ஊரில் உள்ள இளைஞர்களும் பெரியவர்களும் மாலை வேளையில் ஒன்றாக கூடி கதையளக்குமிடம்தான்
அந்த மாலை நேர வாசிகசாலைக்குழு.யோகண்ணாவும் அதில் ஒரு ஒரமாக தன் பாட்டுக்கு இருப்பார்
பொதுவாக அந்த ஊரின் எங்கும் நடந்தபடி திரிவார்,அதைவிட கூடிய நேரங்கள் பேப்பர் படிப்பதுதான்
அவரின் பேச்சுக்களை கிண்டலாக அவ்வூரின் இளையவர்கள் சிரிப்பதுமுண்டு, ஏன் சில வயதானவர்களும் தான்,
ஏனென்றால் ஒரு சித்தசுவாதீனமற்றவராக அவர் வாழ்க்கையின் காலங்கள் சென்றுகொண்டிருந்தமையேதான்.
சித்தசுவாதீனம் என்று பதிய எழுத்துக்கள் மறுக்கிறது,
தன் நிலை மறாந்தாலும் அவரின் பொழுதுபோக்கு பத்திரிகை மற்றும் நூல்களை வாசிப்பது என்றால் அவர் எப்படியிருந்திருப்பார் என்பதை அவரின் நிலையிலிருந்து நினைத்துக்கூட பார்க்கமுடியாது.
பத்திரிகைகளில் படித்தவற்றை பற்றி சொல்லியபடியேயிருப்பார், உண்மையில் அவருக்கு நேரமறிந்து எதையும் சொல்ல அவருக்கு தெரியாது.
அதுவும் படிக்கின்ற மாணவர்களை கண்டுவிட்டால் .......ம்ம்ம்ம்ம்ம்
அதுதான் அவ்வூரின் இளைஞர் வட்டங்களை கண்டால், தான் படித்த
கல்வியைபற்றியும் அதை பயன்படுத்திய முறை பற்றியும் சொல்வார்.கணித பாடத்தை கற்ற அவர் கணிதத்தின் சூத்திரங்களையும் செய்முறைகளையும் நினைவில் உள்ளவற்றை நினைவுபடுத்துவார்.
ஹாட்லிக்கல்லூரியின் காலங்களில் அவர் படித்த காலங்கள் அதிபர் பூரணம்பிள்ளை அவர்கள் இருந்த காலம்.
கல்லூரியில் அதிபர் பூரணம்பிள்ளை அவர்களுக்கு இருந்த மதிப்பு அதுமட்டுமல்லாமல் அவர் அதிபராக இருந்து பணி செய்தமையை உலகம் பாராட்டியும் இருந்தமை கல்விச்சமூகத்தினர் பாமர சமூகம் என்ற வேறுபடுகளின்றி கூடுதலானவர்கள் அறிந்த ஒரு விடயம்.
ஹாட்லிக்கல்லூரியின் பொற்காலங்களில் அதிபர் பூரணம்பிள்ளை அவர்களின் காலமும் ஒன்றாகும்.
அவர் காலங்களில் தான் படித்த பெருமையை அடிக்கடி யோகன் அண்ணா நினைவு படுத்துவார்.
அதுவும் அங்குள்ள இளைஞர்களில் யாராவது ஹாட்லியில் படித்துவிட்டால் அதை நினைவுபடுத்தியபடியேயிருப்பார்.இப்படியான விடயங்களை யாராவது வெள்ளைக்கார உடை அணிந்து சொல்லியிருந்தால் யாராவது கைகட்டியிருந்து கேட்டிருப்பார்கள்.ஆனால் யோகன் அண்ணாவின் வாயில் இருந்து வந்ததால் தான் எல்லோருக்கும் சிரிப்பு.ஆனால் தன் நிலை மறந்திருந்து தனது அருமையான பெருமையான நினைவுகளை மீட்டும் கணிதம் சார்ந்த விடயங்களில் தனது நினைவுகளை வைத்திருக்கும் அவர் பெருமை என்பது தனியானது தான்,
என்றாலும் இளைஞர்களுக்கு பகிடி விடாமலும் மற்றவர்களை கும்மி அடிக்காமலும் இருக்கமுடியாதே..
ஒரு நாள் வாசிகசாலை மாலைக்குழுவின் ஓரமாக தன் நிலையில் தன்பாட்டிற்கு முணுமுணுத்தபடி உட்கார்ந்து இருக்கிறார் யோகன் அண்ணாவும்
‘என்னவாம் புதினம் பேப்பரிலை யோகன் அண்ணா?
பார்த்துமுடிஞ்சுதோ பேப்பர் எல்லாம்” செல்லத்தம்பியின் செல்ல பகிடி போல இருந்தது கேள்வி
”அந்த ஆள் நாலுதரம் பேப்பரெல்லாம் வாசிச்சு முடிஞ்சிருக்கும்” அங்கிருந்து வந்த இன்னுமோர் நக்கல்.
”பேப்பரோ முந்தி எல்லாம் சண்டை இல்லை நாங்கள் எல்லாம் ஹாட்லிக்கு நடந்து போவம்,சீனப்பாவின் தட்டிவானிலும் போவம்,இப்ப பேப்பரில் சண்டை தான் கூடிபோச்சு” யோகன் அண்ணா கொஞ்சம் பொருத்தமாகவும் தன் நினைவுகளை மீட்டி பொருந்தமில்லாமலும் பதிலை சொன்னார்.
”சீனப்பா” அந்தக்காலம் வடமராட்சியில் பாடசாலை சேவை வாகன சேவை செய்துவந்தவர்,மிகவும் பிரபல்யமாக அவரின் வாகன சேவை இருந்தமையை இங்கு குறிப்பிடலாம்,
”தொடங்கிட்டார் மச்சான்,தான் நடந்த கதை சொல்லுறார்” என்றபடி கண்ணைக்காட்டி நக்கலடித்தபடி பேச தொடங்கினார்கள் இளைஞர்கள்.
ஹாட்லியை பற்றி தொடக்கினால் அல்லது ஏதாவது கணிதத்தை பற்றிக்கேட்டால் அவரை தொடர்ந்து பேசவைக்கலாம் என்று எண்ணினார்கள். வேறு என்ன பேசவைத்து கிண்டல் பண்ணி அந்த மாலை நேரத்தை கழித்துவிடலாம் என்பது தான் அந்த இளஞர்களின் எண்ணம்.
”யோகண்ணா ஹாட்லிக்கு சீனப்பாவின் தட்டிவான் நேரத்து போய்விடுமோ” சீனப்பாவின் தட்டிவானின் வேகம் சீனப்பா ஓட்டும் வேகத்துக்கும் நக்கல்
”பூரணம்பிள்ளையிடம் அடிவாங்கினீங்களா? எத்தனை அடி வாங்கினீங்கள்?” என்றவாறு இளைஞர்கள் சிரித்தபடியே.
அவர் படித்த அதிபருக்கும் அவருக்குமான இன்னுமோர் நக்கல்
தன்னைச்சாடி நக்கல்கள் வருவது கண்டு யோகண்ணாவின் மனம் கொதிக்கத்தொடங்கியது,
தன்னிலை மறந்தவர் என்ற நிலையிலும் நக்கல்களை அடையாளம் காணுகிறார் யோகண்ணா.
மனங்குமுறியபடி
”என்ன நாலுபோட்டுத்தரவோ...........”கோபத்தோடு கேட்கிறார்.
ஒரு கணம் பயந்தனர் இளைஞர்கள்.அதுவும் தன் நிலை மறந்தவர்கள் அடிக்கும் போது அதன் வலியும் நோவும் அதிகமாகத்தான் இருக்கும் என்பது அவர்களுக்கு தெரியும்.
தொடர்ந்தார் யோகண்ணா
”என்ன பூரணம்பிள்ளை என்பவர் என்ன இலேசாகப்போய்விட்டாரோ,”
”அவர் நடை உனக்கு தெரியுமா? உடை உனக்கு தெரியுமா?
என்ன பின் பக்கமா நாலு போட்டு தரவோ”
”இந்த ஊருலகம் எல்லாம் அவரை தெரியும்”
”எப்படி படிப்பிச்சவர் தெரியுமோ”
ஆஆஆ பின்வளமா நாலு போட்டுத்தரவோ”
நாலு மனுசரை படியுங்கோ,சரியா படிக்கவேணும் .........ஆஆஆஆஆ
என்று என்று கோபத்தொடு திரும்ப திரும்ப சொன்னார்.
தன் நிலை மறந்து இந்த ஊரிலும் அந்த வாசிகசாலையிலும் தன் நாள்களை கழித்துக்கொண்டு திரிந்து செல்லும் யோகண்ணா சொன்னவை தான் அவை.
குளிரென்றாலும் சூடென்றாலும் எங்கெங்கு இடமிருக்கிறதோ அங்கெல்லாம் தன் நித்திரை பொழுதுகளை கழித்து வரும் யோகண்ணா சொன்ன அறிவுரைகள் தான் அவை.
”நாலு போட்டுத்தரவா நாலு போட்டுத்தரவா” என்று அடிக்கடி கேட்கும்போது இளைஞர்களுக்கோ அல்லது அங்கு கூடி நின்றவர்களுக்கோ அப்படியான பேச்சுகள் அவரை சித்த சுவாதீனம் அற்றவராக தெரிந்திருக்கும்,அதனால் தான் அவர்களுக்கு அவருடைய பேச்சுக்கள் சிரிப்பை கொடுத்திருக்கலாம்,ஆனால் அவர் தன் பாடசாலை அதிபர் ஆசிரியர்களில் வைத்திருந்த உண்மையான மரியாதையையும் அதை எப்போதும் நினைக்கின்ற பண்பும் என்றும் மறக்காதவராய் இருக்கின்றது என்றால் யார் இங்கு தன் நிலை மறைந்தவர்கள்?
என்றோ படித்த கணிதத்தின் சூத்திரங்களை நினைவோடு நினைவாக ஞாபகப்படுத்துவாரென்றால் அவரின் கல்வியறிவின் ஆழம் அன்றையகாலத்தில் எப்படி இருந்திருக்கும் என்ற கேள்விகள் எல்லோர் மனதிலும் எழுந்திருக்கவேண்டும்,
”மனுசரை படியுங்கோ” என்பதில் வந்த ஆழமான உட்கருத்து எல்லோராலும்
சித்தசுவாதீனமற்றவரென்று அடையாளப்படுத்தியவரிடம் இருந்துவருகிறதே அடையாளப்படுத்த முடியாதவர்களாய் வாய்விட்டு சிரிக்கமுடிந்ததே தவிர
அவரின் வசனங்களில் இருந்த ஆழமான உணர்வுகளை
புரிந்துகொள்ளவில்லை.
உண்மைதான்,கோட்டுசூட்டு வெள்ளைக்கார உடை அணிந்து உள்ளொன்றோடு புறம் ஒன்று சொன்னால் ஏற்றுக்கொள்ளும் இந்த மனிதம் யோகண்ணையின் உண்மையான உணர்வை அதிலிருக்கும் உண்மை அர்த்தத்தை புரிந்துகொள்ள மறுக்கிறது,
மனிதர்களைப்படிக்கவேணும்!!!!!!!!