அண்மையில் வெளியாகிய தரம் ஐந்து புலமை பரீட்சை முடிவுகளில் முல்லைத்தீவை சேர்ந்த மாணவன் அகில இலங்கைரீதியில் இரண்டாவது இடம்பெற்றமை மகிழ்ச்சியை தருகிறது.எத்தனையோ கஸ்டங்களும் கடினப்பாதைகளும் மாணவர்களுக்கு சூழ்ந்திருக்க அதுவும் விசுவமடுவை சேர்ந்த மாணவன் நாடளாவிய ரீதியில் தமிழ் மாணவனாக தன் பெயரையும் பொறித்திருப்பது உலகமெங்கும் தமிழ் பேசும் மக்களுக்கு மிகபெரிய சந்தோசத்தை கொடுத்திருக்கிறது.பாடசாலைக்கல்வியை தொடர்ந்து கொள்ள முடியுமோ அல்லது தன் இருப்பு இந்த உலகத்தில் உறுதியாகுமோ என்று சிந்தித்த மாணவர்களின் இடத்தில் இருந்து மாணவன் வெற்றிபெற்றிருப்பது சிறந்த சாதனை என்றுதான் சொல்லவேண்டும்.
முல்லை மண்ணிலிருந்து இந்த சாதனை அரங்கேறியிருப்பது பெருமைக்குரியதாகிறது.யுத்தம் தின்று துப்பிய மண்ணிலிருந்து சாதனை என்று பெருமை கூறுகின்றார்கள் ஆர்வலர்களும் பெரியவர்களும்.
பரீட்சைக்கான அடிப்படை கல்விக்கான காலத்திலும் அதன் நுணுக்கங்களை அறியும் பராயத்தில் அந்த மாணவன் முல்லை மண்ணில் இருந்திருந்தால் எவ்வளவு கஸ்டப்பட்டிருப்பான் என்பது நினைக்க கூடிய விடயம் அல்ல.அது மட்டுமல்லாமல் தொடரும் காலங்களிலும் சிறப்பான கல்வியை பெறுவதற்க்கு எவ்வளவு கடினப்பட்டிருப்பான் என்பது நினைக்க சுலபமான விடயமாகாது.
அந்த சாதனைக்குரிய மாணவன் முல்லைத்தீவு நெத்தலியாறு தமிழ் மகாவித்தியலாய மாணவன் பரமேஷ்வரன் சேதுராகவன் அவர்களுக்கு சிறப்பான வாழ்த்துக்களை பதிவு செய்கிறது கரவைகுரல்.
அந்த மாணவனின் வளர்ச்சியோடு பங்கெடுத்த பெற்றோர் ஆசிரியர்கள் யாவருக்கும் நன்றி பாராட்டுகின்றது கரவைக்குரல்.இன்னும் அந்த மாணவனின் தனித்துவக் கெட்டித்தனங்களை சரிவர இனங்கண்டு அதற்கான களங்களை ஏற்படுத்துங்கள்,உளமார்ந்த சிந்தனைகளுக்கும் அவனின் எதிர்பார்ப்பான வெற்றிகளும் தொடர்ந்தும் உறுதுணையோடு பெற்றோர்,ஆசிரியர்கள்,சமூக முன்னோடிகள் யாவரும் வழியமைத்துக்கொடுங்கள்.உண்மையில் மாணவனின் எண்ணங்களை அறிந்துகொள்ள நேரடியாக பேச வேண்டும்,ஊடகங்கள் வாயிலாக களம்கொடுக்க
வேண்டுமென்பது அனைவரினதும் எண்ணமாகிறது.தொடர்புகொள்ள சந்தர்ப்பங்களை ஏற்படித்தித்தர முடிந்தவர்களை கரவைக்குரல் எதிர்பார்க்கிறது.
முல்லைமண்ணிலிருந்து சாதனைக்குரிய மாணவனாக சிறப்புபெற்றிருக்கும் பரமேஸ்வரன் சேதுராகவனை அன்போடும் உரிமையோடும் வாழ்த்துகிறோம்.
உங்கள் வாழ்த்துக்களையும் மறுமொழி வாயிலாக பதிவுசெய்யுங்கள்