உயிர்வரை இனித்தாய் உள்ளத்தின் ஆழம்வரை ஆட்சி செய்து இனிக்கும்.

புலம்பெயர் சினிமாவில் உயிர்வரை இனித்தாய்  

கடந்த ஜனவரி மாதம் 25ம் திகதி லண்டனில் (Harrow Safari) ஹரோ சஃபாரி திரையரங்கில் திரையிடப்பட்ட உயிர்வரை இனித்தாய் திரைப்படம்,
பல நூற்றுக்கணக்கான கலைஞர்கள், ரசிகர்கள் வருகையோடு நானும் 
ஒருவனாக அதை ரசித்துப்பார்க்கக் கிடைத்தது.
ஈழத்திலிருந்து திரைப்படங்கள் வெளிவந்து தடைப்பட்டு போய் மீண்டும் 
புதுப்பயணம் எடுக்கும் ஈழத்தின் கலைஞர்கள், தாயகத்திலும் புலத்திலும் சில 
பல முழு நீள திரைப்படங்களை தயாரித்து இயக்கி வெளிவரும் காலம் இது.
                                      
புலம்பெயர் சினிமாவில் கையெடுத்து எண்ணகூடிய வகையில் வெளியாகும் 
முழுநீள திரைப்படங்கள் வரிசையில்  முற்றிலும் எமது கலைஞர்களை 
உள்ளடக்கிய கலைக்குழுமமாய் அமைந்த திரைப்படம் உயிர் வரை 
இனித்தாய்.
முக்கியமான சில ஐரோப்பிய நாடுகளிலெல்லாம் திரையிடப்பட்டு நிறைவில் 
லண்டனில் திரையிடப்பட்ட உயிர்வரை இனித்தாய், அந்தந்த நாடுகளில் 
பலரது விமர்சனக்கள் உள்வாங்கப்பட்டு திருத்தியமைக்கப்பட்ட 
காட்சிகளோடு லண்டன் திரைக்கு வந்தது .அது சிறப்பும் கூட.

எல்லாம் இணைந்து அந்த திரைப்படத்தை பார்க்கவேண்டும் என்ற ஆவலை 
கலைஞர்களுக்கும் ரசிகர்களுக்கும் கொஞ்சம் அதிகமாகவே 
ஏற்படுத்திவிட்டது எனலாம்.
ஏற்படுத்தப்பட்ட ஆவல் நிச்சயம் வீண்போகவில்லை என்பதை ஆரம்பத்திலேயே குறிப்பிட வேண்டும்.

                                
நடைமுறையில் சமூகத்தை நோக்கினால் ஈழத்தவன் சினிமாவை சிறப்பாக மேலான பார்வையில் நோக்காத எம்மவர்களின் தாக்கம் இந்த திரையிடலிலும் தாக்கம் செலுத்தியிருக்கிறது என்று பொதுவில் சொல்லிவிடலாம், என்றாலும் இந்த திரைப்படத்தை பார்க்காதவர்கள் புலம்பெயர் கலைஞர்களின் அற்புதமான ஒரு மகிழ்ச்சிப்படுத்தும் சினிமா படத்தை பார்க்க தவறிவிட்டார்கள் என்று தான் அடித்துக்கூறவேண்டும்.
திரைப்படம் என்று நோக்கும்போது நேர்மறை விமர்சனங்கள் சாதரணமானவையே.அதில் உயிர் வரை இனித்தாய் திரைப்படமும் தப்பவில்லை.

                                 
புலம்பெயர் முழு நீளதிரைப்படங்கள்  காலத்தில் ஓய்ந்திருந்து மீண்டும் மீளுயிர் எடுக்கும் கால ஓட்டத்தில் வெளி வந்த சினிமா திரைப்படம் உயிர்வரை இனித்தாய்.ஆகையால் திரையின் காட்சிப்பிழைகளை ஆரோக்கியமான முறையில் நோக்கலாம் என்பது எண்ணம்.
ஆரம்பத்தில் திரைப்படத்தின் கலைஞர்களின் பெயர்களை திரையில் காட்சிப்படுத்திய விதத்திற்கு சபாஷ். அது திரைப்படத்தில் புலம் பெயர் நாடுகளின் அன்றாட வாழ்வில் மக்கள் பல இடங்களிலும் அவதானிக்கும் தளங்கள்  மற்றும் குறியீடுகளை மையப்படுத்தி அவை அமைக்கப்பட்டது சிறப்பு.தொடர்ச்சியாக திரையில் காட்சியும் கதைநகர்வும் பார்வையாளர்களை சலிப்படையதவாறு ஒளிப்பதிவும் இயக்கமும் சிறப்பாக நகர்த்தப்படிருக்கிறது. அதில் கவனமும் செலுத்தப்படிருக்கிறது என்பதை அவதானிக்கமுடிந்தது.
எனினும்  ஒரு சில காட்சிகள்  நீண்டு சென்று விட்டதாய் ஒரு உணர்வு. குடிபோதைக்காட்சிகளும் கலியாணவீட்டில் சாரியை கட்டுவதை கல்யாணம் கட்டுவது என்று நினைத்து “வாழைப்பழம்“ கதாநாயகனை அழைத்து படியேறி ஓடிவரும் காட்சி, பூங்காவில் அமைக்கப்பட்ட காட்சி போன்றவை சில உதாரணங்கள். இப்படியான சில  நீட்சிகள் நிறைவில் இவைதான் நடக்கப்போகின்றன என்பதை பார்வையாளன் சிந்தித்த பின் சொல்லி முடிக்கப்பட்ட காட்சிகள் போல் அமைந்துவிட்டதனாலோ என்னவோ அது நீட்சி போல தெரிவதற்கான காரணமாகலாம்.அது திரைக்கதையிலும் கேள்வியை முன்வைக்க காரணமாகிறது.அதில் திரைக்கதையை நகர்த்தும் தாடிவைத்த வசந்தினால் கதை நகர்வு ஓட்டத்தை சரியாக நகர்த்துவதுவதில் வெற்றிகண்டிருக்கிறார் இயக்குனர்.

                                            
இருப்பினும் இவை திரைப்படத்தை பார்ப்பதை சலிப்படைய செய்யவில்லை.
ஏனெனில் நடிகர்களின் நடிப்பினாலும் காட்சி மாற்றங்களின் வேகத்திலும்  அவை பல மறைக்கப்பட்டிருக்கிறது.கதாநாயகன் நடிப்பில் பல இடங்களில் ஒரே வகை மிகை நடிப்பு தென்பட்டாலும்  கதா நாயகனை இயக்குனர் இப்படித்தான் நடிப்பில் நகர்த்த வேண்டும் என்ற எண்ணம் கொண்டு நகர்த்தியிருப்பாரோ என்றும் எண்ணத்தோன்றூகிறது.ஆனால் முழு நீளத்திரைப்படத்துக்கான கதாநாயகனுக்குரிய பல குணாம்சங்களை வசந்த் கொண்டிருக்கிறார் என்பதை இந்த திரைப்படமூலமாக உணர முடிகிறது.
மேலும் இந்த திரைப்படத்தில் அனைத்துப்பாத்திரங்களும் அவரவருக்கு ஏற்றபடி கையாளப்பட்டிருக்கின்றமையை உணரமுடிகிறது.
கதாநயகியின் நடிப்பும் இங்கே சபாஷ் சொல்லவேண்டும்.புலம்பெயர் மற்றும் ஈழத்து சினிமாவுக்கான மிகப்பெரிய குறை சரியான கதாநாயகிகள் வாய்ப்பதுமில்லை, நின்று நிலைப்பதுமில்லை.உயிர்வரை இனித்தாய் திரைப்படம் பார்த்ததுக்கு பின்னதாக சிறப்பான கதாநாயகி கிடைத்துவிட்டார் என்ற ஒரு சந்தோஷ பெரும்மூச்சை தருகிறது.அந்த பெருமூச்சு நின்று நிலைக்கவேண்டும் என்பதும் கலைஞர்கள் ரசிகர்களின் ஆசை. நர்வினி டேரி பொருத்தமான ஒரு கதாநாயகி திரையில் நின்று நிலைக்க வேண்டும் என்பதையும் இங்கே பதிவுசெய்யவேண்டும்.
                                 
மேலும் இந்த திரைப்படத்தில் நகைச்சுவைக்காட்சிகள் வெகுசிறப்பு. புலபெயர் சினிமாவில் முழு நீள மகிழ்ச்சிப்படுத்தும் சினிமாவில் நகைச்சுவைக்காட்சிகள் சரிவர அமையமாட்டாது என்பதை முறியடித்திருக்கிறது உயிர்வரை இனித்தாய். வாழைப்பழம் நகைச்சுவை நடிப்பும் தெரிவுசெய்யபட்ட குரலும் அற்புதம்.திரைப்படத்தின் விறுவிறுப்பான ரசனை ஓட்டத்திற்கு வாழைப்பழமும் காரணம்.
எனினும் அங்கே தென்னிந்திந்திய திரைப்பட சாயல் தொட்டிருப்பது சின்னக்குறை. ஒருவருக்கு அடிக்க போய் இன்னொருவருக்கு அல்லது பொலீசுக்கு அடிப்பது,கதாநாயகனுக்காய் அவர் மாட்டுப்படுவது, அவரே அடி வாங்குவது எல்லாம் சின்ன சின்ன உதாரணங்கள்.இருப்பினும் சாரியை கட்ட கல்யாணம்  தாலியை கட்ட சொன்ன நகைச்சுவை எம் வழக்கின் நகைச்சுவையை கையாண்டது சிறப்பு.
திரு.குணபாலன்,திரு.தயாநிதி,போன்ற புலம்பெயர் அடையாள நடிகர்களுக்கான காட்சிகளை இன்னும் தந்திருந்தால் ரசித்திருக்கலாம் போலவும் இருந்தது.
திரைப்படத்தில் கையாளப்பட்ட உரையாடல் மொழி புலம்பெயர் மொழி வழக்கை கையாண்டிருந்தால் இன்னும் சபாஷ் போடமுடியும். ஏனெனில் வர்த்த சினிமா அல்லது மகிழ்ச்சிப்படுத்தும் சினிமா என்பது உரையாடல் மொழிவழக்கை மாற்றுதலினூடாக அடைந்துவிட முடியும் என்ற செய்தியை புலம்பெயர் சினிமா வளரும் காலத்திலேயே பதிவு செய்துவிடல் ஆரோக்கியமான போக்காக கருதமுடியாது.எனினும் ரசிகர்களின் ரசிப்புத்தன்மை அப்படித்தான் இருக்கிறது என்றால் அதில் திரைப்பட கலைஞர்களில் மட்டும் குற்றஞ்சாட்டிவிட்டும் இருக்க முடியாது.திரைப்படம் என்பது சமூகத்தின் கண்ணாடியாக இருக்க வேண்டும் என்று நோக்குமிடத்து இந்த விடயத்தில் படைப்பாளிகள், கலைஞர்கள்,ரசிகரகள் அனைவரும் முழுக்கவனம் செலுத்த வேண்டும் என்பதையும் பதிவு செய்யவேண்டும்.
தொழிநுட்ப முன்னேற்றமான காலகட்டத்தில் புது வேகப்பயணம்  எடுக்கும் புலம்பெயர் சினிமாவில் உயிர்வரை இனித்தாய் திரைப்படம் அதை சரியாக கையாள்வதில் கவனம் எடுத்திருக்கிறது.அதுவும் ஒளி/ஒலி பதிவு,பாடல் இசை,பின்னணி இசை என்பன அதை பறைசாற்றுகிறது.அதில் கூடியகவனமும் கூடுதல் நேரமும் செல்வழிக்கப்பட்டிருக்கிறது என்பதையும் அவதானிக்கமுடிந்தது.
கதையோட்டத்தோடு பாடல் காட்சிகள் வேறுபட்டு நிற்கவில்லை.அதுவும் காட்சி மாற்றங்களில் ஒளிப்பதிவின் முக்கியத்துவம் அதன் தொழிநுட்பத்தை சரியாக கையாண்டிருக்கின்றமை புரிகிறது.
உயிர்வரை இனித்தாய் திரைப்படத்தின் இன்னுமொரு எடுத்துக்காட்டான சிறப்பான விடயம் காட்சிக்காக தெரிவு செய்யப்பட்ட இடங்கள்.
புலம்பெயர்ந்த நாடுகளில் இப்படியான இடங்களையெல்லாம் அழகு பெற திரைக்காட்சிகளுக்காக பயன்படுத்தலாம் என்பதை பறை சாற்றுகிறது உயிர்வரை இனித்தாய்.தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் அங்கிருந்து இங்கு வந்து வழமையான பிரபல்யமான இடங்களை மட்டுமே தெரிவுசெய்து திரைக்காட்சிகளை அமைத்துவிட்டு போக உயிர்வரை இனித்தாய் அதனையும் தாண்டி பல்வேறு விதமான காட்சிகளை தெரிவு செய்திருப்பது பல வருங்கால தயாரிப்பாளர்களுக்கு எடுத்துக்காட்டு.
                                   

மொத்தத்தில் புலம்பெயர் தமிழ் சினிமாவில் மீளெடுக்கும் புதுப்பயணத்தில் உயிர்வரை இனித்தாய் திரைப்படம் வரலாற்றில் இடம்பிடிக்கிறது.பல நாடுகளிலும் திரைப்படம் வெகுசிறப்பாக ஓடியிருப்பதை அவதானிக்க முடிகிறது.அதனையும் தாண்டி அவை தொடர்ச்சியாக பல நாள்கள் ஓடவேண்டும் என்பது கலைஞர்களை தாண்டி மக்களின் வரவிலும் புலம்பெயர் தமிழ் சினிமா இடம்பிடிக்க வேஎண்டும் என்பதிலும் ஈழக்கலையை ரசிக்கின்றவர்கள் என்ற வகையில் இருக்கும் எதிர்பார்ப்பு. ரசிகர்களையும் மக்களை திருப்தி செய்யக்கூடிய வகையில் உயிர்வரை இனித்தாய் திரைப்படம் இடம்கொள்கிறது என்பதையும் யாரும் மறுக்க முடியாது.

உயிர்வரை இனித்தாய் உள்ளத்தின் ஆழம்வரை ஆட்சி செய்து  இனிக்கும்.


                                                                                     திரைப்பட நோக்கு - யோகா தினேஷ்

No comments: