மாணவர்களின் வளர்ச்சியே பேரின்பம் என்பார் ஆசிரியர் வல்லிபுரம்

ஆசிரியர் என்பதற்கு இலக்கணமாய் வாழ்ந்து உலகமெங்கும் தன் மாணவர்களின் சிறப்பான வளர்ச்சியால் பெருமையுற்று எம்மோடு வாழ்ந்த ஆசிரியர் வல்லிபுரம் அவர்களை இழந்துவிட்டோம் என்பது மனதுக்கு வேதனையளிக்கிறது,



செய்யும் தொழிலே தெய்வம் என்று வாழ்ந்து கொண்டு "ஆசிரியர்" என்பவர் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதற்கு இலக்கணமாக  வாழ்ந்து காட்டியவர் தான் ஆசிரியர் சின்னையா வல்லிபுரம் அவர்கள்.ஆரம்பக்கல்வியே வாழ்க்கையில் அடிப்படைக்கல்வி என்பது யாவரும் அறிந்ததே.அந்த கல்வியை மாணவன் எவ்வாறு பெற்றுக்கொள்கின்றானோ அதுவே அவனை சீரிய பாதையில் வழிகாட்டிச்செல்லும்  என்பது உண்மைதான்.அதை ஆசிரியர் செவ்வனே அறிந்து மாணவர்களை வழிநடத்துவார்.
சிறுபராயம் முதலே மாணவர்கள் பணிவுடனும்,பண்புடனும் அதேவேளை போட்டி மனப்பானமையுடனும் கல்வி கற்க வேண்டும் என்ற எண்ணத்தோடு கல்வி கற்பிப்பவர் ஆசிரியர் அவர்கள்.ஆசிரியர் ஐந்தாந்தர புலமை பரீட்சையில் மாணவர்களை தயார்ப்படுத்தும் பெரும் பணியினை கையிலெடுத்து அதில் வெற்றியும் கண்டவர் ஆசிரியர் வல்லிபுரம் அவர்கள்.
பாடசாலை பரீட்சைகளுக்கு கூடுதலான புள்ளிகளை பெறவேண்டும் என்பதைவிட ஆசிரியர் அவர்களின் பரீட்சையில் மாணவர்கள் கூடுதல் புள்ளிகள் பெற மிகவும் பிராயத்தனதொடு கற்பார்கள் என்றால் ஆசிரியரின் முக்கியத்த்துவம் உங்களுக்கு புரியும்.
ஆசிரியர் சின்னையா வல்லிபுரம் அவர்கள் அதிபராக பணிசெய்து வந்திருந்தாலும் ஆசிரியராக இருந்து கிடைக்கும் மகிழ்ச்சியே தனி என்று சொல்பவர்.
மாணவர்களின் மகிழ்ச்சியில் அவர் மகிழ்ந்திருப்பார். ஆசிரியரின் மாணவர்கள் பல்வேறு நாடுகளிலும் மிகச்சிறந்த பதவிகளில் கடைமை ஆற்றிக்கொண்டிருக்கின்றார்கள்.அந்த பெருமை அவருக்கு இறுதிக்காலம் வரை நிலைத்திருந்தது.

நான் அறிந்த வகையில் அதிபராக பணிபுரிந்த காலங்களில் கரணவாய் மணியகாரன் தோட்டம் வித்தியாலயத்தின் காலங்கள் அவரின் பொற்காலம் என்றுதான் சொல்ல வேண்டும்.அவ்வூர் மக்களோடு மக்களாக சேர்ந்து பாடசாலையின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றியவர் ஆசிரியர் வல்லிபுரம் அவர்கள்.
ஆசிரியராக அதிபராக சேவை உள்ளம் கொண்டவராக இருந்து 2008 ம் ஆண்டு ஆவணி மாதம் இரண்டாம் தேதி தனது அறுபதாவது வயதில்  தனது அதிபர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றிற்றுக்கிறார்.ஓய்வு பெற்றாலும் தனது ஆசிரியப்பணியை தொடர்ந்தும் செய்துவந்தார்.கற்பித்து மாணவர்கள் அடையும் வளச்சியில் அதில் அவர்கள் பெறும் மகிழ்ச்சியில் தானும் 
மகிழ்வுறுவார்.அன்றய காலங்களில் வடபுலம் யாழ்ப்பாணம் கரவெட்டிக்கு செல்லும் சந்தர்ப்பம் எனக்கு கிடைத்தபோது ஆசிரியர் அவர்களை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.அப்போதும் கூட அவர் தன்னை நம்பி வீடு வரும் மாணவர்களை விட்டுவிட்டு தனது சொந்த தேவைக்காக அதுவும் தன்னுடைய மகனுக்கான முக்கியமான ஒரு தருணத்தில் கொழும்புக்கு செல்வதை தவிர்க்க போவதாகக் கூறியிருந்தார். அப்படியாக மாணவர் மீது அக்கறை கொள்ளும் ஆசிரியர் ஒருவரிடம் கல்விகற்றேன் என்ற பெருமை எனக்கு மட்டுமல்ல உலகமெங்கும் பரந்து வாழும் அவரின் சிறப்பான மாணவர்களுக்கும் என்றும் இருக்கும்.
இப்படியான சிறப்புக்கள் பொருந்திய ஆசிரியர் ஒருவரை நாம் இழந்துவிட்டோம் என்று சொல்லவே வேதனை தருகிறது,தன் அன்பான புத்திரர்களையும் சீரியபாதையில் வழி நடாத்தி இவ்வுலகை நீத்திருக்கிறார்.ஆசிரியரின் பெருமைகள் அவரின் பெயரும் புகழும் அவரின் மாணவர்களால் என்றும் சிறப்புறும்,ஆசிரியரின் பிரிவால் துயருறும் அவரின் குடும்பத்தினருக்கு கரவைக்குரல் தன் ஆழ்ந்த அனுதாபங்களை பகிர்ந்துகொள்கிறது

முல்லை மண்ணிலிருந்து வரும் சாதனை மாணவன் - வாழ்த்தும் கரவைக்குரல்

அண்மையில் வெளியாகிய தரம் ஐந்து புலமை பரீட்சை முடிவுகளில் முல்லைத்தீவை சேர்ந்த மாணவன் அகில இலங்கைரீதியில் இரண்டாவது இடம்பெற்றமை மகிழ்ச்சியை தருகிறது.எத்தனையோ கஸ்டங்களும் கடினப்பாதைகளும் மாணவர்களுக்கு சூழ்ந்திருக்க அதுவும் விசுவமடுவை சேர்ந்த மாணவன் நாடளாவிய ரீதியில் தமிழ் மாணவனாக தன் பெயரையும் பொறித்திருப்பது உலகமெங்கும் தமிழ் பேசும் மக்களுக்கு மிகபெரிய சந்தோசத்தை கொடுத்திருக்கிறது.பாடசாலைக்கல்வியை தொடர்ந்து கொள்ள முடியுமோ அல்லது தன் இருப்பு இந்த உலகத்தில் உறுதியாகுமோ என்று சிந்தித்த மாணவர்களின் இடத்தில் இருந்து மாணவன் வெற்றிபெற்றிருப்பது சிறந்த சாதனை என்றுதான் சொல்லவேண்டும்.
முல்லை மண்ணிலிருந்து இந்த சாதனை அரங்கேறியிருப்பது பெருமைக்குரியதாகிறது.யுத்தம் தின்று துப்பிய மண்ணிலிருந்து சாதனை என்று பெருமை கூறுகின்றார்கள் ஆர்வலர்களும் பெரியவர்களும்.
பரீட்சைக்கான அடிப்படை கல்விக்கான காலத்திலும் அதன் நுணுக்கங்களை அறியும் பராயத்தில் அந்த மாணவன் முல்லை மண்ணில் இருந்திருந்தால் எவ்வளவு கஸ்டப்பட்டிருப்பான் என்பது நினைக்க கூடிய விடயம் அல்ல.அது மட்டுமல்லாமல் தொடரும் காலங்களிலும் சிறப்பான கல்வியை பெறுவதற்க்கு எவ்வளவு கடினப்பட்டிருப்பான் என்பது நினைக்க சுலபமான விடயமாகாது.

அந்த சாதனைக்குரிய மாணவன் முல்லைத்தீவு நெத்தலியாறு தமிழ் மகாவித்தியலாய மாணவன் பரமேஷ்வரன் சேதுராகவன் அவர்களுக்கு சிறப்பான வாழ்த்துக்களை பதிவு செய்கிறது கரவைகுரல்.
அந்த மாணவனின் வளர்ச்சியோடு பங்கெடுத்த பெற்றோர் ஆசிரியர்கள் யாவருக்கும் நன்றி பாராட்டுகின்றது கரவைக்குரல்.இன்னும் அந்த மாணவனின் தனித்துவக் கெட்டித்தனங்களை சரிவர இனங்கண்டு அதற்கான களங்களை ஏற்படுத்துங்கள்,உளமார்ந்த சிந்தனைகளுக்கும் அவனின் எதிர்பார்ப்பான வெற்றிகளும் தொடர்ந்தும் உறுதுணையோடு பெற்றோர்,ஆசிரியர்கள்,சமூக முன்னோடிகள் யாவரும் வழியமைத்துக்கொடுங்கள்.உண்மையில் மாணவனின் எண்ணங்களை அறிந்துகொள்ள நேரடியாக பேச வேண்டும்,ஊடகங்கள் வாயிலாக களம்கொடுக்க
வேண்டுமென்பது அனைவரினதும் எண்ணமாகிறது.தொடர்புகொள்ள சந்தர்ப்பங்களை ஏற்படித்தித்தர முடிந்தவர்களை கரவைக்குரல் எதிர்பார்க்கிறது.

முல்லைமண்ணிலிருந்து சாதனைக்குரிய மாணவனாக சிறப்புபெற்றிருக்கும் பரமேஸ்வரன் சேதுராகவனை அன்போடும் உரிமையோடும் வாழ்த்துகிறோம்.
உங்கள் வாழ்த்துக்களையும் மறுமொழி வாயிலாக பதிவுசெய்யுங்கள்

சிறப்பாக நிகழ்ந்த கரவெட்டி ஒன்றியத்தின் நிகழ்வு

புலம்பெயர்ந்தும் தாயகம் சார்ந்த அபிவிருத்தி மற்றும் சமூக நலன் சார்ந்த நடவடிக்கைகளில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டிருக்கும் புலம்பெயர்ந்த எம் மக்கள் வரிசையில் கரவையூர் மக்களின் கரவெட்டி அபிவிருத்தி ஒன்றியம் சார்பான சிறப்பாக ஒழுங்குசெய்யப்பட்ட இரவு இசை நடன நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை 29-05-2011 அன்று நடைபெற்றது,ஏலவே கரவெட்டி ஒன்றியம் சார்பான நான் அறிந்த சில விடயங்களை கடந்த பதிவில் குறிப்பிட்டிருந்தேன்(அதை இங்கே அழுத்திப்பார்க்கவும்) அன்று நிகழ்வில் கலந்துகொண்ட பின் இன்னும் பல வியங்களை அறியக்கூடியதாக இருந்தது.என்றாலும் நிகழ்வின் விடயங்களை இங்கு பதிவாக்கலாம் என்ற எண்ணம்

கரவெட்டி ஒன்றியத்தின் இரவு இசை நடன நிகழ்ச்சி சரியாக மாலை 6 மணிக்கு ஆரம்பமாகியது,சாதரணமாக கலை நிகழ்வுகள்போலல்லாமல் சற்று வித்தியாசமாக நிகழ்ச்சி ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது,ஆரம்பத்தில் நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் யாவரும் தங்களோடு தாங்கள் உரையாடியும் கரவையின் தங்கள் பொழுதுகளையும் மற்றும் நீண்ட நாள்களுக்குப்பிறகு சொந்தங்களை கண்ட மகிழ்ச்சியில் அவர்களோடு உரிமையோடும் உற்சாகமாகவும் உரையாடியதை அவதானிக்க முடிந்தது,
தொடர்ந்து மாலை 7 மணிக்கு நிகழ்வின் ஆரம்பம் எம்மை விட்டு பிரிந்த சொந்தங்கள் யாவரையும் நினைந்து ஒரு நிமிட மௌனத்தோடு தொடங்கியது,முற்றிலும் கரவெட்டியின் அபிவிருத்திக்கான நோக்கத்தோடு நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டமையை நிகழ்ச்சி நிரலிலும் காணக்கூடியதாக இருந்தது,
இசை நிகழ்ச்சியை லண்டன் புகழ் இசைக்கலைஞர்கள் மற்றும் ஆனந்த் இணைந்து வழங்கிய யங்ஸ்ரார் இசைக்குழு வழங்கிக்கொண்டேயிருந்தது.முதற்பாடல் கரவெட்டி அபிவிருத்தி ஒன்றியத்தின் தாய்க்கழகத்தலைவர் திரு.பொன்னம்பலம் அவர்களின் மகள் துஷாந்தி பாடியிருந்தமை நிகழ்வை மெருகூட்டியது.சபையின் கரகோசம் அதை ஆமோதித்தது என்றால் மிகையாகாது.
அதுமட்டுமல்லாமல் இந்த இசை நிகழ்ச்சியில் ஆனந்த்,ஜேஜே,டில்ஷா,ரமணி என்று லண்டன் புகழ் பாடகர்கள் சிலரும் பாடியிருந்தமை நிகழ்வை சிறப்பாக்கியது.
தொடர்ந்து கரவெட்டி அபிவிருத்தி ஒன்றியத்தின் இங்கிலாந்துக்கிளையின் தலைவர் திரு கிருஷ்ணா அவர்களின் உரை இடம்பெற்றது, நிகழ்வின் ஏற்பாடுகள்,எதிர்பார்ப்புகள்,எதிகாலத்தில் எதிர்பார்க்கும் செயற்பாடுகள் என்று இன்னோரன்னவிடயங்களை உள்ளடக்கி தன் உரையை வழங்கியிருந்தார்.

தொடர்ந்து கரவை ஒன்றியத்தின் கடந்தகால செயற்பாடுகள் பற்றிய வீடியோ விவரணக்காட்சி காண்பிக்கப்பட்டது.பொதுவாக கரவெட்டி பிரதேச வைத்தியசாலைக்கட்டடங்கள் மற்றும் அங்கு ஏற்படுத்தப்பட்ட வசதிகள் அதில் அமைந்திருந்தது.அதுமட்டுமல்லாம கரவெட்டி ஒன்றியத்தின் தாய்க்கழக தலைவர் திரு பொன்னம்பலம் அவர்களின் உரை மற்றும் வைத்தியசாலை வைத்தியர் அவர்களின் உரை ஆகியன இடம்பெற்றன,அங்கு தனியாகவோ குழுவாகவோ இணைந்து யாராவது கரவை மக்களுக்கு தேவையான பொதுவான செயற்திட்டங்களுக்கு கரவெட்டி ஒன்றியம் பூரண ஆதரவு வழங்கும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது.

நிகழ்வில் இன்னுமோர் சிறப்பு நிகழ்ச்சியாக இறுதிப்பரிசாக வைர மோதிரம் காத்திருக்க பணப்பந்தயம் நடைபெற்றது,பந்தயமாக பெறப்படும் பணம் முழுவதும் கரவெட்டியின் அபிவிருத்துக்கான நிதி சேகரிப்பாக அமைந்தது.அதில் ஆர்வத்தோடும் போட்டியோடும் அவ்வப்போது கலகலப்பான சிரிப்போடும் பங்குபற்றி நிகழ்வை சிறப்பித்தார்கள் நிகழ்வின் விருந்தினர்கள். நிகழ்வின் இறுதியில் ஒரு இளைஞனுக்கு வைர மோதிரம் உரித்தானது.
அவருக்கு இன்னும் சில நாள்களில் திருமணம் நடைபெற ஏற்பாடாகி இருப்பதால் அது சிறந்த பரிசு அவருக்கு என்று தங்களுக்குள் நகைச்சுவையாக உரையாடினர் சிலர்,இந்த பணப்பந்தய நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியிருந்த திரு ஜோய் தனக்கே உரித்தான பாணியில் தனிச்சிறப்போடு நெறிப்படுத்தினார்.
தொடர்ந்து நிகழ்வின் முக்கிய அம்சமாக கரவெட்டி என்ற கிராமத்துக்கு இன்னும் எப்படியான நலன் திட்டங்கள் மேற்கொள்ள முடியும் என்ற அடிப்படையில் கலந்துகொண்டவர்களின் கருத்துக்களும் உள்வாங்கப்பட்டது.பங்குபற்றியவர்கள் யாவரும் தங்கள் கருத்துக்களை எண்ணங்களை பகிர்ந்துகொள்ளும்படியாக எல்லோர் மேசைகளிலும் காகிதங்கள் வழங்கப்பட்டிருந்தது,அவை மூலம் அவை பெறப்பட்டன.தொடர்ந்து கலந்துகொண்டவர்களுக்கான அதிஸ்டமும் பெறுமதிமிக்க பரிசுகளும் வழங்கப்பட்டது.
அதுவும் வந்திருந்தவர்களை சுவாரஸ்யப்படுத்தியது,
இரவு விருந்தோடு அமைந்த இந்த நிகழ்வு கரவெட்டி வாழ் சொந்தங்களை மீண்டும் சந்திக்கவைத்திருக்கிறது.இதில் கலந்துகொண்டமை யாவருக்கும் மகிழ்வையே கொடுத்திருக்கிறது.தொடர்ச்சியாக இப்படியான சந்திப்புக்களை ஏற்படுத்திக்கொள்வது இன்னும் சிறப்பான விடயமாகத்தான் இருக்கும். அதுமட்டுமல்லாமல் கரவெட்டியை அடையாளப்படுத்துமளவுக்கு ஏதாவது ஒரு சிறப்பான செயற்திட்டத்தை கரவெட்டி ஒன்றியம் ஏற்படுத்துமாக இருந்தால் அதுவும் மிக பெருமையாக இருக்கும். நூல் நிலையமோ அல்லது கரவெட்டி மண் பெற்ற பிரபலங்களுக்கான நினைவுகளோ அல்லது யாவருக்கும் பயன் பெறகூடிய செயற்திட்டமாகவோ அல்லது உலகம் சிறப்பாக பேசுமளவுக்கு செயற்திட்டம் அமைந்தால் அது சிறப்புறும் என்பது கரவைகுரலின் எதிபார்ப்பு.

எது எப்படியாயினும் கரவெட்டி ஒன்றியத்தின் முதலாவது இங்கிலாந்தின் நிகழ்வு மிகச்சிறப்பாக நிறைவுற்றிருக்கிறது.ஆரம்ப நிகழ்வு என்று சொல்லமுடியாத அளவுக்கு நிகழ்வு சிறப்பு.இன்னும் பல சாதனைகளோடு நிகழ்வு மற்றும் கரவெட்டி அபிவிருத்தி ஒன்றியம் சிறக்க கரவைக்குரல் தன் வாழ்த்துக்களை பகிர்ந்துகொள்கிறது.

இங்கிலாந்தில் கரவையூர் மக்களின் கரவெட்டி ஒன்றிய நிகழ்வு

பல்வேறு காலங்களிலும் அந்த காலங்களின் நிலைமைகளிலும் அந்த நிலைமைகளில் வாழ்ந்த சூழல்களாலும் தாயகத்தை விட்டுப்பிரிந்து பல்வேறு தேசமெங்கும் வாழ்ந்துகொண்டிருக்கும் தாயகமக்கள் இன்றும் தமது நாடு தேசம் சமூகம் என்று தங்களை ஈடுபடுத்திக்கொண்டிருப்பது யாவரும் அறிந்த ஒரு விடயமே. ஏதோவொருவகையில் ஒவ்வொருவரும் தாங்கள் வாழ்ந்த ஊர் மற்றும் தாங்கள் படித்த பாடசாலை என்று அவற்றின் அபிவிருத்திச்செயற்பாடுகளில் தங்களின் சிறிய பங்களிப்புக்களையாவது வழங்கி ஈடுபடுவது மகிழ்வைத்தரும் அம்சமாக இருக்கிறது.
அந்த அடிப்படையில் கரவெட்டி மக்களின் அபிவிருத்தி மற்றும் சமூக நல முன்னேற்பாடான செயற்பாடுகளில் ஈடுபடும் அமைப்பாக கரவெட்டி அபிவிருத்தி ஒன்றியம் அமைந்துகாணப்படுகிறது.
யாழ்ப்பாணத்தின் வடமராட்சியில் அமைந்து காணப்படும் இந்த அழகிய கிராமத்தின்(கரவெட்டியின் அமைவிடம் சார்ந்த பதிவு இங்கே) முற்றுமுழுதான சமூக தேவைக்கான அபிவிருத்தியில் தன்னை ஈடுபடுத்திவரும் அமைப்பாக இந்த கரவெட்டி அபிவிருத்தி ஒன்றியம் செயற்படுகிறது.
உண்மையான பிரதான குறைபாடுகளை இனங்கண்டு அவற்றுக்கு முக்கியத்துவம் அளிப்பதோடு மட்டுமல்லாமல் கல்வி சமூக கலாச்சார நடவடிக்கைகளுக்கு வழிகாட்டியாக சீர்ப்படுத்தி நெறிப்படுத்தும் அமைப்பாக இந்த அமைப்பு உருவாகியிருக்கிறது.இதில் சிறப்பான விடயம் என்னவென்றால் சுய நல வேறுபாடுகள் இல்லாமல் கரவெட்டி என்று சொல்லப்படும் பெரியளவிலான, ஊர்மக்கள் யாவரும் பயன்பெறும் திட்டங்களை முன்னெடுப்பதுதான்.அண்மைக்கால ஆரம்பமாக இருக்கும் இந்த அமைப்பு குறுகிய காலத்தில் சீரான மேலான வளர்ச்சி அடைந்திருக்கின்றமை சிறப்பானது.

கரவையூர் மத்தியில் அமைந்திருந்த கரவெட்டி பிரதேச வைத்தியசாலை அங்குள்ள மக்களுக்கு சிறப்பான சேவையாக அமைந்திருந்தது.ஆனால் அங்கு காணப்பட்ட வசதிகளோ அல்லது அதன் அளவோ அங்குள்ள மக்களுக்கான தன்னிறைவாக இருக்கவில்லை என்பதும் உண்மைதான்.அதனை அங்குள்ள மக்களிடம் இருந்த தேவையாக உணரப்பட்டு அதன் விஸ்தரிப்புக்கான நிலத்தை நீண்டகால கொள்வனவு அடிப்படையில் வாங்குவதற்கு கரவெட்டி ஒன்றியம் தன் பங்கை கொடுத்திருக்கிறது.இதன் மூலம் இப்போது கரவெட்டி வைத்தியசாலை என்று அழகுபெற்று மக்களிற்கான மருத்துவ சேவையாற்றிக்கொண்டிருக்கிறது.
Karaveddy Divisional Hospital
Karaveddy


இதேபோல் மருத நிலம் சார்ந்த கரவையூரில் காணப்படும் குளங்கள் இன்னுமோர் அழகு ,அத்துளுக்குளம் அதில் விசேடமானது.தாமரை மலர்கள் அந்த குளத்தில் தனித்துவமான அழகு தரும். அதேபோல் அந்த குளத்தில் இருந்து தான் அங்குள்ள மக்களுக்கான நீர்வடிகால் சேவையும் நீர்த்தேவையும் பூர்த்திசெய்யப்பட்டது.அத்தோடு ஒரு ஊரின் தனித்துவமான குளங்கள் சுகாதார வசதி நிறந்திருக்க வேண்டும் என்பதை உணர்ந்த மக்கள் அதைத்தகுந்த முறைபடி பயன்படுத்த உத்தேசித்து அதற்க்கான முள்வேலிகள் சுற்றிவர சிறப்பாக அடைத்து பராமரிக்கப்பட்டு வருக்கிறது,
அத்தோடு கரவெட்டியின் நீர்வடிகால் சேவையை விஸ்தரித்தல்,அதற்கான நீர்சுத்திகரிப்பு மேடை மற்றும் இயந்திரம் அமைத்தல்,ஊர் மக்களின் மாயானங்கள் சிறந்த முறையில் பராமரிக்க அதற்கான வசதிகள் செய்தல் என்று கரவெட்டி ஒன்றிய செயற்ப்பாடுகள் விரிந்துகொண்டே செல்கிறது.

அந்த வகையில் கவெட்டி ஒன்றிய மக்களின் இங்கிலாந்து கரவையூர்மக்கள் இணைந்து கரவெட்டி ஒன்றிய செயற்பாடுகளை விஸ்தரிக்கவும் இன்னும் அமையவேண்டிய தேவையான திட்டங்களை அறிந்துகொள்ளவும் அதேபோல் ஒன்றியத்தின் உறுப்பினர்களின் எண்ணிக்கைகளை அதிகரித்து பலமான அமைப்பாக உருவாக்க வேண்டும் என்ற சிறப்பான எண்ணத்தோடும் சிறப்பான ஒரு நிகழ்வை 29-05-2011 ஞாயிற்றுக்கிழமை இன்று ஒழுங்கு செய்திருக்கிரார்கள்

.சிறப்பான ஒழுங்குமுறைகளோடு நிகழும் இந்த நிகழ்வில் முற்றிலும் கரவெட்டியின் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படும் திட்டங்கள் பற்றிய புலத்து மக்களின் எண்ணங்கள் பதிவு செய்யப்படுகிறது.கரவையூர் மக்களின் சந்திப்போடு நிதிசேகரிப்பு மற்றும் கலந்துகொள்ளும் மக்களுக்கான ஒரு நிகழ்வும் ஒருங்கே ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இந்த நிகழ்வில் கலந்துகொள்ளும் சந்தர்ப்பம் எனக்கும் கிடைத்ததால் நிகழ்ச்சி சார்ந்த விடயங்களை நிகழ்வு நிறைவு பெற்றபின் தரலாம் என்று விளைகிறேன்.

ஆகவே புலம்பெயர்ந்தும் தமது கடமைகளை உணர்ந்து தத்தமது ஊரின் நலன்சார்ந்த எந்த ஒரு விடயத்திலும் பங்கெடுக்கும் உறவுகளுக்கு என்றுமே பாராட்டுகுரியவர்கள் நன்றிக்குரியவர்கள்,
அந்த வகையில் கரவையூர் மக்களின் கரவெட்டி ஒன்றிய நிகழ்வுக்கு கரவைக்குரல் தன் வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகளை பகிர்ந்துகொள்கிறது


(அன்பான பதிவுல நண்பர்களே மிக நீண்ட நாள்களுக்குப்பின் சந்திக்கின்றேன்.ஒவ்வொரு நாளும் எழுத வேண்டும் என்ற ஆசை எல்லோரைப்போல எனக்கும் இருப்பது உண்மைதான்,ஆனால் இங்குள்ள என்னைப்போன்ற பதிவர்கள் நேரத்தை தேடுகிறோம்,அதனால் தான் அடிக்கடி சந்திக்க முடிவதில்லை,என்றாலும் கரவையூர்மக்களின் நிகழ்வு மீண்டும் எழுத அதேபோல் மீண்டும் பதிவர்களை சந்திக்க களம் அமைத்திருக்கிறது.தொடர்ந்தும் சந்திக்க எல்லாம் கூடிவரட்டும் என்று நீங்கள் நம்பும் இறைவனை நானும் நம்புகிறேன்)அவ்வப்போது குசலம் விசாரிக்கும் அனைத்து பதிவர்களும் நன்றி

சந்திப்புக்கு தயாராகும் இங்கிலாந்து பதிவர்கள்

தற்பொழுது கிடைத்த செய்தி


இங்கிலாந்தில் இருக்கும் பல்லாயிரக்கணக்கான பதிவர்கள் சந்திக்கும் பிரமாண்டமான பதிவர் சந்திப்பு வெகுவிரைவில் இடம்பெற இருப்பதாக சொல்லப்பட்டது.அதற்கான நாளும் கைகூடிவிட்டதாம்,
எப்போ எப்போ என்ற எதிர்பார்ப்போடு இருந்த பதிவர்களுக்காக 15-12-2010ம் திகதி புதன்கிழமை சந்திப்பு இடம்பெற இருப்பதாக ஏற்பாட்டுகுழுத்தலைவர் தற்சமயம் அறிவித்திருக்கிறார்,
ஆனால் எங்கு இடம்பெறும் என்பது குறித்து பாதுகாப்பு சம்பந்தமான பிரச்சனைகள் காரணமாக அறியத்தரப்படவில்லை,
பிரதம மந்திரியாக பிரித்தானிய ராணி அவர்களை அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதும் எழுத்தாளர்களாக திகழும் பல்லாயிரக்கணக்கான பதிவர்கள் மத்தியில் நேரடியாக சந்திப்பதில் வெட்கம் என்று மறுத்துவிட்டார்,அந்த இடத்தை நிரப்ப மூத்த வலைப்பதிவர் மாண்புமிகு வந்தியார் கலந்துகொள்வார் என்று தெரிவிக்கப்படுகிறது,வந்தியார் பிந்தி வந்தால் சற்றும் சிந்திக்காமல் பங்குச்சந்தை கோப்பரேஷன் தலைவர் அவர்கட்கு பிரதம மந்திரியாகும் வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிவிக்கபடுகிறது.

ஏற்பாட்டுக்குழுத்தலைவர் அன்றைய நாள் கலந்துகொள்ளும் பதிவர்களுக்கு அன்னதானம் வழங்குவார் என்பது இன்னமும் ரகசியமான செய்தியாகவே பேணப்பட்டு வருகிறது.ஏனென்றால் பதிவர்களின் வருகையை மட்டுப்படுத்தலாம் என்பது ஏற்பாட்டுகுழுத்தலைவரின் எதிர்பார்ப்பு,
இப்படியான ஒரு அன்னதானம் என்ற விடயம் இல்லையென்றே அறிவிக்கலாம் என்றுகூட அவர் தன் நண்பர்களுடன் கலந்துரையாடியாதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன,
அன்னதானம் இல்லை என்றால் நீண்ட நேரம் இடம்பெறும் சந்திப்பில் பசிக்கு என்ன செய்வது என்று தெரியாமலே அங்கு வருவோர் எண்ணிக்கை குறைவடையும் என்று அவர் நம்புகிறார்,
ஆனால் முதற்தடவையாக இங்கிலாந்து மண்ணில் இடம்பெறும் பதிவர் சந்திப்பு ஆகையால் மிகக்கூடுதலான பதிவர்கள் வருவார்கள் என்று பதிவு அவதானிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

வெளிநாடுகளிலிருந்து கலந்துகொள்ளும் பதிவர்கள் தங்கள் வருகையை விரைவுபடுத்தி இருக்கிறார்களாம்,சில பதிவர்கள் வந்த இடத்தில் பாதை தவறிவிட்டதால் மீண்டும் தங்கள் நாடுகளுக்கு திரும்பிவிட்டதாக கவலை கொண்டுள்ளார்களாம்,
ஆனால் ”இனியும் வரலாம் என்ற எண்ணத்தில் லண்டன் Bridge இல் அவர்களுக்கான ஒரு விடுதி எப்போதும் தயாராக இருப்பதாக ஏற்பாட்டுக்குழுத்தலைவர் அறிவித்திருக்கிறார்,
உங்கள் வருகையையும் உறுதிப்படுத்துமாறு கோரிக்கை விடுக்கிறார் ஏற்பாட்டு அண்ணை,இதை வாசித்தபின்னராவது இங்கு விரைவாக உறுதிப்படுத்துங்கள்.

பிரதம மந்திரி வந்தியார் அவர்கள் சந்திப்புக்கு முதல் அவருக்கு அருகாமையில் இருக்கும் சிவன் கோவில் வாசலில் 1111 தேங்காய்கள் அடிக்க உத்தரவிட்டிருக்கிறாராம்,அதுமட்டுமல்லாமல் அண்மையில் அவர் கொண்டாடிய பிறந்த நாளுக்கான பரிசாக இதை ஏற்றுக்கொள்வதாகவும் சந்திப்பின் முடிவில் சகலவிதமான உணவுகள் மற்றும் குடிபானங்கள் அடங்கிய நிரல் அட்டவணை மட்டை(Menu card) ஒன்று வழங்குவதாகவும் அதில் பிடித்தவற்றை உண்ண முடியும் என்று சொல்லி இருக்கிறாராம்,
எப்படி உங்களுக்கு கஷ்டம் இல்லையா?? என்று நண்பர்கள் மந்திரியாரை கேட்டபோது ”காசென்ன காசு மனசெல்லோ முக்கியம் என்று புன்னகையோடு சொன்னாராம்”
ஆனால் அது அவரின் பிறந்த நாள் விருந்து என்றும் ஒரு தகவல்,ஆனால் செய்தி வழங்கும் வரை அது உறுதிசெய்ய முடியவில்லை
இன்னும் செய்திகள் கிடைக்கும் போது அவ்வப்போது இங்கு உண்மைச்செய்திகள் வெளிவரும்,


இந்த செய்திகள் எல்லாம் பதிவர்களின் வருகையை அதிகரிக்கபோகிறது என்பது மட்டும் உறுதியாகிவிட்டது, நாளை இங்கிலாந்து மண்ணில் சந்திப்பு நடப்பதும் உறுதியாகிவிட்டது,
பதிவர்கள் எல்லோரும் உங்கள் வருகையை உறுதிப்படுத்துங்கள்,

எது எப்படியோ 15-12-2010ம் திகதி புதன்கிழமை இங்கிலாந்தில் பதிவர் சந்திப்பு நடைபெற இருக்கிறது, பதிவர்களாக நீங்களுமிருந்தால் உங்கள் வருகையை தெரிவித்துக்கொள்ளுங்கள்,

வல்லிபுரத்தின் கடல் தீர்த்தம் மீட்கும் நினைவுகள்

வல்லிபுரக்கோயில் என்றால் அறியாதவர்கள் யாருமே இருக்கமாட்டார்கள்,வரலாற்று பிரசித்தி பெற்ற இந்த ஆலயம் யாழ்ப்பணம் வடமராட்ச்சியில் இருக்கிறது.தாயகத்தில் இருந்த காலப்பகுதியில் இந்த ஆலயத்தின் திருவிழாக்களில் ஒவ்வொருவருடமும் கலந்துகொள்ள தவறுவதில்லை, சிறு பராயம் முதலே அந்த ஆலயத்துக்கு நடைபயணமாக கூட செல்வது வழமை, அவையெல்லாம் இன்றைய நாள் மீண்டும் நினைவுக்கு வந்த படியே இந்த பதிவு,


கிடைக்கும் நேரத்தில் கிறுக்கலாம்.............


இப்போதெல்லாம் வலைப்பதிவின் பக்கமே வரவில்லையே என்று சின்னக்கவலைதான்.
வலைபதிவில் இருந்து விடைபெற்று விட்டீர்களா என்ற பலரதும் கேள்வி கொஞ்சம் அந்த கவலையை கூட்டிவிடத்தான் செய்கிறது.
என்றாலும் "எங்கே உங்களை காணவில்லையே" என்ற கேள்வியால் கொஞ்சம் மகிழ்ச்சியும் கூட.ஏனென்றால் என்னையும் தேடுவோர் பட்டியலில் ஒதுக்கிக்கொண்டதாலும் அதேபோல என்னை தேடுகின்றார்களே என்பதாலும் தான் அந்த மகிழ்ச்சி.


உண்மையில் வந்தியத்தேவன் மற்றவர்களை புரிஞ்ச மனசு. எனக்குள்ள வேலைபளுவால் பதிவு எழுத முடியாத நிலையில் உள்ள நேரச்சிக்கலை தன் பதிவில் புலத்தில் இருந்தபடியே அதற்காக நேரம் ஒதுக்கி பதிவு எழுதிய அவருக்கு புரிஞ்ச மனசு தானே.
அதனால் தான் கிடைக்கும் நேரத்தில் கிறுக்கலாம் என்ற எண்ணத்தில் பல நாள்களில் ஒரு பதிவாக எழுத முயற்சித்துள்ளேன்.


நேரம் இல்லை என்பது புலத்தில் பொதுவாக அனைவராலும் பேசும் விடயம்.ஏன் எமக்கும் அதே விடயம் மிகவும் அதிகமாகவே இருக்கிறது, ஆனால் ஏன் எதற்கு இப்படியான நேரமில்லாமை பிரச்சனை ஏற்பட வேண்டும் என்பதும் என்மனதில் அடிக்கடி எழும் கேள்வி,
எமக்குள்ளே ஏதேதோ ஏற்படும் பல்வேறு வேலைப்பளுக்கள் அதிகமாகவே அந்த பிரச்சனை.
வேலைப்பளுக்கள் கூடக்கூட சரியாக வேலைகளை மற்றும் செயற்பாடுகளை திட்டமிடாமை தான் காரணம் என்கின்றனர் அனுபவசாலிகள்,


ஆனால் இந்த நேரமில்லை என்ற பிரச்சனை பல்வேறுவிதமாக கூட சிலரால் கையாளப்படுவதுமுண்டு.அதுமட்டுமல்லாமல் தங்களுக்கு ஏற்றபடி சார்பானதாக்கி நேரமில்லை என்ற பிரச்சனையை கையாள்வோர் ஒரு ரகமும் கூட, இந்த நேரமில்லாமை என்பது எப்படி எல்லாம் கையாளப்படுகிறது என்பதை எனக்கும் நேரமிருந்தால் இன்னுமோர் பதிவில் பகிர்ந்து கொள்ளலாம் என்ற எண்ணம். ஆனால் கிடைக்கும் நேரத்தில் ஏதாவது கிறுக்கலாம் என்ற எண்ணம் மட்டும் இப்போ வந்துவிட்டது

சரி வல்லிபுரக்கோயில் பக்கம் செல்லலாம்,
வல்லிபுரக்கோயிலில் பதினைந்து நாள்கள் கோலாகலாமாக திருவிழா, அந்த பதினைந்து நாள்களிலும் கடல் தீர்த்தத்திற்கு ஒரு தனித்துவமே இருக்கிறது,ஆலயத்திலிருந்து சில மைல் தூரம் அமைந்திருக்கும் கடலை நோக்கி வல்லிபுரத்து மாயவன் தீர்த்தமாட செல்வான்.அந்த பாக்கு நீரிணை சமுத்திரத்தை நோக்கி மக்களும் படையெடுப்பர், மகிழ்ச்சிக்கு மகிழ்ச்சி, பக்திக்கு பக்தி, நகைச்சுவைகளுக்கு நகைச்சுவை,என்று எங்கும் ஆனந்தமான பொழுதுகளாகத்தான் இருக்கும்,

ஆரம்ப காலங்களில் மக்கள் மாட்டு வண்டில்களில் தான் பயணம் செய்து வருவார்களாம், ஆனால் இன்றைய காலங்களிலெல்லாம் மோட்டார் சைக்கிள்கள், சைக்கிள்கள், கார்கள், சிறு சிறு வான்கள் என்று மக்கள் படையெடுப்பினால் பருத்தித்துறை வீதியும் களைகட்டும்.இப்படியாக யாழ்ப்பாணத்தின் பல பாகங்களிலும் இருந்து வரும் மக்களும் சமுத்திரத்தை நோக்கி நடை நடக்க ஆரம்பித்தால் எப்படியிருக்கும்.அதுமட்டுமல்ல அந்த சமுத்திரம் வருடத்தில் ஒரே ஒருநாள்தான் இப்படியான ஜன வெள்ளத்தை காணும்.எப்போதும் பெரிய பெரிய அலைகளை எழுப்பும் சமுத்திரம் அன்று மட்டும் தன் அலைக்கரங்களை அமைதியாகவே வைத்திருக்கும்,
தொடர்ந்து ”கோபாலா கோவிந்தா கோபாலா கோவிந்தா” வான் அதிர மக்கள் வல்லிபுரத்து சக்கரத்தாழ்வாரை ஓடியபடியே தங்கள் தோள்களில் காவிவர சமுத்திரம் தன் அலைகளை மீண்டும் எழுப்பிய படி வரவேற்கும்.

மக்கள் சமுத்திரம் நோக்கி நடக்கும் போது ஆலயத்தில் வாசல் பகுதியில் இருந்து பார்த்தால் பெரிய அழகான பாம்பின் வடிவத்தை போன்று தோன்றும்..அதுவும் பெண்களின் வண்ண வண்ண ஆடைகள் அந்த பாம்புக்கு அழகை மெருகூட்டும்

நடக்கும் போதும் கடற்கரையை அண்டிய பகுதிகளிலும் சிறுவர்களின் மகிழ்ச்சிக்குஅளவேயிருக்காது.மண் விளையாடும் சிறுவர்கள் ஒரு புறம்,அந்த மண்ணையே தோண்டியபடி அதில் கிணறு கிண்டி அதில் தண்ணீரைக்கண்டு அவர்கள் மகிழ்ச்சியுறுவர்,கடலுக்கு அருகில் மண் கிண்டும்போது தண்ணீரை இலகுவில் அடைந்துவிட முடிவதால் இந்த முயற்சி சிறுவர்கள் மத்தியில் மிகவும் அதிகமாகவே இருக்கும்.பறக்கும் இராவணன் மீசையை ஓடிப்பிடித்து அவற்றை மீண்டும் பறக்க விட்டு அதில் ஒரு வகையான மகிழ்ச்சிகாண்பர் சின்னஞ்சிறுவர்கள்.

வயதானவர்களின் மொழியில் குறிப்பிட்டால் ”மள்ளாக்கொட்டை” என்பது எல்லோர் வாயிலும் கொறிப்பதை காணலாம்,அதனை கச்சான் என்பர் இளையவர்கள். சிறுவர்கள் வாய்களில் பல நிற இனிப்புகள் சுவைப்பதும் அதனால் அவர்கள்களின் வாய்கள் பல நிறங்களை கொண்டு காணப்படுவதும் உண்டு.

நடக்கும் போது பெண்கள் தங்கள் சேலைகளையும் சுரிதாரின் மேற்துணிகளையும் வெயிலுக்காக தலையிலே மூடியபடி செல்லும்போது அது பறந்தபடியே காணப்படுவது இன்னுமோர் விதமான அழகைக்கொடுக்கும்.

வல்லிபுரத்தில் பதினைந்து நாள்களும் எப்படியாக ஆலயத்தின் நாற்புறமும் கடைகளும் சுவையகங்களும் இருக்கின்றதோ அதேபோல கடற்தீர்த்தம் என்றால் கடலை நோக்கி எல்லாமே பயணித்துவிடும்,
மிகத்தூர நடை நடந்து கடலை வந்து அண்மிக்கின்றவர்களுக்கு தீர்த்தப்பந்தல்கள் வரவேற்கும், அங்கு தரும் தீர்த்தத்தின் சுவைக்கும் அளவே இல்லை என்று சொல்லலாம்.தாகம் தீர்க்கும் தீர்த்தம் ஆகையால் அதன் தனித்துவம் தனியானது,

சமுத்திரத்தில் இளைஞர்களின் நீச்சல்கள் ஒரு தனி ரகம்,அதில் கடலருகில் இருப்பவர்கள் எல்லாம் தங்களைத்தான் பார்க்கின்றார்கள் என்ற எண்ணத்தோடு நீச்சலில் பல்வேறு தந்திரோபாயங்களை புகுத்தி நீந்துவர் பலர்.சிலர் கடலில் பல தூரம் கூட சென்று திரும்பிவருவர்,கடல் அலைகளுக்கிடையில் அவ்வப்போது எட்டிப்பார்க்கும் தலைகள் கடலில் பந்துகள் மிதக்கின்றதா என்ற எண்ணத்தை தரும்,

இப்படியாக கடலுக்கருகில் பல்வேறு இனிமையான நினைவுகளுடன் மீண்டும் கடலுக்கு விட கொடுத்து ஆலயத்தை திரும்பும்போது அதில் கிடைக்கும் ஆனந்தம் தனியானது, கடலுக்கருகில் கண்ட இனிமையான நினைவுகள் மீட்டபடியே நடை நடந்து ஆலயத்தை அடைந்துகொள்வர் மக்கள்,
இளைஞர்களின் குறும்புகள்,இளம்பெண்களின் கலகலப்பான சிரிப்பொலிகள்,சிறுவர்களின் விளையாட்டுக்கள்,முதியோர்களின் பக்திப்பரவசங்கள் என்று எங்கும் ஆனந்தம் தான்.

இப்படியாக வல்லிபுரத்து கடற்தீர்த்தம் என்றால் யாழ்ப்பணமே களைகட்டும் என்று கூட சொல்லலாம்.பிரபலமான ஒளி ஒலி ஊடகங்கள் எல்லாம் படையெடுக்குமளவுக்கு சிறப்புக்கள் பொருந்தியதாக வல்லிபுரம் காணப்படும்.இவையெல்லாம் மீட்கும் நினைவுகளாக என்றும் மகிழ்ச்சியே,தாயகத்தின் நிகழ்வுகளை மீட்கும் போது என்னதான் எங்கு சொர்க்கபுரி வாழ்வு வாழ்ந்தாலும் தாயகத்தை போல இனிமையான வாழ்வு கிட்டுமா என்று தான் எண்ணத்தோன்றும்



இன்னும்பல சுவாரஷ்யமான விடயங்கள் இருந்தாலும் அவை இன்னுமோர் பதிவில் பகிர்ந்துகொள்ளலாம் என்ற எண்ணத்தோடு மீண்டும் சந்திக்கலாம்,உங்கள் கருத்துக்களை தெரிவிக்க மறக்காதீர்கள்

பட்ட பாடு பெரும்பாடு

நல்ல அனுபவம் கேளுங்கோ.
நடுராத்திரியிலை வரும் எண்டு யார் தான் நினைச்சது.
கனவில்லை பாருங்கோ,
நீங்கள் நடுராத்திரி எண்டாபோல கனவெண்டு நினைச்சிடுவீங்கள்.
இங்கை பொடியளுக்கு கூடுதலாக நடுராத்திரியிலைதானே வேலை முடியிறது ,
வேலை முடிஞ்சாலும் பஸ்க்கும் ரெயினுக்கும் இந்த குளிருக்குள்ள காத்து நிக்க வேண்டிய நேரம்,
குளிரெண்டால் அது குத்துறகுளிர்,
அதென்ன குத்துற குளிர்? சில்லென்ற குளிர்? கடுங்குளிர்?
அது சொல்லி விளங்காது,அனுபவிச்சுத்தான் பார்க்க வேணும்,

நடந்த ஒரு விசயம்தான் சொல்ல போறன்.
அதுக்காக எனக்குத்தான் நடந்தது எண்டு மட்டும் நினைச்சுப்போடாதீங்கப்பா,
ஏனெண்டால் இங்கிலாந்து வந்தவுடன் அது வரவேற்ற திறம் பதிவிலை சொல்ல ஆயிரம் தொல்லைபேசி அழைப்பு,
அதால முற்கூட்டியே ஒரு சொல்லிவைக்கிறது நல்லதுதானே என்ன?

அனுபவிச்சபொடியன் சொல்ல சொல்ல
நான் விழுந்து விழுந்து சிரிக்க!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
அதைத்தான் சொல்ல போறன்.

பஸ்க்கு காத்து நிக்கேக்க இரண்டு அப்பாவி பொடியள் தரவளி ஆடி ஆடி வருகுதுகள், நல்ல குளிருக்கு நல்ல சுடுபானம் அடிச்சு நடைபாதை தெரியாமல் நடந்து வருகினமாம்,
அங்கை ஒருகால் இங்கை ஒருகால் எண்டு சுடுபான விளையாட்டுக்களையும் ஆட்டங்களையும் ரசிச்சாராம் e.
இவர் ரசிச்சதை அந்த பொடியள் கண்டுவிட்டாங்களோ என்னவோ? இவரை வடிவேலாக்க பாத்துட்டாங்கள் எண்டுதான் விளங்குது.ஏனெண்டால் இப்படியான விசயங்கள் திரைப்படங்களில் நகைச்சுவையாக பார்ப்பதுண்டு.
அப்ப பாருங்கோவன்…………………………………

கிட்ட வந்தாங்களாம் அந்த சுடுபான குடிச்ச பொடியள்.
( இந்த உரையாடல் எல்லாம் முழுதும் ஆங்கிலத்தில் நடந்த உரையாடல்கள் என்றாலும் இங்கு எம் மொழியில் மொழிமாற்றப்பட்டிருக்கிறது- இடையிடையே சம்பாஷணை சுவைக்காக ஆங்கிலக்கலப்பு வருகிறது)

”Give me a சிகரெட்” இது தான் முதல் கேள்வி இந்த பொடியனிடம்
”என்னட்டை இல்லை சிகரெட்” எண்டாராம் நம்மவர்

“ இல்லை இல்லை Give me a சிகரெட்”
“ அட என்னடா வில்லங்கமா போச்சு”
நடுராத்திரியிலை வந்து உயிரை வாங்குறாங்கள், இவ்வளவுகாலமும் சிகரெட் தொட்டதேயில்லை, இங்க வந்த பிறகு இந்த ஓஃவ் லைசன்ஸ் தான் தொட வைச்சது, இவங்கள் என்ன எண்டால் சும்மா இருக்கிறன் என்னை சுண்டி இழுக்கிறாங்கள் எண்டு மனதுக்குள் நினைச்சவராக,
‘Please don`t disturb me” நம்மவர் கொஞ்சம் மிடுக்காக சொல்லி பார்க்கிறார்.

அவங்கள் எங்கை கேட்டால் தானே
”Nooooooooooooooo உன்னட்டை கட்டாயம் சிகரெட் இருக்க வேணும் பெரிய bag எல்லாம் நீ வைச்சிருக்கிறாய் give ,me a சிகரெட் ”
அட அங்க பார் அதிலை ஒரு ஓஃப் லைசன்சன்ஸ் கடை ஒண்டு இருக்கு அதிலை போய் வாங்குங்கோ எண்டு புத்திமதி பண்ணுறார் நம்மவர்

என்ன இது அடிக்கடி ஓஃவ் லைசன்ஸ் என்று சொல்ல்கிறேனே அது என்னவாக இருக்கும் என்று நீங்கள் மனதினுள் நினைக்கலாம் அல்லவா?
இங்கிலாந்திலை பொதுவாக பெரிய பெரிய பல்பொருள்வாணிபக்கடைகள் தவிர்ந்த மற்றைய கடைகள் எல்லாம் ஓஃப் லைசன்ஸ் எண்டு அழகாக சொல்லுறது பாருங்கோ, கூடுதலாக நம்மவர்கள் தான் இதற்கு முதலாளிகள்.

அப்ப நம்மவரின் புத்திமதிக்கு பிறகு
”ம்ம்ம் இப்படியான கதை சொல்லி என்னை கோவக்காரனாக மாத்தவேண்டாம்,சரியோ give me a சிகரெட்” எண்டு சொன்னானாங்களாம் அவங்கள்.

”அட இதென்ன வில்லங்கமடா
சும்மா நிண்ட என்னை சிகரட் கேட்டுப்போட்டு கோவக்காரன் ஆக்க வேண்டாம் எண்டு என்னை வில்லங்கத்துக்கு இழுக்கிறான்” எண்டு மனதுக்குள் சிந்தித்த நம்மவர்
பேசாமலே இருந்தாராம், இன்னும் கதைச்சால் நான் தான் கடைசியிலை வடிவேலாக வேணும் எண்டு நினைச்சுக்கொண்டு.
அதுக்கு பிறகு பஸ்சும் வர அவங்களும் பஸ்சிலை ஏறுறாங்கள், இரண்டு தட்டு பஸ் எண்டதாலை அவங்கள் மேலுக்கு ஏற இவர் கீழுக்கு பின்னுக்கு போய் இருக்கிறார்.


ஐயோ அவங்கள் மேலுக்கு போறாங்கள் இனி நிம்மதியாக பயணிக்கலாமே என்று மனதினுள் எண்ணியவார சென்ற நம்மவருக்கு தொடர்ந்து என்ன நடந்தது? ”பட்ட பெரும்பாடு போதுமென்று” இருந்தவருக்கு மீண்டும் நடந்தது என்ன?
அடுத்த பதிவு வரை கொஞ்சம் பொறுத்திருப்போமா?

புலத்தில் நம்மவர்கள் வாழும் வாழ்க்கை புண்ணியம் செய்து அமைந்திருக்கும் வாழ்க்கையோ? இப்படித்தான் நம்மவர்கள் வாழ்க்கை ஓடுது. இன்னும் வரும் இந்த நம்மவரும் பெரும்பாடு