கிளவிதோட்டத்தானுக்கு தீர்த்தகேணிப்பணிகள் ஆரம்பம்

கரவெட்டி கிளவிதோட்டம் விக்ன விநாயகருக்கு தீர்த்தகேணிப்பணி ஆரம்பம் என்ற செய்தியை உங்களுக்கு தருவதில் கரவைக்குரல்; பெருமகிழ்ச்சியடைகிறது.ஆலயத்தின் வளர்ச்சியின் முக்கிய அங்கமாக இக்கேணிப்பணி அமைவதோடு அவ்வூர் மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பாகவும் இருந்துவந்தமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
ஆலய நிர்வாக தர்மகத்தா சபையின் வழிகாட்டலுடன் பெருமெடுப்புடன் முன்னெடுக்கப்படும் இவ்வறப்பணி குறுகிய காலத்தில் ஆலயத்துக்கு அமைத்துக்கொடுப்பது என்ற சவாலுடன் முன்னெடுக்கப்படுகிறது.
இளையோர்களின் இரவுபகல் பாராத கடும் உழைப்போடும் அவர்களின் அறச்சிந்தனையோடும் முன்னெடுக்கும் பணிக்கு பல்வேறு தரப்புக்களிடமிருந்தும் பெரும் ஆதரவு கிடத்திருக்கிறது.




ஆலயத்தின் வடக்கு வீதியில் ஆலயத்துக்கு அருகில் உள்ள வாசிகசாலைக்கு அருகில் இந்த கேணி அமையவிருக்கிறது. வழமையாக விநாயகபெருமான் தீர்த்தமாடும் கிண்றுக்கு அருகிலேயே அந்த கேணி அமைய விநாயகனின் கடாட்சம் கூடியிருப்பதும் இங்கு குறிப்பிடவேண்டிய அம்சமாகும்.

வேண்டும் அருள் அருளும் வி நாயகனுக்கு கரவெட்டியின் மக்கள் உலகின் எந்த பாகத்தில் இருந்தாலும்,எங்கிருந்தாலும் அவர்கள் தொடர்பினை ஏற்படுத்தி தங்கள் பங்களிப்பை மேற்கொள்கின்றார்கள் என்பது மகிழ்ச்சியான விடயம்.அதைவிட இந்த தகவல் எல்லோர் காதுகளுக்கும் எட்ட வேண்டும் என்ற நோக்கோடும் உதவும் கரங்களுக்கு ஊக்கமாகவும் பதிவிடபடுகிறது. அறப்பணியில் பங்கெடுக்க விரும்பும் அன்பான உள்ளங்கள் ஆலய நிர்வாகத்துடன் தொடர்புகொள்ளமுடியும் என்பது மகிழ்ச்சியான செய்தி.

ஒவ்வொருவரினதும் சிறுதுளிகள் பெருதுளிகள் ஆகும் என்பது மட்டுமல்ல ஒவ்வொருவரினதும் ஊக்கமும் முயற்சியும் சிறந்த அறப்பணியைத்தரும் என்றுணர்ந்து தானம் செய்வீர் விநாயகன் அருள்பெற்றிடுவீர்.

தகவல்: ஆலய நிர்வாக தர்மகத்தா சபை
புகைப்படம்: செந்தூரன்

கொடிகாமத்துக்கும் தட்டிவான் டுபாயிலும் தட்டிவான்


"சீனப்பா சீனப்பா" என்று ஒருவர் இருந்தார் கரவெட்டி கோவிற்சந்தைக்கு கிட்டடியில்.இது ஏதோ அரசகதை சொல்ல தொடங்குவது போலல்லவா இருக்கிறது. அப்படியெல்லாம் ஒன்றுமில்லை.யாழ்ப்பாணம் வடமராட்சியில் பாடசாலை சேவை வாகனசேவை ஓடி பிரசித்தமான ஒருவர்.அவரைத்தொடர்ந்து அவருடைய பிள்ளைகள் தொடர்ந்து சேவை செய்தவர்கள்
இதை ஏன் சொல்கிறேனென்றால் இவர்கள் கையில்தான் தட்டி வான் என்று சொல்லப்படும் ஒருவாகனத்தை நான் சிறுபராயம் முதலே கண்டவன். இப்போது ஒரு சில வாகனங்கள் கொடிகாமத்துக்க்கு ஓடிக்கொண்டிருப்பதாக அறிய முடிகிறது ஈழத்திலிருந்து.

தட்டிவானில் நானும் பயணித்தவன் ஒரு சிலகாலங்கள் பாடசாலைக்கு.அதில் பின்னுக்கு உள்ள தட்டியில் நின்று செல்வதில் ஒரு அளவுகடந்த சந்தோசம். அதுவும் இன்னும் ஒருவிடயம் ஊர்களுக்கு இடையிடையே இந்த தட்டிவான் பயணிக்கும்போது சிறுபராயம் ஆகையால் சத்தம்போட்டு,கும்மாளம் அடித்து செல்வது வழமை.
வாகனத்துக்கு முன்னே ஆசிரியர் ஈஸ்வரநாதன் இருப்பார். அவர் கொஞ்சம் " என்ன..... சத்தம் ......." என்று கேட்க கொஞ்சம் குறையும். பின்னர் அதுவும் கொஞ்சம் மறந்து போக அது கூடும்.



ஒரு நாள் வழமை போலவே சத்தங்கள்போட்டவாறே ஊர்களுக்கு இடையிலே வாகனம் நகர்ந்து செல்கிறது. அணிஞ்சிலடி என்று சொல்லப்படும் ஒரு இடம், அங்கு கொஞ்சம் உள்ளுக்குள் தென்னைகள் அதிகம். அது அங்கிருந்தவகளுக்கு நன்றாகத்தெரியும். அதில் உள்ள தென்னைகளில் உள்ள தென்னோலைகளை ஒவ்வொன்றாக இழுத்து அதை முறிதெடுத்து கொடிகாமம் வீதிவழியே இழுத்துக்கொண்டவாறே ;சென்று அதை சாமியன் அரசடியில் விடுவதில் மிகப்பெரிய சந்தோசம் சிறுவர்களுக்கு. இதை முன்னால் இருந்த ஆசிரியர் அவதானித்தாலும் யார் இதை செய்கின்ற மகான் என்று அவருக்கு தெரியாது.கடைசியில் ஒரு நாள் முடிவெடுத்து எல்லொருக்கும் கொஞ்சம் பதம் பார்த்தார் ஆசிரியர் பக்கத்திலிருந்த பூவரசு மரத்தடியினால்.இதில் கோசலன் மற்றும் நான் எல்லோரும் அடிவாங்கியதாக நினைவு
இப்படி ஒருவித்தியாசமான சுகங்கள் இந்த வாகனத்தில்.
இப்படியான தட்டிவான்கள் இப்போதும் கொடிகாமத்துக்கு ஓடிக்கொண்டே இருக்கிறது.
யாழ்ப்பாணத்தில் எரிபொருளுக்கு தட்டுப்பாடான காலத்தில் இந்த வாகனம் மிகப்பெரும் உதவியாக இருந்தது என்பது உண்மைதான்.இப்போது அந்த வாகனம் "அவ்வளவு சரியில்லை" என்றும் "நாகரிகம் இல்லை" என்றும் ஒதுக்கிவருவதும் சுட்டிக்காட்டபட வேண்டிய விடயம். அதை விட்டுவிட்டு இப்போது நாகரிகமான வாகனங்கள் தேடிவருவதும் அறிய முடிகிறது.இந்த வாகனத்தை வைத்திருப்பவர்களும் அதேபோல வடமராட்சி பிரதேசத்தில் இந்த வாகனம் ஓடுவது பற்றி சிலர் நையாண்டி பண்ணுவதும் காணமுடிந்தது.
இது நம்பாதைகள் பற்றி சிந்திக்காத,அறியாத நம்மவர்கள் உள்ளத்திலுருந்து வந்து அவர்கள் வாயினூடாக மட்டும் தான். ஆனால் கொடிகாமசந்தைக்கு இது தான் இருக்கின்ற வாகனங்களில் சிறப்பு.
இப்படியான வாகனம் போலவே ஐக்கிய அரபு இராச்சியம் டுபாயிலும் காணமுடிந்தது.
அதுவும் பாடசாலை சேவைக்கே முற்றுமுழுதாக பயன்படுத்திவரப்படிகிறது.முற்றிலும் சிறிய அளவிலான யன்னல்கள் சூழ்ந்திருக்க ஒருவழிப்படுத்தபட்ட பாதுகாப்பான கதவு,ஆனால் இங்கு தட்டி என்று சொல்லப்படும் பின்னுக்கு அமையும் பகுதி இல்லை.சிலவேளைகளில் தென்னோலை விளையாட்டைப்பற்றி கேள்விப்பட்டாங்களோ தெரியாது.இங்கும் பிள்ளைகள் சந்தோசமாக செல்லும்போது இந்த பதிவு என்னை இடச்செய்திருக்கிறது.அதுமட்டுமல்ல மத்திய கிழக்கு நாடுகளிலும் அதேபோல அமெரிக்கா போன்ற நாடுகளிலும் இது சேவையில் இருக்கிறது என்று அறிய முடிகிறது.
மொத்தத்தில் தட்டி வான் என்பது யாழ்ப்பாணத்தில் அருகிவருகிறதோ என்று சிந்தித்த போது அது டுபாய் மற்றும் மற்றைய நாடுகளில் ஓடுவது அதன் இருப்பை தெளிவுபடுத்தியிருக்கிறது.,

மாமாவான கதை

அடி மேல் அடியடித்தால் அம்மியும் நகரும் என்பது எல்லோரும் கேள்விப்பட்டதொன்றுதான்.
அதேபோல் இடி மேல் இடி இடித்தால் என்னவாகும்?
உதாரணத்துக்கு அரிசியை இடித்தால் அது மாவாகும், மாவை இடித்தால் அது மாமாவாகும்.மாமாவாகும் விளைவின் கடினப்பாதைதான் இது

எனக்கு தெரியும், "யாரும் மாமா ஆன கதை" என்றால் அதெல்லாம் எப்படி என்று எல்லாரும் கலைச்சுக்கொண்டு வருவீங்க என்று.இப்ப வந்திட்டீங்க என்ன??????????????????
சரி

எல்லாரும் எப்படியோ எப்படியோ மாமா ஆகியிருப்பீர்கள், பலகாதலர்களை இணைத்து வைத்து அவர்களை வாழ வைத்த பெருந்தகைகளும் அவ்வப்போது மாமாக்களே,
எனக்கு நல்ல நினைவு இருக்கிறது இருகாதலர்கள் இணைந்தபோது அவர்களை இணைத்து வைத்த ஒரு நண்பியை என் நண்பன் ஒருவன் மாமி என்று அழைத்த போது அந்த பொண்ணுக்கு மூக்குக்கு நேரேகோவம் வந்தது.
இதே போல என் நண்பன் ஒருவனுக்கு இப்படி சொன்னபோது "நண்பா இப்படி என்னை மாமா என்று அழைத்தால் எத்தனை தடவைதான் நான் மாமாவாகிக்கொண்டே இருப்பது" என்று சந்தோசம் கலந்து தன் உள்ளக்கிடக்கையை பகிர்ந்து கொண்டபோது "இன்றிலிருந்து "காதலை வாழவைத்த மாமா ஆகுவாய்" என்று சூழ்ந்திருந்தவர்களால் பாராட்டப்பட்டது.
அதுமட்டுமில்லாமல் சிலர் பிறக்கும்போதே இவர்களின் பாட்டன்,பாட்டி,பூட்டன்,பூட்டி செய்த விதிப்பயனின் விளைவாக மாமாவாகவே பிறந்தவர்களும் இருக்கிறார்கள்.இப்படியாக மாமா ஆனால் அல்லது மாமி ஆனால் சிலருக்கு சந்தோசம்,சிலருக்கு கோவம்,சிலருக்கு வயது போகிறதே என்ற கவலை,;இப்படி ஏராளம்,
இதைவிட சிலருக்கு மாமா என்றால் கொஞ்சம் பயமும் கூட,ஏனென்றால் வீட்டுக்கு ஒருவருக்காவது பிள்ளை பயந்து வளர வேணும் என்று குழந்தையை வளர்ப்பதுதான், எனக்கு நல்ல நினைவு இருக்கிறது என் பக்கத்துவீட்டு வினோ வீட்டுக்கூரைக்கு மேலே பட்டம் விட்டுகொண்டு இருந்தாலும் "ஆசைமாமா வாறாரடா" என்று சொல்லிவிட்டால் விட்ட பட்டத்தை கைவிட்டுவிட அது வையிரவர் கோயில் வேம்பு மரத்தில் மாட்டிவிட
நடுவீட்டில் புத்தகமும் கையுமாக தணல் பறக்கும் படிப்பு.அப்படி மாமா என்றால் பயந்துகொள்ளும் பிள்ளைகள் வேறு



இது இவனுக்கு அன்று அதிகாலை விடியும் வரையோ அவன் மாமாவாகப்போறான் என்று தெரியாது.வெளி நாடு ஒன்றில் தொழில் நிமிர்த்தம் தற்காலிகவாழ்க்கை.இவன் அவ்வப்போது வாரவிடுமுறைதினங்களில் தன் ஒரேஒரு உறவினன் வீட்டுக்கு சென்றுவருவது வழமை,சிலவேளைகளில் விடுமுறை நாள்களில் பிந்திய நித்திரை விழித்தெழுதலால் போக மனம் மறுத்துவிட்டால் அண்ணன் தொலைபேசி அழைப்பும் வந்துவிடும்.தன் குழந்தைகளுடன் குடும்பமாக இருக்கும் அண்ணன் அவனை வரும்படி கட்டாயம் அழைத்திடுவான்.
இப்படித்தான் ஒரு நாள் வழமைபோல வாரவிடுமுறையில் அண்ணன் வீட்டுக்கு போனான் இவன்.வழமைபோலவே அண்ணனின் சின்னஞ்சிறுகுழந்தைகளுடன் விளையாடுவதும் தொலைக்காட்சி பார்ப்பதுமாக இவன் வேலை, அக்கா மத்தியானம் பப்படம் உட்பட நாலு கறியுடன் சாப்பாடு, அதையும் சாப்பிட்டுவிட்டு திரும்பவும் அண்ணாவுடன் ஊர்க்கதையும் சின்னஞ்சிறிசுகளுடன் விளையாட்டும்,இதைவிட வேறொன்றும் அவன் பண்ணிவிடுவதுமில்லை.சில வேளைகளில் கொஞ்சம் வெளியிடங்களுக்கு போய் வருவதும் உண்டு.ஆனால் அன்று மட்டும் வழமைக்கு மாறாக அக்கா குசினியை விட்டு வெளியேறாமல் கொஞ்சம் வேகமாக ஏதோ பண்ணுறா, "என்ன அக்கா ஏதும் பொரிச்சு கிரிச்சு தரப்போறீங்களோ" என்று இவன் என்றவாறு நகைச்சுவை வார்த்தைகளால் பம்பல் விட
"இல்லை இல்லை கொஞ்சம் வெயிட் பண்ணுங்க" என்று சொல்லிவிட்டு மீண்டும் தடல்புடலாக நடக்குது.
"சரி அப்ப அண்ணா நாங்க போட்டு வாறம் " என்று பக்கத்திலிருந்த தாசன் அண்ணாவையும்தட்டிக்கொண்டு எழும்ப இண்டைக்கு போகமுடியாது வேளைக்கு" என்றான் அண்ணா
"இல்லை இண்டைக்கு ஒரு விசேஷம் முடிச்சுக்கொண்டு போங்க" என்று அண்ணன் கதை தொடர்ந்தது." என்னடாப்பா இது என்ன எண்டு விளங்க இல்லை" என்று தாசன் அண்ணா நித்திரை வெறி முகத்தில் தெரிய இவனை ஒரு பார்வை.கொஞ்ச நேரம் விட்டு அண்ணா கதிரை எல்லாம் ஒருகரையாக அடுக்கி படங்கொன்று விரித்து பெட்டி நிறைய இருந்த விளையாட்டு பொருள்கள் எல்லாம் எடுத்து அடுக்க இவனும் அடுக்கிறான் ஏதும் அறியாதவனாக,இவனுக்கு பக்கத்தில் நின்ற தாசன் அண்ணாவும் இவனோடு சேர்ந்து அடுக்கி முடிய,அக்கா ஒருதட்டிலே ஏதோ அடுக்கியபடி வந்தா. "என்ன அக்கா" என்று கேட்பதற்க்குமுதல் அண்ணா மற்ற அறைக்குள் இருந்த படி புகைப்பட கருவியுடன் வந்தார், எல்லாமே சரியாக வர அண்ணன் மகள் ரிஷா படங்கிலே இருத்த இவன் கையிலே அந்த தட்டு கொடுத்த அக்கா "இந்த பல்லுகொழுக்கட்டையை ரிஷாவின்மேல் கொட்டுங்கோ" என்று கொடுத்தார்.'நல்ல மாமாவை கண்டுபிடிச்சிட்டீங்க அக்கா" என்று சொல்லியபடி வாங்கிய இவன் ரிஷா படங்கிலே முதலில் சிரித்து பின்பு அழுதபடி இருக்க விளையாட்டு பொருள்கள் சூழ்ந்திருக்க அக்காவின் அரவணைப்பில் இருக்க இவன் மற்றும் தாசன் அண்ணா பல்லுகொழுக்கட்டையை தலைமேலே கொட்டுகிறார்கள்
முளைத்துவிட்ட முதற்பல்லுடன் எல்லாமே சிறக்க கிளவிதோட்டத்தானை வேண்டியவனாக இவன் கொட்டிவிட்ட பல்லுகொழுக்கட்டையை தூக்கினாள் ரிஷா.அதைக்கண்டு இவனுக்கு கொஞ்சம் சந்தோசம்.
திடீரென இப்படியாக மாமாவாகிவிட்டதை எண்ணி ஒரு சிரிப்பு மனதுக்குள் இவனுக்கு.சிரிப்போடு கொட்டிவிட்ட பல்லுகொழுக்கட்டையை ஒரு தட்டில் மீண்டும் நிரப்பி அக்கா கொடுக்க ஒன்றுமே விடாமல் எல்லோரும் சேர்ந்து பகிர்ந்துவிட்டு "அக்கா என்னை நீங்கள் மாமா ஆக்கி போட்டீங்க என்ன?"என்று சிரித்தவாறாக மீண்டும் திரும்பினான் இவன் தன் தங்குமிடம் நோக்கி.

வெவ்வினைவேரறுத்து வலம் வருவாய்


இன்றைய காலை
ஊரோடு இருந்திருந்தால்
கொடியேறும் விநாயகனின்
கோபுர வாசலில்தான்........


இன்றொடு பத்து நாள்கள்
இன்பமே சூழ்ந்து வர
ஊரெங்கும் கொண்டாட்டம்
சொல்லமுடியாத குதூகலம்
ஊரெங்கும் பக்திமயம்....
வெல்வினை வேரறுக்கும்
வேழமுகம் தாங்கி
பெருச்சாளி மீதேறி
அடியார்கள் புடைசூழ
அல்லல்கள் அறுக்கவென
வலம் வருவான் விநாயகன்....


ஊரின் உன் திருவிழா ஆரம்பம்
விநாயகனே வெவ்வினையை வேரறுப்பானென
பக்திபாடல்களின் ஆரம்பம் பறைசாற்றும்
உன்புகழை பாடியபடி
அடியவர்களின் பக்திபரவசம்
தூரதேசம் சென்றோரும்
உங்கழலை நாடிவந்து பணிந்திடுவர்
இளைஞர்கள் துடி நாட்டமாய்
இங்கும் அங்கும் ஓடி உந்தன்
ஆலயபணி செய்திடுவர்
பல பூக்கள் ஒன்றுசேர்த்து
பக்குவமாய் நங்கையர்கள்
பூமாலை கோர்த்திடுவர்





தாயகத்தின் சூழ் நிலைகள்
உந்திருவிழா ஆரம்பத்தில்
மாறிய வரலாறுகள் எம்மனதில்
இன்றும் உண்டு
மந்திர உச்சாடனங்கள்
பக்தி திருமுறைகள் பாடியபடி

இன்றும் நீ கொடியேறி
எம்மக்கள் அனுபவிக்கும்
துயரமெல்லாம் வேரறுத்து
வெவ்வினையெலாம் நீ களைய
வலம்வருவாய் விநாயகனே

அம்மா மேலான தெய்வம் நீங்கள்



அம்மா நீங்கள்
தெய்வத்துள் உறையும் தெய்வம் நீங்கள்
மேலான தெய்வம் நீங்கள்
என் உதிரத்தில் கலந்தவர் நீங்கள் அம்மா
அகிலம் வெல்லவைக்க
வளர்த்தெடுத்த ஆதாரம் நீங்கள்


புத்தகம் தூக்கிக்கொண்டு
புறப்பட்டதும்
கூடவந்த வழிகாட்டி நீங்கள்
துவிச்சக்கர வண்டி எடுத்தோடத்
துவங்கியதும் பின்னாலே
கவனமாக கூடவே வந்தீர்கள் அம்மா
அப்பாவிடம் சிலவேளைகளில்
அவ்வப்போது வாங்கிய ஒவ்வொரு அடியும்
எனது படிப்பினைகள் - அதில்
மனமும் கண்ணும் உங்களுக்கு
மெல்லவாக கலங்கியது
என் உந்துசக்தி

துடிக்கும் இதயத்தின் ஒவ்வொரு
துடிப்புக்கும் சொந்தக்காரி நீங்கள் தான்
உலகின் எதற்கும் ஈடாகாத
அன்பின் சுரபி
எம் எதிர்காலமே உங்கள்
எண்ணமாக
பரிவும் எம் உயிரில் கலந்த
பாசமாக
உங்கள் வாழ்க்கையை எமக்கே தந்த
எங்கள் வாழ்விலே இனிப்பவர் நீங்கள்

பாடசாலை விட்டதும்
ஒரு நிமிடம் பிந்திவிட்டால்
வீட்டு வாசலுக்கும் பின்னுக்கும் முன்னுக்குமாய்
"ஓடி ஓடி" இன்னும் வராத ஏக்கம் உங்களுக்கு
வந்ததும் அன்புடன் பரிமாறும்
உணவுக்கு நிகரேது அம்மா
இன்னும் உள்ளத்தில் பரிமாறும்
எண்ணங்கள் நிறையவே அம்மா
ஒவ்வொரு தினங்களும் உங்களுக்கே அம்மா
இன்று எல்லோரும் உங்களுக்காய் தினம்
அன்று என் கவிதையில் சில மட்டும்
எங்கும் எவரிடமும்
கிடைக்காத பாசம் -அதுவெம்
முன்னே வாழும் தெய்வம்
உங்களிடமிருந்து மட்டும் தான்
உங்களைப்பிரியா வரம் வேண்டும் எமக்கு
எப்பிறப்பிலும் உன்மகனாக

அரசியல்வாதிகளே கவனம்!!!!!!!!!!!!!!!!! இது செருப்பெறி காலம்



அரசியல் வாதிகள் மக்களுக்கு வேண்டியவர்களாக இருப்பவர்கள் என்பதைவிட இப்போதெல்லாம் வேண்டாதவர்களாக மாறிவருகிறார்கள் என்பது தான் இன்றைய நிலையாக மாறி வருகிறது.
அரசியல் வாதிகள் மக்களுக்காக தங்கள் சேவை என்று அடிக்கடி சொன்னாலும் அவர்கள் எவ்வளவு தூரம் அவர்களுக்கு வேண்டியவர்கள் என்பது அவர்கள் வாழும் காலத்திலேயே அவர்களுக்கு உணர்த்த மக்கள் தயாராகிவிட்டார்களோ என்றவாறாக அண்மை சம்பவங்கள் உணர்த்திவருகின்றன.
தேர்தல் காலங்களில் அரசியல் மேடையில் ஒரு பேச்சும் அதிகார கதிரையில் ஏறிய பின் ஒரு பேச்சும் பேசினால் அது மக்களுக்கு விளங்காமல் விடுமா என்ன?
அதிகார கதிரை என்பது மக்களுக்காகவே என்றில்லாமல் தங்களின் சொந்த கதிரை என்று நினைத்து அதில் குதிரை ஆடினால் மக்கள் அவர்களை ஏற்றுக்கொள்வார்களா என்று சற்றேனும் சிந்திக்காமல் அரசியல் நடத்தும் அரசியல்வாதியை மக்கள் எவ்வாறாக உலகில் நடத்துகிறார்கள் என்பதும் அதே போல சற்றேனும் தனது கொள்கையிலிருந்து விலகாமல் தனது இலக்கை அடியும் வரை யாருக்கும் மடியாமல் பயணிப்பவரை மக்கள் எவ்வாறாக உலகமெல்லாம் நடத்துகிறார்கள் என்பதும் எல்லோருக்கும் வெளிச்சம்.

இன்று இந்திய பிரதமர் மன்மோகன் சிங்க் அவர்கள் இந்தியாவின் அஹமதாபாட் என்ற இடத்தில் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்தபோது கூட்டத்திலிருந்து ஒருவர் மூடுகாலணியால் வீசி இருக்கிறார்.

இது இன்று ஆரம்பித்த விடயமொன்றல்ல.உலகின் வல்லரசாக கணிக்கப்படும் நாடுகளில் முதலாவதாக இந்திய பிரதமருக்கு வீசியதும் அல்ல.
அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் அவர்களுக்குத்தான் இது ஆரம்பம்.ஈராக்கில் ஊடகவியலாளர் மகாநாட்டில் பேசிக்கொண்டிருந்தபோது ஆரம்பித்த இந்த செருப்பெறி


இப்போது இன்னொரு வல்லரசாக கணிக்கப்படும் இந்தியாவில் பரவியிருக்கிறது.
இதற்கு முதல் இந்தியாவிலேயே ஒரு சிறந்த அமைச்சராக கவனிக்கபடுவது மட்டுமல்லாமல் தமிழ் நாட்டை பிரதி நித்துவப்படுத்தும் நடுவண் அமைச்சர் பா.சிதம்பரத்தின் மீது செருப்பெறி விழுந்தது.

இது மட்டுமல்லாமல் இன்னோர் அமைச்சர் மீதும் வீசப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
எதற்கும் பாதுகாப்பு வழங்கலாம் செருப்புக்கு எப்படி பாதுகாப்பு வழங்குவது என்று முழிக்கிறதாம் பாதுகாப்பு அணி.
"என்ன செருப்பு போடாமல் வாருங்கள்' என்று சொல்வதா என்று தீவிர சிந்தனையில் இருக்கிறார்களாம்.
இதைவிட அதிகார கதிரையில் இருக்கும்போது மக்களுக்காக இருந்துவிட்டால் இப்படியான சங்கடமொன்றும் தேவையில்லையே?
இதுமட்டுமில்லை மக்களின் துயர்துடைக்காமல் மக்களின் உண்மையான ஏக்கம் என்னவென்று புரியாமல் மாறாக துன்பத்துக்கு தூண்டுதலாகவும் உதவியாகவும் இருக்கும் அரசியல் வாதிகளுக்கும் பதில்சொல்லும் காலம் வெகுதூரத்தில் இல்லை

நீங்கள் வாழும் காலத்தில் உங்களுக்கு பதில் கிடைக்கும் உங்கள் அரசியல் வாழ்க்கைக்கு.
இது செருப்பெறி காலம் இனி என்னவெல்லாம்வரும்மென்று பார்த்துகொண்டே இருங்கள்

"குரே குரே" ஆஸ்திரேலியா "ஷிந்தாபாட்" பாகிஸ்தான்




நடப்பு உலகசம்பியன் அணி மட்டுமல்ல தரவரிசையில் நீண்டகாலமாக முதல் நிலையில் வெற்றி நடை போட்ட ஆஸ்திரேலியா தரவரிசையில் கீழே இறங்கிக்கொண்டு இருக்கிறதே என்று விளையாட்டு ஆர்வலர்கள் ஆராய்வதும் ரசிகர்கள் திட்டுவதும் அவர்களின் வெற்றிக்கான ஏக்கத்துக்காகவும் வெற்றிதீனி போட்டிருக்கிறது ஆஸ்திரேலியா.
களத்தடுப்பில் மிகவும் கவனக்குறைவுகளும் பிடித்தவறுகளுக்கும் பஞ்சமில்லாமல் இருந்தாலும் துடுப்பாட்டத்தில் நின்று நிலைத்தாடி வெற்றி பெற்றுவிட்டது.

ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் துபாயில் "சப்பல்" கிண்ணத்துக்காக இரண்டாவது போட்டியில் தான் இந்த வெற்றி.

வெற்றி பெற்றாலும் அந்த அணி மீது பல பல்வீனங்களை அவதானிக்க முடிந்தது.
முன்னெல்லாம் யாராவது முன்னணி வீரர்கள் ஒய்வுபெற்றுவிட்டால் அதற்கு சரியான பிரதியிடப்பட்ட வீரரோடு களமிறங்கும் ஆஸ்திரேலிய அணி இப்போது வானுயர்ந்து வரும் பந்தை கணக்கெடுத்து பிடியெடுக்க தெரியாத வீரர்களை இணைத்திருக்கிறார்களோ என்று எண்ணும்படியாக அமைந்தது அந்த போட்டி.ஆனால் அணித்தலைவர் கிளார்க் கண்மூடித்திறக்க முதல் எடுத்த பிடி கொஞ்சம் "ஆ" என்று சொல்ல வைத்தது.



சுழல் பந்து வீச்சாளர்களிடம் தவறான தீர்மானமெடுத்து துடுப்பாடி சுருண்டு விடும் ஆஸ்திரேலிய அணி முன்னர் பின்னர் அவதானத்துடுப்பாட்ட முறையில் சிறப்பாக துடுப்பாடி வந்திருந்தது. ஆனால் மீண்டும் சாதாரண சுழல் வீச்சாளர்களிடம் சுழல ஆரம்பித்துவிட்டது. இங்கு இரண்டாவது போட்டியில் யூனுஸ்கான் தொடர்ந்து சிறப்பாக பந்து வீசிக்கொண்டிருந்த அஃபிரிடி மற்றும் புதிய வீரர் அஜ்மல் ஆகியோரை தொடர்ந்து வீச விடாமல் வேகப்பந்து வீச்சாளர்களை அழைத்ததால் ஆஸ்திரேலிய அணி வீரர்களூக்கு சாதகமாக அமைந்துவிட்டது என்று முணுமுணுத்ததை அவதானிக்க முடிந்தது.ஆனால் இறுதியில் அஃப்பிரிடி தனக்குரிய பந்துபரிமாற்றங்களை வீசி முடித்துவிட்டார்.அஜ்மலுக்கு இன்னும் மூன்று பரிமாற்றங்கள் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.




என்றாலும் அணித்தலைவர் கிளார்க் தன் இலக்கை இழக்காமல் எத்தனை பந்துகளை இழந்தாவது நின்று நிலைத்தாடி வெற்றிப்பாதைக்கு அழைத்துச்செல்வேன் என்று விடாபிடியாக இருந்தார் என்றுதான் சொல்ல வேண்டும்.அடுத்தடுத்து இலக்குகள் இழந்தவேளை கிளார்க் மற்றும் சிமண்ட்ஸ் வந்தார்கள். சிமண்ட்ஸ் தனது வழமையான பாணியில் வேகமாக ஓட்டங்களை எடுத்தது மட்டுமல்லாமல் இலக்கை நெருங்கிவிட்டு விடைபெற்றார் அஃப்பிரிடியின் சுழல் பந்தில்.தொடர்ந்து அணித்தலவர் வெற்றிவரை கொண்டுசென்றார்.
பாகிஸ்தான் அணியில் களத்தடுப்பில் பலவீனம் என்னவெனில் ஆஸ்திரேலிய அணியின் ஓட்டம் ஒடும் வேகத்துக்கு ஏற்றவாறு அமையவில்லை என்பதுதான்.களத்தடுப்பாளர்களின் கைகளுக்குளேயே அடித்துவிட்டு ஒரு ஓட்டம் எடுத்தது மட்டுமில்லாமல் சிலவேளைகளில் இரண்டு ஓட்டம் எடுத்ததும் ஆஸ்திரேலிய ஓட்டவேகத்தை அதிகரித்திருந்தது.இதே இடத்தில் வரும் பந்துகளை எல்லாம் நொருக்கும் வீரர் கில்கிறிஸ்ட் எல்லாம் இருந்திருந்தால் கதை வேறு.ஆஸ்திரேலிய அணிக்கு கில்கிறிஸ்ட் மற்றும் கைடன் போன்ற வீரர்கள் ஓய்வு பெற்றது பெரிய தூண்களை இழந்து விட்டார்கள் என்பது உண்மைதான்

சில சந்தர்ப்பங்களில் விளையாட்டு செய்திகளை மட்டுமே அறிபவனாக இருந்த எனக்கு
பல நாள்களுக்கு பிறகு இந்த பந்தயம் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. முந்தி எல்லாம் எங்கு தொலைக்காட்சில் போட்டியை கண்டு களிக்கலாம் என்று அலைந்துதிரிவது நினைவில் வருகிறது.அந்த நகைச்சுவையான நினைவுகளுக்கு வேறு ஒரு பதிவுதான் சிறந்தது.
நீண்ட நாளுக்கு பிறகு பார்த்ததால் எனக்கு சிமண்ட்ஸை பார்த்தவுடன் ஏங்கிப்போய் விட்டேன்.
எவ்வளவு குழு குழு என்று பருமனாக இருந்து இப்போது வெறும் சின்ன வயதுக்காரனைப்போல இருந்ததுதான்.
பருமனாக இருந்தபோதே ஓடும் வேகம் எல்லோருக்கும் தெரியும், பருமன் குறைந்து விட்டால் கொஞ்சம் வேகமாக ஓடுவார் என்று பாகிஸ்தான் அணி வீரர்கள் அவதானமாக இருந்திருக்கலாமல்லவா?



இருந்தாலும் இரண்டு போட்டிகளிலும் ஒவ்வொன்றாக வெற்றி பெற்று சுற்றுபோட்டி சமனிலையில் ஓடிக்கொண்டிருக்கின்றது
அங்குள்ள ரசிகர்களின் கோஷங்களைப்போலவே
"குரே குரே ஆஸ்திரேலியா
ஷிந்தாபாட் பாகிஸ்தான்"