இங்கு வண்டில் மாடு ஓடுது சோதனையாய்


சோதனைகள் பலரகம்
அவை ஒவ்வொன்றும் ஒருவிதம்
சோதிப்பதால்தான் எதிர்பார்ப்பும் ஏக்கமும்-இல்லையேல்
எல்லாமே ஒன்றுதான் இப்பாரினிலே
சோதனைகளை தாண்டி- அவை
சாதனைகள் பெற்றுவிட்டால்
ஆனந்தத்துக்கும் எல்லையுண்டோ இந்தப்பாரினிலே

மனிதன் பிறந்து விட்டால் சோதனைகளை எதிர்கொள்ள தயாராக தான் பிறக்க வேண்டும் என்பது உலக நியதி என்றும் சொல்லலாம்.இதை மறுப்பதற்கில்லை.
இங்கு இதுவும் ஒரு சோதனையில் நடந்த விடயம் தான்.ஆனால் இதற்கு "சோதனை" என்ற சொல் வடிவம் பொருந்துமோ எனக்கு தெரியவில்லை.இருப்பினும் பொதுவாக மாணவர்கள் இதை தங்களின் சோதனை என்று சொல்வது வழமை.
பொதுவாக ஆசிரியர்கள் தன்மாணவர்களை பரீட்சைகள் வைத்து பரிசோதிப்பதும் அதற்கு மாணவர்கள் விழுந்து விழுந்து படிப்பதும் இப்போதெல்லாம் நடைமுறையிலுள்ளவிடயங்கள்.நாளாக நாளாக படித்ததெல்லாம் மூளைக்கு ஏற்றிவிட்டு பரீட்சைமண்டபத்திலே வந்து தலையை கலக்கி கொட்டிவிட்டு அதன்பின்பு அவையெல்லாம் தேவையில்லாததொன்று என்பதைப்போல நடமாடும் மாணவர்களும் இல்லாமலில்லை.இவர்களெல்லாம் மனதிலெடுத்ததை மட்டுமே பரீட்சை மண்டபத்தில் கொட்டிச்செல்வர் என்பது ஆமோதிக்கபடவேண்டியவிடயமும் கூட.கொஞ்சம் மாறுதலாக பரீட்சகர் பரிசோதித்துவிட்டால் "இண்டைக்கு கொஞ்சம் இறுக்கமாக போச்சு" என்று மனதினுள்
குறுகுறுத்தபடி வெளியேறுவர் இப்படியான மாணவர்கள்.

இப்படித்தான் ஒரு தமிழ் ஆசிரியர் தனியார் கல்வியகத்தில் அடிக்கடி மாணவர்களுக்கு பரீட்சைகள் வைப்பது வழமை.அடிக்கடி வைத்தாலும் அது கொஞ்சம் போட்டிப்பரீட்சை என்றுதான் சொல்லிவைப்பார்.அதனாலே பரீட்சை மண்டபத்தினுள்ளே கவனிப்பாளர்களும் கூட.முகாமையாளரின் முகாமையிலும் கவனிப்பிலும் பரீட்சை ஆரம்பம்.
ஆரம்பிக்கும் இறுதி நிமிஷம் மட்டும் படித்துவிட்டு எல்லாமே இறைவன் துணையென்று மேலே சுழி போட்டு 'வாத்தியார் என்ன கேள்வியைபோட்டாரோ எப்படி போட்டாரோ" என்று சிந்தித்தபடி ஆரம்பிக்கிறது மாணவர் கூட்டம்.
சோதனையின் இடையில் "சலசல" என்று சத்தம் கேட்பதும் கவனிப்பாளர் எழுந்து "சூ சூ என்ன சத்தம்" என்று சொல்ல பின்னர் அது குறைவதுமாய் பரீட்சை நடந்து கொண்டிருக்கிறது.எது எப்படியாக இருந்தாலும் மாணவர்கள் தங்கள் சந்தேகங்களை எப்படியாவது மற்றவர்களிடம் கேட்டுத்தெரிந்துகொள்வதுமாய் பரீட்சை நடந்து கொண்டிக்கிறது.உண்மையிலை இந்த விசயம் எல்லாம் வாத்தியாருக்கு தெரியாது, வாத்தியார் இப்ப இதை வாசித்தாரென்றால் "இப்பிடி எழுத்தித்தான் நீ எல்லாரையும் விட கடைசி மார்க்ஸ் எடுத்தனியோ" எண்டு தலைக்கு மேல கைவைப்பார்."கெட்டிக்காரன்" என்று இப்ப சொன்னாலும் சொல்லுவார் என்ன?. சரி அது இருக்கட்டும்.
அப்ப எல்லாரும் நேரத்தையும் பார்த்தபடி விறு விறு என்று எழுதிக்கொண்டே கடைசிக்கேள்விக்கு போனால் அது வழமைபோலவே கட்டுரை.
அதில எல்லாருக்கும் எழுத கொஞ்சம் இலகுவாக இருந்த தலைப்பு "வண்டில் மாட்டின் சுயசரியதை எழுதுக" என்று.மற்றது எல்லாம் வாத்தியார் படிப்பிச்சது மாதிரி இல்லாமல் அது வாத்தியாரின்ரை பேப்பருக்கு ஒரு தரத்துக்காக கொஞ்சம் கடுமையாக இருந்தமாதிரி உணர்வு எல்லாருக்கும்.அப்ப பொதுவாக வண்டில் மாடுதான் எல்லாரின்ரை பேப்பர்லையும் ஓடுது.கட கட கட கட எண்டு எல்லாரும் எழுதினாலும்(வண்டில் மாடு தானே), ஒரு பொடியன் முழுசி முழுசி அக்கம் பக்கம் பார்க்கிறான் "டேய் டேய்" எண்டு தனக்கு பக்கத்தில் இருந்தவனை தட்டினால் அவன் எங்க பார்த்தால் தானே,ஏதோ கஸ்டப்பட்டு அவனை ஒருவாறு பார்க்கவைத்தான் அவன்.
பார்க்கவைத்த அவன் கேட்டான் மெல்ல மெல்ல

"டேய் நீ என்ன வண்டில் மாட்டின் சுயசரிதையா எழுதிறாய்"
"ம்ம் ம்ம் ஏனடா"
"ஏனடா ஏதும் பிரச்சனையே"
"பின்னை ஏன் நான் உன்னை கூபிடுறன், டேய் நானடா வண்டில் மாட்டில இரண்டு மாட்டிலை ஒரு மாட்டின்ரை சுயசரிதை எழுதிப்போட்டன்டா மற்ற மாட்டை பற்றியும் எழுதவேணுமோடா?"
"நல்ல கேள்வி, நீ எல்லா மாட்டையும் பற்றி எழுதினால் நாங்க எங்கடா போறது, நான் இளையதம்பி அண்ணையின்ர மாட்டை பற்றி எழுதுறன் நீ வேணுமெண்டால் கணபதிப்பிள்ளையண்ணையின்ரை மாட்டைப்பற்றி எழுது என்ன"
என்று பெரிய புத்திமதி பரீட்சை மண்டபத்திலே.
"" "சூ சூ" என்ன சத்தம்"" என்று கவனிப்பாளர் எழும்பி வர புத்திசாலியின் புத்திமதியும் சொல்லிமுடிகிறது."சரியோ பிழையோ ஏதோ எழுதுவம்"என்றபடி வேகமாக எழுதிமுடிக்கின்றனர் புத்திசாலிகள்.
"இனி எப்ப மார்க்ஸ் வரப்போகுதோ" என்ற எதிர்பார்ப்பின்படி எல்லா மாணவர்களும் பேசியபடி வெளியேறுகின்றனர்.
ஏன் தெரியுமோ???? பரீட்சைப்புள்ளி பார்க்கிற ஆர்வம் இல்லை.அது புள்ளியை பார்த்து வாத்தியார் பிறகு எத்தனையோ மாட்டை பற்றி சொல்லி முதுகிலை கொஞ்சம் தட்டுத்தட்டி முதுகிலை வண்டில் மாடு ஓட்டுவார் எல்லோ, அப்ப அண்டைக்கு வகுப்புக்கு வராமல் விடத்தான், வேற என்ன, அவ்வளவு ஆர்வம் படிப்பிலே எங்கட பொடியள்.

"டொம்" எண்டு விழுந்திச்சினம் "டக்" எண்டு எழும்பிச்சினம்



விழுந்தவன் எழும்புவதும்
விழுந்தாலும் மீசையிலே
மண் முட்டவே இல்லை என்று
வீராப்பு பேசுவதுமாய் இந்த உலகம்
காதலில் விழுபவர் வேறு
அன்பினில் விழுபவர் வேறு
பாசத்தில் விழுபவர் வேறு
பாத்ரூமில்(குளியலறையில்)விழுபவர் வேறு
சறுக்கி விழுபவர் வேறு
தடக்குபட்டு விழுபவர் வேறு
இது சும்மா விழுந்த கதை

நல்லதொரு வாத்தியார்
மகாலிங்கசிவம்
கோவில் கண்டாமணி ஒலிக்கும்வேளை
மனதில் பக்தியோடு எழுந்து நின்று
கணமேனும் இறைவைனை நினைக்க சொன்னார்
நல்ல விடயம் என்றாலும்
கண்டிப்பான உத்தரவு தான் வகுப்பில்

வாத்தியாரின் கண்டிப்பான உத்தரவு மாணவர்களை நல்வழிப்படுத்தும் என்ற சிறப்பான நோக்கமே.அதாவது ஆலயமணி இறைவனை ஒரு நிமிடம் நினைவு படுத்துவதாக ஆசிரியர் அவர்கள் எமக்கு அறிவுரை பகிர்ந்தார்.
மகாலிங்கசிவம் ஆசிரியர் இப்போது எம்முடன் இல்லாவிட்டாலும் அவரின் மாணவர்கள் இப்போதும் அவரின் பெயர் கூறும் அளவுக்கு எங்கும் பரந்து காணப்படுகின்றார்கள் என்பது உண்மை.
ஆசிரியர் தமிழில் வேற்றுமை என்ற பகுதியை கற்பிக்கும்போது மிகவும் மகிழ்ச்சியுடன் கூடிய உதாரணங்களுடன் கற்பிப்பார் என்பது இப்போதும் என்னுடைய மனதினுள் வந்து நிழலாடுகிறது.இப்படியாக ஆசிரியரை பற்றிசொல்ல ஒரு தனியான பதிவு வேண்டும் என்றால் மிகையாகாது.

அப்ப வாத்தியார் தச்சன் தோப்பு பிள்ளையார் கோவில் மணி கேட்கும்போது எல்லாரும் எழும்பி கும்பிடவேணும் எண்டு சொல்லிவைச்சார்.அதை சில இளம்பராய மாணவர்களுக்கு "இதெல்லாம் ஏன்" என்ற கெள்வி அவர்கள் மனதில் எழுந்தாலும் வாத்தியாருக்கு எல்லாரும் பயம் தானே.அதால எல்லாரும் எழும்பி நிண்டு கும்பிடுவம்,

அதில இன்னுமொரு விசயம் சொல்ல வேணும்,அந்த மணி சரியாக ஐந்து மணிக்கு தான் ஒலிக்கும்.அந்த நேரம் வகுப்பு முடியும் நேரம்.வகுப்பு முடியபோகுது என்ற சந்தோசத்துடன் எல்லாரும் எழும்பிக்கும்பிடுவம்.
சில வேளைகளில் யாரும் ஆசிரியர் கூடிய நேரம் வகுப்பு எடுத்தால் கூடிய நேரம் கும்பிடுவதும் உண்டு.இது பெரிய பக்தி.
ஆனால் இந்த முறையை எல்லோராலும் தவறாமல் கடைப்பிடித்துவந்தமை குறிப்பிடத்தக்கது.

இப்பிடித்தான் ஒருக்கால் ஆலய மணி ஒலித்த வேளை எல்லாரும் எழும்பிக்கும்பிட்டம். கண்மூடி ஒருகணம் இறைவனை நினைத்து எல்லாரும் இருக்கிறம்.வாத்தியாரும் கண்மூடி உள்ளத்துள் "தச்சந்தோப்பு பிள்ளையாரே" எண்டு நினைச்சு வகுப்பு முடிக்கிற நேரமும் வந்திட்டுது எண்டு வேகமாக படிப்பிக்க தொடங்கினார்.
ஒருகண செக்கனுக்குள் "கட புட கட புட" எண்டு சத்தம். "தொமார்" எண்டு சத்தம்.சத்தத்தை நோக்கி எல்லாரும் திரும்பினால்................
நான்கு பொம்பிளைப்பிள்ளையள் கீழுக்கு கிடக்கினம்.என்னடா பூமி அதிர்ச்சியேதுமோ எண்டு நினைச்சால்! அது ஒண்டுமில்லை, அது அவர்கள் இருந்ததும் அவர்கள் இருந்த வாங்கு விழுந்ததுமாய் அவர்களும் பூமாதேவியை விழுந்து கும்பிட்டதும் ஒன்றாகவே நடந்தது.
அதிர்ச்சியோடை பார்த்த எல்லாரும் "கொல்" என்று விழுந்து விழுந்து பெரிய சிரிப்பு. விழுந்த பிள்ளைகள் எல்லாம் சிரிச்சவை சிரிச்சு முடியமுன் "டக்" எண்டு எழும்பிவிட்டினம் வெட்கம் கூடிய முகத்தோடு.

வாத்தியார் சொன்னார் "யாரும் விழுந்தால் போதுமே,பார்த்து சிரிக்க வெளிக்கிட்டுவிடுவியள் மற்றவர் விழுவதில் அப்படியென்ன சந்தோசம் உங்களுக்கு".என்று கண்டிப்பான குரலோடு சொல்ல சிரிப்பு எல்லாம் "கம்' எண்டு நிண்டுது.
வகுப்பும் முடிந்து விட்டது சிரிப்போடு.ஆனால் அதுக்கு பிறகு எல்லாரும் கும்பிட்டுட்டு இருக்கும்போது கீழுக்கு தடவி பார்த்து வாங்கு இருக்கோ இல்லையோ எண்டு "செக்" பண்ணித்தான் இருப்பினம்.
அது தான் சொல்லுறது "எந்த ஒரு செயற்பாடும் அனுபவித்த பின்புதான் அதன் கவனம் கூடும் என்பது மட்டுமல்லாமல் அதன் கஷ்டமும் விளங்கும் என்று."

யாழ்ப்பாணத்தில் கூடுதாலாக எல்லா இடங்களிலும் ஆலய மணி கேட்கும்போது இறைவனை துதிப்பதும் ஆலய வீதிகளை கடக்கும்போது ஒருகணம் எழுந்து நின்று வழிபடுவதும் குறிப்பிட்டு சொல்ல வேண்டியவை.
இங்கு விழுந்தவர்வகளின் பெயர் விபரங்கள் விழுந்தவர்களுடன் தொடர்பு ஏற்படுத்தி கரவைக்குரல் கேட்டபோது அவர்களின் கண்டிப்பான வேண்டுதலினால் தவிர்க்கப்பட்டிருக்கிறது.

கொஞ்சம் பொறுங்கோ அண்ணை நேரமில்லை

என்ன நேரமில்லையா?????


இது தான் இப்போது அடிக்கடி எல்லோருடைய வாயிலும் வரும் வசனங்களில் ஒன்று.அதை கொஞ்சம் எல்லோருக்கும் புரியக்கூடியபடி ஆங்கிலத்திலும் சொல்வார்கள்(buzy).
உண்மையில் அவர்கள் நேரமில்லாமல்தான் அலைகிறார்களா? அல்லது
நேரமில்லை நடிக்கிறார்களா என்பதில்லை இங்கு கேள்வி.
இந்த நேரம் ஏன் இல்லாமல் போக வேணும் என்ற கேள்வி தான் இந்த பதிவின் நோக்கம் .
பண்டைய காலங்களில் எந்தவித விஞான வளர்ச்சியும் இல்லாமல் வாழ்ந்த மனிதனுக்கும் இந்த இதே பேச்சு இருந்ததா என்ன?
எந்த இடத்துக்கும் நடையாய் சென்று தன் அன்றாட பணிகளையெல்லாம் செய்து மகிழ்ச்சியான வாழ்க்கையை அனுபவித்த மனிதனுக்கு இன்று எந்த பணிகளையும் மிக வேகமாக செய்யக்கூடியவாறு வசதிகளையும் பெற்றபின்பு ஏன் இந்த நிலைமை என்று தான் புரியவில்லை

உதாரணமாக ஒன்றைக்குறிப்பிட்டால் இப்போது எல்லோருடைய கைகளிலும் கைத்தொலைபேசி இன்றியமையாததொன்றாகி விட்டது என்பதை யாரும் மறுக்க முடியாது.அதன் மூலம் வீட்டிலிருந்தவாறே எல்லோருடனும் உரையாடி தங்க தேவைகளை நிறை வேற்றுவதும் அறிந்து கொள்வதுமாக இன்றைய உலகம் வாழ்ந்துகொண்டிருக்கிறது. முன்னைய காலங்களில் இவையெல்லாம் இருந்ததா என்று கேட்டால் இல்லை என்பது தான் பதில்.அப்படியென்றால் எப்படி இன்றைய காலங்களில் நேரமில்லாமல் போகவேணும் . சிந்தித்துப்பாருங்கள்.

மனிதன் தேவையற்ற சிந்தனைகளை மனதுள் வளர்க்கிறானா?
வேண்டாத ஆசைகளை மனதுக்கு ஊட்டுகின்றானா?
மற்றவர்களிடமிருந்து தன்னை வேறுபடுத்தி உணர்கிறானா?
தன்னை மற்றவர்கள் பெரிதுபடுத்தி எண்ணுவார்கள் என்று நினைக்கிறானா?
அளவுக்கு மிஞ்சிய வேலைகளை தோள்மேலே சுமக்கிறானா?
மற்றவர்கள் தன்னை வேலையற்றவர்கள் என்று எண்ணி விடுவாரோ என்ற கூச்சமா?
உண்மையில் நேரம் தான் போதாதா?

ஏன்தானோ புரியவில்லை.ஆனால் இன்று நேரமில்லை என்று எல்லோரும் அலைவது மட்டும் தான் உண்மை. இருபத்திநான்கு மணிநேரம் என்பது இன்றைய மனிதனுக்கு போதியளவு இல்லை என்பது மட்டும் புரிகிறது.ஆனால் இதை கூட்டிவிட்டால் மட்டும் அது போதுமா என்ற கேள்வியும் வரத்தான் செய்கிறது.
அதெல்லாம் சரி எனக்கு இதையெல்லாம் சொல்ல எனக்கும் நேரமில்லை.
நான் பிறகு வாறன்.
உங்களுக்கும் நேரம் இல்லாமல் இருந்தாலும் கொஞ்சம் நேரம் எடுத்து உங்கள் கருத்தை சொல்லுங்கோ

அப்பா.................! இது உங்களை நினைத்து

நினைவுகளில் நீங்கள் எப்போதும்

வருடத்தில் இரண்டு நாள்கள்
மனங்குமுறி அழுதிடுவேன்
ஒன்று என் பிறந்த நாள்
மற்றது தைமாதம் கடைசிநாள்
எல்லோர் வாழ்விலும் தை பிறந்தால்
வழி பிறக்கும் எனக்கும்
அன்று வந்த தை மாதம்
வலி கொண்டுவருமென்று யாரறிவார்
வழிகாட்டிய என்தெய்வம் என் தந்தை
என்னை விட்டு பிரிந்த இரவு அது
அதுவே வாட்டுகிறது இன்றுவரைக்கும்

முதல் நாள் உங்கள் முன்னாலே
வயலின் இசை மீட்ட
சுவையாக சொன்னீர்களே
"தம்பி அவன் நல்லாக வாசிப்பான்" என்று
நிச்சயமாக உங்கள் சொல்லுக்காகவே
அதே வயலின் எடுத்து
எட்டு மேடை ஏறிவிட்டேன்
அத்தனையின் ஆரம்பமும் நீங்களே

அடிப்படைக்கல்வியின் அடிப்படை நீங்களே
கண்டிப்பாய் சொல்லித்தந்தாலும்
அன்பின் அத்திவாரம் நீங்கள்
கணிதத்தின் கடுமையை
இலகுவில் புரியவைத்தீர்கள்
வாழ்க்கையின் சோதனைகள்
சாதனைகள் என்று சொல்லுவீர்கள்
மற்றவர்கள் அன்பு வாழ்க்கையின்
வெற்றி என்றும் சொல்லிதந்தீர்கள்
அத்தனையும் உண்மை அப்பா
தந்தைக்கு தந்தையாய்
ஆசானுக்கு ஆசானாய்
என்வாழ்க்கையின் ஆரம்பம் நீங்களே

எந்தக்கலையிலும் துணிவோடு
மேடைக்கூச்சம் தவிர்த்து
முன்செல்லவைத்த முன்னோடி நீங்கள்
மேடையில் நீங்கள் நவரசமாய்
நடித்து நடித்து பாடலோடு கதையிசைக்க
ரசித்தவர்கள் ஏராளம் -அதையே
என்னை படிக்க வைத்தவர் நீங்கள்
என்னையும் மேடையில் இருக்க வைத்து
கதையிசைத்து பாடவைத்து
அழகு பார்த்தீர்களே
அதற்காக உங்கள் பெயர் நிலைக்க
என்னார்வம் என்றும் நிலைக்கும்
மற்றோரால் பாராட்டப்பட்டதுண்டு நான்
அப்போது உங்களையே நான் நினைத்திடுவேன்
இறைவன் புகழோடும்
விடுதலை வேட்கையோடும்
உங்களால் படைக்கபட்ட கதையெல்லாம்
பொக்கிஷமாய் வைத்திருக்கிறேன்
உங்களுக்காய் பேணுகின்றேன்
இன்னும் சொல்ல வேண்டியவை
நிறையவே இருக்கு அப்பா
அவ்வப்போது காலங்கள் உங்கள் பெயர் சொல்லும்
என்மீது மற்றோர் கண்ட திறமைகளில்
அடிப்படையும் ஆரம்பமும் நீங்களே
அந்த அத்திவாரம் என்றும் வெற்றியாய்
இறைவன் புகழோடும்
விடுதலை வேட்கையோடும்
உங்களால் படைக்கபட்ட கதையெல்லாம்
பொக்கிஷமாய் வைத்திருக்கிறேன்
உங்களுக்காய் பேணுகின்றேன்
இன்னும் சொல்ல வேண்டியவை
நிறையவே இருக்கு அப்பா
அவ்வப்போது காலங்கள் உங்கள் பெயர் சொல்லும்
என்மீது மற்றோர் கண்ட திறமைகளில்
அடிப்படையும் ஆரம்பமும் நீங்களே
அந்த அத்திவாரம் என்றும் வெற்றியாய்
நினைவுகளில் என் உள்ளங்களில்
நீங்களே எப்போதும்

வருட ஆரம்பத்தில் மட்டுமல்ல எப்போதும்

சிந்தனைகள் சிறக்கட்டும்

புதுவருடம் பிறந்து விட்டால் எல்லோருக்கும் மகிழ்ச்சி.மற்றவர்களுக்கு தங்கள் வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்வதும் பழைய துன்பங்களை மறக்க வேண்டும் என்று மனதில் உறுதி எடுத்தும் சந்தோசமான வாழ்க்கைக்கு தயாராக வேண்டும் என்று வீறு கொள்வதும் வழமையானவை.
இவையெல்லாம் சோதனைகள் நிறைந்த வாழ்க்கையை சாதனை ஆக்கவேண்டும் என்பது தான் எல்லோருடைய எண்ணம்.
கடந்த வருடமும் ஆரம்பத்தில் அதற்கு முன் கடந்த இரண்டாயிரத்தேழாம் ஆண்டின் சோதனைகளை எடுத்தெறிந்து நிம்மதியான ஆண்டாக இருக்க வேண்டும் என்று வாழ்த்தியது எல்லோருக்கும் நினைவிருக்கும்.ஆனால் நடந்தது என்ன? கஷ்டங்களின் எல்லைக்கே சென்றுவிட்டது நமது தாய்நாடு.எந்த ஒரு வருடமும் மற்றவர்கள் வாழ்த்தும் படியாக அமைந்தது இல்லை நம் குலத்துக்கு.
தோள்கள் எல்லாம் வலிக்கும்படியாகவும் சோகங்களை சுமந்து எமது தாய்நாடு சென்றுகொண்டிருக்கிறது.அதுமட்டுமல்லாமல் இயற்கையும் "சுனாமி" என்றும் "நிஷா" என்றும் அவ்வப்போது வந்து வாட்டிவிட்டு செல்கிறது. ஏன் தர்மத்துக்கும் கூட நியாயம் புரியவில்லையா? இதையெல்லாம் பார்க்கும் போது வாழ்த்துவது எதற்காக என்று எண்ணத்தோன்றுகிறது இல்லையா?
என்றாலும் துன்பத்திலும் நம் பாசக்கரத்தால் இரண்டாயிரத்தொன்பதாம் ஆண்டை வழமைபோலவே வரவேற்போம். உன்தம்பி இரண்டாயிரத்தெட்டு எமக்கு தந்த துன்பங்கள் துயரங்களால் பகைமையை எம்மோடு வளர்த்தாலும் பகைமையை மறந்து உனக்கு பாசக்கரம் நீட்டுவோம்.அடித்தாலும் அரவணைக்கும் குலம் எம்குலம் என்று புரியட்டும்.
நாம் வாழ்க்கையின் அர்த்தத்தை புரிந்து தீய சிந்தனைகளை தீக்குள் போட்டு அறியாமை என்ற இருளை விட்டகன்று கோபதாபங்கள் மறந்து அமைதியான உள்ளத்தோடு மற்றோரிலும் அன்பு வைத்து எம்குலம் சிறக்க வாழ்ந்திடுவோம்.சிறந்த வெற்றியைத் தரவே இந்த துயரங்கள் எல்லாமென்று எல்லாமென்று சிந்திப்போம்,சோதனைகளை சாதனையாக்குவோம்.
எம் சான்றோர்கள் சொன்ன வழியில் எம் வாழ்க்கையை கொண்டு செல்வோம்
வெற்றி எம்பின்னால் தேடி வரும். மற்றவர்கள் முகங்களில் புன்னகை பூக்கும் படியாக எல்லோர் உள்ளங்களையும் காதலித்து எம்குலமக்கள் சிறக்க வேண்டும் என்று வாழ்த்துவோம்.

அசையா விருட்சமே அசைந்தது ஏனோ?






துள்ளிவரும் தென்றல் காற்றை
தள்ளிவிட்டு எம்மீது சுகம் கண்டாய்- இன்று
வீசிவந்த அதேகாற்றில் சரிந்து விட்டாய்
பலமிழந்து சரிந்தாயா? வாழ்க்கை வெறுத்துச்சரிந்தாயா?
வாழ்க்கை வெறுத்துச்சரிய நியாயம் உன்பக்கமில்லை.

கொஞ்சிவிளையாடும் மைனாக்களை கண்டவள் நீ
கீச்சலிடும் கிளிகளின் அழகைக் கண்டுரசித்தவள் நீ
பாடும் குயிலின் பாடல் எல்லாம் உனக்கு அத்துப்படி
இத்தனை சுகமிருக்க வேறென்ன ?

நீ வளர்ந்த பாதை அது தனி
தட்சணாமூர்த்தியின் தவிலடியை ரசிக்காதவளா?
சின்னமௌனாலாவின் இசை ரம்மியத்தில் தவழ்ந்தவள்
பத்மநாதன் கானமூர்த்தி ஜெகநாதன் என்று அடுக்கிகொண்டே
உன்னிழலில் இசைகண்ட மகிழ்வெமக்கு
உன்னிலைகளில் தென்றல் பட்டால் அது நாதஸ்வர ஒலிபோலவே
வீசும்காற்றை தவிலடியாக மாற்ற உனக்கு புரியவில்லையா?

கிட்டிப்புள்ளு அடித்தபோது நீ எமக்கு நிழல் தந்தாய்
கிளித்தட்டு மறித்தபோது பழம்பெற உந்தன் அடியைத்தான் தொடவேண்டும்
துடுப்பாட்டத்தில் நீயும் ஒரு களத்தடுப்பாளன்
இத்தனை சுகம் இருக்க வேறென்ன உனக்கெதற்கு?

அரசியலில் நீ சாணக்கியன்
உதயனை எடுத்துவந்து
உன்னருகில் வாசிக்க கடைக்கண்ணால் பார்ப்பவள் நீ
வயதான பெரியோரும் கதைத்துவிடுவது
உனக்கு கேட்காமல் விட்டிருக்குமா?
நிகழ்வைக்குழப்ப விசிலடிக்க-அவர்களை
நம்மூர்க்காளையர் அடித்துக்கலைத்ததும் உன்னடியில்தான்
அதையெல்லாம் கண்டு ரசித்த உனக்கு
வேறென்ன உனக்கெதற்கு?

இடம்பெயர்ந்து வந்தோரை அரவணைத்து
உறங்குமடம்போல நிழல் கொடுத்து
இன்பம் கண்டவள் நீ
மாலை வேளையில் தண்ணீர்த்தொட்டியில்
தாகம் தீர்க்கும் பசுக்களும் கன்றுகளும்
உன்னிழலில் சுகம்காண
இன்புற்றவள் நீ
தண்ணீர்க் குடத்தோடு செல்லும் அழகியரை
ரசித்தவள் நீ
இத்தனை சுகம் இருக்க வேறென்ன உனக்கெதற்கு.

அண்ணை ரைட் நடிகர் பாலா தவழ்ந்த இடம் உன்நிழல்
உடுப்பிட்டி வானம்பாடி கரவெட்டியில் தவழ்ந்தும் உன்நிழல் தான்
பண்டிதர் வேலாயுதம் படித்ததும் உன்நிழல் தான்
எல்லோருக்கும் நீ ஒரு பொன்னில்லம்
இத்தனை புகழ் உனக்கு வேறென்ன உனக்கெதற்கு

இளையோராய் எல்லோரும் இருந்தவேளை
விட்ட குறும்பெல்லாம் உனக்குத்தான் வெளிச்சம்
சேர்ந்துசென்று இளநீர் குலையோடு கூடிவந்து
உன்னடியில் குடித்தோரை நீ மறந்திருக்க மாட்டாய்
இதையும் நீ ரசித்து சிரித்ததெல்லாம் மறந்துதான் சரிந்தாயா?


இன்னும் எத்தனை நினைவுகள்
அத்தனையும் மறந்து நீ சரிந்தாயா?
இத்தனை நினைவிருந்தால் அதுவே உனக்கு பலம்
இவ்வளவு பலம் இருக்க ஏன் அசைந்தாய் விருட்சமே

எம் வாசலில் வரவேற்கும் நீ இன்று இல்லை
உன்னினைவில் ஒரு வாரிசைக்கொடுத்துவிடு
மறந்துவிடாதே
ஆனால் அசையா விருட்ச்சமே அசைந்தது ஏனோ?
என்றும் இவ்வினாவுடன்....................

பொய்யான உலகத்தில் பொய்யான வாழ்க்கை

பொய் சொல்ல போறேன்

வாழ்க்கையில் எத்தனையோ விடயங்கள் நாங்கள் கடைப்பிடிக்க வேண்டும் எங்கள் முன்னோர்கள் எங்களுக்கு வழிகாட்டி
சென்றிருக்கின்றார்கள்.அத்தனை விடயங்களையும் கடைப்பிடிக்கலாமா இல்லையா என்பது வேறு விடயம்
ஆனால் அத்தனை அம்சங்களையும் கடைப்பிடித்தால் வாழ்க்கையில் வெற்றி என்பது நிச்சயம்.எந்த ஒரு அம்சத்தையும் அவர்கள் தங்கள் அனுபவங்கள் வாயிலாக கூறியிருப்பதுதான் அவற்றின் சிறப்பு ஆகும்.
"பொய் சொல்ல கூடாது பாப்பா" என்று எட்டயபுரத்துக்கவிஞன் பாரதி பாட அதை சிறு பராயம் முதலே அக்கு வேறு ஆணிவேறாக பெற்றோர் ஆசிரியர் என்று எல்லோரும் அடிப்படையாக ஊட்டி வளர்ப்பர்.
பொய் சொல்லி விட்டால் அதற்கு சிறு தண்டனையும் வேறு.
ஆனால் கொஞ்சம் வித்தியாசமாக நல்ல பெரும் உதவிக்காக்க அல்லது பெரு நன்மைக்காக ஒரு சிறிய பொய் சொன்னால் பரவாயில்லை என்று உலகத்தமிழ் மறையை எமக்குத்தந்த பொய்யாமொழிப்புலவன் வள்ளுவன் உரைத்திருக்கின்றான்.இதன் மூலம் மற்றவர் பெருநன்மை அடைந்துகொள்ளமுடியும் என்பது வள்ளுவனின் நம்பிக்கை.தன் ஆணித்தரமான கருத்தை வலுவூட்ட அதை அவர் ஒரு பெரிய தர்மம் என்று குறிப்பிட்டிருக்கின்றார்.
மொத்தத்தில் பொய் சொல்லக்கூடாது என்பதுதான் வரையறையாக இருக்கிறது இந்த உலகத்தில்.
ஆனால் ஒருத்தியை காதலிக்கவும் திருமண பந்தத்தில் இணைத்து வைக்கவும் ஆயிரம் பொய் கூட சொல்லிவிடலாம் என்கிறது இந்த உலகம்.
பொய்யை சொல்லி பின்னர் வாழ்கையின் போது குடும்பங்கள் அந்த பொய்யை அறிந்து சின்னபின்னமாகி போவதும் தவிர்க்கமுடியாததொன்றாகி இருக்கிறது .
அதற்காக "நீ ரொம்ப அழகி என்றும்,உன்னை விட இந்த உலகத்தில் யாரும் இல்லை என்றும் பொய்யைத்தான் சொல்ல போறேன் என்று கூறிவிட்டு பொய்யை சொல்லலாமா?
உன்னைப்பற்றி சொல்லவதெல்லாம் பொய் என்று சொல்லிவிட்டு காதலிக்கு அந்த ஆணே பொய்யை சொல்கின்றான் என்றால்,அதை அந்த காதலையும் நம்புகின்றாள் என்றால் இந்த பொய்யான உலகத்தில் இதுதான் பொய்யான வாழ்க்கையோ?என்ற கேள்வி வரத்தான் செய்கிறது

பொய் சொல்ல போறேன் பொய் சொல்ல போறேன் நீ ரொம்ப அழகி யெடி