அப்பாவை பற்றிய பதிவு தினக்குரலில்

ஞாயிறு தினக்குரலில் எனது அப்பாவுடனான நட்பு,கலைஈடுபாடுகளில் போன்றனவற்றில் சிறுவயது முதல் இணைந்திருந்த அப்பாவின் நண்பர் திரு தில்லை நடராஜா அவர்கள் கடந்த வார ஞாயிறு தினகுரலில் எழுதிய பதிவு இது..மிகவும் அன்போடு தில்லை மாமா என்று நானும் அழைத்துக்கொள்வேன்.அன்போடு அப்பாவை பற்றிய பல விடயங்களையும் திரு தில்லை நடராஜா அவர்கள் பகிர்ந்துகொண்டமைக்கும் அதை பிரசுரித்த ஞாயிறு தினகுரலுக்கும் ஆசிரியர் திரு பாரதி ராஜநாயகம்அவர்களுக்கும் மிக நன்றிகளை பகிர்ந்துகொண்டு அந்த பதிவை
இங்கே பகிர்ந்து கொள்கின்றேன்.

 

ஊருக்குப் பெருமை சேர்த்த உண்மைக் கலைஞன்

எங்கள் கிராமம் உடுப்பிட்டி சிறிதாக இருந்தாலும் சிறந்த கல்விக்கூடங்களாலும் அவை உருவாக்கிய பல்துறைப்புத்திஜீவிகளாலும் ஊருக்குப்பெருமை தேடிக்கொண்டது. புலவர் வரிசையில் உடுப்பிட்டி சிவசம்புப்புலவர், இலங்கைக்கு புகழ் சேர்த்த  அணுவிஞ்ஞானி கந்தையா, பேராசிரியர்.அழகையா துரைராசா என ஒவ்வொரு துறையிலும் பலர் நினைவுக்கு வருவர்.
உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரியின் 160 ஆண்டுகள்
நிறைவையொட்டி சில தினங்களுக்கு முன் கொழும்பில் நட்சத்திர
ஹோட்டலில் பழைய மாணவர் சங்கக் கொழும்புக்கிளை ஒன்று கூடலை நடாத்திய போது நண்பர்களால் நினைவு கூரப்பட்ட கலைஞன் 'உடுப்பிட்டியூர் யோகன்' என அழைக்கப்படும் அமரர். வி.யோகராஜா. 70கள்-80கள்-90கள் என மூன்று தசாப்தஙங்களாக வில்லிசை மன்னனாக விளங்கியவர் வானம்பாடிகள் வில்லிசைக்குழுத்தலைவர்-யோகராஜா.
உடுப்பிட்டிக்கிராமத்தின் ஒரு பகுதியாகவுள்ள இலக்கணாவத்தையில் வியாகேசு-மங்கையர்க்கரசி தம்பதிகளின் மகனாக 1948ம் ஆண்டு ஜனவரி மாதம் 19ம் திகதி பிறந்தார். கொழும்பில் நடைபெற்ற ஒன்று கூடல் நடைபெற்ற திகதியும் ஜனவரி 19ம் திகதி என்பது குறிப்பிடத்தக்கது. என்னை விட வயதில் குறைந்தவனாக யோகராஜா இருந்தாலும் அபாரமான திறமைகள் மிக்க அற்புதமான கலைஞன். அவனது தாயாரும் எனது தாயாரும் ஓரே வகுப்பில் கல்வி கற்றதால்- எங்கள் வீட்டாருக்கும் அவன் செல்லப்பிள்ளை. சிறு வயதிலேயே நன்றாகப்பாடுவான்-நடிப்பான்-விளையாடுவான்.படிப்பிலும் கெட்டிக்காரன்.,சுட்டித்தனங்கள் செய்வதிலும் மன்னன்.
நினைவுப்பாதையில் திரும்பிப்பார்க்கும்போது- 1957ம் ஆண்டு கல்லூரி பெற்றோர் தினவிழாவில் ஆசிரியர் அருள் எம்பெருமான் சிறுவர்கள் பங்கேற்கும் 'புலி வேட்டை' நாடகத்தை தயாரித்திருந்தார். கதை இது தான்- ஒர் ஊரின் அருகிலுள்ள காட்டில் வாழ்ந்த புலி ஊரிலுள்ள கால்நடைகளைத்தின்றதுடன் மக்களையும் அச்சுறுத்தியது. ஊர்ப்பெரியவர்கள் ஒன்றுகூடி புலியைப்பிடித்து தருபவருக்கு பரிசு என அறிவித்தார்கள். இருவர் புலிவேட்டைக்கு புறப்பட்ட போது-காட்டிலிருந்து ஒருவன் ஒரு கூடையைச் சுமந்த படி 'புலி புலி' எனக் கத்திய வண்ணம் ஊருக்குள் வந்தான். புலிவேட்டைக்குப்புறப்பட்ட இருவரும் அவனிடமிருந்த கூடையைப் பறித்து அவனைக் காட்டுக்குள் துரத்திவிட்டு கூடையுடன் ஊர்ப்பெரியவர்கள் முன் சென்று தாங்கள் புலியைப்பிடித்துக் கொண்டு வந்துள்ளதாகத்தெரிவிக்க-எல்லோரும் மகிழ்ச்சியுடன் கூடையைத்திறந்து பார்க்கும் போது உள்ளே இருந்தது-பழப்புளி உருண்டைகள்.
சிறுவர்கள் பலர் நடித்தாலும் சிறப்பாக நடித்த யோகராஜா-'புலி வேட்டைப்பெடியன்' என அழைக்கபடும் படலம் ஆரம்பமாகியது. அன்று என்னை பாடசாலையிலிருந்து வீட்டுக்கு கூட்டிச்செல்ல வந்திருந்த தாயாரின் தந்தையாருக்கு (தாத்தாவுக்கு) அந்த நாடகம் நன்றாகப்பிடித்துக்கொண்டது. 'லகர' 'ளகர' 'ழகர' உச்சரிப்புக்கு வேறுபாடிருக்க வேண்டியதன் அவசியத்தைச்சுட்டிக்காட்டிய நாடகம் ஆசிரியருக்கு வெற்றி நாடகமாக அமைந்தது.
எனது தாத்தா சாதாரணமாக இரவுத்திருவிழாக்களுக்கு போகமாட்டார்-படிப்பு குழம்பி விடுவதால் எனக்கும் அனுமதியில்லை. ஒரு நாள் அதிகாலையில் அம்மாவிடம் வந்து சொன்னார்-'பிள்ளை—ராத்திரி இலக்கணாவத்தையிலை வேலை முடியப்பிந்தியிடுத்து- கோவிலடியாலை வாறன்-சின்ன மேளம் பார்க்க சரியான சனம். சின்ன மேளம் ஆக்களோடை சேர்ந்து புலிவேட்டைப்பெடியனும் பாடினவன்-வலு திறம்-இண்டைக்கும் இராத்திருவிழாவிலை புலிவேட்டைப்பபெடியன் பாடுறானாம். நான் இவனைக்கூட்டிக்கொண்டு போறன்.
பெற்றோரின் அனுமதியுடன் ஐந்தாம் வகுப்பு மாணவனான என்னை தாத்தா இரவுத்திருவிழா பார்க்க கூட்டிச்சென்றார். தவில் நாதஸ்வரக்கச்சேரியை அடுத்து அக்காலத்தில் 'சதுர்க்கச்சேரி' என அழைக்கப்பட்ட சின்ன மேள ஆட்டம் ஆரம்பமாகு முன்-அவர்களுடன் வந்த பக்கவாத்தியக்கலைஞர்கள் பாடுகின்றார்கள்-இரண்டு பாடலகள் முடிய சிலர் 'தாத்தாவின் 'புலிவேட்டைப்பெடியனாக யோகராஜாவை தூக்கிக்கொண்டுவந்து ஒலி வாங்கிக்கு முன் பக்கவாத்தியக்காரர் நடுவே இருத்திவிட யோகராஜா பாடுகிறான்- 'நீல வண்ணக்கண்ணா வாடா நீ ஒரு முத்தம் தாடா' அடுத்து 'நான் பெற்ற செல்வம்-நலமான செல்வம்' கைதட்டல்களுக்கிடையே நடனமாட வந்த பெண்களும் பாடலை ரசித்து யோகராஜனை தூக்கி முத்தமிட்டனர்-
சில மாதங்களுக்கு முன் 'சுப்பர் சிங்கர்' செல்லக்குரலைத் தேடும் போட்டிகளில் முதலிடம் பெற்ற ஆஜித் மற்றும் ஸ்ரீ காந்த் சிறுவர்களை பிரபல பாடகர்கள் திரைப்படக்கலைஞர்கள் அரவணைத்துப் பாராட்டி முத்தமிட்டதை தொலைக்காட்சியில் பார்த்தபோது என் மனத்திரையில் யோகராஜாவின் பாடல் காட்சிகள் ஓடி மறைந்தது. காரணம் யோகராஜாவும் சிறு வயதில் ஆஜித் போன்ற தோற்றமும் குறும்புகளும் எதுவித முன்னேற்பாடுமின்றி எந்தப்பாடலையும் பாடும் வல்லமையும் அவனுக்கிருந்தது. ஆசிரியர் அருள் எம்பெருமான் வீட்டு மேசையை மிருதங்கமாக்கி தவம் அல்லது ஐயாத்துரை தாளம் போட ஹிந்திப் பாடல் மெட்டுகளில் தமிழ் பாடல் தயாராகும்- யோகராஜா குரல் கொடுப்பான்-
மதுமதி படத்தின் ஹிந்திப்பாடல்கள்; தமிழ் வடிவத்தில் 'வா என்னாசை ராணி வந்து வாழ்வில் கூடுவாய் மாறாத கீதம் பாடுவாய்' என மாற்றம் பெற்றது.
'ஆஜாரே' ஹிந்திப்பாடல்---'மாறாதே என் மனக்கோவிலே' மாற்றம் பெற்றது-
ஒவ்வொரு வருடமும் பெற்றோர் தினம் எப்போவரும்? எம்பெருமான் மாஸ்டரின் நாடகம் எப்படி இருக்கும்  அதில் யோகராஜாவின் நடிப்பு எப்படி இருக்கும் என்பதே பலரின் எதிர்பார்ப்பு
'உலகம் போற போக்கைப்பாரு'- 'றிக்ஷோக்காரன் கனவு' இப்படி ஒவ்வொரு நாடகமும் ஐம்பது வருடங்கள் கடந்து விட்ட நிலையிலும் நினைவை விட்டகலாத நாடகங்கள்
நாடகங்கள் பார்க்கப் -பார்க்க சில பாத்திரங்களில் நடிக்க என் மனதில் எழுந்த ஆசை -'ஏன் நாடகங்கள் எழுதித்தயாரிக்கக்கூடாது?'- யோகராஜனின் திறமையையும் ஒத்துழைப்பையும் நம்பி 'சிங்கப்பூர் சிங்காரம' -; 'கண்திறந்தது' நாடகங்களை பிரதியாக்கம் நெறியாள்கை செய்தேன். எதிர்ப்புகளுக்கிடையிலும் ஏகோபித்த பாராட்டு.
ஒரு நாள் பெற்றோர் தினத்துக்கு முந்திய தினம் கல்லூரி அதிபருக்கு யாரோ ஏதோ சொல்ல எனது நாடக மேடையேற்றத்துக்கு அனுமதி தர மறுத்துவிட்டார். மாணவனான கந்தையா நீலகண்டன்  அதிபருடன் வாதித்தான். வாதம் நள்ளிரவு வரை நீடித்து அதிபர் தான் நாடகத்தை பார்த்தபின் இறுதி முடிவு எடுப்பதாக சொன்னார். அந்த நாட்களில் கந்தையா நீலகண்டன் சட்டத்தரணியாக வருவார் என எவரும் எதிர்பார்க்கவில்லை. யோகராஜாவின் பண்பட்ட நடிப்பு அதிபரின் கைகளை நாஷனல் பொக்கற்றில் நுழைத்து கை லேஞ்சியை எடுத்து கண்களைத்துடைக்க வைத்தது. அதிபரின் கண்களில் நீர் வடிந்ததை அன்று தான் பலர் பார்த்திருக்கிறார்கள்
யோகராஜா கால் பந்தாட்ட அணித்தலைவனாகவும் பாராட்டுப்பெற்றவன்- அணிவீரர்களையும் மைதானத்தையும் சூழலையும் பொறுத்து வெற்றி தோல்விகள் வந்தாலும் எல்லோரின் மனங்களையும் வென்றுவிடக்கூடிய ஆற்றல் நண்பனுக்கிருந்தது. ஆட்ட முடிவில் இடம் பெறும் தேநீர் விருந்தில் யோகராஜாவின் பாடல் கண்டிப்பாக இருந்தே ஆக வேண்டும். எத்தனை தரம் கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்க வேண்டும் போல ஆவலைத்தூண்டும் அவனது பாடல்கள்:-
'பம்பரக் கண்ணாலே காதல் சங்கதி சொன்னாளே'
'டிங்கிரி டிங்கிரிலே மீனாட்சி தங்கமே தில்லாலே'
'உனக்காக எல்லாம் உனக்காக-இந்த உடலும் உயிரும் ஒட்டியிருப்பது உனக்காக'

1963ல் அகில இலங்கை ரீதியில் நடைபெற்ற நாடகப்போட்டியில் பிரதியாக்கம் நெறியாள்கை நான் செய்தாலும் யோகராஜாவின் நடிப்பால் முதலிடத்தைப்பெற்றுக்கொண்டோம்- காலப்போக்கில் நான் உடுவை எஸ்.தில்லைநடராசாவாக அவன் உடுப்பிட்டியூர் யோகனாக மாறினான்.
பாடும் திறனால்-இயல்பாகவே நகைச்சுவையும் கை வரப்பெற்றதால் வில்லிசை செய்ய ஆயத்தமானான். அப்போது யாழ் 'ஈழநாடு;' பத்திரிகை பாமா ராஜகோபால் கலைஞர்களுக்கெல்லாம் கை கொடுப்பவர்.
யோகனின் வில்லிசை யாழ்ப்பாணத்தில் மேடையேற களமமைத்தார்- வவுனியா பொலிஸ் அலுவலகத்தில் நிர்வாகப்பிரிவுக்கு பொறுப்பாக இருந்த என்னை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அஞ்சலட்டை மூலம் அழைப்பு விடுத்தான் யோகன்- அந்த அஞ்சலட்டையை அவன் நினைவாக இன்னும் வைத்திருப்பதற்கு காரணம் தான் செய்வதெல்லாத்தையும் நியாயப்படுத்தி மற்றவர்களை ஏற்றுக்கொள்ள வைக்கும் திறமையும் அவனுக்கிருந்தது.
Police Office  என முகவரியிடாமல்  Police Station  என முகவரியிட்டதற்கு காரணம் சொன்னான்- பொலிஸ் அலுவலகம் சனி ஞாயிறு விடுமுறை தினங்களில் பூட்டியிருக்கும். பொலிஸ் நிலையம் எப்போதும் திறந்திருக்கும். வழமையாக கடிதத்தில் 'நலமறிய அவா' என எழுதுவது வழக்கம்- நலமறிய வா என்று வரும் படி அழைத்ததாக எழுதியதைப் புரிந்து கொள்ள சிறிது நேரம் எடுத்தது.  கடிதமாக எழுதி உறையில் இட்டால் படிப்பது நானாக இருக்கும்- திறந்த அஞ்சலட்டை என்றால் பலரும் சிரமமின்றி வாசித்து எனக்கு தகவலைத் தெரிவிப்பர் என்பது வென் எதிர்பார்ப்பு. அது சரியாகவே இருந்தது.பாமா ராஜகோபால் என எழுதாமல் பாமா என எழுதினால் பெண் என எண்ணி தகவல் வேகமாக பரவும் என்பதும் யோகனின் எண்ணம்.

குறுகிய காலத்துக்குள் வில்லிசை வல்லாளர்கள் திருப்பூங்குடி ஆறுமுகம்-கலாவிநோதன் சின்னமணி கணபதிப்பிள்ளை வரிசையில் இடம்பெறுமளவுக்கு உடுப்பிட்டியூர் யோகனும் வளர்சிபெற்றது குறிப்பிடத்தக்கது.
 

வில்லிசையை ஆரம்பிப்பதற்கு முன் சில பக்திப்பாடல்களை யோகன் பாடுவான். பக்திப்பாடல்கள் கேட்பதற்கென்றே வந்தவர்களும் இருக்கின்றார்கள்.
இன்னும் செவிகளில் எதிரோலிக்கும் பாடல்கள்:-
'நீ அல்லால் தெய்வமில்லை'
'நான் நினைத்தபோது நீ வர வேண்டும்'
'கற்பனை யென்றாலும் கற்சிலையென்றாலும்.


.'
1975ம் ஆண்டு உடுப்பிட்டியில் தேன் கிண்ணம் எனனும் தலைப்பில் கதம்ப நிகழ்சியை ஒழுங்கு செய்த போது வித்தியாசமான விளம்பர உத்திகளை கையாள ஆலோசனை நல்கியதும் யோகன்
தாளலய மெட்டில்-'எடி எடியே எழும்பி இஞ்சை வாடி கொஞ்சம்
ஓமோம் எங்கடை பொடியளின்ர கூத்தும் கும்மாளமும் பார்க்க வாங்கோ'
என தாளத்தோடு பாடி விளம்பரம் செய்து ரசிகர்களைத்; திரட்டியதும் யோகனே!
வழமையாக ஒலிபெருக்கி பூட்டிய காரில் அறிவிப்பு செய்வதை மாற்றி அறிவிப்பவர் காரை விட்டிறங்கி அக்கம் பக்கத்தில் உள்ளவருடன் நகைச்சுவையாகப்பேசி நிகழ்வுக்கு ஆட்களைத்திரட்டியதும் யோகனே!.
அன்று  கே.எஸ் பாலச்சந்திரனின் தனிநடிப்பு 'அண்ணை ரைற்'; ஆக மாறியது.பாலச்சந்திரன் பஸ் கொண்டக்டராக புளுகர் பொன்னையா கணேசபிள்ளை சாரதியாக மாறியதும் உடுப்பிட்டியில் தான்
எனக்கு நிரந்தர உத்தியோகம் குடும்பம் முதலில் அமைந்தாலும் அவை அவனுக்கு தாமதமாகின.
இருப்பினும் இசையாற்றல் மிக்க ஆசிரியையும் அவனும் ஒருவரையொருவர் விரும்பி இல்லறத்தில் இணைந்தது இறைவன் கொடுத்த வரம்- இசையோடு பாடும் பிள்ளைகள் கிடைத்ததும் அவன் செய்த பாக்கியம்- ஊடகத்துறையில் செல்வாக்கு மிக்க ஒருவரை மகளுக்கு மாப்பிளையாகப் பெற்றது அவர்களுக்குக் கிடைத்த வெற்றி.
என்து பெற்றோர் காலமானபோது நான் தொலைவிலிருந்து செல்லத்தாமதமானாலும் பொறுப்புணர்ந்து செயற்பட்டவன்.  எனக்காக பனையளவு செய்த வானம்பாடிகள் வில்லிசைக்குழுத்தலைவன் உடுப்பிடடியூர் யோகனின் மகன் வானொலி பயிற்சி பெற வழிகாட்டி சிறு தினையளவு செய்ய முடிந்ததும் ஒரு வகைத்திருப்தியே.
1948 ல் மலர்ந்து 1998ல் உதிர்ந்ததை நினைக்கும் போது நெஞ்சம் வருந்த விழிகள் நீரைச்சொரிகிறது.
சிறுவயதில் புகழோடு வாழ்ந்து-இளவயதில் இறைவனடி இணைந்த இளம் கலைஞன்யோகன்!
இன்றிருந்தால் உலகெல்லாம் நடைபெறும் பல நிகழ்வுகளில் வானம்பாடியாக வில்லிசைப்பான் !!

-உடுவை எஸ்.தில்லைநடராசா
நன்றி- ஞாயிறு தினக்குரல்

No comments: