அதிர்ந்தது மத்திய லண்டன்,

விடைபெற்றிருக்கிறது 2011.கிழக்கு பசுபிக் பிராந்திய நாடுகள்,மற்றும் ஆசிய நாடுகளை தொடர்ந்து ஐரோப்பிய மக்களும் 2011ம் ஆண்டுக்கு விடை கொடுத்து
 2012ஆம் ஆண்டை வரவேற்றிருக்கின்றார்கள்.
தொடர்ந்து மேற்கு பசுபிக் பிராந்திய நாடுகள் வரவேற்க 
தயாராகிக் கொண்டிருக்கின்றார்கள்.
பல்வேறு மகிழ்ச்சிகள்,தாக்கங்கள், நல்ல அனுபவங்கள்,என்று யாவருக்கும் தந்திருக்கிறது 2011.
எனக்கும் இணையம்,வானொலி,பதிவுலகம் என்று பல நட்புகளை தந்தது, பிரபல்யங்களை அறிமுகம் செய்தது,பல நட்புகளை உறவுகளை அவர்களின் அன்பின் திறத்தை,ஆழத்தை உணரமுடிந்தது,எதிர்பாராத நட்புகள் உறவுகள் தேடி இணைந்தது,புலம்பெயர்ந்த லண்டன் மற்றும் ஏனைய நாடுகளிலிருந்து தேடி வந்து சந்தித்த உறவுகள்,பிறந்த நாள் சிறப்பான நாளில் அமைந்து (11.11.11)அந்த வாழ்த்துக்களை பல ஊடகங்கள் வாயிலாகவும் பகிர்ந்த உறவுகள், இன்னும் மறக்கமுடியாத பல நாள்கள் மற்றும்,தகைமை முன்னேற்றங்கள்,புதிய தேடல்கள்,பல களங்கள்,என்று சிறப்பான அனுபவங்களோடு விடைபெறுகிறது

சிறப்பான அனுபவங்களை தந்த 2011 ஆம் ஆண்டை மகிழ்வோடு விடைகொடுத்து 2012 ஆம் ஆண்டை மனம் மகிழ்ச்சிகொண்டு வரவேற்போம்.
லண்டனில் சரியாக நள்ளிரவு 12 மணியளவில் மத்திய லண்டனின் மணிக்கூட்டுகோபுரத்தின் கடிகாரம் ஒலி எழுப்பத்தொடங்கியதும் அதிர்ந்தது லண்டன்,ஒருபுறம் பல்லொளி தரவல்ல பட்டாசுகள் ஒலி எழுப்ப மறுபுறம் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் கூட்டத்தின் ஒலி,வானைப்பிளக்குமளவிற்கு Happy New Year 2012 என்ற உற்சாகமான சத்தத்தோடு(புதுவருட வாழ்த்துக்கள் 2012 என்று தமிழில் சொல்ல இவர்களுக்கு வராதே-இவர்கள் ஆங்கிலேயர்கள்) பல்லொளியோடு நள்ளிரவில் வானம் மகிழ்வுற்று வழமைபோல வரவேற்றிருக்கிறது லண்டன் மாநகரம்,
அந்த அழகை இந்த வருடம் எனக்கும் காணக்கிடைத்தது.
அந்த புகைப்படங்களை பதிவு செய்கிறேன்.

தொடர்ந்து இன்முகத்தோடு வரவேற்கும் 2012 எல்லோருக்கும் சிறப்பான ஆண்டாக இருக்கட்டும்
யாவருக்கும் மேலான நட்போடும் அன்போடும் வாழ்த்துக்களை இதயத்தின் ஆழத்திலிருந்து பகிர்ந்துகொள்கிறேன்.

இணையத்திலிருந்து சுட்ட புகைப்படம்

பிறந்திருக்கும் இந்த புதிய வருடம் 2012 யாவருக்கும் மனம் நிறைந்த மகிழ்ச்சியை கொடுக்கவேண்டும் என்று அன்போடு தனது வாழ்த்தை பதிவு செய்கிறது கரவைக்குரல்.

மனுசரை படிக்கவேணும்............தன் நிலை மறந்தாலும்!!!!

அந்த மாலை நேர பொழுதுகளில் கூடும் மாலை நேர வாசிகசாலை  குழுவின்ஓரமாகத்தான் யோகன் அண்ணாவும் உட்கார்ந்தபடியே முணுமுணுத்தபடி இருக்கிறார்.
ஊரில் உள்ள இளைஞர்களும் பெரியவர்களும் மாலை வேளையில் ஒன்றாக கூடி கதையளக்குமிடம்தான் 
அந்த மாலை நேர வாசிகசாலைக்குழு.யோகண்ணாவும் அதில் ஒரு ஒரமாக தன் பாட்டுக்கு இருப்பார்


பொதுவாக அந்த ஊரின் எங்கும் நடந்தபடி திரிவார்,அதைவிட கூடிய நேரங்கள் பேப்பர் படிப்பதுதான்
அவரின் பேச்சுக்களை கிண்டலாக அவ்வூரின் இளையவர்கள் சிரிப்பதுமுண்டு, ஏன் சில வயதானவர்களும் தான்,
ஏனென்றால் ஒரு சித்தசுவாதீனமற்றவராக அவர் வாழ்க்கையின் காலங்கள் சென்றுகொண்டிருந்தமையேதான்.
சித்தசுவாதீனம் என்று பதிய எழுத்துக்கள் மறுக்கிறது,
தன் நிலை மறாந்தாலும் அவரின் பொழுதுபோக்கு பத்திரிகை மற்றும் நூல்களை வாசிப்பது என்றால் அவர் எப்படியிருந்திருப்பார் என்பதை அவரின் நிலையிலிருந்து நினைத்துக்கூட பார்க்கமுடியாது.
பத்திரிகைகளில் படித்தவற்றை பற்றி சொல்லியபடியேயிருப்பார், உண்மையில் அவருக்கு நேரமறிந்து எதையும் சொல்ல அவருக்கு தெரியாது.
அதுவும் படிக்கின்ற மாணவர்களை கண்டுவிட்டால் .......ம்ம்ம்ம்ம்ம்
அதுதான் அவ்வூரின் இளைஞர் வட்டங்களை கண்டால், தான் படித்த 
கல்வியைபற்றியும் அதை பயன்படுத்திய முறை பற்றியும் சொல்வார்.கணித பாடத்தை கற்ற அவர் கணிதத்தின் சூத்திரங்களையும் செய்முறைகளையும் நினைவில் உள்ளவற்றை நினைவுபடுத்துவார்.
ஹாட்லிக்கல்லூரியின் காலங்களில் அவர் படித்த காலங்கள் அதிபர் பூரணம்பிள்ளை அவர்கள் இருந்த காலம்.
கல்லூரியில் அதிபர் பூரணம்பிள்ளை அவர்களுக்கு இருந்த மதிப்பு அதுமட்டுமல்லாமல் அவர் அதிபராக இருந்து பணி செய்தமையை உலகம் பாராட்டியும் இருந்தமை கல்விச்சமூகத்தினர் பாமர சமூகம் என்ற வேறுபடுகளின்றி கூடுதலானவர்கள் அறிந்த ஒரு விடயம்.
ஹாட்லிக்கல்லூரியின் பொற்காலங்களில் அதிபர் பூரணம்பிள்ளை அவர்களின் காலமும் ஒன்றாகும்.
அவர் காலங்களில் தான் படித்த பெருமையை அடிக்கடி யோகன் அண்ணா நினைவு படுத்துவார்.
அதுவும் அங்குள்ள இளைஞர்களில் யாராவது ஹாட்லியில் படித்துவிட்டால் அதை நினைவுபடுத்தியபடியேயிருப்பார்.இப்படியான விடயங்களை யாராவது வெள்ளைக்கார உடை அணிந்து சொல்லியிருந்தால் யாராவது கைகட்டியிருந்து கேட்டிருப்பார்கள்.ஆனால் யோகன் அண்ணாவின் வாயில் இருந்து வந்ததால் தான் எல்லோருக்கும் சிரிப்பு.ஆனால் தன் நிலை மறந்திருந்து தனது அருமையான பெருமையான நினைவுகளை மீட்டும் கணிதம் சார்ந்த விடயங்களில் தனது நினைவுகளை வைத்திருக்கும் அவர் பெருமை என்பது தனியானது தான்,
என்றாலும் இளைஞர்களுக்கு பகிடி விடாமலும் மற்றவர்களை கும்மி அடிக்காமலும் இருக்கமுடியாதே..
ஒரு நாள் வாசிகசாலை மாலைக்குழுவின் ஓரமாக தன் நிலையில் தன்பாட்டிற்கு முணுமுணுத்தபடி உட்கார்ந்து இருக்கிறார் யோகன் அண்ணாவும்

‘என்னவாம் புதினம் பேப்பரிலை யோகன் அண்ணா?
 பார்த்துமுடிஞ்சுதோ பேப்பர் எல்லாம்” செல்லத்தம்பியின் செல்ல பகிடி போல இருந்தது கேள்வி
”அந்த ஆள் நாலுதரம் பேப்பரெல்லாம் வாசிச்சு முடிஞ்சிருக்கும்” அங்கிருந்து வந்த இன்னுமோர் நக்கல்.

”பேப்பரோ முந்தி எல்லாம் சண்டை இல்லை நாங்கள் எல்லாம் ஹாட்லிக்கு நடந்து போவம்,சீனப்பாவின் தட்டிவானிலும் போவம்,இப்ப பேப்பரில் சண்டை தான் கூடிபோச்சு” யோகன் அண்ணா கொஞ்சம் பொருத்தமாகவும் தன் நினைவுகளை மீட்டி பொருந்தமில்லாமலும் பதிலை சொன்னார்.
”சீனப்பா” அந்தக்காலம் வடமராட்சியில் பாடசாலை சேவை வாகன சேவை செய்துவந்தவர்,மிகவும் பிரபல்யமாக அவரின் வாகன சேவை இருந்தமையை இங்கு குறிப்பிடலாம்,

”தொடங்கிட்டார் மச்சான்,தான் நடந்த கதை சொல்லுறார்” என்றபடி கண்ணைக்காட்டி நக்கலடித்தபடி பேச தொடங்கினார்கள் இளைஞர்கள்.
ஹாட்லியை பற்றி தொடக்கினால் அல்லது ஏதாவது கணிதத்தை பற்றிக்கேட்டால் அவரை தொடர்ந்து பேசவைக்கலாம் என்று எண்ணினார்கள். வேறு என்ன பேசவைத்து கிண்டல் பண்ணி அந்த மாலை நேரத்தை கழித்துவிடலாம் என்பது தான் அந்த இளஞர்களின் எண்ணம்.

”யோகண்ணா ஹாட்லிக்கு சீனப்பாவின் தட்டிவான் நேரத்து போய்விடுமோ” சீனப்பாவின் தட்டிவானின் வேகம் சீனப்பா ஓட்டும் வேகத்துக்கும் நக்கல்
”பூரணம்பிள்ளையிடம் அடிவாங்கினீங்களா? எத்தனை அடி வாங்கினீங்கள்?”  என்றவாறு இளைஞர்கள் சிரித்தபடியே.
அவர் படித்த அதிபருக்கும் அவருக்குமான இன்னுமோர் நக்கல் 

தன்னைச்சாடி நக்கல்கள் வருவது கண்டு யோகண்ணாவின் மனம் கொதிக்கத்தொடங்கியது, 
தன்னிலை மறந்தவர் என்ற நிலையிலும் நக்கல்களை அடையாளம் காணுகிறார் யோகண்ணா.
மனங்குமுறியபடி

”என்ன நாலுபோட்டுத்தரவோ...........”கோபத்தோடு கேட்கிறார்.
ஒரு கணம் பயந்தனர் இளைஞர்கள்.அதுவும் தன் நிலை மறந்தவர்கள் அடிக்கும் போது அதன் வலியும் நோவும் அதிகமாகத்தான் இருக்கும் என்பது அவர்களுக்கு தெரியும்.
தொடர்ந்தார் யோகண்ணா
”என்ன பூரணம்பிள்ளை என்பவர் என்ன இலேசாகப்போய்விட்டாரோ,”
”அவர் நடை உனக்கு தெரியுமா? உடை உனக்கு தெரியுமா?
என்ன பின் பக்கமா நாலு போட்டு தரவோ”

”இந்த ஊருலகம் எல்லாம் அவரை தெரியும்”
”எப்படி படிப்பிச்சவர் தெரியுமோ”
ஆஆஆ பின்வளமா நாலு போட்டுத்தரவோ”

 நாலு மனுசரை படியுங்கோ,சரியா படிக்கவேணும் .........ஆஆஆஆஆ
என்று என்று கோபத்தொடு திரும்ப திரும்ப சொன்னார்.


 தன் நிலை மறந்து இந்த ஊரிலும் அந்த வாசிகசாலையிலும் தன் நாள்களை கழித்துக்கொண்டு திரிந்து செல்லும் யோகண்ணா சொன்னவை தான் அவை.
குளிரென்றாலும் சூடென்றாலும் எங்கெங்கு இடமிருக்கிறதோ அங்கெல்லாம் தன் நித்திரை பொழுதுகளை கழித்து வரும் யோகண்ணா சொன்ன அறிவுரைகள் தான் அவை. 
”நாலு போட்டுத்தரவா நாலு போட்டுத்தரவா” என்று அடிக்கடி கேட்கும்போது இளைஞர்களுக்கோ அல்லது அங்கு கூடி நின்றவர்களுக்கோ அப்படியான பேச்சுகள் அவரை சித்த சுவாதீனம் அற்றவராக தெரிந்திருக்கும்,அதனால் தான் அவர்களுக்கு அவருடைய பேச்சுக்கள் சிரிப்பை கொடுத்திருக்கலாம்,ஆனால் அவர் தன் பாடசாலை அதிபர் ஆசிரியர்களில் வைத்திருந்த உண்மையான மரியாதையையும் அதை எப்போதும் நினைக்கின்ற பண்பும் என்றும் மறக்காதவராய் இருக்கின்றது என்றால் யார் இங்கு தன் நிலை மறைந்தவர்கள்?
என்றோ படித்த கணிதத்தின் சூத்திரங்களை நினைவோடு நினைவாக ஞாபகப்படுத்துவாரென்றால் அவரின் கல்வியறிவின் ஆழம் அன்றையகாலத்தில் எப்படி இருந்திருக்கும் என்ற கேள்விகள் எல்லோர் மனதிலும் எழுந்திருக்கவேண்டும்,
”மனுசரை படியுங்கோ” என்பதில் வந்த ஆழமான உட்கருத்து எல்லோராலும்
சித்தசுவாதீனமற்றவரென்று அடையாளப்படுத்தியவரிடம் இருந்துவருகிறதே  அடையாளப்படுத்த முடியாதவர்களாய் வாய்விட்டு சிரிக்கமுடிந்ததே தவிர 
அவரின் வசனங்களில் இருந்த ஆழமான உணர்வுகளை
புரிந்துகொள்ளவில்லை.
உண்மைதான்,கோட்டுசூட்டு வெள்ளைக்கார உடை அணிந்து உள்ளொன்றோடு புறம் ஒன்று சொன்னால் ஏற்றுக்கொள்ளும் இந்த மனிதம் யோகண்ணையின் உண்மையான உணர்வை அதிலிருக்கும் உண்மை அர்த்தத்தை புரிந்துகொள்ள மறுக்கிறது,
மனிதர்களைப்படிக்கவேணும்!!!!!!!! 

பூவரசம் பூவே நலமா

பூவரசம்பூவே நலமா
பூவாக அழகான இதழ் விரித்து
பூவுக்குள் இராஜ்ஜியம் அமைத்து
பூவரசனான கதை மொழியாயோ


தூரத்திலிருந்து ஒரு குரல்
பூவரசம்பூவே நலமா

சூரியவொளிவீச்சின் கதிர்களின் நடுவில்
மஞ்சள் புன்னகையாய் மலர்ந்து
மருதனிலங்களின் காலை நிலவான
தாயகத்தின் அழகிய மலரே நீ நலமா

கவிஞர்களின் கவிப்பொருளாக நீயில்லை
காதலர்களின் அன்பு மலராகவும் நீயில்லை
பூஜைகளில் உனக்கென்று இடம்காணவில்லை
பூத்தபூவிலும் மணம்பரப்பவில்லை
பூவுக்கொரு அரசனான பூராயம் மொழியாயோ
பூவரசம்பூவே நலமா


சொந்தமுகவரிகள் விட்டு
புலத்தில் பலமுகவரிகள் எழுதி
பலமான வாழ்வை தேடி ஓடி நடைபோடும்
சொந்தங்கள் தேடும் உண்மை வாழ்க்கையின் நடுவில்
தாயக நிலமதுவில் காணுமிடமெல்லாம்
தாராளமாய் உன் நிழல்கள்
சுமைகளை இறக்கிவைக்கும்
சுகமான உன் தென்றலை நினைவில் அழைக்கிறது........

தட்டைவடைக்கு உன் இலைகள்
தூக்கித்தரும் அந்தமாதிரி
நாவுக்கு இசைவான ருசியாக...

வாத்தியார் வகுப்பறையில்
மேசைமேலே காத்திருக்கும்,
மாணவனாய் வளரும் காலம்-உன்
சுள்ளித்தடி சுணாய்க்கும்!
நீள்தடி முதுகுக்கு அடையாளம்

பூவரசம் பூவே நலமா

உன் இலைகளால் ”பீப்பி” செய்து ஊதியகாலங்கள்
வேலியில் கதியாலாய் வரிசையாக அழகுபெற்ற நினைவுகள்
வயலுக்கு உரமாக உன் இலைகளின் பயன் தரு சிறப்புக்கள்
வண்ணமான வண்ணாத்துப்பூச்சிகளின் ஆரம்பமே
மசுக்கொட்டிகளின் தங்குமிடமாய் உனிலிருந்தது......
அவையிறங்கும் உன் தண்டிலிருந்து ஓவ்வொன்றாக
நினைக்கும்போதே எங்கோ கடிக்கிறது............
பூவரசம் பூவே நலமா

பூவுக்குள் அரசாளும் பூவரசு
உன் அரசுரிமை உனக்கிருக்கிறது
பெயரோடும் ஒட்டியிருந்து ஒப்புவிக்கிறாய்!
தாயகத்தின் அடையாளத்தில் நிலைபெறு உரிமை உனக்கிருக்கிறது
தறித்தாலும் உன் வேர்களாலும் கதியால்களாலும் நீ வாழ்வாய்
புலமெங்கும் சென்றாலும் திரிந்தாலும்
அழகுறு மலர்களை எங்கெங்கும்
கண்ணாரக்கண்டு மகிழ்ந்தாலும்-உன்
முகமதில் மஞ்சொளிவீசும் அழகினில்
அகமது மகிழ்ந்திடும்-என்றென்றும்

பூவரசம் பூவே நலம் தானே,


படங்கள்- இணையம்

வந்தியண்ணைக்கு பிறந்த நாள்- பரிசுக்கான கேள்வி உள்ளே

உலகப்பிரபலமான நாளாக 11.11.11 என்ற நாளை எதிர்பார்த்து உலகமே தயாராகும் வேளை பதிவுலகப்பிரபலம்,பதிவுலக தங்கம் என்று அண்மையில் வரவேற்கப்பட்டவரும் வந்தியதேவன் என்ற பதிவுத்தளத்துக்கு உரித்தானவரும் வந்தி என்று அன்போடு அழைக்கபடுபவருமாகிய மயூரன் அவர்களின் பிறந்த நாள் இன்று.

தாயகத்தில் தன்னுடைய பிறந்த நாளை 09.11.11 அன்று வெகுசிறப்பாக கொண்டாட தயாராகிவருகிறார்.அண்மையில் ஐக்கிய ராஜ்ஜியம் லண்டனிலிருந்து கொழும்பு சென்ற வேளையில் மிகப்பெருமெடுப்பில் மாலைகள் சகிதம் வரவேற்கப்பட்டு பிறந்த நாள் கொண்டாட்டங்களுக்காக தன்னுடைய வாழ்க்கையின் முக்கியமான கட்டத்தில் வட்டத்தில் தயாராகின்றார்,


அந்தவகையில் பதிவுலக நண்பராக என்னோடு தாயகத்திலேயே அறிமுகமாக இருந்தாலும் லண்டனில் தான் அவரை சந்திக்கும் வாய்ப்பு எனக்குகிட்டியது.சந்தித்ததில் மகிழ்ச்சியும் கொண்டேன்.வந்தி மாமா என்று என்போன்ற பதிவுலக பிள்ளைகளால் அழைக்கப்படும் மயூரன் அண்ணா அவர்களுக்கு என் அன்பான பிறந்த நாள் வாழ்த்துக்களை பதிவு செய்கிறேன்,இனி அவர் பவுண்ட்ஸ்களாக அனுப்பினால் பார்ட்டி தான்.மயூரன் அண்ணாவோடு பழகிய நாள்களில் புகைப்படக்கருவி பதிவுசெய்துகொண்டவை கீழே.சீரியஸ் ஆகக்கூடாது,ஆனால் கடைசிக்கேள்விக்கு சீரியஸ் ஆகுங்க.முந்திக்கொண்டு வாருங்கள்.சிம்பிளாக யோசியுங்க,பரிசு ரெடியாக இருக்கிறது


கண்ட முதல் நாள் போட்டோவுக்காக சிரிச்ச போது


போனில் அண்ணை பிசியா அல்லது அப்பதான் அழைப்பு வந்ததா? கேள்விக்கு என்ன விடையாக இருக்கும்?????????????????????????????????கேள்விக்கு விடை தெரிஞ்சிருக்குமே>>எப்பவுமே என்று நினைக்கிறீங்களா?
,இப்பவுமா அப்படித்தானா என்று பாருங்க கேளுங்க !!
மத்திய லண்டனின் பல உல்லாசபயண மையங்களுக்கு சதீஸோடு பயணம் இரவு வேளையில்!!!!!!


சாக்கோட்ட வீரனாக தவண்டடிச்சு ஓடி முதற் பரிசு வாங்க மறுத்த போது???????!!!!!!!!


அண்ணை உடற்பயிற்சி மற்றும் பணக்கார விளையாட்டுக்காக மைதானத்தில் !!!!1


மிகச்சிறந்த பாடகனாக அறியப்பட்டு பஸ்வண்டியில் பாடல் வாயே திறக்காமல் பாடியபோது!!!!!

தாயகத்தில் வழங்கபட்ட அமோக வரவேற்புவிழாவில்!!!!
கையசைத்து ஏற்றுக்கொள்ளும் காட்சிகல்லூரியின் நிகழ்வு ஒன்றின் போது வந்தவர்களுடன் அன்பாக எடுத்த போட்டோ!!!!!!!இனி பரிசுப்போட்டிக் கேள்விக்கான புகைப்படம்இதிலை யார் தள்ளி நின்றது???
சைந்தவியா???வந்தியாரா?மிகப்பெரிய கேள்வி>>>>
அது பரிசுக்கான முதல் கேள்வி
வந்தியத்தேவருக்கு எத்தனையாவது பிறந்த நாள்?
அது அடுத்த கேள்வி
விடை தெரிந்தோருக்கு பிறந்த நாள் பரிசுக்குவியல்,பதிலோடு முந்துங்கள்
மீண்டும் இன்றைய நாளில் பிறந்த நாளை கொண்டாடும் வந்தியண்ணைக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் பகிர்ந்துகொள்கிறது கரவைக்குரல்

11/11/11 தயாராகும் உலகம்

ஒவ்வொரு நாளும் விடிந்து அது நிறைவடவதற்குள் எத்தனை விடயங்கள் எத்தனை செயற்பாடுகள் நடக்கிறது முடிகிறது,அவற்றுள் சில உலக வரலாற்றினுள் இடம் பிடித்துவுடுவதுமுண்டு,
இதைவிட வருகின்ற நாள்களே விசேடமாகி அவற்றுள் நாங்களும் இடம்பிடித்துவிட வேண்டுமென்று தயாராகின்றது உலகம்,
அந்த வகையில் இந்த வருடத்தில் அமைந்த நாள்களில் ஒன்று 11.11.11.
அதுவும் அந்த இருபத்து நான்கு மணித்தியாலத்தினுள் வரும் 11:11 நேரம் என்பதும் சிறப்பான நேரமாக பார்க்கபடுகிறது.உண்மையில் இதே பதினோராம் திகதி நவம்பர் மாதம் 1111ம் ஆண்டு எல்லாவற்றையும் விட சிறப்பான நாளாக இருந்திருக்கும்,என்றாலும் அந்த நாளில் அமைந்திருந்த தொழிநுட்ப வளர்ச்சியின் தன்மை இப்படியான எதிர்பார்ப்பை அந்த காலங்களில் வாழ்ந்த மக்களிடம் ஏற்படுத்தியிருக்குமா என்பது கேள்வியாகவே இருக்கிறது.அது மட்டுமல்லாமல் இந்த வருடத்தில் ஏனைய வருடங்களை விட நான்கு நாள்கள் சிறப்பாக பார்க்கபட்டது,ஏனெனில் ஆண்டில் இலக்கங்கள் ஒரே இலக்கத்தில் வருவதனாலாகும்.11/11/11 என்ற நாளைவிட (1/1/11),(11/1/11),(1/11/11)ஆகிய ஏனைய மூன்று நாள்கள் தான் அவை.எதுவாயிருப்பினும்  நூற்றாண்டுகள் கடந்து வருகின்ற நவம்பர் மாதம் 11ம் திகதியை ஒரே இலக்கதொடர் நாளாக பார்க்கிறது உலகம்,அதனை அவரவர் நிலைகள், சிந்தனைகள், செயற்பாடுகளுகமைவாக சிறப்போடு எதிர்கொள்ள தயாராகின்றனர்.
இலக்கம் பதினொன்றிற்கும் சிறப்புகள் பல இருக்கிறது.எண்ணியல் பார்வையில் ஒரே இலக்கமாக அதுவும் ஆரம்ப இலக்கமான ஒன்றாக அமைந்திருப்பது விசேட தன்மையை கொண்டிருப்பதாக சொல்லபடுகிறது,அதற்கான ஏற்பாடுகளில் சோதிட வல்லுனர்களும் தயாராகிவிட்டார்கள்,சொல்லியும் விட்டார்கள்,மிகப்பலமான நாள் 11.11 என்று அடித்துக்கூறி இந்தவருடம் அமைந்திருக்கும் அந்த நாள் மிகச்சிறப்பு என்று அதுவும் வெள்ளிக்கிழமை வந்திருப்பது அதை உணர்த்தி நிற்கிறது என்று சோதிட வல்லுனர்கள் கூறுகிறார்கள்.
இப்படி சோதிட எண்ணியல் வல்லுனர்கள் ஒருபுறம் தயாராகின்றனர்,
அதைவிட திரைப்பட உலகில் சிலம்பரசனின் நடிப்பில் வரும் ஒஸ்தி திரைப்படம் தீபாவளி வெளியீடாக வரும் என்றூ கூறி தொடர்ந்து 11.11 அன்று வருவதாக கூறி பின்னர் 18ம் திகதியாகி இப்போது 25ம் திகதியை நோக்கி சென்றுவிட்டது,

இதே போலத்தான் தனுஷின் நடிப்பில் வெளிவர இருந்த மயக்கமென்ன திரைப்படம் 11.11 மட்டுமே வெளிவர வேண்டுமென்று அடம்பிடித்து இப்போது அதுவும் 25ம் திகதிவரை சென்றுவிட்டது.இதுவும் தீபாவளிக்குத்தான் வெளிவருவதாக இருந்தது.என்ன இது நம்மவர்கள் ஆச்சே,இதுதான் நேரம் என்றால் அதே நேரத்துக்கு வந்துவிடுவார்களே.

ஆனால் உலகமெங்கும் எதிர்பார்த்த ஜாக்கிஷானின் 100ஆவது திரைப்படமாகிய 1911 உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் 11/11/11 அன்று மு.ப 11.11 வேளையில் வெளிவர இருக்கிறது. சீனாவில் வரும் கொடுங்கோலாட்சி,அது 100 ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததாக கதை,அதை எதிர்க்கிறான் கதா நாயகன்,அதுவே 1911, ஜாக்கிஷானின் 100ஆவது திரைப்படமாகையால் உலகமே எதிர்பார்க்கிறது.


அதைவிட 11.11.11 என்ற திகதியை குறித்து விறுவிறுப்பான ஆங்கில திரைப்படமும் தயாராகிறது,கடந்த வருடம் 10.10.10 அன்று வெளிவந்த அதே திகதியின் பெயருடையதான திரைப்படம் வெளிவந்திருந்தது,அழகிய வண்ணாத்துபூச்சிகளும் சின்னஞ்சிறிய குட்டிசுட்டி பெண்ணின் நடிப்போடும் பல நடிகனடிகைகளின் சிரிப்போடும் வெளிவந்த அந்த திரைப்படத்தின் முன்னோட்டம் திரைப்படத்தின் சந்தோசமான தன்மையை வெளிப்படுத்தியிருந்தது,ஆனால் 11.11.11 என்ற திரைப்படத்தின் முன்னோட்டம் விறுவிறுப்பாகவும் அதேவேகத்தோடும் பல எதிர்பார்ப்புகளுக்கிடமாகவும் அதன் முன்னோட்டம் அமைந்திருகிறது,லண்டனெங்கும் விளம்பரப்பலகைகள் 11.11.11 என்ற முகத்தை காட்டியபடியேயிருக்கிறது.

இப்படியெல்லாம் 11,11,11 என்ற திகதிக்கான எதிர்பார்ப்புகள் அந்த நாளிற்கான விசேட தன்மையை கூறிநிற்கிறது.
அதுமட்டுமா இன்னொருபுறம் உலக அழகி ஐஸ்வர்யா,ஐசு என்று அன்பாக சொல்வார்கள் ரசிகர்கள்,


அவர் இப்போது ஏழு நட்சத்திர மருத்துவமனையில் இருக்கிறார்,ஐஸ்வர்யாவிற்கும் அபிசேக்பச்சனுக்கும் குழந்தை பிறக்கபோகிறது,அதுவும் 11.11.11 அன்று தான் பிறக்க வேண்டும் என்று வேண்டுகின்றனர் குடும்பத்தினர்.அதற்கான திகதி அந்த நாளுக்குரிய வாரமாக இருந்தாலும் அறுவை சிகிச்சை மூலம் 11ம் திகதியே பிறக்க வைக்க வேண்டும் என்று விரும்புகின்றனராம்.அபிசேக்பச்சன் படப்பிடிப்பு எல்லாம் அவசர அவசரமாக முடித்துவிட்டு வீட்டுக்கு வந்திருக்கிறாராம்.அதைவிட ரசிகர்கள் பட்டாளம் ஒருபுறம் அந்த திகதியே குட்டி அபிசேக் பிறக்க வேண்டும் என்று பந்தயம் கட்டுகிறார்களாம்.உலக அழகிக்கு உலகவிசேடதினத்தில் தான் குழந்தை என்றுதான் பந்தயம் கட்டுகிறார்கள்.இப்படி உலகப்பிரசித்தமாக 11.11.11 ஐ கொண்டாட தயாராகின்றது உலகம்.
அதைவிட இந்தியாவில் மட்டும் 3000க்கும் மேற்பட்ட கல்யாண கொண்டாட்டங்களுக்கான முன்பதிவு,
பல ஒன்றுகூடல்கள் உலகளவில் ஏற்பாடு என்று அதற்கான எதிர்பாப்பை அதிகரித்திருக்கிறது,ஆனால் இவையெல்லாம் வர்த்தக நோக்குடைய சிந்தனை என்பதையும் மறுப்பதற்கில்லை,என்றாலும் உலகளவில் பல துறை சார்ந்தவர்களையும் கவர்ந்த எதிர்பார்ப்புகள் நிறந்த ஓர் தினமான வருகிறது 11.11.11.பிரபலங்களுக்கு பிரபலம் மற்றும் பிற பலம் சேர்க்கும் நாளாக வருகிறது,

யாரும் பிரபலங்களை மிஸ் பண்ணியிருக்கலாம்,உங்களுக்கு ஞாபகம் வராமலாபோய்விடும். பிரபலங்களுக்கே பிரபலமாகவும் பல பிரபலங்களை நினைவூட்டும் 11.11.11 உலக வரலாற்றில் தனக்கும் ஒரு தனியாய இடத்தை தக்கவைக்கிறது

ஈழ சிந்தனை மோக அரசியல் கலாச்சாரமா? தாயக உணர்வு சந்திப்பா?


அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகளுக்கான விஜயத்தினை தொடர்ந்து லண்டனுக்கும் விஜயம் செய்திருக்கிறார்கள் கூட்டமைப்பின் உயர்மட்ட பிரதிநிதிகள். கனேடிய மண்ணில் புலத்து மக்களால் ஏற்பாடு செய்யபட்ட நிகழ்வை தொடர்ந்து லண்டனிலும் 06/12/2011 ஞாயிற்றுக்கிழமை நடத்த ஏற்பாடாகியிருக்கிறது,நேற்று சனிக்கிழமை காலை லண்டனுக்கு வருகை தந்திருக்கிறார்கள்,லண்டனில் ஞாயிற்றுக்கிழமை சிறந்த ஒரு ரெஸ்ரோரண்டில் மக்களை சந்திக்கப்போகிறார்கள்,புலம்பெயர் மக்களுடன் சந்தித்து அவர்களின் கருத்துகளும் அதேபோல் தமிழ் மக்களின் பாராளுமன்ற பிரதிநிதிகளுடைய கருத்துக்களை மக்களும் அறிந்து இதனூடாக உலகஅரங்கில் தமிழின இன உணர்வு செயற்பாடுகளை விரிவுபடுத்த மேற்கொள்ளப்படும் செயற்பாடாக இதை நோக்க முடிகிறது,புலம்பெயர் ஊடகங்களுக்கும் அழைப்பினைவிடுத்து மேற்கொள்ளப்படுதல் அந்த செயற்பாடுகளினுடைய உந்து சக்தியாக இருக்கும்,பொதுவாக தாயக மக்கள் கூடியளவு இருக்கும் கனடா,இங்கிலாந்தில் லண்டன்,அவுஸ்ரேலியா போன்ற இடங்களில் இப்படியான செயற்பாடுகள் புலம்பெயர் தேசத்திலுள்ளவர்களை ஒழுங்குபடுத்தி ஒருங்கிணைக்கலாம்,அந்த அடிப்படையில் தெரிவுசெய்யபட்டு சந்திப்பு மேற்கொள்ளப்படும் இடங்கள் வரவேற்கக்கூடியவை,

மக்களோடு கலந்துரையாட கனடாவில் ஏற்பாடு மிகப்பெருமெடுப்பில் மேற்கொள்ளப்பட்டது,சினிமா நடிக நடிகைகளையும் சின்னத்திரை நடிக நடிகைகளையும் அழைத்து அவர்களை சந்திக்க வைத்து அவர்களுடன் புகைப்படம் எடுக்க டிக்கடுக்கு கட்டணம் அறவிட்டு நடாத்தபடும் நிகழ்ச்சி அண்மையில் கனடாவில் நடைபெற்றபுகைப்படங்கள் ஆரம்ப உரை முதல் இராப்போசன விருந்து வரை வெளியாகியிருந்தது,தாயக மக்கள் மிகச்சிறந்த அரசியல் வெற்றியோடு இருப்பதை உணர்த்தும் விதமாக அந்த சந்திப்பு அமைக்கபட்டதா என்ற கேள்வி எல்லோர் மத்தியிலும் எழுந்திருந்தமை அவதானிகள் மத்தியில் அறிய முடிகிறது,தாயக மக்களின் வாழ்வாதாரம்,பொருளாதார அபிவிருத்தி மிகவும் பின் தங்கிய நிலையில் இருப்பதாக பாராளுமன்றங்களிலும் அரசியல் மேடைகளிலும் முழக்கமிடும் அரசியல் வாதிகள் இப்படியான ஐந்து நட்சத்திர உபசரிப்பை மறுத்திருக்கலாமே என்ற கேள்வி தாயக உதவிக்கரம் நீட்டும் சிந்தனைவாதிகள் மத்தியில் எழுந்திருக்கிறது,இந்திய சினிமா மற்றும் கலை நட்சத்திரங்களோடும் புகைப்படம் எடுப்பதற்கு முந்திக்கொள்வதுபோல் ஈழத்தினுடைய அரசியல்வாதிகளும் அதற்கு வழிசமைக்கிறார்களா என்ற கேள்வி தான் அது,
அதைத்தான் ஈழசிந்தனை மக்களுடைய உணர்வாகியிருக்கும் காலகட்டங்களில் அதனை பிரதிநிதித்துவபடுத்தும் மக்கள் பிரதிநிதிகள்  அவர்களை சந்திப்பதனை ஒரு வாய்ப்பாகக்கொள்ளவைக்கவும் மக்கள் அவர்களை சந்திப்பதானால் அதை ஏங்க வைக்கும் ஒரு செயற்பாடாகவும் கொண்டு வந்து ஈழ சிந்தனை மோக அரசியல் கலாச்சாரத்தை கொண்டு வர முனைகிறார்களா என்ற கேள்வியை எழுப்புகின்றார்கள்,அல்லது இல்லை இல்லை இது முற்றுமுழுதான தாயக உணர்வு சந்திப்பேதான் என்று அறுதியும் உறுதியுமாக உரைக்கிறார்களா?
பொதுவாக மக்களிடம் தேர்தல்காலங்களில் ஒவ்வொரு வாக்குகளுக்காகவும் வீடேறி கையேந்திவிட்டு பாராளுமன்றங்களில் நட்சத்திர உணவுகளை மிகக்குறந்த விலைகளில் உண்டு மகிழ்கிறார்கள் என்ற கருத்து ஏலவே மக்கள் மத்தியில் இருக்கிறது,அது எந்த இனத்தை சார்ந்த இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பொருந்தலாம்,
அதுஅப்படியிருக்க இப்படியான மிகப்பெறுமதியான டொலர்களையும் பவுண்ட்ஸ்களையும் கொட்டி ஏற்பாடு செய்யும் சந்திப்பு அவசியமா? சாதாரண மக்களும் கூடி மக்கள் பிரதி நிதிகளை சந்திக்ககூடிய ஏற்பாடுகள் அமையாதா என்பது எல்லா மட்டத்தினரும் சிந்திப்பதாக அறியமுடிகிறது.
வந்திருக்கும் பிரதிநிதிகளின் உரையின் பின் உணவு உண்டு அந்த புகைப்படங்களையும் பிரசுரித்து இந்த சந்திப்புகளினூடாக என்ன விடயத்தினை தாயக மக்களுக்கு கொண்டு செல்லபோகிறார்கள் என்ற தெளிவான அறிக்கையினை மக்கள் பிரதிநிதிகள் வெளியிடுவாரா? புலம்பெயர்மக்களின் உணர்வுகளையும் தெளிவான சிந்தனைகளைகளையும் கருத்துகளையும் இந்த சந்திப்புகளினூடு அறிந்துகொள்ளலாமென்றால் சந்திப்பிற்காக கட்டணம் செலுத்த முடியாதவர்களின் கருத்துகளை எப்படி அறிந்துகொள்வது என்ற கேள்வி அவதானிகள் மத்தியில் எழுகிறது,எங்கள் மக்களுக்காக குரல் கொடுப்பவர்களை உபசரிக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்துச் சொன்னால் அது நன்றிக்கடன் தெரியாத தமிழனாகிவிடுவான், ஆனால் நட்சத்திர சந்திப்பு வைப்பதுதான் தாயகம் நோக்கிய சிந்தனைவாதிகளின் கேள்வியாகிட்டது.மிகக்குறந்த செலவோடு ஏராளமான மண்டபங்கள் இருக்க அதுவும் டிக்கட் கட்டண அறவிட்டோடு வரும் போது அந்த கேள்வி எழுவது நியாயமாகிறது,புலத்தில் தமிழர்கள் எத்தனையோ பதவிகளிலும் உயர் நிலைகளிலும் இருப்பதால் மண்டபங்களுக்கான தொகை சிறிய தொகை என்பதால் அது உயர் நிலை தமிழர்களுக்கு மிக இலகு,சரி வருகை தரும் மக்களின் எண்ணிக்கையை மட்டுபடுத்த இப்படியான நிலையை கையாண்டிருக்கலாம் என்றால் சிறிய மண்டபத்திற்கான செலவோடு மிகுதிப்பணத்தை வந்திருந்த பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கொடுத்து அந்த பணத்தை தாயக மக்களுக்காக பயன்படுத்த ஆவனசெய்திருக்கலாமே என்று கேட்கிறார்கள் உதவிக்கர சிந்தனைவாதிகள்.மாறாக பல்துறை சார்ந்தவர்களை நிகழ்விற்கு அழைத்து அந்த சந்திப்பில் இணைத்திருக்கலாமே என்ற கருத்தும் நிலவுகிறது.இவையெல்லாம் கவனத்திலெடுக்கபடவேண்டிய விடயங்களாகின்றன,
இன்று நடபெறவுள்ள மண்டபத்தின்
உத்தியோகபூர்வ இணயத்தளம்
இங்கு இணைக்கபட்டிருக்கிறது.

என்றாலும் தாயக மக்களுடைய செயற்பாடுகளில் புலம்பெயர் மக்களுடைய சிந்தனைகளும் அவசியமாகிறது என்பதும் அவர்களின் ஒத்துழைப்பு வெற்றியோடுதான் எதுவும் ஆகலாம் என்பதை இந்த சந்திப்புகள் உலகத்திற்கும் உன்னிப்பாக அவதானிப்பவர்களுக்கும் சொல்லபடுகின்ற செய்தியாகிறது,
தொடர்ந்து வருகின்ற திங்கட்கிழமை நாளில் பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரமுகர்களையும் சந்திக்க ஏற்பாடு செய்யபட்டிருக்கிறது,கூட்டமைப்பாக உலக அரங்கில் தமிழர்களின் உரிமை சார்ந்த விடயங்களை சகல நாடுகளின் பிரமுகர்களுக்கு கொண்டு செல்வது சிறப்பானதே, தனித்துவத்தோடு தகுந்த முடிவுகளை எடுத்து சிறப்பான முன்னேற்பாடான செயற்பாடுகளுக்காக துணிச்சலான இப்படியான பாராளுமன்ற உறுப்பினர்கள் வாழ்த்தபட வேண்டியவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.ஆனால் அதையே சந்தர்ப்பங்களாக்கபடக்கூடாது என்பதும் மக்களுடைய சிந்தனை.புலத்துமக்களின் வாய்களில் உச்சரிக்கப்பட்ட மற்றும் ஊடகங்களின் கருத்துகளின் தொகுப்பாக இந்த பதிவு வருகிறது,உங்கள் கருத்துகள் ஆரோக்கியமாக பதிவு விதிமுறைகளுக்குட்பட்டு நாகரீகமாக இருப்பின் எல்லாமே பிரசுரிக்கபடும்,என்னங்க ரொம்ப வெயிட்டா இருக்கு, எண்டாலும் இதையும் சாப்பிட்டு பார்ப்பம்


போட்டோவுக்கு சிரிச்சே ஆகவேணும்,வெப்சைட்டிலை வரும் போது நல்லா இருக்கும்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!1


ஓஓ டயபிற்றிக் பிறசர் இருக்கிறவர்களுக்காக கொஞ்சம் உப்பு உறைப்பு கொழுப்பு எல்லாம் குறைச்சுத்தான் சமைச்சது, நல்லா இருக்கோ??????????????
ஓஓஓஓஒ திறமா இருக்கு!!!!!!!!!!!!!!


இதென்ன இது அந்த காலம் தந்த ரோசாப்பூ இப்பவும் வச்சிருக்கிறீங்களோ????
வாடாமல் இருக்கு????எத்தனை மேடை ஏறியாச்சு?அரசியல் பேச்சு எண்டால் கலக்கல் தான்!!!!!!


அது சரி எப்ப சாப்பாடு??


என்ன இருந்தாலும் ஒரு குழம்பு இருக்க வேணும், கண்டு பிடிச்சு தந்திட்டீங்கப்பா!!!!!!!!

புகைப்படங்களுக்கான பின்னூட்டம் சற்று நகைச்சுவைக்காகத்தான்,போட்டொ எடுக்கும் போது என்ன பேசிக்கொண்டு இருந்திருப்பார்கள் என்று யாருக்கு தெரியும்.

வாடி வாடி வாடி கீயூட் பொண்டாட்டி-தனித்துவ தமிழ் உணர்வுக்காதல்

திரைப்படங்களின் வருகைக்கு அதேவேகத்தில் அதற்கான ஐந்து அல்லது ஆறு பாடல்களின் வருகை அதற்கான வெளியீடு விழா எடுப்பது என்று நீளுகிறது திரைப்படத்திற்கான் எதிர்பார்ப்பு,
வேகமாக வரும் பல்வேறு நடிகர்களின் திரைப்படங்களின் வரிசையில் தரணியின் இயக்கத்தில் தமானின் இசையமைப்பில் சிம்புவின் நடிப்பில் வெளிவர இருக்கும் ஒஸ்தி திரைப்படப்பாடல்களும் அண்மையில் வெளியாகியிருந்தது,
இசையமைப்பாளர்கள் தங்கள் இசையில் பாடல்கள் வரும் போது தாங்களும் ஒரு பாடலை பாடிக்கொள்வதுபோல இப்போ நடிகர்களும் தங்களின் பாடல்களை இணைக்கும் காலம் வந்துவிட்டது,அதேபோல பாடல்வரிகளையும் எழுதி அசத்துகிறார்கள்,
அசத்தல் என்றால் சொல்லி வேலையில்லை, வட்டார வழக்கு சொல்லில் "அந்த மாதிரி" என்று தான் சொல்லவேண்டும், எந்த மாதிரி என்று வாசித்தால் புரியும், இலக்கிய ரசனை விஞ்சியபடி இலக்கண அமைவு மிஞ்சியபடி கவி நடை அமைந்திருக்கிறது,தமிழில் தெரிந்தெடுக்கப்பட்ட பாமரர்களுக்கும் விளங்கிக்கொள்ளப்படக்கூடிய சொற்கள் தெரிவு செய்யப்பட்டிருக்கிறது.
விடயத்தலைப்பில் வந்த ”கியூட்” அதை தெளிவாக்கியிருக்கும்,அதுவும் வாசித்தால் புரியாமலா போகப்போகிறது.

அந்த இலக்கிய,கவிதை இலக்கண ரசனை மற்றும் மரபுகளுக்கு உட்பட்ட பாடலை பாருங்கள்,பாடியும் பாருங்கள்,
”எவண்டி உன்னை பெத்தான் பெத்தான்” என்ற நவீனத்துவ மொழி நடையோடு வெற்றித்திரைப்படப்பாலை எழுதியும் பாடியும் மிகபிரபல்யமாகி அடுத்தபாடல் தருகிறார் சிலம்பரசன் சிம்பு


அடி வாடி வாடி வாடி வாடி கியூட் பொண்டாட்டி- நான்
தாங்க மாட்டன் தூங்க மாட்டன் நீ இல்லாட்டி


ஒருதடைவை கூப்பிட்டால் சொன்ன இடத்துக்கு காதலி வரமாட்டாள் என்பதால் தான் ஆரம்பத்திலேயே நாலு தடைவை கூப்பிட்டிருக்கிறார் கவிஞர்,கியூட் கடினமான தமிழ்,சரியான விளக்கம் நீங்க எப்படியும் கொள்ளலாம்

அடிவாடி வாடி வாடி வாடி வாடி கொட் பொண்டாட்டி- நான்
தாங்க மாட்டன் தூங்க மாட்டன் நீ இல்லாட்டி


வரவில்லை என்று சொன்னான் எப்படி தன்னால் தன் மனதால், தன் இதயம் அதை ஏற்காது என்பதை காதல் உணர்வோடு சொல்கிறாராம்.காதல் உணர்வில் தான் மனைவியை ஹொட் என்று சொல்லியிருக்கிறார்,சூடு என்றால் எல்லாமே சூடு தான்.

பொண்டாட்டி அடி நீதானே- என் ஸ்வேட்டே
ஐ லவ் யூடே பாட்டி தேவையில்லாம பாட்டி


பாட்டி என்றால் இனிப்பு(ஸ்வீட்) இருக்கும் தானே,சரி சரி ஸ்வீட் தொடக்கம் எல்லாம் உற்சாகமாக்க இருக்கும் என்று தானே சொல்ல வேணும்,அதேபோல் ஐ லவ் யூ என்று சொல்கிற மனைவியும் இருக்க வேண்டும்(பொண்டாட்டி என்பது கடுந்தமிழ்,அதன் விளக்கவுரை மனைவி என்பதாகும்,)


”நல்ல கணவனா நா இருப்பே- ஒரு
உத்தமனா நடப்பேன்- உன்
தொல்லையெல்லாம் பொறுப்பே-உன்
கஸ்டத்தை நான் குறைப்பேன்- உன்னை
கண்கலங்க விட மாட்டேன்”


கணவனே கண்கண்ட தெய்வம்,மனைவி அமைவதெல்லாம் இறைவ்ன் கொடுத்த வரம் என்றெல்லாம் சொல்ல கேள்விப்படிருப்பீர்களே, அந்த இறைவன் கொடுத்த வரமாகிய மனைவிக்கு நல்ல உத்தமனாக இருப்பதாக சொல்கிறார் கவிஞர்,இந்தக்காலம் ஆடவர்கள் உத்தமர்களாக இல்லாத காலம் என்று அனுபவத்தோடு உணர்ந்திருக்கிறார் கவிஞர்,அதனால் தொல்லை குறைத்து கஸ்டங்களை குறைத்து கண்கலங்க விட மாட்டேன் என்று சத்தியம் செய்கிறார் மனைவியிடம்

"பொண்டாட்டிய்ய்ய் பொண்டாட்டிய்ய்ய்ய் பொண்ட்டிய்ய்ய்ய்........"

இடையிடயே கூப்பிட்டு கூப்பிட்டு தான் சொல்ல வேணும் என்பதை நினைவு படுத்துகிறார்,பொதுவாக சொல்வது காதில் ஏறுவதில்லை என்பதை சொல்லாமல் சொல்கிறாரோ தெரியாது.

கோப்பி கொடுத்து காலையிலை நானே உன்னை எழுப்பிவிடுவேன்
சமைக்க தெரியாதென்னா நானே சமையல் செஞ்சு உனக்கு ஊட்டி விடுவேன்
உன்னை நான் என்னைக்குமே சந்தேகப்பட மாட்டேன்
என்னை நீ சந்தேகபடும் மாதிரி நடக்கமாட்டேன்
உன் உயிராய் நானிருப்பேன்
என் உயிராய் உன்னை நினைப்பேன்
என் நெஞ்சிலை உன்னை சுமப்பேன்
உன்னை டெயிலி நானும் ரசிப்பேன்
உன் நிழலை போல நானிருப்பென்

(ஆ வாடி வாடி வாடி....)

ஆணுக்கும் பெண்ணுக்கும் அரைக்கு அரைவாசி உரிமை வேண்டும் என்று சொல்வார்களே,கணவனுக்கு காலை வேளை கோப்பி கொடுத்து நித்திரையாலே எழுப்புவார்கள் என்று தானே திரைப்படங்களில் பார்த்திருக்கிறோம்,அதற்காக காதலிக்கு காலை வேளை கோப்பி கொடுத்து எழுப்புகிறார் கவிஞர்,அது தான் ஆணுக்கு பெண்ணுக்கும் 50/50,
அது மட்டுமல்லாமல் இந்தக்காலம் பெண் பிள்ளைக்கு சமையல் தெரியாதே கல்யாணம் கட்டிற வயதாகிவிட்டதே என்று கவலைப்பட வேண்டாம் என்பதை அடுத்த வரிகள் சொல்கிறது,சமையல் தெரியாது என்றால் சமைச்சு ஊட்டியும் விடுவாராம் காதலன்,
சந்தேகம் கூடாது கூடாது என்று தானே அன்றிலிருந்து இன்றுவரை சொல்கிறார்கள்,அது மீண்டும் இந்த பாடலில் கவிஞர் கொண்டு வருகிறார்.
அடுத்த வரிகளும் வழமையான (சென்ரிமென்ற்) காதல் வரிகள்

(என் பொண்டாட்டி பொண்டாட்டி பொண்டாட்டி பொண்டாட்டி
வேணாம் வைப்பாட்டி வைப்பாட்டி வைப்பாட்டி வைப்பாட்டி
பொண்டாட்டி பொண்ட்டாடி டி டி ஏய்.........


இடைக்கிடை கூப்பிட வேண்டும் என்று தானே கவிஞர் ஆரம்பித்திலிருந்தே கூப்பிட்டு கூப்பிடு சொல்கிறார்,அல்லது கேட்காமலல்லவா போய்விடும்,
அதுவும் கேட்காமல் விட்டால் கொஞ்சம் கூட்டி சொல்ல வேணும்,இப்ப கேட்டிருக்கும் என்று நினைத்து கவிதையை தொடர்கிறார்

ஹேஹே...........
உனக்கு முன்னாடி சத்தியமா என் உசிரு என்னை விடாது.....
ஏன்னா நான் போயிட்டா உன்னை யாரும் விதவையா பாக்ககூடாது...
என்னை விட்டன் உன்னை எவண்டி பாத்துப்பான்...
நல்லா பாத்துப்பேன் என்னு சொல்லி பொய்யா நடிப்பான்
ஒரு தகப்பன் போல இருப்பேன்
ஒரு தாயை போலவும் இருப்பேன்
உன் நண்பன் போல நடப்பேன்
அந்த கடவுள் போல காப்பேன்
உன் குழந்தையாவு நான் புறப்பேன்


காதலிக்கு முன்னாலே உயிர் இருக்காது என்று கூறி காதலியின் ஒரு பயங்கர நிலைமையை காட்டுகிறார்
அடுத்து கணவனாக இருந்து சொல்லக்கூடாத உச்சரிக்ககூடாத வசனத்தை சொல்லி கேட்கிறார் கவிஞர், நான் இல்லாவிட்டால் எவன் உன்னை இப்படி யெல்லாம் பார்த்துக்கொள்வான் என்று கேட்கிறார், இதயத்தில் குடி கொண்ட காதலன் அல்லது காதலி வேறொருவனோடு அல்லது ஒருத்தியோடு பொருத்திப் பார்ப்பார்களா என்ன?
எவன் தன்னை போல பார்ப்பான் என்று கேட்டிவிட்டு மீண்டும் உணர்வை தட்டுகிறார்,
தாய் தந்தை நட்பு கடவுள் குழந்தை என்று ஒவ்வொரு பாசப்பிணைப்போடும் காதலை கொண்டுவருகிறார் கவிஞர்.காதல் ரசனை மிஞ்சிய இலக்கிய ரசனை சொட்டும் பாடலில் பாசப்பிணைப்பு இல்லாவிட்டால் பாடல் சப்பெண்டு போய்விடும்தானே,
அதனால் தான் இந்த உணவுகளை பாடல்வரிகளில் தட்டியிருக்கிறார் கவிஞர்.

அடி வாடி வாடி வாடி வாடி கியூட் பொண்டாட்டி
நான் தாங்க மாட்டன் தூங்க மாட்டன் நீ இல்லாட்டி
அடி வாடி.. அடி வாடி...என் ஹோட் பொண்டாட்டி
நான் தாங்க மாட்டன் தூங்க மாட்டன் நீ இல்லாட்டி டீ டீ

மீண்டும் அழைத்து அன்போடு கவர்ச்சியாக அன்போடு விழிக்கிறார் கவிஞர்,தாங்கமாட்டாராம்,தூங்கமாட்டாராம்,ஏனென்றால் ஹொட் தானே, ”அப்படி சூடு” என்று அடிக்கடி சொல்வாரே ரஜனிகாந்த் ஒரு திரைப்படத்தில்,அதுவும் சூடு அதேபோல் காலைவேளை தேநீரும் சூடுதானே,அதுவும் ஹொட்(சூடு) தான்,
தொடர்ந்து மனைவியை தொடர்ந்து வாய்விட்டு கூப்பிட்டு பாடல் நிறைவடைகிறது ஐலவ் யூ என்ற காதல் உணர்வோடும் வரியோடும்.

என் பொண்டாட்டி பொண்டாட்டி டீய்ய்ய்ய்ய்ய்ய்
ஐ லவ் யூ டீ பாட்டீ டீய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்
என் பொண்டாட்டி பொண்டாட்டி டீய்ய்ய்ய்ய்ய்ய்ய்
எனக்கு தேவையில்லை வைப்பாட்டீ டீ டீய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்
ஐ லவ் யூடி பொண்டாட்டிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்


தமிழனின் இலக்கிய வளர்ச்சியில் நவீனத்துவதோடு வந்த பாடல் இது,விளக்கவுரையினால் அதன் தனித்துவத்தை உணர்ந்திருப்பீர்கள்,இதன் மூலம் தமிழ் தெரிந்தவர்கள் எல்லாம் கவிஞராகலாம் என்ற அடிப்படை உண்மையை பறைசாற்றியிருக்கிறது, தனித்துவமான தமிழ் என்றும் எல்லோருக்கும் புரிகின்ற தமிழ் என்றும் உலகமெங்கும் பரவியிருந்து இப்படி பேசினால் தான் சிறப்பு என்று போற்றப்படுகின்ற ஆங்கிலதமிழ் அரைகுறையாக தெரிந்தாலும் பல பாடல்களை எழுதமுடியும் என்பதை அறுதியும் உறுதியுமாக கூறுகிறது இந்த பாடல்.
கடைசிகாலத்துக்கு யாழ்ப்பாணத்துக்கு தான்

ஊருலகம் எல்ல்லாம் சுத்தி கடைசி காலத்துக்கு உழைத்த காசோடு நம்ம மண்ணுக்கு போகவேணும் என்று சொல்வது போல இந்த விடயத்தலைப்பு அமைந்தவுடன் ஓடொடி வந்தவர்கள் எல்லோருக்கும் நல்வரவு.
இப்படித்தான் முந்தி ஒரு காலத்திலே ”இது வந்திட்டுதோ” என்று விடியற்காலையில் உதயன் பத்திரிகையை பார்ப்பது வழமை,வந்துவிட்டது என்றால் வணிகர்கள் லொறியோடு போவார்கள்,பயணிகள் வருகைக்காக காத்திருக்கும் மக்கள் வாகனத்தோடு அல்லது குறிப்பிட்ட தன் உறவினர் வந்துவிட்டாரா என்று தேடிப்போவர்,”இண்டைக்கு வரவில்லையாக்கும்” என்று எண்ணி ஏமாற்றத்தோடு வீடு திரும்புவர் பலர், சிலர் அறுபட்ட இழுபட்ட பயணிகள் பையையும் தூக்கிக்கொண்டு ”இண்டைக்கு ஒரு மாதிரி அம்மா வந்திட்டா செல்வச்சந்நிதியானுக்கு காவடி எடுக்க வேணும் “ என்று எண்ணியபடி போவர்,

இப்படி பல கதைகளை நினைவுபடுத்தும் இந்த கப்பல்,லங்கா முடித கப்பலுக்கு வயசு வந்திட்டுது,


கடைசி காலத்துக்கு எல்லா பழசும் யாழ்ப்பாணத்துக்குத்தான் எண்டது போல லங்கமுடித அதன் கடைசி காலம் வரை ஓடி முடித்திருக்கிறது,””இன்னும் ஓட விடலாம்" என்றால் அதற்கு வயசு போய்விட்டதாம்,எல்லா இடமும் ஓடி கடைசிகாலத்துக்கு திருகோணமலை யாழ்ப்பாணத்துக்கு ஓடி களைச்சு இப்போது கப்பல் நங்கூரமிடும் காசு கப்பல் ஓடுவதற்கான காசை விட ரொம்ப கூடவாம்,சர்வதேச விதிமுறைகளுக்கு உட்பட்டு ஓடுவது என்றால் கப்பலை திருத்த அதற்கும் ரொம்ப காசு,எல்லாம் யோசித்துவிட்டு கப்பலை இரும்புக்கு விற்றாவது உழைக்க எண்ணியிருக்கிறது துறைமுக அமைச்சு.

ஒருகாலம் இந்த கப்பலுடைய பெயர் யாழ்ப்பாணம்,திருகோணமலை,கொழும்பு எல்லாம் எல்லோர் வாயிலும் பெரும்பாலும் உச்சரிக்கபடுகின்ற பெயர்,இதனால் உழைத்தவர்கள் பலர்,பாராளுமன்ற உறுப்பினர் ஆனவர்கள் சிலர்,இவர்கள் மக்கள் பிரதிநிதிகள்,கஸ்டபட்ட மக்கள் பலரோ பலர்.
கப்பல் ஓட ஓட சரியான இருக்கை இல்லாமல் கப்பலின் அங்கு இங்கும் உட்கார்ந்த படி வாந்தி எடுத்து எடுத்து கடைசியாக போய்சேருவோமொ என்று களைத்து விழுந்து யாழ்ப்பாணத்தை அல்லது திருகோணமலை வந்து சேர்வர் பயணிகள்.கப்பல் வருகைக்காக இரு கரைகளிலும் வரிசையில் பல நாள் காத்திருக்கும் மக்கள்.வந்தவுடன் முண்டியடித்து ஏறுவதும் அதற்கு கிடைக்காமல் ஏமாற்றத்தோடு திரும்பும் மக்கள்,


பின்னர் உதயன் பத்திரிகையை அடிக்கடி திருகோணமலையில் இருந்து கப்பல் வெளிக்கிட்டுவிட்டதா என்று பார்த்து மீண்டும் வரிசைகாக ஒடுவது,வெளி நாடுகளுக்கு போகும்போது பயணம் அனுப்புவது போல இந்த பயணத்துக்கும் சொந்தக்கள் நண்பர்கள் கூடி வழியனுப்பி வைப்பர், இந்த முறை என்றாலும் வெற்றியோடு சென்று வா என்று பல முகங்கள் பேசும்,போர்க்களத்துக்கல்லவா போகிறார்கள்?? ம்ம்ம்ம்ம்
ஓடும்போது கொண்டு செல்லும் பயணப்பையைவிட தரப்பட்ட பாஸ் எடுக்கப்பட்டதா என்று அடிக்கடி திருப்பி திருப்பி பார்ப்பது அதில் இருக்கும் பதட்டம் பயணித்தவர்களுக்கு மட்டுமே வெளிச்சம்.
பத்தடிக்கு ஒருமுறை பயணப்பை பரிசோதனை,எடுப்பதும் வைப்பதுமாக கப்பல் ஏறினாலும் சங்கடம் தான்.உணவுப்பொருள்கள் கொண்டு வரும் கப்பலில் பயணிகளும் ஏற்றப்பட்டால் எப்படி இருக்கும்?
சரக்கு கப்பல் என்றால் இருக்கைகள் இல்லை,இந்த வேலையில் சர்வதேச விதிமுறைகளுக்கு உட்பட்டுத்தான் இந்த கப்பல் ஓடியதா என்ற கேள்வியை முன்வைக்கிறது.
எத்தனை மாணவர்கள் பட்டதாரிகளின் வேலை வாய்ப்புகள் இழக்கபட்டிருக்கிறது.பல்கலைக்கழக அனுமதிகள் பிந்தியிருக்கிறது,விரிவுரைகளுக்கு பிந்தி சென்ற மாணவர்கள் அங்குள்ல விரிவிரையாளர்களுக்கு காலம் பிந்தி வருவதற்கான விளக்கத்தை சொல்வதற்கு படும்பாடு,

இதை விட லங்கா முடித கப்பல் வந்துவிட்டால் ஊரிலை சங்க கடையில் வரிசை,கடல் தண்ணி பட்டு விட்டதாம் என்று சீனி அரைகுறையாக இனிக்கும்,கோதுமை மாவின் நிறம் மாறியிருக்கும்,என்றாலும் வாங்கியேதான் ஆகவேண்டும்,வாங்காவிட்டால் சாப்பாட்டுக்கு எங்கு போவது? அதுவும் ஒரு காட் இருக்கிறது,அந்த காட்டுக்கு 2 அல்லது 1 கிலோ,அதைவிட யாழ்ப்பாணத்து உற்பத்தி சோப் போட்ட மக்களுக்கு கொழும்பு சோப் ஒன்று அல்லது இரண்டு கிடைக்கும்,அதுவும் வாங்க வேண்டும்,\இதைவிட கிழிஞ்ச கிழிக்கபட்ட தபால்கள் வரும் காலம்,தபால் கொண்டுவரும் அன்பர் அந்த ஊரவராக தான் இருப்பார்,அவருக்கு அந்த ஊரவர்கள் எல்லாம் நட்பாகத்தான் இருப்பார்,கடிதங்களை அடுக்கியபடி “அது கடல் தண்ணி பட்டுப்போச்சு,போன கிழமை மழைதானே,அது தான் இதெல்லாம் கிழிஞ்சுபோச்சு”என்று கொடுப்பார்,ஒவ்வொருகடிதமாக இணைத்து வாசித்து தூரதேசத்து மகன் அல்லது மகளின் நிலைமையை அறிவர் குடும்பத்திலுள்ளோர் எல்லோரும்.

இப்படி எத்தனையோ கதைகள் சொல்லும் இந்த லங்கா முடித கப்பல்.கஸ்டங்கள் கொடுத்ததும் லங்கா முடித்ததான்,அங்கும் இங்கு கடக்க உதவிசெய்ததும் லங்கா முடித்ததான்,இருந்த கை பிழையோ அல்லது ஓடியது பிழையோ தெரியாது,லங்கா முடித ஓடி ஓய்ந்திருக்கிறது,கடைசிகாலத்துக்கு யாழ்ப்பாணத்துக்கு ஓடி இப்ப இரும்புக்கு தயாராகிரது,.இரும்புக்கு போனாலும் அந்த இரும்புக்காசு யாருக்கோ போனாலும் யாழ் மக்களின் மன இருப்பில் இருந்து நீங்காது இந்த லங்கா முடித்த, நினைவுகளால் என்றாலும் நிஜத்திலும் எல்லாம் கடைசிகாலத்துக்கு யாழ்ப்பணத்துக்கு தான்

மாணவர்களின் வளர்ச்சியே பேரின்பம் என்பார் ஆசிரியர் வல்லிபுரம்

ஆசிரியர் என்பதற்கு இலக்கணமாய் வாழ்ந்து உலகமெங்கும் தன் மாணவர்களின் சிறப்பான வளர்ச்சியால் பெருமையுற்று எம்மோடு வாழ்ந்த ஆசிரியர் வல்லிபுரம் அவர்களை இழந்துவிட்டோம் என்பது மனதுக்கு வேதனையளிக்கிறது,செய்யும் தொழிலே தெய்வம் என்று வாழ்ந்து கொண்டு "ஆசிரியர்" என்பவர் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதற்கு இலக்கணமாக  வாழ்ந்து காட்டியவர் தான் ஆசிரியர் சின்னையா வல்லிபுரம் அவர்கள்.ஆரம்பக்கல்வியே வாழ்க்கையில் அடிப்படைக்கல்வி என்பது யாவரும் அறிந்ததே.அந்த கல்வியை மாணவன் எவ்வாறு பெற்றுக்கொள்கின்றானோ அதுவே அவனை சீரிய பாதையில் வழிகாட்டிச்செல்லும்  என்பது உண்மைதான்.அதை ஆசிரியர் செவ்வனே அறிந்து மாணவர்களை வழிநடத்துவார்.
சிறுபராயம் முதலே மாணவர்கள் பணிவுடனும்,பண்புடனும் அதேவேளை போட்டி மனப்பானமையுடனும் கல்வி கற்க வேண்டும் என்ற எண்ணத்தோடு கல்வி கற்பிப்பவர் ஆசிரியர் அவர்கள்.ஆசிரியர் ஐந்தாந்தர புலமை பரீட்சையில் மாணவர்களை தயார்ப்படுத்தும் பெரும் பணியினை கையிலெடுத்து அதில் வெற்றியும் கண்டவர் ஆசிரியர் வல்லிபுரம் அவர்கள்.
பாடசாலை பரீட்சைகளுக்கு கூடுதலான புள்ளிகளை பெறவேண்டும் என்பதைவிட ஆசிரியர் அவர்களின் பரீட்சையில் மாணவர்கள் கூடுதல் புள்ளிகள் பெற மிகவும் பிராயத்தனதொடு கற்பார்கள் என்றால் ஆசிரியரின் முக்கியத்த்துவம் உங்களுக்கு புரியும்.
ஆசிரியர் சின்னையா வல்லிபுரம் அவர்கள் அதிபராக பணிசெய்து வந்திருந்தாலும் ஆசிரியராக இருந்து கிடைக்கும் மகிழ்ச்சியே தனி என்று சொல்பவர்.
மாணவர்களின் மகிழ்ச்சியில் அவர் மகிழ்ந்திருப்பார். ஆசிரியரின் மாணவர்கள் பல்வேறு நாடுகளிலும் மிகச்சிறந்த பதவிகளில் கடைமை ஆற்றிக்கொண்டிருக்கின்றார்கள்.அந்த பெருமை அவருக்கு இறுதிக்காலம் வரை நிலைத்திருந்தது.

நான் அறிந்த வகையில் அதிபராக பணிபுரிந்த காலங்களில் கரணவாய் மணியகாரன் தோட்டம் வித்தியாலயத்தின் காலங்கள் அவரின் பொற்காலம் என்றுதான் சொல்ல வேண்டும்.அவ்வூர் மக்களோடு மக்களாக சேர்ந்து பாடசாலையின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றியவர் ஆசிரியர் வல்லிபுரம் அவர்கள்.
ஆசிரியராக அதிபராக சேவை உள்ளம் கொண்டவராக இருந்து 2008 ம் ஆண்டு ஆவணி மாதம் இரண்டாம் தேதி தனது அறுபதாவது வயதில்  தனது அதிபர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றிற்றுக்கிறார்.ஓய்வு பெற்றாலும் தனது ஆசிரியப்பணியை தொடர்ந்தும் செய்துவந்தார்.கற்பித்து மாணவர்கள் அடையும் வளச்சியில் அதில் அவர்கள் பெறும் மகிழ்ச்சியில் தானும் 
மகிழ்வுறுவார்.அன்றய காலங்களில் வடபுலம் யாழ்ப்பாணம் கரவெட்டிக்கு செல்லும் சந்தர்ப்பம் எனக்கு கிடைத்தபோது ஆசிரியர் அவர்களை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.அப்போதும் கூட அவர் தன்னை நம்பி வீடு வரும் மாணவர்களை விட்டுவிட்டு தனது சொந்த தேவைக்காக அதுவும் தன்னுடைய மகனுக்கான முக்கியமான ஒரு தருணத்தில் கொழும்புக்கு செல்வதை தவிர்க்க போவதாகக் கூறியிருந்தார். அப்படியாக மாணவர் மீது அக்கறை கொள்ளும் ஆசிரியர் ஒருவரிடம் கல்விகற்றேன் என்ற பெருமை எனக்கு மட்டுமல்ல உலகமெங்கும் பரந்து வாழும் அவரின் சிறப்பான மாணவர்களுக்கும் என்றும் இருக்கும்.
இப்படியான சிறப்புக்கள் பொருந்திய ஆசிரியர் ஒருவரை நாம் இழந்துவிட்டோம் என்று சொல்லவே வேதனை தருகிறது,தன் அன்பான புத்திரர்களையும் சீரியபாதையில் வழி நடாத்தி இவ்வுலகை நீத்திருக்கிறார்.ஆசிரியரின் பெருமைகள் அவரின் பெயரும் புகழும் அவரின் மாணவர்களால் என்றும் சிறப்புறும்,ஆசிரியரின் பிரிவால் துயருறும் அவரின் குடும்பத்தினருக்கு கரவைக்குரல் தன் ஆழ்ந்த அனுதாபங்களை பகிர்ந்துகொள்கிறது

முல்லை மண்ணிலிருந்து வரும் சாதனை மாணவன் - வாழ்த்தும் கரவைக்குரல்

அண்மையில் வெளியாகிய தரம் ஐந்து புலமை பரீட்சை முடிவுகளில் முல்லைத்தீவை சேர்ந்த மாணவன் அகில இலங்கைரீதியில் இரண்டாவது இடம்பெற்றமை மகிழ்ச்சியை தருகிறது.எத்தனையோ கஸ்டங்களும் கடினப்பாதைகளும் மாணவர்களுக்கு சூழ்ந்திருக்க அதுவும் விசுவமடுவை சேர்ந்த மாணவன் நாடளாவிய ரீதியில் தமிழ் மாணவனாக தன் பெயரையும் பொறித்திருப்பது உலகமெங்கும் தமிழ் பேசும் மக்களுக்கு மிகபெரிய சந்தோசத்தை கொடுத்திருக்கிறது.பாடசாலைக்கல்வியை தொடர்ந்து கொள்ள முடியுமோ அல்லது தன் இருப்பு இந்த உலகத்தில் உறுதியாகுமோ என்று சிந்தித்த மாணவர்களின் இடத்தில் இருந்து மாணவன் வெற்றிபெற்றிருப்பது சிறந்த சாதனை என்றுதான் சொல்லவேண்டும்.
முல்லை மண்ணிலிருந்து இந்த சாதனை அரங்கேறியிருப்பது பெருமைக்குரியதாகிறது.யுத்தம் தின்று துப்பிய மண்ணிலிருந்து சாதனை என்று பெருமை கூறுகின்றார்கள் ஆர்வலர்களும் பெரியவர்களும்.
பரீட்சைக்கான அடிப்படை கல்விக்கான காலத்திலும் அதன் நுணுக்கங்களை அறியும் பராயத்தில் அந்த மாணவன் முல்லை மண்ணில் இருந்திருந்தால் எவ்வளவு கஸ்டப்பட்டிருப்பான் என்பது நினைக்க கூடிய விடயம் அல்ல.அது மட்டுமல்லாமல் தொடரும் காலங்களிலும் சிறப்பான கல்வியை பெறுவதற்க்கு எவ்வளவு கடினப்பட்டிருப்பான் என்பது நினைக்க சுலபமான விடயமாகாது.

அந்த சாதனைக்குரிய மாணவன் முல்லைத்தீவு நெத்தலியாறு தமிழ் மகாவித்தியலாய மாணவன் பரமேஷ்வரன் சேதுராகவன் அவர்களுக்கு சிறப்பான வாழ்த்துக்களை பதிவு செய்கிறது கரவைகுரல்.
அந்த மாணவனின் வளர்ச்சியோடு பங்கெடுத்த பெற்றோர் ஆசிரியர்கள் யாவருக்கும் நன்றி பாராட்டுகின்றது கரவைக்குரல்.இன்னும் அந்த மாணவனின் தனித்துவக் கெட்டித்தனங்களை சரிவர இனங்கண்டு அதற்கான களங்களை ஏற்படுத்துங்கள்,உளமார்ந்த சிந்தனைகளுக்கும் அவனின் எதிர்பார்ப்பான வெற்றிகளும் தொடர்ந்தும் உறுதுணையோடு பெற்றோர்,ஆசிரியர்கள்,சமூக முன்னோடிகள் யாவரும் வழியமைத்துக்கொடுங்கள்.உண்மையில் மாணவனின் எண்ணங்களை அறிந்துகொள்ள நேரடியாக பேச வேண்டும்,ஊடகங்கள் வாயிலாக களம்கொடுக்க
வேண்டுமென்பது அனைவரினதும் எண்ணமாகிறது.தொடர்புகொள்ள சந்தர்ப்பங்களை ஏற்படித்தித்தர முடிந்தவர்களை கரவைக்குரல் எதிர்பார்க்கிறது.

முல்லைமண்ணிலிருந்து சாதனைக்குரிய மாணவனாக சிறப்புபெற்றிருக்கும் பரமேஸ்வரன் சேதுராகவனை அன்போடும் உரிமையோடும் வாழ்த்துகிறோம்.
உங்கள் வாழ்த்துக்களையும் மறுமொழி வாயிலாக பதிவுசெய்யுங்கள்

சிறப்பாக நிகழ்ந்த கரவெட்டி ஒன்றியத்தின் நிகழ்வு

புலம்பெயர்ந்தும் தாயகம் சார்ந்த அபிவிருத்தி மற்றும் சமூக நலன் சார்ந்த நடவடிக்கைகளில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டிருக்கும் புலம்பெயர்ந்த எம் மக்கள் வரிசையில் கரவையூர் மக்களின் கரவெட்டி அபிவிருத்தி ஒன்றியம் சார்பான சிறப்பாக ஒழுங்குசெய்யப்பட்ட இரவு இசை நடன நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை 29-05-2011 அன்று நடைபெற்றது,ஏலவே கரவெட்டி ஒன்றியம் சார்பான நான் அறிந்த சில விடயங்களை கடந்த பதிவில் குறிப்பிட்டிருந்தேன்(அதை இங்கே அழுத்திப்பார்க்கவும்) அன்று நிகழ்வில் கலந்துகொண்ட பின் இன்னும் பல வியங்களை அறியக்கூடியதாக இருந்தது.என்றாலும் நிகழ்வின் விடயங்களை இங்கு பதிவாக்கலாம் என்ற எண்ணம்

கரவெட்டி ஒன்றியத்தின் இரவு இசை நடன நிகழ்ச்சி சரியாக மாலை 6 மணிக்கு ஆரம்பமாகியது,சாதரணமாக கலை நிகழ்வுகள்போலல்லாமல் சற்று வித்தியாசமாக நிகழ்ச்சி ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது,ஆரம்பத்தில் நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் யாவரும் தங்களோடு தாங்கள் உரையாடியும் கரவையின் தங்கள் பொழுதுகளையும் மற்றும் நீண்ட நாள்களுக்குப்பிறகு சொந்தங்களை கண்ட மகிழ்ச்சியில் அவர்களோடு உரிமையோடும் உற்சாகமாகவும் உரையாடியதை அவதானிக்க முடிந்தது,
தொடர்ந்து மாலை 7 மணிக்கு நிகழ்வின் ஆரம்பம் எம்மை விட்டு பிரிந்த சொந்தங்கள் யாவரையும் நினைந்து ஒரு நிமிட மௌனத்தோடு தொடங்கியது,முற்றிலும் கரவெட்டியின் அபிவிருத்திக்கான நோக்கத்தோடு நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டமையை நிகழ்ச்சி நிரலிலும் காணக்கூடியதாக இருந்தது,
இசை நிகழ்ச்சியை லண்டன் புகழ் இசைக்கலைஞர்கள் மற்றும் ஆனந்த் இணைந்து வழங்கிய யங்ஸ்ரார் இசைக்குழு வழங்கிக்கொண்டேயிருந்தது.முதற்பாடல் கரவெட்டி அபிவிருத்தி ஒன்றியத்தின் தாய்க்கழகத்தலைவர் திரு.பொன்னம்பலம் அவர்களின் மகள் துஷாந்தி பாடியிருந்தமை நிகழ்வை மெருகூட்டியது.சபையின் கரகோசம் அதை ஆமோதித்தது என்றால் மிகையாகாது.
அதுமட்டுமல்லாமல் இந்த இசை நிகழ்ச்சியில் ஆனந்த்,ஜேஜே,டில்ஷா,ரமணி என்று லண்டன் புகழ் பாடகர்கள் சிலரும் பாடியிருந்தமை நிகழ்வை சிறப்பாக்கியது.
தொடர்ந்து கரவெட்டி அபிவிருத்தி ஒன்றியத்தின் இங்கிலாந்துக்கிளையின் தலைவர் திரு கிருஷ்ணா அவர்களின் உரை இடம்பெற்றது, நிகழ்வின் ஏற்பாடுகள்,எதிர்பார்ப்புகள்,எதிகாலத்தில் எதிர்பார்க்கும் செயற்பாடுகள் என்று இன்னோரன்னவிடயங்களை உள்ளடக்கி தன் உரையை வழங்கியிருந்தார்.

தொடர்ந்து கரவை ஒன்றியத்தின் கடந்தகால செயற்பாடுகள் பற்றிய வீடியோ விவரணக்காட்சி காண்பிக்கப்பட்டது.பொதுவாக கரவெட்டி பிரதேச வைத்தியசாலைக்கட்டடங்கள் மற்றும் அங்கு ஏற்படுத்தப்பட்ட வசதிகள் அதில் அமைந்திருந்தது.அதுமட்டுமல்லாம கரவெட்டி ஒன்றியத்தின் தாய்க்கழக தலைவர் திரு பொன்னம்பலம் அவர்களின் உரை மற்றும் வைத்தியசாலை வைத்தியர் அவர்களின் உரை ஆகியன இடம்பெற்றன,அங்கு தனியாகவோ குழுவாகவோ இணைந்து யாராவது கரவை மக்களுக்கு தேவையான பொதுவான செயற்திட்டங்களுக்கு கரவெட்டி ஒன்றியம் பூரண ஆதரவு வழங்கும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது.

நிகழ்வில் இன்னுமோர் சிறப்பு நிகழ்ச்சியாக இறுதிப்பரிசாக வைர மோதிரம் காத்திருக்க பணப்பந்தயம் நடைபெற்றது,பந்தயமாக பெறப்படும் பணம் முழுவதும் கரவெட்டியின் அபிவிருத்துக்கான நிதி சேகரிப்பாக அமைந்தது.அதில் ஆர்வத்தோடும் போட்டியோடும் அவ்வப்போது கலகலப்பான சிரிப்போடும் பங்குபற்றி நிகழ்வை சிறப்பித்தார்கள் நிகழ்வின் விருந்தினர்கள். நிகழ்வின் இறுதியில் ஒரு இளைஞனுக்கு வைர மோதிரம் உரித்தானது.
அவருக்கு இன்னும் சில நாள்களில் திருமணம் நடைபெற ஏற்பாடாகி இருப்பதால் அது சிறந்த பரிசு அவருக்கு என்று தங்களுக்குள் நகைச்சுவையாக உரையாடினர் சிலர்,இந்த பணப்பந்தய நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியிருந்த திரு ஜோய் தனக்கே உரித்தான பாணியில் தனிச்சிறப்போடு நெறிப்படுத்தினார்.
தொடர்ந்து நிகழ்வின் முக்கிய அம்சமாக கரவெட்டி என்ற கிராமத்துக்கு இன்னும் எப்படியான நலன் திட்டங்கள் மேற்கொள்ள முடியும் என்ற அடிப்படையில் கலந்துகொண்டவர்களின் கருத்துக்களும் உள்வாங்கப்பட்டது.பங்குபற்றியவர்கள் யாவரும் தங்கள் கருத்துக்களை எண்ணங்களை பகிர்ந்துகொள்ளும்படியாக எல்லோர் மேசைகளிலும் காகிதங்கள் வழங்கப்பட்டிருந்தது,அவை மூலம் அவை பெறப்பட்டன.தொடர்ந்து கலந்துகொண்டவர்களுக்கான அதிஸ்டமும் பெறுமதிமிக்க பரிசுகளும் வழங்கப்பட்டது.
அதுவும் வந்திருந்தவர்களை சுவாரஸ்யப்படுத்தியது,
இரவு விருந்தோடு அமைந்த இந்த நிகழ்வு கரவெட்டி வாழ் சொந்தங்களை மீண்டும் சந்திக்கவைத்திருக்கிறது.இதில் கலந்துகொண்டமை யாவருக்கும் மகிழ்வையே கொடுத்திருக்கிறது.தொடர்ச்சியாக இப்படியான சந்திப்புக்களை ஏற்படுத்திக்கொள்வது இன்னும் சிறப்பான விடயமாகத்தான் இருக்கும். அதுமட்டுமல்லாமல் கரவெட்டியை அடையாளப்படுத்துமளவுக்கு ஏதாவது ஒரு சிறப்பான செயற்திட்டத்தை கரவெட்டி ஒன்றியம் ஏற்படுத்துமாக இருந்தால் அதுவும் மிக பெருமையாக இருக்கும். நூல் நிலையமோ அல்லது கரவெட்டி மண் பெற்ற பிரபலங்களுக்கான நினைவுகளோ அல்லது யாவருக்கும் பயன் பெறகூடிய செயற்திட்டமாகவோ அல்லது உலகம் சிறப்பாக பேசுமளவுக்கு செயற்திட்டம் அமைந்தால் அது சிறப்புறும் என்பது கரவைகுரலின் எதிபார்ப்பு.

எது எப்படியாயினும் கரவெட்டி ஒன்றியத்தின் முதலாவது இங்கிலாந்தின் நிகழ்வு மிகச்சிறப்பாக நிறைவுற்றிருக்கிறது.ஆரம்ப நிகழ்வு என்று சொல்லமுடியாத அளவுக்கு நிகழ்வு சிறப்பு.இன்னும் பல சாதனைகளோடு நிகழ்வு மற்றும் கரவெட்டி அபிவிருத்தி ஒன்றியம் சிறக்க கரவைக்குரல் தன் வாழ்த்துக்களை பகிர்ந்துகொள்கிறது.

இங்கிலாந்தில் கரவையூர் மக்களின் கரவெட்டி ஒன்றிய நிகழ்வு

பல்வேறு காலங்களிலும் அந்த காலங்களின் நிலைமைகளிலும் அந்த நிலைமைகளில் வாழ்ந்த சூழல்களாலும் தாயகத்தை விட்டுப்பிரிந்து பல்வேறு தேசமெங்கும் வாழ்ந்துகொண்டிருக்கும் தாயகமக்கள் இன்றும் தமது நாடு தேசம் சமூகம் என்று தங்களை ஈடுபடுத்திக்கொண்டிருப்பது யாவரும் அறிந்த ஒரு விடயமே. ஏதோவொருவகையில் ஒவ்வொருவரும் தாங்கள் வாழ்ந்த ஊர் மற்றும் தாங்கள் படித்த பாடசாலை என்று அவற்றின் அபிவிருத்திச்செயற்பாடுகளில் தங்களின் சிறிய பங்களிப்புக்களையாவது வழங்கி ஈடுபடுவது மகிழ்வைத்தரும் அம்சமாக இருக்கிறது.
அந்த அடிப்படையில் கரவெட்டி மக்களின் அபிவிருத்தி மற்றும் சமூக நல முன்னேற்பாடான செயற்பாடுகளில் ஈடுபடும் அமைப்பாக கரவெட்டி அபிவிருத்தி ஒன்றியம் அமைந்துகாணப்படுகிறது.
யாழ்ப்பாணத்தின் வடமராட்சியில் அமைந்து காணப்படும் இந்த அழகிய கிராமத்தின்(கரவெட்டியின் அமைவிடம் சார்ந்த பதிவு இங்கே) முற்றுமுழுதான சமூக தேவைக்கான அபிவிருத்தியில் தன்னை ஈடுபடுத்திவரும் அமைப்பாக இந்த கரவெட்டி அபிவிருத்தி ஒன்றியம் செயற்படுகிறது.
உண்மையான பிரதான குறைபாடுகளை இனங்கண்டு அவற்றுக்கு முக்கியத்துவம் அளிப்பதோடு மட்டுமல்லாமல் கல்வி சமூக கலாச்சார நடவடிக்கைகளுக்கு வழிகாட்டியாக சீர்ப்படுத்தி நெறிப்படுத்தும் அமைப்பாக இந்த அமைப்பு உருவாகியிருக்கிறது.இதில் சிறப்பான விடயம் என்னவென்றால் சுய நல வேறுபாடுகள் இல்லாமல் கரவெட்டி என்று சொல்லப்படும் பெரியளவிலான, ஊர்மக்கள் யாவரும் பயன்பெறும் திட்டங்களை முன்னெடுப்பதுதான்.அண்மைக்கால ஆரம்பமாக இருக்கும் இந்த அமைப்பு குறுகிய காலத்தில் சீரான மேலான வளர்ச்சி அடைந்திருக்கின்றமை சிறப்பானது.

கரவையூர் மத்தியில் அமைந்திருந்த கரவெட்டி பிரதேச வைத்தியசாலை அங்குள்ள மக்களுக்கு சிறப்பான சேவையாக அமைந்திருந்தது.ஆனால் அங்கு காணப்பட்ட வசதிகளோ அல்லது அதன் அளவோ அங்குள்ள மக்களுக்கான தன்னிறைவாக இருக்கவில்லை என்பதும் உண்மைதான்.அதனை அங்குள்ள மக்களிடம் இருந்த தேவையாக உணரப்பட்டு அதன் விஸ்தரிப்புக்கான நிலத்தை நீண்டகால கொள்வனவு அடிப்படையில் வாங்குவதற்கு கரவெட்டி ஒன்றியம் தன் பங்கை கொடுத்திருக்கிறது.இதன் மூலம் இப்போது கரவெட்டி வைத்தியசாலை என்று அழகுபெற்று மக்களிற்கான மருத்துவ சேவையாற்றிக்கொண்டிருக்கிறது.
Karaveddy Divisional Hospital
Karaveddy


இதேபோல் மருத நிலம் சார்ந்த கரவையூரில் காணப்படும் குளங்கள் இன்னுமோர் அழகு ,அத்துளுக்குளம் அதில் விசேடமானது.தாமரை மலர்கள் அந்த குளத்தில் தனித்துவமான அழகு தரும். அதேபோல் அந்த குளத்தில் இருந்து தான் அங்குள்ள மக்களுக்கான நீர்வடிகால் சேவையும் நீர்த்தேவையும் பூர்த்திசெய்யப்பட்டது.அத்தோடு ஒரு ஊரின் தனித்துவமான குளங்கள் சுகாதார வசதி நிறந்திருக்க வேண்டும் என்பதை உணர்ந்த மக்கள் அதைத்தகுந்த முறைபடி பயன்படுத்த உத்தேசித்து அதற்க்கான முள்வேலிகள் சுற்றிவர சிறப்பாக அடைத்து பராமரிக்கப்பட்டு வருக்கிறது,
அத்தோடு கரவெட்டியின் நீர்வடிகால் சேவையை விஸ்தரித்தல்,அதற்கான நீர்சுத்திகரிப்பு மேடை மற்றும் இயந்திரம் அமைத்தல்,ஊர் மக்களின் மாயானங்கள் சிறந்த முறையில் பராமரிக்க அதற்கான வசதிகள் செய்தல் என்று கரவெட்டி ஒன்றிய செயற்ப்பாடுகள் விரிந்துகொண்டே செல்கிறது.

அந்த வகையில் கவெட்டி ஒன்றிய மக்களின் இங்கிலாந்து கரவையூர்மக்கள் இணைந்து கரவெட்டி ஒன்றிய செயற்பாடுகளை விஸ்தரிக்கவும் இன்னும் அமையவேண்டிய தேவையான திட்டங்களை அறிந்துகொள்ளவும் அதேபோல் ஒன்றியத்தின் உறுப்பினர்களின் எண்ணிக்கைகளை அதிகரித்து பலமான அமைப்பாக உருவாக்க வேண்டும் என்ற சிறப்பான எண்ணத்தோடும் சிறப்பான ஒரு நிகழ்வை 29-05-2011 ஞாயிற்றுக்கிழமை இன்று ஒழுங்கு செய்திருக்கிரார்கள்

.சிறப்பான ஒழுங்குமுறைகளோடு நிகழும் இந்த நிகழ்வில் முற்றிலும் கரவெட்டியின் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படும் திட்டங்கள் பற்றிய புலத்து மக்களின் எண்ணங்கள் பதிவு செய்யப்படுகிறது.கரவையூர் மக்களின் சந்திப்போடு நிதிசேகரிப்பு மற்றும் கலந்துகொள்ளும் மக்களுக்கான ஒரு நிகழ்வும் ஒருங்கே ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இந்த நிகழ்வில் கலந்துகொள்ளும் சந்தர்ப்பம் எனக்கும் கிடைத்ததால் நிகழ்ச்சி சார்ந்த விடயங்களை நிகழ்வு நிறைவு பெற்றபின் தரலாம் என்று விளைகிறேன்.

ஆகவே புலம்பெயர்ந்தும் தமது கடமைகளை உணர்ந்து தத்தமது ஊரின் நலன்சார்ந்த எந்த ஒரு விடயத்திலும் பங்கெடுக்கும் உறவுகளுக்கு என்றுமே பாராட்டுகுரியவர்கள் நன்றிக்குரியவர்கள்,
அந்த வகையில் கரவையூர் மக்களின் கரவெட்டி ஒன்றிய நிகழ்வுக்கு கரவைக்குரல் தன் வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகளை பகிர்ந்துகொள்கிறது


(அன்பான பதிவுல நண்பர்களே மிக நீண்ட நாள்களுக்குப்பின் சந்திக்கின்றேன்.ஒவ்வொரு நாளும் எழுத வேண்டும் என்ற ஆசை எல்லோரைப்போல எனக்கும் இருப்பது உண்மைதான்,ஆனால் இங்குள்ள என்னைப்போன்ற பதிவர்கள் நேரத்தை தேடுகிறோம்,அதனால் தான் அடிக்கடி சந்திக்க முடிவதில்லை,என்றாலும் கரவையூர்மக்களின் நிகழ்வு மீண்டும் எழுத அதேபோல் மீண்டும் பதிவர்களை சந்திக்க களம் அமைத்திருக்கிறது.தொடர்ந்தும் சந்திக்க எல்லாம் கூடிவரட்டும் என்று நீங்கள் நம்பும் இறைவனை நானும் நம்புகிறேன்)அவ்வப்போது குசலம் விசாரிக்கும் அனைத்து பதிவர்களும் நன்றி