வல்லிபுரத்தில் கடல் தீர்த்தம்


என்ன அடிக்கடி வல்லிபுரத்தானை பற்றி சொல்லுறன் எண்டு நினைக்கவேண்டாம்,
வல்லிபுரத்தை பற்றி இதற்குமுதல் வல்லிபுரமும் ஞாயிற்றிக்கிழமையும் என்ற பதிவினூடாக குறிப்பிட்டிருந்தேன்,ஞாயிற்றிக்கிழமை என்றால் அந்த ஆலயத்திற்கு சிறப்பு,அதுவும் ஆவணி ஞாயிறு என்றால் அதைவிட சிறப்பு,சிறப்பான தினத்தில் அதைப்பற்றியும் அங்கு கண்ட சுவாரஷ்யமான சம்பவங்கள் பற்றியும் சொல்லாமலும் இருக்கமுடியவில்லை,அதை நீங்கள் இங்கே அழுத்துவதன் மூலம் வாசிக்கமுடியும்.
அதில் சிலவற்றை சொல்லவில்லை என்ற குற்றச்சாட்டுக்கூட எனக்கு இருந்தது,பின்னூட்டத்தில் வந்தியத்தேவன் குறிப்பிட்டதைப்போலவே வல்லிபுரக்கோயிலில் தரிசனம் செய்த நண்பர்கள் பலர் மின்னஞ்சல் மற்றும் அரட்டை அடிக்கும் சந்தர்ப்பங்களில் குறிப்பிட்ட சில சுவாரஷ்யமான விடயங்களுக்கும் இடங்கொடுக்கும் வகையில் இதை எழுதலாமென்ற எண்ணம்.ஆனால் அவை யாரையும் மனம் நோகடிக்கும் வகையில் சுட்டியோ குத்தியோ அல்லாமல் வெறும் ரசித்த கண்ட கேட்ட,பார்த்த விடயங்களையும் உள்ளடக்கி தராலாம் என்று நினைக்கின்றேன்

வல்லிபுரத்தானும் ஞாயிற்றுகிழமையும் என்பதன் தொடர்ச்சியாக வல்லிபுரத்தானுக்கு கடல் தீர்த்தம் என்பதும் யாழ் மக்களிடையே ஒரு மிகவும் பிரசித்தமானதொன்றாகும்,முன்னைய காலங்களில் தென்பகுதி மக்கள்கூட வந்து செல்வார்களாம்,ஆனால் நாட்டின் சூழ் நிலைகளால் அதை இக்காலத்தில் அவதானிக்கமுடியவில்லை,மிகக்குறைவு என்றுதான் சொல்லலாம்.
யாழ்ப்பாணத்தின் சகல பாகங்களிலும்மிருந்து பெரிய சனத்திரளே படையெடுக்கும்,அதற்கு சாட்சியாக யாழ்-பருத்தித்துறை வீதி எப்போதுமே மக்கள் அலைஅலையாக சென்று கொண்டிருப்பதை அவதானிக்கமுடியும்,தூரத்து மக்கள் குழுக்களாக வாகனங்களிலும் இளைஞர் கூட்டம் தங்கள் தங்கள் சைக்கள்களிலும் அதைவிட சுற்றுப்புற கிராம மக்கள் நடை நடையாகவும் வல்லிபுரத்தை நோக்கி திரண்டுகொண்டேயிருப்பர்,ஆலயத்திலிருந்து கண்ணுக்கெட்டியதூரத்திலிருந்து சனங்கள் திரண்டு கொண்டிருப்பதை அவதானிக்கமுடியும்,
இப்படியாக யாழின் பல்வேறு பகுதிகளிலுமிருந்து மக்கள் குவிந்துகொண்டிருப்பதை அவதானிக்க முடியும்


ஆலயத்துக்கு வந்த மக்கள் வங்கக்கடலை நோக்கிய பயணத்தை ஆரம்பிப்பர்.அவ்வப்போது பம்பல்களும் சிலவேளைகளில் ஓடுவதும் பாடுவதுமாக கடலை நோக்கி நடக்கத்தொடங்குவர்,கற்பாதைகளும் புற்பாதைகளும் முட்பாதைகளும் மண்மேடுகளும் என்று பல்வேறு ரகமான பாதைகள்,ஆண்கள் சால்வைகளை அவிழ்த்து தலையிலே மூடுவதுமுண்டு,பெண்கள் சுரிதாரின் மேலிருக்கும் துணியால் தலையை முடியபடி நடக்கத்தொடங்குவர்,இப்படியாக வல்லிபுரத்தானின் வாசலில் நின்று பார்க்கும்போது மக்கள் செல்லும் வழி அங்கும் இங்கும் வளைந்து நெளிந்து செல்வதால் பெரியதோர் பாம்பு போன்ற வடிவத்தை ஏற்படுத்தும்.வெள்ளைவெளேரென்று ஆண்கள் உடுத்திருக்கும் வேட்டிகளுக்கிடையில் வண்ண வண்ண உடைகள் அணிந்திருக்கும் பெண்களின் அழகு அந்த பாம்பின் அழகை மெருகூட்டும்,மள்ளாக்கொட்டைகளும் சோளப்பொரிகளும் வாயிலே கொறித்தபடி அழகிய பாம்பின் அசைவு ஆகா என்ன அற்புத அழகு என்று சொல்ல வைக்கும்,

வல்லிபுரத்தில் விற்கபடும் தோசையை சொல்லவில்லை என்ற ஆதங்கம் வெளிக்காட்டப்பட்டது,உண்மையில் நான் சொல்ல தவறிவிட்டேன்,தோசையுடன் ஒரு சம்பல்,அதுவே போதும் நின்றபடி பதினைந்து தோசகளை வெட்டுவதற்கு,அதைவிட சாம்பாறும் கலந்து எ்ன்றால் கேட்கவா வேணும்,இளைஞர் படைகளே அங்குதான் இருக்கும்,வயது வந்தவர்வர்களும் கூட அங்குதான் நிற்பார்கள்,சிலவேளைகளில் வீட்டின் உணவில் சுவைக்குறைவோ என்னவோ? ஆனால் அதன் சுவை நாக்கை சுரக்க வைக்கும்,அது தாமரை இலையில் அதன் பெரிய வடிவத்திற்கு உருவாக்கப்பட்டு கொடுக்கப்படும்,

இந்த கடல் மற்றும் தேர் திருவிழா காலங்களில் மணிக்கடை,பொரிக்கடை,புடவைக்கடை,ஐஸ்கிறீம் கடை என்று கடைகளுக்கு குறைவில்லை,இங்கும் தான் எம் இளைஞர்கள் கைவரிசையை காட்டுவார்கள்,இது அவர்களின் நகைச்சுவையாக எடுக்கப்படும்,ஆனால் அது கடைக்காரருக்கும் தெரியாமலில்லை.ஏழு தரம் ஐஸ்கிறீம் குடிக்கும் அன்பர்கள் ஒருதரமே கணக்கு கட்டுவர்,இதை பிடிப்பதற்கு என்னதான் முதலாளிகள் முயன்றாலும் அவர்களால் அப்பாவிகளை மட்டுமே பிடிக்க முடியும் என்பது அவர்களின் சாமர்த்தியத்துக்கு உதாரணம்,
எம்மவர்களின் தகவல்கள் அடிப்படையில் நல்லூர் ஆலயத்துடன் சேர்ந்திருக்கும் ஒரு குளிர்களியகம் கூடியளவு பாதிக்கப்பட்டிருக்கிறது என்று அறியக்கிடைத்தது,பின்னர் இதில் வரும் அனுபவங்களை சுவாரஷ்யமாக பகிர்ந்துகொள்வர் நண்பர்களுக்கிடையில்,”நான் அப்படிச்செய்தேன்,இப்படிக்கிழித்தேன்” என்று மார்தட்டுவர் வீரவீராங்கனைகள்,

இன்னுமொரு விடயம் இருக்கிறது வல்லிபுரத்தின் தெற்கு வீதியில்,ஒரு சாஸ்திரி இருப்பார்,உருத்திராட்ச மாலைகள் சூடியபடி எப்போதும் ஏதாவது ஒரு புத்தகம் வாசித்தபடி,யாரும் சாஸ்திரம் பார்க்க சென்றவுடன் இறைவனின் பெயர் சொல்லி ஆரம்பிப்பார் சாஸ்திரம் சொல்ல,அந்த் ஆலயத்துக்குப் போகிறவர்கள் ஒருதடவையாவது அவரி சந்த்திக்காமல் செல்வதில்லை என்றுதான் சொல்ல வேண்டும்,அதுவும் ஒருகாலத்தில் தென்னிலங்கையிலிருந்து வந்து போகக்கூடிய காலங்களில் அவரிடம் எல்லோரும் வந்துசெல்வது வழமை,உண்மையில் பணத்திற்கான எதிர்பார்ப்பின்றி இருக்கும் நல்ல மனிதர்களில் அவரும் ஒருவர்.

இதைவிட கடல் தீர்த்தமாடுவதற்காக சுவாமியை தூக்கிக்கொண்டு கடலை நோக்கி ஒடும் அழகு பக்தி உணர்வைக்கூட்டும் என்றால் ஐயமில்லை,கோபாலா கோவிந்தா கோபாலா கோவிந்தா என்று வானம் அதிரும்படியாக எல்லோரும் முழங்க இளைஞர்கள் தூக்கிக்கொண்டு ஓடுவார்கள்,அவர்களின் பின்னே எல்லோரும் ஓடுவதும் உண்டு.இடையிடயே விஷ்ணுவின் பாடல்களும் பாடியபடி கடலை நோக்கி ஓடுவார்கள்,



கடலுக்கருகில் இளைஞர்கள் தங்களுக்குள் கூடியிருந்து நகைச்சுவைகள் பகிர்வதும் கும்மாளம் அடிப்பதுமாக தங்கள் காலத்தை சிரிப்புடனே களி(ழி)ப்பர்.பெண்களும் தங்க கூடிக்கதைப்பதுமாக (கூடுதலாக மற்றவையின் நகைகளும் உடுப்புகளும் தான் அவர்களின் கதைகளின் தலைப்பாக இருக்கலாம்,ஆனால் யாருக்கு உண்மை தெரியும்?) இருப்பர்,குழந்தைகள்,சிறியவர்கள் கடலடியில் மண் கிண்டி ஓடியாடி துள்ளித்திரிந்து விளையாடுவதுமாக தங்கள் ஆனந்தத்தை வெளிப்படுத்துவர்,


தீர்த்தப்பந்தல்கள் அங்குமிங்கும் எல்லோரையும் வரவேற்றபடி இருக்கும், நடை நடந்து களைத்துவந்த மக்களுக்கு தாகம் தீர்க்கும் உன்னத பணியில் சில அடியவர்கள்,அதில் கிடைக்கும் சுவை எந்த ஒரு பதார்த்தத்திலும் கிடைக்காது என்றால் மிகையாகாது.


இப்படியே பக்திக்கு பக்தி, நகைச்சுவைகளுக்கு நகைச்சுவை,கும்மாளத்துக்கு கும்மாளம் என்று கடலுக்கருகில் எல்லாம் மிக அற்புதமான நேரங்கள் அந்த மாலை நேரம்.

இதைப்பற்றி வந்தியத்தேவன் கூட ஒரு பதிவில் வெளிப்படுத்தி இருக்கிறார்,நான் அதை அறிந்துகொண்டேன்அதை நீங்கள் கீழே உள்ள இணைப்பை சொடுக்கி பாருங்கள்.
அதைவிட என் பார்வையில் நினைவில் வந்தவற்றை ஒரு சிறிய பதிவாக்கியிருக்கிறேன்,
வல்லிபுர ஆழ்வார் கடல் தீர்த்தம்


படங்கள்:சுபராஜா பாஸ்கரசோதி நன்றி

கடலோடிகளின் கதை சொல்லும் நாவல் தரும் கே.எஸ்.பாலச்சந்திரன்




ஈழத்திலிருந்து பிரபலமான கலைஞர்களுள் தனக்கென தனியான முத்திரை பதித்து உலகத்தின் மூலை முடுக்கெங்கும் அறியப்பெற்ற கலைஞர் கே.எஸ்.பாலச்சந்திரன் அவர்களின் இன்னுமொரு படைப்பான ஒரு நாவல் கனேடிய மண்ணில் வெளிவரவிருக்கிறது,
மகிழ்ச்சியான விடயம்,அதற்கு காரணங்கள் பல,

முக்கியமாக குறிப்பிட்டுச்சொல்லக்கூடியதாக
ஒன்று என் மண்ணில் பிறந்து ஒரு பிரபல்யமான கலைஞனின் படைப்பைப்பற்றியும் அவரைப்பற்றியும் என் குரலாலும் ஒரு பதிவிடக்கிடைத்த சந்தர்ப்பம்
மற்றது உலகின் பிரபல்யமான ஒரு கலைஞன் வரலாற்றில் இடம்பிடிக்கும்வகையில் ஈழத்தின் நினைவுகளை நூலுருவாக்கி எதிர்கால சந்ததியினருக்கு வழங்கும் ஒரு காத்திரமான பங்களிப்பு

ஒருகாலத்தில் கே.எஸ்.பாலச்சந்திரன் அவர்களின் குரல் “அண்ணைரைட்” தனி நடிப்பு நகைச்சுவை நாடகத்தின் மூலம் உலகெங்கும் அறியப்பெற்றவர்,நாடகம் வெளிவந்த காலங்களில் எல்லோர் வீடுகளிலும் வானொலிப்பெட்டியில் பென்னம்பெரிய சத்ததுடன் எப்போதும் ஒலிக்கக்கேட்கும் முக்கிய ரசனை நிகழ்ச்சி இது .
அதைக்கேட்டுகேட்டு வயிறு குலுங்கக்குலுங்க சிரித்த அந்த நாடகத்தால் எல்லோர் நெஞ்சங்களிலும் இடம்பிடித்துவிட்ட அற்புதமான கலைஞர்,
அதைவிட“ஓடலிராசையா,வாத்தியார் வீட்டில்,மு.மு.மு.மூத்ததம்பி,செய்திகளில் நகைச்சுவைகள் கலந்து வாசித்தபடியே அமையப்பெற்ற ஒரு நடிப்பு”,என்றவாறாக அவரின் தனி நடிப்பில் அவரால் வெளிக்கொணரப்பட்ட நாடகங்கள் பல,
இதைவிட இவர் இயக்கிய நாடகங்கள் ஏராளம்,அண்மையில் இவர் இயக்கிய “தூரத்து சொந்தம்” என்ற நாடகத்தை பார்க்கும் சந்தர்ப்பம் எனக்கு கிடைத்தது,அதில் எம்மவர்களின் உணர்வுகளை படம்பிடித்துக்காட்டியதாக நான் உணர்ந்தேன்,


இதே போல ஈழத்தின் திரைப்பட வரலாற்றிலும் முக்கியமான இடம் இவருக்கு உண்டு,“வாடைக்காற்று,நாடு போற்ற வாழ்க,சர்மிளாவின் இதய ராகம் மற்றும் ஜீவ நதி” இவர் நடித்த திரைப்படங்கள்,இவற்றை விட ஒரு ஆங்கிலத்திரைப்படத்தில் கூட நடித்திருந்தார் என்று அறிந்திருந்தேன்,ஆனால் இப்போது அந்த திரைப்படத்தின் பெயர் எனக்கு சரியாக நினைவுவராததால் குறிப்பிடமுடியவில்லை,

கலையுலக வாழ்வில் நாற்பத்தைந்து ஆண்டுகளை தாண்டப்போகும் கே.எஸ்.அவர்கள் அடிக்கடி சொல்லும் விடயம் என்னவென்றால் ”நாடகத்துறையிலும் கலையுலக வாழ்விலும் என்னாலான பணிகள் நிறையவே சாதித்ததாக உணர்வதாகவும் இவற்றை விட எழுத்துலகலிலும் ஏதாவது படைக்க வேண்டும் என்ற ஆவல்” இருப்பதாக குறிப்பிடுவார்,
தன் நாடகத்தினாலும் கலைத்துறையாலும் கிடைத்த அனுபவங்களையும் அதன் இன்னும் பல விடயங்களையும் நூலுருவாக்க வேண்டும் என்ற ஆசையை அடிக்கடி வெளிப்படுத்துவார்.தன்னோடு தன் கலையம்சங்கள் நின்றவிடாது இளைய தலைமுறைக்கும் அதை வழிகாட்டி அவற்றை வாழவைக்கவேண்டும் என்பதில் கே.எஸ் அவர்கள் மிக ஆர்வமானவர் என்றால் மிகையாகாது.ஆகையால் அனுபவங்களை எழுத்துலகில் பதிந்துவிடுவதன் மூலம் அவை எக்காலத்திலும் அறியக்கூடியதாக இருக்கும் என்பதை யாராலும் மறுக்க முடியாது.

அந்த வகையில் கே.எஸ்.அவர்களின் ஒரு படைப்பான நாவல் வெளிவரத்தயாராக இருக்கிறது,வடலி வெளியீட்டகத்தாரின் வெளியீடாக வெளிவரும் இந்த நூலுக்கு கே.எஸ்.பாலச்சந்திரன் அவர்கள் ”கரையத்தேடும் கட்டுமரங்கள் ”என்று பெயரிட்டிருக்கிறார்,முற்றிலும் ஈழத்து நினைவுகளைச்சுமந்து வரும் இந்த நாவலி்ல் முக்கியமாக கடலோடிகளின் கதை சொல்லும் கதையாக வருகிறது, நாவலில் அங்கங்கு தன் அனுபவங்களை நாவலுக்குரிய பாங்கிலே தனக்குரிய பாணியில் எடுத்து செல்லும் அழகு மிகச்சிறப்பு,

இவரைப்பற்றியும் இந்த நூல் பற்றியும் உலகப்பிரசித்திபெற்ற அறிவிப்பாளர் பி.எச்.அப்துல் ஹமீட் அவர்கள்
“ ஈழத்து நாவல் இலக்கிய வரலாற்றில் ஒரு காலச் சுவடாய் நிலைக்கக்கூடிய படைப்பு இது. புலம் பெயர்ந்த பின்னரும் தாயகத்தின் நினைவுகளைச்சுமந்து வாழும் ஒரு படைப்பாளியின் நினைவுச்சித்திரம்” என்று குறிப்பிடுகிறார்

அதோடு மட்டுமல்லாமல் தொடர்ந்து அவர்

”வானொலி,தொலைக்காட்சி,மேடை,திரைபடக்கலைஞர், நேர்முக வர்ணனையாளர்,
திரைப்படஇயக்குனர்,தொலைக்காட்சி நிகழ்ச்சித்தயாரிப்பாளர் எனப் பன்முகம் கொண்ட திரு கே எஸ் பாலச்சந்திரன்,மிகச்சிறந்த வானொலி மற்றும் மேடை நாடகங்களையும்
படைத்த எழுத்தாளர்.தன்னெழுத்தால்,பயன்படுத்தும் சொற்களால்,வரிகளால் வாசகன் உள்ளத்தில் காட்சிகளை விரியச்செய்து அந்த சூழலுக்கே அழைத்துச்செல்லகூடிய ஆற்றல் கொண்டவனே எழுத்தாளன் ஆகமுடியும், இவரது எழுத்துக்களுக்கு அவ் ஆற்றல் உண்டு.
இவரது எழுத்தாற்றல் நாவல் இலக்கியத்துறையிலும் காத்திரமாய் வெளிப்பட்டுள்ளது,கரையைத்தேடும் கட்டுமரங்கள் நாவல் படைத்த,கே எஸ்.பாலச்சந்திரன் அவர்களது பெயரும் வரலாற்றில் தடம் பதிக்க வாழ்த்துகிறேன்” என்று வாழ்த்துகிறார்.

இதைப்பற்றி கே.எஸ்.பாலச்சந்திரன் அவர்கள்
”தினமும் வாழ்வுக்காக அலைகளோடு
ஜீவமரணப்போராட்டம் நடத்தி
மீளும் அல்லது தோற்றுப்போகும் ஒரு சமூகத்திடம் எனக்குள்ள நியாயமான மதிப்பு,
இரக்கமும் தான் என்னை இந்த நாவலை எழுத்த்தூண்டியிருக்கிறது “

என்று குறிப்பிடுகிறார்,

ஈழத்தில் தம் வாழ்வுக்காய் வாழ்வாதார தொழிலோடு வாழ்வுமுழுவதும் வாழ்ந்து அதனால் அனுபவிக்கும் மகிழ்ச்சிகள்,தோற்றுப்போவதால் கிடைக்கும் சோகங்கள் என்று அந்த சமூகத்தின் உள்ளுணர்வுகளை வெளிப்படுத்தும் ஒரு முக்கிய நாவல் படைப்பாக கே.எஸ்.அவர்கள் தருகிறார்,முற்றிலும் கிராமத்தின் மண்வாசனைப்படைப்பு,

வடலி வெளியீட்டால் ஏற்கனவே வெளியிடப்பட்ட இந்த நாவல் வரும் ஐப்பசி மாதம்(October)மூன்றாம் தேதி சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு கனேடிய மண்ணில் வெளியிடப்படவிருக்கிறது என்ற மகிழ்ச்சியான செய்தியைத்தருவதில் கரவைக்குரல் பெருமையடைகிறது,


இடம்:Agincourt Community Centre
31,Glen Watford Drive,
Scarborough,Ontario
Midland & Sheppard(On Sheppard)


தொலைபேசி எண்:647-829-7371
ஈ மெயில் :basu44@gmail.com

அப்படியாக கலைஞர் கே.எஸ் பாலச்சந்திரன் அவர்களின் கலை மற்றும் எழுத்துலகின் பயணத்தில் கரையத்தேடும் கட்டுமரங்கள் என்ற நாவலும் வரலாற்றில் இடம்பிடிக்கும் வகையில் அமையும் என்பதில் சந்தேகத்துக்கேயிடமில்லை,அவரின் கலை மற்றும் எழுத்தின் பணிகள் இன்னும் மேன்மேலும் சிறக்க கரவைகுரல் வாழ்த்துவதில் பெருமையடைகிறது

“பகலும் இரவும் முத்தமிட்டுக்
கொள்ளும் அந்த
மாலைப்பொழுதில்......

மேற்கிலிருந்து அடித்த
வாடைக்கச்சான் காற்று,

கடற்கரையை
பார்த்துக்கொண்டு நின்றிருந்த
அந்தோனியின் பொத்தான்கள்
இல்லாதா சேர்ட்டை பின்னே
தள்ளி நெஞ்சுக்கூட்டை
குளிரினால் சில்லிடவைத்தது.........

இவை கரையைத்தேடும் கட்டுமரங்கள் நாவலிலிருந்து ஒரு சில வரிகள்

பள்ளிக்காலத்தின் அற்புத நினைவுகள்

பள்ளிப்பயின்றதொரு காலம் தொடர்விளையாட்டு

தோழி சினேகிதியின் ஆரம்பத்துடன் அற்புதமாக வீசிய பந்தை வந்தியத்தேவரால் எனக்கு சுழற்றி எறியப்பட்ட சுழல் பந்து போன்றதான ஒரு அழைப்பு,பள்ளியில் களித்த பசுமையான அற்புதமான விடயங்களையும் நினைவுகளையும் பகிர்ந்துகொள்ளத்தான் அந்த அழைப்பு,எனக்கு எதை எழுதுவது எப்படி எழுதுவது என்ற சின்ன சிக்கல்,பன்னிரண்டு வருட பள்ளி வாழ்க்கையில் எத்தனை சுவாஷ்ய நிகழ்வுகள்,அதே போல அவ்வப்போது பாதித்த விடயங்கள் என்று சொல்லி அடுக்கிக்கொண்டே போகக்கூடிய பல விடயங்களை எப்படி ஒரு சில நிமிடங்களில் அடக்கிவிடலாமென்று தான் அந்த சிக்கல்,

ஆனால் வந்தியத்தேவரின் அழைப்பை இவ்வளவு நாளும் ஏற்றுகொள்ளவில்லையே என்று சின்ன கோவம் போட்டுவிடுவாரோ என்ற பயம் இன்னொரு புறம்,முடிந்தவரை நினைவுகளுக்கு எட்டியவரை பள்ளிக்காலத்தின் அற்புதமான நினைவுகளை பதியலாம் என்று எண்ணி ஆரம்பிக்கிறேன்,இண்டைக்கு இதுக்கு ஒரு முடிவு காணலாம் என்ற எண்ணம்,
அதேவேளை இன்னும் மூன்று பேருக்கு “இந்த பதிவால் பெற்ற இன்பம் துன்பம் எல்லாம் பெறுக இந்த வையகம்” என்றவாறாக அழைப்புவிடலாம் என்றும் எண்ணம்,அழைப்புவிடவேணும் எண்டதுதான் சட்டமும் பாருங்கோ.

என் வரலாற்றில் இருவேறு பாடசாலைகள்,
ஒன்று கரவெட்டி மாணிக்கவாசகர் வித்தியாலயம்,
மற்றது ஹாட்லிக்கலூரி,அடிப்படைக்கல்வியின் ஆரம்பம் மாணிக்க வாசகர்,அதைத்தொடர்ந்து தக்கவாறு செப்பனிட்டு ஒப்பேற்றிவிட்டது ஹாட்லிக்கலூரி,பெற்ற படிப்பினைகள் ஏராளம்,வாங்கிய அடிகள் தாராளம்,இன்றும் இனிக்கும் நினைவுகள் அவை,


ஆரம்பக்கல்விக்காய் கரவெட்டி மாணிக்க வாசகர் வித்தியாலயத்தில் இணைந்தேன்,அதிபர் பாலச்சந்திரன் அவர்கள் அப்போது இருந்தார்கள்,நான் ஆறாம் ஆண்டுக்காய் ஹாட்லியில் இணையும் வரை அவர்தான் அதிபர்,கோபத்திற்கும் அவருக்கும் வெகுதூரம்,ஆனால் ஒரு பிரம்பு கையில் சிலவேளைகளில் இருக்கும்,காலை நேர இறைவணக்கத்தின் பின் மேடையில் தோன்றி ஏதாவது அறிவுரைகள் கூறிடுவார்,அதேபோல மாணவர்களின் திறமைகளையும் அந்த மேடையில் எடுத்துக்கூறி அவர்களுக்கு தெம்புகொடுப்பார்.

ஆச்சி ரீச்சரின் ஆரம்பத்துடன் ஆரம்பக்கல்வி,மிகவும் வயதானவர்,சின்னஞ்சிறு பாலகர்களுக்கு ஏற்ற ஆசிரியர்,இன்றும் சொல்வேன் சந்தர்ப்பம் கிடைத்தால் அவரிடம் சின்னஞ்சிறு பாலகர்கள் ஆரம்பக்கல்வி கற்க வேணுமென்று,அப்படி அன்பான அரவணைப்பால் ”அ ஆ” ஊட்டியவர்,இன்று அவர் எம்மோடு இல்லை என்று அறிந்தேன்,”குடைபிடித்துச்செருப்புமிட்டு புத்தகமும் கொண்டு” என்று ஆரம்பத்தில் பாடிய பாடல் இன்றும் நினைவிருக்கிறது என்றால் அது ஆச்சி ரீச்சரையும் வள்ளிப்பிள்ளை ஆசிரியையும் சாரும்,

தொடர்ந்து கதைகள் பல கூறி சிறு பராயத்திலேயே எங்களை சிரிக்க வைக்கும் படியான கதைகளை கூறி வகுப்பெடுத்தவர் இரத்தினம் ஆசிரியர்,அவரோடு அண்மையில் யாழ்ப்பாணம் சென்றபோது சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது,மிகவும் சந்தோசமான முகமலச்சியோடு சுகம் விசாரித்தார்.என்னிலும் என் இன்னோரன்ன திறமைகள் வளரவேண்டும் என்று மிக ஆவலாக இருந்த ஆசிரியர்களுள் இரத்தினம் ஆசிரியரும் ஒருவர்,அவரிடம் கல்வி கற்கும் காலத்தில் ஆசிரியர் அவர்கள் என்னோடு யாழ்ப்பாணம் வரை வந்து எனக்கு சுப்பிரமணிய பாரதியார் வேசம் போடுவதற்காக தலையில் தலப்பாகை,பாரதிபோல் வேட்டி தாறுபாய்ச்சி(குருக்கள்,மற்றும் கோயில் பூசகர் வேட்டி உடுக்கும் முறை) மேடையேற்றி அழகுபார்த்தவர்,அவரின் ஆசியோ என்னவோ எனக்கும் அங்கு சிறப்பிடம் கொடுக்கப்பட்டது எனக்கு இன்றும் நினைவிருக்கிறது,

அதைத்தொடர்ந்து இடக்கை கணபதிப்பிள்ளை ஆசிரியர்,அங்கு இருவேறு கணபதிப்பிள்ளை ஆசிரியர்கள் இருந்ததால் இவர் இடதுகை வளம் இருந்த ஆசிரியர் ஆகையால் இவரை எல்லோரும் அடையாளப்படுத்திக்கொள்வதற்காக இடக்கை கணபதிப்பிள்ளை ஆசிரியர் என்று சொல்வது வழமை.எப்போதும் பின்வாங்கில் கூட்டமான நான் அவருடைய வகுப்பில் தான் முதன் முதலில் பின் வாங்கிலில் இருக்கச்சென்றேன் என்ற நினைவு,வகுப்பறையில் பகிடி விடுவதும் கூடப்படிக்கும் நண்பர்கள் எல்லோருடனும்(ஆண் பெண் வேறுபாடு இல்லைப்பாருங்கோ) நகைச்சுவைகள் விடத்தொடங்கியது இந்தக்காலத்தில் தான் என்ற நினைவு.
இவர்களைவிட மாகாலிங்கசிவம் ஆசிரியர் இங்கு கற்பித்தாலும் அவரிடம் படிக்கும் வாய்ப்பு மாணிக்கவாசகரில் கிட்டவில்லை,தனியார் கல்வி நிறுவகத்தில் கிடைத்தது,அதுவும் ஹாட்லிக்கல்லூரியில் இருந்தபோதுதான் கிடைத்தது,அழகுதமிழில் அவரது கற்பிக்கும் முரை இருக்கும்,நான் என் இன்னோர் பதிவில் குறிப்பிட்டதுபோல ஆசிரியர் அவர்கள் மாணவர்களில் தனிப்பட்ட ரீதியில் கூட கவனஞ்செலுத்தியவர்,ஆலய மணி ஒலிக்கும்போது அனைவரும் எழுந்து நின்று ஆலயத்தின் இறைவனை நினைக்கவேண்டும் என்று நடைமுறையில் கொண்டுவந்தவர்,ஆசிரியர் அவர்கள் அண்மையில் இவ்வுலகை நீத்தது கேட்டு துயரமடைந்தேன்,

பிரம்படி,நைஸ் அடி,கரும்பலைகையை பார்க்க விட்டு அடித்தல் போன்ற பல்வேறு ரகமான அடிகள் அறிமுகமான காலம் இந்த மாணிக்க வாசகர் வித்தியாலயத்தின் காலம், நைஸ் அடிக்கு பிரபலமானவர் இரத்தினம் ஆசிரியர்,அதாவது பிரம்பை அதிகளவு தூரம் தூக்காமல் மெல்லவாக கொண்டுவந்து ஊண்டி அடிப்பதுதான் அந்த அடி,அதைவிட மகாலிங்க சிவம் ஆசிரியர் மற்றும் இடக்கை கணபதிப்பிள்ளை ஆசிரியர் அவர்கள் கையிலுள்ள மணிக்கூட்டை கழற்றுகின்றார்கள் என்றால் பிரம்படி தொடங்கப்போகிறது என்று அர்த்தம்,

அதைவிட நாங்கள் படிக்கும் காலத்தில் தான் சின்ன வகுப்பிலை படிக்கும் அனைவருக்கும் தையல் கலையும் ஒரு பாடமாக வந்தது,அதைவிட அந்த தையல்கலைக்கும் தமிழ்த்தினப்போட்டி மற்றும் ஆங்கில தினப்போட்டிகள் போலவே ஒரு போட்டி முறையும் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது,எனக்கெண்டால் அந்த சின்ன வயசிலேயே அந்த பாடத்தை
”கட்” அடிச்சு எங்கையாவது ஒளிச்சு ஓடலாமோ என்று எப்பவும் நினைப்பேன்,ஆனால் தங்கம்மா ரீச்சர் எங்கட வீட்டுக்கு கிட்ட எண்டதாலை வீட்டுக்கு கதை வந்திடும் எண்டதாலை சுட்டுவிரலிலை தையலூசி குத்தி குத்தி காயம் வந்தாலும் அந்த பாடத்துக்கு போய் “பெரு நூலோடி,சிறு நூலோடி,சங்கிலி தையல்” எண்டு படிச்சு துணி எல்லாம் கிழிச்சது என்று இப்பவும் நினைத்துச் சிரிப்பேன்.

இதைவிட அந்த சின்னஞ்சிறு வயசிலை விளையாடும் விளையாட்டுக்கள் இனி எப்போதும் விளையாடவே கிடைக்காதா என்ற உணர்வும் கூட,ஒளிச்சுத்தொட்டு,அடிச்சுத்தொட்டு, நாயும் இறைச்சித்துண்டும்,பேணியும் பந்தும்,என்று வகுப்பறக்கு வெளியே விளையாடும் விளையாட்டுகள்,கணிதப்பாடத்துக்கும் ஆசிரியர் விளையாடவிடமாட்டாரோ என்றுதன் எப்போதும் எண்ணம் இருக்கும்,அதேபோல இருக்கும் மேசையிலேயே இருந்தபடி எல்லோரையும் ரசிக்க வைக்கும் விளையாட்டு பேனைச்சண்டை,பொதுவாக ஆசிரியர்களுக்கு மறைவாக அவர்கள் இல்லாத நேரங்களில் கலக்கும் விளையாட்டு அந்த விளையாட்டு,ஒரு குறிப்பிட்ட எல்லையை வைத்த படி அந்த பெட்டிக்குள் இருந்தவாறாக பேனைகளை மோதவிடுவதும் அதை வெளியே அடித்துத்தள்ளாதபடி தடுப்பதுமாக அந்த விளையாட்டு இருக்கும்,அந்த விளையாட்டில் வரும் உத்வேகமும் ஈடுபாடும் எதிலும் வந்ததில்லை,விளையாட்டுகளும் அந்த இனிய காலங்களும் ஆரம்பித்ததும் இங்குதான்.

இதைவிட கல்வியுடன் ஆரம்பகலைகளைக்கூட ஆரம்பத்தில் எனக்கு அள்ளித்தந்தது இங்குதான்,எனது ஏழாவது வயதில் குறிப்பிட்டு சொல்லக்கூடிய நிகழ்வு ஒன்றை மேடையேற வைத்ததும் இந்த வித்தியாலயம் தான்,அந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்திலேதான் எனக்கு கலை தெரியும் என்று ஏற்றுக்கொண்டவனானவன் நான்.இவையெல்லாம் இங்கு கூறலாமோ என்ற பயம் கூட எனக்கு,சுயபுராணத்திற்கு ஏன் இடம் இங்கு கொடுக்கவேண்டும் என்றும் நான் சிந்திக்கிறேன்,ஆனால் பள்ளியில் கிடைத்த அற்புதமான நினைவுகளில் இதுவும் ஒன்று என்பதால் சொல்லிவிட்டேன்,

இப்படியாக பள்ளிக்காலத்தின் நினைவுகளை மீட்டுக்கொண்டே போகலாம்,இன்னும் நான் என் அடுத்த கட்ட பள்ளிக்காலம் ஹாட்லிக்கு செல்லவில்லை,ஆனால் இந்த பள்ளிக்காலத்தின் அற்புத நினைவுகளின் பயணத்தின் பாதையில் ஹாட்லிக்கு வெகுவிரைவில் செல்லும்.
மீண்டும் தொடர்ந்து பயணிக்கும் போது என்னோடு இன்னும் மூவரை அழைத்துக்கொண்டே போகலாம் என்ற எண்ணம்,அப்பொழுதுதான் யார் பிழைவிட்டாலும் தெரியாது பாருங்கோ,உங்களுக்கு நல்ல நினைவு இருக்கும் பள்ளிகூடத்தில காலை இறைவணக்கத்தின் போது இறைவனை போற்றிப்பாடுவது வழமை,அப்போது எல்லோரும் சேர்ந்து பாடினால் பிழை பிடிபடாது தானே,ஆகவே என்னோடு நீங்களும் வாருங்கள்

வாருங்கள் காலப்பெருங்களத்துக்கு சொந்தக்காரர் ஆதித்தன்
வாருங்கள் பூபதிக்கு சொந்தக்காரர் சௌந்தரி
வாருங்கள் அறிந்ததும் அனுபவமும் தரும் டயானா சதாசக்திநாதன்
”யான் பெற்ற மற்றும் பெறும் இன்பங்களையும் எல்லாவற்றையும் நீங்களும் பெற்று உங்கள் இனிய நினைவுகளையும் பொறித்துவிடுங்களேன்

மீண்டும் சந்திப்போம்

பிறந்தநாள் கொண்டாட்டம்

”இப்ப எல்லாம் கொண்டாட்டம் கூடிபோச்சு,எதுக்கெடுத்தாலும் கொண்டாட்டம்,முந்தியெல்லாம் கல்யாணக்கொண்டாட்டம்தான் பெரிசாக கொண்டாடப்பட்டது.கோயில் திருவிழாக்களுக்கும் அங்கை நடகிற நிகழ்வுகளுக்கும் தான் பெரிய முக்கியத்துவங்கள் வழங்கப்பட்டு பெரிசாக பெருமெடுப்புகளுடன் பட்டாசுகள் பலவிட்டு பல நிகழ்வுகள் ஒழுங்குபடுத்தப்பட்டு அந்தக்காலத்திலை இருந்து கொண்டாடுறது.இப்ப எல்லாம் கொண்டாட்டம் கூடிப்போச்சு” இப்படி ஒரு மூலையிலை இருந்து வாத்தியார் சொல்லிக்கொண்டிருந்தார்,


“இல்லையெணை அப்பா அது அந்தக்காலம் இப்ப எல்லாம் ஊருலகத்தில் அவளோடை படிக்கிற பொடியள் அப்படி இப்படி எண்டு எல்லாம் கொண்டாடேக்கை அவளுக்கு ஒரு ஆசை வருந்தானே தனக்கும் இந்த பிறந்த நாளைக்கொண்டாடினால் என்ன எண்டு” என்று விளக்கம் கொடுத்தாள் ஈஸ்வரி,
ஈஸ்வரி அவளின் அம்மா,வாத்தியாரின் மூத்த மகள்,மூத்த மகள் என்பதால் பொறுப்பானவளாக வளர்ந்தவள்,எல்லோராலும் மூத்தக்கா என்று சொல்லப்படுபவள்

தன் பேர்த்தியில் மிகவும் பாசமான அந்த பேரன் வாத்தியார் பேர்த்தியின் பிறந்த நாள் வருகிறது என்று மிகவும் சந்தோசப்பட்டாலும் பெருமெடுப்பில் கொண்டாடுவதில் அவருக்கு இஷ்டமில்லை,வேறொன்றுமில்லை இப்படியான கொண்டாட்டம் அவசியம் தானா என்பதுதான் அவரின் கேள்வி.

”அடி பிள்ளை எங்களிண்டை பிறந்த நாள் எல்லாம் யாருக்கும் தெரியாதெடி,அதுக்காக பிறந்தநாளை தெரியாமல் இருக்க வேணும் எண்டு சொல்லேல்லை,ஆனால் இதெல்லாம் என்னத்துக்கு எண்டு விளங்கவில்லை”
உனக்கு நினைவு இருக்கோ பிள்ளை உன்ரை பிறந்த நாளுக்கு நான் லைன்லை நிண்டு சுபாஷ் பேக்கரியிலை இரண்டு றாத்தல் பாண் வாங்கிக்கொண்டு வந்தன்,அதைத்தான் நீ மாஜரீன் பூசி வெட்டிக்கொண்டாடி எல்லாருக்கும் பகிர்ந்து சாபிட்டனாங்கள்”
அப்படிப்பிள்ளை நாங்க வந்த பாதை வேறை பிள்ளை,அதையெல்லாம் மறந்துபோக எனக்கெண்டால் மனமில்லை,”என்று வாத்தியார் தொடர்ந்து சொல்லிகொண்டே போனார்.

”அணேய் அப்பா சும்மா புறுபுறுக்காதையெணை.அதெல்லாம் அப்ப அப்ப கஷ்டப்பட்டதுக்காக இப்பவும் பாணையே வாங்கி வெட்டுறதோணை,சும்மா இரு,எல்லாரும் பார்த்து சிரிக்குங்கள்,”
என்றாள் மகள் ஈஸ்வரி,

அடுத்த வீட்டு சின்னையா அண்னையை பார் அந்த மனுசனும் இருக்குது தானே,அந்த மனுசன் ஒண்டும் கஷ்டபடாமல் அந்தக்காலம் இருந்ததோ,சுவிஸ்க்கும் போட்டு வந்திட்டுது,
நீங்க இப்படியே இருந்துகொண்டு அந்தக்கால கதையளை சொல்லிகொண்டிருங்கோ,அந்த மனுசம் சுவிஸ்க்கு போட்டுவந்தபிறகு பேர்த்திமாரை இனி ஜீன்ஸ் தான் போட வேணும் எண்டு விடாப்பிடியாக நிண்டதாம் தெரியுமோ,உங்களையும் கனடாவுக்கு அவன் மூத்தவன் வா வா எண்டால் போறியளே,போறீங்க இல்லை.சும்மா ஒரு பிறந்த நாள் கொண்டாட்டத்துக்கு பெரிய கதை அளக்கிறியள்”எண்டு சொல்லிக்கொண்டே போனாள் ஈஸ்வரி,

அடி பிள்ளை எனக்கு எல்லாம் தெரியும்.அதுகளை எல்லாம் பார்த்துப்போட்டுத்தான் சொல்லுறன், இந்த போறபோக்குகள் இதெல்லாம் நல்லதுக்கில்லை எண்டுதான் நான் சொல்லுறன்,என்னதான் செய்தாலும் பிள்ளையாரின்ரை வாசலிலை ஒரு பூசைகட்டிவிக்கிறதை எண்டாலும் செய்யுங்கோ,சரி நான் இப்ப கொஞ்சம் காத்து வாங்கலாம் எண்டு வெளியிலை போறன்,என்ன வாங்கிக்கொண்டு வாறது எண்டு சொல்லு”
என்று வாத்தியார் சால்வையையும் தட்டிகொண்டு வெளியில் செல்ல ஆயத்தமானார்,

“ஒண்டும் வேண்டாமணை நீங்க போட்டுவாணை,அவள் பிள்ளை வாற நேரம் இந்த நேரம் புறுபுறுத்துக்கொண்டு இருந்தால் நல்லாகத்தான் இருக்கும்,”என்று விடைகொடுத்தாள் ஈஸ்வரி

வாத்தியாருக்கு தன் பேர்த்தியின் பிறந்த நாளுக்கு இந்த கொண்டாட்டங்களை ஒரு புறம் வைத்துவிட்டு வேறு ஏதாவது செய்ய வேணும் என்று ஆசை,வெளியில் காற்று வாங்க போவதாக கூறிவிட்டு வெளியில் போனவர் தன் மூத்த மகனிடம் தொலைபேசி அழைப்பெடுக்கத்தான் போகிறார் என்று மகளுக்கு அவர் சொல்லவில்லை, நேரடியாக இணையத்தள அழைப்பெடுக்க போகிறார் தொலைத்தொடர்பு நிலையத்திற்குள்,

“தம்பி ஒரு கோல்(call) போடு கனடாக்கு”இது வாத்தியாரின் ஆரம்பம்

”ஐயா லாண்ட் போன்(land phone) நம்பரோ ஹாண்ட் போன் நம்பரோ(mobile No)” இது கடைக்காரனின் கேள்வி.

”யாருக்கும் தெரியும் தம்பி,முதலும் நான் கதைச்சனான் அவ்வளவு பெரிய காசு இல்லை எண்டு சொன்னவங்கள் அதுதான் வந்தன்” வாத்தியார் பதில் இது.

”ஆ ஆ ஆ அப்ப அது லாண்ட் போன் நம்பராகத்தான் இருக்கும், ம்ம்ம் ஐயா அது ரிங்(Ring) பண்ணுது, ரண்டாம் நம்பரிலை எடுங்கோ” என்று சொல்ல வாத்தியார் பறந்து சென்று எடுத்தார் தொலைபேசிஅழைப்பை,

”தம்பி கணேசு எப்படி இருக்கிறாய்” வாத்தியா அன்புடன் ஆரம்பிக்கிறார்

அணேய் ஐயா இருக்கிறனெணை நீங்கள் எப்பிடி இருக்கிறீங்கள்” மகன் பதிலுக்கு சுகம் விசாரிக்கிறான்.

எனக்கென்ன குறை தம்பி மூத்தவளோடைதானே இருக்கிறன்,சரிக்கு சரி சாப்பாடு,அப்ப அப்ப பேப்பர் பார்க்கிறதும்,பிறகு ரிவியிலை செய்தி பாக்கிறதுமாய் என்ரை காலங்கள் போகுதெடா வழமைபோல,” என்று வாத்தியார் தன் தற்போதய சுயசரிதையை சொல்லிக்கொண்டார்,

”தம்பி நான் இப்ப கோல் எடுத்தது இவள் மூத்தவளின்ரை பிள்ளைக்கு நாளைக்கு பிறந்த நாள் தம்பி” என்று வாத்தியார் சொல்ல முதல்

”அணேய் யார் எங்கடை ஆனந்திக்கோ அவளுக்கு இப்ப எத்தினை வயதாகுது” என்று சந்தோசம் கூட்டியபடி கேட்டான் கணேசு.

”ம்ம் அவளுக்கு இருபத்தியொண்டு,ஏதோ கீ பிறந்த நாள் எண்டு கேள்விப்பட்டன்,அதுக்கு ஏதோ இங்கிலிஷிலை சொன்னவகள்,எனக்கு அது வாயிலை வரவில்லையெடா தம்பி,”என்று வாத்தியார் உள்ளதை சொல்லிக்கொண்டே போக


”ஆ ஆ அதை பெரிசாக கொண்டாடுங்கோ,அதை எனக்கு வீடியோ எடுத்து அனுப்புங்கோவன்”என்றான் கணேசு

அட இவனும் இப்பிடித்தான் சொல்லுறான், நான் கேட்கவந்தது ஏதோ இவன் சொலுறது ஏதோ”என்று வாத்தியார் மனதுக்குள் முணுமுணுக்க

”என்னணை சவுண்டைக்காண இல்லை.சொல்லணை” என்று கணேசு திரும்பக்கேட்டான்.

தம்பி எல்லாம் பெரிசாகக்கொண்டாடுவம்,பெரிசாகக்கொண்டாட எனக்கென்ன விருப்பமில்லையே,ஆனால் எனக்கு ஒரு சின்ன விருப்பமெடா,இந்த நல்ல நாள் பிறந்த நாளிலை கஷ்டப்பட்ட பிள்ளைகளின்ரை விடுதிகளுக்கு ஏதாவது உதவி செய்தால் என்ரை பேர்த்தியிரை பெயராலை எனக்கு அது போதுமெடா”என்று தன் உள்ளத்து எண்ணத்தை பகிர்ந்தார் வாத்தியார்,இப்படியாக வாத்தியார் சொல்லிமுடிப்பதற்குள்

”அதுக்கென்னணை நான் நாளைக்கு காசு போடுறன் நீங்க ஏதாவது கொப்பி பேனை புத்தகங்கள் ஏதவாது உடுப்புக்கள் எண்டு வாங்கிக்கொடுங்கோ” என்று கணேசு சொல்ல வாத்தியாருக்கு ஏதோ பெரிய விடயம் செய்துவிட்ட மகிழ்ச்சி,
அதைவிட கொஞ்சம் பெருமையாகவும் வாத்தியார் உணர்ந்தார்,

”இப்போதையில் பொடியள் ஏதாவது உதவி செய்யிறது எண்டாலும் செய்யுதுகள்,அதே நேரம் எல்லாறும் கொண்டாடுற மாதிரி கொண்டாட வேணும் எண்டும் விரும்புதுகள்,சரி அதுக்கென்ன,எங்கட காலத்திலை தான் இதெல்லாம் இருக்கேல்லை
இப்ப என்ரை பேர்த்தியின்ரை பிறந்த நாளிலையாவது இப்படி எல்லாம் நடக்க காணக்கிடைச்சிருக்கே என்று பிள்ளையாரே அது போதும் எனக்கு” என்று மனதினுள் வேண்டுகிறார் வாத்தியார்,

அது மட்டுமில்லாமல் ”வாறவருசம் என்ரை கணேசுக்கும் வாற பிறந்த நாள் எனக்கு முன்னலை கொண்ட்டாடினால் என்ன?” என்று மனதினுள் கேள்வி உதித்தது வாத்தியாருக்கு,

“அவன் சின்னையாவும் சொன்னவன் எல்லோ அவனின்ரை இளையவன் பரமுக்கு ஜேர்மனியிலை ஒருக்கா பிறந்த நாள் கொண்டாடினது எண்டு, ஊருலகம் எல்லாம் அங்கை எடுத்த போட்டோ எண்டு ஒரு நாப்பது போட்டோ கொண்டுவந்து காட்டினவன் எல்லோ” என்று மனதினுள் கடந்த வருட நினைவுகளை மீட்டினார்.

அத்தோடு வாறவருசம் மூத்தவன் கனடாவுக்கு வா எண்டு சொன்னவன்,அப்ப அவன்ரை பிறந்த நாளுக்கு அங்கை நிக்கிற மாதிரித்தான் அவனுக்கு திகதி சொல்ல வேணும்,அப்பத்தான் அவனின்ரை பிறந்த நாளை எனக்கு முன்னாலை கேக்கு வெட்டிக்கொண்டாட வேணும், “என்று திட்டமும் போட்டார் வாத்தியார்,
“அந்தக்காலம் தான் எங்கடை கஷ்டங்களும் இருந்த இடங்களும் எங்களை கொண்டாடவிடவில்லை,அப்படியான எண்ணம் வரவும் விடவில்லை,அதிலை எங்களை பிழை சொல்லியும் என்ன? லைன்லை(Line) நிண்டு பாண் வாங்கி சாப்பிட்ட காலத்திலை எப்படி அவனுக்கு நான் கொண்டாடி அழகு பார்க்க?,அதுக்கு அந்தக்காலம் கைகுடுக்கேல்லை,இப்ப அவனுக்கு கேக்கு வெட்டி நான் கொண்டாட போக வேணும் என்று திட்டம் போடுகிறார் வாத்தியார்

இப்படியாக பெரிய திட்டத்துடன் பேர்த்தியின் பிறந்த நாளில் அதிகாலையே எழுந்து பிள்ளையாருக்கு பூசைகட்டுவித்து மாலை நேர பிறந்த நாள் கொண்டாட்டத்தில் தனக்கு எப்போதும் பிடித்த வேட்டி சால்வை உடுத்தவராய் மிகவும் சந்தோசமாக காணப்பட்டார் வாத்தியார்,



முந்தியெல்லாம்-முன்பெல்லாம் ,பொடியள்-இளவயதுக்காரர், கொண்டாடேக்கை-கொண்டாடுகின்றபோது,போறபோக்குகள்- நடக்கும் சம்பபவங்கள்,

தென்கச்சி கோ.சுவாமிநாதனின் இழப்பு கவலையளிக்கிறது



காலை வேளைகளில் ஒவ்வொரு நாளும் இன்று ஒரு தகவலுடன் சந்திக்கும் தென்கச்சி கோ.சுவாமி்நாதன் இவ்வுலகை நீத்துவிட்டார் என்பது மிகக்கவலைதரும் விடயமாகும்.
பாடசாலைக்காலங்களின் நாங்கள் இருக்கும் போது காலைவேளையில் அப்படியும் இப்படியுமாக அவசரத்தில் காலையுணவு எடுக்கும்போதும் சுடச்சுட தேநீர் அருந்தும் போதும் ”இன்று ஒருதகவலுடன்” வந்துவிடுவார் தென்கச்சி அவர்கள்,அந்தக்காலங்களின் ஆகாச வானொலியின் செய்திகளையே எம்மவர்கள் கேட்பதுண்டு,அதன் பின்னர் ”இன்று ஒரு தகவலுடன்” சந்திப்பார் அந்தப்பெரியவர்,


வாழ்வியலில் முன்னேறத் தேவையான கதைகளே அவர் சொல்லும் கதைகள்,பொதுவாக அப்படியான கதைகள் இளம்பராயத்தில் யாரையும் கவர்ந்துவிடுவதில்லை எனினும் அவரின் கதை சொல்லும் பாங்குதான் எல்லோரையும் கவர்ந்திழுப்பதற்கு காரணம்,
ஆரம்பத்தில் அவர் ஏதாவது நடைமுறை உதாரணத்தை கூறுவார்,தொடர்ந்து தத்துவம் பகிர்வார்,அதைத்தொடர்ந்து ஒரு நகைச்சுவை விடயத்தை நடைமுறை வாழ்க்கையோடு இணைத்து கூறுவார், சொல்லும் பாங்கு எதிலும் சிறிதும் இடைவெளில் இல்லாமால் கேட்போரை சிறிதும் புலன் திரும்பாது இருக்கும் படியாக இருக்கும்.அதைவிட கதை முடிவு தான் எல்லோரையும் பேசவைக்கும்,அவரையும் உலகப்புகழில் பேசவைத்ததும் அவரின் கதைமுடிவுகள் என்று கூறலாம்,
அத்துடன் தென்கச்சி அவர்களின் குரல் வளமும் ஒரு வித்தியாசமான,சுவையான ஒரு கவர்ச்சியானதாகும், எந்த ஒரு பாடல்கள்,செய்திகள்,விளம்பரங்களுக்குமிடையில் தென்கச்சியின் குரல் ஒலிக்கும் போது எங்கிருந்தாலும் அதை உணரமுடியும், எங்கிருந்தாலும் உடனடியாக வானொலியை நோக்கி ஓடிவரச்செய்யும்,குரலிலேயே நகைச்சுவையும் சந்தோசமான இடங்களில் சந்தோசமும் வெளிபடுத்தக்கூடியவகையில் குரலின் தளதளம்பலுடன் ஒரு கம்பீரமிருக்கும்,

என் பாடசாலைக்காலங்களில் அவரின் கதையுடன் தான் நான் சைக்கிள் எடுத்துக்கொண்டு கல்லூரி நோக்கிப்போவது வழமை,அவரின் கதையின் நகைச்சுவையின் பரிமாறத்துடனேயே நாம் கல்லூரி செல்வதுண்டு,காலையுணவு எடுப்பதற்கு மறந்திருக்கிறோம்,ஆனால் இன்று ஒரு தகவல் கேட்பதற்க்கு மறந்ததில்லை,அப்படியாக கல்லூரி வாழ்க்கையில் எம்மோடு பின்னிப்பிணந்தவர் அந்த பெரியவர்,


அவரின் கதைகள் அன்னாரின் சொந்த ஆக்கங்கள் என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்,அவரின் கதைகள் கூட பாகம் ஒன்று, இரண்டு என்று பல பாகங்கள் என்று வெளிவந்திருக்கிறது,தான் வானொலியில் பகிர்ந்து கொள்ளும் தன் ஊரோடு கூடிய வட்டார மொழியிலேயே அந்த நூலை அவர் எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கது,ஆரம்பத்தில் வாசிப்பவர்களுக்கு சில வேளைகளில் வாசிக்கும் போது சொற்பதங்களின் கருத்துகள் உணர்ந்துகொள்வதற்கு கடினமாக உணந்தாலும் தொடர் வாசிப்பால் அந்த கதைகளின் உள்ளார்ந்த விடயத்தையும் நகைச்சுவைகளையும் உணரமுடியும் என்பது வெளிப்படையுண்மை,

தொடர்ந்து தொலைக்காட்சிகளிலும் தென்கச்சி அவர்கள் ”இன்றைய நாள் இனிய நாள்” என்ற ஒரு அம்சத்தை நேயர்களுடன் பகிர்ந்தவர்,அதிலும் பல்வேறு நேயர்களைக்கவர்ந்தவர்,
ஆனால் வானொலியிலேயே எம் கல்லூரிக்காலத்திலிருந்து எம்மோடு இணைந்தவர் என்று சொல்லலாம்,அவர் தகவலுடன் வரும் நேரம் இதற்கு முக்கிய காரணம் என்றும் சொல்லலாம்,

இப்படியாக எம் கல்லூரிக்காலத்தில் இணைந்திருந்த விடயங்களில் ”இன்று ஒரு தகவல்” கூட ஒரு முக்கிய அம்சமே,அதற்கு சொந்தக்காரர் எங்கள் தென்கச்சி கோ.சுவாமி நாதன் அவர்கள்,
அப்படி எம்மோடு இணந்திருந்த ஒருவரின் இழப்பு கூடித்திரிந்த ஒரு நட்பை இழந்துவிட்டதான கவலை,அவரின் இழப்பு புத்தம்புது தகவல்கள் மற்றும் வாழ்வியலின் படிப்பினைகள் தத்துவங்கள் தேடுபவர்களுக்கு பெரும் இழப்பு,மிகுந்த கவலைதரும் விடயம்,அவரின் கதைகளும் அதன் நூல்களும் குரல் வண்ணமு்ம் எப்போதும் தென்கச்சி கோ.சுவாமிநாதன் அவர்களி நினைவுபடுத்திக்கொண்டேயிருக்கும்

படம் ஹிந்து இணையத்தளம் நன்றி

09-09-09 : வரலாற்றில் அமீரகம் தன் பெயரைப்பொறிக்கிறது



09.09.09 இந்த திகதிக்காக காத்திருந்து அந்த திகதியிலேயே பல்வேறு சவால்களுக்கும் முகம்கொடுத்து வெற்றிகரமாக வளைகுடா நாடுகளில் முதற்தடவையாக மெட்ரோ ரயில் தானியங்கி சேவை ஆரம்பித்து சாதனை படைக்கிறது ஐக்கிய அரபு இராச்சியம் அமீரகம்.பொதுவாக அபிவிருத்தி அடைந்த நாடுகளில் இந்த மெட்ரோ ரயில் சேவை இருக்கின்றது எனினும் வளைகுடா நாடுகளில் முதற்தடவையாக இதை தன் சேவைக்கு கொண்டுவர டுபாய் மாநகரம் தயாராகிவிட்டது. பொதுவாக சற்று வித்தியாசமாக தங்கள் வடிவமைப்புக்களும் அறிமுகப்படுத்தல்களும் இருக்க வேண்டும் என்று விரும்பும் அனைத்து வளகுடா நாடுகளைப்போலவே அமீரகம் டுபாயும் தனது ஆரம்பத்திகதியை 09.09.09 என்றவாறே தெரிந்தெடுத்து இரவு 09 மணி வரை காத்திருந்து அதை ஆரம்பிக்கிறது.ஆனால் 09மணி 09 நிமிடம் 09 செக்கன்களிலோ இந்த ஆரம்பம் என்று அறியக்கிடைக்கவில்லை.அது நடந்தாலும் ஆச்சரியபடுதற்குமில்லை.

குறுகிய காலத்து செயற்றிட்டத்தின் விளைவாக கிடைத்த இந்த சேவை என்றும் அதன் பயன் மிகப்பெரியது என்றும் பெருமைப்படுகிறது அமீரகம்,இதன் மூலம் பொருளாதாரத்தில் மிகவும் ஒரு முக்கியமான கட்டத்தின் ஒரு உன்னதமான நிலைக்கு நகரமுடியும் என்றவாறே தன் சேவையை ஆரம்பிக்கிறது.ஏறத்தாள முப்பாதாயிரத்துக்கும் மேற்பட்ட பல்வேறு தொழிலாளிகளின் ஒட்டுமொத்த செயற்பாடுகளும் மிக வேகமான செயற்பாடுகளும் இதில் முக்கிய பங்கு வகித்திருக்கிறது.இவர்களில் பெரும்பாலானோர் நம்மவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.அவர்கள் இந்த வேலைகளில் தங்களை இணைத்துக்கொண்டமை குறித்து பெருமைப்பட்டதையும் அவதானிக்க முடிகிறது.








அதுமட்டுமல்லாமல் நகரங்களின் வீதிப்போக்குவரத்தில் காணப்படும் வாகன நெரிசல்களை குறைக்க முடியும் என்பதோடு நேரம் என்பது முக்கியமான இந்த காலங்களில் இந்த ஆரம்பம் நேரச்சேமிப்பை உறுதிசெய்யும் என்பதும் மிகப்பெரிய ஒரு எதிர்பார்ப்பாகும்.அதேபோல மூன்று பெரும் சர்வதேச விமான நிலையங்களுடன் இருக்கும் டுபாய் மாநகரம் அவற்றுடனான ரயில் சேவைத்தொடர்பு பிரயாணிகளின் வருகையில்,பயணத்தில் வரும் இடர்பாடுகளை தவிர்க்கமுடியும் என்று எண்ணபடுகிறது.இதன் மூலம் உல்லாசப்பயணிகளின் வருகையை அதிகரிக்க எண்ணுகிறது டுபாய்.அதன் முலம் உல்லாசப்பயணத்துறையையும் தன் பொருளாதாரத்தில் நம்பியிருக்கும் டுபாய் அதில் கூடியளவு வருமானத்தை ஈட்டமுடியும் என்றும் நம்புகிறது.

ஒட்டுமொத்தத்தில் மிகபெரிய ஆடம்பர வேலைப்பாடுகளுடன் காசைக்கொட்டி அதில் பெரும் பணியை முடித்திருக்கிறது டுபாய்.ஒவ்வொரு ரயில் நிலையங்களின் இறுதி வேலைப்பாடுகள் மிகவும் நேர்த்தியாகவும் ஆடம்பரத்தின் ஒட்டு மொத்த வடிவமாகவும் காணப்படுவதை அவதானிக்க முடிகிறது.




பச்சை,சிவப்பு என்று பெயர்களை சூட்டி தனது ரயில் பாதைகளை வடிவமைத்திருப்பதோடு தொடர்ந்தும் நீலம் மற்றும் நாவல் நிறங்களுடனான் பெயர்களுடன் வடிவமைக்கவிருப்பதாக அறிவித்திருக்கிறது மெட்ரோ ரயில் சேவை அணி.




இவைகளோடு உலகத்தரங்களில் பல்வேறு நவீன தொழி்நுட்பங்களை உள்ளடக்கியதாக தானியங்கி ரயில் சேவையாக வருகிறது டுபாய் மெட்ரோ(DUBAI MEDRO),அதைவிட உலகத்தில் மெட்ரோ சேவையில் உள்ள ரயில்களில் மிகப்பெரிய ரயிலைக்கொண்டதும் இந்த டுபாய் மெட்ரோ ரயில்சேவை என்பதும் குறிப்பிடத்தக்கது.

மொத்தத்தில் உலகின் மிகபெரிய கட்டடம்,மற்றும் மிகவும் வித்தியாசமான வடிவங்களுடனான கட்டடங்கள் என்று எல்லாம் பெருமையடையும் டுபாய் மாநகரம் இப்போது மெட்ரோ ரயில் சேவையையும் ஆரம்பித்து பெருமைப்படுகிறது.பல்வேறு நாடுகளிலும் எப்போதே ரயில் சேவைகள் காணப்பட்டாலும் அண்மையில் ஆரம்பித்த இந்த டுபாய் மெட்ரோ மிகவும் உன்னத நிலையில் வலம் வரும் என்பதில் ஐயமில்லை.தொழி நுட்பங்களில் பல்வேறு வருகைகளுக்கு பின் ஆரம்பிக்கப்பட்டதால் அவற்றின் தொகுப்பாக அமைந்திருக்கும் இந்த மெட்ரோ சேவை தொழி நுட்ப உலகில் ஒரு முக்கிய வருகை என்பதும் மறுப்பதற்குமில்லை.




இதிலை இன்னுமொரு விசயம் ”என்னடா இப்பதான் இந்த நாட்டிலை ரெயின் ஓடப்போகுதோ? எங்கடை நாட்டிலையெல்லாம் எப்பவே எந்த காலத்திலிருந்தே இருக்கெல்லோ” என்று பெரிய கொட்டாவி விடுவதும் விளங்குது,அது ஒவ்வொரு நாட்டினதும் தேவையில் தங்கியிருப்பதோடு மட்டுமல்லாமல் அதை எவ்வளவு தொழிநுட்பங்களின் சேர்க்கையாக சேவை அமையப்பெற்றிருக்கிறது என்பதும் குறிப்பிட்டு சொல்லவேண்டிய அம்சங்களாகும்.
இந்தப்பதிவை எனக்கும் சரியாக 09.09.09 ஆம் நாள் ஒன்பது மணி ஒன்பது நிமிடம் ஒன்பது செக்கனுக்கு போடாலாம் என்று ஒரு எண்ணம்,டுபாய் மெட்ரோ(DUBAI MEDRO) ஆரம்பித்து அது ஓட வெளிக்கிட நானும் பதிவேற்றி ஓடலாம் என்ற எண்ணத்தில் சரியாக ஐக்கிய அரபு இராச்சியம் அமீரக நேரத்தில் பதிவேற்றப்படுகிறது.இந்த புகைப்படங்கள் ஐக்கிய அரபு இராச்சியம் அமீரகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் Gulf News இலிருந்து பெறப்பட்டது, நன்றி Gulf News

வல்லிபுரத்தானும் ஞாயிற்றுக்கிழமையும்


பொதுவாக ஞாயிற்றுக்கிழமை என்றால் தாயகத்தின் வல்லிபுர ஆழ்வார் கோயிலுக்கு எல்லோரும் போவது வழக்கம்.அதுவும் ஆவணி ஞாயிறு என்றால் இன்னும் ஒரு படி மேலாக வல்லிபுர மாயவனின் வாசல் களைகட்டியபடியே இருக்கும். நாளை ஆவணியில் வரும் இறுதி ஞாயிற்றுக்கிழமை,பின்னர் சொல்லவா வேணும்,

ஈழத்தின் முக்கியமான விஷ்ணு கோவில்களாக பொன்னாலை வரதராஜபெருமாள் ஆலயமும் துன்னாலை வல்லிபுர ஆழ்வார் ஆலயமும் பிரபல்யம் மிக்ககைவையாகும்,நான் அறிந்த மட்டில் வல்லிபுர ஆழ்வார் ஆலயத்துக்கும் அதன் இருப்பிடத்திற்கும் சில சிறப்புக்கள்,யாழ்ப்பாணத்தின் தலை நகரங்களில் சிங்கை நகர் என்று இந்த வல்லிபுரத்தைத்தான் குறிப்பிட்டார்கள் என்று ஆராச்சியாளர்கள் சொல்கின்றார்கள்.முன்னைய காலங்களில் வல்லிபுரத்தை சூழவும் சிறு சிறு கிராமங்கள் காணப்பட்டதாகவும் அது காலப்போக்கில் அவையெல்லாம் இல்லாது போய்விட்டாதாகவும் ஆராச்சியாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.


சரி இப்படியாக ஈழத்தின் வடபுலத்தே வடமுனையில் உள்ள பிரசித்தமான வல்லிபுர ஆழ்வார் மருத நிலமும் பாலை நிலமும் கூடிய அற்புதமான இடத்தில் அமைந்திருக்கிறது,
ஆலயத்துக்கு ஞாயிற்றுக்கிழமை என்றால் ஒரு பெருங்கூட்டமே படையெடுக்கும்,வெள்ளை வெளேரென வேட்டிகளும் உடுத்தவர்களாய் ஆடவர்களும் அழகழகான சேலைகளும் உடுத்து தமக்கே உரிய பாணிகளில் நடை நடந்து பெண்களும் வல்லிபுர மாயவன் வாசலை வந்து வந்து அலைமோதும் கூட்டம்.எப்போதும் கண்ணனின் கீதங்கள் காதோரம் ஒலித்தபடியே இருக்கும்,கோபுர வாசலைக்கண்டவுடன் எல்லோரும் ”மாயவா” என்று உணர்வுடன் தரிசிக்கும் பாங்கு, எல்லாம் சேர்ந்து ஒரு வித்தியாசமான சூழல் அந்த வல்லிபுரத்தானின் சூழல்.

வல்லிபுர மாயவனிடம் செல்வதற்க்கு முதல் எல்லோரும் அண்மையில் இருக்கும் பிள்ளையார் ஆலயத்துக்கு செல்வது வழமை,அங்கு பல்வேறு சுவாரஷ்யமான விடயங்கள்,ஆலயத்தின் பின்புற வீதியில் அமைந்திருக்கும் தீர்த்தக்கேணியில் விரும்பியவர்கள் எல்லோரும் நீராடுவது வழமை,மூன்றடி கயிற்றினால் கட்டிய வாளியுடன் நீரினை அள்ளி மிகவும் இளம் வேகத்துடன் இளைஞர்கள் நீராடுவர்,அது மட்டுமில்லாமல் எல்லோரும் கேணியில் சுற்றிவர நின்று நீராடுவதுடன் அவ்வப்போது பகிர்ந்துகொள்ளும் நகைச்சுவைகளும் இதனால் முளைத்துவிடும் நட்புவட்டங்கள் எல்லாம் மனதிற்கினியவை,தொடர்ந்து பிள்ளையார் தரிசனத்துடன் வல்லிபுரத்தானின் வாசல் செல்வது வழமை.அங்கு ஒலிக்கும் கிருஷ்ண கீதம் கோபுர தரிசனம் எல்லாம் பக்திமயம்,
இறுதியில் வல்லிபுரக்கோயிலின் நாமம் தரிக்க யாரும் தவறுவதில்லை, நாமம் என்பது சந்தனம் போன்ற பொட்டுப்போல நாமப்பொட்டு அது வல்லிபுரக்கோயிலில் கிடைக்கக்கூடியது,பொதுவாக வல்லிபுரக்கோயிலுக்கு சென்று வருபவர்களை பார்த்தால் அவர்களின் நாமப்பொட்டு அந்த கோயிலின் மூலஸ்த்தானத்தையும் வல்லிபுர மாயவனையும் எப்போதும் நினைவுபடுத்திக்கொண்டே இருக்கும்.
ஆலயத்தை சூழவுள்ள விருட்சங்களும் விக்கிரகங்களும் எப்போதும் ஆலய வீதியிலேயே ஒரு பக்திஉணர்வைத்தரும்,சங்கநிதி பதுமநிதி என்று ஆலயத்தின் வாசலிலிருந்து ஆரம்பித்து ஒரு மரத்திற்கடியில் ஒரு நாகதம்பிரான்,சப்த கன்னிகள் என்று வித்தியாசமான சூழல்.





அதைவிட கொஞ்சம் சுவாரஷ்யமான விசயங்களையும் சொல்லத்தானே வேணும்,அந்தக்காலத்திலை சைக்கிள் ஓடத்தெரியாத காலத்திலை எனக்கு வண்டில் மாட்டில் செல்லகூடிய ஒரு அற்புதமான சந்தர்ப்பங்கூட கிடைத்திருந்தது,ஆவணி ஞாயிறில் மாயவனுக்கு பொங்கல் சிறப்பு பெரிது,என் அம்மம்மாமார் இந்த விடயத்திலை எல்லாம் பின் நிற்பதில்லை,எந்தெந்த ஆலயங்களில் எல்லாம் சிறப்புக்கள் உண்டோ அந்த அந்த ஆலயங்களுக்கு எங்களை அழைத்துச்செல்லதவறுவதுமில்லை,அங்கு பொங்கல் படையலை செய்யத்தவறுவதுமில்லை,அப்ப விடியவே எழுந்து வண்டிலில் மாடு பூட்டி அங்கு சென்று பொங்கி படைத்து வீடேகுவது வழமை,அதில் வரும் இன்னும் பல விடயங்களை வேறு பதிவில் அலசலாம் என்று எண்ணம்

பின் ஒரு கொஞ்சக்காலம் போக சமாதான காலம்,ஊருக்கு எல்லோருடைய கையிலும் சைக்கிள் இருந்த காலம் போய் மோட்டச்சைக்கிள் எல்லாருடைய கையிலும் வந்த காலம்,மோட்டச்சைக்கிள் வாங்கினால் அதை வல்லிபுரக்கோவிலுக்கு கொண்டு செல்வது என்பதும் எல்லோரும் வழமையாக்கிவிட்ட விடயம்,அதைப்போலவே நண்பர்கள் எல்லோரும் சேர்ந்து ஆலயம் செல்வதும் அதன் பின் புற்றளை மற்றும் துன்னாலை நண்பர்களின் வீடுகளில் சென்று அளவளாவி வீடேகுவதும் வழமையாக்கிவிட்டகாலம்,அதிலும் வரும் சுவாரஷ்யமான இன்னோரன்ன விடயங்களை நேரமிருந்தால் வேறொரு பதிவில் அலசலாம் என்று எண்ணம்



சரி ஆலய தரிசனத்தின் பின் இறுதியில் எவரும் மறக்காத விடயம்,அது ஆலயத்துக்கு சென்றால் அது கட்டாயம் என்ற நிலமை சிலருக்கு,அது தான் “மள்ளாக்கொட்டை” வங்குவது,ஈழத்துமுற்றத்தில் வட்டாரவழக்காக இருக்கும் இன்னுமொரு சொல்தான்,இதை மள்ளாக்கொட்டை என்று சொன்னாலும் அதை கச்சான் என்று சொன்னால் தான் சிலருக்கு புரியும் என்று நினைக்கிறேன்,அதில் ஆலயத்துக்குள் செல்ல முதல் சில கச்சான் விற்கும் ஆச்சிகளிடம் ஏதும் கையில் வைத்திருக்கும் படி கொடுத்துவிட்டுபோனால் திரும்பவரும் போது அவரிடமே அந்த கச்சானை வாங்கவேண்டும் என்பதும் எழுதாத சட்டம்,அந்த கச்சானையும் வாங்கிக்கொண்டு அதையும் உடைத்து உடைத்து சாப்பிட்டபடி வீடேகுவது வழமை.

இப்படியாக ஞாயிற்றுக்கிழமை என்றால் வல்லிபுர மாயவன் வாசலில் எப்போதும் சிறப்புத்தான்.அதுவும் ஆவணியில் வந்துவிட்டால் அதற்கு பெருஞ்சிறப்பு,

இந்த புகைப்படங்கள் அடியேன் யாழ்ப்பாணத்திற்கு சென்றிருந்தபோது நண்பன் சீலனின் உதவியால் எடுக்கமுடிந்தவை,நன்றி சீலன்

வீதி நாடகங்கள் ஈழத்தில் இடம்பிடித்த மற்றுமோர்கலை

கலை என்பது ஒரு ஊடகம் என்று கூட சொல்லலாம்,அவரவரின் ரசனைகளுக்கு தீனி போடும்படியாக கலைகள் அமைந்துவிடுவதும் அவையே மக்கள் மத்தியில் இடம்பிடித்துவிடுவது தான் வழமை,அப்படியான கலைகளும் மக்களுக்கு செய்திகளை கொண்டு செல்லும் ஒரு ஊடகமாக இருப்பதை யாராலும் மறுக்க முடியாது.
அவை அதாவது மக்களுக்கு எடுத்துச்செல்லவேண்டிய கருத்துக்களை சாதாரணமாக பேச்சுக்களால் சொல்வதைவிடுத்து அவற்றை ஏதாவது இசைவடிவிலோ அல்லது ஏதாவது ஒரு கலை ஊடகத்தின் வாயிலாகவோ சொல்லுவதன் மூலம் அந்தந்த விடயங்கள் மக்கள் மத்தியில் பிரபல்யம் அடைவதோடு ஆணித்தரமாக மனதில் இடம்பிடித்துவிடும் என்பதையும் மறுக்க முடியாது,ஓவியங்கள், நாடகங்கள்,வில்லிசைகள்,பல்வேறு கருத்துக்களை சுவாரஷ்யமாக அலசும் பட்டிமன்றங்கள் போன்ற கலைகள் இவற்றில் முக்கியமாக நினைவில்வருகின்றன.

அந்த வகையில் தாயகத்தில் சிறந்த ஒரு கலை தான் வீதிநாடகம், நாடகங்களின் வகைகளுக்குள் இவற்றையும் அடக்கலாம் எனினும் இந்த வகையான நாடகங்களுக்கு ஒரு தனிப்பட்ட சிறப்பான இடம் உண்டு,சில வேளைகளில் எந்த வித அலங்காரங்களுமின்றியே நடிகர்கள் மேடையேறிவிடுவதுண்டு.உண்மையில் நாடக நடிகர்களுக்கு தங்கள் நடிப்புத்திறனை வெளிக்காட்டுவதில் வீதி நாடகத்தில் கொஞ்சம் சிரமம் என்று தான் நான் சொல்வேன்,ஏனென்றால் அதில் எந்த வித உடையலங்காரங்கள் மற்றும் மேடை அமைப்புக்களின்றி நடத்தும் நாடகமாதலால் கொஞ்சம் கடினம் தான்.தங்களை நடிகர்கள் என்று அடையாளப்படுத்துவதற்காக தங்கள் தலைகளிலோ அல்லது இடுப்பிலோ ஏதாவது நிறத்துடன் கூடிய துணியைக்கட்டிக்கொள்வர், கூடுதலாக மஞ்சள் அல்லது செம்மஞ்சள் நிறமுடைய துணிகளை கட்டியிருக்கவே கண்டிருக்கிறேன்.அதனோடே முடியும் வரை நடித்துவிட்டு வெளியேறுவர்,அதேபோலத்தான் அந்த அந்த பாத்திரங்களுக்கு ஏற்றபடியே சாதரண உடைகள் அணிந்து சிலர் வருவர் மேடைகளில்,
இதிலென்ன சிறப்பம்சமென்னவெனில் சிறிதளவும் ரசிகர்களை முகம் திரும்பாதபடி அவர்களின் நடிப்புத்திறன் இருக்கும்,அத்துடன் பார்வையாளர்கள் வட்டவடிவமாக சூழ்ந்து இருப்பதால் நடிக்கும் வேளைகளில் விடப்படும் எந்தவொரு சின்னத்தவறும் கூட பார்வையாளர்களால் உணரப்படுமென்பதால் மிகக்கவனமாக நடிகர்கள் இருக்க வேண்டும்,இதனாலேயே கொஞ்சம் சிரமம் என்றேன்,இவை எல்லாவற்றையும் விஞ்சி மக்களின் ரசனைக்கு ஏற்றபடியே நடித்து வெளியேறுவர் நடிகர்கள்.


பொதுவாக வீதி நாடகத்தின் கருவாக அந்த அந்த காலத்திற்கு ஒப்பான கருவையே தெரிந்தெடுப்பர்.சாதரணமாக நாடகங்களாக இருந்தால் இலக்கியக்கதைகளோ அல்லது புராணக்கதைகளோ அல்லது வாழ்வியல் கதைகளோ அவற்றை அலங்கரிக்கும்,ஆனால் வீதி நாடகங்களில் ஏதாவது மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஊட்ட வேண்டும் என்றோ அல்லது அரசியல் நிலைகளை மக்களுக்கு உணர்த்த வேண்டும் என்றோ சிந்திப்பதால்தான் வீதிநாடகத்தை தெரிவுசெய்வர் இயக்குனர்கள்.அது மட்டுமல்ல இலகுவாக விரைவாக கருத்துக்கள் மக்களை அடைய வேண்டும் என்று சிந்திப்பவர்கள் தெரிவுசெய்யும் கலைதான் இந்த வீதிநாடகம்.
உதாரணத்திற்கு சுற்றுச்சூழல் பாதிப்பு [பற்றி மக்கள் மத்தியில் அவசரமாக உணர்த்த வேண்டிய கட்டாயம் உணரப்படுமிடத்து இந்த வீதி நாடகம் தெரிவுசெய்யபடும் எனபதில் மறுப்பிற்கு இடமில்லை.

அது மட்டுமல்லாமல் இவை மக்களை நோக்கி இது கொண்டு செல்லபடும்.பெரிய பெரிய நாடகங்கள் என்றாலோ அல்லது பெரிய பெரிய மேடைகளில் இடம்பெறும் நாடகங்கள் என்றாலோ அவற்றை சகல பாமர மக்களுக்கும் பார்ப்பதற்கோ அல்லது ரசிப்பதற்கோ கிடைக்கும் என்று சொல்ல முடியாது,அதனால் அப்படியான மக்களை நோக்கி இந்த வீதிநாடகம் வீதி வீதியாக சென்றுகொண்டிருக்கும்,இதன் மூலம் மக்களின் ரசனைக்கும் தீனி என்பதோடு அவர்களுக்கு செல்ல வேண்டிய கருத்தும் சென்றுவிடும் எனபது தயாரிப்பாளர்களின் யுக்தி,
அது மட்டுமல்லாமல் இந்த நாடகங்களில் இடம்பெறும் வசன நடைகள் ஒருபோதும் மக்களில் பேச்சுமொழியைவிட்டு விலகமாட்டாது.சாதரண வாழ்க்கையில் புழக்கத்தில் உள்ளவற்றை மட்டுமே நாடக உரையாடல்களில் அவதானிக்கமுடியும்,இவயெல்லாம் இந்நாடகத்தின் சிறப்புக்கள்

இவற்றிற்கெல்லாம் எப்பொழுது எங்கு இடம்பெறும் என்றெல்லாம் முதலே அழைப்புவிடுவதுமில்லை,பிரச்சாரம் செய்வதுமில்லை,சுவரொட்டி ஒட்டுவதுமில்லை,திடீரென ஒலிபெருக்கியில் ஒலிக்கும் ”அன்பார்ந்த ....... மக்களே இன்று மாலை மூத்தவிநாயகர் ஆலய முன்றலில் ”புதுயுகம் காண்போம்” வீதி நாடகம் இடம்பெறவிருப்பதால் அனைத்து மக்களையும் மிக வேகமாவே வந்து கூடுமாறு பணிவாக வேண்டுகிறோம்,அந்த அறிவித்தலை மீண்டும் ஒருமுறை அறியத்தருகிறோம்” என்றவாறாக உடனடி அழைப்பாக மீண்டும் மீண்டும் அழைக்கும் ஒலிபெருக்கி அழைப்பில் ஊர் மக்களெல்லோரும் ஒன்றாகிவிடுவர். வீதி நாடகங்களின் சுவாரஷ்யமும் அதனூடாக தரப்படும் சிறப்பான விடயங்களும் மக்களின் வேகமான வருகைக்கான முக்கிய காரணங்கள்.(இங்கு குறிப்பிட்ட விடயம் மற்றும் நாடகத்தின் பெயர் எல்லாம் அறிவித்தலின் நடையை குறிப்பிடும்போது அதன் படியே கூறப்பட்டதே ஒழிய இது உண்மையாக இடம்பெறும் என்று எல்லோரும் அங்கங்கு இருக்கும் மூத்தவிநாயகருக்கு சென்று விடாதீர்கள்,ஹிஹிஹி)

இந்த வீதி நாடகம் ஐரொப்பிய மண்ணிலும் எம்மவர்களால் அரங்கேற்றப்பட்டது பற்றி அறியக்கிடைத்தது மகிழ்ச்சியளிக்கிறது.உணர்வுகளையும் எம்மவர்களின் கருத்துக்களும் அதில் பிரதிபலித்ததாக அறிய முடிந்தது,வீதி நாடகம் அங்கும் வீதிகளில் இடம்பெற்றமை அதன் சிறப்புக்களையும் அதன் மூலம் மக்களுக்கு கருத்தை இலகுவில் அடையச்செய்யலாம் என்பதையும் உறுதிபடுத்தியிருக்கிறது.

இவ்வாறாக ஈழத்தில் இடம்பிடித்த கலைகளில் வீதி நாடகத்துக்கும் ஒரு சிறப்பான இடம் இருக்கிறது என்பதை உணரமுடியும்.இப்படியான கலைகள் என்றும் அழியவிடாது பேணிக்காக்க வேண்டும் என்பதே இந்த பதிவின் நோக்கம். என்னதான் நாகரிகமான கலைகள் மற்றும் வீட்டிலுருந்தவாறே எல்லாம் பார்த்துவிடலாம் என்றவாறாக அமைந்த சில சீரழிக்கும் கலைகள் வந்தாலும் இப்படியான கலைகள் என்றென்றும் வாழ எல்லோரும் தயாராக வேண்டும.தயாரிப்பாளர்கள் தயாராகும் அதேவேளை ரசிகர்களின் ரசனையும் இப்படியான கலைகளின் சிறப்பை உணர வேண்டும்.

படம் ஆழியூரானின் நடைபயணத்திலிருந்து வீதி நாடகத்தின் அமைப்பை உணர்த்த வேண்டும் என்பதற்காக எடுக்கப்பட்டது,