும் தனியானவர்கள் பலர் கூடி ஒரு வீட்டில் ஒரு அறையை எடுத்து பகிர்ந்துகொள்வார்கள்.
அதற்காக ஒருவருக்கு அங்கு வழங்கபடுவது ஒரு பெட் ஸ்பேஸ்(Bed Space) மட்டும் தான்.
அதற்குள் தான் அவரது சீவியம்.
அவரோடு அறையின் அளவை பொறுத்து குறைந்தது 6 படுக்கைகள் மேலும் கீழுமாக இருக்கும்.நடப்பதற்கு மட்டும் தான் அங்கு இடமிருக்கும்.
மேலே உள்ளவர் ஆடி ஆடி படுத்தால் கீழே உள்ளவரும் ஆடவேண்டியது தான்.
நித்திரை குழம்பும்.
ஆளுக்காள் வேறு வேறு நேரங்களில் வேலை முடியும்,அப்போ வேறு வேறு நேரங்களில் வருவார்கள்.அவர்கள் எல்லோரும் படுக்கைக்கு போக மற்றவர்கள் எழும்பிக்குளிக்கும் நேரம் வந்துவிடும்.
இத்தனைக்கும் ஒரு வீட்டில் மூன்று அறைகள் இருக்கின்றது என்றால்.ஒரு அறைக்கு 6 படுக்கைகள் சராசரியாக.இரட்டை தட்டு படுக்கை என்றால் 12 பேர் ஒரு அறையில்.அப்ப மூன்று அறையிலும் 36 பேர்.எப்படி இருக்கும்?
இது மிகக்குறைந்த சராசரியான தொகை,கூடலாம் குறையலாம்.
அங்குள்ளவர்கள் ஆகக்கூடுதலான சம்பளத்தை பெற்று வசதியோடு இருக்க விரும்பினால் அவர்கள் ஆக்களின் எண்ணிக்கையை குறைத்து இருந்தால் எண்ணிக்கை குறையும்.
இவை தான் அங்குள்ள பெட்ஸ்பேஸ்களின் நிலை.அதைவிட அங்கு கூடியிருந்து எல்லோரும் இணைந்து சமைத்து சாப்பிட ஆரம்பித்தால் எப்படி யிருக்கும்?
நிலமை வலுமோசமானதாகவே அங்குள்ளவர்கள் மிகவும் கடினமான சூழலில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.அதுவும் மிகக்குறந்த சம்பளமாக இருந்துவிட்டால் அவர்கள் மீளவேமுடியாது என்ற நிலை இருக்கும்.அப்படியான சூழல்களில் வாழ்ந்தும் மிகக்குறைந்து ஊதியம்பெறுபவர்களாக இருந்தாலும் தங்கள் மூளைவளத்தை வேலைகளில் மிக சாதுரியமாக புகுத்தி வெற்றிபெற்று தங்கள் குடும்பம் மற்றும் சமுதாயத்தின் பால் அக்கறை செலுத்தி தங்களை வருத்திவாழும் இளையவர்கள் சிறந்த உழைப்பாளிகளே,

லண்டன்
லண்டன் பணத்தின் கோட்டை,மிகக்கூடிய நாணயபெறுமதியான நாடாக பேசப்படும் நாடு,அதுவே எல்லோரையும் பணத்தின் பக்கம் சிந்திக்கவைத்துவிட்டது.
இதைவிட பாஹ்ரேன் குவைத் போன்ற நாடுகளின் பெறுமதி மிக்கக்கூட,அதை அப்படியா என்று கேட்பதற்கும் பலர் இருக்கிறார்கள்.ஏனென்றால் லண்டன் தான் பணக்கார நாடு என்று சிந்திக்கும் ஒரு போக்கு இருக்கிறது.சரி அது இருக்கட்டும்
டுபாயில் பெட்ஸ்பேஸ்(Bed Space)போல லண்டனில் சொல்லப்படுவதுதான் பொக்ஸ்ரூம்(Box Room)
ஏனென்றால் அது பெட்டி போல இருக்கும் என்றும் சொல்வார்கள்,நெருப்புபெட்டி ரூம் என்றும் நகைச்சுவையாக சொல்வார்கள்.ஏனென்றால் அப்படியான பெட்டிகள் போல அறை இருக்கும்.
சில இடங்களில் படுக்கை போடுமளவிற்கும் கால் வைத்து இறங்குமளவிற்குத்தான் அந்த அறை இருக்கும்.கொண்டு வந்த சூர்கேற்ஸ் ஒரு மூலையில் இருக்க படுக்கையிலேயே எல்லா வேலைகளும்.
கூடுதலாக அப்படியான அறைகளில் இருக்கத்தலைபடுபவர்கள்(மாட்டுப்படுபவர்கள்) மாணவர்களாகத்தான் இருப்பார்கள்.மாணவர்களைத்தான் அந்த அந்த வீட்டுரிமையாளர்கள் விரும்புவார்கள்.அது அவர்களை கட்டுபாட்டோடு வைத்திருக்கலாம் என்ற எண்ணமோ தெரியாது.ஏனென்றால் லண்டனில் மாணவர்களுக்கு அரசாங்கத்தின் கட்டுப்பாடுகள் வேறு இருக்கின்றது.
வீட்டு உரிமையாளர்களும் வீட்டுக்கான பெரும் செலவில் ஒரு பகுதியை ஈடு செய்யவேண்டுமென்றே அப்படியாக அந்த அறையை வாடகைக்கு விட தலைப்படுவார்கள்.பணத்தோடு ஓட வேண்டிய நாடு என்பதால் வீட்டு உரிமையாளர் மற்றும் வாடகைக்கு இருக்க வரும் நபர் என்று இருபக்கமும் நியாயப்பாடுகள் இருக்கும்.
சொந்த வீட்டில் இருக்கும் ஒரு வீட்டு உரிமையாளராக இருந்தாலும் ஒரு அறையை மட்டுமே பாவித்து மற்ற அறைகளை வாடகைக்கு விட்டு தங்கள் வாழ்க்கையை மிகக்கஸ்டபட்டு கொண்டு செல்லும் ஏராளமான மனிதர்கள் லண்டனில் வாழ்கிறார்கள்.
லண்டனில் பொக்ஸ்ரூம் சில பொதுவான தமிழ்க்கடைகளில் ஒட்டபட்டிருக்கும் சுவரொட்டிகள் வாயிலாக அறியலாம்.அதிலும் ஆள்பார்த்து தான் வீட்டு உரிமையாளர் எடுப்பார்.அதனால் தங்களுக்கு தெரிந்தவர்கள் ஊடாக வருபவரகள் என்றால் அவர்களுக்கு முன்னுரிமை கொடுப்பர்.
கடைகளில் ஒட்டுவதற்கும் கடைக்கு குறிப்பிட்ட காலத்திற்கு அமைவாக பணம் அறவிடபடுமாம்.அது வாரத்திற்கு ஒரு சில பென்ஸ்சுகளாகவும் இருக்கலாம்.ஆனால் அறவிடுகிறார்களாம்.
லண்டனில் பொஸ்ரூமிலும் குளியலறை நேரப்பிரச்சனைகள் இருந்தாலும் டுபாய் போல இல்லை என்றே சொல்லவேண்டும்.ஏனெறால் ஆட்களின் எண்ணிக்கையை கூடுதலாக வைத்திருக்க அந்த வீட்டு உரிமையாளர்விரும்புவதில்லை.
இங்கு எத்தனை நாள் உடுப்பு தோய்க்கலாம்,எத்தனை நாள் என்ன நேரம் சமைக்க விரும்பினால் சமைக்கலாம் என்று சில கட்டுப்பாடுகளை முதலே தெரிந்துகொள்வது சிறப்பாம்.
சில வேளைகளில் பொக்ஸ் ரூமில் இருப்பவர்களுக்கு சாப்பாட்டோடு தான் வாடகை கணக்கு சொல்லப்படும்.ஆரம்பத்தில் சாப்பாடு பிரமாதமாக தயாரிப்பாக இருக்குமாம்.பின்னர் அப்படி இப்படித்தான் என்றும் சொல்வார்கள்.
காலை வேலையில் பொதுவாக பாணோடு அமைந்ததாக இருக்கும்.
வேலைக்கு போகின்றவர்கள் இரவு நேரம் தான் வீடு திரும்புவார்கள்.அவர்களுக்கு வீட்டுகுசினிக்குள் சாப்பாடு மூடியபடி வைத்திருப்பார்கள்.இருந்தால் சாப்பிட்டு தூங்கவேண்டியதுதான்.
மாதம் முடிய காசு கொடுத்தால் வீட்டு உரிமையாளர்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும்,ஏனென்றால் வீட்டுக்கணக்குகள் அந்த அந்த நேரத்தில் அவர்களுக்கு முடிக்க உதவியாக் இருக்குமாம்.
ஏனெறால் வீடு அவர்களுக்கு முழு சொந்தமானதாக இருக்காது.அரைவாசிக்காசு கட்டியபடி இருக்க மிகுதிப்பணத்தை கட்டுவதற்கு இந்த வாடகைப்பணம் தான் மிகப்பெரிய உதவியாக இருக்கும்.ஏனென்றால் வங்கியில் கை வைக்க யாரும் விரும்புவதில்லை..
அதுவும் சரியான நேரத்தில் கட்டவேண்டிய மாதப்பணத்தை கட்டாது விட்டால் அது ஒருபக்கம் கூட ஆரம்பித்துவிடும்.அதனால் தான் லண்டன் நேரம்,காலம் மற்றும் பணத்தோடு ஓடும் தேசம் என்று குறிப்பிடவேண்டியதாயிற்று.அன்றாட வாழ்க்கை நிம்மதியாகவும் அவதிக்குள்ளாதவாறும் கொண்டு செல்ல எல்லோரும் தங்களுக்குள்ளேயும் தங்கள் குடும்பத்தினூடாகவும் ஒரு போராட்டமான வாழ்க்கையையே கொண்டு செல்லவேண்டியவர்களாக இருக்கிறது.அந்த வாழ்க்கை போராட்டத்தில் நம்மவர்கள் பலர் வெற்றி கண்டவர்களாகவும் இருக்கிறார்கள் என்பதும் ஒரு சந்தோஷமான செய்தி.அவர்களும் இதே பொக்ஸ் ரூமைத்தான் தமது ஆரம்ப இருப்பிடங்களாக கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அதனால் டுபாயில் பெட்ஸ்பேஸ் லண்டனில் பொக்ஸ் ரூம் என்பவையெல்லாம் அந்தந்த நாடுகளில் நிலைபெறுவதற்கான ஆரம்ப நிலை இருப்பிடங்கள் என்று உறுதியாகச்சொல்லலாம்.வழியமைப்பது அவரவர் கைகளில்.இது உரிமையாளர் தங்குபவர் என இருபகுதிகளுக்கும் பொருந்தும்.
இதேபோல மற்ற பல நாடுகளிலும் சுவாரஸ்யமான சொற்பாவனைகள் இருக்கலாம், நகைச்சுவையான விடயங்களும் இருக்கலாம்,அதையும் நீங்கள் பதிவு செய்துகொள்ளுங்கள்

குறிப்பு:
இந்தப்பதிவு நடைமுறைக்காலத்தின் உண்மை நிலைகளையே சொல்கிறது. மாறாக உரிமையாளர்கள்,தங்குபவர்கள்,மாணவர்கள்,வெற்றிகண்டவர்கள்,என்று யாரையும் சுட்டி நிற்கவில்லை என்பதை அன்போடு சொல்கின்றேன்.
இது காலத்தின் கட்டாயமான விடயங்களை பதிவுசெய்திருக்கிறது.தூரத்திலிருந்து பார்ப்பவர்களுக்கு உண்மை நிலைகள் புரிந்துகொள்ளட்டும் என்ற எண்ணத்தோடும் உண்மை நிலைகள் காலத்தினால் பதிவு செய்யப்பட வேண்டும் நினைப்போடும் பதிவுசெய்யபட்டிருக்கிறது.அவ்வாறே உங்கள் பார்வையையும் செலுத்தி தவறவிடப்பட்ட விடயங்களை சுட்டிக்காட்டுதல் சாலப்பொருந்தும்.

1 comment:

கோவை நேரம் said...

தெரியாத விஷயம்...இப்படி எல்லாம் இருக்கா...>