பூவரசம் பூவே நலமா

பூவரசம்பூவே நலமா
பூவாக அழகான இதழ் விரித்து
பூவுக்குள் இராஜ்ஜியம் அமைத்து
பூவரசனான கதை மொழியாயோ


தூரத்திலிருந்து ஒரு குரல்
பூவரசம்பூவே நலமா

சூரியவொளிவீச்சின் கதிர்களின் நடுவில்
மஞ்சள் புன்னகையாய் மலர்ந்து
மருதனிலங்களின் காலை நிலவான
தாயகத்தின் அழகிய மலரே நீ நலமா

கவிஞர்களின் கவிப்பொருளாக நீயில்லை
காதலர்களின் அன்பு மலராகவும் நீயில்லை
பூஜைகளில் உனக்கென்று இடம்காணவில்லை
பூத்தபூவிலும் மணம்பரப்பவில்லை
பூவுக்கொரு அரசனான பூராயம் மொழியாயோ
பூவரசம்பூவே நலமா


சொந்தமுகவரிகள் விட்டு
புலத்தில் பலமுகவரிகள் எழுதி
பலமான வாழ்வை தேடி ஓடி நடைபோடும்
சொந்தங்கள் தேடும் உண்மை வாழ்க்கையின் நடுவில்
தாயக நிலமதுவில் காணுமிடமெல்லாம்
தாராளமாய் உன் நிழல்கள்
சுமைகளை இறக்கிவைக்கும்
சுகமான உன் தென்றலை நினைவில் அழைக்கிறது........

தட்டைவடைக்கு உன் இலைகள்
தூக்கித்தரும் அந்தமாதிரி
நாவுக்கு இசைவான ருசியாக...

வாத்தியார் வகுப்பறையில்
மேசைமேலே காத்திருக்கும்,
மாணவனாய் வளரும் காலம்-உன்
சுள்ளித்தடி சுணாய்க்கும்!
நீள்தடி முதுகுக்கு அடையாளம்

பூவரசம் பூவே நலமா

உன் இலைகளால் ”பீப்பி” செய்து ஊதியகாலங்கள்
வேலியில் கதியாலாய் வரிசையாக அழகுபெற்ற நினைவுகள்
வயலுக்கு உரமாக உன் இலைகளின் பயன் தரு சிறப்புக்கள்
வண்ணமான வண்ணாத்துப்பூச்சிகளின் ஆரம்பமே
மசுக்கொட்டிகளின் தங்குமிடமாய் உனிலிருந்தது......
அவையிறங்கும் உன் தண்டிலிருந்து ஓவ்வொன்றாக
நினைக்கும்போதே எங்கோ கடிக்கிறது............
பூவரசம் பூவே நலமா

பூவுக்குள் அரசாளும் பூவரசு
உன் அரசுரிமை உனக்கிருக்கிறது
பெயரோடும் ஒட்டியிருந்து ஒப்புவிக்கிறாய்!
தாயகத்தின் அடையாளத்தில் நிலைபெறு உரிமை உனக்கிருக்கிறது
தறித்தாலும் உன் வேர்களாலும் கதியால்களாலும் நீ வாழ்வாய்
புலமெங்கும் சென்றாலும் திரிந்தாலும்
அழகுறு மலர்களை எங்கெங்கும்
கண்ணாரக்கண்டு மகிழ்ந்தாலும்-உன்
முகமதில் மஞ்சொளிவீசும் அழகினில்
அகமது மகிழ்ந்திடும்-என்றென்றும்

பூவரசம் பூவே நலம் தானே,


படங்கள்- இணையம்

6 comments:

மு.லிங்கம் said...

சிந்திக்க மறந்தததை நினைவூட்டியுள்ளீர்கள், அழகான பூ இருப்பினும் பாவனையிலில்லை ஏன்???
பதிலையும் தேடுவீர்களா?
_____
அழகான வரிகள், பாராட்டுக்கள் தம்பி!

Muruganandan M.K. said...

நினைவுகளை மலர வைத்த அருமையான கவிதை மலர்.

நேசமுடன்... said...

முற்றத்தின் முன்வேலியில்...பக்கத்து வீட்டு வேலியில்...எங்கும் பூவரசின் ஆட்சிதான். பூமிப்பந்தின் பரப்பெங்கும் வாழும்தமிழனுக்கோ அரசில்லை...அருமையாய் எல்லாம் முழுவதுமாய் நினைவு தந்தன. தொடரட்டும் படைப்புக்கள். வரிகளுக்கு வாழ்த்துக்கள். தமிழர் வாழ்வின் வலிகள்தான் தொடர்கிறது... பூவரசம் பூவெப்படி நலமாக... இருக்கும்? வலிகள் ஆற, அதற்காகவேனும் பூக்காதோ பூவரசு?

shobini suhendran said...

அழகான வரிகள்,தொடர்ந்து பல கவிதைகள் எழுதி வெற்றிகள் அடைய
பாராட்டுக்கள்

கோவி said...

கவிதையை வாசித்தேன்.. வருகைக்கு நன்றி..

நிலா said...

உள்ளமதை ஊரூக்குக் கொண்டு சென்று விட்டீர் தினேஷ்! வாழ்த்துக்கள்!