சூரன் போர் - மகிழ்ந்த நினைவுகள்


கந்த சஷ்டி ஆரம்பித்துவிட்டால் எப்ப சூரன் போர் வரப்போகிறது என்பது தான் சிறுவர்களுக்கு எண்ணமாக இருக்கும்,ஏன் இளையோர்களுக்கு அந்த சூரனை தோள்தூக்கி ஆடுவதற்கு சந்தோஷமான இருப்பார்கள்,சகல கோவில்களிலும் சூரன் இல்லாவிட்டாலும் அயல் கிராமத்து இளைஞர்கள் என்று எல்லோரும் நட்புடன் உஷாராகிவிடுவார்கள்,” `முன்வீதியில் யார்தூக்குவது’,`பின்வீதியில் எப்படி சூரனை ஆட்டுவது’ ”, என்று பெரிய பெரிய திட்டங்கள் எல்லாம் போட்டு கந்தஷஷ்டி ஆரம்பமே சூரன் போருக்கான தொடக்கம் என்பது போல இருக்கும் அவர்களின் செயற்பாடுகள்.உண்மையிலும் தேவர்களிற்கு சூரனால் வதைக்கப்பட்ட கொடுமைகளால் சூரனை வதம் செய்வதற்காக ஆறு நாள்கள் கந்தசஷ்டியாகவும் இறுதி நாளில் சூரனை சங்காரம் செய்து அவர்களிற்கு விடுதலை பெற்றுக்கொடுத்த நாளையே இந்த சூரன் போராக பாவனைசெய்யும் நிகழ்வாக வருடம்தோறும் நடாத்தப்பட்டுவருகிறது,

அப்படியாக சூரன் போர் என்றால் எல்லோருக்கும் மகிழ்ச்சிதான்.இளையவர்களும் சிறுவர்களும் ஏன் பெரியவர்களும் ஆயத்தமாகிவிடுவினம்.
தாரகாசுரன்,சிங்கமுகாசுரன் மற்றும் சூரபன்மன் என்பவர்கள் முருகப்பெருமானுடன் போர் புரியப்போகிறார்கள்,அதற்கு அந்த சூரர்கள் எப்படி எப்படி முன்னேறி முன்னேறிப்பாய்ந்து முருகனிடம் செல்வார்கள் என்றும் முருகனோடு போர் புரிந்தார்கள் என்றும் அவர்கள் எப்படி தேவர்களை வதைத்தார்கள் என்பதைக்காட்ட வந்திருக்கும் மக்களை சூரர்கள் வதைப்பது போன்று உருவகப்படுத்தும் படியாக இளையவர்கள் தயார்ப்படுத்துவார்கள்.அதற்கு பழைய பழைய காலங்களில் சூரன் ஆட்டுவதில் அனுபவம் வாய்ந்த பெரியவர்கள் அவர்களுக்கு வழிகாட்டுவார்கள்,அதைவிட எங்கடை பொடியளும் சில நுணுக்கங்களை கையாள்வார்கள்.

சூரன் ஆட்டம் ஆரம்பத்தில் பறையொலி எழுப்பபடும்,அது முருகனை போருக்கு வா வா என்று அழைப்பதற்காக எழுப்பப்படும் ஒலி என்று தாத்தாமார் சின்னப்பொடியளுக்கு சொல்லுவினம்,உண்மையில் அந்தப்பறையொலியில் அந்தக்கால அரசர்கள் போருக்கு எழுப்பும் ஒலிகளை நாங்கள் சில திரைப்படங்களில் கேட்பதைப்போலவே அவர்களும் போருக்காக ஒருவகையான தாளவமைப்பில் பறையடிப்பார்கள்.அதைகேட்டுவிட்டு எங்கள் தாத்தா அது சூரன்போர் ஆரம்பமாகபோகிறது என்று சொல்வார்,அதாவது அந்த பறையொலி முருகனை சூரன் போருக்காக அழைப்பதுபோல் இருக்கும்.அதைகேட்டபடியே கோவிலுக்கும் சென்றுவிட்டால் யானைமுகத்தோடு தாரகாசுரன் முன்வீதியில் காவல் இருப்பார்.உள்வீதியில் வெகு நிம்மதியாக முருகன் பூஜைகள் நடக்கும்,மிக ஆறுதலாக தவில் நாதஷ்வர வாத்தியங்கள் முழங்க முருகப்பெருமான உள்வீதி வலம் வந்து வெளிவீதிவருவார்,அது மட்டும் தாரகாசுரன் முருகப்பெருமான போருக்காக அழைக்கும்படியாக பறையொலி ஒலித்துக்கொண்டேயிருக்கும்,

முருகனும் வந்துவிட்டார்.

இளையவர்கள் நல்ல ஒரு வேட்டியை சண்டிக்கட்டும் கட்டி ஆயத்தமாகி விடுவார்கள்.சூரனின் தலையாட்டுவதற்கு ஒருவர் சூரனுக்கு பின்னால் ஏறியிருப்பார்,அவருக்கோ சூரனின் தலையை இரண்டுபக்கமும் ஆட்டுவதுதான் வேலை,ஆனால் சூரனின் ஆட்டத்துக்கு அமைவாக அந்த தலையை ஆட்ட வேண்டும் என்பதும் ஒரு விடயம்.

சரி தாரகாசுரன் ஆட்டம்,தாரகாசுரன் யானைமுகத்தோடு மக்களை வதம் செய்ய ஆரம்பிப்பார்,அந்தப்பக்கம் செல்வதும் இந்தப்பக்கம் செல்வதும் என்று ஒரு ஆட்டம்,இருப்பதும் எழும்புவதும் பதிப்பதும் தூக்குவதும் என்று பல ஆட்டம்.என்று ஆட இறுதியில் முருகன் சங்காரம் செய்வதாக தாரகாசுரனின் தலை வெட்டப்படும்,


தொடர்ந்து சிங்கமுகாசுரன் ஆட்டம்.இங்கும் மக்களை நோக்கிச்சென்று வதம் செய்யும் ஆட்டங்கள்,ஒரு கரையாக ஓடிச்சென்று மக்கள் நடுவில் சூரனை தூக்கியாட்ட மக்கள் அல்லோலகல்லோலப்பட்டு ஓடுவதினூடாக மக்களை வதைத்ததாக உணர்த்தப்படும்.ஒருகட்டத்தில் சூரனை தூக்கி தூக்கு எறிவார்கள் இளையவர்கள், தம்பிமார் கவனம் கவனம் என்று பெரியவர்கள் பின்னுக்கே நிப்பினம்,அப்படி ஒருகட்டத்தில் சிங்கமுகாசுரனின் தலையும் வெட்டப்படும்,ஆனால் சிங்கமுகாசுரன் இறந்தாலும் மீண்டும் மீண்டும் உயிர்க்கும் வரம் பெற்றிருந்தவனாகையால் மீண்டும் சிங்கமுகாசுரன் தலைகொழுவி மக்களைவதைப்பான்,திரும்பவும் ஆட்டம் சிங்கமுகாசுரனாட்டம்.இப்படியாக மூன்று முறை உயிர்த்து சிங்கமுகாசுரனை தலை வெட்டப்படும்,

தொடர்ந்து சூரபன்மன் ஆட்டம்,
சூரன் தான் எல்லோருக்கும் அண்ணன்,அவன் தான் சிங்கமுகாசுரன் மற்றும் தாரகாசுரனை போருக்கு அனுப்பிவைத்தவன்,அவர்களின் இறப்பிற்குபிறகு போர்க்களத்திற்கு விரைந்தவன் சூரபன்மன்,பல்வேறுவரங்களையும் பெற்றவன்,அவனை அழிக்கமுடியாது என்பது எல்லாம் ஐதீகபுராணங்கள் சொல்லும்விடயங்கள்


சரி சூரபன்மன் ஆட்டம்,பொதுவாக வடக்குவீதியில்தான் எல்லாக்கோவில்களிலும் ஆரம்பிக்கும்.சூரபன்மனுக்கென்றே சில ஆட்டமுறைகளை வைத்திருப்பார்கள் இளையவர்கள்,ஏனென்றால் மற்ற அசுரர்களிலிருந்து அதாவது அவன் தம்பிமார்களிடமிருந்து வேறுபடுத்திக்காட்டவேண்டும் என்பதற்காக.அதுமட்டுமல்லாமல் சிங்கமுகாசுரன் பல்வேறுதடவைகள் உயிர்த்துவந்து முருகப்பெருமானோடு போர்புரிந்ததைப்போன்று சூரபன்மனும் பல்வேறு வடிவங்களெடுத்து போர்புரிந்தவன்,அவையெல்லாம் அந்த சூரன்போரில் உருவகப்படுத்திக்காட்டுவார்கள்.கடலாக வந்ததை நீல சேலையால் மூடிவந்தும் வானமாக வந்ததையும் நீலை சேலையால் மூடிவந்தும் பறவையாக மாறிவந்ததை பறவையின் தலையை சூரனின் தலைக்குப்பதிலாக மற்றிவந்தும் முருகப்பெருமானுடன் போர் புரிதலைக்காட்டுவார்கள்.அதற்குள் ஆட்டங்கள் பலவகையாக இருக்கும்.


முழந்தாளில் நடந்துவருவதும் அதை முருகப்பெருமான் கண்டபின் அவருக்கும் பின்னால் சென்று சுழன்று வருவதும் தூரத்துக்கே ஓடிச்சென்று மக்களை வதைத்து வதைத்து கடைசியில் முருகனுக்கு கிட்டவந்ததும் அவரை நோக்கித்தூக்கி தூக்கி போர் புரிவதாக சூரன் ஆட்டுவார்கள்.மிகவும் அழகாக இருக்கும்,இந்த ஆட்டங்களுக்கு அமைவாக பறையொலி ஒலித்துக்கொண்டே இருக்கும்,அந்த தாளக்கட்டுமானத்துக்கு அமைவாக இளையவர்கள் ஆட்டுவார்கள்.






இப்படியாக சூரன் பல்வேறுவடிவக்கள் எடுத்து போர்புரிந்தபடியிருக்க இறுதில் ஒரு மாமரமாக மாறியபடி இருக்கும் ஒரு ஆட்டம்,அந்த வேளையில் பார்க்க வேணும் ”முன்னுக்கு மாமரக்கிளை கொண்டு ஆட்டுபவரை”.பறையின் தாளத்துக்கு மாமரக்கிளையையும் சேர்த்து,அதுதான் சூரன் போரின் இறுதியாட்டம்,ஆகவே மாமரக்கிளையோடு சூரனையும் முன்னோக்கியும் பின்னோக்கியும் அங்குமிங்குமாக ஆட்டுவார்கள்,மிகவும் ரசிக்கக்கூடியாதாக இருக்கும்,இறுதியில் மாமரக்கிளை அரைவாசியாக்கப்படும்,பின்னர் சேவல் கொடியும் மயில் வாகனமும் முருகப்பெருமானிற்குக்கிட்ட வைப்பார்கள்,அது சேவலும் மயிலுமாக சூரபன்மன் மாறினான் என்றவாறான புராணக்கதையை நினைவுபடுத்தும்,அதன் பின் மக்கள் எல்லோரும் சூரனை சங்காரம் செய்துவிட்டதாக உணர்வு,இறுதியில் சங்காரம் செய்த மாவிலையை தங்களோடு எடுத்துக்கொள்வார்கள்.
இப்படியாக கந்தசஷ்டியின் காலங்கள் சூரனை சங்காரம் செய்தலோடு நிறைவுபெறும்,அந்த ஆறு நாள்களும் சூரனை வதம் செய்யப்புறப்பட்ட நாள்கள்.வதம் செய்து தேவர்களுக்கு சுகம் தந்த நாள்கள்.

நானும் இந்த சூரன் போர் எதையுமே விட்டதில்லை,எங்களூரில் தச்சந்தோப்பு சிந்தாமணி விநாயகர் ஆலயத்தில் இந்த சூரன் போர் சிறப்பாக நடைபெறும்,சின்னானாக இருந்த காலத்தில் ஒவ்வொரு தடவையும் என்ரை தாத்தாவையும் விடாப்பிடியாக கூட்டிக்கொண்டு போய்விடுவன்.ஆனால் தூரத்திலைதான் நிண்டு பார்க்கிறது பாருங்கோ,ஏனெண்டால் சூரனுக்கு பயம். நான்கு பெரும் வீதியிலை சூரனாட்டம் ரொம்ப சிறப்பாக நடக்கும்,



கொழும்பிலும் பல்வேறு ஆலயங்களிலும் இந்த சூரன் போர் ஆட்டங்கள் வெகு சிறப்பாக நடைபெறுவது வழமை,இங்கிருக்கும் புகைப்படங்கள் கொழும்பு நகர் பம்பலப்பிட்டியா கதிரேஷன் ஆலயத்தில் இந்த வருடம் இடம்பெற்ற சூரன்போர் ஆட்டத்தின் ஒரு சில காட்சிகள்,சிறப்பாக இடம்பெற்றதாக அறியக்கிடைகிறது,மக்கள் எல்லோரும் கந்தசஷ்டிகாலங்களில் விரதம் அனுஷ்டித்து சூரங்காரமும் கண்டு அருள்பெற்றிருக்கிறார்கள்,நன்று

இந்த புகைப்படங்களை கரவைக்குரலுக்கு அனுப்பிவைத்த யோஹா ஆனந்தி அவர்களுக்கும் நன்றி

யாழ்தேவியில் நான்


யாழ்தேவியில் நடந்து முடிந்து கொண்டிருக்கும் வாரத்தின் நட்சத்திரப் பதிவராக கரவையின் ஓசையை அறிவித்திருக்கிறார்கள் அதன் நிர்வாகக்குழு. மிகமகிழ்ச்சியைத்தருகிறது.
இப்படியான விடயம் பதிவர்களின் எழுதும் ஆர்வத்தைக்கூட்டும் என்றால் மிகையாகாது.வேலைப்பளு என்றவாறாக நேரத்தில் இடைவெளிகள் தேடி அதில் நிம்மதி தேடும் இங்கிலாந்து மண்ணிற்கு வந்த பின் இந்த சிறப்பளிக்கப்படிருக்கிறது.அதாவது பதிவுகள் இன்னும் வரவேண்டும் என்று கரவைக்குரலுக்கு சிறப்பான எச்சரிக்கை விடப்பட்டிருக்கிறது.வேலைகள்,படிப்பு எண்டும் நேரமில்லாமல் போச்சு எண்டும் எல்லோரும் சமாளிப்பதுபோலவே சமாளிக்கும் அந்தஇந்தக் கதையைவிட்டுவிட்டு தொடர்ந்தும் பதிவுகள் வரவேண்டும் என்று பலத்த எச்சரிக்கை கரவைக்குரலுக்கு யாழ்தேவியால் விடப்பட்டிருக்கிறது.
என்ன அப்படித்தானே.

சிரிப்பெல்லோ வருகிறது,ஹிஹிஹிஹிஹிஹிஹி..........

"விடைபெற்ற அமீரகம் வரவேற்ற இங்கிலாந்து" என்ற பதிவில் நான் முதன்முதல் இங்கிலாந்தில் பட்ட அனுபவத்தையும் பகிர்ந்துகொள்ள பட்ட கஷ்டத்துக்கு ஊக்கம் தரும் பரிசு பாருங்கோ இது.உண்மையிலை அந்தப்பதிவை பார்த்துவிட்டு எல்லாரும் வந்து கேட்ட கேள்வி " எங்கை இந்த பென்னாம்பெரிய காசை தண்டமாக கட்டினீங்க"எண்டுதான். யாரும் வந்து யாரடா அந்த பெரிய மனுஷனுக்கு பக்கத்திலை இருந்தது எண்டு கேட்கவே இல்லை,சில பேர் தொலைபேசி அழைப்பெடுத்தாலும் இதுதான் கேள்வி. அப்படி ஆரம்பமே சுவாரஸ்ய அன்பவங்கள்,அவற்றை பதிவிட்டவுடன் யாழ்தேவியும் என்னை நட்ச்த்திரிற பதிவராக அறிவித்திருக்கிறார்கள். வலைப்பதிவின் வளர்ச்சிப்பாதையில் அவர்களால் கொடுத்த இந்த மதிப்பு மிக்க கௌரவமாக நான் பார்க்கிறேன்.என்றும் நன்றியுடையவனாவேன்.

இன்னொருவிடயம்.

யாழ்தேவியில் தரம்கொடுக்கப்பட்ட பதிவர் என்ற அடிப்படையில் என்னால் அதற்குள் என் பதிவுக்களை இணைப்பது மற்றும் வேறு சில வரையறைகள் என்பவற்றை தெரிந்துகொள்ள ஆர்வமுடையவனாக இருக்கிறேன்.ஏனென்றால் சிலவேளைகளில் மீளவும் என்னை பதிவு செய்யும்படி சிலவேளைகளில் கோரப்படுகிறது.அதனால் என்னைப்போல வேறுசில பதிவர்களுக்கும் அந்த கஷ்டம் உணரப்பட்டிருக்கலாம் என்ற வகையில் அதை யாழ்தேவியிடம் அறிய ஆவலாக இருக்கிறேன்.

மிக நன்றி யாழ்தேவி.

விடைபெற்ற அமீரகம்- வரவேற்ற இங்கிலாந்து

பல்வேறு அனுபவங்களைத்தந்த அமீரகத்துக்கு அண்மையில் விடைகொடுத்து தொடர்ந்து இங்கிலாந்து மண்ணில் சில காலம் உலாவுவதற்கு அனுமதிகிடைத்திருக்கிறது,
இங்கு இங்கிலாந்து வரவேற்றிருப்பது ஒரு வகையில் இருக்க அமீரகத்தில் கிடைத்த அனுபவங்களோ மிக அதிகம்,இங்கிலாந்தில் எப்படியான அனுபவங்கள் கிடைக்குமோ என்ற எதிர்பார்ப்பும் அதேபோல அவற்றுள் பல விடயங்கள் ”அப்படி இருக்கும் இப்படி நடக்கும்” எம்முடன் கூடியிருப்போரால் எடுத்துச்சொல்லப்படுகின்றன என்பது ஒருபுறமிருக்க அமீரகத்துக்கான வருகையில் கிடைத்த அனுபவங்கள்,அங்கு வாழ்ந்த காலங்களில் தந்த அனுபவங்கள்,பார்த்த விடயங்கள்,ரசித்த அம்சங்கள், மெய்சிலிர்த்த அம்சங்கள்,கேட்கவேண்டும் என்று நினைத்த பல கேள்விகள்,கேட்ட சில கேள்விகள்,அதைவிட வயிறுகுலுங்க சிரித்த விடயங்கள் என்று பல விடயங்கள் விடைபெற்ற அமீரகத்திலடங்கியிருக்கின்றன.


அவற்றில் சொல்ல முடிந்தவற்றை நினைவிலிருப்பவற்றை தொடர்ப்பயணமாக பாலவனத்தில் பயணம் என்று உங்களுடன் பகிர்ந்துகொள்ளலாமென்று நினைக்கின்றேன், நேற்றுவரை மிக்க சூட்டுடன் வாழ்ந்து இன்று திடீரென்று குளிராக்கினால் எப்படி ஒரு பொருள் இறுகிப்போகுமோ அப்படியாக இறுகிவிட்டேன் என்றாலும் உங்கள் ஆதரவுடன் அந்த பயணம் தொடரும்,
அது பாலைவனத்தில் ஒரு பயணம்,

இங்கிலாந்து வந்தவுடன் பல சுவாரஷ்யமான விடயங்கள் இருந்தாலும் சில சுவாரஷ்யமான அனுபவங்கள்,நாட்டுக்கு வந்து கைவிரலால் எண்ணக்கூடிய நாள்கள் மட்டுமே,அதாவது நான்கு நாள்கள்,



அதில் நானும் என் மனதும் ரசித்துச்சிரித்தவை பல,அவற்றுள் சில இவை

பொதுவாக வளைகுடா நாடுகள் வெப்ப நிலை அதிகமான நாடுகள் என்பது எல்லோருக்கும் தெரியும்,சூட்டிலிருந்து வந்த நான் இப்ப கடும் குளிராக்கிடக்கு எண்டு சொல்லுது என் மனசு,கடும் வெப்பநிலையிலிருந்து சடுதியாக மாறிய மாற்றம் என்பதனாலோ என்னவோ,ஆனால் இது தான் குளிர் காலத்தின் ஆரம்பம் என்று எல்லாரும் சொல்லுகினம்,
ஐயோ கடவுளே இதைவிட இன்னும் குறையப்போகுதோ எண்டு யாரையும் விடாமல் கேட்டுப்போட்டன்,

மற்றது முதற்கட்டமாக 20 ஸ்ரேலிங்க் பவுண் தண்டம் கட்டிப்போட்டன் பாருங்கோ, நான் விட்டது பிழையோ அவர் விட்ட பிழையோ யார் விட்ட பிழையோ எனக்குத்தெரியாது,ஆனால் கட்டிப்போட்டன்,முந்த நாள் தான் வந்தன் எண்டு சொல்ல கேட்டானே அவன்,”இல்லை தா“ எண்டு கேட்டான் நான் குடுத்திட்டன்.”ஏன் குடுத்தது எப்படி குடுத்தது” என்பது எண்ட விசயம் அது என்னோடையே இருக்கட்டும்,ஆனால் ஒண்டு மட்டும் சொல்லுறன் எந்த ஒரு விசயத்தையும் ”பிளான்”(Plan) பண்ணி செய்யிறது மட்டுமில்லாமல் எல்லாத்தும் ஓம் எண்டு சொல்லி தலை மட்டும் ஆட்டக்கூடாது எண்டது தான் இப்ப நான் எடுத்த முடிவு பாருங்கோ

அதைவிட இன்னுமொரு சுவாரஷ்யவிடயம்
பொதுவாக இங்கு ரயில் வண்டியில் தான் எல்லோரும் பயணம்,
அப்பிடி ஒருநாள் நானும் ஒரு பயணி,எனக்கு பக்கத்திலை ஒரு பயணி,
”அட இவரை எங்கையோ கண்ட மாதிரி இருக்கே” எண்டு என்னுடைய மனசு சொல்லுது, நானும் அவரை வைச்ச கண் வாங்காமல் பார்க்கிறன்,அப்ப அவரும் பார்க்கிறார்,ஆனால் ”கதைக்கட்டோ” எண்டு மனசு சொன்னாலும் அந்த மனமே தடுக்குது ”சீ சீ வேண்டாம்” எண்டு,
ஆனால் அந்த மனுசனோ நான் பார்க்க ரயில் வண்டியின்ரை முகட்டை பார்க்கிறார்,
”என்னடா இந்த மனுசன் இப்படி செய்யுது” எண்டு ”இவர் யார்”எண்டு நினைச்சு பார்க்கிறன்,
”எனக்கு படிப்பிச்ச வாத்தியார் யாருமோ” எண்டும் என்ரை மனசு கேட்கிறது,
கடைசியிலை தான் அவர் யார் எண்ட முடிவுக்கு வந்தன் பாருங்கோ,
அந்த மனுசனை நான் ஒரு நாள் மேடையிலை பார்த்திருக்கிறன்,ரி வி வழிய அவரைப்பற்றியும் அவர் கருத்துச்சொல்லுற விசயங்கள் கேட்டிருக்கிறன்,ஆனால் அவருக்கு பக்கத்திலை நான் இருப்பன் எண்டு கனவிலையும் காணவில்லை,அப்பிடி அந்த மனுசன் பெரிய மனுசன்,எங்கடை நாட்டிலை எண்டால் அவர் எனக்கு கிட்ட இருக்கவே மாட்டார்,அந்த மனுசன் இண்டைக்கு எனக்கு பக்கத்திலை இருக்குது எண்டு நினைச்சுத்தான் அந்த எண்ணம்,
அவர் யாருமில்லை ””சுப்பர்ஸ்ரார் ரஜனிகாந்தின் விருதுபெற்ற ஒரு திரைப்படமும் அதேபெயரை அந்தக்கால திலகத்துக்கும் அதுதான் பெயர்”,எனக்குப்பக்கத்திலை இருந்தவருக்கும் பெயரின் முதல் மூன்று எழுத்துக்களும்”” அதுதான் பாருங்கோ,
உங்களுக்கு விளங்கியிருக்காமல் விடுமா என்ன?
அவரிடம் பலகேள்விகள் கேட்கலாம் என்று நினைத்திருந்தாலும் கேட்க முடியவில்லையே என்ற ஆதங்கம்,
ஆனால் அவர் என்னை ஏன் கடைக்கண்ணால் பார்த்தார் எண்டு தான் எனக்கு இன்னும் விளங்கவில்லை,????

இப்படியாக வந்துவிட்ட நான்கு நாள்களில் வந்துவிட்டவற்றுள் சில இவை,வந்தாச்சு எல்லோ
எல்லாமே அனுபவித்து ரசிக்க வேண்டும்,

ஏலவே குறிப்பிட்டதைப்போல பாலைவனத்தில் பயணம் காலங்கள் எல்லாம் கூடிவர தொடர்ந்து வரும்,மீண்டும் சந்திக்கும் வரை வணக்கம்.

வல்லிபுரத்தில் கடல் தீர்த்தம்


என்ன அடிக்கடி வல்லிபுரத்தானை பற்றி சொல்லுறன் எண்டு நினைக்கவேண்டாம்,
வல்லிபுரத்தை பற்றி இதற்குமுதல் வல்லிபுரமும் ஞாயிற்றிக்கிழமையும் என்ற பதிவினூடாக குறிப்பிட்டிருந்தேன்,ஞாயிற்றிக்கிழமை என்றால் அந்த ஆலயத்திற்கு சிறப்பு,அதுவும் ஆவணி ஞாயிறு என்றால் அதைவிட சிறப்பு,சிறப்பான தினத்தில் அதைப்பற்றியும் அங்கு கண்ட சுவாரஷ்யமான சம்பவங்கள் பற்றியும் சொல்லாமலும் இருக்கமுடியவில்லை,அதை நீங்கள் இங்கே அழுத்துவதன் மூலம் வாசிக்கமுடியும்.
அதில் சிலவற்றை சொல்லவில்லை என்ற குற்றச்சாட்டுக்கூட எனக்கு இருந்தது,பின்னூட்டத்தில் வந்தியத்தேவன் குறிப்பிட்டதைப்போலவே வல்லிபுரக்கோயிலில் தரிசனம் செய்த நண்பர்கள் பலர் மின்னஞ்சல் மற்றும் அரட்டை அடிக்கும் சந்தர்ப்பங்களில் குறிப்பிட்ட சில சுவாரஷ்யமான விடயங்களுக்கும் இடங்கொடுக்கும் வகையில் இதை எழுதலாமென்ற எண்ணம்.ஆனால் அவை யாரையும் மனம் நோகடிக்கும் வகையில் சுட்டியோ குத்தியோ அல்லாமல் வெறும் ரசித்த கண்ட கேட்ட,பார்த்த விடயங்களையும் உள்ளடக்கி தராலாம் என்று நினைக்கின்றேன்

வல்லிபுரத்தானும் ஞாயிற்றுகிழமையும் என்பதன் தொடர்ச்சியாக வல்லிபுரத்தானுக்கு கடல் தீர்த்தம் என்பதும் யாழ் மக்களிடையே ஒரு மிகவும் பிரசித்தமானதொன்றாகும்,முன்னைய காலங்களில் தென்பகுதி மக்கள்கூட வந்து செல்வார்களாம்,ஆனால் நாட்டின் சூழ் நிலைகளால் அதை இக்காலத்தில் அவதானிக்கமுடியவில்லை,மிகக்குறைவு என்றுதான் சொல்லலாம்.
யாழ்ப்பாணத்தின் சகல பாகங்களிலும்மிருந்து பெரிய சனத்திரளே படையெடுக்கும்,அதற்கு சாட்சியாக யாழ்-பருத்தித்துறை வீதி எப்போதுமே மக்கள் அலைஅலையாக சென்று கொண்டிருப்பதை அவதானிக்கமுடியும்,தூரத்து மக்கள் குழுக்களாக வாகனங்களிலும் இளைஞர் கூட்டம் தங்கள் தங்கள் சைக்கள்களிலும் அதைவிட சுற்றுப்புற கிராம மக்கள் நடை நடையாகவும் வல்லிபுரத்தை நோக்கி திரண்டுகொண்டேயிருப்பர்,ஆலயத்திலிருந்து கண்ணுக்கெட்டியதூரத்திலிருந்து சனங்கள் திரண்டு கொண்டிருப்பதை அவதானிக்கமுடியும்,
இப்படியாக யாழின் பல்வேறு பகுதிகளிலுமிருந்து மக்கள் குவிந்துகொண்டிருப்பதை அவதானிக்க முடியும்


ஆலயத்துக்கு வந்த மக்கள் வங்கக்கடலை நோக்கிய பயணத்தை ஆரம்பிப்பர்.அவ்வப்போது பம்பல்களும் சிலவேளைகளில் ஓடுவதும் பாடுவதுமாக கடலை நோக்கி நடக்கத்தொடங்குவர்,கற்பாதைகளும் புற்பாதைகளும் முட்பாதைகளும் மண்மேடுகளும் என்று பல்வேறு ரகமான பாதைகள்,ஆண்கள் சால்வைகளை அவிழ்த்து தலையிலே மூடுவதுமுண்டு,பெண்கள் சுரிதாரின் மேலிருக்கும் துணியால் தலையை முடியபடி நடக்கத்தொடங்குவர்,இப்படியாக வல்லிபுரத்தானின் வாசலில் நின்று பார்க்கும்போது மக்கள் செல்லும் வழி அங்கும் இங்கும் வளைந்து நெளிந்து செல்வதால் பெரியதோர் பாம்பு போன்ற வடிவத்தை ஏற்படுத்தும்.வெள்ளைவெளேரென்று ஆண்கள் உடுத்திருக்கும் வேட்டிகளுக்கிடையில் வண்ண வண்ண உடைகள் அணிந்திருக்கும் பெண்களின் அழகு அந்த பாம்பின் அழகை மெருகூட்டும்,மள்ளாக்கொட்டைகளும் சோளப்பொரிகளும் வாயிலே கொறித்தபடி அழகிய பாம்பின் அசைவு ஆகா என்ன அற்புத அழகு என்று சொல்ல வைக்கும்,

வல்லிபுரத்தில் விற்கபடும் தோசையை சொல்லவில்லை என்ற ஆதங்கம் வெளிக்காட்டப்பட்டது,உண்மையில் நான் சொல்ல தவறிவிட்டேன்,தோசையுடன் ஒரு சம்பல்,அதுவே போதும் நின்றபடி பதினைந்து தோசகளை வெட்டுவதற்கு,அதைவிட சாம்பாறும் கலந்து எ்ன்றால் கேட்கவா வேணும்,இளைஞர் படைகளே அங்குதான் இருக்கும்,வயது வந்தவர்வர்களும் கூட அங்குதான் நிற்பார்கள்,சிலவேளைகளில் வீட்டின் உணவில் சுவைக்குறைவோ என்னவோ? ஆனால் அதன் சுவை நாக்கை சுரக்க வைக்கும்,அது தாமரை இலையில் அதன் பெரிய வடிவத்திற்கு உருவாக்கப்பட்டு கொடுக்கப்படும்,

இந்த கடல் மற்றும் தேர் திருவிழா காலங்களில் மணிக்கடை,பொரிக்கடை,புடவைக்கடை,ஐஸ்கிறீம் கடை என்று கடைகளுக்கு குறைவில்லை,இங்கும் தான் எம் இளைஞர்கள் கைவரிசையை காட்டுவார்கள்,இது அவர்களின் நகைச்சுவையாக எடுக்கப்படும்,ஆனால் அது கடைக்காரருக்கும் தெரியாமலில்லை.ஏழு தரம் ஐஸ்கிறீம் குடிக்கும் அன்பர்கள் ஒருதரமே கணக்கு கட்டுவர்,இதை பிடிப்பதற்கு என்னதான் முதலாளிகள் முயன்றாலும் அவர்களால் அப்பாவிகளை மட்டுமே பிடிக்க முடியும் என்பது அவர்களின் சாமர்த்தியத்துக்கு உதாரணம்,
எம்மவர்களின் தகவல்கள் அடிப்படையில் நல்லூர் ஆலயத்துடன் சேர்ந்திருக்கும் ஒரு குளிர்களியகம் கூடியளவு பாதிக்கப்பட்டிருக்கிறது என்று அறியக்கிடைத்தது,பின்னர் இதில் வரும் அனுபவங்களை சுவாரஷ்யமாக பகிர்ந்துகொள்வர் நண்பர்களுக்கிடையில்,”நான் அப்படிச்செய்தேன்,இப்படிக்கிழித்தேன்” என்று மார்தட்டுவர் வீரவீராங்கனைகள்,

இன்னுமொரு விடயம் இருக்கிறது வல்லிபுரத்தின் தெற்கு வீதியில்,ஒரு சாஸ்திரி இருப்பார்,உருத்திராட்ச மாலைகள் சூடியபடி எப்போதும் ஏதாவது ஒரு புத்தகம் வாசித்தபடி,யாரும் சாஸ்திரம் பார்க்க சென்றவுடன் இறைவனின் பெயர் சொல்லி ஆரம்பிப்பார் சாஸ்திரம் சொல்ல,அந்த் ஆலயத்துக்குப் போகிறவர்கள் ஒருதடவையாவது அவரி சந்த்திக்காமல் செல்வதில்லை என்றுதான் சொல்ல வேண்டும்,அதுவும் ஒருகாலத்தில் தென்னிலங்கையிலிருந்து வந்து போகக்கூடிய காலங்களில் அவரிடம் எல்லோரும் வந்துசெல்வது வழமை,உண்மையில் பணத்திற்கான எதிர்பார்ப்பின்றி இருக்கும் நல்ல மனிதர்களில் அவரும் ஒருவர்.

இதைவிட கடல் தீர்த்தமாடுவதற்காக சுவாமியை தூக்கிக்கொண்டு கடலை நோக்கி ஒடும் அழகு பக்தி உணர்வைக்கூட்டும் என்றால் ஐயமில்லை,கோபாலா கோவிந்தா கோபாலா கோவிந்தா என்று வானம் அதிரும்படியாக எல்லோரும் முழங்க இளைஞர்கள் தூக்கிக்கொண்டு ஓடுவார்கள்,அவர்களின் பின்னே எல்லோரும் ஓடுவதும் உண்டு.இடையிடயே விஷ்ணுவின் பாடல்களும் பாடியபடி கடலை நோக்கி ஓடுவார்கள்,



கடலுக்கருகில் இளைஞர்கள் தங்களுக்குள் கூடியிருந்து நகைச்சுவைகள் பகிர்வதும் கும்மாளம் அடிப்பதுமாக தங்கள் காலத்தை சிரிப்புடனே களி(ழி)ப்பர்.பெண்களும் தங்க கூடிக்கதைப்பதுமாக (கூடுதலாக மற்றவையின் நகைகளும் உடுப்புகளும் தான் அவர்களின் கதைகளின் தலைப்பாக இருக்கலாம்,ஆனால் யாருக்கு உண்மை தெரியும்?) இருப்பர்,குழந்தைகள்,சிறியவர்கள் கடலடியில் மண் கிண்டி ஓடியாடி துள்ளித்திரிந்து விளையாடுவதுமாக தங்கள் ஆனந்தத்தை வெளிப்படுத்துவர்,


தீர்த்தப்பந்தல்கள் அங்குமிங்கும் எல்லோரையும் வரவேற்றபடி இருக்கும், நடை நடந்து களைத்துவந்த மக்களுக்கு தாகம் தீர்க்கும் உன்னத பணியில் சில அடியவர்கள்,அதில் கிடைக்கும் சுவை எந்த ஒரு பதார்த்தத்திலும் கிடைக்காது என்றால் மிகையாகாது.


இப்படியே பக்திக்கு பக்தி, நகைச்சுவைகளுக்கு நகைச்சுவை,கும்மாளத்துக்கு கும்மாளம் என்று கடலுக்கருகில் எல்லாம் மிக அற்புதமான நேரங்கள் அந்த மாலை நேரம்.

இதைப்பற்றி வந்தியத்தேவன் கூட ஒரு பதிவில் வெளிப்படுத்தி இருக்கிறார்,நான் அதை அறிந்துகொண்டேன்அதை நீங்கள் கீழே உள்ள இணைப்பை சொடுக்கி பாருங்கள்.
அதைவிட என் பார்வையில் நினைவில் வந்தவற்றை ஒரு சிறிய பதிவாக்கியிருக்கிறேன்,
வல்லிபுர ஆழ்வார் கடல் தீர்த்தம்


படங்கள்:சுபராஜா பாஸ்கரசோதி நன்றி

கடலோடிகளின் கதை சொல்லும் நாவல் தரும் கே.எஸ்.பாலச்சந்திரன்




ஈழத்திலிருந்து பிரபலமான கலைஞர்களுள் தனக்கென தனியான முத்திரை பதித்து உலகத்தின் மூலை முடுக்கெங்கும் அறியப்பெற்ற கலைஞர் கே.எஸ்.பாலச்சந்திரன் அவர்களின் இன்னுமொரு படைப்பான ஒரு நாவல் கனேடிய மண்ணில் வெளிவரவிருக்கிறது,
மகிழ்ச்சியான விடயம்,அதற்கு காரணங்கள் பல,

முக்கியமாக குறிப்பிட்டுச்சொல்லக்கூடியதாக
ஒன்று என் மண்ணில் பிறந்து ஒரு பிரபல்யமான கலைஞனின் படைப்பைப்பற்றியும் அவரைப்பற்றியும் என் குரலாலும் ஒரு பதிவிடக்கிடைத்த சந்தர்ப்பம்
மற்றது உலகின் பிரபல்யமான ஒரு கலைஞன் வரலாற்றில் இடம்பிடிக்கும்வகையில் ஈழத்தின் நினைவுகளை நூலுருவாக்கி எதிர்கால சந்ததியினருக்கு வழங்கும் ஒரு காத்திரமான பங்களிப்பு

ஒருகாலத்தில் கே.எஸ்.பாலச்சந்திரன் அவர்களின் குரல் “அண்ணைரைட்” தனி நடிப்பு நகைச்சுவை நாடகத்தின் மூலம் உலகெங்கும் அறியப்பெற்றவர்,நாடகம் வெளிவந்த காலங்களில் எல்லோர் வீடுகளிலும் வானொலிப்பெட்டியில் பென்னம்பெரிய சத்ததுடன் எப்போதும் ஒலிக்கக்கேட்கும் முக்கிய ரசனை நிகழ்ச்சி இது .
அதைக்கேட்டுகேட்டு வயிறு குலுங்கக்குலுங்க சிரித்த அந்த நாடகத்தால் எல்லோர் நெஞ்சங்களிலும் இடம்பிடித்துவிட்ட அற்புதமான கலைஞர்,
அதைவிட“ஓடலிராசையா,வாத்தியார் வீட்டில்,மு.மு.மு.மூத்ததம்பி,செய்திகளில் நகைச்சுவைகள் கலந்து வாசித்தபடியே அமையப்பெற்ற ஒரு நடிப்பு”,என்றவாறாக அவரின் தனி நடிப்பில் அவரால் வெளிக்கொணரப்பட்ட நாடகங்கள் பல,
இதைவிட இவர் இயக்கிய நாடகங்கள் ஏராளம்,அண்மையில் இவர் இயக்கிய “தூரத்து சொந்தம்” என்ற நாடகத்தை பார்க்கும் சந்தர்ப்பம் எனக்கு கிடைத்தது,அதில் எம்மவர்களின் உணர்வுகளை படம்பிடித்துக்காட்டியதாக நான் உணர்ந்தேன்,


இதே போல ஈழத்தின் திரைப்பட வரலாற்றிலும் முக்கியமான இடம் இவருக்கு உண்டு,“வாடைக்காற்று,நாடு போற்ற வாழ்க,சர்மிளாவின் இதய ராகம் மற்றும் ஜீவ நதி” இவர் நடித்த திரைப்படங்கள்,இவற்றை விட ஒரு ஆங்கிலத்திரைப்படத்தில் கூட நடித்திருந்தார் என்று அறிந்திருந்தேன்,ஆனால் இப்போது அந்த திரைப்படத்தின் பெயர் எனக்கு சரியாக நினைவுவராததால் குறிப்பிடமுடியவில்லை,

கலையுலக வாழ்வில் நாற்பத்தைந்து ஆண்டுகளை தாண்டப்போகும் கே.எஸ்.அவர்கள் அடிக்கடி சொல்லும் விடயம் என்னவென்றால் ”நாடகத்துறையிலும் கலையுலக வாழ்விலும் என்னாலான பணிகள் நிறையவே சாதித்ததாக உணர்வதாகவும் இவற்றை விட எழுத்துலகலிலும் ஏதாவது படைக்க வேண்டும் என்ற ஆவல்” இருப்பதாக குறிப்பிடுவார்,
தன் நாடகத்தினாலும் கலைத்துறையாலும் கிடைத்த அனுபவங்களையும் அதன் இன்னும் பல விடயங்களையும் நூலுருவாக்க வேண்டும் என்ற ஆசையை அடிக்கடி வெளிப்படுத்துவார்.தன்னோடு தன் கலையம்சங்கள் நின்றவிடாது இளைய தலைமுறைக்கும் அதை வழிகாட்டி அவற்றை வாழவைக்கவேண்டும் என்பதில் கே.எஸ் அவர்கள் மிக ஆர்வமானவர் என்றால் மிகையாகாது.ஆகையால் அனுபவங்களை எழுத்துலகில் பதிந்துவிடுவதன் மூலம் அவை எக்காலத்திலும் அறியக்கூடியதாக இருக்கும் என்பதை யாராலும் மறுக்க முடியாது.

அந்த வகையில் கே.எஸ்.அவர்களின் ஒரு படைப்பான நாவல் வெளிவரத்தயாராக இருக்கிறது,வடலி வெளியீட்டகத்தாரின் வெளியீடாக வெளிவரும் இந்த நூலுக்கு கே.எஸ்.பாலச்சந்திரன் அவர்கள் ”கரையத்தேடும் கட்டுமரங்கள் ”என்று பெயரிட்டிருக்கிறார்,முற்றிலும் ஈழத்து நினைவுகளைச்சுமந்து வரும் இந்த நாவலி்ல் முக்கியமாக கடலோடிகளின் கதை சொல்லும் கதையாக வருகிறது, நாவலில் அங்கங்கு தன் அனுபவங்களை நாவலுக்குரிய பாங்கிலே தனக்குரிய பாணியில் எடுத்து செல்லும் அழகு மிகச்சிறப்பு,

இவரைப்பற்றியும் இந்த நூல் பற்றியும் உலகப்பிரசித்திபெற்ற அறிவிப்பாளர் பி.எச்.அப்துல் ஹமீட் அவர்கள்
“ ஈழத்து நாவல் இலக்கிய வரலாற்றில் ஒரு காலச் சுவடாய் நிலைக்கக்கூடிய படைப்பு இது. புலம் பெயர்ந்த பின்னரும் தாயகத்தின் நினைவுகளைச்சுமந்து வாழும் ஒரு படைப்பாளியின் நினைவுச்சித்திரம்” என்று குறிப்பிடுகிறார்

அதோடு மட்டுமல்லாமல் தொடர்ந்து அவர்

”வானொலி,தொலைக்காட்சி,மேடை,திரைபடக்கலைஞர், நேர்முக வர்ணனையாளர்,
திரைப்படஇயக்குனர்,தொலைக்காட்சி நிகழ்ச்சித்தயாரிப்பாளர் எனப் பன்முகம் கொண்ட திரு கே எஸ் பாலச்சந்திரன்,மிகச்சிறந்த வானொலி மற்றும் மேடை நாடகங்களையும்
படைத்த எழுத்தாளர்.தன்னெழுத்தால்,பயன்படுத்தும் சொற்களால்,வரிகளால் வாசகன் உள்ளத்தில் காட்சிகளை விரியச்செய்து அந்த சூழலுக்கே அழைத்துச்செல்லகூடிய ஆற்றல் கொண்டவனே எழுத்தாளன் ஆகமுடியும், இவரது எழுத்துக்களுக்கு அவ் ஆற்றல் உண்டு.
இவரது எழுத்தாற்றல் நாவல் இலக்கியத்துறையிலும் காத்திரமாய் வெளிப்பட்டுள்ளது,கரையைத்தேடும் கட்டுமரங்கள் நாவல் படைத்த,கே எஸ்.பாலச்சந்திரன் அவர்களது பெயரும் வரலாற்றில் தடம் பதிக்க வாழ்த்துகிறேன்” என்று வாழ்த்துகிறார்.

இதைப்பற்றி கே.எஸ்.பாலச்சந்திரன் அவர்கள்
”தினமும் வாழ்வுக்காக அலைகளோடு
ஜீவமரணப்போராட்டம் நடத்தி
மீளும் அல்லது தோற்றுப்போகும் ஒரு சமூகத்திடம் எனக்குள்ள நியாயமான மதிப்பு,
இரக்கமும் தான் என்னை இந்த நாவலை எழுத்த்தூண்டியிருக்கிறது “

என்று குறிப்பிடுகிறார்,

ஈழத்தில் தம் வாழ்வுக்காய் வாழ்வாதார தொழிலோடு வாழ்வுமுழுவதும் வாழ்ந்து அதனால் அனுபவிக்கும் மகிழ்ச்சிகள்,தோற்றுப்போவதால் கிடைக்கும் சோகங்கள் என்று அந்த சமூகத்தின் உள்ளுணர்வுகளை வெளிப்படுத்தும் ஒரு முக்கிய நாவல் படைப்பாக கே.எஸ்.அவர்கள் தருகிறார்,முற்றிலும் கிராமத்தின் மண்வாசனைப்படைப்பு,

வடலி வெளியீட்டால் ஏற்கனவே வெளியிடப்பட்ட இந்த நாவல் வரும் ஐப்பசி மாதம்(October)மூன்றாம் தேதி சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு கனேடிய மண்ணில் வெளியிடப்படவிருக்கிறது என்ற மகிழ்ச்சியான செய்தியைத்தருவதில் கரவைக்குரல் பெருமையடைகிறது,


இடம்:Agincourt Community Centre
31,Glen Watford Drive,
Scarborough,Ontario
Midland & Sheppard(On Sheppard)


தொலைபேசி எண்:647-829-7371
ஈ மெயில் :basu44@gmail.com

அப்படியாக கலைஞர் கே.எஸ் பாலச்சந்திரன் அவர்களின் கலை மற்றும் எழுத்துலகின் பயணத்தில் கரையத்தேடும் கட்டுமரங்கள் என்ற நாவலும் வரலாற்றில் இடம்பிடிக்கும் வகையில் அமையும் என்பதில் சந்தேகத்துக்கேயிடமில்லை,அவரின் கலை மற்றும் எழுத்தின் பணிகள் இன்னும் மேன்மேலும் சிறக்க கரவைகுரல் வாழ்த்துவதில் பெருமையடைகிறது

“பகலும் இரவும் முத்தமிட்டுக்
கொள்ளும் அந்த
மாலைப்பொழுதில்......

மேற்கிலிருந்து அடித்த
வாடைக்கச்சான் காற்று,

கடற்கரையை
பார்த்துக்கொண்டு நின்றிருந்த
அந்தோனியின் பொத்தான்கள்
இல்லாதா சேர்ட்டை பின்னே
தள்ளி நெஞ்சுக்கூட்டை
குளிரினால் சில்லிடவைத்தது.........

இவை கரையைத்தேடும் கட்டுமரங்கள் நாவலிலிருந்து ஒரு சில வரிகள்

பள்ளிக்காலத்தின் அற்புத நினைவுகள்

பள்ளிப்பயின்றதொரு காலம் தொடர்விளையாட்டு

தோழி சினேகிதியின் ஆரம்பத்துடன் அற்புதமாக வீசிய பந்தை வந்தியத்தேவரால் எனக்கு சுழற்றி எறியப்பட்ட சுழல் பந்து போன்றதான ஒரு அழைப்பு,பள்ளியில் களித்த பசுமையான அற்புதமான விடயங்களையும் நினைவுகளையும் பகிர்ந்துகொள்ளத்தான் அந்த அழைப்பு,எனக்கு எதை எழுதுவது எப்படி எழுதுவது என்ற சின்ன சிக்கல்,பன்னிரண்டு வருட பள்ளி வாழ்க்கையில் எத்தனை சுவாஷ்ய நிகழ்வுகள்,அதே போல அவ்வப்போது பாதித்த விடயங்கள் என்று சொல்லி அடுக்கிக்கொண்டே போகக்கூடிய பல விடயங்களை எப்படி ஒரு சில நிமிடங்களில் அடக்கிவிடலாமென்று தான் அந்த சிக்கல்,

ஆனால் வந்தியத்தேவரின் அழைப்பை இவ்வளவு நாளும் ஏற்றுகொள்ளவில்லையே என்று சின்ன கோவம் போட்டுவிடுவாரோ என்ற பயம் இன்னொரு புறம்,முடிந்தவரை நினைவுகளுக்கு எட்டியவரை பள்ளிக்காலத்தின் அற்புதமான நினைவுகளை பதியலாம் என்று எண்ணி ஆரம்பிக்கிறேன்,இண்டைக்கு இதுக்கு ஒரு முடிவு காணலாம் என்ற எண்ணம்,
அதேவேளை இன்னும் மூன்று பேருக்கு “இந்த பதிவால் பெற்ற இன்பம் துன்பம் எல்லாம் பெறுக இந்த வையகம்” என்றவாறாக அழைப்புவிடலாம் என்றும் எண்ணம்,அழைப்புவிடவேணும் எண்டதுதான் சட்டமும் பாருங்கோ.

என் வரலாற்றில் இருவேறு பாடசாலைகள்,
ஒன்று கரவெட்டி மாணிக்கவாசகர் வித்தியாலயம்,
மற்றது ஹாட்லிக்கலூரி,அடிப்படைக்கல்வியின் ஆரம்பம் மாணிக்க வாசகர்,அதைத்தொடர்ந்து தக்கவாறு செப்பனிட்டு ஒப்பேற்றிவிட்டது ஹாட்லிக்கலூரி,பெற்ற படிப்பினைகள் ஏராளம்,வாங்கிய அடிகள் தாராளம்,இன்றும் இனிக்கும் நினைவுகள் அவை,


ஆரம்பக்கல்விக்காய் கரவெட்டி மாணிக்க வாசகர் வித்தியாலயத்தில் இணைந்தேன்,அதிபர் பாலச்சந்திரன் அவர்கள் அப்போது இருந்தார்கள்,நான் ஆறாம் ஆண்டுக்காய் ஹாட்லியில் இணையும் வரை அவர்தான் அதிபர்,கோபத்திற்கும் அவருக்கும் வெகுதூரம்,ஆனால் ஒரு பிரம்பு கையில் சிலவேளைகளில் இருக்கும்,காலை நேர இறைவணக்கத்தின் பின் மேடையில் தோன்றி ஏதாவது அறிவுரைகள் கூறிடுவார்,அதேபோல மாணவர்களின் திறமைகளையும் அந்த மேடையில் எடுத்துக்கூறி அவர்களுக்கு தெம்புகொடுப்பார்.

ஆச்சி ரீச்சரின் ஆரம்பத்துடன் ஆரம்பக்கல்வி,மிகவும் வயதானவர்,சின்னஞ்சிறு பாலகர்களுக்கு ஏற்ற ஆசிரியர்,இன்றும் சொல்வேன் சந்தர்ப்பம் கிடைத்தால் அவரிடம் சின்னஞ்சிறு பாலகர்கள் ஆரம்பக்கல்வி கற்க வேணுமென்று,அப்படி அன்பான அரவணைப்பால் ”அ ஆ” ஊட்டியவர்,இன்று அவர் எம்மோடு இல்லை என்று அறிந்தேன்,”குடைபிடித்துச்செருப்புமிட்டு புத்தகமும் கொண்டு” என்று ஆரம்பத்தில் பாடிய பாடல் இன்றும் நினைவிருக்கிறது என்றால் அது ஆச்சி ரீச்சரையும் வள்ளிப்பிள்ளை ஆசிரியையும் சாரும்,

தொடர்ந்து கதைகள் பல கூறி சிறு பராயத்திலேயே எங்களை சிரிக்க வைக்கும் படியான கதைகளை கூறி வகுப்பெடுத்தவர் இரத்தினம் ஆசிரியர்,அவரோடு அண்மையில் யாழ்ப்பாணம் சென்றபோது சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது,மிகவும் சந்தோசமான முகமலச்சியோடு சுகம் விசாரித்தார்.என்னிலும் என் இன்னோரன்ன திறமைகள் வளரவேண்டும் என்று மிக ஆவலாக இருந்த ஆசிரியர்களுள் இரத்தினம் ஆசிரியரும் ஒருவர்,அவரிடம் கல்வி கற்கும் காலத்தில் ஆசிரியர் அவர்கள் என்னோடு யாழ்ப்பாணம் வரை வந்து எனக்கு சுப்பிரமணிய பாரதியார் வேசம் போடுவதற்காக தலையில் தலப்பாகை,பாரதிபோல் வேட்டி தாறுபாய்ச்சி(குருக்கள்,மற்றும் கோயில் பூசகர் வேட்டி உடுக்கும் முறை) மேடையேற்றி அழகுபார்த்தவர்,அவரின் ஆசியோ என்னவோ எனக்கும் அங்கு சிறப்பிடம் கொடுக்கப்பட்டது எனக்கு இன்றும் நினைவிருக்கிறது,

அதைத்தொடர்ந்து இடக்கை கணபதிப்பிள்ளை ஆசிரியர்,அங்கு இருவேறு கணபதிப்பிள்ளை ஆசிரியர்கள் இருந்ததால் இவர் இடதுகை வளம் இருந்த ஆசிரியர் ஆகையால் இவரை எல்லோரும் அடையாளப்படுத்திக்கொள்வதற்காக இடக்கை கணபதிப்பிள்ளை ஆசிரியர் என்று சொல்வது வழமை.எப்போதும் பின்வாங்கில் கூட்டமான நான் அவருடைய வகுப்பில் தான் முதன் முதலில் பின் வாங்கிலில் இருக்கச்சென்றேன் என்ற நினைவு,வகுப்பறையில் பகிடி விடுவதும் கூடப்படிக்கும் நண்பர்கள் எல்லோருடனும்(ஆண் பெண் வேறுபாடு இல்லைப்பாருங்கோ) நகைச்சுவைகள் விடத்தொடங்கியது இந்தக்காலத்தில் தான் என்ற நினைவு.
இவர்களைவிட மாகாலிங்கசிவம் ஆசிரியர் இங்கு கற்பித்தாலும் அவரிடம் படிக்கும் வாய்ப்பு மாணிக்கவாசகரில் கிட்டவில்லை,தனியார் கல்வி நிறுவகத்தில் கிடைத்தது,அதுவும் ஹாட்லிக்கல்லூரியில் இருந்தபோதுதான் கிடைத்தது,அழகுதமிழில் அவரது கற்பிக்கும் முரை இருக்கும்,நான் என் இன்னோர் பதிவில் குறிப்பிட்டதுபோல ஆசிரியர் அவர்கள் மாணவர்களில் தனிப்பட்ட ரீதியில் கூட கவனஞ்செலுத்தியவர்,ஆலய மணி ஒலிக்கும்போது அனைவரும் எழுந்து நின்று ஆலயத்தின் இறைவனை நினைக்கவேண்டும் என்று நடைமுறையில் கொண்டுவந்தவர்,ஆசிரியர் அவர்கள் அண்மையில் இவ்வுலகை நீத்தது கேட்டு துயரமடைந்தேன்,

பிரம்படி,நைஸ் அடி,கரும்பலைகையை பார்க்க விட்டு அடித்தல் போன்ற பல்வேறு ரகமான அடிகள் அறிமுகமான காலம் இந்த மாணிக்க வாசகர் வித்தியாலயத்தின் காலம், நைஸ் அடிக்கு பிரபலமானவர் இரத்தினம் ஆசிரியர்,அதாவது பிரம்பை அதிகளவு தூரம் தூக்காமல் மெல்லவாக கொண்டுவந்து ஊண்டி அடிப்பதுதான் அந்த அடி,அதைவிட மகாலிங்க சிவம் ஆசிரியர் மற்றும் இடக்கை கணபதிப்பிள்ளை ஆசிரியர் அவர்கள் கையிலுள்ள மணிக்கூட்டை கழற்றுகின்றார்கள் என்றால் பிரம்படி தொடங்கப்போகிறது என்று அர்த்தம்,

அதைவிட நாங்கள் படிக்கும் காலத்தில் தான் சின்ன வகுப்பிலை படிக்கும் அனைவருக்கும் தையல் கலையும் ஒரு பாடமாக வந்தது,அதைவிட அந்த தையல்கலைக்கும் தமிழ்த்தினப்போட்டி மற்றும் ஆங்கில தினப்போட்டிகள் போலவே ஒரு போட்டி முறையும் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது,எனக்கெண்டால் அந்த சின்ன வயசிலேயே அந்த பாடத்தை
”கட்” அடிச்சு எங்கையாவது ஒளிச்சு ஓடலாமோ என்று எப்பவும் நினைப்பேன்,ஆனால் தங்கம்மா ரீச்சர் எங்கட வீட்டுக்கு கிட்ட எண்டதாலை வீட்டுக்கு கதை வந்திடும் எண்டதாலை சுட்டுவிரலிலை தையலூசி குத்தி குத்தி காயம் வந்தாலும் அந்த பாடத்துக்கு போய் “பெரு நூலோடி,சிறு நூலோடி,சங்கிலி தையல்” எண்டு படிச்சு துணி எல்லாம் கிழிச்சது என்று இப்பவும் நினைத்துச் சிரிப்பேன்.

இதைவிட அந்த சின்னஞ்சிறு வயசிலை விளையாடும் விளையாட்டுக்கள் இனி எப்போதும் விளையாடவே கிடைக்காதா என்ற உணர்வும் கூட,ஒளிச்சுத்தொட்டு,அடிச்சுத்தொட்டு, நாயும் இறைச்சித்துண்டும்,பேணியும் பந்தும்,என்று வகுப்பறக்கு வெளியே விளையாடும் விளையாட்டுகள்,கணிதப்பாடத்துக்கும் ஆசிரியர் விளையாடவிடமாட்டாரோ என்றுதன் எப்போதும் எண்ணம் இருக்கும்,அதேபோல இருக்கும் மேசையிலேயே இருந்தபடி எல்லோரையும் ரசிக்க வைக்கும் விளையாட்டு பேனைச்சண்டை,பொதுவாக ஆசிரியர்களுக்கு மறைவாக அவர்கள் இல்லாத நேரங்களில் கலக்கும் விளையாட்டு அந்த விளையாட்டு,ஒரு குறிப்பிட்ட எல்லையை வைத்த படி அந்த பெட்டிக்குள் இருந்தவாறாக பேனைகளை மோதவிடுவதும் அதை வெளியே அடித்துத்தள்ளாதபடி தடுப்பதுமாக அந்த விளையாட்டு இருக்கும்,அந்த விளையாட்டில் வரும் உத்வேகமும் ஈடுபாடும் எதிலும் வந்ததில்லை,விளையாட்டுகளும் அந்த இனிய காலங்களும் ஆரம்பித்ததும் இங்குதான்.

இதைவிட கல்வியுடன் ஆரம்பகலைகளைக்கூட ஆரம்பத்தில் எனக்கு அள்ளித்தந்தது இங்குதான்,எனது ஏழாவது வயதில் குறிப்பிட்டு சொல்லக்கூடிய நிகழ்வு ஒன்றை மேடையேற வைத்ததும் இந்த வித்தியாலயம் தான்,அந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்திலேதான் எனக்கு கலை தெரியும் என்று ஏற்றுக்கொண்டவனானவன் நான்.இவையெல்லாம் இங்கு கூறலாமோ என்ற பயம் கூட எனக்கு,சுயபுராணத்திற்கு ஏன் இடம் இங்கு கொடுக்கவேண்டும் என்றும் நான் சிந்திக்கிறேன்,ஆனால் பள்ளியில் கிடைத்த அற்புதமான நினைவுகளில் இதுவும் ஒன்று என்பதால் சொல்லிவிட்டேன்,

இப்படியாக பள்ளிக்காலத்தின் நினைவுகளை மீட்டுக்கொண்டே போகலாம்,இன்னும் நான் என் அடுத்த கட்ட பள்ளிக்காலம் ஹாட்லிக்கு செல்லவில்லை,ஆனால் இந்த பள்ளிக்காலத்தின் அற்புத நினைவுகளின் பயணத்தின் பாதையில் ஹாட்லிக்கு வெகுவிரைவில் செல்லும்.
மீண்டும் தொடர்ந்து பயணிக்கும் போது என்னோடு இன்னும் மூவரை அழைத்துக்கொண்டே போகலாம் என்ற எண்ணம்,அப்பொழுதுதான் யார் பிழைவிட்டாலும் தெரியாது பாருங்கோ,உங்களுக்கு நல்ல நினைவு இருக்கும் பள்ளிகூடத்தில காலை இறைவணக்கத்தின் போது இறைவனை போற்றிப்பாடுவது வழமை,அப்போது எல்லோரும் சேர்ந்து பாடினால் பிழை பிடிபடாது தானே,ஆகவே என்னோடு நீங்களும் வாருங்கள்

வாருங்கள் காலப்பெருங்களத்துக்கு சொந்தக்காரர் ஆதித்தன்
வாருங்கள் பூபதிக்கு சொந்தக்காரர் சௌந்தரி
வாருங்கள் அறிந்ததும் அனுபவமும் தரும் டயானா சதாசக்திநாதன்
”யான் பெற்ற மற்றும் பெறும் இன்பங்களையும் எல்லாவற்றையும் நீங்களும் பெற்று உங்கள் இனிய நினைவுகளையும் பொறித்துவிடுங்களேன்

மீண்டும் சந்திப்போம்

பிறந்தநாள் கொண்டாட்டம்

”இப்ப எல்லாம் கொண்டாட்டம் கூடிபோச்சு,எதுக்கெடுத்தாலும் கொண்டாட்டம்,முந்தியெல்லாம் கல்யாணக்கொண்டாட்டம்தான் பெரிசாக கொண்டாடப்பட்டது.கோயில் திருவிழாக்களுக்கும் அங்கை நடகிற நிகழ்வுகளுக்கும் தான் பெரிய முக்கியத்துவங்கள் வழங்கப்பட்டு பெரிசாக பெருமெடுப்புகளுடன் பட்டாசுகள் பலவிட்டு பல நிகழ்வுகள் ஒழுங்குபடுத்தப்பட்டு அந்தக்காலத்திலை இருந்து கொண்டாடுறது.இப்ப எல்லாம் கொண்டாட்டம் கூடிப்போச்சு” இப்படி ஒரு மூலையிலை இருந்து வாத்தியார் சொல்லிக்கொண்டிருந்தார்,


“இல்லையெணை அப்பா அது அந்தக்காலம் இப்ப எல்லாம் ஊருலகத்தில் அவளோடை படிக்கிற பொடியள் அப்படி இப்படி எண்டு எல்லாம் கொண்டாடேக்கை அவளுக்கு ஒரு ஆசை வருந்தானே தனக்கும் இந்த பிறந்த நாளைக்கொண்டாடினால் என்ன எண்டு” என்று விளக்கம் கொடுத்தாள் ஈஸ்வரி,
ஈஸ்வரி அவளின் அம்மா,வாத்தியாரின் மூத்த மகள்,மூத்த மகள் என்பதால் பொறுப்பானவளாக வளர்ந்தவள்,எல்லோராலும் மூத்தக்கா என்று சொல்லப்படுபவள்

தன் பேர்த்தியில் மிகவும் பாசமான அந்த பேரன் வாத்தியார் பேர்த்தியின் பிறந்த நாள் வருகிறது என்று மிகவும் சந்தோசப்பட்டாலும் பெருமெடுப்பில் கொண்டாடுவதில் அவருக்கு இஷ்டமில்லை,வேறொன்றுமில்லை இப்படியான கொண்டாட்டம் அவசியம் தானா என்பதுதான் அவரின் கேள்வி.

”அடி பிள்ளை எங்களிண்டை பிறந்த நாள் எல்லாம் யாருக்கும் தெரியாதெடி,அதுக்காக பிறந்தநாளை தெரியாமல் இருக்க வேணும் எண்டு சொல்லேல்லை,ஆனால் இதெல்லாம் என்னத்துக்கு எண்டு விளங்கவில்லை”
உனக்கு நினைவு இருக்கோ பிள்ளை உன்ரை பிறந்த நாளுக்கு நான் லைன்லை நிண்டு சுபாஷ் பேக்கரியிலை இரண்டு றாத்தல் பாண் வாங்கிக்கொண்டு வந்தன்,அதைத்தான் நீ மாஜரீன் பூசி வெட்டிக்கொண்டாடி எல்லாருக்கும் பகிர்ந்து சாபிட்டனாங்கள்”
அப்படிப்பிள்ளை நாங்க வந்த பாதை வேறை பிள்ளை,அதையெல்லாம் மறந்துபோக எனக்கெண்டால் மனமில்லை,”என்று வாத்தியார் தொடர்ந்து சொல்லிகொண்டே போனார்.

”அணேய் அப்பா சும்மா புறுபுறுக்காதையெணை.அதெல்லாம் அப்ப அப்ப கஷ்டப்பட்டதுக்காக இப்பவும் பாணையே வாங்கி வெட்டுறதோணை,சும்மா இரு,எல்லாரும் பார்த்து சிரிக்குங்கள்,”
என்றாள் மகள் ஈஸ்வரி,

அடுத்த வீட்டு சின்னையா அண்னையை பார் அந்த மனுசனும் இருக்குது தானே,அந்த மனுசன் ஒண்டும் கஷ்டபடாமல் அந்தக்காலம் இருந்ததோ,சுவிஸ்க்கும் போட்டு வந்திட்டுது,
நீங்க இப்படியே இருந்துகொண்டு அந்தக்கால கதையளை சொல்லிகொண்டிருங்கோ,அந்த மனுசம் சுவிஸ்க்கு போட்டுவந்தபிறகு பேர்த்திமாரை இனி ஜீன்ஸ் தான் போட வேணும் எண்டு விடாப்பிடியாக நிண்டதாம் தெரியுமோ,உங்களையும் கனடாவுக்கு அவன் மூத்தவன் வா வா எண்டால் போறியளே,போறீங்க இல்லை.சும்மா ஒரு பிறந்த நாள் கொண்டாட்டத்துக்கு பெரிய கதை அளக்கிறியள்”எண்டு சொல்லிக்கொண்டே போனாள் ஈஸ்வரி,

அடி பிள்ளை எனக்கு எல்லாம் தெரியும்.அதுகளை எல்லாம் பார்த்துப்போட்டுத்தான் சொல்லுறன், இந்த போறபோக்குகள் இதெல்லாம் நல்லதுக்கில்லை எண்டுதான் நான் சொல்லுறன்,என்னதான் செய்தாலும் பிள்ளையாரின்ரை வாசலிலை ஒரு பூசைகட்டிவிக்கிறதை எண்டாலும் செய்யுங்கோ,சரி நான் இப்ப கொஞ்சம் காத்து வாங்கலாம் எண்டு வெளியிலை போறன்,என்ன வாங்கிக்கொண்டு வாறது எண்டு சொல்லு”
என்று வாத்தியார் சால்வையையும் தட்டிகொண்டு வெளியில் செல்ல ஆயத்தமானார்,

“ஒண்டும் வேண்டாமணை நீங்க போட்டுவாணை,அவள் பிள்ளை வாற நேரம் இந்த நேரம் புறுபுறுத்துக்கொண்டு இருந்தால் நல்லாகத்தான் இருக்கும்,”என்று விடைகொடுத்தாள் ஈஸ்வரி

வாத்தியாருக்கு தன் பேர்த்தியின் பிறந்த நாளுக்கு இந்த கொண்டாட்டங்களை ஒரு புறம் வைத்துவிட்டு வேறு ஏதாவது செய்ய வேணும் என்று ஆசை,வெளியில் காற்று வாங்க போவதாக கூறிவிட்டு வெளியில் போனவர் தன் மூத்த மகனிடம் தொலைபேசி அழைப்பெடுக்கத்தான் போகிறார் என்று மகளுக்கு அவர் சொல்லவில்லை, நேரடியாக இணையத்தள அழைப்பெடுக்க போகிறார் தொலைத்தொடர்பு நிலையத்திற்குள்,

“தம்பி ஒரு கோல்(call) போடு கனடாக்கு”இது வாத்தியாரின் ஆரம்பம்

”ஐயா லாண்ட் போன்(land phone) நம்பரோ ஹாண்ட் போன் நம்பரோ(mobile No)” இது கடைக்காரனின் கேள்வி.

”யாருக்கும் தெரியும் தம்பி,முதலும் நான் கதைச்சனான் அவ்வளவு பெரிய காசு இல்லை எண்டு சொன்னவங்கள் அதுதான் வந்தன்” வாத்தியார் பதில் இது.

”ஆ ஆ ஆ அப்ப அது லாண்ட் போன் நம்பராகத்தான் இருக்கும், ம்ம்ம் ஐயா அது ரிங்(Ring) பண்ணுது, ரண்டாம் நம்பரிலை எடுங்கோ” என்று சொல்ல வாத்தியார் பறந்து சென்று எடுத்தார் தொலைபேசிஅழைப்பை,

”தம்பி கணேசு எப்படி இருக்கிறாய்” வாத்தியா அன்புடன் ஆரம்பிக்கிறார்

அணேய் ஐயா இருக்கிறனெணை நீங்கள் எப்பிடி இருக்கிறீங்கள்” மகன் பதிலுக்கு சுகம் விசாரிக்கிறான்.

எனக்கென்ன குறை தம்பி மூத்தவளோடைதானே இருக்கிறன்,சரிக்கு சரி சாப்பாடு,அப்ப அப்ப பேப்பர் பார்க்கிறதும்,பிறகு ரிவியிலை செய்தி பாக்கிறதுமாய் என்ரை காலங்கள் போகுதெடா வழமைபோல,” என்று வாத்தியார் தன் தற்போதய சுயசரிதையை சொல்லிக்கொண்டார்,

”தம்பி நான் இப்ப கோல் எடுத்தது இவள் மூத்தவளின்ரை பிள்ளைக்கு நாளைக்கு பிறந்த நாள் தம்பி” என்று வாத்தியார் சொல்ல முதல்

”அணேய் யார் எங்கடை ஆனந்திக்கோ அவளுக்கு இப்ப எத்தினை வயதாகுது” என்று சந்தோசம் கூட்டியபடி கேட்டான் கணேசு.

”ம்ம் அவளுக்கு இருபத்தியொண்டு,ஏதோ கீ பிறந்த நாள் எண்டு கேள்விப்பட்டன்,அதுக்கு ஏதோ இங்கிலிஷிலை சொன்னவகள்,எனக்கு அது வாயிலை வரவில்லையெடா தம்பி,”என்று வாத்தியார் உள்ளதை சொல்லிக்கொண்டே போக


”ஆ ஆ அதை பெரிசாக கொண்டாடுங்கோ,அதை எனக்கு வீடியோ எடுத்து அனுப்புங்கோவன்”என்றான் கணேசு

அட இவனும் இப்பிடித்தான் சொல்லுறான், நான் கேட்கவந்தது ஏதோ இவன் சொலுறது ஏதோ”என்று வாத்தியார் மனதுக்குள் முணுமுணுக்க

”என்னணை சவுண்டைக்காண இல்லை.சொல்லணை” என்று கணேசு திரும்பக்கேட்டான்.

தம்பி எல்லாம் பெரிசாகக்கொண்டாடுவம்,பெரிசாகக்கொண்டாட எனக்கென்ன விருப்பமில்லையே,ஆனால் எனக்கு ஒரு சின்ன விருப்பமெடா,இந்த நல்ல நாள் பிறந்த நாளிலை கஷ்டப்பட்ட பிள்ளைகளின்ரை விடுதிகளுக்கு ஏதாவது உதவி செய்தால் என்ரை பேர்த்தியிரை பெயராலை எனக்கு அது போதுமெடா”என்று தன் உள்ளத்து எண்ணத்தை பகிர்ந்தார் வாத்தியார்,இப்படியாக வாத்தியார் சொல்லிமுடிப்பதற்குள்

”அதுக்கென்னணை நான் நாளைக்கு காசு போடுறன் நீங்க ஏதாவது கொப்பி பேனை புத்தகங்கள் ஏதவாது உடுப்புக்கள் எண்டு வாங்கிக்கொடுங்கோ” என்று கணேசு சொல்ல வாத்தியாருக்கு ஏதோ பெரிய விடயம் செய்துவிட்ட மகிழ்ச்சி,
அதைவிட கொஞ்சம் பெருமையாகவும் வாத்தியார் உணர்ந்தார்,

”இப்போதையில் பொடியள் ஏதாவது உதவி செய்யிறது எண்டாலும் செய்யுதுகள்,அதே நேரம் எல்லாறும் கொண்டாடுற மாதிரி கொண்டாட வேணும் எண்டும் விரும்புதுகள்,சரி அதுக்கென்ன,எங்கட காலத்திலை தான் இதெல்லாம் இருக்கேல்லை
இப்ப என்ரை பேர்த்தியின்ரை பிறந்த நாளிலையாவது இப்படி எல்லாம் நடக்க காணக்கிடைச்சிருக்கே என்று பிள்ளையாரே அது போதும் எனக்கு” என்று மனதினுள் வேண்டுகிறார் வாத்தியார்,

அது மட்டுமில்லாமல் ”வாறவருசம் என்ரை கணேசுக்கும் வாற பிறந்த நாள் எனக்கு முன்னலை கொண்ட்டாடினால் என்ன?” என்று மனதினுள் கேள்வி உதித்தது வாத்தியாருக்கு,

“அவன் சின்னையாவும் சொன்னவன் எல்லோ அவனின்ரை இளையவன் பரமுக்கு ஜேர்மனியிலை ஒருக்கா பிறந்த நாள் கொண்டாடினது எண்டு, ஊருலகம் எல்லாம் அங்கை எடுத்த போட்டோ எண்டு ஒரு நாப்பது போட்டோ கொண்டுவந்து காட்டினவன் எல்லோ” என்று மனதினுள் கடந்த வருட நினைவுகளை மீட்டினார்.

அத்தோடு வாறவருசம் மூத்தவன் கனடாவுக்கு வா எண்டு சொன்னவன்,அப்ப அவன்ரை பிறந்த நாளுக்கு அங்கை நிக்கிற மாதிரித்தான் அவனுக்கு திகதி சொல்ல வேணும்,அப்பத்தான் அவனின்ரை பிறந்த நாளை எனக்கு முன்னாலை கேக்கு வெட்டிக்கொண்டாட வேணும், “என்று திட்டமும் போட்டார் வாத்தியார்,
“அந்தக்காலம் தான் எங்கடை கஷ்டங்களும் இருந்த இடங்களும் எங்களை கொண்டாடவிடவில்லை,அப்படியான எண்ணம் வரவும் விடவில்லை,அதிலை எங்களை பிழை சொல்லியும் என்ன? லைன்லை(Line) நிண்டு பாண் வாங்கி சாப்பிட்ட காலத்திலை எப்படி அவனுக்கு நான் கொண்டாடி அழகு பார்க்க?,அதுக்கு அந்தக்காலம் கைகுடுக்கேல்லை,இப்ப அவனுக்கு கேக்கு வெட்டி நான் கொண்டாட போக வேணும் என்று திட்டம் போடுகிறார் வாத்தியார்

இப்படியாக பெரிய திட்டத்துடன் பேர்த்தியின் பிறந்த நாளில் அதிகாலையே எழுந்து பிள்ளையாருக்கு பூசைகட்டுவித்து மாலை நேர பிறந்த நாள் கொண்டாட்டத்தில் தனக்கு எப்போதும் பிடித்த வேட்டி சால்வை உடுத்தவராய் மிகவும் சந்தோசமாக காணப்பட்டார் வாத்தியார்,



முந்தியெல்லாம்-முன்பெல்லாம் ,பொடியள்-இளவயதுக்காரர், கொண்டாடேக்கை-கொண்டாடுகின்றபோது,போறபோக்குகள்- நடக்கும் சம்பபவங்கள்,