மோட்டச்சைக்கிள்






மாலை வேளை
கோடைகால மாலைபொழுது அது,அழகிய சூரிய அஸ்தமனம் காண்கின்ற வேளை
கிராமத்தில் அங்கும் மிங்கும் எல்லா வயதினரும் தங்கள் தங்கள் வேலைகளில் ஈடுபட்டுக்கொண்டே இருகின்றனர்.
அதுவும் கிராமங்களில் இளைஞர்கள் எப்படி இருப்பார்கள்?
தங்களுக்கு பிடித்த இடங்களில் கூடி நின்று தங்களுக்கே உரித்தான கும்மாளம் பகிடி பம்பல்கள்,ஆளுக்காள் கும்மிகளுக்கும் குறைவில்லை. நகைச்சுவைகளோடு அதற்கான சிரிப்புகள் வானைப்பிளக்கும்,தங்களுடைய கிராமம் தானே என்ற உரிமையோடு ஓடியாடித்திரிந்து நகைச்சுவையோடு நகரும் மாலைவேளை கிராமங்களில்.

அந்தகிராமத்தின் ஆலயத்தினருகில் இருக்கும் சனசமூக நிலையத்தடியில்தான் அஙகிருக்கும் இளைஞர்கள் கூடுவார்கள்.பொதுவாக இளைஞர்களோ வயது கூடியவர்களோ கிராமங்களில் அங்குள்ள பொதுவான இடங்களில் கூடுவது வழமை.கோயில்கள்,வாசிகசாலையடி,குளத்தடி,வயற்கரை,ஆலமரம் போன்ற மரங்களின் கீழ் என்று அந்த இடங்களின் பட்டியல் நீண்டு செல்லும்.
இந்த கிராமத்திலும் ஆரம்பத்தில் கிரிக்கெட் மட்டைகளோடும் ஆறு கட்டைகளோடும் இளைஞர்களும் அவர்களின் வால்களும் வந்துவிட்டாலே அந்த இடம் களைகட்டதொடங்கிவிடும்.சூடுபிடிக்கும் வெயில் கூட சூட்டை தணிக்க தொடங்கும் நேரம் அது.
வால்கள் என்றால் இளைஞர் பராயத்தை தொட்டதும் தொடாததுமாயிருக்கும் அந்த பருவத்தினர் இளைஞர்கள் என்பவர்களோடு உலவும் அந்த வட்டங்கள் தான்.அது கிராமங்களில் இளைஞர்கள் மட்டங்களில் சொல்லப்படும் ஒரு வழக்கு.

ஒவ்வொரு பருவத்தினரும் தங்களுக்கேற்ற இடங்களில்.வயது வந்தவர்கள் கிரிக்கெட் பந்து அடித்தாலும் படாத தூரத்திலில் கூட்டமாக இருந்து அலசுவார்கள்
தங்கள் அரசியல் ஆய்வுகள்,சமூகப்பார்வைகள் என்று கதைகள் நகரும்.
அந்த இடத்தில் தான் யோகன் அண்ணா ஒரு ஓரமாக தன் பார்வையை செலுத்துவார்,சிறந்த ஞாபக ஆற்றலும் படிப்பறிந்த விடயங்கள்,படித்த ஆசிரியர்கள் என்று அவர் பேச்சுக்கள் நகரும்.படிக்கும் காலங்களில் அவர்பெற்ற அனுபவமான விடயங்கள் யாருமறியா விடயங்களாக இருந்தது.அவரை பற்றி இங்கே சொல்லியிருக்கிறேன்

எக்கட்டம் விட்டுக்கொண்டே சிரித்தபடி வருகிறார் கந்தசாமி அண்ணன்,
“என்ன இண்டைக்கும் என்ன கதைபோகுது,என்று கேட்டபடி வந்து வாசிகசாலையடியில் உட்கார்ந்துகொள்கிறார்.
அன்றைய மாலை கிரிக்கெட் விளையாட்டைத்தொடர்ந்து வாசிக சாலைக்கு முன்னாலே இளைஞர்களும் அமர்துகொள்வார்கள்,விளையாடில் புரிந்த வீரக்கதைகளோடும் அளாப்பிய சுணாப்பிய கதைகளால் மாலை நேரத்தில் பூட்டிய வாசிகசாலையடி களைகட்டும்.விளையாட்டோடு இணைந்துகொள்ளமுடியாமல் ரியூசனுக்கு எல்லாம் போய்விட்டு சுத்தியடிச்சுவிட்டு வரும் இளைஞர்களும் அந்த இடத்தைற்கு சரியான நேரத்திற்கு வந்துவிடுவார்கள். அவர்கள் ரியூசனுக்கும் போவார்கள்,ரியூசனுக்கு போனவர்களோடும் போய் கவனமாக விட்டுவிட்டும் வருவார்கள்.
பந்து படாத இடத்தில் கூடிக்கதையளந்த வயோதிப இளையவர்களும் மெல்ல மெல்ல நகர்வார்கள் வாசிகசாலை நோக்கி,சிலர் வீட்டுக்கும் சென்றுவிடுவார்கள்.இளைஞர்களோடு கூடி விளையாடிய வால்களை கூட்டிசென்றுவிடுவார்கள் பெற்றோர்.இப்படியாக கூடும் வாசிகசாலை மாலைக்குழு.
அங்கு என்ன விசயம் எப்படி கதைக்க வரும் என்று யாருக்கும் தெரியாது,ஆனால் ஏதோ ஒரு விடயம் கதையளக்க வந்துவிடும்.

”என்ன இது புதுசா ஒரு மோட்டச்சைக்கிள் வந்திருக்காமே,இவன் பெடியன் எடுத்தேயாகவேணும் எண்டு கேட்டு தாயோடை சண்டைபிடிக்கிறான் வீட்டிலை,என்ன அது நல்லா சைக்கிளோ?கந்தசாமி அண்ணையின்கேள்வி,

”அண்ணை இப்ப யாழ்ப்பாணத்துக்காத்தான் புதுசு புதுசா மோட்டச்சைக்கிள் அனுப்புறாங்கள்.ஏனெண்டால் அவங்களுக்கு தெரியும் இங்கை தான் வெளிநாட்டுகாசு நல்லா இருக்கெண்டு.
அதால எதுக்கும் கொஞ்சம் யோசிச்சு செய்யுங்கோ” நாதண்ணையின் கதை.

”அதுவும் பெடியள் உசார் வாற வயசிலை அப்பிடி இப்பிடி திரிய சுத்தியடிக்கத்தான் மனம் கேட்கும்,” நாதண்ணை தொடர்ந்தார்.

”பெடியளின்ரை அவங்கள் அனுப்பிற வெளி நாட்டுக்காசை,அந்த காசிலை தான் நான் இருக்கிறன் எண்டு இவர் நக்கல் பண்ணுறாரோ,அல்லது உண்மையில் நன்மைக்குத்தான் சொல்கின்றானோ” என்று கடுமையாக யோசிக்கிறார் கந்தசாமியண்ணை.

”எண்டாலும் அவன் சொல்லுறதிலை நியாயம் இருக்கு” மனதை தேற்றுகிறார் கந்தசாமியண்ணை.

”நாதண்ணை உங்கடை வயசிலை நீங்க எத்தினையை செய்திருப்பியள்,ஆனால் எங்கடை வயசிலை எங்களுக்கும் ஆசை இருக்கும் தானே” இது அங்குள்ள ஒரு இளைஞர் வட்டத்திலிருந்து தீபன்,இவன் செல்லத்தம்பி அங்கிருக்கும் எல்லோருக்கும்.

அது என்னவென்றால் அந்த மோட்டார் சைக்கிள் இன்னும் சந்தைக்கே வரவில்லையாம்,
அது வந்துகொண்டிருக்கிறதாம்,பொதிகை தொலைக்காட்சியில் வரும் அந்த விளம்பரத்தை பார்த்துவிட்டுத்தான் கந்தசாமிஅண்ணையின் மகன் கேட்கிறானாம்.அதுவும் அந்த மோட்டார்சைக்கிளை அந்த விளம்பரத்தில் சச்சின் ரெண்டுல்கர் ஓடிக்காட்டுகின்றாராம்.இவையெல்லாம் கந்தசாமி அண்ணன் சொன்னபடியே இருக்கிறார்.

”அடேய் செல்லத்தம்பி பொடியா கந்தசாமி அவர் மகனுக்கு எடுத்துகுடுக்க நீங்க எல்லாம் ஓடித்திரிய தானே இந்த கதை சொல்லுறீங்க,அந்த விளம்பரத்திலை அவன் ஓடிக்காட்ட அவனுக்கு காசு, நீங்க பார்த்துபோட்டு அதை வாங்க காசு வேணும்” என்று நகைச்சுவையோடு பேசினார் நாதண்ணை.

”இப்படி மோட்டச்சைக்கிளில் ஓடித்தான் அவன் ஒரு கலர் காட்டி தன்னுடைய காதலை மெருகூட்டபோறான் எண்டு இவருக்கும் தெரியாது,ஒருத்தருக்கும் தெரியாது” மனதிலே சிரிப்போடு முணுணுத்தபடி பொடியள்,

சின்ன சின்ன மாற்றங்களோடும் பல்தேவைகருதியும் சந்தைக்கு வந்தபடியே இருந்தது பல ரக மோட்டார்சைக்கிள்கள்.யாழ்ப்பாணத்திற்காக பெற்றோல் பாவனை அதிகரித்தகாலங்களில் இந்த மோட்டார்சைக்கிள்களின் பாவனையும் அதிகரிக்கத்தொடங்கிவிட்டது,அதே காலங்களில் வெளி நாடுகளிலுருந்து புலம்பெயர்ந்த மக்கள் சுற்றுலாவென்று தாங்கள் பிறந்த மண்ணுக்கே வரத்தொடங்கியகாலம்.இளைஞர்கள் என்றால் இப்படியான மோட்டார்சைக்கிள்தான் ஓட வேண்டும் என்ற ஒரு மாயைவலைக்குள் இருந்தகாலங்கள்.
இன்றும் சந்தையில் வரும் மோட்டார் சைக்கிள்கள் நிச்சயம் யாழ்மண்ணிலும் பவனிவந்துகொண்டேதானிருக்கும்.
திரைப்படங்களை மையமாகவைத்து குழுக்கள் உருவாகியும் அவை தமக்கிடையில் சண்டைகள் பிடிப்பதுமாக நகர்ந்தகாலங்களாகின.
அவைகள் எல்லாம் இப்படியான மோட்டார் சைக்கிள்களை எடுத்து சத்தமிட்டவாறும் உறுமியவாறும் கலக்கங்கள் கொடுத்த காலமும் கூட.
இவையெல்லாம் ஒரு பகுதியான குழுக்களில் மட்டும் தான்,
அதைவிட இந்த மோட்டச்சைக்கிளினால் அவந்த விபத்துக்கள் ஏராளம்,எத்தனையோ நண்பர்களையும் பெரியவர்களை இழந்திருக்கிறோம்

ஆனால் கந்தசாமி அண்ணனின் மகன் கேட்டது தன் காதலை மெருகூட்டவாம்,அது அங்கிருந்த இளைஞர்கள் முணுமுணுத்தது.காதலுக்கு மோட்டச்சைக்கிளுக்கும் எவ்வளவு தொடர்பு?

இளையவர்கள்,காதல்கள்,தேவைகள்,வியாபாரிகள்,தூரப்பயணிகள்பெண்களுக்கும் மோட்டச்சைக்கிள் தேவைகள் என்று இனங்கண்டு பல்வேறு வடிவங்களில் இந்த மோட்டச்சைக்கிள்கள் உருப்பெறத்தொடங்கியது.கொழும்பில் காணமுடியாத மோட்டச்சைக்கிள்கள் எல்லாம் யாழ்ப்பாணத்தில் அழகழகாக காணக்கூடியதாக இருந்தது.
ஹீரோ ஹொண்டா என்றும் அந்த நிறுவனத்தின் தயாரிப்போடு இன்னும் பல வடிவங்கள் நிறங்களில் வந்து குவிந்துகொண்டேயிருந்தது.வந்தவுடன் வாங்குவதற்கு நிறங்களோடு புக்கிங்கள் வேறு.இருந்ததை விற்றுவிட்டு புதிதாய் வந்ததை வாங்கவும் போட்டி.ஹீரோ கொண்டா போல இன்னுமொரு நிறுவனம், நினைவிற்கு வரவில்லை,அதை இளைஞர்கள் வாங்க பின்னடித்தார்கள்,தரம்,எடுப்பு குறைவென்று சொல்வார்கள் சிலர்.
அதேபோல போட்டியாக சீன மோட்டச்சைக்கிள்கள் சப்பறங்கள் சிகரங்கள் போல ஒளியூட்டும் நிறங்களாலும் மின்குமிழ்களாலும் அலங்கரிக்கப்பட்டு சந்தைக்கு வந்தது,ஆனால் அது விலை குறைவென்றாலும்அதற்கு மௌசு குறைவுதான். லட்சக்கணக்கில் காசைக்கொடுத்து வாங்க எல்லோரும் பணக்காரர்கள்.

வடமராட்சி,தென்மராட்சியிலிருந்து யாழ்ப்பாணத்திற்கும் சைக்கிளில் போய் வந்தவர்கள் இருக்கிறார்கள்,அதேபோல் அடுத்து வந்த காலங்களில் வீட்டுக்கொரு மோட்டச்சைக்கிள் வந்த காலமும் இருக்கிறது,
பலரின் தேவைகளை அது நிறைவு செய்திருக்கிறது என்பதும் உண்மைதான்.என்றாலும் பெற்றோலின் தன்னிறைவான வருகையோடு மோட்டச்சைக்கிள் பாவனையின் அன்றைய காலங்களின் அதீதமான பாவனை வளர்ச்சி மனதோடு ஒட்டிவிட்டது


சொல் விளக்கம்
மோட்டச்சைக்கிள்-இது பேச்சு வழக்கு,மோட்டார் சைக்கிள் பொதுவான எழுத்து வழக்கு
அளாப்பல் சுணாப்பல்- சிறுவர்கள் விளையாட்டின் போது பொய் என்று தெரிந்து உண்மை போல் சொல்லப்படும் பொய்
பொடியள்-இளைஞர்கள்