வில்லிசை-எங்கள் கதைமிக நீண்ட நாள்களுக்கு பின் வில்லிசைக்காக சில நாள்கள்.
நீண்ட நாள்கள் என்பது 5 வருடங்கள் தான்.கொழும்பிலே இருந்த காலங்களில் கொழும்பு மருத்துவபீட மாணவர்களாகிய  என் நண்பர்கள் சிலருடைய வேண்டுகோளில் அவர்கள் பீடத்தில் ஒழுங்கு செய்யப்பட்ட வாணிவிழாவில் வில்லிசைத்த பின் லண்டனில் சில பெரியவர்களின் வேண்டுகோளால் வில்லிசை கதையை மீண்டும் எழுதி அவர்கள் மேடையேற பயிற்றுவித்து அந்த கலையோடு மீண்டும் பயணிக்க முடிந்தது.பல கலைகளையும் எனக்கு பயிற்றுவித்த தந்தையின் கலைகளில் வில்லிசை மிக முக்கியமானது.அதை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளும் போது கிடைக்கும் மகிழ்ச்சி தனியானது.
என் தந்தையால் எழுதப்பட்ட பல வில்லிசைகள் என்னிடம் இப்போதும் கொழும்பிலும் ஊரிலும் இருக்கிறது.அவற்றை பதிவு செய்யவேண்டிய ஆர்வமும் அதனோடு இணைந்து அவை பேணப்படவேண்டும் என்ற தேவையும் எனக்கு இருக்கிறது.என்றாலும் சில எழுதிய கடதாசிகளும் கிழியும் நிலைகளில் இருப்பதை அண்மையில் கொழும்பிற்கு சென்று வந்தபோது பார்த்துவிட்டே வரமுடிந்தது. கொழும்பிலிருந்து வரும் உடனடிப்பயணம்,கொண்டுவரக்கூடிய நிறை எல்லாம் கொண்டு வருவதற்கு அந்த வேளையில் இருந்த தடங்கல்கள்.இருப்பினும் என் அப்பாவினுடைய பல நண்பர்களின் வேண்டுகோள்களுக்கமைய அவற்றை பதிவுசெய்யவேண்டும் என்ற ஆர்வம் தொடர்ச்சியாக இருக்கிறது.காலங்கள் எல்லாவற்றிக்கும் கைகொடுக்கட்டும்.இங்கு கடந்த வருடம் லண்டனில் வில்லிசை நிகழ்ச்சியை மேடையேற ஆர்வம் கொண்ட பெரியவர்கள் சிலர் என்னிடம் கேட்டபோது என்னாலும் வேலைபழுக்களுக்கு மத்தியில் மறுக்கமுடியாமல் எழுதப்பட்ட வில்லிசை ஒன்றை பதிவு செய்யலாம் என்ற எண்ணம்.அவர்களின் மேடைக்கும் அவர்களின் கலை ஈடுபாட்டுக்கும் அமைவாக இந்த வில்லிசையை மற்றும் வில்லிசைக்கான கதையை எழுத முடிந்தது.எங்கள் கதை என்ற தலைப்பில் அவர்கள் இந்த நாட்டில் தங்களின் நிலைமைகள் இப்படியே இருகிறது என்று குறிப்பிட்ட விடயங்களுக்கு அமைவாக கதையின் கருவை அமைத்து எழுதியிருகிறேன்.சிறப்போடு மேடையேறி வில்லிசைத்துமிருந்தார்கள் அந்த பெரியவர்கள்.
இந்த வில்லிசை கதையை கனடாவிலிருந்து சுவிஸிலிருந்து சில கலை உள்ளங்கள் தங்கள் மேடைகளிலும் அதை மெடையேற்ற  விண்ணப்பித்து கேட்டிருந்தார்கள்.
அவர்களுக்கும் அனுப்பி வைக்கும் இந்த வேளையில் வில்லிசை இசைக்க யாருக்கும் பயனுடையதாக இருக்கலாம் என்ற எண்ணத்தோடு இந்த வில்லிசைக்கான எழுத்துரிமையோடு இங்கே பதிவு செய்கின்றேன்.
வில்லிசைக்கான பாடல்களுக்கான இசையுதவிக்காக மற்றும் அது மேடையேற இங்கே பின்னூட்டத்தில்(Post Comment)
குறிப்பிட்டுகொள்ளுங்கள்.அது மகிழ்ச்சியைக்கொடுக்கும்.
நகைச்சுவைகள் கூட காலத்துக்கு அந்த அந்த இடங்களுக்கு பொருத்தமாய் இணைத்துக்கொள்ளலாம்.

எங்கள் கதை

பாடல்
தொந்தனத்தொம் என்று சொல்லியே-வில்லினிற்பாட
வந்தருள்வாய் கணபதியே
தொந்தி வைத்த கணபதியே – நீயும்
முந்தி வந்து அருள் தருவாய்
மூத்தவர்கள் நாமும் இங்கே- இங்கே
வில்லில் இசை பாட வந்தோம்
நல்லதொரு கதை புனைந்தோம்—அதை
வில்லிசைத்து பாட வந்தோம்

கதை
அருமையான மாலைபொழுதிலே, எல்லோருக்கும் பொதுவான இறைவனை பணிந்து இங்கு கூடியிருக்கும் அனைவருக்கு அன்பான வணக்கங்கள்/
உதவி- இங்கை வந்திருக்கிற எல்லாரும் எங்கடை ஆக்கள் தான்.
உதவி 2-ம்ம்.எங்கடை பிள்ளைகள்,பேரப்பிள்ளைகள்,பக்கத்து வீட்டுக்காரர் எல்லாரும் வந்திருகினம்
உதவி 3- ஏதாவது தங்களைப்பற்றி சொல்லிபோடுமோ என்று கேட்க வந்திருப்பினமோ

கதை
சரி, வந்தது எங்கள் உறவுகள் என்றாலும் வணக்கம் சொல்வது மூத்தோர் மரபு.அதை எல்லோருக்கும் சொல்லி ஆரப்பிப்பது மிக நல்ல விடயம் தானே..அதுவும் மூத்தவர்கள் நாங்கள் அதை நடைமுறையில் காட்டுவது சிறப்பு...
இன்றைய நாள் நிகழ்ச்சியில் ஒரு அருமையான கதையொன்றை வில்லிசையிலே சொல்வதற்கு நாங்கள் வந்திருக்கிறோம்.
ஆனால் அதற்கு முதலில் வந்திருக்கும் எல்லோரையும் நாங்கள் அறிந்திருந்தாலும் எங்களைப்பற்றி நாங்கள் சொல்லித்தான் வில்லிசையை ஆரம்பிக்க போகின்றோம்.
உதவி1—அது சரி சிறீலங்காவிலை பிரிட்டிஷ் எம்பசியில் சொல்லி, கட்டுநாயக்கா எயார்போட்டிலை சொல்லி, ஹீத்த்ரோ எயார்போட்டிலை சொல்லி வீட்டில பேரப்பொடியளுக்கு விளங்கபடுத்தி இப்ப மேடையிலையும் சொல்ல போறீங்களோ.......
கதை
வில்லிசையின் மரபின் படி எங்களைப்பற்றி ஒரு சில வார்த்தைகள் சொல்ல வேண்டும் தானே

பாடல்
சபைதனிலே வந்திருக்கும் பெரியோரே குழந்தைகளே- எங்கள் பிள்ளைகளே அன்பர்களே
சொந்தங்களே பந்தங்களே
ஏட்டிலே எழுத்தறியோம் எழுதும்வகை நாமறியோம்
[பாட்டிலே பொருளறியோம் பாடும் வகை நாமறியோம்
கற்க  உண்டு ஏராளம்
தேடிக்கற்போம் படித்து சுவைப்போம்

ஆகவே நாங்கள் விடும் சின்ன சின்ன பிழைகள் எல்லாவற்றையும் நீங்கள் மன்னித்துகொள்வீர்கள் என்று அன்பாக கேட்டுகொண்டு கதைக்கு வருகின்றோம்

உதவி1 என்ன கதை?
உதவி 2_ எங்களுக்கு ஒண்டுமே விளங்காத மாதிரி இந்தக்கால சினிமா கதையோ அல்லது கதை ஒண்டுமே இல்லாமல் வெறும் காட்சி கவர்ச்சி மட்டுமோ
கதை
எங்கள் கதை தான் இன்று நாங்கள் சொல்ல வந்திருக்கும் கதை

பாடல்
(பாண்டி)
பண்டமெல்லாம் கிடைக்குமிடம்
லண்டன் மாநகரம்-அது  லண்டன் மாநகரம்
கண்டம் தாண்டி பணமும் அனுப்ப
பென்னம்பெரிய லட்சம்---ஓகோ-அது பென்னம்பெரிய லட்சம்
முதன்முதலாக ஊர்க்கிழங்கு
மரகறிகள் எல்லாம்---ம்ம்ம் மரக்கறிகள் எல்லாம்
முந்திக்கொண்டு வந்த இடம் தான்
லண்டன் மாநகரம்----ஓமோம் லண்டன் மா நகரம்

கதை
தாயகத்திலை இருப்பது போல் எல்லாமே இங்கு இருக்கு.அதோட பணமும் லண்டனிலிருந்து அனுப்பினால் அதுக்கு ஒரு கணக்கே இல்லை.என்று லண்டன் என்பது ஒரு நாடு நினைத்துக்கொண்டிருக்கும் ஒரு சமுதாயம்
உதவி
அது சரி வந்தாபிறகு தானே விளங்குது லண்டன்
கதை
தாயகத்தில் அழகு பெறும் ஒரு கிராமத்தில் அழகான சின்ன குடும்பம். கணவனை இழந்த பரமேஸ்வரி தனது ஒரேயொரு மகனில் கொள்ளைப்பாசம்.சிறுபராயம் முதற்கொண்டு துடிதுடிப்பாக வளர்ந்த பரமேஸ்வரி கணவனை இழந்தும் தனது மகனுக்காகவே தனது வாழ்க்கையை அர்ப்பணித்து வாழ்ந்து வந்தவர்.தாயகத்தின் யுத்த கொடிய சூழ் நிலையில் இருந்து தனது மகனை காப்பாற்றவேண்டும் என்றும் அதுவும் லண்டனுக்கு போய்விட்டால் மகனும் ஏதாவது உழைச்சு பிழைச்சு தப்பி விடுவான் என்றும் நினைத்து ஒருமாதிரி மகனை லண்டனுக்கு அனுப்பிவிடுகின்றாள் தாய்.
உதவி
பக்கத்துவீடு,மச்சான் மருமகன் என்று எல்லாரும் லண்டனுக்கு போய் உழைச்சு அனுப்ப தன்ரை பிள்ளையும் போய் ஏதாவது தப்பி பிழைக்கட்டும் எண்டு தான் எல்லாரும் அனுப்பினது......
கதை
மகனும் வந்து அந்தக்கடன் இந்தக்கடன் என்று அடைக்கவே ஆறு ஏழு வருசம்.சரி கடன் எல்லாம் முடிந்த பிறகு கல்யாணம் கட்டத்தானே வேணுமெடா தம்பி எண்டு கல்யாண வேலைஒழுங்குகள்.
அதுக்கு மகன் தன்னுடைய அம்மாக்கு ஒரு நாலு பக்கத்திலை கடிதம்.
உதவி
என்ன பொம்பிளை வேண்டாமெண்டோ.அல்லது இங்கையாரையும் பார்த்துப்போட்டன் எண்டோ?????
ஓ இவங்களை நம்பவும் ஏலாது...இளவயசிலை எல்லாரும் வந்தவங்கள்...
கதை
இல்லை இல்லை...சொல்கிறேன் கேளுங்கோ
ஊரிலை இருந்து தான் பொம்பிளைவேணும்.ஆனால் அந்த பொம்பிளை எப்படி அழகாயிருக்கவேனும், எப்படி நடக்கவேணும்,எப்படி உடுக்கவேணும்,என்று தான் அந்த கடிதம்.
உதவி
ஓ ஓ அதுக்கு நாலு பக்கம் வரும்......

ம்ம்ம் தனக்கு மருமகளாக வரவிருப்பவள் எப்படியெல்லாம் வரவேணுமென்று கனவு கண்டாளோ...தனது மகனுக்கான துணைவி எப்படி அமையவேண்டும் என்று கனவு கண்டாளோ அப்படியே அவள் தெரிவு செய்கிறாள்
பாடல்
(அழகே)
மான் போல அழகு அவள்- அன்ன நடை நடந்திடுவாள்.
 முத்தான முத்தல்லவோ -கன்னகுழி சிரிப்புமல்லோ
ஊரிலுள்ள பந்தமெல்லாம் அவளளகை வியந்துடுவர்
பாரிலழகோவியமாய் சித்திர பாவையவள்

தந்தையைபோல் வளர்ந்துவிட்ட -ராஜ நடை மகன் எனக்கு
சிந்தையிலே நினைத்ததுபோல்-சொந்தமானாள் மருமகளாய்
கதை
சரி அதையும் ஒரு மாதிரி நல்ல திருப்தியோட முடிச்சு மருமகளையும் அனுப்பியாச்சு. நல்ல வாழ்க்கை.குடும்பம் குழந்தைகள் என்று மகனுக்கு நிம்மதியான வாழ்க்கையை அமைச்சுகொடுத்த பெருமை

என்னுடைய மகனும் மருமகளும் லண்டனில் நல்லதொரு வாழ்க்கை, எந்த கோவில் குளம் ஏறும்போது தன் மகனையும் மருமகளையும் நினைத்தே வழிபடுவாள்.பேரக்குழந்தைகளும் கிடைக்க அதை விட அவளுக்கு வேறு என்ன சந்தோசம்? மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.
என்றாலும் தன்னை மகனும் மருமகளும் லண்டனுக்கு கூப்பிட்டால் என்ன என்பது பரமெஸ்வரியின் உள்ளத்தில் இருக்கும் ஒரு எண்ணம்.
ஊரிலுள்ளவர்களெல்லாம் லண்டன்,பிரான்ஸ், நோர்வே என்று போய்வர நானும் போய் வரலாமே என்று மகனிடம் ஒரு நாள் வாய்விட்டு கேட்டுவிட்டா பரமேஸ்வரி அக்கா.
பாடல்
(ஆனந்த பைரவி)
ஊரிலே வாழுகின்ற என்னோட்ட மனுசரெல்லாம்
லண்டனுக்கு சுற்றுலாவாம் கேளடா என் மகனே
எனக்கென்று ஒரு மகனாய் லண்டனில் நீ இருந்தாலும்
கூப்பிடும் ஐடியா தான் உனக்கும் இல்லையோடா

ஒரேயொரு பெரிய வீடு நான்மட்டும் தனியேவாழ்ந்து
என் மகனை கண்டு தழுவ  ஆசையும் இருக்குதெடா...
சொத்து பலம் இருந்தாலும் என் பிள்ளையுடன் கூடி வாழ்ந்த
நிலைபெற்ற மகிழ்ச்சியது எந்த தாய்க்கு உரித்தல்லவோ

கதை
தாயின் நிலையான பாசத்தை உணர்ந்த மகனும் தன் அம்மாவை கூபிடுவம் என்று அதற்குரிய ஒழுங்குகள்

உதவி
மருமகள் விட்டவவோ!!!!! என்னத்து இங்க? இங்க வந்து சாமாளிப்பவோ!! என்றெல்லாம் கேட்டிருப்பாவே??
கதை
ம்ம்ம் என்றாலும் மகன் கூப்பிட எல்லா ஒழுங்கும்  முடித்து பரமேஸ்வரியக்கா லண்டன் வருகின்றார்.
பாடல் ( வேல்)
கொழும்பில் வந்து லொட்ஜில் வாழ்ந்து
லண்டன் விசா எடுக்க இரண்டு மாசம்-
,, ,,              ,, ,,           ,,,,,,,,,
கண்ணாடியால் கட்டுப்பட்ட கட்டு நாயக்கா ஏயர்போடில்
முதன்முதலாக நுழைந்து வாறா –அக்கா
முதன்முதலாக நுழைந்து வாறா
ஓடுது ஓடுது பிளைட்டும் ஓடுது
பிரேக்கே போடாமல் பிளைட்டும் ஓடுது
லண்டன் போக எடுத்த அழகிய சாறியும்
லண்டன் குளிருக்கு 4 கிலோ ஜக்கட்டும்
கையோடு கையாக எடுத்து வாறா-அக்கா
கையோடு கையாக எடுத்துவாறா
பேரபிள்ளைகளுக்கு யாழ்ப்பாணத்து சாப்பாட்டோடும்
மருமகளுக்கு பிரெஞ்கோணர் உடுப்பெல்லாம்
கையோடு கையாக எடுத்துவாறா-அக்கா
கையோடு கையாக எடுத்துவாறா
கதை
ம்ம்ம் நல்ல பாச உணவோடு 10 மணித்தியாலம் காலும் நீட்ட முடியாமல் கையும் நீட்ட முடியாமல் பயணம் முடிச்சுக்கொண்டு பரமேஸ்வரி அக்கா லண்டனுக்கு வந்திட்டா.லண்டன் வந்தால் எட எங்கட பரமேஸ்வரியக்காவுக்குஅப்படி ஒரு வரவேற்பு. ஹீத்ரோ எயார் போட்டிலை மகன் மருமகள் பேரப்பிளைகள் முத்தம் கொடுத்து வரவேற்றது முதல் வீட்டிலை சொந்தம் பந்தம் எல்லாம் கூடி நிண்டு
உதவி
கூடுதலாக வேலை இல்லாதவர்கள் தான் நின்றிருப்பார்கள்( அதைப்பற்றி பேசுதல்)
பாடல்
சொந்தமும் பந்தமும் உற்றாரும் சுற்றமும்
சந்தோஷமாய் கூடின-ஆஹா சந்தொஷமாய் கூடின
ஊரா வீட்டு கதைகளெல்லாம் கேட்டு மகிழ்வடைந்தனர்
பெற்றோர் சுற்றோர் கிலோக்கணக்கில்
கொடுத்து விட்ட பார்சல்கள்- ஓகே கொடுத்து விட்ட பார்சல்கள்
எடுத்துக்கொண்டே கிளம்பின அதுக்குபிறகு நேரம் இல்லை.

ம்யார் தான் என்ன தான் வந்திருந்தாலும் தன்னுடைய மகனை நீண்ட நாள்களுக்க் பிறகும் தானே பார்த்து வைச்சு அனுப்பி வைத்த மருமகளும் தன்னுடைய பேரக்குழந்தைகளையும் பார்த்து பூரித்த மகிழ்ச்சியிருக்கே அதையாராலும் அளவிட முடியாது.அளவிடமுடியாத சந்தோஷத்தில் அவளின் பூரிப்பான முகம்.ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புதியபுதிய அனுபவங்களோடு நாள்கள் நகருகின்றது.பேரப்பிளைகளின் அழகிய மழலைத்தமிழும் எபப்டி தன் மகனை நல்ல ஆங்கிலம் பேசும்படியாக படித்தறிந்தவனாக வளர்க்கவேண்மென்று ஆசைபட்டானோ அதே போல் பேரப்பிளைகள் படிக்கின்றார்கள் என்ற மகிழ்சிவேறு.ஏனெனில் அப்படி இங்கிலிஷில் பேசும் குழந்தைகள்.
உதவி
பதினாறு வயசிலும் மழலைத்தமிழ் தானே பேசுதுகள்.சரி அதை என்றாலும் பேசுதுகளே என்று சந்தோஷம் கொள்ள வேண்டியதுதான்.

பாடல்
தித்திக்க பேசும் மழலைகள் போல்
பத்து வயசிலும்  பேசுமெம் பரம்பரைகள்
சொத்தான தமிழ் மொழி பேசாதோ என்று
கத்தி கத்தி படிப்பிக்கும் பரமேஸ் அக்கா

கதை
அப்பம்மா Bad.. அம்மா எனக்கு ஹோம் வேக் னிறைய இருக்கு...இண்டைக்கு தமிழ் வேண்டாம். பிளீஸ் அம்மா..
மாமி வீட்டிலை பிள்ளைகளுக்கு அரியண்டம் கொடுக்க வேண்டாம்.
இது எங்கடை நாடு போல இல்லை.அது சரி தான் என்றாலும் பரமேஸ் அக்காவுக்கு ஒரே கவலை.
பாடல்
என் அன்பான முத்துகள் பேரகுழந்தைகள்
எமை விட்டு சற்றே தள்ளிபோவதுபோல்
நமக்கென்று உரித்தான பரம்பரைகள்
நற்பாதை காட்ட வழிசெய்வோம்.

கதை
இவ்வாறாக பரமேஸ்வரியக்கா சிந்தித்தாலும் அது எடுபடுவதாக இல்லை.
மருமகளும் அம்மா இங்க தேவையில்லாத வேலைகள் எல்லாம் பார்க்கிறா என்று மகனிடம் வேலை விடு வரும்போதெல்லாம் சொல்லிகொண்டேயிருப்பது.
பரமேஸ் அக்காவுக்கு காதிலே கேட்டுவிடும்...ஒரே கவலை. தனக்கு உரித்தான பேரப்பிள்ளைகளே தங்களுடைய அப்பம்மா என்று மரியாதை இருந்தாலும் ஊரிலே அருகோடு இருந்து அவர்களை அழகோடு வளர்த்துப்பார்க்கும் சந்தோசம் கிடைக்கவில்லையே என்பது மிகப்பெரிய கவலையாக இருந்தது,ஏதோ தனக்கு உரித்தானவர்கள் எட்ட எட்ட போகின்றார்களோ என்ற ஒரு எண்ணம்.
கிட்டவாக வந்துவிட்டாலும் தனியாகவே வாழ்கின்றேன் என்ற உணர்வு தான். பெரிய ஒரு வீட்டில் பகலில் யாரும் இல்லை.இரவில் சாப்பாடும் நித்திரையும்.

பாடல் ( இரண்டு மனம்)
லண்டனில் ஒரு பொக்ஸ் ரூம்
பொக்ஸ் ரூமும் ஒரு கூடு
கூடி வாழும் வாழ்க்கை-ஒரு
நாளும் தரா லண்டன்.......

இரவும் பகலும் இரண்டானால்
உழைப்பும் படுக்கையும் இரண்டாகும்
வேலை முடிந்து வந்துவிட்டால் -மகன்
பெட்டில் நித்திரை செத்த பிணம்
உறவும் பந்தமும் காசு வழி
காசின் வருகை உழைப்பின் வழி
உழைத்து முறிவது லண்டன் வழி
வேலையை தக்கவைக்க செத்த வலி

கதை
இப்படியாக தனக்கோ தனிமை என்ற உணர்வு வாட்டுகின்றதே என்று பரமேஸ்வரியக்காவுக்கு மிகப்பெரிய மனக்கவலை.வீட்டிலை இருந்தால் மருமகளும் இது என்ன இந்த மனுசி வீட்ட்லையே இருக்குது...வேற வேலைகளையும் பார்க்கலாமே என்று முகத்தை சுழிக்கிறாளோ என்று பரமேஸ் அக்காவுக்கு ஒரே சிந்தனை.
என்னதான் மகன் மருமகளாக இருந்தாலும் லண்டன் வந்து வேற கொண்டிஷன் என்பதை பரமேஸ்வரியக்கா கொஞ்சம் கொஞ்சமாக  நாட்டை படிகிறா... சாதாரண குடும்பத்தின் மகளாக பிறந்த பரமேஸ் அக்கா தன்னுடைய குடும்பத்தில் கணவனை இழந்து தனது ஒரேயொரு மகனை எவ்வளவு கஸ்டபட்டு வளர்த்தாவோ அதேபோல் வந்து சேர்ந்துவிட்ட இந்த நாட்டிலும் தனது வாழ்கையை நிலை நிறுத்த வேணும் என்பதில் மிகவும் உறுதியாக இருந்தா.

என்னதான் மகன் மருமகளாக இருந்தாலும் லண்டன் வந்து வேற கொண்டிஷன் என்பதை பரமேஸ்வரியக்கா கொஞ்சம் கொஞ்சமாக  நாட்டை படிகிறா... சாதாரண குடும்பத்தின் மகளாக பிறந்த பரமேஸ் அக்கா தன்னுடைய குடும்பத்தில் கணவனை இழந்து தனது ஒரேயொரு மகனை எவ்வளவு கஸ்டபட்டு வளர்த்தாவோ அதேபோல் வந்து சேர்ந்துவிட்ட இந்த நாட்டிலும் தனது வாழ்கையை நிலை நிறுத்த வேணும் என்பதில் மிகவும் உறுதியாக இருந்தா பரமேஸ் அக்கா.
தன்னைப்போலவே பக்கத்துவீட்டிலும் இருக்கும் கனகேஸ்வரி அக்கா இருக்கும் சந்தோஷமான வாழ்க்கையை பார்க்கிறா.
ஒரு நாள் கனகேஸ்வரியக்காவும் பரமேஸ்வரியக்காவும் நண்பர்களாகி
தங்களுக்குள் சந்தோஷமாக உரையாடிக்கொள்கிறார்கள்.
தனக்கும் இந்த நாட்டிற்கு வந்த காலத்தில் ஏதோ பல சுகங்களை இழந்துவிட்டேனோ என்று யோசிச்சனான் தான்.ஆனால் அப்படி இல்லை பரமேஷ்வரி அக்கா. என்று கனகேஸ்வரி அக்கா சொன்னதும் பரமேஷ்வரி அக்காவுக்கு அளவற்ற சந்தோஷம்.
உதவி:: கும்பிட போன தெய்வம் குறுக்க வந்த மாதிரி இருந்திருக்குமே….
உதவி2: இந்த நாட்டிலை வயது முதிர்ந்தவர்கள் என்று ஒரு வர்க்கத்தை ஏற்படுத்தவே தேவை இல்லை கேளுங்கோ
.. ஏனெண்டால் எல்லோரும் இளையவர்கள்தான் (ஆங்கிலத்திலும் சொல்லலாம்)
உதவி 3: அது சரி

கதை
அதில் பல உண்மைகள் பொதிந்திருக்கிறது என்பது பரமேஸ் அக்காவுக்கு போக போக தெரியுது.தன்னை போலவே பல ஒரே வயதுடையவர்கள் இருக்கும் சந்தோஷமான வாழ்க்கை தெரிகிறது.எவ்வளவு வசதிகள்,வாய்ப்புகள், கூடிக்களிக்கும் சந்தோஷமான இடங்கள் என்று எல்லாமே எமக்கு கிடைக்கும் வாழ்க்கையின் உன்னதமான கொடைகள்.
உதவி: அப்ப ஒரு ஒளிவட்டம் தெரிகிறது பரமேஷ் அக்காவுக்கு…..தெரிய வேணும்… அது உண்மை தானே…….
( என்ன என்ன வெளி நாடுகளில் வயதானோருக்கு வசதிகள் இருக்கு என்பதை எல்லோரும் ஒவ்வொன்றாக சொல்லுதல்)பாட்டு
தேம்ஸ் நதியோரம் சந்தோஷம் கொண்டாடுவோம்-அங்கு
தெவிட்டாத வாழ்வு  தெம்போடு வாழ்ந்துடுவோம்
ஆனந்தம் ஆனந்தம் எம்வாழ்வின் ஆனந்தம்
பாடுவோம் ஆடுவோம் இன்பமாய் என்றென்றும்
கூட ஒருடமிருக்கு… எங்கும் வாழ தனி சுகமெல்லாம்
(தேம்ஸ் நதியோரம்)

உற்றாரும் சுற்றாரும் அக்கம் பக்கம் எல்லோரும்
பற்றேதுமில்லால் சற்றேனும் நோக்காவிடில்
பல்கோடி இன்பமிருக்கு,=எமக்கு  தனியான சுகமிருக்கு
(தேம்ஸ் நதியோரம்)

லண்டனென்ன பாரீசென்ன ஒஸ்லோவென்ன சூரிச்சென்ன
சுற்றிவரும் உல்லாச வாழ்க்கை தன்னை வாழ்ந்து காட்டி
முற்றான இன்பம் இருக்கு.. இங்கு ஒன்றாக மகிழ்ந்துடுவோம்
(தேம்ஸ் நதியோரம்)


எங்கும் சுகமிருக்கு, எந்த ஒரு சூழலையும் தனக்கெற்றபடி மாற்றி வாழும் வாழ்வு பரமேஷ் அக்காவுக்கு நன்கு புரியும்.அது வாழ்க்கையை இனிதாக்கி வாழ்க்கையை லண்டனில் கொண்டு செல்கிறா பரமேஸ்வரிஅக்கா.
இந்தக்கதை தான் எங்கள் கதை.எல்லோருக்கும் பொது வான கதை. இந்த எங்கள் கதை இதோடு நின்றுவிடாது… இன்னும் தொடரும் பாருங்கோ.
என்றாலும் எங்கள் கதை இத்தோடு நிறைவுக்குகொண்டு வருகிறோம்…

பாட்டு
பொதுவாக லண்டன் என்றால் சொர்க்கம்-அது
எங்கள் போல வந்துவிட்டால் இன்பம்
உள்ளதை சொன்னோம் வெற்றியை கண்டோம்
ஆடுவோம் பாடுவோம் கொண்டாடுவோம்
ஆனந்த சந்தோஷம் கொண்டாடுவோம்…..

இவ்வளவு நேரமும் எங்கள் வில்லிசையை கேட்ட அனைவருக்கும் எங்கள் அன்பான நன்றியை தெரிவித்துக்கொண்டு விடைபெற்றுக்கொள்கின்றேன்.

பாட்டு
வாழியவே வாழியவே வந்திருந்த அனைவருக்கும் வாழியவே
வாழியவே வாழியவே எங்கள் கதை கேட்டவர்க்கு வாழியவே
வந்தனம் வந்தனம் வந்தனம் வந்தனம் வந்தனம்……


2 comments:

Unknown said...

:)) சங்கு சுட்டாலும் வெண்மை தரும்

Bhanu said...

Nice. I like the Sense of Humor.
Best Wishes, Thinesh!