சூரன் போர் - மகிழ்ந்த நினைவுகள்


கந்த சஷ்டி ஆரம்பித்துவிட்டால் எப்ப சூரன் போர் வரப்போகிறது என்பது தான் சிறுவர்களுக்கு எண்ணமாக இருக்கும்,ஏன் இளையோர்களுக்கு அந்த சூரனை தோள்தூக்கி ஆடுவதற்கு சந்தோஷமான இருப்பார்கள்,சகல கோவில்களிலும் சூரன் இல்லாவிட்டாலும் அயல் கிராமத்து இளைஞர்கள் என்று எல்லோரும் நட்புடன் உஷாராகிவிடுவார்கள்,” `முன்வீதியில் யார்தூக்குவது’,`பின்வீதியில் எப்படி சூரனை ஆட்டுவது’ ”, என்று பெரிய பெரிய திட்டங்கள் எல்லாம் போட்டு கந்தஷஷ்டி ஆரம்பமே சூரன் போருக்கான தொடக்கம் என்பது போல இருக்கும் அவர்களின் செயற்பாடுகள்.உண்மையிலும் தேவர்களிற்கு சூரனால் வதைக்கப்பட்ட கொடுமைகளால் சூரனை வதம் செய்வதற்காக ஆறு நாள்கள் கந்தசஷ்டியாகவும் இறுதி நாளில் சூரனை சங்காரம் செய்து அவர்களிற்கு விடுதலை பெற்றுக்கொடுத்த நாளையே இந்த சூரன் போராக பாவனைசெய்யும் நிகழ்வாக வருடம்தோறும் நடாத்தப்பட்டுவருகிறது,

அப்படியாக சூரன் போர் என்றால் எல்லோருக்கும் மகிழ்ச்சிதான்.இளையவர்களும் சிறுவர்களும் ஏன் பெரியவர்களும் ஆயத்தமாகிவிடுவினம்.
தாரகாசுரன்,சிங்கமுகாசுரன் மற்றும் சூரபன்மன் என்பவர்கள் முருகப்பெருமானுடன் போர் புரியப்போகிறார்கள்,அதற்கு அந்த சூரர்கள் எப்படி எப்படி முன்னேறி முன்னேறிப்பாய்ந்து முருகனிடம் செல்வார்கள் என்றும் முருகனோடு போர் புரிந்தார்கள் என்றும் அவர்கள் எப்படி தேவர்களை வதைத்தார்கள் என்பதைக்காட்ட வந்திருக்கும் மக்களை சூரர்கள் வதைப்பது போன்று உருவகப்படுத்தும் படியாக இளையவர்கள் தயார்ப்படுத்துவார்கள்.அதற்கு பழைய பழைய காலங்களில் சூரன் ஆட்டுவதில் அனுபவம் வாய்ந்த பெரியவர்கள் அவர்களுக்கு வழிகாட்டுவார்கள்,அதைவிட எங்கடை பொடியளும் சில நுணுக்கங்களை கையாள்வார்கள்.

சூரன் ஆட்டம் ஆரம்பத்தில் பறையொலி எழுப்பபடும்,அது முருகனை போருக்கு வா வா என்று அழைப்பதற்காக எழுப்பப்படும் ஒலி என்று தாத்தாமார் சின்னப்பொடியளுக்கு சொல்லுவினம்,உண்மையில் அந்தப்பறையொலியில் அந்தக்கால அரசர்கள் போருக்கு எழுப்பும் ஒலிகளை நாங்கள் சில திரைப்படங்களில் கேட்பதைப்போலவே அவர்களும் போருக்காக ஒருவகையான தாளவமைப்பில் பறையடிப்பார்கள்.அதைகேட்டுவிட்டு எங்கள் தாத்தா அது சூரன்போர் ஆரம்பமாகபோகிறது என்று சொல்வார்,அதாவது அந்த பறையொலி முருகனை சூரன் போருக்காக அழைப்பதுபோல் இருக்கும்.அதைகேட்டபடியே கோவிலுக்கும் சென்றுவிட்டால் யானைமுகத்தோடு தாரகாசுரன் முன்வீதியில் காவல் இருப்பார்.உள்வீதியில் வெகு நிம்மதியாக முருகன் பூஜைகள் நடக்கும்,மிக ஆறுதலாக தவில் நாதஷ்வர வாத்தியங்கள் முழங்க முருகப்பெருமான உள்வீதி வலம் வந்து வெளிவீதிவருவார்,அது மட்டும் தாரகாசுரன் முருகப்பெருமான போருக்காக அழைக்கும்படியாக பறையொலி ஒலித்துக்கொண்டேயிருக்கும்,

முருகனும் வந்துவிட்டார்.

இளையவர்கள் நல்ல ஒரு வேட்டியை சண்டிக்கட்டும் கட்டி ஆயத்தமாகி விடுவார்கள்.சூரனின் தலையாட்டுவதற்கு ஒருவர் சூரனுக்கு பின்னால் ஏறியிருப்பார்,அவருக்கோ சூரனின் தலையை இரண்டுபக்கமும் ஆட்டுவதுதான் வேலை,ஆனால் சூரனின் ஆட்டத்துக்கு அமைவாக அந்த தலையை ஆட்ட வேண்டும் என்பதும் ஒரு விடயம்.

சரி தாரகாசுரன் ஆட்டம்,தாரகாசுரன் யானைமுகத்தோடு மக்களை வதம் செய்ய ஆரம்பிப்பார்,அந்தப்பக்கம் செல்வதும் இந்தப்பக்கம் செல்வதும் என்று ஒரு ஆட்டம்,இருப்பதும் எழும்புவதும் பதிப்பதும் தூக்குவதும் என்று பல ஆட்டம்.என்று ஆட இறுதியில் முருகன் சங்காரம் செய்வதாக தாரகாசுரனின் தலை வெட்டப்படும்,


தொடர்ந்து சிங்கமுகாசுரன் ஆட்டம்.இங்கும் மக்களை நோக்கிச்சென்று வதம் செய்யும் ஆட்டங்கள்,ஒரு கரையாக ஓடிச்சென்று மக்கள் நடுவில் சூரனை தூக்கியாட்ட மக்கள் அல்லோலகல்லோலப்பட்டு ஓடுவதினூடாக மக்களை வதைத்ததாக உணர்த்தப்படும்.ஒருகட்டத்தில் சூரனை தூக்கி தூக்கு எறிவார்கள் இளையவர்கள், தம்பிமார் கவனம் கவனம் என்று பெரியவர்கள் பின்னுக்கே நிப்பினம்,அப்படி ஒருகட்டத்தில் சிங்கமுகாசுரனின் தலையும் வெட்டப்படும்,ஆனால் சிங்கமுகாசுரன் இறந்தாலும் மீண்டும் மீண்டும் உயிர்க்கும் வரம் பெற்றிருந்தவனாகையால் மீண்டும் சிங்கமுகாசுரன் தலைகொழுவி மக்களைவதைப்பான்,திரும்பவும் ஆட்டம் சிங்கமுகாசுரனாட்டம்.இப்படியாக மூன்று முறை உயிர்த்து சிங்கமுகாசுரனை தலை வெட்டப்படும்,

தொடர்ந்து சூரபன்மன் ஆட்டம்,
சூரன் தான் எல்லோருக்கும் அண்ணன்,அவன் தான் சிங்கமுகாசுரன் மற்றும் தாரகாசுரனை போருக்கு அனுப்பிவைத்தவன்,அவர்களின் இறப்பிற்குபிறகு போர்க்களத்திற்கு விரைந்தவன் சூரபன்மன்,பல்வேறுவரங்களையும் பெற்றவன்,அவனை அழிக்கமுடியாது என்பது எல்லாம் ஐதீகபுராணங்கள் சொல்லும்விடயங்கள்


சரி சூரபன்மன் ஆட்டம்,பொதுவாக வடக்குவீதியில்தான் எல்லாக்கோவில்களிலும் ஆரம்பிக்கும்.சூரபன்மனுக்கென்றே சில ஆட்டமுறைகளை வைத்திருப்பார்கள் இளையவர்கள்,ஏனென்றால் மற்ற அசுரர்களிலிருந்து அதாவது அவன் தம்பிமார்களிடமிருந்து வேறுபடுத்திக்காட்டவேண்டும் என்பதற்காக.அதுமட்டுமல்லாமல் சிங்கமுகாசுரன் பல்வேறுதடவைகள் உயிர்த்துவந்து முருகப்பெருமானோடு போர்புரிந்ததைப்போன்று சூரபன்மனும் பல்வேறு வடிவங்களெடுத்து போர்புரிந்தவன்,அவையெல்லாம் அந்த சூரன்போரில் உருவகப்படுத்திக்காட்டுவார்கள்.கடலாக வந்ததை நீல சேலையால் மூடிவந்தும் வானமாக வந்ததையும் நீலை சேலையால் மூடிவந்தும் பறவையாக மாறிவந்ததை பறவையின் தலையை சூரனின் தலைக்குப்பதிலாக மற்றிவந்தும் முருகப்பெருமானுடன் போர் புரிதலைக்காட்டுவார்கள்.அதற்குள் ஆட்டங்கள் பலவகையாக இருக்கும்.


முழந்தாளில் நடந்துவருவதும் அதை முருகப்பெருமான் கண்டபின் அவருக்கும் பின்னால் சென்று சுழன்று வருவதும் தூரத்துக்கே ஓடிச்சென்று மக்களை வதைத்து வதைத்து கடைசியில் முருகனுக்கு கிட்டவந்ததும் அவரை நோக்கித்தூக்கி தூக்கி போர் புரிவதாக சூரன் ஆட்டுவார்கள்.மிகவும் அழகாக இருக்கும்,இந்த ஆட்டங்களுக்கு அமைவாக பறையொலி ஒலித்துக்கொண்டே இருக்கும்,அந்த தாளக்கட்டுமானத்துக்கு அமைவாக இளையவர்கள் ஆட்டுவார்கள்.


இப்படியாக சூரன் பல்வேறுவடிவக்கள் எடுத்து போர்புரிந்தபடியிருக்க இறுதில் ஒரு மாமரமாக மாறியபடி இருக்கும் ஒரு ஆட்டம்,அந்த வேளையில் பார்க்க வேணும் ”முன்னுக்கு மாமரக்கிளை கொண்டு ஆட்டுபவரை”.பறையின் தாளத்துக்கு மாமரக்கிளையையும் சேர்த்து,அதுதான் சூரன் போரின் இறுதியாட்டம்,ஆகவே மாமரக்கிளையோடு சூரனையும் முன்னோக்கியும் பின்னோக்கியும் அங்குமிங்குமாக ஆட்டுவார்கள்,மிகவும் ரசிக்கக்கூடியாதாக இருக்கும்,இறுதியில் மாமரக்கிளை அரைவாசியாக்கப்படும்,பின்னர் சேவல் கொடியும் மயில் வாகனமும் முருகப்பெருமானிற்குக்கிட்ட வைப்பார்கள்,அது சேவலும் மயிலுமாக சூரபன்மன் மாறினான் என்றவாறான புராணக்கதையை நினைவுபடுத்தும்,அதன் பின் மக்கள் எல்லோரும் சூரனை சங்காரம் செய்துவிட்டதாக உணர்வு,இறுதியில் சங்காரம் செய்த மாவிலையை தங்களோடு எடுத்துக்கொள்வார்கள்.
இப்படியாக கந்தசஷ்டியின் காலங்கள் சூரனை சங்காரம் செய்தலோடு நிறைவுபெறும்,அந்த ஆறு நாள்களும் சூரனை வதம் செய்யப்புறப்பட்ட நாள்கள்.வதம் செய்து தேவர்களுக்கு சுகம் தந்த நாள்கள்.

நானும் இந்த சூரன் போர் எதையுமே விட்டதில்லை,எங்களூரில் தச்சந்தோப்பு சிந்தாமணி விநாயகர் ஆலயத்தில் இந்த சூரன் போர் சிறப்பாக நடைபெறும்,சின்னானாக இருந்த காலத்தில் ஒவ்வொரு தடவையும் என்ரை தாத்தாவையும் விடாப்பிடியாக கூட்டிக்கொண்டு போய்விடுவன்.ஆனால் தூரத்திலைதான் நிண்டு பார்க்கிறது பாருங்கோ,ஏனெண்டால் சூரனுக்கு பயம். நான்கு பெரும் வீதியிலை சூரனாட்டம் ரொம்ப சிறப்பாக நடக்கும்,கொழும்பிலும் பல்வேறு ஆலயங்களிலும் இந்த சூரன் போர் ஆட்டங்கள் வெகு சிறப்பாக நடைபெறுவது வழமை,இங்கிருக்கும் புகைப்படங்கள் கொழும்பு நகர் பம்பலப்பிட்டியா கதிரேஷன் ஆலயத்தில் இந்த வருடம் இடம்பெற்ற சூரன்போர் ஆட்டத்தின் ஒரு சில காட்சிகள்,சிறப்பாக இடம்பெற்றதாக அறியக்கிடைகிறது,மக்கள் எல்லோரும் கந்தசஷ்டிகாலங்களில் விரதம் அனுஷ்டித்து சூரங்காரமும் கண்டு அருள்பெற்றிருக்கிறார்கள்,நன்று

இந்த புகைப்படங்களை கரவைக்குரலுக்கு அனுப்பிவைத்த யோஹா ஆனந்தி அவர்களுக்கும் நன்றி

யாழ்தேவியில் நான்


யாழ்தேவியில் நடந்து முடிந்து கொண்டிருக்கும் வாரத்தின் நட்சத்திரப் பதிவராக கரவையின் ஓசையை அறிவித்திருக்கிறார்கள் அதன் நிர்வாகக்குழு. மிகமகிழ்ச்சியைத்தருகிறது.
இப்படியான விடயம் பதிவர்களின் எழுதும் ஆர்வத்தைக்கூட்டும் என்றால் மிகையாகாது.வேலைப்பளு என்றவாறாக நேரத்தில் இடைவெளிகள் தேடி அதில் நிம்மதி தேடும் இங்கிலாந்து மண்ணிற்கு வந்த பின் இந்த சிறப்பளிக்கப்படிருக்கிறது.அதாவது பதிவுகள் இன்னும் வரவேண்டும் என்று கரவைக்குரலுக்கு சிறப்பான எச்சரிக்கை விடப்பட்டிருக்கிறது.வேலைகள்,படிப்பு எண்டும் நேரமில்லாமல் போச்சு எண்டும் எல்லோரும் சமாளிப்பதுபோலவே சமாளிக்கும் அந்தஇந்தக் கதையைவிட்டுவிட்டு தொடர்ந்தும் பதிவுகள் வரவேண்டும் என்று பலத்த எச்சரிக்கை கரவைக்குரலுக்கு யாழ்தேவியால் விடப்பட்டிருக்கிறது.
என்ன அப்படித்தானே.

சிரிப்பெல்லோ வருகிறது,ஹிஹிஹிஹிஹிஹிஹி..........

"விடைபெற்ற அமீரகம் வரவேற்ற இங்கிலாந்து" என்ற பதிவில் நான் முதன்முதல் இங்கிலாந்தில் பட்ட அனுபவத்தையும் பகிர்ந்துகொள்ள பட்ட கஷ்டத்துக்கு ஊக்கம் தரும் பரிசு பாருங்கோ இது.உண்மையிலை அந்தப்பதிவை பார்த்துவிட்டு எல்லாரும் வந்து கேட்ட கேள்வி " எங்கை இந்த பென்னாம்பெரிய காசை தண்டமாக கட்டினீங்க"எண்டுதான். யாரும் வந்து யாரடா அந்த பெரிய மனுஷனுக்கு பக்கத்திலை இருந்தது எண்டு கேட்கவே இல்லை,சில பேர் தொலைபேசி அழைப்பெடுத்தாலும் இதுதான் கேள்வி. அப்படி ஆரம்பமே சுவாரஸ்ய அன்பவங்கள்,அவற்றை பதிவிட்டவுடன் யாழ்தேவியும் என்னை நட்ச்த்திரிற பதிவராக அறிவித்திருக்கிறார்கள். வலைப்பதிவின் வளர்ச்சிப்பாதையில் அவர்களால் கொடுத்த இந்த மதிப்பு மிக்க கௌரவமாக நான் பார்க்கிறேன்.என்றும் நன்றியுடையவனாவேன்.

இன்னொருவிடயம்.

யாழ்தேவியில் தரம்கொடுக்கப்பட்ட பதிவர் என்ற அடிப்படையில் என்னால் அதற்குள் என் பதிவுக்களை இணைப்பது மற்றும் வேறு சில வரையறைகள் என்பவற்றை தெரிந்துகொள்ள ஆர்வமுடையவனாக இருக்கிறேன்.ஏனென்றால் சிலவேளைகளில் மீளவும் என்னை பதிவு செய்யும்படி சிலவேளைகளில் கோரப்படுகிறது.அதனால் என்னைப்போல வேறுசில பதிவர்களுக்கும் அந்த கஷ்டம் உணரப்பட்டிருக்கலாம் என்ற வகையில் அதை யாழ்தேவியிடம் அறிய ஆவலாக இருக்கிறேன்.

மிக நன்றி யாழ்தேவி.

விடைபெற்ற அமீரகம்- வரவேற்ற இங்கிலாந்து

பல்வேறு அனுபவங்களைத்தந்த அமீரகத்துக்கு அண்மையில் விடைகொடுத்து தொடர்ந்து இங்கிலாந்து மண்ணில் சில காலம் உலாவுவதற்கு அனுமதிகிடைத்திருக்கிறது,
இங்கு இங்கிலாந்து வரவேற்றிருப்பது ஒரு வகையில் இருக்க அமீரகத்தில் கிடைத்த அனுபவங்களோ மிக அதிகம்,இங்கிலாந்தில் எப்படியான அனுபவங்கள் கிடைக்குமோ என்ற எதிர்பார்ப்பும் அதேபோல அவற்றுள் பல விடயங்கள் ”அப்படி இருக்கும் இப்படி நடக்கும்” எம்முடன் கூடியிருப்போரால் எடுத்துச்சொல்லப்படுகின்றன என்பது ஒருபுறமிருக்க அமீரகத்துக்கான வருகையில் கிடைத்த அனுபவங்கள்,அங்கு வாழ்ந்த காலங்களில் தந்த அனுபவங்கள்,பார்த்த விடயங்கள்,ரசித்த அம்சங்கள், மெய்சிலிர்த்த அம்சங்கள்,கேட்கவேண்டும் என்று நினைத்த பல கேள்விகள்,கேட்ட சில கேள்விகள்,அதைவிட வயிறுகுலுங்க சிரித்த விடயங்கள் என்று பல விடயங்கள் விடைபெற்ற அமீரகத்திலடங்கியிருக்கின்றன.


அவற்றில் சொல்ல முடிந்தவற்றை நினைவிலிருப்பவற்றை தொடர்ப்பயணமாக பாலவனத்தில் பயணம் என்று உங்களுடன் பகிர்ந்துகொள்ளலாமென்று நினைக்கின்றேன், நேற்றுவரை மிக்க சூட்டுடன் வாழ்ந்து இன்று திடீரென்று குளிராக்கினால் எப்படி ஒரு பொருள் இறுகிப்போகுமோ அப்படியாக இறுகிவிட்டேன் என்றாலும் உங்கள் ஆதரவுடன் அந்த பயணம் தொடரும்,
அது பாலைவனத்தில் ஒரு பயணம்,

இங்கிலாந்து வந்தவுடன் பல சுவாரஷ்யமான விடயங்கள் இருந்தாலும் சில சுவாரஷ்யமான அனுபவங்கள்,நாட்டுக்கு வந்து கைவிரலால் எண்ணக்கூடிய நாள்கள் மட்டுமே,அதாவது நான்கு நாள்கள்,அதில் நானும் என் மனதும் ரசித்துச்சிரித்தவை பல,அவற்றுள் சில இவை

பொதுவாக வளைகுடா நாடுகள் வெப்ப நிலை அதிகமான நாடுகள் என்பது எல்லோருக்கும் தெரியும்,சூட்டிலிருந்து வந்த நான் இப்ப கடும் குளிராக்கிடக்கு எண்டு சொல்லுது என் மனசு,கடும் வெப்பநிலையிலிருந்து சடுதியாக மாறிய மாற்றம் என்பதனாலோ என்னவோ,ஆனால் இது தான் குளிர் காலத்தின் ஆரம்பம் என்று எல்லாரும் சொல்லுகினம்,
ஐயோ கடவுளே இதைவிட இன்னும் குறையப்போகுதோ எண்டு யாரையும் விடாமல் கேட்டுப்போட்டன்,

மற்றது முதற்கட்டமாக 20 ஸ்ரேலிங்க் பவுண் தண்டம் கட்டிப்போட்டன் பாருங்கோ, நான் விட்டது பிழையோ அவர் விட்ட பிழையோ யார் விட்ட பிழையோ எனக்குத்தெரியாது,ஆனால் கட்டிப்போட்டன்,முந்த நாள் தான் வந்தன் எண்டு சொல்ல கேட்டானே அவன்,”இல்லை தா“ எண்டு கேட்டான் நான் குடுத்திட்டன்.”ஏன் குடுத்தது எப்படி குடுத்தது” என்பது எண்ட விசயம் அது என்னோடையே இருக்கட்டும்,ஆனால் ஒண்டு மட்டும் சொல்லுறன் எந்த ஒரு விசயத்தையும் ”பிளான்”(Plan) பண்ணி செய்யிறது மட்டுமில்லாமல் எல்லாத்தும் ஓம் எண்டு சொல்லி தலை மட்டும் ஆட்டக்கூடாது எண்டது தான் இப்ப நான் எடுத்த முடிவு பாருங்கோ

அதைவிட இன்னுமொரு சுவாரஷ்யவிடயம்
பொதுவாக இங்கு ரயில் வண்டியில் தான் எல்லோரும் பயணம்,
அப்பிடி ஒருநாள் நானும் ஒரு பயணி,எனக்கு பக்கத்திலை ஒரு பயணி,
”அட இவரை எங்கையோ கண்ட மாதிரி இருக்கே” எண்டு என்னுடைய மனசு சொல்லுது, நானும் அவரை வைச்ச கண் வாங்காமல் பார்க்கிறன்,அப்ப அவரும் பார்க்கிறார்,ஆனால் ”கதைக்கட்டோ” எண்டு மனசு சொன்னாலும் அந்த மனமே தடுக்குது ”சீ சீ வேண்டாம்” எண்டு,
ஆனால் அந்த மனுசனோ நான் பார்க்க ரயில் வண்டியின்ரை முகட்டை பார்க்கிறார்,
”என்னடா இந்த மனுசன் இப்படி செய்யுது” எண்டு ”இவர் யார்”எண்டு நினைச்சு பார்க்கிறன்,
”எனக்கு படிப்பிச்ச வாத்தியார் யாருமோ” எண்டும் என்ரை மனசு கேட்கிறது,
கடைசியிலை தான் அவர் யார் எண்ட முடிவுக்கு வந்தன் பாருங்கோ,
அந்த மனுசனை நான் ஒரு நாள் மேடையிலை பார்த்திருக்கிறன்,ரி வி வழிய அவரைப்பற்றியும் அவர் கருத்துச்சொல்லுற விசயங்கள் கேட்டிருக்கிறன்,ஆனால் அவருக்கு பக்கத்திலை நான் இருப்பன் எண்டு கனவிலையும் காணவில்லை,அப்பிடி அந்த மனுசன் பெரிய மனுசன்,எங்கடை நாட்டிலை எண்டால் அவர் எனக்கு கிட்ட இருக்கவே மாட்டார்,அந்த மனுசன் இண்டைக்கு எனக்கு பக்கத்திலை இருக்குது எண்டு நினைச்சுத்தான் அந்த எண்ணம்,
அவர் யாருமில்லை ””சுப்பர்ஸ்ரார் ரஜனிகாந்தின் விருதுபெற்ற ஒரு திரைப்படமும் அதேபெயரை அந்தக்கால திலகத்துக்கும் அதுதான் பெயர்”,எனக்குப்பக்கத்திலை இருந்தவருக்கும் பெயரின் முதல் மூன்று எழுத்துக்களும்”” அதுதான் பாருங்கோ,
உங்களுக்கு விளங்கியிருக்காமல் விடுமா என்ன?
அவரிடம் பலகேள்விகள் கேட்கலாம் என்று நினைத்திருந்தாலும் கேட்க முடியவில்லையே என்ற ஆதங்கம்,
ஆனால் அவர் என்னை ஏன் கடைக்கண்ணால் பார்த்தார் எண்டு தான் எனக்கு இன்னும் விளங்கவில்லை,????

இப்படியாக வந்துவிட்ட நான்கு நாள்களில் வந்துவிட்டவற்றுள் சில இவை,வந்தாச்சு எல்லோ
எல்லாமே அனுபவித்து ரசிக்க வேண்டும்,

ஏலவே குறிப்பிட்டதைப்போல பாலைவனத்தில் பயணம் காலங்கள் எல்லாம் கூடிவர தொடர்ந்து வரும்,மீண்டும் சந்திக்கும் வரை வணக்கம்.