புலத்தில் தொலைத்த பாவிகள்.....

இந்த மானுடன் ஏதோ தேடுகிறான்
முகத்தில் ஏக்கம் தேங்கிக்கிடக்கிறது.
மானுடன் என்பதைவிட அவன் இளைஞன் ................!

மௌனத்தினால் ஏதோ தேடுகிறானே ....?
இல்லை இல்லை
மனத்தினால் தன் நினைவுகளால்
ஏதோ அசை போடுகிறான்

ரெயினேர்ஸ் லேன் புகையிரத நிலையம்.........

உட்கார்ந்து இருந்தேன் ரெயினின் வரவுக்காக.............?
தமிழா என்று கேட்டான்
யாழ்ப்பாணமா என்றும் கேட்டான்
அக்காவுக்கு இருக்க இடம் வேணும்
இருந்தால் சொலுங்கோ என்றான்
தொலைபேசி இலக்கத்தை கேட்டேன்
தெளிவாக எழுதியே தந்தான்.

எழுதுவதில் தெளிவும்
நடை மிடுக்கோடு எடுப்பும்
உடை காட்டிய நாகரீகமும்
அக்காவின் பாசத்தோடு
இடங்கேட்ட பாசத்துடிப்பும்
அவனை தொடர்ந்து பார்க்க பார்க்க தோன்றியது...........

அலைகிறான்.
ஒவ்வொருவராக அலைகிறான்.
மொழிகடந்து தேடுகிறான்சிலர் வேண்டிய இலக்கத்தை
மடித்தபடியே பொக்கட்டுக்குள் வைக்க
சிலர் சிரித்தபடியே
ஏளனமாய் அவனை பார்க்க
பலர் முகத்தை சுழிக்க
அவன் தேடுகிறான்...........
ஆனால் அக்காவிற்கு என்று கேட்கவில்லை.............

"பிளீஸ் ரிமெம்பர் பிளீஸ் ரிமெம்பர்" என்று
தொலைபேசி இலக்கங்களை உச்சரிக்கிறான்.................
பலருக்கு வேண்டாத வெறுப்பாகிறது
நக்கல் நளின சிரிப்பும் வேறு ........

அவனுக்கு ஏளனங்கள் புரியவில்லை.
அந்த சிரிப்புகளின் அர்த்தம் தெரியவில்லை.
அந்த முகச்சுழிப்புகளுக்கு பதில் சொல்ல அறியாத அப்பாவி

இடையிடையே கொடுப்பு பற்களுக்குள் மட்டும் சிரிப்பு வேறு அவனுக்கு......?
ஆமாம் மனதாலே ஏதோ யாருடனோ பேசுகிறான்.............

சூழ்ந்த உறவோ
கூடிப்பழகிய நட்போ
பங்கெடுக்கும் சமுதாயமோ
இளமைப்பருவ காதலோ
அவனை ஏமாற்றியிருக்க வேண்டும்
சிந்தனையில் நானிருக்க
இளைஞன் எழுந்து சென்றான் விறு விறு என்று.

":பிளீஸ் ரிமெம்பர் பிளீஸ் ரிமெம்பர் "
தொலைபேசி இலக்கங்களை உச்சரிக்கிறான்
அழகிய பெண்ணுக்கு முன்னாலே...........!

மீண்டும் அதே வேகத்தில் உட்கார்ந்து
மௌனத்தால் மனதாலே அசைபோடுகிறான்

எழுதிய இலக்கங்களுக்கு அழைப்பெடுத்தேன்
தொலைபேசி ஒலிப்பதாய் எனக்கு கேட்டாலும்
அழைப்பில் யாரும் இல்லை.

புலம்பெயர் மண்ணை நோக்கி
பணக்கார தேசம் என்று
பலன் நோக்கி வந்த இளைஞன்
பாவியாய் அலைகின்றானே
பாவமது என்னாகுமோ............?

தொடர்ந்து எடுக்கும் அழைப்புகள்
அழைப்புமணி ஒலிகளோடு மட்டும் நிசப்தமடைகிறது ..........................

2 comments:

Nethaaji said...

நியாயமான வலிகள் நிறைந்த பதிவு.

அன்பு நண்பன் said...

eppade athini elangarkalin valkai tholinthu pokeratha!!!!!!!!!!