தம்பி கெட்டிக்காரன்

எண்ணை வேணுமெண்டால்
எள்ளுப்பொரியாய் நிப்பான் இவன்- பனங்
கள் வேணுமெண்டால்
பிலாவோடை நிப்பான் இவன்
தம்பி கெட்டிக்காரன்

பட்டாசு இல்லாத காலத்திலை
வெட்டியாக திரிஞ்சாலும்
சைக்கிள் கம்பியிலை நூலைக்கட்டி
தீக்குச்சி மருந்திலை வெடி விட்டவன் ஊர்சுத்தி
தம்பி கெட்டிகாரன்

பட்டம் விடுறதுக்கு
வீட்டுகூரையிலை ஏறி
வைரகோயில் வேப்பமரத்திலை
அடிக்கடி தொங்க விட்ட அற்புதமானவன்
தம்பி கெட்டிக்காரன்

புளிச்சல் விளையாட
ரென்னிஸ் பந்தை உச்சிப்போட்டு
மற்றவைக்கு புளிக்க புளிக்க முதுகிலை
இலக்குபார்த்து எறிஞ்சுபோடுவான்
ம்ம் .... தம்பிகெட்டிக்காரன்

சந்தியிலை நிக்கிறதேயில்லையிவன்
கொஞ்சம் விலத்தித்தான் நிப்பான்
ஆசை மாமா வந்தரெண்டால்
பூவரசந்தடி கதை பேசுமெண்டும்
கையாலை காதிலை கதை சொல்வாரெண்டும்

தம்பி உண்ணானை கெட்டிக்காரன்


சைக்கிள் ஓட்டத்திலை
சாகசம் பல காட்டுவான்
முடக்காடு எண்டாலும்
முக்குத்தக்குப்படாமல்
கையிரண்டும் விட்டு விட்டு ஓட்டியவன்
அட......தம்பி நல்ல கெட்டிக்காரன்

அத்துளு அம்மனுக்கு பங்குனித்திங்கள்
தவறாமல் நிப்பான் நல்லபொடியன்
அத்தனை ஆசை நீர்ப்பாளயம்
அலாதிப்பிரியம் இவனுக்கு
சுத்திவளைச்சு அடிபட்டு வாங்கிபோடுவான்
அவனல்லோ கெட்டிக்காரன்,

ஆலமரத்தட்டியிலை அரசியல் அலசுவதில்
அசகாயசூரன் இவன்
சந்திரிக்காவை ரணிலின் காதலியென்று சொல்லி
கந்தசாமியண்ணையை நம்ப வைத்தவன்
தம்பி கெட்டிக்காரன்

இவன் கெட்டித்தனங்கள் எத்தனை சொல்ல
அவன் தில்லுமுல்லுகள் அத்தனையும் அற்புதம்
எவன் கதைக்கும் பலசரக்கதையெண்டாலும்
கவனத்தில் நகையுடன் விடைதரும் பொடியன் இவன்

சொல்லுவிசயம் எல்லாம் அப்படியே செய்யும் இவன்
அம்மா சொன்னதை அப்படியே செய்து
மல்லுக்கட்டி உலக வரலாற்றில் உன்னத இடம் இவனுக்கு

சுவைசுவையாக பண்டங்கள்
வகைவகையாக சுட்டுக்கொடுக்க
பலவகையில் ஒர் வகையாம்
தொதல் கிண்ட இவன் அம்மா ஆயத்தம்

சூட்டோடுகிண்டியபடி அதைவிட்டே விலத்தாமல்
பண்டத்தின் மேற்பாகம் சரியாக அழுத்திடவே
”அட தம்பி வாழையிலை வெட்டிக்கொண்டுவா” எண்டு அம்மா சொல்ல
அம்மா சொல் தட்டாத பிள்ளையிவன்
வாழைப்பொத்திவிட்டு
பூத்துதயாரான வாழைமரம்
வாழையிலையை மடக்கி பெரு
இலை கொண்டே குசினி நோக்கி ஓடுகிறான்


”அடேய் தொதலுக்கு ஒரு துண்டு
மற்றதெல்லாம் யாருக்கு”
”வாழையிலைத்துண்டுக்கு கேட்க
வாழையிலையே முறிச்சுப்போட்டியே”
”அடேய் நல்ல காலம் தென்னோலை கேட்டிருந்தால்
நீ தென்னைக்கு மேல் ஏறியிருப்பாய்”
உன்னாணை நீ கெட்டிக்காரன் தான் என்று புகழ்மாலை

எல்லாம் தெரிஞ்ச இவன் பெரியதொரு கெட்டிக்காரன்
நல்லா சொல்லியிருக்கும் இவன் கெட்டிதனங்கள் பாருங்கோ
கல்லெறிஞ்சு மாங்காய் இல்லை தேங்காயுடன் பலாப்பழமும்
சொல்லி விழுத்திடுவான் எந்த நள்ளிரவிலும்

இப்ப சொல்லுங்கோ பார்ப்பம் தம்பியின் கெட்டித்தனத்தை
அவனெல்லோ கெட்டிக்காரன்
தம்பி கெட்டிக்காரன்

எண்ணை- எண்ணெய் , நிப்பான் - நிற்பான், பிலா- பனங்கள் குடிப்பதற்கு பயன்படும் பனையோலையால் செய்யப்பட்ட ஒரு குவளை போன்றது, புளிச்சல்- பந்தை மற்றவர்களுக்கு படும்படியாய எறிந்து விளையாடும் விளையாட்டை ஈழத்தின் சில பகுதிகளில் இவ்வாறு அழைப்பர், முடக்காடு - ஒரு சின்ன ஊரின் பெயர், முடக்குகள் அடிக்கடிவரும், நீர்ப்பாளயம் - எல்லாவகை மரக்கறிகளையும் பொங்கலுடன் சேர்த்து படைக்கப்படும் படையல்

அன்றைய பொழுது விடிந்தது இதற்குத்தானா
அன்றையபொழுது விடிந்தது எதற்காக..........
இந்த இடிச்செய்தியை கொண்டுவந்து சேர்க்கவா
காலைக்கதிரவன் புன்னகைத்து வந்தவேளை
புன்னகைத்த முத்துகளை கொண்டுசெல்ல வந்தாயா.....
உன்னை வெறுத்ததே அன்றுதான்.

வெற்றிப்பாதையில் கல்வியே முதல் கண்
சற்றுமே விலகாத நற்பண்பு
சுற்றமெல்லாம் மகிழ்ந்திடும் பெருஞ்சிறப்பு
அத்தனையும் பறித்தெடுக்க வந்தாயே
உன்னை அன்றேதான் முதல் வெறுத்தேன்.

இன்னுயிர்களை களைந்து
அன்றே அக்கிரமத்தை விதைத்த கயவன் நீ
உன்செயலால் வானத்தையே அழவைத்தாய்
உதயத்தில் வந்த சூரியன் தன்கதிர்களை மறைத்து
உன்செயல் கண்டு உன்னை வெறுத்தது
வடமராட்சியெங்கும் கண்ணீர்கரைத்தெடுத்த உன்னை
அன்றுதான் நான் வெறுத்தேன்

நாளை எம்மை பார்க்கவந்த செல்வங்களெனப் பெற்றோர் மகிழ்ந்திருக்க
நாளை எம்மோடு வாழவந்த செல்வங்களென உற்றோர் களித்திருக்க
நாளைய உலகின் சொத்துக்களென எல்லோருமே நம்பியிருக்க
மூளையே இல்லாதவன் போல்
எல்லோரையும் நட்ட நடுவில் தவிக்கவிட்டு காவுகொண்டாயே
அன்றுதான் உன்னை முழுவதும் வெறுத்தேன்.

அன்பான பேச்சுக்கள் பண்பான செயற்பாடுகள்
எதிலும் வெற்றிகொள்ளும் சிந்தனைகள்
எவர்ருடனும் நட்புக்கென்று உயிரைவிடும் நல்லுள்ளங்கள்
ரவிசங்கரொடு சிவோத்தமன்,கந்தர்வன் பிரதீபன் என
நால் முத்தான செல்வங்கள்
பாதிவழியில் பறித்தெடுத்தாயே கொஞ்சமும் சிந்தனையற்று.......

அரியபல கல்விதனை செவ்வனே படித்துவிட-கடற்
கரையருகே சென்று ஆய்வினை செய்துகொள்ள
சிரிப்புத்தவழும் இளையவர்க்கு
யாரறிவார் உன் சீற்றம்!!!!!!!!!!!

மற்றோரை வாழவைக்கும் பெரும்சொத்து கடலம்மா
எல்லோரும் உனைத்தொழும் தெய்வம் நீ கடலம்மா
கற்கவந்த செல்வங்களை கவிழ்த்துக்கொண்டாய் ஏனம்மா
அற்ப ஆசை உனக்கு, என்றும் சோகம் எமக்கு,

நண்பர்கள் எல்லாம் விக்கி விக்கி ஓவென்று அழுதுகொள்ள
பெற்றெடுத்த தெய்வங்கள் ஐயோவென்று கதறியழ
உன் பொங்கிவந்த பேரலையால்
சுழிகொண்டு இழுத்துவிட சுத்தமாக உனக்கு மனமேயில்லை,
நிச்சயமாக உனக்கு அந்த அழுகையொலி
சத்தமாகவே கேட்டிருக்கும்,
அத்தனையும் உனக்கு பொருட்டில்லாமல் போனது எதற்காக?
இத்தனை நல்லுள்ளங்களில்
அற்ப ஆசை உனக்கு,என்றும் சோகம் எமக்கு

நட்பின் கலகலப்பில் மகிழ்ந்திருந்தவேளையில்
பள்ளிப்பருவத்தில் வெற்றிகண்ட நேரத்தில்
வசந்தத்தின் காலத்தில் வந்த பேரிடி
ஹாட்லியின் வரலாற்றில் வந்துவிட்ட பெரும் துயரம்


பத்து ஆண்டுகளுக்கும் முன்னர் எம் மனதில் அடியோடு என்றும் நிலைத்திருக்கும் இழப்புத்தான் இது.அப்போது நான் சாதரணதரப்பரீட்சை முன்னோடிப்பரீட்சைக்காக இறுதிப்பாடத்தில் இருந்த வேளையில் என் கல்லூரியின் கூடைப்பந்தாட்ட மைதானத்தில் மாணவர்கள் ஓவென்று அழுத வேளை இது,“என்ன நடந்ததோ” என்று யாருக்குமே அறியாமல் இருக்கிறோம்,ஒரு கடதாசியில் சில பெயர்கள்.
“ரவிசங்கர்,சிவோத்தமன்,கந்தர்வன்,பிரதீபன், நால்வரையும் காணவில்லையாம்,கடல் அவர்களை இழுத்துக்கொண்டு போய்விட்டதாம்”,இது தான் செய்தி,
பரீட்சை விடைத்தாள்களை அப்படியே கொடுத்துவிட்டு கடலை நோக்கி நாமெல்லோரும் போனோம்,மூவரை நாங்கள் அசைவற்றே காணமுடிந்தது,


அமரர்.ரவிசங்கர்அமரர் சிவோத்தமன்


அமரர்.கந்தர்வன்

பிரதீபன் இறுதியில் கடலுள் விழுந்தவன்,இன்னும் கண்டுபிடிக்கமுடியவில்லை,

அமரர்.பிரதீபன்
இப்படிக்கேட்டவுடன் கலங்கிய கண்களுடன் எல்லோரும் அழுதபடி வீட்டுக்கு செல்லும்படி அதிலிருந்த கடல் அருகில் வாழ் மக்கள் வேண்ட வீடு நோக்கி பயணிக்கிறோம்,வழமையாக நகைச்சுவைகள் சலகலப்புக்கள் எல்லாம் விட்டு அந்த அண்ணர்கள் நால்வரினதும் அன்புக்கதைகள்,அவர்களின் இன்னோரன்ன திறமைகள் என்று அவற்றையே பேசியபடி சோகமே உருவாகத்தான் வீடு செல்ல முடிந்தது,இவர்களில் சிவோத்தமன் என் ஆரம்பப்பாடசாலையான மாணிக்கவாசகர் வித்தியாலத்தில் கல்விகற்றதால் கொஞ்சம் கூடிய பழகமானவர் என்பதால் அந்த நட்புக்கவலையும் கூடவே வாட்டியது. மாணவர்கள் எல்லோரும் சோக மயம்,ஹாட்லிக்கல்லூரி சோகமயமாகியது.பல்வேறு நிகழ்வுகளால் சிறப்புறும் ஹாட்லி நிகழ்வுகளை கொண்டாடமுடியாததாய் சோக உருவாக தொடர்ந்தும் இருந்தது.
மாணவத்தலைவர்களாக இருந்தவர்கள் இந்த நால்வர்.எல்லோர் மனதிலும் இடம்பிடித்தவர்கள்,ரவிசங்கர் நாடகங்கள் ஆங்கில பேச்சுக்கள்,பாடல்கள் என்று அடிக்கடி மேடைகளில் தோன்றுபவர்.சிவோத்தமன்,கந்தர்வன் பல்வேறு நிகழ்வுகளுக்கும் தலைமையேற்று முன்னின்று நடத்துபவர்கள்,மாணவத்தலைவர்கள்,அதேபோல பிரதீபன் விளையாட்டுக்களில் முன்னணி வீரர்,அத்தோடு நால்வரும் தங்கள் கல்வித்துறைகளில் மிகவும் கெட்டிக்காரர்கள்,ஆசிரியகளுடன் மிகவும் பண்பாகவே பழகி நற்பண்புபெற்ற இப்படியானவர்க்ளை கல்லூரி வளர்த்தெடுத்து இடை நடுவில் பறித்தெடுத்ததது கல்லூரியின்(மாணவர்களின்) சோகத்தை ஒரு படிகூட்டிவிட்டது.என்ன செய்வது மாணவப்பராயத்திலேயே இழந்து விட்ட இழப்புக்களால் அதை தாங்கமுடியாவிட்டாலும் அதை தாங்கவேண்டியவர்களாகவே நாம் இருக்கிறோம்,
அதைவிட இன்னுமொரு நண்பன் குணா,இவன் பேராதனைபல்கலைக்கழகத்தில் பொறியியல் பீடத்தில் கல்வி கற்றுக்கொண்ட காலத்தில் நிகழந்த பெரும் இழப்பு,யமனாக வந்த புகையிரதம் இவனைப்பதம் பார்த்துச்சென்றது, நட்பின் அன்பின் என்றும் மகிழ்ச்சியின் உருவமாய் இருந்தவன் இவன்.காலன் இவனையும் கொண்டு சென்றுவிட்டான்,இப்படியே இழந்துவிட்ட இழப்புக்கள் இன்றும் எம் மனதை வாட்டுகிறது.


அமரர்.குணரட்ணம்

என்றாலும் இவர்களின் பெயர்கள் அன்று அவர்கள் ஹாட்லியில் இருந்த காலத்தில் எப்படி பெருமையாக இருந்ததோ அதேபோல என்றும் அது நிலைத்து நிற்கும்படியாக ஹாட்லியின் பழைய அக்கால தெரிந்தமாணவர்கள் பெரும் திட்டத்தை நடைமுறைப்படுத்த இருகிறார்கள், அவர்கள் கடலுடன் கலந்துவிட்ட அ நாளில் பாடசாலையில் ஒரு நினைவுதினக்கூட்டத்தை ஒழுங்கு செய்து அன்று சில நல்லபெரும் விடயங்களை நடைமுறைப்படுத்த இருக்கிறார்கள்.
அதற்கு ”ஹாட்லியின் மைந்தர்கள் நினைவு நிதியம்” என்றவாறாக பெயர்சூட்டி அதை திறம்படவே திட்டமும் வகுத்து செயற்படுத்த இருக்கிறார்கள்.
அன்றைய தினம் ஒழுங்கு செய்த சில விடயங்கள் இவை

1.நண்பர்களின் பெற்றோருடன் தொடர்பு,அவர்களை அந்த நாளில் அழைப்பு.
2.மெதடிஸ்,வட இந்து அதிபர்களுக்கு அழைப்பு,அவர்களின் நூலகங்களுக்கு புத்தகங்கள் அன்பளிப்பு.
3.ஐந்து மாணவர்கள் தெரிவு செய்து அவர்களுக்கு கல்வி உதவி நிதி நண்பர்களின் பெற்றோரின் கைகளால் வழங்குதல்.
4.அன்றைய தின நிகழ்வுகள் ஒளிப்பதிவு செய்தல்,பாடசாலையை முழுமையாக ஒளிப்பதிவு செய்தல்.அது நண்பர்களுக்கு..

இவை ஒரு சில மட்டுமே,இதைவிட அந்த குழுவால் எடுக்கபடும் சின்னும் சில பெரும் திட்டங்களை அவ்வபோது வெளியிடுவார்கள்.அவை உத்தியோகபூர்வமாக நினைவுதின ஒழுங்கமைப்பாளர்கள் குழுவால் 17-11-2009 அன்று அந்த நினைவுதினகூட்டத்தில் அறிவிக்கபடும்,

இப்படியாக இவர்களின் பெயரால் வரும் ”ஹாட்லியின் மைந்தர்கள் நினைவு நிதியம்”என்றும் இவர்களின் பெயர்களை ஹாட்லியில் இவர்களின் பெயரை ஒலிக்கவைத்துக்கொண்டேயிருக்கும்,இவர்கள் என்றும் எம் மனதினுள் நிலைத்துவிட்ட அண்ணர்கள்.மேலான நட்புக்கள்.

புகைப்படங்கள்: ஹாட்லியின் மைந்தர்கள நினைவு நிதியம் வதன நூல் அணி
தகவல் :ஹாட்லியின் மைந்தர்கள் நினைவு நிதிய ஏற்பாட்டுக்குழு
மற்றும் வதன நூல் அணி

நன்றி

அன்புக் கடிக்குதறல்களும் துள்ளித்திரிந்த நினைவுகளுடன் கலகலப்பும்

நீண்ட நாள்களுக்குப்பிறகு அண்மையில் ஒரு நண்பர்கள் வட்டத்தை சந்திக்க கூடிய வாய்ப்பு எனக்கு கிட்டியது,பாடசாலையில் துள்ளித்திரிந்த காலத்தில் பழகிய நண்பர்கள் அவர்கள்.பாடசாலைக்காலம் என்றால் சொல்லவா வேணும்,சின்ன சின்ன சண்டைகள்,அந்த கால ஆசிரியர்களினுடனான அனுபவங்கள்,அடிகள் சொல்லித்தந்த பாடங்கள்,விட்ட பகிடிகள் என்று நேரம் போனதே தெரியாமல் கலகலப்பாக மகிழ்ந்த மாலை நேரம் அது.

உடனடியாக கிடைத்த அழைப்பு அது, நண்பன் ஜோர்ஜ் அருணின் திருமணப்பதிவுக்கு செல்லகிடைத்த அருமையான சந்தர்ப்பத்தால் 15 வருடங்களுக்கு மேலாக காணாத நண்பர்களையெல்லாம் காணக்கிடைத்தது.
இந்த திருமணப்பதிவு என்ற விடயம் மூலம் நண்பன் ஜோர்ஜ் அருணைத் தெரிந்தவர்கள் அவருக்கு திருமணம் முடிந்தாயிற்று என்றும் தெரிந்து கொள்ளமுடியும் என்ன அப்படித்தானே? ஏனென்றால் அவனுக்கு யாரும் வேற யாரும் "சம்மந்தம் கிம்மந்தம்" பேசினாலும் எண்டு முற்கூட்டியே ஒரு முன்னாயத்தம் தான். நல்ல அக்கறை எண்டு நினைப்பீங்க, நாங்க எல்லா விசயத்திலையும் கவனம் பாருங்கோ.
நண்பர்கள் வட்டத்தில் அவன் நட்பு கிடைத்தது பாடசாலைக்காலத்தின் இடைக்காலத்தின் பிற்பகுதி என்று சொல்லலாம். அவரை நான் பாடசாலைக்குள் பழகிய காலத்தைவிட மைதானத்தில்தான் கூடிய நேரம் பழகியது என்று கூட சொல்லலாம்.ரியூசனில்(ஆங்கிலத்தில் தனியார் கல்வி நிறுவனம் எண்டு பெரிய பெயர் பாருங்கோ,அதாலை எங்கடை ஆக்கள் யாருமே பாவிக்கிறது இல்லை)வந்திருந்த கூடியளவு நண்பர்கள் பழகியிருந்ததார்கள்.எனக்கு அந்த சந்தர்ப்பம் கிடைக்க இல்லை,மைதானத்தில் பழகியதுடன் அவன் இப்படியே உயர்கல்வியென்று பாடசாலையைவிட்டு வந்துவிட அவனுடனான தொடர்பு குறைந்தே விட்டது,ஆனால அவனுடன் விளாயாடிப்பழகியதால் நட்பு குறுகியகாலத்தில் முற்றித்தான் இருந்தது. அதனால் இங்கிலாந்து வந்தவுடன் வந்த அன்பான நட்பின் அழைப்பு திடீரென்று எப்படியாவது செல்ல வேண்டும் என்று "வடிவாக வெளிக்கிடவும் ஏலாமல் போச்சு பாருங்கோ”
அவரின்ரை அழகுக்கு அவருக்கு வெளிக்கிடவும் வேண்டிக்கிடக்கு எண்டு நினைக்கிறிங்க என்ன?

நவரங்கன் பாருங்கோ நல்லாக் கார்(ஆங்கிலத்தில் மகிழூந்து எண்டு சொல்லுவினம்) ஓடுவன்,ம்ம் அவன் வீ்டு தேடி வந்து ஏத்திக்கொண்டு போனதால சொல்லுறன் எண்டு நினைக்காதீங்கோ, நான் வீட்டு விலாசம் சொல்ல ஒரு அரை மணித்தியாலத்திலை " டக் " எண்டு அவன் வந்து நிண்டான் பாருங்கோ,இதைவிட அவன்ரை கெட்டித்தனத்துக்கு வேற என்ன வேணும்.இதற்கு முதலே நவரங்கனை சந்தித்ததாலை அவனுடன் கூட வந்த இனனுமொரு நண்பன் பிரதீ்ப்,சின்ன வயசிலையிருந்து கொஞ்சம் மீசை முளைக்கிற காலம் எண்டு சொல்லுவாங்களே,அந்த காலத்திலிருந்து பதினொரு வருடங்களுக்குப்பிறகு சந்திச்சதாலை அவனைக்கண்டவுடன் ”வாங்கோ போங்கோ” எண்டு தான் கதைக்க சொல்லிச்சுது,அவனும் "எப்படி இருக்கிறீங்க ”எண்டுதான் கேட்டான்.சரி சுகத்தை சொல்லி “டக்” எண்டு வெளிக்கிட்டது எண்டு முதலே சொன்ன மாதிரி வெளிக்கிட்டு கூடவே வந்த கௌதமனுடனும் அளவளாவிக்கொண்டு நண்பனின் திருமணப்பதிவு கொண்டாடத்துக்கு
போகத்தொடங்கியாச்சு,
பள்ளிக்கூடத்திலை ”நவத்தார்" என்று மாணவர்கள் தங்களுக்குள் பேசிக்கொள்ளும் ஒரு ஆசிரியர் நவரட்ணம் அவர்களின் கதையுடன் தான் கதைகள் ஆரம்பமானது, த்தாருக்கு எங்கடை நவரங்கன் விட்ட பகிடிகளும் அதற்கு அவர் விட்ட பகிட்களும் எண்டு கௌதமன் சொல்ல அதுக்கு நவரங்கன் அவர் கதைப்பது போல கதைச்சு நடிச்சுக்காட்டினான், நவத்தார் சமய பாடத்திலை கேட்ட கேள்விகளும் திரு நீறும்சந்தனமும் வைக்ததற்கு தந்து விட்ட அடிகளும் அந்த அடியின் போது எல்லாம் செப்படி வித்தை” என்று சொல்லி அடிப்பதும் எண்டு கதை ஒரு பக்கமாக சென்று கொண்டே இருந்தது, நவரங்கனின் காரும் ஓடுது.

அதற்கிடையிலை இன்னுமொரு வாத்தியார் இருந்தவர் கந்தசாமி வாத்தியார்,இரண்டு கந்தசாமி ஆசிரியர்கள் இருந்தாலும் தமிழ் படிப்பிக்கிற கந்தசாமி வாத்தியார் அடிச்சுவிட்ட அடிகளைப்பற்றித்தான் முக்கிய கதை. அந்த மனுசன் பள்ளிக்கூடத்துக்கு வரவில்லை எண்டால் அடிக்கும் ஒரு அடி,அதுக்காக எவ்வளவு கஷ்டப்பட்டாலும் பள்ளிகூடம் வந்திடுவம்,போதாக்குறைக்கு நவரங்கன் அந்தக்காலம் வகுப்பு மாணவத்தலைவன் எண்டதாலை கட்டாயம் வந்திடுவன் எண்டு கொஞ்சம் நக்கலாக கதை போய்க்கொண்டே இருந்தது,
வகுப்பிலை பாருங்கோ அந்தக்காலம் ஆசிரியர்கள் இல்லாத சந்தர்பங்களில் யாரும் யாருடனும் கதைக்ககூடாது,கதைச்சால் மொனிட்டர்(அதைத்தான் முதலில் வகுப்பு மாணவத்தலைவர் என்று ஆங்கிலத்தில்) எழுப்பிவிட்டுவிடுவார்.அல்லது கரும்பலகையிலை எங்கடை பேர் இருக்கும்,பெயர் கரும்பலகையிலை இருக்கிற நேரத்திலை வாத்தி யாரும் வந்தால் அதோகதிதான்.அதுவும் இந்த கந்தசாமி ஆசிரியர் வந்தால் ஏன் வீணாக்கதைச்சன் எண்டு இருக்கும்,இப்போது கந்தசாமி ஆசிரியர் மாலிசந்தி பிள்ளையார் ஆலயத்தின் தர்மகத்தா சபைத்தலைவராக இருக்கிறார் என்று கேள்விப்பட்டேன்,கோயில் பிரார்த்தனை நேரங்களில் யாரும் கதைச்சால் என்ன நிலைமை என்று கேட்க மறந்துவிட்டேன்.

அப்படியே ரியூசனில் விட்ட சேட்டைகள்,அடிகள்,ஓட்டங்கள்,விளையாட்டுக்கள் என்று கதைத்தபடியே இருக்க கொண்டாட்ட நேரமும் வர மண்டபத்துக்குள் போய் சந்திப்பில் ஒரு கைகுலுக்கல் எல்லோரும்.
பொதுவா ஒரு வகுப்பு எண்டால் ஒரே பெயருடை பலர் இருக்கலாம் தானே,அப்ப சில வேளைகளில் அவர்களை கூப்பிடுவதற்கு பட்டங்கள் வைத்தோ அல்லது அவர்களின் முதலெழுத்தை சொல்லியோ கூப்பிடுறது தானே,சுதாகரன் எண்டு சொல்லுற ரி.எஸ். தான் வாசலிலை நிக்கிறார்.சாப்பாடு தானே ,பின்னை வேளைக்கே வந்திட்டான் எங்களைப்போல.காலமையிலை இருந்து சாப்பிட இல்லை எண்டு கவலைப்பட்டான்.சரி அப்படியே இங்கிலாந்துக்கு வந்ததைப்பற்றி கதைச்சு ஒரு மூலையாக எல்லாரையும் பார்க்கவேணும் எல்லே,அப்படி ஒரு லொக்கேஷன்(அமைவிடம் எண்டும் ஒரு ஆங்கிலம்) எடுத்துிருந்தாச்சு.


கடிகள் குதறல்கள் ஆரம்பம்.
ஆரம்பத்தில் கொஞ்சம் குறவாக இருந்தகடிகள் யோகேந்திரா,சுதர்ஷன் மற்றும் திருக்குமரன் வருகையோடு கொஞ்சம் களைகட்டியது.யோகேந்திரா சுதர்ஷன் அவங்கள் வரணி தான் சொந்த இடம், பக்கத்து வீடுமோ தெரியாது.இரண்டு பேரும் மாறி மாறி கடிச்சுக்குதறிக்கொண்டே இருந்தாங்கள்,அவங்கள் படிக்கேக்குள்ளேயும் சி வகுப்பிலைதான் படிச்சவங்கள்,அந்தக்காலம் சும்மா சும்மா அறுக்கிற மாதிரியே அண்டைக்கும் அறுத்துக்கொண்டே இருந்தாங்கள்,ஹாட்லியிலை கன்ரீனிலை(சிற்றுண்டி சாலை எண்டு ஆங்கிலம்- இவ்வளவும் சொல்ல கஷ்டம் தானே அதாலை டக் எண்டு தமிழிலிலை சொல்லுறது கன்ரீன் எண்டு) வினாசி அண்ணையின்ரை தேத்தண்ணிக்கதையும் அந்த ஒரு ரூபாக்கு தாற அந்த போண்டாவைபற்றியும் நினைவு படுத்தினாங்கள். அதுக்கு ஒரு தகடு வெட்டித்தருவினம் வினாசி அண்ணையிட்டை குடுத்தால் தான் தேத்தண்ணி கிடைக்கும்.
அதுக்காக வீட்டிலையிருந்தே வெட்டிக்கொண்டு வந்த குமணன்,குபேரன் எண்ட இரட்டை உறவுகள்,அதை போதாக்குறைக்கு கனகாலம் பாவிச்சமாதிரி அந்த தகட்டை பழுதாக்கிகொண்டு வாறதாம்.அந்த தகட்டையே குடுக்காமல் தேத்தண்ணி குடிச்சவங்களும் இருக்கிறாங்களாம்.
அப்படி அந்தக்கதை போக


ஜோர்ஜ்க்கு வாழ்த்து அட்டை கொடுக்க சுதர்ஷன் எழுத வெளிக்கிடுறான்,என்ன எழுதிறது எண்டு சிக்கல்,அப்ப சுதர்சனுக்கு எல்லாரும் சொல்லுகினம்,”””தங்கச்சங்கிலி அறுந்தாலும் எம் அன்புச்சங்கிலி அறாது”முத்திரை வீட்டில் நித்திரை, முத்திரை சித்திரையில் வரும்,” எண்டு எழுதச்சொல்லி அட்வைஸ்(புத்திமதி),சுதர்சனும் எழுத தொடங்கிவிட்டான்,அப்ப யோகேந்திராக்கு மனமில்லை,அதை ஆங்கிலத்திலை எழுதவேணும் எண்டு சொல்ல அப்ப அதை ஆங்கிலத்திலை சொல்லு பார்ப்பம் எண்டு சுதர்சன் யோகேந்திராவுக்கு சவால் விடுறான், ”எங்கை சொல்லு பார்ப்பம்” யோகேந்திராவைக்கேட்க நம்ம நவரங்கன் மொழிபெயர்க்கிறார் பாருங்கள்,"GOLD CHAIN BREAK OUR LOVE CHAIN NO BREAK"."STAMP HOME SLEEPPING" எண்டு நவரங்கன் தொடர்ந்துகொண்டே போக ”இங்கிலிஷ் தெரியும் எண்டா சொல்லு அதை எழுதுவம்” எண்டு யோகேந்திராவை விட்ட பாடில்லை சுதர்சன்.இப்படித்தான் கடித்துக்கொண்டே இருப்பாங்கள் அந்தக்காலதிலையும்,
அது அப்படியெ போக
அந்த கால அங்கிரி விளையாட்டுக்களையும் சொல்லிச்சிரிச்சாங்கள்,ரிஎஸ் உடன் எஸ்.எஸ் கோவம்,எஸ்.எஸ் உடன் சுந்தரேஸ்(சக்களாவத்தை) கோவம்,சுந்தரேஷ் உடன் ரிஎஸ் கோவம்,என்ன ஒரு முக்கோண நட்புகோவம்,அதிலை என்ன பகிடி எண்டால் அவங்களுக்குள்ளை யாரிலையும் யாரும் தொட மாட்டாங்க,யாரிலையும் தொட்டு மற்றவையிலை முட்டினால் ஒரு ஊது ஊதுவாங்க அதிலை நெருப்பு பத்தினாலும் நூர்ந்துபோய்விடும் எண்டு அதையும் சொல்லிசிரித்தபடியே கலக்குது கொண்டாட்டம்.

வீடியோகாரன் எடுக்க வந்து ஒரு பக்கமாக வீடியோ எடுத்துக்கொண்டு எங்களையும் அது எடுக்க வருமெண்டு யோகேந்திராவிட்ட பெருங்கடி,ஆனால் வீடியோக்காரன் அவனை வீடியோ பிடிக்கேக்குள்ளை அந்த முகத்தையும் ஷேட்டையும் போட்டு படுத்தின பாடு.

இப்படியாக நீண்ட நாள்களுக்குப்பிறகு அருமையான துள்ளித்திரிந்த காலத்து பள்ளினினைவுகளுடன் கலகலப்பாக இருந்து ஒரு சில மணிகளில் பிரிந்துவிட்டோம்.கலப்புக்களும் வயிறு நிறைய சாப்பாடும் முடித்துக்கொண்டு அந்த இனிய நினைவுகளோடு நவங்கனின் காரேறி வீட்டுக்கு வந்தாச்சு.அன்றைய பள்ளியின் நினைவுகளை திரும்பவும் மீட்கவும் அன்பு பாடசாலை நண்பனை வாழ்த்தவும் முடிந்தது மிகவும் மகிழ்ச்சி.பள்ளிப்பயின்றதொரு காலத்தின் தொடரில் இதுவும் அமையபோகிறது.
என்றும் நலமுடன் வாழ எம் அன்பான வாழ்த்துக்கள் நண்பா.ஜோர்ஜ் அருணைத்தெரிந்தவர்கள் உங்கள் வாழ்த்துக்களையும் பகிர்ந்துகொள்ளுங்கள்.தெரியாதவர்கள் பள்ளிப்பயின்ற காலத்தின் அருமை நினைவுகள் பற்றி கருத்துப்பகிர்ந்துகொள்ளுங்கோவன்,