வாடி வாடி வாடி கீயூட் பொண்டாட்டி-தனித்துவ தமிழ் உணர்வுக்காதல்

திரைப்படங்களின் வருகைக்கு அதேவேகத்தில் அதற்கான ஐந்து அல்லது ஆறு பாடல்களின் வருகை அதற்கான வெளியீடு விழா எடுப்பது என்று நீளுகிறது திரைப்படத்திற்கான் எதிர்பார்ப்பு,
வேகமாக வரும் பல்வேறு நடிகர்களின் திரைப்படங்களின் வரிசையில் தரணியின் இயக்கத்தில் தமானின் இசையமைப்பில் சிம்புவின் நடிப்பில் வெளிவர இருக்கும் ஒஸ்தி திரைப்படப்பாடல்களும் அண்மையில் வெளியாகியிருந்தது,
இசையமைப்பாளர்கள் தங்கள் இசையில் பாடல்கள் வரும் போது தாங்களும் ஒரு பாடலை பாடிக்கொள்வதுபோல இப்போ நடிகர்களும் தங்களின் பாடல்களை இணைக்கும் காலம் வந்துவிட்டது,அதேபோல பாடல்வரிகளையும் எழுதி அசத்துகிறார்கள்,
அசத்தல் என்றால் சொல்லி வேலையில்லை, வட்டார வழக்கு சொல்லில் "அந்த மாதிரி" என்று தான் சொல்லவேண்டும், எந்த மாதிரி என்று வாசித்தால் புரியும், இலக்கிய ரசனை விஞ்சியபடி இலக்கண அமைவு மிஞ்சியபடி கவி நடை அமைந்திருக்கிறது,தமிழில் தெரிந்தெடுக்கப்பட்ட பாமரர்களுக்கும் விளங்கிக்கொள்ளப்படக்கூடிய சொற்கள் தெரிவு செய்யப்பட்டிருக்கிறது.
விடயத்தலைப்பில் வந்த ”கியூட்” அதை தெளிவாக்கியிருக்கும்,அதுவும் வாசித்தால் புரியாமலா போகப்போகிறது.

அந்த இலக்கிய,கவிதை இலக்கண ரசனை மற்றும் மரபுகளுக்கு உட்பட்ட பாடலை பாருங்கள்,பாடியும் பாருங்கள்,
”எவண்டி உன்னை பெத்தான் பெத்தான்” என்ற நவீனத்துவ மொழி நடையோடு வெற்றித்திரைப்படப்பாலை எழுதியும் பாடியும் மிகபிரபல்யமாகி அடுத்தபாடல் தருகிறார் சிலம்பரசன் சிம்பு


அடி வாடி வாடி வாடி வாடி கியூட் பொண்டாட்டி- நான்
தாங்க மாட்டன் தூங்க மாட்டன் நீ இல்லாட்டி


ஒருதடைவை கூப்பிட்டால் சொன்ன இடத்துக்கு காதலி வரமாட்டாள் என்பதால் தான் ஆரம்பத்திலேயே நாலு தடைவை கூப்பிட்டிருக்கிறார் கவிஞர்,கியூட் கடினமான தமிழ்,சரியான விளக்கம் நீங்க எப்படியும் கொள்ளலாம்

அடிவாடி வாடி வாடி வாடி வாடி கொட் பொண்டாட்டி- நான்
தாங்க மாட்டன் தூங்க மாட்டன் நீ இல்லாட்டி


வரவில்லை என்று சொன்னான் எப்படி தன்னால் தன் மனதால், தன் இதயம் அதை ஏற்காது என்பதை காதல் உணர்வோடு சொல்கிறாராம்.காதல் உணர்வில் தான் மனைவியை ஹொட் என்று சொல்லியிருக்கிறார்,சூடு என்றால் எல்லாமே சூடு தான்.

பொண்டாட்டி அடி நீதானே- என் ஸ்வேட்டே
ஐ லவ் யூடே பாட்டி தேவையில்லாம பாட்டி


பாட்டி என்றால் இனிப்பு(ஸ்வீட்) இருக்கும் தானே,சரி சரி ஸ்வீட் தொடக்கம் எல்லாம் உற்சாகமாக்க இருக்கும் என்று தானே சொல்ல வேணும்,அதேபோல் ஐ லவ் யூ என்று சொல்கிற மனைவியும் இருக்க வேண்டும்(பொண்டாட்டி என்பது கடுந்தமிழ்,அதன் விளக்கவுரை மனைவி என்பதாகும்,)


”நல்ல கணவனா நா இருப்பே- ஒரு
உத்தமனா நடப்பேன்- உன்
தொல்லையெல்லாம் பொறுப்பே-உன்
கஸ்டத்தை நான் குறைப்பேன்- உன்னை
கண்கலங்க விட மாட்டேன்”


கணவனே கண்கண்ட தெய்வம்,மனைவி அமைவதெல்லாம் இறைவ்ன் கொடுத்த வரம் என்றெல்லாம் சொல்ல கேள்விப்படிருப்பீர்களே, அந்த இறைவன் கொடுத்த வரமாகிய மனைவிக்கு நல்ல உத்தமனாக இருப்பதாக சொல்கிறார் கவிஞர்,இந்தக்காலம் ஆடவர்கள் உத்தமர்களாக இல்லாத காலம் என்று அனுபவத்தோடு உணர்ந்திருக்கிறார் கவிஞர்,அதனால் தொல்லை குறைத்து கஸ்டங்களை குறைத்து கண்கலங்க விட மாட்டேன் என்று சத்தியம் செய்கிறார் மனைவியிடம்

"பொண்டாட்டிய்ய்ய் பொண்டாட்டிய்ய்ய்ய் பொண்ட்டிய்ய்ய்ய்........"

இடையிடயே கூப்பிட்டு கூப்பிட்டு தான் சொல்ல வேணும் என்பதை நினைவு படுத்துகிறார்,பொதுவாக சொல்வது காதில் ஏறுவதில்லை என்பதை சொல்லாமல் சொல்கிறாரோ தெரியாது.

கோப்பி கொடுத்து காலையிலை நானே உன்னை எழுப்பிவிடுவேன்
சமைக்க தெரியாதென்னா நானே சமையல் செஞ்சு உனக்கு ஊட்டி விடுவேன்
உன்னை நான் என்னைக்குமே சந்தேகப்பட மாட்டேன்
என்னை நீ சந்தேகபடும் மாதிரி நடக்கமாட்டேன்
உன் உயிராய் நானிருப்பேன்
என் உயிராய் உன்னை நினைப்பேன்
என் நெஞ்சிலை உன்னை சுமப்பேன்
உன்னை டெயிலி நானும் ரசிப்பேன்
உன் நிழலை போல நானிருப்பென்

(ஆ வாடி வாடி வாடி....)

ஆணுக்கும் பெண்ணுக்கும் அரைக்கு அரைவாசி உரிமை வேண்டும் என்று சொல்வார்களே,கணவனுக்கு காலை வேளை கோப்பி கொடுத்து நித்திரையாலே எழுப்புவார்கள் என்று தானே திரைப்படங்களில் பார்த்திருக்கிறோம்,அதற்காக காதலிக்கு காலை வேளை கோப்பி கொடுத்து எழுப்புகிறார் கவிஞர்,அது தான் ஆணுக்கு பெண்ணுக்கும் 50/50,
அது மட்டுமல்லாமல் இந்தக்காலம் பெண் பிள்ளைக்கு சமையல் தெரியாதே கல்யாணம் கட்டிற வயதாகிவிட்டதே என்று கவலைப்பட வேண்டாம் என்பதை அடுத்த வரிகள் சொல்கிறது,சமையல் தெரியாது என்றால் சமைச்சு ஊட்டியும் விடுவாராம் காதலன்,
சந்தேகம் கூடாது கூடாது என்று தானே அன்றிலிருந்து இன்றுவரை சொல்கிறார்கள்,அது மீண்டும் இந்த பாடலில் கவிஞர் கொண்டு வருகிறார்.
அடுத்த வரிகளும் வழமையான (சென்ரிமென்ற்) காதல் வரிகள்

(என் பொண்டாட்டி பொண்டாட்டி பொண்டாட்டி பொண்டாட்டி
வேணாம் வைப்பாட்டி வைப்பாட்டி வைப்பாட்டி வைப்பாட்டி
பொண்டாட்டி பொண்ட்டாடி டி டி ஏய்.........


இடைக்கிடை கூப்பிட வேண்டும் என்று தானே கவிஞர் ஆரம்பித்திலிருந்தே கூப்பிட்டு கூப்பிடு சொல்கிறார்,அல்லது கேட்காமலல்லவா போய்விடும்,
அதுவும் கேட்காமல் விட்டால் கொஞ்சம் கூட்டி சொல்ல வேணும்,இப்ப கேட்டிருக்கும் என்று நினைத்து கவிதையை தொடர்கிறார்

ஹேஹே...........
உனக்கு முன்னாடி சத்தியமா என் உசிரு என்னை விடாது.....
ஏன்னா நான் போயிட்டா உன்னை யாரும் விதவையா பாக்ககூடாது...
என்னை விட்டன் உன்னை எவண்டி பாத்துப்பான்...
நல்லா பாத்துப்பேன் என்னு சொல்லி பொய்யா நடிப்பான்
ஒரு தகப்பன் போல இருப்பேன்
ஒரு தாயை போலவும் இருப்பேன்
உன் நண்பன் போல நடப்பேன்
அந்த கடவுள் போல காப்பேன்
உன் குழந்தையாவு நான் புறப்பேன்


காதலிக்கு முன்னாலே உயிர் இருக்காது என்று கூறி காதலியின் ஒரு பயங்கர நிலைமையை காட்டுகிறார்
அடுத்து கணவனாக இருந்து சொல்லக்கூடாத உச்சரிக்ககூடாத வசனத்தை சொல்லி கேட்கிறார் கவிஞர், நான் இல்லாவிட்டால் எவன் உன்னை இப்படி யெல்லாம் பார்த்துக்கொள்வான் என்று கேட்கிறார், இதயத்தில் குடி கொண்ட காதலன் அல்லது காதலி வேறொருவனோடு அல்லது ஒருத்தியோடு பொருத்திப் பார்ப்பார்களா என்ன?
எவன் தன்னை போல பார்ப்பான் என்று கேட்டிவிட்டு மீண்டும் உணர்வை தட்டுகிறார்,
தாய் தந்தை நட்பு கடவுள் குழந்தை என்று ஒவ்வொரு பாசப்பிணைப்போடும் காதலை கொண்டுவருகிறார் கவிஞர்.காதல் ரசனை மிஞ்சிய இலக்கிய ரசனை சொட்டும் பாடலில் பாசப்பிணைப்பு இல்லாவிட்டால் பாடல் சப்பெண்டு போய்விடும்தானே,
அதனால் தான் இந்த உணவுகளை பாடல்வரிகளில் தட்டியிருக்கிறார் கவிஞர்.

அடி வாடி வாடி வாடி வாடி கியூட் பொண்டாட்டி
நான் தாங்க மாட்டன் தூங்க மாட்டன் நீ இல்லாட்டி
அடி வாடி.. அடி வாடி...என் ஹோட் பொண்டாட்டி
நான் தாங்க மாட்டன் தூங்க மாட்டன் நீ இல்லாட்டி டீ டீ

மீண்டும் அழைத்து அன்போடு கவர்ச்சியாக அன்போடு விழிக்கிறார் கவிஞர்,தாங்கமாட்டாராம்,தூங்கமாட்டாராம்,ஏனென்றால் ஹொட் தானே, ”அப்படி சூடு” என்று அடிக்கடி சொல்வாரே ரஜனிகாந்த் ஒரு திரைப்படத்தில்,அதுவும் சூடு அதேபோல் காலைவேளை தேநீரும் சூடுதானே,அதுவும் ஹொட்(சூடு) தான்,
தொடர்ந்து மனைவியை தொடர்ந்து வாய்விட்டு கூப்பிட்டு பாடல் நிறைவடைகிறது ஐலவ் யூ என்ற காதல் உணர்வோடும் வரியோடும்.

என் பொண்டாட்டி பொண்டாட்டி டீய்ய்ய்ய்ய்ய்ய்
ஐ லவ் யூ டீ பாட்டீ டீய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்
என் பொண்டாட்டி பொண்டாட்டி டீய்ய்ய்ய்ய்ய்ய்ய்
எனக்கு தேவையில்லை வைப்பாட்டீ டீ டீய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்
ஐ லவ் யூடி பொண்டாட்டிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்


தமிழனின் இலக்கிய வளர்ச்சியில் நவீனத்துவதோடு வந்த பாடல் இது,விளக்கவுரையினால் அதன் தனித்துவத்தை உணர்ந்திருப்பீர்கள்,இதன் மூலம் தமிழ் தெரிந்தவர்கள் எல்லாம் கவிஞராகலாம் என்ற அடிப்படை உண்மையை பறைசாற்றியிருக்கிறது, தனித்துவமான தமிழ் என்றும் எல்லோருக்கும் புரிகின்ற தமிழ் என்றும் உலகமெங்கும் பரவியிருந்து இப்படி பேசினால் தான் சிறப்பு என்று போற்றப்படுகின்ற ஆங்கிலதமிழ் அரைகுறையாக தெரிந்தாலும் பல பாடல்களை எழுதமுடியும் என்பதை அறுதியும் உறுதியுமாக கூறுகிறது இந்த பாடல்.




கடைசிகாலத்துக்கு யாழ்ப்பாணத்துக்கு தான்

ஊருலகம் எல்ல்லாம் சுத்தி கடைசி காலத்துக்கு உழைத்த காசோடு நம்ம மண்ணுக்கு போகவேணும் என்று சொல்வது போல இந்த விடயத்தலைப்பு அமைந்தவுடன் ஓடொடி வந்தவர்கள் எல்லோருக்கும் நல்வரவு.
இப்படித்தான் முந்தி ஒரு காலத்திலே ”இது வந்திட்டுதோ” என்று விடியற்காலையில் உதயன் பத்திரிகையை பார்ப்பது வழமை,வந்துவிட்டது என்றால் வணிகர்கள் லொறியோடு போவார்கள்,பயணிகள் வருகைக்காக காத்திருக்கும் மக்கள் வாகனத்தோடு அல்லது குறிப்பிட்ட தன் உறவினர் வந்துவிட்டாரா என்று தேடிப்போவர்,”இண்டைக்கு வரவில்லையாக்கும்” என்று எண்ணி ஏமாற்றத்தோடு வீடு திரும்புவர் பலர், சிலர் அறுபட்ட இழுபட்ட பயணிகள் பையையும் தூக்கிக்கொண்டு ”இண்டைக்கு ஒரு மாதிரி அம்மா வந்திட்டா செல்வச்சந்நிதியானுக்கு காவடி எடுக்க வேணும் “ என்று எண்ணியபடி போவர்,

இப்படி பல கதைகளை நினைவுபடுத்தும் இந்த கப்பல்,லங்கா முடித கப்பலுக்கு வயசு வந்திட்டுது,


கடைசி காலத்துக்கு எல்லா பழசும் யாழ்ப்பாணத்துக்குத்தான் எண்டது போல லங்கமுடித அதன் கடைசி காலம் வரை ஓடி முடித்திருக்கிறது,””இன்னும் ஓட விடலாம்" என்றால் அதற்கு வயசு போய்விட்டதாம்,எல்லா இடமும் ஓடி கடைசிகாலத்துக்கு திருகோணமலை யாழ்ப்பாணத்துக்கு ஓடி களைச்சு இப்போது கப்பல் நங்கூரமிடும் காசு கப்பல் ஓடுவதற்கான காசை விட ரொம்ப கூடவாம்,சர்வதேச விதிமுறைகளுக்கு உட்பட்டு ஓடுவது என்றால் கப்பலை திருத்த அதற்கும் ரொம்ப காசு,எல்லாம் யோசித்துவிட்டு கப்பலை இரும்புக்கு விற்றாவது உழைக்க எண்ணியிருக்கிறது துறைமுக அமைச்சு.

ஒருகாலம் இந்த கப்பலுடைய பெயர் யாழ்ப்பாணம்,திருகோணமலை,கொழும்பு எல்லாம் எல்லோர் வாயிலும் பெரும்பாலும் உச்சரிக்கபடுகின்ற பெயர்,இதனால் உழைத்தவர்கள் பலர்,பாராளுமன்ற உறுப்பினர் ஆனவர்கள் சிலர்,இவர்கள் மக்கள் பிரதிநிதிகள்,கஸ்டபட்ட மக்கள் பலரோ பலர்.
கப்பல் ஓட ஓட சரியான இருக்கை இல்லாமல் கப்பலின் அங்கு இங்கும் உட்கார்ந்த படி வாந்தி எடுத்து எடுத்து கடைசியாக போய்சேருவோமொ என்று களைத்து விழுந்து யாழ்ப்பாணத்தை அல்லது திருகோணமலை வந்து சேர்வர் பயணிகள்.கப்பல் வருகைக்காக இரு கரைகளிலும் வரிசையில் பல நாள் காத்திருக்கும் மக்கள்.வந்தவுடன் முண்டியடித்து ஏறுவதும் அதற்கு கிடைக்காமல் ஏமாற்றத்தோடு திரும்பும் மக்கள்,


பின்னர் உதயன் பத்திரிகையை அடிக்கடி திருகோணமலையில் இருந்து கப்பல் வெளிக்கிட்டுவிட்டதா என்று பார்த்து மீண்டும் வரிசைகாக ஒடுவது,வெளி நாடுகளுக்கு போகும்போது பயணம் அனுப்புவது போல இந்த பயணத்துக்கும் சொந்தக்கள் நண்பர்கள் கூடி வழியனுப்பி வைப்பர், இந்த முறை என்றாலும் வெற்றியோடு சென்று வா என்று பல முகங்கள் பேசும்,போர்க்களத்துக்கல்லவா போகிறார்கள்?? ம்ம்ம்ம்ம்
ஓடும்போது கொண்டு செல்லும் பயணப்பையைவிட தரப்பட்ட பாஸ் எடுக்கப்பட்டதா என்று அடிக்கடி திருப்பி திருப்பி பார்ப்பது அதில் இருக்கும் பதட்டம் பயணித்தவர்களுக்கு மட்டுமே வெளிச்சம்.
பத்தடிக்கு ஒருமுறை பயணப்பை பரிசோதனை,எடுப்பதும் வைப்பதுமாக கப்பல் ஏறினாலும் சங்கடம் தான்.உணவுப்பொருள்கள் கொண்டு வரும் கப்பலில் பயணிகளும் ஏற்றப்பட்டால் எப்படி இருக்கும்?
சரக்கு கப்பல் என்றால் இருக்கைகள் இல்லை,இந்த வேலையில் சர்வதேச விதிமுறைகளுக்கு உட்பட்டுத்தான் இந்த கப்பல் ஓடியதா என்ற கேள்வியை முன்வைக்கிறது.
எத்தனை மாணவர்கள் பட்டதாரிகளின் வேலை வாய்ப்புகள் இழக்கபட்டிருக்கிறது.பல்கலைக்கழக அனுமதிகள் பிந்தியிருக்கிறது,விரிவுரைகளுக்கு பிந்தி சென்ற மாணவர்கள் அங்குள்ல விரிவிரையாளர்களுக்கு காலம் பிந்தி வருவதற்கான விளக்கத்தை சொல்வதற்கு படும்பாடு,

இதை விட லங்கா முடித கப்பல் வந்துவிட்டால் ஊரிலை சங்க கடையில் வரிசை,கடல் தண்ணி பட்டு விட்டதாம் என்று சீனி அரைகுறையாக இனிக்கும்,கோதுமை மாவின் நிறம் மாறியிருக்கும்,என்றாலும் வாங்கியேதான் ஆகவேண்டும்,வாங்காவிட்டால் சாப்பாட்டுக்கு எங்கு போவது? அதுவும் ஒரு காட் இருக்கிறது,அந்த காட்டுக்கு 2 அல்லது 1 கிலோ,அதைவிட யாழ்ப்பாணத்து உற்பத்தி சோப் போட்ட மக்களுக்கு கொழும்பு சோப் ஒன்று அல்லது இரண்டு கிடைக்கும்,அதுவும் வாங்க வேண்டும்,\இதைவிட கிழிஞ்ச கிழிக்கபட்ட தபால்கள் வரும் காலம்,தபால் கொண்டுவரும் அன்பர் அந்த ஊரவராக தான் இருப்பார்,அவருக்கு அந்த ஊரவர்கள் எல்லாம் நட்பாகத்தான் இருப்பார்,கடிதங்களை அடுக்கியபடி “அது கடல் தண்ணி பட்டுப்போச்சு,போன கிழமை மழைதானே,அது தான் இதெல்லாம் கிழிஞ்சுபோச்சு”என்று கொடுப்பார்,ஒவ்வொருகடிதமாக இணைத்து வாசித்து தூரதேசத்து மகன் அல்லது மகளின் நிலைமையை அறிவர் குடும்பத்திலுள்ளோர் எல்லோரும்.

இப்படி எத்தனையோ கதைகள் சொல்லும் இந்த லங்கா முடித கப்பல்.கஸ்டங்கள் கொடுத்ததும் லங்கா முடித்ததான்,அங்கும் இங்கு கடக்க உதவிசெய்ததும் லங்கா முடித்ததான்,இருந்த கை பிழையோ அல்லது ஓடியது பிழையோ தெரியாது,லங்கா முடித ஓடி ஓய்ந்திருக்கிறது,கடைசிகாலத்துக்கு யாழ்ப்பாணத்துக்கு ஓடி இப்ப இரும்புக்கு தயாராகிரது,.இரும்புக்கு போனாலும் அந்த இரும்புக்காசு யாருக்கோ போனாலும் யாழ் மக்களின் மன இருப்பில் இருந்து நீங்காது இந்த லங்கா முடித்த, நினைவுகளால் என்றாலும் நிஜத்திலும் எல்லாம் கடைசிகாலத்துக்கு யாழ்ப்பணத்துக்கு தான்

மாணவர்களின் வளர்ச்சியே பேரின்பம் என்பார் ஆசிரியர் வல்லிபுரம்

ஆசிரியர் என்பதற்கு இலக்கணமாய் வாழ்ந்து உலகமெங்கும் தன் மாணவர்களின் சிறப்பான வளர்ச்சியால் பெருமையுற்று எம்மோடு வாழ்ந்த ஆசிரியர் வல்லிபுரம் அவர்களை இழந்துவிட்டோம் என்பது மனதுக்கு வேதனையளிக்கிறது,



செய்யும் தொழிலே தெய்வம் என்று வாழ்ந்து கொண்டு "ஆசிரியர்" என்பவர் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதற்கு இலக்கணமாக  வாழ்ந்து காட்டியவர் தான் ஆசிரியர் சின்னையா வல்லிபுரம் அவர்கள்.ஆரம்பக்கல்வியே வாழ்க்கையில் அடிப்படைக்கல்வி என்பது யாவரும் அறிந்ததே.அந்த கல்வியை மாணவன் எவ்வாறு பெற்றுக்கொள்கின்றானோ அதுவே அவனை சீரிய பாதையில் வழிகாட்டிச்செல்லும்  என்பது உண்மைதான்.அதை ஆசிரியர் செவ்வனே அறிந்து மாணவர்களை வழிநடத்துவார்.
சிறுபராயம் முதலே மாணவர்கள் பணிவுடனும்,பண்புடனும் அதேவேளை போட்டி மனப்பானமையுடனும் கல்வி கற்க வேண்டும் என்ற எண்ணத்தோடு கல்வி கற்பிப்பவர் ஆசிரியர் அவர்கள்.ஆசிரியர் ஐந்தாந்தர புலமை பரீட்சையில் மாணவர்களை தயார்ப்படுத்தும் பெரும் பணியினை கையிலெடுத்து அதில் வெற்றியும் கண்டவர் ஆசிரியர் வல்லிபுரம் அவர்கள்.
பாடசாலை பரீட்சைகளுக்கு கூடுதலான புள்ளிகளை பெறவேண்டும் என்பதைவிட ஆசிரியர் அவர்களின் பரீட்சையில் மாணவர்கள் கூடுதல் புள்ளிகள் பெற மிகவும் பிராயத்தனதொடு கற்பார்கள் என்றால் ஆசிரியரின் முக்கியத்த்துவம் உங்களுக்கு புரியும்.
ஆசிரியர் சின்னையா வல்லிபுரம் அவர்கள் அதிபராக பணிசெய்து வந்திருந்தாலும் ஆசிரியராக இருந்து கிடைக்கும் மகிழ்ச்சியே தனி என்று சொல்பவர்.
மாணவர்களின் மகிழ்ச்சியில் அவர் மகிழ்ந்திருப்பார். ஆசிரியரின் மாணவர்கள் பல்வேறு நாடுகளிலும் மிகச்சிறந்த பதவிகளில் கடைமை ஆற்றிக்கொண்டிருக்கின்றார்கள்.அந்த பெருமை அவருக்கு இறுதிக்காலம் வரை நிலைத்திருந்தது.

நான் அறிந்த வகையில் அதிபராக பணிபுரிந்த காலங்களில் கரணவாய் மணியகாரன் தோட்டம் வித்தியாலயத்தின் காலங்கள் அவரின் பொற்காலம் என்றுதான் சொல்ல வேண்டும்.அவ்வூர் மக்களோடு மக்களாக சேர்ந்து பாடசாலையின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றியவர் ஆசிரியர் வல்லிபுரம் அவர்கள்.
ஆசிரியராக அதிபராக சேவை உள்ளம் கொண்டவராக இருந்து 2008 ம் ஆண்டு ஆவணி மாதம் இரண்டாம் தேதி தனது அறுபதாவது வயதில்  தனது அதிபர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றிற்றுக்கிறார்.ஓய்வு பெற்றாலும் தனது ஆசிரியப்பணியை தொடர்ந்தும் செய்துவந்தார்.கற்பித்து மாணவர்கள் அடையும் வளச்சியில் அதில் அவர்கள் பெறும் மகிழ்ச்சியில் தானும் 
மகிழ்வுறுவார்.அன்றய காலங்களில் வடபுலம் யாழ்ப்பாணம் கரவெட்டிக்கு செல்லும் சந்தர்ப்பம் எனக்கு கிடைத்தபோது ஆசிரியர் அவர்களை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.அப்போதும் கூட அவர் தன்னை நம்பி வீடு வரும் மாணவர்களை விட்டுவிட்டு தனது சொந்த தேவைக்காக அதுவும் தன்னுடைய மகனுக்கான முக்கியமான ஒரு தருணத்தில் கொழும்புக்கு செல்வதை தவிர்க்க போவதாகக் கூறியிருந்தார். அப்படியாக மாணவர் மீது அக்கறை கொள்ளும் ஆசிரியர் ஒருவரிடம் கல்விகற்றேன் என்ற பெருமை எனக்கு மட்டுமல்ல உலகமெங்கும் பரந்து வாழும் அவரின் சிறப்பான மாணவர்களுக்கும் என்றும் இருக்கும்.
இப்படியான சிறப்புக்கள் பொருந்திய ஆசிரியர் ஒருவரை நாம் இழந்துவிட்டோம் என்று சொல்லவே வேதனை தருகிறது,தன் அன்பான புத்திரர்களையும் சீரியபாதையில் வழி நடாத்தி இவ்வுலகை நீத்திருக்கிறார்.ஆசிரியரின் பெருமைகள் அவரின் பெயரும் புகழும் அவரின் மாணவர்களால் என்றும் சிறப்புறும்,ஆசிரியரின் பிரிவால் துயருறும் அவரின் குடும்பத்தினருக்கு கரவைக்குரல் தன் ஆழ்ந்த அனுதாபங்களை பகிர்ந்துகொள்கிறது

முல்லை மண்ணிலிருந்து வரும் சாதனை மாணவன் - வாழ்த்தும் கரவைக்குரல்

அண்மையில் வெளியாகிய தரம் ஐந்து புலமை பரீட்சை முடிவுகளில் முல்லைத்தீவை சேர்ந்த மாணவன் அகில இலங்கைரீதியில் இரண்டாவது இடம்பெற்றமை மகிழ்ச்சியை தருகிறது.எத்தனையோ கஸ்டங்களும் கடினப்பாதைகளும் மாணவர்களுக்கு சூழ்ந்திருக்க அதுவும் விசுவமடுவை சேர்ந்த மாணவன் நாடளாவிய ரீதியில் தமிழ் மாணவனாக தன் பெயரையும் பொறித்திருப்பது உலகமெங்கும் தமிழ் பேசும் மக்களுக்கு மிகபெரிய சந்தோசத்தை கொடுத்திருக்கிறது.பாடசாலைக்கல்வியை தொடர்ந்து கொள்ள முடியுமோ அல்லது தன் இருப்பு இந்த உலகத்தில் உறுதியாகுமோ என்று சிந்தித்த மாணவர்களின் இடத்தில் இருந்து மாணவன் வெற்றிபெற்றிருப்பது சிறந்த சாதனை என்றுதான் சொல்லவேண்டும்.
முல்லை மண்ணிலிருந்து இந்த சாதனை அரங்கேறியிருப்பது பெருமைக்குரியதாகிறது.யுத்தம் தின்று துப்பிய மண்ணிலிருந்து சாதனை என்று பெருமை கூறுகின்றார்கள் ஆர்வலர்களும் பெரியவர்களும்.
பரீட்சைக்கான அடிப்படை கல்விக்கான காலத்திலும் அதன் நுணுக்கங்களை அறியும் பராயத்தில் அந்த மாணவன் முல்லை மண்ணில் இருந்திருந்தால் எவ்வளவு கஸ்டப்பட்டிருப்பான் என்பது நினைக்க கூடிய விடயம் அல்ல.அது மட்டுமல்லாமல் தொடரும் காலங்களிலும் சிறப்பான கல்வியை பெறுவதற்க்கு எவ்வளவு கடினப்பட்டிருப்பான் என்பது நினைக்க சுலபமான விடயமாகாது.

அந்த சாதனைக்குரிய மாணவன் முல்லைத்தீவு நெத்தலியாறு தமிழ் மகாவித்தியலாய மாணவன் பரமேஷ்வரன் சேதுராகவன் அவர்களுக்கு சிறப்பான வாழ்த்துக்களை பதிவு செய்கிறது கரவைகுரல்.
அந்த மாணவனின் வளர்ச்சியோடு பங்கெடுத்த பெற்றோர் ஆசிரியர்கள் யாவருக்கும் நன்றி பாராட்டுகின்றது கரவைக்குரல்.இன்னும் அந்த மாணவனின் தனித்துவக் கெட்டித்தனங்களை சரிவர இனங்கண்டு அதற்கான களங்களை ஏற்படுத்துங்கள்,உளமார்ந்த சிந்தனைகளுக்கும் அவனின் எதிர்பார்ப்பான வெற்றிகளும் தொடர்ந்தும் உறுதுணையோடு பெற்றோர்,ஆசிரியர்கள்,சமூக முன்னோடிகள் யாவரும் வழியமைத்துக்கொடுங்கள்.உண்மையில் மாணவனின் எண்ணங்களை அறிந்துகொள்ள நேரடியாக பேச வேண்டும்,ஊடகங்கள் வாயிலாக களம்கொடுக்க
வேண்டுமென்பது அனைவரினதும் எண்ணமாகிறது.தொடர்புகொள்ள சந்தர்ப்பங்களை ஏற்படித்தித்தர முடிந்தவர்களை கரவைக்குரல் எதிர்பார்க்கிறது.

முல்லைமண்ணிலிருந்து சாதனைக்குரிய மாணவனாக சிறப்புபெற்றிருக்கும் பரமேஸ்வரன் சேதுராகவனை அன்போடும் உரிமையோடும் வாழ்த்துகிறோம்.
உங்கள் வாழ்த்துக்களையும் மறுமொழி வாயிலாக பதிவுசெய்யுங்கள்

சிறப்பாக நிகழ்ந்த கரவெட்டி ஒன்றியத்தின் நிகழ்வு

புலம்பெயர்ந்தும் தாயகம் சார்ந்த அபிவிருத்தி மற்றும் சமூக நலன் சார்ந்த நடவடிக்கைகளில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டிருக்கும் புலம்பெயர்ந்த எம் மக்கள் வரிசையில் கரவையூர் மக்களின் கரவெட்டி அபிவிருத்தி ஒன்றியம் சார்பான சிறப்பாக ஒழுங்குசெய்யப்பட்ட இரவு இசை நடன நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை 29-05-2011 அன்று நடைபெற்றது,ஏலவே கரவெட்டி ஒன்றியம் சார்பான நான் அறிந்த சில விடயங்களை கடந்த பதிவில் குறிப்பிட்டிருந்தேன்(அதை இங்கே அழுத்திப்பார்க்கவும்) அன்று நிகழ்வில் கலந்துகொண்ட பின் இன்னும் பல வியங்களை அறியக்கூடியதாக இருந்தது.என்றாலும் நிகழ்வின் விடயங்களை இங்கு பதிவாக்கலாம் என்ற எண்ணம்

கரவெட்டி ஒன்றியத்தின் இரவு இசை நடன நிகழ்ச்சி சரியாக மாலை 6 மணிக்கு ஆரம்பமாகியது,சாதரணமாக கலை நிகழ்வுகள்போலல்லாமல் சற்று வித்தியாசமாக நிகழ்ச்சி ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது,ஆரம்பத்தில் நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் யாவரும் தங்களோடு தாங்கள் உரையாடியும் கரவையின் தங்கள் பொழுதுகளையும் மற்றும் நீண்ட நாள்களுக்குப்பிறகு சொந்தங்களை கண்ட மகிழ்ச்சியில் அவர்களோடு உரிமையோடும் உற்சாகமாகவும் உரையாடியதை அவதானிக்க முடிந்தது,
தொடர்ந்து மாலை 7 மணிக்கு நிகழ்வின் ஆரம்பம் எம்மை விட்டு பிரிந்த சொந்தங்கள் யாவரையும் நினைந்து ஒரு நிமிட மௌனத்தோடு தொடங்கியது,முற்றிலும் கரவெட்டியின் அபிவிருத்திக்கான நோக்கத்தோடு நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டமையை நிகழ்ச்சி நிரலிலும் காணக்கூடியதாக இருந்தது,
இசை நிகழ்ச்சியை லண்டன் புகழ் இசைக்கலைஞர்கள் மற்றும் ஆனந்த் இணைந்து வழங்கிய யங்ஸ்ரார் இசைக்குழு வழங்கிக்கொண்டேயிருந்தது.முதற்பாடல் கரவெட்டி அபிவிருத்தி ஒன்றியத்தின் தாய்க்கழகத்தலைவர் திரு.பொன்னம்பலம் அவர்களின் மகள் துஷாந்தி பாடியிருந்தமை நிகழ்வை மெருகூட்டியது.சபையின் கரகோசம் அதை ஆமோதித்தது என்றால் மிகையாகாது.
அதுமட்டுமல்லாமல் இந்த இசை நிகழ்ச்சியில் ஆனந்த்,ஜேஜே,டில்ஷா,ரமணி என்று லண்டன் புகழ் பாடகர்கள் சிலரும் பாடியிருந்தமை நிகழ்வை சிறப்பாக்கியது.
தொடர்ந்து கரவெட்டி அபிவிருத்தி ஒன்றியத்தின் இங்கிலாந்துக்கிளையின் தலைவர் திரு கிருஷ்ணா அவர்களின் உரை இடம்பெற்றது, நிகழ்வின் ஏற்பாடுகள்,எதிர்பார்ப்புகள்,எதிகாலத்தில் எதிர்பார்க்கும் செயற்பாடுகள் என்று இன்னோரன்னவிடயங்களை உள்ளடக்கி தன் உரையை வழங்கியிருந்தார்.

தொடர்ந்து கரவை ஒன்றியத்தின் கடந்தகால செயற்பாடுகள் பற்றிய வீடியோ விவரணக்காட்சி காண்பிக்கப்பட்டது.பொதுவாக கரவெட்டி பிரதேச வைத்தியசாலைக்கட்டடங்கள் மற்றும் அங்கு ஏற்படுத்தப்பட்ட வசதிகள் அதில் அமைந்திருந்தது.அதுமட்டுமல்லாம கரவெட்டி ஒன்றியத்தின் தாய்க்கழக தலைவர் திரு பொன்னம்பலம் அவர்களின் உரை மற்றும் வைத்தியசாலை வைத்தியர் அவர்களின் உரை ஆகியன இடம்பெற்றன,அங்கு தனியாகவோ குழுவாகவோ இணைந்து யாராவது கரவை மக்களுக்கு தேவையான பொதுவான செயற்திட்டங்களுக்கு கரவெட்டி ஒன்றியம் பூரண ஆதரவு வழங்கும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது.

நிகழ்வில் இன்னுமோர் சிறப்பு நிகழ்ச்சியாக இறுதிப்பரிசாக வைர மோதிரம் காத்திருக்க பணப்பந்தயம் நடைபெற்றது,பந்தயமாக பெறப்படும் பணம் முழுவதும் கரவெட்டியின் அபிவிருத்துக்கான நிதி சேகரிப்பாக அமைந்தது.அதில் ஆர்வத்தோடும் போட்டியோடும் அவ்வப்போது கலகலப்பான சிரிப்போடும் பங்குபற்றி நிகழ்வை சிறப்பித்தார்கள் நிகழ்வின் விருந்தினர்கள். நிகழ்வின் இறுதியில் ஒரு இளைஞனுக்கு வைர மோதிரம் உரித்தானது.
அவருக்கு இன்னும் சில நாள்களில் திருமணம் நடைபெற ஏற்பாடாகி இருப்பதால் அது சிறந்த பரிசு அவருக்கு என்று தங்களுக்குள் நகைச்சுவையாக உரையாடினர் சிலர்,இந்த பணப்பந்தய நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியிருந்த திரு ஜோய் தனக்கே உரித்தான பாணியில் தனிச்சிறப்போடு நெறிப்படுத்தினார்.
தொடர்ந்து நிகழ்வின் முக்கிய அம்சமாக கரவெட்டி என்ற கிராமத்துக்கு இன்னும் எப்படியான நலன் திட்டங்கள் மேற்கொள்ள முடியும் என்ற அடிப்படையில் கலந்துகொண்டவர்களின் கருத்துக்களும் உள்வாங்கப்பட்டது.பங்குபற்றியவர்கள் யாவரும் தங்கள் கருத்துக்களை எண்ணங்களை பகிர்ந்துகொள்ளும்படியாக எல்லோர் மேசைகளிலும் காகிதங்கள் வழங்கப்பட்டிருந்தது,அவை மூலம் அவை பெறப்பட்டன.தொடர்ந்து கலந்துகொண்டவர்களுக்கான அதிஸ்டமும் பெறுமதிமிக்க பரிசுகளும் வழங்கப்பட்டது.
அதுவும் வந்திருந்தவர்களை சுவாரஸ்யப்படுத்தியது,
இரவு விருந்தோடு அமைந்த இந்த நிகழ்வு கரவெட்டி வாழ் சொந்தங்களை மீண்டும் சந்திக்கவைத்திருக்கிறது.இதில் கலந்துகொண்டமை யாவருக்கும் மகிழ்வையே கொடுத்திருக்கிறது.தொடர்ச்சியாக இப்படியான சந்திப்புக்களை ஏற்படுத்திக்கொள்வது இன்னும் சிறப்பான விடயமாகத்தான் இருக்கும். அதுமட்டுமல்லாமல் கரவெட்டியை அடையாளப்படுத்துமளவுக்கு ஏதாவது ஒரு சிறப்பான செயற்திட்டத்தை கரவெட்டி ஒன்றியம் ஏற்படுத்துமாக இருந்தால் அதுவும் மிக பெருமையாக இருக்கும். நூல் நிலையமோ அல்லது கரவெட்டி மண் பெற்ற பிரபலங்களுக்கான நினைவுகளோ அல்லது யாவருக்கும் பயன் பெறகூடிய செயற்திட்டமாகவோ அல்லது உலகம் சிறப்பாக பேசுமளவுக்கு செயற்திட்டம் அமைந்தால் அது சிறப்புறும் என்பது கரவைகுரலின் எதிபார்ப்பு.

எது எப்படியாயினும் கரவெட்டி ஒன்றியத்தின் முதலாவது இங்கிலாந்தின் நிகழ்வு மிகச்சிறப்பாக நிறைவுற்றிருக்கிறது.ஆரம்ப நிகழ்வு என்று சொல்லமுடியாத அளவுக்கு நிகழ்வு சிறப்பு.இன்னும் பல சாதனைகளோடு நிகழ்வு மற்றும் கரவெட்டி அபிவிருத்தி ஒன்றியம் சிறக்க கரவைக்குரல் தன் வாழ்த்துக்களை பகிர்ந்துகொள்கிறது.

இங்கிலாந்தில் கரவையூர் மக்களின் கரவெட்டி ஒன்றிய நிகழ்வு

பல்வேறு காலங்களிலும் அந்த காலங்களின் நிலைமைகளிலும் அந்த நிலைமைகளில் வாழ்ந்த சூழல்களாலும் தாயகத்தை விட்டுப்பிரிந்து பல்வேறு தேசமெங்கும் வாழ்ந்துகொண்டிருக்கும் தாயகமக்கள் இன்றும் தமது நாடு தேசம் சமூகம் என்று தங்களை ஈடுபடுத்திக்கொண்டிருப்பது யாவரும் அறிந்த ஒரு விடயமே. ஏதோவொருவகையில் ஒவ்வொருவரும் தாங்கள் வாழ்ந்த ஊர் மற்றும் தாங்கள் படித்த பாடசாலை என்று அவற்றின் அபிவிருத்திச்செயற்பாடுகளில் தங்களின் சிறிய பங்களிப்புக்களையாவது வழங்கி ஈடுபடுவது மகிழ்வைத்தரும் அம்சமாக இருக்கிறது.
அந்த அடிப்படையில் கரவெட்டி மக்களின் அபிவிருத்தி மற்றும் சமூக நல முன்னேற்பாடான செயற்பாடுகளில் ஈடுபடும் அமைப்பாக கரவெட்டி அபிவிருத்தி ஒன்றியம் அமைந்துகாணப்படுகிறது.
யாழ்ப்பாணத்தின் வடமராட்சியில் அமைந்து காணப்படும் இந்த அழகிய கிராமத்தின்(கரவெட்டியின் அமைவிடம் சார்ந்த பதிவு இங்கே) முற்றுமுழுதான சமூக தேவைக்கான அபிவிருத்தியில் தன்னை ஈடுபடுத்திவரும் அமைப்பாக இந்த கரவெட்டி அபிவிருத்தி ஒன்றியம் செயற்படுகிறது.
உண்மையான பிரதான குறைபாடுகளை இனங்கண்டு அவற்றுக்கு முக்கியத்துவம் அளிப்பதோடு மட்டுமல்லாமல் கல்வி சமூக கலாச்சார நடவடிக்கைகளுக்கு வழிகாட்டியாக சீர்ப்படுத்தி நெறிப்படுத்தும் அமைப்பாக இந்த அமைப்பு உருவாகியிருக்கிறது.இதில் சிறப்பான விடயம் என்னவென்றால் சுய நல வேறுபாடுகள் இல்லாமல் கரவெட்டி என்று சொல்லப்படும் பெரியளவிலான, ஊர்மக்கள் யாவரும் பயன்பெறும் திட்டங்களை முன்னெடுப்பதுதான்.அண்மைக்கால ஆரம்பமாக இருக்கும் இந்த அமைப்பு குறுகிய காலத்தில் சீரான மேலான வளர்ச்சி அடைந்திருக்கின்றமை சிறப்பானது.

கரவையூர் மத்தியில் அமைந்திருந்த கரவெட்டி பிரதேச வைத்தியசாலை அங்குள்ள மக்களுக்கு சிறப்பான சேவையாக அமைந்திருந்தது.ஆனால் அங்கு காணப்பட்ட வசதிகளோ அல்லது அதன் அளவோ அங்குள்ள மக்களுக்கான தன்னிறைவாக இருக்கவில்லை என்பதும் உண்மைதான்.அதனை அங்குள்ள மக்களிடம் இருந்த தேவையாக உணரப்பட்டு அதன் விஸ்தரிப்புக்கான நிலத்தை நீண்டகால கொள்வனவு அடிப்படையில் வாங்குவதற்கு கரவெட்டி ஒன்றியம் தன் பங்கை கொடுத்திருக்கிறது.இதன் மூலம் இப்போது கரவெட்டி வைத்தியசாலை என்று அழகுபெற்று மக்களிற்கான மருத்துவ சேவையாற்றிக்கொண்டிருக்கிறது.
Karaveddy Divisional Hospital
Karaveddy


இதேபோல் மருத நிலம் சார்ந்த கரவையூரில் காணப்படும் குளங்கள் இன்னுமோர் அழகு ,அத்துளுக்குளம் அதில் விசேடமானது.தாமரை மலர்கள் அந்த குளத்தில் தனித்துவமான அழகு தரும். அதேபோல் அந்த குளத்தில் இருந்து தான் அங்குள்ள மக்களுக்கான நீர்வடிகால் சேவையும் நீர்த்தேவையும் பூர்த்திசெய்யப்பட்டது.அத்தோடு ஒரு ஊரின் தனித்துவமான குளங்கள் சுகாதார வசதி நிறந்திருக்க வேண்டும் என்பதை உணர்ந்த மக்கள் அதைத்தகுந்த முறைபடி பயன்படுத்த உத்தேசித்து அதற்க்கான முள்வேலிகள் சுற்றிவர சிறப்பாக அடைத்து பராமரிக்கப்பட்டு வருக்கிறது,
அத்தோடு கரவெட்டியின் நீர்வடிகால் சேவையை விஸ்தரித்தல்,அதற்கான நீர்சுத்திகரிப்பு மேடை மற்றும் இயந்திரம் அமைத்தல்,ஊர் மக்களின் மாயானங்கள் சிறந்த முறையில் பராமரிக்க அதற்கான வசதிகள் செய்தல் என்று கரவெட்டி ஒன்றிய செயற்ப்பாடுகள் விரிந்துகொண்டே செல்கிறது.

அந்த வகையில் கவெட்டி ஒன்றிய மக்களின் இங்கிலாந்து கரவையூர்மக்கள் இணைந்து கரவெட்டி ஒன்றிய செயற்பாடுகளை விஸ்தரிக்கவும் இன்னும் அமையவேண்டிய தேவையான திட்டங்களை அறிந்துகொள்ளவும் அதேபோல் ஒன்றியத்தின் உறுப்பினர்களின் எண்ணிக்கைகளை அதிகரித்து பலமான அமைப்பாக உருவாக்க வேண்டும் என்ற சிறப்பான எண்ணத்தோடும் சிறப்பான ஒரு நிகழ்வை 29-05-2011 ஞாயிற்றுக்கிழமை இன்று ஒழுங்கு செய்திருக்கிரார்கள்

.சிறப்பான ஒழுங்குமுறைகளோடு நிகழும் இந்த நிகழ்வில் முற்றிலும் கரவெட்டியின் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படும் திட்டங்கள் பற்றிய புலத்து மக்களின் எண்ணங்கள் பதிவு செய்யப்படுகிறது.கரவையூர் மக்களின் சந்திப்போடு நிதிசேகரிப்பு மற்றும் கலந்துகொள்ளும் மக்களுக்கான ஒரு நிகழ்வும் ஒருங்கே ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இந்த நிகழ்வில் கலந்துகொள்ளும் சந்தர்ப்பம் எனக்கும் கிடைத்ததால் நிகழ்ச்சி சார்ந்த விடயங்களை நிகழ்வு நிறைவு பெற்றபின் தரலாம் என்று விளைகிறேன்.

ஆகவே புலம்பெயர்ந்தும் தமது கடமைகளை உணர்ந்து தத்தமது ஊரின் நலன்சார்ந்த எந்த ஒரு விடயத்திலும் பங்கெடுக்கும் உறவுகளுக்கு என்றுமே பாராட்டுகுரியவர்கள் நன்றிக்குரியவர்கள்,
அந்த வகையில் கரவையூர் மக்களின் கரவெட்டி ஒன்றிய நிகழ்வுக்கு கரவைக்குரல் தன் வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகளை பகிர்ந்துகொள்கிறது


(அன்பான பதிவுல நண்பர்களே மிக நீண்ட நாள்களுக்குப்பின் சந்திக்கின்றேன்.ஒவ்வொரு நாளும் எழுத வேண்டும் என்ற ஆசை எல்லோரைப்போல எனக்கும் இருப்பது உண்மைதான்,ஆனால் இங்குள்ள என்னைப்போன்ற பதிவர்கள் நேரத்தை தேடுகிறோம்,அதனால் தான் அடிக்கடி சந்திக்க முடிவதில்லை,என்றாலும் கரவையூர்மக்களின் நிகழ்வு மீண்டும் எழுத அதேபோல் மீண்டும் பதிவர்களை சந்திக்க களம் அமைத்திருக்கிறது.தொடர்ந்தும் சந்திக்க எல்லாம் கூடிவரட்டும் என்று நீங்கள் நம்பும் இறைவனை நானும் நம்புகிறேன்)அவ்வப்போது குசலம் விசாரிக்கும் அனைத்து பதிவர்களும் நன்றி

சந்திப்புக்கு தயாராகும் இங்கிலாந்து பதிவர்கள்

தற்பொழுது கிடைத்த செய்தி


இங்கிலாந்தில் இருக்கும் பல்லாயிரக்கணக்கான பதிவர்கள் சந்திக்கும் பிரமாண்டமான பதிவர் சந்திப்பு வெகுவிரைவில் இடம்பெற இருப்பதாக சொல்லப்பட்டது.அதற்கான நாளும் கைகூடிவிட்டதாம்,
எப்போ எப்போ என்ற எதிர்பார்ப்போடு இருந்த பதிவர்களுக்காக 15-12-2010ம் திகதி புதன்கிழமை சந்திப்பு இடம்பெற இருப்பதாக ஏற்பாட்டுகுழுத்தலைவர் தற்சமயம் அறிவித்திருக்கிறார்,
ஆனால் எங்கு இடம்பெறும் என்பது குறித்து பாதுகாப்பு சம்பந்தமான பிரச்சனைகள் காரணமாக அறியத்தரப்படவில்லை,
பிரதம மந்திரியாக பிரித்தானிய ராணி அவர்களை அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதும் எழுத்தாளர்களாக திகழும் பல்லாயிரக்கணக்கான பதிவர்கள் மத்தியில் நேரடியாக சந்திப்பதில் வெட்கம் என்று மறுத்துவிட்டார்,அந்த இடத்தை நிரப்ப மூத்த வலைப்பதிவர் மாண்புமிகு வந்தியார் கலந்துகொள்வார் என்று தெரிவிக்கப்படுகிறது,வந்தியார் பிந்தி வந்தால் சற்றும் சிந்திக்காமல் பங்குச்சந்தை கோப்பரேஷன் தலைவர் அவர்கட்கு பிரதம மந்திரியாகும் வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிவிக்கபடுகிறது.

ஏற்பாட்டுக்குழுத்தலைவர் அன்றைய நாள் கலந்துகொள்ளும் பதிவர்களுக்கு அன்னதானம் வழங்குவார் என்பது இன்னமும் ரகசியமான செய்தியாகவே பேணப்பட்டு வருகிறது.ஏனென்றால் பதிவர்களின் வருகையை மட்டுப்படுத்தலாம் என்பது ஏற்பாட்டுகுழுத்தலைவரின் எதிர்பார்ப்பு,
இப்படியான ஒரு அன்னதானம் என்ற விடயம் இல்லையென்றே அறிவிக்கலாம் என்றுகூட அவர் தன் நண்பர்களுடன் கலந்துரையாடியாதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன,
அன்னதானம் இல்லை என்றால் நீண்ட நேரம் இடம்பெறும் சந்திப்பில் பசிக்கு என்ன செய்வது என்று தெரியாமலே அங்கு வருவோர் எண்ணிக்கை குறைவடையும் என்று அவர் நம்புகிறார்,
ஆனால் முதற்தடவையாக இங்கிலாந்து மண்ணில் இடம்பெறும் பதிவர் சந்திப்பு ஆகையால் மிகக்கூடுதலான பதிவர்கள் வருவார்கள் என்று பதிவு அவதானிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

வெளிநாடுகளிலிருந்து கலந்துகொள்ளும் பதிவர்கள் தங்கள் வருகையை விரைவுபடுத்தி இருக்கிறார்களாம்,சில பதிவர்கள் வந்த இடத்தில் பாதை தவறிவிட்டதால் மீண்டும் தங்கள் நாடுகளுக்கு திரும்பிவிட்டதாக கவலை கொண்டுள்ளார்களாம்,
ஆனால் ”இனியும் வரலாம் என்ற எண்ணத்தில் லண்டன் Bridge இல் அவர்களுக்கான ஒரு விடுதி எப்போதும் தயாராக இருப்பதாக ஏற்பாட்டுக்குழுத்தலைவர் அறிவித்திருக்கிறார்,
உங்கள் வருகையையும் உறுதிப்படுத்துமாறு கோரிக்கை விடுக்கிறார் ஏற்பாட்டு அண்ணை,இதை வாசித்தபின்னராவது இங்கு விரைவாக உறுதிப்படுத்துங்கள்.

பிரதம மந்திரி வந்தியார் அவர்கள் சந்திப்புக்கு முதல் அவருக்கு அருகாமையில் இருக்கும் சிவன் கோவில் வாசலில் 1111 தேங்காய்கள் அடிக்க உத்தரவிட்டிருக்கிறாராம்,அதுமட்டுமல்லாமல் அண்மையில் அவர் கொண்டாடிய பிறந்த நாளுக்கான பரிசாக இதை ஏற்றுக்கொள்வதாகவும் சந்திப்பின் முடிவில் சகலவிதமான உணவுகள் மற்றும் குடிபானங்கள் அடங்கிய நிரல் அட்டவணை மட்டை(Menu card) ஒன்று வழங்குவதாகவும் அதில் பிடித்தவற்றை உண்ண முடியும் என்று சொல்லி இருக்கிறாராம்,
எப்படி உங்களுக்கு கஷ்டம் இல்லையா?? என்று நண்பர்கள் மந்திரியாரை கேட்டபோது ”காசென்ன காசு மனசெல்லோ முக்கியம் என்று புன்னகையோடு சொன்னாராம்”
ஆனால் அது அவரின் பிறந்த நாள் விருந்து என்றும் ஒரு தகவல்,ஆனால் செய்தி வழங்கும் வரை அது உறுதிசெய்ய முடியவில்லை
இன்னும் செய்திகள் கிடைக்கும் போது அவ்வப்போது இங்கு உண்மைச்செய்திகள் வெளிவரும்,


இந்த செய்திகள் எல்லாம் பதிவர்களின் வருகையை அதிகரிக்கபோகிறது என்பது மட்டும் உறுதியாகிவிட்டது, நாளை இங்கிலாந்து மண்ணில் சந்திப்பு நடப்பதும் உறுதியாகிவிட்டது,
பதிவர்கள் எல்லோரும் உங்கள் வருகையை உறுதிப்படுத்துங்கள்,

எது எப்படியோ 15-12-2010ம் திகதி புதன்கிழமை இங்கிலாந்தில் பதிவர் சந்திப்பு நடைபெற இருக்கிறது, பதிவர்களாக நீங்களுமிருந்தால் உங்கள் வருகையை தெரிவித்துக்கொள்ளுங்கள்,