அடி சக்கை அம்மன் கோயில் புக்கை


ஒவ்வொரு இடங்களிலும் இருக்கும் பேச்சு வழக்குகள் கேட்பதற்கு
சுவையானதாகவும் இருக்கும்.சிலவேளைகளில் அந்த அந்த காலங்களில்
மட்டும் மிகக்கூடுதலாக பயன்படுத்தபட்டு பின்னர் பாவனையிலிருந்து
அருகிவிடுவதும் வழமை,

தென்னிந்திய சினிமாவின் ஆக்கிரமிப்பின் ஊடாக கதாநாயகர்களும்
நகைச்சுவை நாயகர்களும் சொல்லும் சொற்களில் சிலசொற்களும்
அவ்வப்போது பேச்சு வழக்குகளில் தொற்றிக்கொள்ளும்.அந்த சொற்களும்
கூட தென்னிந்தியாவின் சில இடங்களில் பேச்சு வழக்குகளில் இருக்கும்
சொற்களாக இருக்கலாம்.அவை திரைப்படங்களின் ஆழமான தாக்கம்
காரணமாக பேச்சு வழக்குகளில் இலகுவில் தொற்றிக்கொள்கிறது.
இதை பாருங்கோவன் அடி சக்கை அம்மன் கோயில் புக்கை

நம்மவர் ஒருவரால் ஒரு காரியம் ஆகாது என்று நினைக்க அவன் அதை விட
சாதுரியமாக சாதித்து விட்டால் "அடிடா சக்கை அம்மன் கோயில் புக்கை".
அதாவது நடக்க முடியாத காரியம் என்று நினைத்துக்கொண்டிருக்க
திடீரென்று நடந்துவிட்டால் அது வியப்பூட்டினால் இப்படி
சொல்லிகொல்வார்கள்.

பாடசாலைக்காலங்களில் மாணவர்கள் மத்தியில் அடிக்கடி
பேசிக்கொள்வார்கள்.நண்பர்கள் கலகலப்பாக இருக்கும் வேளைகளில்
கதையோடு கதையாக,பேசிக்கொள்ளும் தொனியைப் பொறுத்து
"அடி சக்கை அம்மன் கோவில் புக்கை" என்று சொல்லிக்கொள்வர்.
தொனி என்பது "நகைச்சுவை அதிலிருந்துவரும் மகிழ்ச்சி அந்த மகிழ்ச்சியின்
உச்சக்கட்டம் அந்த வேளையில் பேசுகின்ற விடயங்கள் அதில் யாராவது
சாதுரியமாக சாதித்திருந்தால் அந்த விடயங்கள் வியப்பூட்டினால் அல்லது
குறும்போடு பேசுபவர்களாக இருந்தால் அவர்கள் "அடி சக்கை அம்மன்
கோவில் புக்கை" என்று சொல்லிகொள்வார்கள்.

இதில் வருகின்ற "அம்மன் கோவில் புக்கை" என்பது என்ன சுவை



தாயகத்தில் அம்மன் கோவில்களில் கூடுதலாக பொங்கல் பொங்குவதை
வழமையாக கொள்வார்கள்.அதில் வீடுகளில் தயாரிக்கும் பொங்கலை விட
அம்மன் கோவில் பொங்கலுக்கு ஒரு தனியான சுவை இருக்கும்.
கோவில்களில் காத்திருந்து பொங்கல் முடிந்தவுடன் எல்லோரும் ஒன்றாக
உண்கின்றபோது எல்லோர் முகங்களிலும் மலர்கின்ற புன்னகை என்பது
அங்கிருக்கும் மகிழ்ச்சி நிலைகளுக்கு எடுத்துக்காட்டு.
சிலவேளைகளில்ஒருவர்பகிர்ந்துகொள்ளும்போது சிறுவர்களாக
இருப்பவர்கள்முந்தியடிச்சுமுன்னுக்கு சென்று வாங்கி உண்டு மகிழ்வதும்
உண்டு.

அந்த மகிழ்ச்சியில்,வாங்கிவிட்டோம் என்ற உற்சாகத்தில் கலகலப்பாக
பேசிக்கொண்டால் "அடி சக்கை என்றும் அம்மன் கோவில் புக்கை" என்றும்
சொல்வார்கள்.
அதை நினைப்பவர்களுக்கு அந்தக்காலங்கள் மீண்டும் கூடிவராத என்ற ஏக்கம்
நிச்சயம் எந்த ஒரு மனிதர்களையும் கேட்கும்.

அம்மன் கோவில்களில் பொதுவாக பங்குனி திங்களுக்குரிய காலங்கள் தான்
கூடுதலாக இந்த பொங்கலுக்குரிய காலங்கள்.பங்குனி மாதத்தில் வரும்
திங்கட்கிழமை அம்மன் கோவில்களுக்கு பொதுவாக சிறப்பான நாள்களாக
இருக்கும்.
ஆகவே அந்த நாள்களில் இங்கு பொங்கல் செய்பவர்கள் அதிகம்.

பொங்கல் என்பதைத்தான் புக்கை என்பார்கள்.

அந்த புக்கையும் கோவில்களில் தனியான சுவை.அதனால் தான் அடி சக்கை அம்மன் கோவில் புக்கைஎன்றார்களோ தெரியாது.அப்படி இல்லாவிட்டால் "அடி சக்கை வீட்டு குசினி புக்கை"என்றல்லவா சொல்லியிருப்பார்கள்.
அம்மன் கோவில்களில் பொங்கப்படும் பொங்கல்களில் இனிப்பானதாக இருப்பது ஒரு வகை.
அதே போல் உறைப்பாகவும் செய்வார்கள்.அனைத்து மரக்கறிகளும் இட்டு
பொங்கல் பொங்குவது போல் பொங்குவது இன்னொரு வகை.
அதனை "நீர்பாளையம்" என்று சொல்வர் சிலர்.ஆனால் யாழ்ப்பாணத்தின்
வேறு சில இடங்களில்அவிசு,குழையல் சாதம்,குழையல் என்றெல்லாம்
பாவிக்கபட்டிருப்பதாக தெரியவருகிறது.
பங்குனி திங்கள் காலங்களில் வற்றாப்பளை அம்மன்
கோயில்,பன்றித்தலைச்சி அம்மன் கோவில்,கரவெட்டி அத்துளு அம்மன்
ஆலயங்களில் சிறப்பாக இருக்கும்.

அங்கு இனிப்பான புக்கை எவ்வளவு இருக்கிறதோ அந்த அளவிற்கு மேல் நீர்ப்பாளையம் இருக்கும்,
இரண்டுக்கும் தனியான சுவை,என்றாலும் இனிப்பான பொங்கலுக்கு
(புக்கைக்கு) எங்கும் தனியான மதிப்பு.
அதுவும் இது பங்குனி திங்களின் காலங்கள்.வருகின்ற திங்கட்கிழமைதான்
பங்குனியில் வருகின்ற கடைசி திங்கட்கிழமை, நிச்சயமாக தாயகத்தின் 
அம்மன் ஆலயங்களில் மிகச்சிறப்பாக வழிபாடுகள்,பொங்கல் பொங்கும்
நிகழ்வுகள் என்று எல்லாமே விசேடமாக இருக்கும்.அந்த அருமையான
நினைவுகளோடும் இந்த அம்மன் கோவில் புக்கையும் நினைவுக்கு வருகிறது.
இப்படித்தான் தாயகத்திலிருந்து இனிப்பான புக்கையின் இனிமையான நினைவுகளோடு கொழும்புக்கு வந்த நம்மவர் இன்று புக்கை என்று சொல்வதே இல்லையாம்.
அதற்கு அவர் கதை விட்டார்
"ஒரு நாள் கோவிலுக்கு போனவருக்கு புக்கை சாப்பிட வேணும் போல இருந்திச்சாம்,கோயிலில் புக்கை கொடுக்க இவர் அங்கு சென்று எனக்கும் புக்கை தாறீங்களா என்று கேட்க எல்லோரும் கொல்என்று சிரித்தார்களாம்.அதற்கு பிறகு வீடு போகும் வரைக்கும் எல்லோரும் தன்னை பார்த்தபடியே தானாம்.மற்றவர்களுடன் பேசும்போதுதானாம் புக்கை கேட்டதன் அர்த்தமே விளங்கியதாம்.அதன் பின்னர் எங்கு சென்றாலும் பொங்கல் பொங்கல் பொங்கல் "
இது அவர்விட்ட கதை. அவர்விட்ட கதைக்கும் "அடிசக்கை அம்மன் கோயில் புக்கை" என்று சொல்லுவம்.
எல்லோருக்கும் ஒவ்வொரு கதை வேறு இருக்கும், ஆனால் அதன் அர்த்தம் தெரிந்தவர்களுக்கு அவர் விட்டகதை விளங்கியிருக்கும்.""புக்கை"என்பதற்கு
சிங்கள மொழியில் வருகின்ற அர்த்தம் சிரிப்பை வரவழைத்திருக்கிறது""
என்று விளங்காதவர்கள் இனி கொழும்பில் "பொங்கல்"என்று தான் கேட்க வேணும் என்று தெரிந்தால் மட்டும் போதும்.


ஆனால் ஒரு திரைப்படத்தில்"அட்ரா சக்கை அட்ரா சக்கை" என்று
நகைச்சுவையோடு சொன்னதை திரைப்படம் பார்ப்பவர்கள் அறிந்திருக்கும்
விடயமாக இருக்கலாம்.
ஆனால் தொடர்ந்து வரும் அம்மன் கோவில் புக்கை என்ற பாவனை அம்மன்
கோவில் புக்கையின் இனிப்பான சுவை தெரிந்தவர்களுக்கும் அம்மன்
கோவிலை அண்டி இருந்தவர்களுக்கும் கொஞ்சம் ஆழமாக தெரிந்திருக்கும்.
ஒரே சொல்லமைப்பில் சக்கையும் புக்கையும் வந்தால் இப்படியாக வட்டார
வழக்கில் ஒட்டிக்கொண்டிருக்கிறது.


மொத்தத்தில் மொழியின் பாவனையில் வட்டார வழக்குகளாக
ஒட்டிக்கொள்ளும் சொற்கள் அந்த அந்த இடங்களின் செயற்பாடுகள்,
இனிமையான அனுபவங்கள், இனிப்பான விடயங்கள் என்று
கால ஓட்டங்களோடு வருபவையாகத்தான் இருக்கிறது.அந்த ஓட்டங்களில்
அடிக்கடி தாயகத்தில் பேசப்படும் வழக்கு சொல்லாடல் தான் "அடி சக்கை
அம்மன் கோயில் புக்கை"



1 comment:

Muruganandan M.K. said...

உங்கள் கட்டுரை
"அடி சக்கை அம்மன் கோயில் புக்கை"
நாற்றமடிக்கும் சகோதர மொழிப் புக்கை ஏன் இங்கே.