கடைசிகாலத்துக்கு யாழ்ப்பாணத்துக்கு தான்

ஊருலகம் எல்ல்லாம் சுத்தி கடைசி காலத்துக்கு உழைத்த காசோடு நம்ம மண்ணுக்கு போகவேணும் என்று சொல்வது போல இந்த விடயத்தலைப்பு அமைந்தவுடன் ஓடொடி வந்தவர்கள் எல்லோருக்கும் நல்வரவு.
இப்படித்தான் முந்தி ஒரு காலத்திலே ”இது வந்திட்டுதோ” என்று விடியற்காலையில் உதயன் பத்திரிகையை பார்ப்பது வழமை,வந்துவிட்டது என்றால் வணிகர்கள் லொறியோடு போவார்கள்,பயணிகள் வருகைக்காக காத்திருக்கும் மக்கள் வாகனத்தோடு அல்லது குறிப்பிட்ட தன் உறவினர் வந்துவிட்டாரா என்று தேடிப்போவர்,”இண்டைக்கு வரவில்லையாக்கும்” என்று எண்ணி ஏமாற்றத்தோடு வீடு திரும்புவர் பலர், சிலர் அறுபட்ட இழுபட்ட பயணிகள் பையையும் தூக்கிக்கொண்டு ”இண்டைக்கு ஒரு மாதிரி அம்மா வந்திட்டா செல்வச்சந்நிதியானுக்கு காவடி எடுக்க வேணும் “ என்று எண்ணியபடி போவர்,

இப்படி பல கதைகளை நினைவுபடுத்தும் இந்த கப்பல்,லங்கா முடித கப்பலுக்கு வயசு வந்திட்டுது,


கடைசி காலத்துக்கு எல்லா பழசும் யாழ்ப்பாணத்துக்குத்தான் எண்டது போல லங்கமுடித அதன் கடைசி காலம் வரை ஓடி முடித்திருக்கிறது,””இன்னும் ஓட விடலாம்" என்றால் அதற்கு வயசு போய்விட்டதாம்,எல்லா இடமும் ஓடி கடைசிகாலத்துக்கு திருகோணமலை யாழ்ப்பாணத்துக்கு ஓடி களைச்சு இப்போது கப்பல் நங்கூரமிடும் காசு கப்பல் ஓடுவதற்கான காசை விட ரொம்ப கூடவாம்,சர்வதேச விதிமுறைகளுக்கு உட்பட்டு ஓடுவது என்றால் கப்பலை திருத்த அதற்கும் ரொம்ப காசு,எல்லாம் யோசித்துவிட்டு கப்பலை இரும்புக்கு விற்றாவது உழைக்க எண்ணியிருக்கிறது துறைமுக அமைச்சு.

ஒருகாலம் இந்த கப்பலுடைய பெயர் யாழ்ப்பாணம்,திருகோணமலை,கொழும்பு எல்லாம் எல்லோர் வாயிலும் பெரும்பாலும் உச்சரிக்கபடுகின்ற பெயர்,இதனால் உழைத்தவர்கள் பலர்,பாராளுமன்ற உறுப்பினர் ஆனவர்கள் சிலர்,இவர்கள் மக்கள் பிரதிநிதிகள்,கஸ்டபட்ட மக்கள் பலரோ பலர்.
கப்பல் ஓட ஓட சரியான இருக்கை இல்லாமல் கப்பலின் அங்கு இங்கும் உட்கார்ந்த படி வாந்தி எடுத்து எடுத்து கடைசியாக போய்சேருவோமொ என்று களைத்து விழுந்து யாழ்ப்பாணத்தை அல்லது திருகோணமலை வந்து சேர்வர் பயணிகள்.கப்பல் வருகைக்காக இரு கரைகளிலும் வரிசையில் பல நாள் காத்திருக்கும் மக்கள்.வந்தவுடன் முண்டியடித்து ஏறுவதும் அதற்கு கிடைக்காமல் ஏமாற்றத்தோடு திரும்பும் மக்கள்,


பின்னர் உதயன் பத்திரிகையை அடிக்கடி திருகோணமலையில் இருந்து கப்பல் வெளிக்கிட்டுவிட்டதா என்று பார்த்து மீண்டும் வரிசைகாக ஒடுவது,வெளி நாடுகளுக்கு போகும்போது பயணம் அனுப்புவது போல இந்த பயணத்துக்கும் சொந்தக்கள் நண்பர்கள் கூடி வழியனுப்பி வைப்பர், இந்த முறை என்றாலும் வெற்றியோடு சென்று வா என்று பல முகங்கள் பேசும்,போர்க்களத்துக்கல்லவா போகிறார்கள்?? ம்ம்ம்ம்ம்
ஓடும்போது கொண்டு செல்லும் பயணப்பையைவிட தரப்பட்ட பாஸ் எடுக்கப்பட்டதா என்று அடிக்கடி திருப்பி திருப்பி பார்ப்பது அதில் இருக்கும் பதட்டம் பயணித்தவர்களுக்கு மட்டுமே வெளிச்சம்.
பத்தடிக்கு ஒருமுறை பயணப்பை பரிசோதனை,எடுப்பதும் வைப்பதுமாக கப்பல் ஏறினாலும் சங்கடம் தான்.உணவுப்பொருள்கள் கொண்டு வரும் கப்பலில் பயணிகளும் ஏற்றப்பட்டால் எப்படி இருக்கும்?
சரக்கு கப்பல் என்றால் இருக்கைகள் இல்லை,இந்த வேலையில் சர்வதேச விதிமுறைகளுக்கு உட்பட்டுத்தான் இந்த கப்பல் ஓடியதா என்ற கேள்வியை முன்வைக்கிறது.
எத்தனை மாணவர்கள் பட்டதாரிகளின் வேலை வாய்ப்புகள் இழக்கபட்டிருக்கிறது.பல்கலைக்கழக அனுமதிகள் பிந்தியிருக்கிறது,விரிவுரைகளுக்கு பிந்தி சென்ற மாணவர்கள் அங்குள்ல விரிவிரையாளர்களுக்கு காலம் பிந்தி வருவதற்கான விளக்கத்தை சொல்வதற்கு படும்பாடு,

இதை விட லங்கா முடித கப்பல் வந்துவிட்டால் ஊரிலை சங்க கடையில் வரிசை,கடல் தண்ணி பட்டு விட்டதாம் என்று சீனி அரைகுறையாக இனிக்கும்,கோதுமை மாவின் நிறம் மாறியிருக்கும்,என்றாலும் வாங்கியேதான் ஆகவேண்டும்,வாங்காவிட்டால் சாப்பாட்டுக்கு எங்கு போவது? அதுவும் ஒரு காட் இருக்கிறது,அந்த காட்டுக்கு 2 அல்லது 1 கிலோ,அதைவிட யாழ்ப்பாணத்து உற்பத்தி சோப் போட்ட மக்களுக்கு கொழும்பு சோப் ஒன்று அல்லது இரண்டு கிடைக்கும்,அதுவும் வாங்க வேண்டும்,\இதைவிட கிழிஞ்ச கிழிக்கபட்ட தபால்கள் வரும் காலம்,தபால் கொண்டுவரும் அன்பர் அந்த ஊரவராக தான் இருப்பார்,அவருக்கு அந்த ஊரவர்கள் எல்லாம் நட்பாகத்தான் இருப்பார்,கடிதங்களை அடுக்கியபடி “அது கடல் தண்ணி பட்டுப்போச்சு,போன கிழமை மழைதானே,அது தான் இதெல்லாம் கிழிஞ்சுபோச்சு”என்று கொடுப்பார்,ஒவ்வொருகடிதமாக இணைத்து வாசித்து தூரதேசத்து மகன் அல்லது மகளின் நிலைமையை அறிவர் குடும்பத்திலுள்ளோர் எல்லோரும்.

இப்படி எத்தனையோ கதைகள் சொல்லும் இந்த லங்கா முடித கப்பல்.கஸ்டங்கள் கொடுத்ததும் லங்கா முடித்ததான்,அங்கும் இங்கு கடக்க உதவிசெய்ததும் லங்கா முடித்ததான்,இருந்த கை பிழையோ அல்லது ஓடியது பிழையோ தெரியாது,லங்கா முடித ஓடி ஓய்ந்திருக்கிறது,கடைசிகாலத்துக்கு யாழ்ப்பாணத்துக்கு ஓடி இப்ப இரும்புக்கு தயாராகிரது,.இரும்புக்கு போனாலும் அந்த இரும்புக்காசு யாருக்கோ போனாலும் யாழ் மக்களின் மன இருப்பில் இருந்து நீங்காது இந்த லங்கா முடித்த, நினைவுகளால் என்றாலும் நிஜத்திலும் எல்லாம் கடைசிகாலத்துக்கு யாழ்ப்பணத்துக்கு தான்

மாணவர்களின் வளர்ச்சியே பேரின்பம் என்பார் ஆசிரியர் வல்லிபுரம்

ஆசிரியர் என்பதற்கு இலக்கணமாய் வாழ்ந்து உலகமெங்கும் தன் மாணவர்களின் சிறப்பான வளர்ச்சியால் பெருமையுற்று எம்மோடு வாழ்ந்த ஆசிரியர் வல்லிபுரம் அவர்களை இழந்துவிட்டோம் என்பது மனதுக்கு வேதனையளிக்கிறது,



செய்யும் தொழிலே தெய்வம் என்று வாழ்ந்து கொண்டு "ஆசிரியர்" என்பவர் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதற்கு இலக்கணமாக  வாழ்ந்து காட்டியவர் தான் ஆசிரியர் சின்னையா வல்லிபுரம் அவர்கள்.ஆரம்பக்கல்வியே வாழ்க்கையில் அடிப்படைக்கல்வி என்பது யாவரும் அறிந்ததே.அந்த கல்வியை மாணவன் எவ்வாறு பெற்றுக்கொள்கின்றானோ அதுவே அவனை சீரிய பாதையில் வழிகாட்டிச்செல்லும்  என்பது உண்மைதான்.அதை ஆசிரியர் செவ்வனே அறிந்து மாணவர்களை வழிநடத்துவார்.
சிறுபராயம் முதலே மாணவர்கள் பணிவுடனும்,பண்புடனும் அதேவேளை போட்டி மனப்பானமையுடனும் கல்வி கற்க வேண்டும் என்ற எண்ணத்தோடு கல்வி கற்பிப்பவர் ஆசிரியர் அவர்கள்.ஆசிரியர் ஐந்தாந்தர புலமை பரீட்சையில் மாணவர்களை தயார்ப்படுத்தும் பெரும் பணியினை கையிலெடுத்து அதில் வெற்றியும் கண்டவர் ஆசிரியர் வல்லிபுரம் அவர்கள்.
பாடசாலை பரீட்சைகளுக்கு கூடுதலான புள்ளிகளை பெறவேண்டும் என்பதைவிட ஆசிரியர் அவர்களின் பரீட்சையில் மாணவர்கள் கூடுதல் புள்ளிகள் பெற மிகவும் பிராயத்தனதொடு கற்பார்கள் என்றால் ஆசிரியரின் முக்கியத்த்துவம் உங்களுக்கு புரியும்.
ஆசிரியர் சின்னையா வல்லிபுரம் அவர்கள் அதிபராக பணிசெய்து வந்திருந்தாலும் ஆசிரியராக இருந்து கிடைக்கும் மகிழ்ச்சியே தனி என்று சொல்பவர்.
மாணவர்களின் மகிழ்ச்சியில் அவர் மகிழ்ந்திருப்பார். ஆசிரியரின் மாணவர்கள் பல்வேறு நாடுகளிலும் மிகச்சிறந்த பதவிகளில் கடைமை ஆற்றிக்கொண்டிருக்கின்றார்கள்.அந்த பெருமை அவருக்கு இறுதிக்காலம் வரை நிலைத்திருந்தது.

நான் அறிந்த வகையில் அதிபராக பணிபுரிந்த காலங்களில் கரணவாய் மணியகாரன் தோட்டம் வித்தியாலயத்தின் காலங்கள் அவரின் பொற்காலம் என்றுதான் சொல்ல வேண்டும்.அவ்வூர் மக்களோடு மக்களாக சேர்ந்து பாடசாலையின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றியவர் ஆசிரியர் வல்லிபுரம் அவர்கள்.
ஆசிரியராக அதிபராக சேவை உள்ளம் கொண்டவராக இருந்து 2008 ம் ஆண்டு ஆவணி மாதம் இரண்டாம் தேதி தனது அறுபதாவது வயதில்  தனது அதிபர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றிற்றுக்கிறார்.ஓய்வு பெற்றாலும் தனது ஆசிரியப்பணியை தொடர்ந்தும் செய்துவந்தார்.கற்பித்து மாணவர்கள் அடையும் வளச்சியில் அதில் அவர்கள் பெறும் மகிழ்ச்சியில் தானும் 
மகிழ்வுறுவார்.அன்றய காலங்களில் வடபுலம் யாழ்ப்பாணம் கரவெட்டிக்கு செல்லும் சந்தர்ப்பம் எனக்கு கிடைத்தபோது ஆசிரியர் அவர்களை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.அப்போதும் கூட அவர் தன்னை நம்பி வீடு வரும் மாணவர்களை விட்டுவிட்டு தனது சொந்த தேவைக்காக அதுவும் தன்னுடைய மகனுக்கான முக்கியமான ஒரு தருணத்தில் கொழும்புக்கு செல்வதை தவிர்க்க போவதாகக் கூறியிருந்தார். அப்படியாக மாணவர் மீது அக்கறை கொள்ளும் ஆசிரியர் ஒருவரிடம் கல்விகற்றேன் என்ற பெருமை எனக்கு மட்டுமல்ல உலகமெங்கும் பரந்து வாழும் அவரின் சிறப்பான மாணவர்களுக்கும் என்றும் இருக்கும்.
இப்படியான சிறப்புக்கள் பொருந்திய ஆசிரியர் ஒருவரை நாம் இழந்துவிட்டோம் என்று சொல்லவே வேதனை தருகிறது,தன் அன்பான புத்திரர்களையும் சீரியபாதையில் வழி நடாத்தி இவ்வுலகை நீத்திருக்கிறார்.ஆசிரியரின் பெருமைகள் அவரின் பெயரும் புகழும் அவரின் மாணவர்களால் என்றும் சிறப்புறும்,ஆசிரியரின் பிரிவால் துயருறும் அவரின் குடும்பத்தினருக்கு கரவைக்குரல் தன் ஆழ்ந்த அனுதாபங்களை பகிர்ந்துகொள்கிறது