சூரன் போர் - மகிழ்ந்த நினைவுகள்


கந்த சஷ்டி ஆரம்பித்துவிட்டால் எப்ப சூரன் போர் வரப்போகிறது என்பது தான் சிறுவர்களுக்கு எண்ணமாக இருக்கும்,ஏன் இளையோர்களுக்கு அந்த சூரனை தோள்தூக்கி ஆடுவதற்கு சந்தோஷமான இருப்பார்கள்,சகல கோவில்களிலும் சூரன் இல்லாவிட்டாலும் அயல் கிராமத்து இளைஞர்கள் என்று எல்லோரும் நட்புடன் உஷாராகிவிடுவார்கள்,” `முன்வீதியில் யார்தூக்குவது’,`பின்வீதியில் எப்படி சூரனை ஆட்டுவது’ ”, என்று பெரிய பெரிய திட்டங்கள் எல்லாம் போட்டு கந்தஷஷ்டி ஆரம்பமே சூரன் போருக்கான தொடக்கம் என்பது போல இருக்கும் அவர்களின் செயற்பாடுகள்.உண்மையிலும் தேவர்களிற்கு சூரனால் வதைக்கப்பட்ட கொடுமைகளால் சூரனை வதம் செய்வதற்காக ஆறு நாள்கள் கந்தசஷ்டியாகவும் இறுதி நாளில் சூரனை சங்காரம் செய்து அவர்களிற்கு விடுதலை பெற்றுக்கொடுத்த நாளையே இந்த சூரன் போராக பாவனைசெய்யும் நிகழ்வாக வருடம்தோறும் நடாத்தப்பட்டுவருகிறது,

அப்படியாக சூரன் போர் என்றால் எல்லோருக்கும் மகிழ்ச்சிதான்.இளையவர்களும் சிறுவர்களும் ஏன் பெரியவர்களும் ஆயத்தமாகிவிடுவினம்.
தாரகாசுரன்,சிங்கமுகாசுரன் மற்றும் சூரபன்மன் என்பவர்கள் முருகப்பெருமானுடன் போர் புரியப்போகிறார்கள்,அதற்கு அந்த சூரர்கள் எப்படி எப்படி முன்னேறி முன்னேறிப்பாய்ந்து முருகனிடம் செல்வார்கள் என்றும் முருகனோடு போர் புரிந்தார்கள் என்றும் அவர்கள் எப்படி தேவர்களை வதைத்தார்கள் என்பதைக்காட்ட வந்திருக்கும் மக்களை சூரர்கள் வதைப்பது போன்று உருவகப்படுத்தும் படியாக இளையவர்கள் தயார்ப்படுத்துவார்கள்.அதற்கு பழைய பழைய காலங்களில் சூரன் ஆட்டுவதில் அனுபவம் வாய்ந்த பெரியவர்கள் அவர்களுக்கு வழிகாட்டுவார்கள்,அதைவிட எங்கடை பொடியளும் சில நுணுக்கங்களை கையாள்வார்கள்.

சூரன் ஆட்டம் ஆரம்பத்தில் பறையொலி எழுப்பபடும்,அது முருகனை போருக்கு வா வா என்று அழைப்பதற்காக எழுப்பப்படும் ஒலி என்று தாத்தாமார் சின்னப்பொடியளுக்கு சொல்லுவினம்,உண்மையில் அந்தப்பறையொலியில் அந்தக்கால அரசர்கள் போருக்கு எழுப்பும் ஒலிகளை நாங்கள் சில திரைப்படங்களில் கேட்பதைப்போலவே அவர்களும் போருக்காக ஒருவகையான தாளவமைப்பில் பறையடிப்பார்கள்.அதைகேட்டுவிட்டு எங்கள் தாத்தா அது சூரன்போர் ஆரம்பமாகபோகிறது என்று சொல்வார்,அதாவது அந்த பறையொலி முருகனை சூரன் போருக்காக அழைப்பதுபோல் இருக்கும்.அதைகேட்டபடியே கோவிலுக்கும் சென்றுவிட்டால் யானைமுகத்தோடு தாரகாசுரன் முன்வீதியில் காவல் இருப்பார்.உள்வீதியில் வெகு நிம்மதியாக முருகன் பூஜைகள் நடக்கும்,மிக ஆறுதலாக தவில் நாதஷ்வர வாத்தியங்கள் முழங்க முருகப்பெருமான உள்வீதி வலம் வந்து வெளிவீதிவருவார்,அது மட்டும் தாரகாசுரன் முருகப்பெருமான போருக்காக அழைக்கும்படியாக பறையொலி ஒலித்துக்கொண்டேயிருக்கும்,

முருகனும் வந்துவிட்டார்.

இளையவர்கள் நல்ல ஒரு வேட்டியை சண்டிக்கட்டும் கட்டி ஆயத்தமாகி விடுவார்கள்.சூரனின் தலையாட்டுவதற்கு ஒருவர் சூரனுக்கு பின்னால் ஏறியிருப்பார்,அவருக்கோ சூரனின் தலையை இரண்டுபக்கமும் ஆட்டுவதுதான் வேலை,ஆனால் சூரனின் ஆட்டத்துக்கு அமைவாக அந்த தலையை ஆட்ட வேண்டும் என்பதும் ஒரு விடயம்.

சரி தாரகாசுரன் ஆட்டம்,தாரகாசுரன் யானைமுகத்தோடு மக்களை வதம் செய்ய ஆரம்பிப்பார்,அந்தப்பக்கம் செல்வதும் இந்தப்பக்கம் செல்வதும் என்று ஒரு ஆட்டம்,இருப்பதும் எழும்புவதும் பதிப்பதும் தூக்குவதும் என்று பல ஆட்டம்.என்று ஆட இறுதியில் முருகன் சங்காரம் செய்வதாக தாரகாசுரனின் தலை வெட்டப்படும்,


தொடர்ந்து சிங்கமுகாசுரன் ஆட்டம்.இங்கும் மக்களை நோக்கிச்சென்று வதம் செய்யும் ஆட்டங்கள்,ஒரு கரையாக ஓடிச்சென்று மக்கள் நடுவில் சூரனை தூக்கியாட்ட மக்கள் அல்லோலகல்லோலப்பட்டு ஓடுவதினூடாக மக்களை வதைத்ததாக உணர்த்தப்படும்.ஒருகட்டத்தில் சூரனை தூக்கி தூக்கு எறிவார்கள் இளையவர்கள், தம்பிமார் கவனம் கவனம் என்று பெரியவர்கள் பின்னுக்கே நிப்பினம்,அப்படி ஒருகட்டத்தில் சிங்கமுகாசுரனின் தலையும் வெட்டப்படும்,ஆனால் சிங்கமுகாசுரன் இறந்தாலும் மீண்டும் மீண்டும் உயிர்க்கும் வரம் பெற்றிருந்தவனாகையால் மீண்டும் சிங்கமுகாசுரன் தலைகொழுவி மக்களைவதைப்பான்,திரும்பவும் ஆட்டம் சிங்கமுகாசுரனாட்டம்.இப்படியாக மூன்று முறை உயிர்த்து சிங்கமுகாசுரனை தலை வெட்டப்படும்,

தொடர்ந்து சூரபன்மன் ஆட்டம்,
சூரன் தான் எல்லோருக்கும் அண்ணன்,அவன் தான் சிங்கமுகாசுரன் மற்றும் தாரகாசுரனை போருக்கு அனுப்பிவைத்தவன்,அவர்களின் இறப்பிற்குபிறகு போர்க்களத்திற்கு விரைந்தவன் சூரபன்மன்,பல்வேறுவரங்களையும் பெற்றவன்,அவனை அழிக்கமுடியாது என்பது எல்லாம் ஐதீகபுராணங்கள் சொல்லும்விடயங்கள்


சரி சூரபன்மன் ஆட்டம்,பொதுவாக வடக்குவீதியில்தான் எல்லாக்கோவில்களிலும் ஆரம்பிக்கும்.சூரபன்மனுக்கென்றே சில ஆட்டமுறைகளை வைத்திருப்பார்கள் இளையவர்கள்,ஏனென்றால் மற்ற அசுரர்களிலிருந்து அதாவது அவன் தம்பிமார்களிடமிருந்து வேறுபடுத்திக்காட்டவேண்டும் என்பதற்காக.அதுமட்டுமல்லாமல் சிங்கமுகாசுரன் பல்வேறுதடவைகள் உயிர்த்துவந்து முருகப்பெருமானோடு போர்புரிந்ததைப்போன்று சூரபன்மனும் பல்வேறு வடிவங்களெடுத்து போர்புரிந்தவன்,அவையெல்லாம் அந்த சூரன்போரில் உருவகப்படுத்திக்காட்டுவார்கள்.கடலாக வந்ததை நீல சேலையால் மூடிவந்தும் வானமாக வந்ததையும் நீலை சேலையால் மூடிவந்தும் பறவையாக மாறிவந்ததை பறவையின் தலையை சூரனின் தலைக்குப்பதிலாக மற்றிவந்தும் முருகப்பெருமானுடன் போர் புரிதலைக்காட்டுவார்கள்.அதற்குள் ஆட்டங்கள் பலவகையாக இருக்கும்.


முழந்தாளில் நடந்துவருவதும் அதை முருகப்பெருமான் கண்டபின் அவருக்கும் பின்னால் சென்று சுழன்று வருவதும் தூரத்துக்கே ஓடிச்சென்று மக்களை வதைத்து வதைத்து கடைசியில் முருகனுக்கு கிட்டவந்ததும் அவரை நோக்கித்தூக்கி தூக்கி போர் புரிவதாக சூரன் ஆட்டுவார்கள்.மிகவும் அழகாக இருக்கும்,இந்த ஆட்டங்களுக்கு அமைவாக பறையொலி ஒலித்துக்கொண்டே இருக்கும்,அந்த தாளக்கட்டுமானத்துக்கு அமைவாக இளையவர்கள் ஆட்டுவார்கள்.


இப்படியாக சூரன் பல்வேறுவடிவக்கள் எடுத்து போர்புரிந்தபடியிருக்க இறுதில் ஒரு மாமரமாக மாறியபடி இருக்கும் ஒரு ஆட்டம்,அந்த வேளையில் பார்க்க வேணும் ”முன்னுக்கு மாமரக்கிளை கொண்டு ஆட்டுபவரை”.பறையின் தாளத்துக்கு மாமரக்கிளையையும் சேர்த்து,அதுதான் சூரன் போரின் இறுதியாட்டம்,ஆகவே மாமரக்கிளையோடு சூரனையும் முன்னோக்கியும் பின்னோக்கியும் அங்குமிங்குமாக ஆட்டுவார்கள்,மிகவும் ரசிக்கக்கூடியாதாக இருக்கும்,இறுதியில் மாமரக்கிளை அரைவாசியாக்கப்படும்,பின்னர் சேவல் கொடியும் மயில் வாகனமும் முருகப்பெருமானிற்குக்கிட்ட வைப்பார்கள்,அது சேவலும் மயிலுமாக சூரபன்மன் மாறினான் என்றவாறான புராணக்கதையை நினைவுபடுத்தும்,அதன் பின் மக்கள் எல்லோரும் சூரனை சங்காரம் செய்துவிட்டதாக உணர்வு,இறுதியில் சங்காரம் செய்த மாவிலையை தங்களோடு எடுத்துக்கொள்வார்கள்.
இப்படியாக கந்தசஷ்டியின் காலங்கள் சூரனை சங்காரம் செய்தலோடு நிறைவுபெறும்,அந்த ஆறு நாள்களும் சூரனை வதம் செய்யப்புறப்பட்ட நாள்கள்.வதம் செய்து தேவர்களுக்கு சுகம் தந்த நாள்கள்.

நானும் இந்த சூரன் போர் எதையுமே விட்டதில்லை,எங்களூரில் தச்சந்தோப்பு சிந்தாமணி விநாயகர் ஆலயத்தில் இந்த சூரன் போர் சிறப்பாக நடைபெறும்,சின்னானாக இருந்த காலத்தில் ஒவ்வொரு தடவையும் என்ரை தாத்தாவையும் விடாப்பிடியாக கூட்டிக்கொண்டு போய்விடுவன்.ஆனால் தூரத்திலைதான் நிண்டு பார்க்கிறது பாருங்கோ,ஏனெண்டால் சூரனுக்கு பயம். நான்கு பெரும் வீதியிலை சூரனாட்டம் ரொம்ப சிறப்பாக நடக்கும்,கொழும்பிலும் பல்வேறு ஆலயங்களிலும் இந்த சூரன் போர் ஆட்டங்கள் வெகு சிறப்பாக நடைபெறுவது வழமை,இங்கிருக்கும் புகைப்படங்கள் கொழும்பு நகர் பம்பலப்பிட்டியா கதிரேஷன் ஆலயத்தில் இந்த வருடம் இடம்பெற்ற சூரன்போர் ஆட்டத்தின் ஒரு சில காட்சிகள்,சிறப்பாக இடம்பெற்றதாக அறியக்கிடைகிறது,மக்கள் எல்லோரும் கந்தசஷ்டிகாலங்களில் விரதம் அனுஷ்டித்து சூரங்காரமும் கண்டு அருள்பெற்றிருக்கிறார்கள்,நன்று

இந்த புகைப்படங்களை கரவைக்குரலுக்கு அனுப்பிவைத்த யோஹா ஆனந்தி அவர்களுக்கும் நன்றி

2 comments:

கோபிநாத் said...

தல

அருமையாக எழுதியிருக்கிங்க...இதுவரைக்கும் சூரன் சங்காரம் செய்வதை நேரில் பார்த்தில்லை.

புகைப்படங்களும் அருமை ;)

முருகா!

தங்க முகுந்தன் said...

அருமையான தொகுப்பு!

எனக்கு மிகவும் இளமையில் மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவிலில் நடைபெற்ற சூரன்போரை நினைத்தால் இப்போதும் மெய்சிலிர்க்கிறது! சகடையில் வந்த முருகன் வடக்கு வீதியின் முடிவில் அதாவது ஈசானத்தில் இறுதியாக சூரனுடன் சண்டைபிடிக்கும் அந்தக் காட்சி! அதாவது சூரன் முருகனைச் சுற்றிப் போர்புரியும் கடைசிக் காட்சியில் சகடையிலிருக்கும் முருகனும் சுழன்று போர்புரிவது மிக அழகாக இருக்கும்! இங்கும் கடந்த வருடம் சூரிச் முருகன் கோவிலில் பணிகொட்டியநேரத்திலும் சென்று வந்தேன்! இம்முறை போகச் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை! எம்மை மீள அந்த திருவிழா நினைவுகளுக்கு அழைத்துச் சென்றமைக்கு நன்றிகள்!