கரவையின் கதம்ப நிகழ்ச்சி-லண்டன் கலைஞர்களின் அரங்கம்

யாழ் மாவட்டத்தின் வடமராட்சியில் அமைந்துக்ள்ள கரவெட்டி என்ற அழகிய கிராமத்தின் லண்டன் வாழ் மக்கள் இணைந்து வழங்கிய பிமாண்டமான நிகழ்ச்சிதான் கரவையின் கதம்பம்.


புலம்பெயர்ந்தும் தாயக மக்களின் அபிவிருத்தி மற்றும் மக்கள் சார்ந்த நலன் நோக்கிய செயற்பாடுகளில் ஈடுபட்டுவரும் அமைப்புகளின்  வரிசையில் கரவெட்டி பிரதேச மக்களும்  இணைந்து லண்டனில் கரவெட்டி அபிவிருத்தி ஒன்றியம் என்ற ஒழுங்கமைக்கபட்ட கட்டமைப்பினூடாக பல சமூக நலன் நடவடிக்கைகளில் தங்களின் பங்களிப்பையும் செலுத்திவருகின்றார்கள்.அந்த வகையில் பிரமாண்டமான முறையில் கரவையின் கதம்பம் என்ற சிறப்பான பெயரோடு நிகழ்ச்சி ஒழுங்கு செய்யபட்டது.ஏலவே கடந்த இரு வருடங்களும் சிறப்பான நிகழ்ச்சியை ஒழுங்கு செய்த கரவெட்டி அபிவிருத்தி ஒன்றியம் இந்த வருடமே கரவையின் கதம்பம் என்ற நிகழ்ச்சியை ஒழுங்கு செய்திருந்தது.இதில் பாராட்டபடவேடிய பல விடயங்கள் இருக்கின்றன.

நிகழ்வின் ஒழுங்கமைப்பில் கரவெட்டி என்ற ஊரின் பெயரை இணைத்து கரவையின் கதம்பம் என்று பெயர் சூட்டியிருந்தமை சிறப்பம்சம்.ஊரைத் தாண்டி வேறு தளம் புலம். பொதுவாகவே இசை என்றும் இன்னிசை மாலை என்று ஏதாவது ஒரு பெயரை சூடிக்கொள்ளாமல் கரவையை இணைத்து கதம்பம் நிகழ்ச்சியாக்கி கரவெட்டியின் பெயரை ஒரு நிகழ்வினூடாக நிலை நிறுத்தியிருந்தமை பாராட்டுக்குரியது. கடந்த வருடங்களில் வேறு பெயர்களோடு அமைந்த நிகழ்வு இந்த வருடம் கரவையின் கதம்பம் என்ற பெயரில் அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

நிகழ்வில் இடம்பெற்ற நிகழ்ச்சிகள் யாவும் கதம்பம் என்ற சொற்பிரயோகத்திற்கு சற்றும் மாறாது  பார்வையாளர்களை ரசனைக்கு ஏற்றவாறே  நிகழ்ச்சிகள் நெறிப்படுத்தப்பட்டன.ஏனெனில் நிகழ்ச்சியின் ஆரம்பம் முதல் எல்லோரையும்  பிரமிக்கவைக்கும்  படியாக நிகழ்ச்சிகள் அமைந்தன.
நிகழ்வின் ஆரம்பத்தில் சிறீமதி கலைவாணி இந்திரகுமார் அவர்களின் மங்கல விளக்கேற்றும் வைபவம் இடம்பெற்றது.அவர் நிகழ்வின் இடம்பெற்ற ஆரம்ப நிகழ்வான வாத்திய இசை சங்கம நிகழ்வை ஒருக்கிணைத்து நெறிப்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது..


இந்த நிகழ்ச்சியின் சுட்டிக்காட்டவேண்டிய விடயங்களில் முற்றிலும் இளைஞர்களும் சிறுவர்களும் நிகழ்ச்சிகள் செய்த கலைஞர்கள் என்பதை குறிப்பிட்டேயாக வேண்டும்.புலம்பெயர்ந்த நாட்டில் கலை கலாச்சார ஈடுபாட்டில் இருக்கும்  எம்மவர்களின் குழந்தைகள் அவர்கள்.இந்த நாடுகளிலேயே கலைகளைப் பயின்று அதில் தேர்ச்சியும் பெற்று அனைவரும் ஒருங்கிணைந்து தந்த நிகழ்ச்சிகளால் ஆரம்பத்தில் அரங்கமே மெய் சிலிர்ந்தது.கர் நாடக சங்கீதம்,வயலின், வீணை,புல்லாங்குழல்,தாளவாத்திய கருவிகள், மேற்கத்தைய வாத்திய கருவிகள் என்று விரிந்த இசை அரங்கிற்குள்  அரங்கிற்குள், பரத நாட்டியம்,மேற்கத்தைய நடனம் , வடக்கிந்திய நடனம் என்று நடன அரங்காகவும் சிறப்புபெற்றது.






ஆரம்பம் முதலே வாத்திய இசை நிகழ்ச்சிகளில் கலைஞர்கள் இசைத்த பாடல்கள் அத்தனையும் அனைவரையும் ரசிக்க வைத்து அரங்கில்  இருந்தவர்களை அசையவிடாது மகிழ்வூட்டின.இசை நடன நிகழ்ச்சிகள் யாவும் உண்மையிலேயே புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் இளைஞர்களால் தான் அரங்கேறியிருக்கின்றதா என்று மெய்சிலிர்க்கவைத்தன.
இந்த இடத்தில் தான் அனைவரின் சிந்தனைகளையும் பல வழிகளிலும்  தூண்டி விட்டது.இத்தனை கலைஞர்கள் இங்கிருக்க அவர்களுக்கான களங்கள் உருவாக்குவதை விடுத்து பல ஒழுங்கமைப்பாளர்களும் பெரும் பணத்தை செலவு செய்து இவர்களைப்போன்ற கலைஞர்களையே வெளி நாடுகளில் இருந்து
இறக்குமதி செய்கின்றார்களே என்பது தான் அந்த சிந்தனை .இப்படியான வளமான கலைஞர்களை உருவாக்க கூடிய புலத்தில் வெளி நாடுகளில் இருந்து இறக்குமதி செய்தாலே அதற்கு பெறுமதி என்றால் இந்த வளமான கலைஞர்களின் எதிர்காலம்,கலைகளின் வாழ்வு எப்படி நிலை நிறுத்தப்படப்போகின்றது என்பதை மனதோடு மனதாக முணுமுணுத்த பார்வையாளர்கள்  கரவையின் கதம்பம் நிகழ்ச்சி அந்த சவால்களை முறியடித்திருக்கிறது என்று பெருமையோடு பேசியமையும் அவதானிக்கமுடிந்தது.
நிகழ்வின் இடையில் கரவெட்டி அபிவிருத்தி ஒன்றியத்தின் தலைவர்
திரு கிருஷ்ணமூர்த்தி  அவர்கள் உரை கூட இந்த நிகழ்ச்சியின் வெற்றி பற்றி
குறிப்பிட்டுருந்தமை குறிப்பிடத்தக்கது.அது மட்டுமல்லாமல் கரவெட்டி என்ற கிராமத்தில் போதிய வசதிகளோடு கூடிய மருத்துவமனை அதற்கான இதர சேவைகளில் கரவெட்டி ஒன்றியம் எவ்வாறு 
ஈடுபடுத்திக்கொண்டிருக்கின்றது என்பதை பற்றியும் குறிப்பிடிருந்தார்.
இப்படியாக சேர்க்கப்படும் சிறுதுளி பணத்தில் மக்களுக்கான நலன் சார்ந்த விடயங்கள், பாடசாலை அபிவிருத்தி நடவடிக்கைகள், மாணவர்களுக்கு புலமைபரிசில்கள் என்று செவ்வனே   முன்னெடுக்கப்படும் செயற்திட்டங்கள் பற்றியும் குறிப்பிட்டார்.
தொடர்ந்தும்  பல நிகழ்ச்சிகள்.
நிகழ்ச்சியின் ஒழுங்கமைப்பில் பார்வையாளர்கள் சலிப்படையக்கூடியதான சில விடயங்கள் இடம்பெற்றமையையும் குறிப்பிட்டேயாகவேண்டும்.
ஆரம்பம் முதலே நிகழ்ச்சிகளில் உத்வேகம் இருந்து இடையில் மேடை நிகழ்சிகளின் தொய்வு பார்வையாளர்களை சற்றே  திரும்பச்செய்துவிட்டது. ஒரே கலைஞர்களின்  மேடையிலிருந்து விடைபெற்று மீண்டும் மீண்டும் மேடையை அலங்கரித்தமை நிகழ்ச்சியில் ஆரம்பத்திலிருந்த உத்வேகத்தை சற்றே  குறைத்தது.. சில வாத்தியக்கலைஞர்கள்,நடன நிகழ்சிகளின் கலைஞர்கள் என்று அவர்களின் மேடைக்கான மீள் வருகை ஆரம்பத்தில் அவர்களின் வருகையின் போது இருந்த  பார்வையாளர் எதிர்பார்ப்பை சற்றே குறைவடையசெய்தது. அதுமட்டுமல்லாமல் சில இசைப்பாடல்கள் மீண்டும் மீண்டும் வெவ்வேறு கலைஞர்களால் இசைக்கபட்டன.பல்லிசை பல கலைஞர்களால் நிகழ்ச்சி நெறிப்படுத்தப்படும்போது அவர்களின் இசை நிகழ்ச்சி அதில் இசைக்கப்படும் பாடல்களின் மீள்வருகை மற்றும் நிகழ்ச்சி  ஒத்திகை என்பவற்றை நிகழ்ச்சி ஒழுங்கமைப்பாளர்கள் கவனத்திலெடுத்தல் வருகின்ற காலங்களில் பார்வையாளர்களின் சல சலப்பையும் முணு முணுப்பையும் குறைக்கலாம் என்பது எண்ணம்.அதுவும் நேர ஒழுங்கமைப்பு நிகழ்ச்சிக்கு மிக முக்கியமானதொன்று.நேர ஒழுங்கமைபோடு நிகழ்ச்சியை ஒரே வாத்திய என்ற நிகழ்ச்சியாக இருக்காமல் மாறுபட்ட கலைஞர்களால் நிகழ்ச்சி ஒருங்கிணைத்து நெறிப்படுத்தும் போது அந்த நிகழ்ச்சியின்  வெற்றி மிகவும்  தனியானது.

எது எப்படியாவிருப்பினும் லண்டன் வாழ் இளைஞர்கள் மற்றும் சிறுவர்களை கலைஞர்களாக பார்க்ககூடிய சிறப்பை கரவையின் கதம்பம் நிகழ்ச்சி அமைத்துகொடுத்தது அதுவும் வெளி நாட்டு இறக்குமதிகளாக வரும் கலைஞர்களை மட்டும் வைத்தே ரிக்கட் நிகழ்சிகளை செய்யலாம் என்று சிந்திக்கும் விழா ஒப்ழுங்கமைப்பாளர்கள் மத்தியில் கரவெட்டி அபிவிருத்தி ஒன்றியத்தினருக்கு இந்த கரவையின் கதம்பம் நிகழ்ச்சிக்காக ஒரு சபாஷ் போட்டு லண்டன் மற்றும் ஈழத்து கலையுலகம் சார்பில் ஒரு நன்றியையும் தெரிவிக்கப்பட வேண்டும்.எமது கலைஞர்களை ஊக்குவித்து அந்த கலைஞர்களுக்கான கலைப்படைப்புகளை மேடையேற்றிய  ஒரு புறம், மறுபுறம் கரவை என்ற கிராமத்தின் பெயரையும்  பலரும் உச்சரிக்க செய்து கரவெட்டி மக்களுக்கான சமூக நலன் சேவைகளில் கைகொடுக்கும் கரவெட்டி அபிருத்தி ஒன்றியம் இன்னும் பல சேவைகளை செய்ய கரவைக்குரலின் வாழ்த்துக்கள்.


No comments: